Thursday, December 24, 2015

வலையும் வலை சார்ந்த வாழ்க்கையும்

சிங்காரச் சென்னையை விட்டு இந்நாட்டுக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது .

இந்தியாவிலிருந்து கிளம்பும் பொழுது அமெரிக்காவைப் பார்ப்பதை விட உறவினர்களைக் காணும் ஆர்வம் மேலோங்கி நின்றது. ஒன்றிரு முறை பயணப்பட்டிருப்பதால் புதிய நாட்டை விட பழைய உறவினர்களைக் காணும் நாட்டம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்து ஜீவி எழுதியது நினைவுக்கு வந்ததது "அமெரிக்காவென்னும் அதிசய உலகம் வெளி நாட்டவர்களுக்கு என்றுமே ஒரு கவர்ச்சிக் கன்னி தான் "

பார்ப்பதற்க்கு நிறைய இடங்கள் உள்ளன .
வியப்பதற்கு அதை விட அதிகம் இருக்கின்றன.
இங்கும் இப்படியா என்று எண்ண வைக்கும் சமாச்சாரங்களும் உள்ளன.
வியப்பது அலுத்து விட்டாலும் பார்க்கப் பார்க்க, ரசிக்க ரசிக்க அதை மற்றவர்களிடம் பகிரும் ஆர்வம் அதிகமாகிறது. அதன் வெளிப்பாடு தான் இந்த வலைப் பதிவு.

இங்கு, ஒவ்வொரு முறை வீட்டை விட்டுப் பயணப் படும் பொழுதும் நம்மைக் கவர பல விஷயங்கள் உள்ளன. இந்நாட்டு ஜனங்கள் , அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் ஒழுக்கம்..... இப்படியான பல விஷயங்களில் என்னைச் சிந்திக்கத் தூண்டியது இங்கு நிலவும் 'வலை சார்ந்த வாழ்க்கை'.

நான் சென்ற சில பல நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் வேலை நாட்களில் யாரும்  ஒருத்தரை ஒருவர் விசாரித்துக் கொள்ளவே முடியாத ஒரு அவசர நிலை. வார இறுதிக்காக ஏங்கிக்கொண்டே, வார நாட்கள் முழுதும் உழைத்து வெள்ளி மாலையில் தொடங்குகிறது கொண்டாட்டம்.

சனிக்கிழமை முழுவதும் வீட்டைச் சுத்தம் செய்து, துணி துவைத்து- (நம்ம ஊரில் இதெல்லாம் செய்யும்  முனியம்மாக்கள் இந்த ஊரில் கிடையாதாம்) , அருகிலுள்ள மால் எனப்படும் சூப்பர் சந்தைக்குப் போய் பால் முதல் ஷவர சமாச்சாரம் வரை வாங்கி, வரும் வழியில் பீஸ்ஸாக்களை விழுங்கி இன்றே உலகம் முடியப் போவது போன்ற ஒரு துரித கதியில் கொண்டாடி விடுகிறார்கள்.

ஞாயிறு வழக்கத்தை விட இன்னும் தாமதாக எழுந்து எங்கோ பார்த்த ஞாபகமாக உள்ள சமையலறையில் நுழைந்து வெளி வரும் பொழுது இன்னும் ஏழு நாட்களுக்கான உணவு ரெடி. சுட வைத்து சுட வைத்து வாரம் முழுவதும் ஓட்டி அடுத்த வெள்ளி மாலைக்குக் காத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் அனேகமாக சென்னையிலும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தான் என்றாலும் ஏதோ குறைவது போல் உதைத்தது.  நாடே வலை மூலம் இறுக்கமாகப் பின்னப் பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டு , பன்நாட்டு செய்திகளை இவர்கள் எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தேன்.

நான் விஜயம் செய்த வீடுகளில் யார் வீட்டிலும் பேப்பர் வாங்குவதில்லை. (இரண்டு மாதத்துக்குஒரு முறை பழைய பேப்பர்களை விலைக்குப் போடும் தொல்லை இல்லை).

ஆபீஸுக்குப் கிளம்பும் முன் மழை வருமா , குளிர் அதிகமாகுமா, குடையோ ஸ்வெட்டரோ தேவையா , எல்லாம் டீவீ மூலம் தெரிந்த கொள்கிறார்கள்.

எந்நேரமானாலும் உபேர் போன்ற டாக்சிகளை போன் மூலமாகக் கூப்பிட்டு அது எங்கு இருக்கிறது என்பதையும் வலை மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

பஸ்ஸிலோ , பூமிக்கடியிலும் மேலும் ஓடும் ரயிலிலோ போகும் பொழுது  நாட்டு நடப்பு, அடுத்த ரயில் எப்பொழுது, போகுமிடம் எவ்வளவு தூரம் வரை எல்லாவற்றையும் கைக்கடக்கமாக உள்ள சின்னக் கணிணி போன்ற தொலை பேசியில் பார்த்துக் கொள்கிறார்கள்.

பஸ்ஸில் போகும் பொழுது என் அருகிலுருந்தவர் திடீரென்று செல் போனை வாயருகில் கொண்டு போய் 'ஸ்டார்பக்ஸ்' என்று சொன்னவுடன் அது அருகிலுள்ள காப்பிக் கடைக்கு வழி காட்டுகிறது. நம்மூரிலும் செல் போனை அழுத்தி 'இரானி டீக்கடை' என்று சொன்னால் வருமா என்று பார்க்க வேண்டும். இலவச வை பை கிடைப்பதால் ஸ்டார்பக்ஸ் கடைக்குள் எப்பொழுதும் கூட்டம் . ஒரே ஒரு கப்புசினோ காப்பியை வாங்கிக் கொண்டு மேக்கைப் பிரித்து மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுவதைப் பார்க்கும் பொழுது எண்பதுகளின் உட்லேண்ட்ஸ் டிரைவ் இன் ஞாபகம் வந்தது.

சில வாரங்களுக்கு முன் நான் போன ஒரு இந்தியக் கடையிலிருந்த சில இலவச பேப்பர்களைக் கொண்டு வந்து என்னதான் இருக்கிறதென்று பார்த்ததில் சில தலைப்புச் செய்திகள்:
  • எட்டு மாதங்களுக்கு முன் பேரக் குழந்தையைப் பார்க்க குஜராத்திலிருந்து வந்த பட்டேல் தாத்தாவை எப்படி ஒரு காவலர் அநியாயமாக சந்தேகத்தின் பேரில் அடித்து அவர் இன்னும் எழுந்திருக்க முடியாத நிலையில் தள்ளப் பட்டார் என்ற கேஸ் கோர்ட்டில் நடப்பதை விரிவாகச் சொல்லி இருந்தார்கள். 'அவரைப் பார்ப்பதற்க்கு எழுபது வயது போலிருந்தார். அவரால் எந்த ஆபத்தும் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை" - இப்படிச் சொன்னது இதில் சம்பந்தப் பட்ட ஒரு காவலர் தான்.  
  • சைனா அதன் ஒரு குழந்தைகள் உள்ள பிரஜைகளுக்கு இன்னொன்று பெற்றுக் கொள்ள அனுமதி கொடுத்தது !
  • சோட்டா ராஜனைப் பற்றியும் , ஹர்பஜன் திருமணம் பற்றியும் சில சுவையான தகவல்கள் இருந்தது . ஆனால் பத்திகையாளர்களிடம் ஹர்பஜன் கேட்டதாக வந்த  மன்னிப்பு பற்றி செய்தி இல்லை 
  • அழகுச் சாதனங்களில்  உள்ள கேன்சர்  அபாயத்தைப் பற்றிய ஒரு திகில் செய்தி.
  • எளிய ஜீரணத்துக்கு முட்டைக் கோசையும் , பெரிய வெங்காயத்தையும் சாப்பிட ஒரு அறிவுறுத்தல் 
 ஒரு வேளை காசு கொடுத்து வாங்கும் பேப்பர்களில் இன்னும் இருக்குமோ ?

ஒரு விபரீதக் கற்பனை - நம்ம ஊரில், நம்ப வங்கிகளில் நடப்பது போல் சர்வர் உட்கார்ந்து போனாலோ இணைய தளம் இல்லாமல் போனாலோ இந்நாடு என்னவாகுமோ ?

நினைக்கவே பயமாக இருக்கிறது.

ரொம்ப வருடங்களுக்கு முன் போய் விட்ட என் பாட்டியின் குரல் கேட்கிறது "நல்ல நாளும் அதுவுமா தோசித்தனமாக யோசிக்காதே. பாவம் இங்குள்ளவாளெல்லாம் தவிச்சுப் போயிடுவா"

 - -   சாண்டா பெரியவரின் மணியோசையை எதிர்பார்த்து இருக்கும் ஒரு குளிராத டிசம்பர் மாலையில் எழுந்த கலங்கிய எண்ணங்கள் .

Saturday, November 28, 2015

நன்றியுடன் ஒரு வெள்ளி

அமெரிக்காவின் பல இடங்கள், சில நாட்களாக, ஒரு கொண்டாட்டம் கலந்த ஜுரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்மூரைப் போல் பிள்ளைகள் கல்லூரி முடித்து வேலைக்கும் போய் கல்யாணம் செய்து கொள்ளும் வரை இங்கு பெற்றோர்கள் அடை காப்பதில்லையாம். பள்ளியில் ஒரு அளவு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு, இனி மேற்படிப்பு தேவை என்றால் பிள்ளைகளையே பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி விடுகிறார்கள். அவர்களும் அதை ஒரு சவாலாகவே ஏற்று தொடர்வதால் அனேகமாக அனைவருக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. தானே சம்பாதித்து , தாம் வாங்கிய கடனை அடைக்கும் பிள்ளைகள் தத்தம் வாழ்க்கையை தாமே அமைத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள்.

பணம் , பொறுப்பு, சுய சிந்தனை எல்லாம் சிறு வயதிலேயே வந்து விட மெதுவாக பெற்றோர்களிடமிருந்து விலகியே வாழ்கிறார்கள். இதனால் பெற்றோர்களை தாங்கள் மறந்து விடவில்லை என்பதைத்தான் இந்த நன்றி நவிலும் நாளான நவம்பர் கடைசி வியாழனன்று வெளிப் படுத்துகிறார்களாமாம். அங்கங்கு சிதறிக் கிடக்கும் அண்ணன், தங்கைகள் அனைவருமே இந்த நாளில் தன் பெற்றோர்களிருக்குமிடம் அடைந்து , அவர்களை வணங்கி, ஆசி பெற்று பரிசுகளைப் பரிமாறி  கொண்டாடுகிறார்கள். சரித்திர ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களே நினைவில் தங்கிக் கொண்டிருன்றன என்கின்றனர் பேசிய சிலர்.

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னமேயே எல்லா பஸ், விமானங்களிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நாளின் கொண்டாட்டம் நியூயார்க் நகரின் மையப் பகுதியில் ஒரு பிரதான வீதியில் நடக்கும் ஒரு மிகப் பிரசித்தி பெற்ற ஊர்வலத்துடன் தொடங்குகிறது. இதில் மெக்டொனால்ட் முதல் நியூயார்க் போலீஸ் வரை அனைவரும் கலந்து கொண்டு அணி வகுத்துப் போவதைக் காண இந்த வருடம் பத்து லக்ஷத்துக்கும் மேல் கூட்டம் கூடியதாக ஒரு தகவல். தொலை காட்சியில் வரும் பிரபலங்களுடன் சாண்டா க்ளாஸ்  போன்றவைகளும் அணி வகுத்து வருவதால் குழந்தைகளின் வரவேற்புக்குக் குறைவே இல்லை- இந்த ஊர்வலத்துடன் ஓயாது கூடவே வரும் இசை பெரியவர்களையும் ஆட வைக்கிறது.

நாள் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்து நிறைவேற, பசிக்கு வான் கோழியின் துணையை தேடிக் கொல்ள்கிறார்கள். இந்த வருடம் சுமார் நாற்பத்து மூன்று லட்சம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப் பட்ட வான் கோழிகள் இதற்காக உயிர்த் தியாகம் செய்ததாக ஒரு செய்தியும் படித்தேன். வயிறு நிறைய, மறுநாள் மக்கள் கடைகள் பக்கம் பரிசுகள் வாங்க  திரும்பத்  தொடங்க வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு விலையை அதிரடியாகக் குறைக்க எங்கும் திருவிழாக் கோலம் தான். சில பண்டங்களை வாங்க இணைய தளத்திலேயே பதிவு செய்ய முடியும்; அனேகமாக இப்படிப்பட்ட எல்லா பண்டங்களுமே இலவசமாக வீடு தேடி வருகிறது.



சில சமாச்சாரங்கள் சந்தையில் தான் அடி மாடு விலை என்பதால் கடை திறக்கும் போதே வெள்ளம் அலை மோதுகிறது. இங்கு காத்திருந்து, பின் கதவு திறந்தவுடன் ஓடி வரும் கூட்டம் உண்மையிலேயே Door Buster என்ற பதத்தை நியாயப் படுத்துகிறது.

நேற்று எடுத்ததாகச் சொல்லப்பட்ட , மக்களின் ஷாப்பிங் பசியைக் காட்டும் இந்த காணொளிக் காட்சி பிரமிக்க வைக்கிறது : https://youtu.be/SA5P4MsNGfI

ஜே சி பென்னி போன்ற பிரபலமான சில கடைகளில் அதிகக் கூட்டத்தில் கேட்ட குரல்கள்:
' மாப்பிள்ள , ஒரு மணி நேரமா கியூவே நகரல்லே '
'பசிக்குதுன்னா இப்ப என்னம்மா பண்றது, லைன விட்டு போக முடியாதே'
'ஏமண்டி , இக்கட....."  - - - - - போன்றவைகள் உண்மையிலேயே கேட்ட சில குரல்கள்

ஐம்பது இன்ச் டிவியைக் கூட வாங்கிக் கொண்டு தானே அதைத் தூக்கிக் கொண்டும் ஒருவர் பஸ்ஸில் போகிறார், அவர்களே வீட்டில் போய் பொருத்தியும் கொள்ளுவார்களாம். இங்கு இதைத் தூக்கிக் கொண்டு போக வண்டியோ, ஆட்களோ கிடையாது.

 ஒரு கடையின் வாசலில்  குவித்து  வைத்திருந்த மலை போன்ற சாமான்களைப் பார்த்து, எனக்கு வீட்டுக்கு வந்து கூட வெகு நேரம் தூக்கமே வரவில்லை - இதை எப்படி எடுத்துப் போகப் போகிறார்கள் என்று நினைத்து!

எல்லா பொருள்களுக்குமே கணிசமான தள்ளுபடி இருந்தாலும் அதற்க்கு பில் போட்டு பணம் கொடுப்பதற்க்குள் நாக்கு தள்ளி விடுகிறது. இவ்வளவு வியாபாரம் நடக்கும் இந்தக் கடைகளில் எனக்கென்னவோ வாடிக்கையாளர்களை இன்னும் சீக்கிரமாக அனுப்ப அவர்கள் வழி செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு காலத்தில் ஆங்கில வருட முதல் தேதியில் நம்மூரில் விவேக் போன்றவர்கள் இப்படிப் பட்ட 'அள்ளிக் கொள்ளுங்கள், அதிரடி விலையில்' போன்ற சந்தைகளில் நிமிஷமாக பில் போட்டு பார்சல் பண்ணி விடுவார்கள். இங்கு மால்களிலும், ஷாப் ரைட், காஸ்ட்கோ  போன்ற மகா சந்தைகளும் கூட பில் போடும் கௌண்டர்கள் மிகக் குறைவு. வாடிக்கையாளர்களின் பொறுமையை இப்படிச் சோதிக்கக் கூடாது.

ஆனால் இன்றைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டது போல் கோடிக்கணக்கான பொது ஜனங்கள் 4500 இணைய தளங்கள் வழியாகவும் , நேரிலும் வந்தும் கடைகள் திறக்கும் பொழுதே உள்ளே விரைந்து   'என்ன நடந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வாங்கியே தீருவேன்' என்ற முடிவுடன் இருப்பதாலும் , 1200 கோடி டாலர்கள் வியாபாரம் நடப்பதாலும், இதைக் கறுப்பு வெள்ளி என்று சொன்னாலும் வியாபாரிகளுக்கு என்னவோ சுபீக்ஷ வெள்ளியாகத் தான் இருக்கிறது !   

Monday, November 16, 2015

பிள்ளை தேடும் பருவ மழை

ஒரு காலத்தில்
மனிதன், விலங்குகளை வேட்டையாட
விலங்குகள், தாம் பிழைக்க, மனிதனைத் துரத்த
ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தப்ப முயல
அனைவரும் ஓட ,
எல்லோருடனும் நிம்மதியும் ஓடத் துவங்கியது.

விலங்குகளை விரட்டிய மனிதனுக்கு மண்ணாசை வாட்ட,
விலங்குகள் வாழ்ந்த காட்டுக்கும்  சொந்தம் கொண்டாடலானான்

வனங்கள் அழிந்து வீடுகள் முளைக்க
மரங்களின் தாகம் தீர்த்த நீர் நிலைகளும் தேவையற்றுப் போக
ஆற்றுப் படுகைகளிலும் மனிதக் காடுகள் முளைக்கலாயின

தான் வளர்த்த பிள்ளைகளான மரங்களைத் தேடி
மாரி அவ்வப் பொழுது ஓடி வர
காணாமல் போன, பொழிந்து வந்த பாதைகளைத்  தேடி அங்குமிங்கும்  அலைய

ஆங்காங்கே நட்டு வைத்த மரங்கள் மறைந்து போய்
கான்க்ரீட் காடுகளை உற்றுப் பார்த்து உச்சி முகர
வழி தெரியாமல் ஓடும் என்னைப் பார்த்து

வெள்ளமே ஏன் வந்தாய் என்று
அதட்டுகிறார்கள் , புலம்புகிறார்கள்.

- நனைந்த தமிழகத்தின் நிலை நினைத்து
ஒரு குளிர்ந்த காலையில்
பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலிருந்து
மறுகும் ஒரு சென்னை வாசி

Wednesday, November 11, 2015

கண்டேன் சுதந்திர தேவியை

அமெரிக்கா வந்து சுதந்திர மாதாவைப் பார்த்து , அதனுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளா விட்டால் இந்தப் புண்ணிய பூமியை மிதித்த பலன் கிடைக்காது என்ற ஒரு அதீத நம்பிக்கையாலும் என்னுள்ளே இருக்கும் ஒரு உந்துதலினாலும் போன வார இறுதியில் அதைக் காண பயணப் பட்டோம். சாதாரணமாக இந்த அமெரிக்காவுக்கே விளக்கேற்றும் நங்கையைக் காண ஒன்றும் அதிக சிரமப் பட வேண்டாம். ஆனால் இந்த சிலையின் தலை அருகே போய்ப் பார்க்க கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டும். சில மாதங்களுக்கு முன்னமேயே முன் பதிவு செய்ததால் இந்த மாதாவின் தலை அருகே கிட்டத்தட்ட 100 மீட்டர்களுக்கு மேல் ஏறிச் சென்று பார்க்க முடிந்தது .
ஆனால் இங்கு போக ஏகப் பட்ட முன்னேற்பாடுகள், முஸ்தீபுகள் - எதை எடுத்துக் கொள்ளலாம் எது கூடாது போன்றவைகள் ஒரு பெரிய அட்டவணையாக போடப் பட்ட வலைத் தளத்தை படித்து விட்டுப் போவது உசிதம். சில அபாரமான போட்டோஜெனிக் காட்சிகளைக் கடந்து லிபர்ட்டி பார்க் போவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடி. விமான நிலையம் போல் பெல்ட், ஷூ, ரிஸ்ட் வாட்ச் எல்லாவற்றையும் கழட்டிய பின்னும் நான் வைத்திருந்த மூக்குக் கண்ணாடிக் கூட்டை வாங்கி வெகு ஜாக்கிரதையாக ஏதோ தொடக் கூடாத பொருளைப் பார்ப்பது போல் ஆராய்ந்து திருப்பிக் கொடுத்தார்கள். நம்ம ஊர்ப் பெண்களுக்கு அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகளால் மேலும் தலைவலி. மாட்டார்கள் என்று தெரிந்தும் கழற்ற முடியுமா என்று கேட்டு அதி தீவிரப் பரிசோதனைக்குப் பிறகு ஒரு வழியாக அனுமதித்தார்கள். இவற்றுக்கெல்லாம் மேல் வானத்தில் எப்பொழுதும் 'விர்ரிட்டுக்' கொண்டிருக்கும் ஹெலிகாப்டர்களின்  ஒலி - இந்நாட்டில் பழகிக் கொள்ள வேண்டிய ஒன்று.

கரையிலுருந்து கொஞ்ச தூரம் படகுச் சவாரி - மிஸ் நியூஜெர்ஸி , மிஸ் ப்ரீடம் என்று பெயரிடப்பட்ட இந்தப் படகுகளில் நூறு பேருக்கு மேல் ஏறலாம், அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் தலைக்கு மேல் தெரிந்தது. கிளம்பியவுடன் படகு ஓட்டுனர் அன்பாக வரவேற்று இந்தச் சவாரியின் மகிமையை சிரமம் பார்க்காமல் விவரித்தார். பாவம் அதைக் கேட்கத்தான் ஆட்களில்லை- ஏனென்றால் படகு நகர்ந்தவுடன் கூடவே தொடரும் அருமையான காட்சிகளைப் படமெடுப்பதில் அனைவரும் பிஸி.

ஒரு சிறிய சவாரிக்குப் பின் , எல்லிஸ் தீவைக் கடந்து அந்தத் தீவை நெருங்க நெருங்க , சுதந்திர தேவியின் பிரம்மாண்டமான சிலை நம்மை அணுக சுற்றிலும் ஒரு பரபரப்பு. ஒரு சாதாரணப் பச்சை நிறத்திலுள்ள சிலையின் கையில் பளபளப்பாக எரியும் ஒரு சுதந்திரத்   தீச்சுவாலையைப் பார்த்துக் கொண்டே தீவினுள் போனால் இன்னாட்டிற்க்கே உரித்தான ஒரு ஒழுங்கு தெரிந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகளுக்கேற்ப்ப, சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு முதலில் கண்ணில் பட்ட இடங்கள் கேண்டீனும் , கழிப்பறையும் தான்.

உள்ளே நுழையும் முன் மற்றுமொரு தீவிர சோதனை - அதி முக்கியமான சமாச்சாரங்கள் தவிர எல்லாவற்றையும் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க அறிவுறுத்தல் - இரண்டு டாலர்களுக்கு இந்தப் பெட்டகத்தை வாடகைக்கு எடுப்பது ஒரு இனிய அனுபவம் - இரண்டு டாலர் நோட்டுகளை உள்ளே தள்ளினால் எந்த உயரத்திலுள்ள பெட்டகம் நமக்குத் தேவை என்று கேட்கிறது, அதன் பின் நம் கை ரேகையை பதிவு செய்து கொண்டு அது தான் பெட்டகத்தின் சாவி, நீ வரவில்லை எனில் அது காலி என்று மிரட்டி விட்டு நகர்ந்தால் மற்றொரு பெண்மணி நம் டிக்கெட்டுகளை வாங்கி நமது அடையாளச் சீட்டையும் வாங்கி அதிலுள்ள போட்டோ நீ தானா என்று முகத்தருகே வந்து ஆராய்ந்து உறுதி செய்து கொண்டு ஓகே சொல்கிறார். எதற்க்கு இவ்வளவு கெடுபிடி என்று கேட்பதற்குள் கூட வந்த நமது உள்ளூர் ஆசாமி 'மிகச் சுதந்திரமாக , நட்பாக இருக்க விட்ட இவர்களை இப்படி மாற்றியது நடந்த பல கசப்பான சம்பவங்கள் தான் ' என்பதை மறுக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம் தாண்டி மற்றொரு அறைக்குள் போனால் அன்பாக உங்களை வரவேற்று, எவ்வழி செல்ல வேண்டும் என்று உதவி, நமது வருகை இனிமையாக அமைய வாழ்த்துகிறார் ஒரு வரவேற்ப்பாளர் . இதைத் தாண்டி ஒரு சின்ன பொருட்காட்சியகம்  - அதில் இந்தச் சிலையின் பூர்வீகம், எந்தெந்த வருடங்களில், எப்படி செய்யப் பட்டது, அதைச் செய்ய பயன் படுத்திய கருவிகள் எல்லாம் வைக்கப் பட்டிருந்தன.


அதையும் தாண்டினால் ஏற ஆரம்பிக்கும் படிகள் மெதுவாகக் குறுகிக் கொண்டே போய் ஒரு இடத்தில் ஒருவருக்கு மேல் போக முடியாத அகலத்தில் உள்ளது. ஒவ்வொரு பத்து படிகளுக்குப் பிறகும் மூச்சு வாங்குபவர்கள் ஆஸ்வாஸம் செய்ய ஒரு சின்ன ஒதுக்குப் புறம்.



இப்படியாக ஒரு இருநூறு படி ஏறிய பின் சுதந்திர தேவியின் தலை அருகிலுள்ள 'கிரௌன்' எனப்படும் இடத்தை வந்தடைந்தால் அங்குள்ள ஒரு சிப்பந்தி அன்புடன் வரவேற்று அந்த இடத்தின் மகத்துவத்தை விளக்கி நமக்குப் புகைப் படம் எடுக்கவும் உதவுகிறார்.

'நீங்கள் பாவம் , நாள் முழுவதும் இங்கேதான் இருக்க வேண்டுமோ ' என்று உணர்ச்சி வசப்பட்டு  என்னுடன் வந்தவர் கேட்க',  அவர் ' இல்லை. இரண்டு மணி நேரம்  தான் நாங்கள் இங்கு இருக்க முடியும் . ஏனென்றால் 300 அடி உயரத்தில் இருக்கும் இவ்விடத்தில் பாத்ரூம் கிடையாது ' என்று சொன்னவர் நாங்கள் திரும்பும் பொழுது டியூடி முடிந்ததோ இல்லை வேறு என்ன அவசரமோ- எங்களுடனேயே  இறங்கியும் வந்து விட்டார்.

இந்த சிகரத்திலுருந்து பார்த்தால் புகழ் பெற்ற ப்ரூக்ளின் பாலத்திலுருந்து எல்லாமே பொம்மை போல் தெரிந்தது. எங்கு திரும்பினாலும் போட்டோ எடுக்கத் தூண்டும் காட்சிகள்.
திரும்பும்  பாதையும் அதே ஒற்றையடியாக  இருந்தாலும் அது ஒரு வழிப்பாதையாக இருந்தது. வருபவர்கள் விழாமல் பிடித்துக் கொள்ள பளபள உலோகத்தில் கை பிடித்துக் கொள்ள வசதியாக கம்பிகள்- சுத்தமாகவும் இருந்தது.

கொலைப் பசியுடன் கீழிறங்கி வந்தால் மூடிக் கொண்டிருந்த கேண்டீனில் கிடைத்த இலை தழைகளை கொறித்த பொழுது நமக்கு கம்பெனி கொடுக்க வந்த பல ஸீகல் பறவைகள்  ரிச்சர்ட் பாஷை நினைவுப் படுத்தின. இப்படிப்பட்ட அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு வரும் பொழுது மக்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :  ஐ டி கார்ட் கண்டிப்பாகத் தேவை - இல்லா விட்டால் திருப்பி அனுப்பப் படுவீர்கள்; பசிக்கு என்ன கொண்டு சென்றாலும் மேலே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது; நடப்பதற்கு, படி ஏறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பழகிக் கொள்வது நல்லது. அனேகமாக நீங்கள் திரும்பும் பொழுது கேண்டினும் கடையைக் கட்டி விடுகிறார்கள் - ஆகையால் காலை வேலைகளின் முற்பகுதியில் முன் பதிவு செய்வது புத்திசாலித் தனம் .

எத்தனை சிரமமிருந்தாலும் பார்க்க வேண்டிய ஒரு இடம். கால் வலித்தாலோ, மூச்சு வாங்கினாலோ வீடு திரும்பியபின் அமிர்தாஞ்சன் தடவி சரி செய்து கொள்ளலாம். என்நேரமும் , எந்த தட்ப வெட்ப நிலையிலும் கையை உயர்த்தி சுதந்திரத்தின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் அந்தப் பெண்மணியைக் காண இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம்.

இந்தப் இடத்தின் முக்கியத்தை உணர்த்தவும், சில பிரமிப்பான காட்சிகளைக் காணவும் அங்கங்கே இணைத்துள்ள சில புகைப் படங்களையும் காண இதை http://chinthikkiren.blogspot.com/  என்ற தளத்தில் படிக்க அன்புடன் அழைக்கிறேன்.

Thursday, October 22, 2015

அமெரிக்காவில் கடந்த சில பக்திப் பாதைகள்

சென்னையில் இருந்தவரை , அவ்வப்போது கோவில்களுக்குப் போவது ஒரு பிடித்த அம்சமான நடவடிக்கையாக இருந்தது. அமெரிக்கா வந்தவுடன் அது இருக்காது என்று எதிர்பார்த்தது தான். ஆனால் இங்கும் , சில சந்துகளிலுருந்து  சாயந்திர வேளை நடையின் பொழுது இந்தியர் வாழும் பகுதிகளில் பஜனை சத்தங்களும் , பிரசாத வாசனைகளையும் உணர ஒரு இனிய அதிர்ச்சி.

சந்திர கிரஹணத்தன்று , சூடாக பிரயாணி விற்பனையாகிக் கொண்டிருக்கும் தெருவுக்குப் போகும் வழியில் பக்தர்களின் ஆக்ரோஷமான ஜால்ரா சப்தங்கள் அவர்களின் பரவச நிலையின் எல்லையைக் காட்டியது.

பிரதான வீதி ஒன்றிலேயே , பழக் கடைகளுக்கும், பல் டாக்டர்களுக்கும் இடையே, கண்ணாடி வழியே கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரித்தது பல கடவுள் சிலைகள்- உள்ளே மங்கலாக குளிருக்கோ இல்லை பக்திக்கோ பட்டுச் சால்வை போர்த்தப்பட்டுத் தெரிந்தன.

விநாயகர் சதுர்த்திக்கு இந்தியர்கள் நிறைய வந்து போகும்  பிரதான  வீதியில் பிளாட்பாரத்தில் ஒரு விநாயகர் சிலையை வைத்து பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் கழுத்தைச் சுற்றி மைக் அணிந்து கொண்டு உரக்க மந்திரங்கள் சொன்ன சாஸ்திரிகள்.

ப்ளஷிங்க் (FLUSHING)   என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோவில் மிகப் பிரசித்தம். சதுர்த்தி முடிந்து சில தினங்கள் கழித்து ஒரு ஞாயிறன்று விநாயகரை வெள்ளித் தேரில் வைத்து வீதி உலா வர விழாக் கொண்டிருந்த இடத்தை அமெரிக்கா என்று நம்பக் கடினமாக இருந்தது. பட்டுப் புடவைகள் சரசரக்க மாமிகள் கோலாட்டம் ஆட, பட்டு வேட்டிகளிலும் , பஞ்ச கச்சத்திலும் மாமாக்கள் மைக் பிடித்து ஸ்லோகங்கள் சொல்ல , பல இந்தியர்கள் உற்சாகத்துடன் தெருவில் நடந்தனர். குடிநீர் , குளிர்பானம், சின்ன மணி பர்ஸ் இப்படி பல இலவசங்களும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அழகான , மிகச் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்தக் கோவிலில் மக்கள் அமைதியாக வரிசையில் நின்று தரிசனம் செய்தார்கள். முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் சுடச்சுட சாம்பார் சாதம், லட்டு பிரசாதம். உடன் கொடுத்த தயிர் சாதம் கிருஷ்ணருக்கு ரொம்பப் பிடிக்கும் - அவ்வளவு க்ரீம். வந்த கூட்டத்துக்கும் விநியோகிக்கப்பட்ட பிரசாதங்களுக்கும் தெருவில் இருந்த குப்பை மிகக் கம்மிதான். நம்பிக்கையை தள்ளி வைத்து இவ்வளவு கூட்டத்தையும் , தேர் பவனியையும் பராமரித்து பாதுகாப்புக் கொடுத்த அமெரிக்க போலீஸ், அவர்கள் விரும்பும்  பல-மத-நம்பிக்கைக்கு நல்ல உதாரணம்.

Flushing Temple Car


ப்ரிட்ஜ் வாட்டர்  (Bridge Water)

ஜெர்சியிலிருந்து ஒரு மணி தூரத்தில் இங்கு உள்ள இந்தக் கோவிலில் அனேகமாக எல்லா பிரசித்தமான தெய்வங்களின் சந்நிதிகளும் இருக்கின்றன. சில்லென்ற மார்பிள் தரையை அனுபவித்துக் கொண்டே நடந்தால் எல்லா ஸ்வாமிகளும் ஒரு சுத்தமான எண்ணை பிசுக்கு, விபூதி குங்குமம் சிதறாத சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம் - பெருமாள் , திருப்பதியை நினைவில் கொண்டு வரும் ஒரு ஏழு அடி பிரம்மாண்டம்;  ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியும், அங்கங்கு சத்தியநாராயணா பூஜையும், இங்கு பிரபலமாக இருக்கும் ஸ்வாமினாரயணன், விட்டல் மற்றும் நவ கிரஹங்கள். எல்லா சந்நிதிக்கு முன்னும் ஸ்ரீ ரங்கம் கோவில் தூண்களில் காசு சொருகும் நம்மவர்கள் இங்கு தாராளமாக டாலர்களை தூவி இருந்தார்கள்.  பலி பீடங்கள் இருக்கக் கூடிய  இடங்களில் நம்ம ஊர் வெள்ளை சோற்றுக்கு பதில் காகித கப்பில் பொங்கல் வைத்திருந்தார்கள். குருக்கள் மந்திரங்களைச் சொல்லி , "Anybody else want to do archanaa " என்று கூவி விட்டு  ஹாரத்தி காண்பித்து எல்லோரையும் பரவச நிலைக்குக் கூட்டிச் சென்றார். தமிழ் நாட்டில் கோவில் நடத்துபவர்கள் இங்கு வந்து எப்படி கோவில் வளாகத்துக்குள்ளேயே ஒரு சுத்தமான கழிப்பறையையும் பராமரிக்கலாம் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
Bridge Water temple

அக்ஷர்தாம் - (Akshardham)

ராபின்ஸ்வில்லே என்னும் இடத்தில் உள்ள 'அக்ஷர்தாம்' உலகிலேயே பெரிய கோயில் என்று வந்த ஒரு செய்தியுடனும், இதே கோவிலை தில்லியில் பார்த்த ஒரு எதிர்பார்ப்புடனும் சென்றேன். ஏக்கர் ஏக்கராக நிலத்தை வளைத்துப் போட்டு, விஸ்தாரமான கார் பார்க் கொடுத்து, ராஜஸ்தான் மார்பிள்களால் இழைத்துக் கட்டப்படும் ஒரு பெரிய இடம். தில்லி அளவு செக்யூரிட்டி கெடுபிடிகள் கிடையாது. செல் போன், ஐ பேட் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம், ஒரு நிலை வரை போட்டோவும் எடுக்கலாம்.
Akshardham

பிரதான மண்டபத்தில் உள்ள மார்பிள் சிலைகள் மேல் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் விளக்குகளின் பளீர் கண்ணைப் பறிக்கின்றது. நாம் உள்ளே நுழைந்து எந்தப் பக்கம் ஆரம்பிக்கலாம் என்று திணறும் போது, அமைதியாக நம் அருகில் வரும் வழி காட்டிகள் எளிய நடையில் அந்த இடத்தைப் பற்றி சொல்கின்றனர் - காசு எதுவும் கொடுக்க வேண்டாம். எப்படி வாசலில் உள்ள இரண்டு தூண்கள் வருபவர்களை பவித்ரமாக்குகின்றன; 250 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் 2700 தொண்டர்களைக் கொண்டு நடக்கும் இந்தப் பணி பத்து சதவிகிதம் தான் முடிந்து இருக்கின்றன; இங்குள்ள 97 தூண்களை அவர்கள் எதிர்பார்ப்புக்குக் கொண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும்... இப்படிப் பல தகவல்கள்.

ஒவ்வொரு தூணிலும் ஒரு கதைக்கான சிற்பங்கள் - மிக நுண்ணியமாக செதுக்கப் பட்டவை. வெகு அழகாக வடிக்கட்ட ஒரு வெண் தாடியை உணர கையை அதனருகில் கொண்டு சென்ற போது, எங்கிருந்தோ புகை மண்டலத்திலுருந்து , கத்தி பட கதாநாயகன் போல் வந்த ஒரு பணியாளர் சிலைகளை தொடக்கூடாதென்றும், எப்படி ஒரு அன்பர் ஒரு சிலையை உடைத்து விட்டார் என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போய் சிரித்துக் கொண்டே காண்பித்தார் . சிலைகளின் தத்ருபம், புத்திசாலித்தனமாகப் பொருத்தப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் உள்ள தூண்கள் ...எழுபதுகளின்  'வசந்த மாளிகையை' நினைவுப் படுத்தின .

இவற்றுள் ராமர், வியாசர், துருவர், நாம்தேவ், துக்காராம், திருவள்ளுவர் இப்படி பல தெரிந்த பிரபலமானவர்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தால் சிவன், பார்வதி அவர்களின் பிள்ளைகளை வைத்து முருகன் மூத்த பிள்ளை என்று ஒரு கூக்ளி போட்டு சிவன் குடும்பத்தில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தனர்.

இந்த இடத்தால் என்ன லாபம் என்றால் ' இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட நம் வரலாறு தெரிய வேண்டும் என்பதே ' என்று அந்த வழி காட்டி சொன்னது முற்றிலும் உண்மை என்றே நம்ப வைத்தது. வழக்கம் போல் கோவிலுக்கு மறு புறத்தில் உள்ள கடையில் நம்ம ஊர் பட்சணங்களின் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

ஸ்வாமினாராயன் கோவில்

நம்ம ஊருல அஞ்சு விளக்குன்னு சொல்றமாதிரி , இங்கும் ஐந்து தெருக்கள் கூடும் இடத்தை Five Corner என்றழைக்கிறார்கள். இங்குள்ள ஸ்வாமினாராயன் கோவில் இந்த இடத்தில் பிரபலம் என்றதால்  ஒரு குளிர்ந்த மாலையில் நுழைந்தோம். இந்தியக் கோவில்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசைகள் தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலிலோ நுழைந்தவுடன் தம்பதிகளைப் பிரித்து தனித்தனியாக சாமி கும்பிட வைக்கிறார்கள். இந்தப் பிரிவினை இறுதி வரை வெளியில் வந்து காலணிகளை எடுக்கும் வரை நடப்பது தான் ஆச்சரியம். சரி தரிசனம் பார்த்தது போதும் என்று எழுந்தால் அமுக்கிப் பிடித்து 'இருந்து போகலாமே, இன்னும் அரை மணியில் மகா பிரசாதம் கொடுக்கப் போகிறார்கள்' என்று நம்ப ஊரில் கிரெடிட் கார்ட் வியாபாரி போல் பிடிவாதம் பிடித்தார்கள். அப்படியும் நான் மசியாததால் நைவேத்யத்துக்கு முன்னேயே பிரசாதத்தைக் கையில் திணிக்க ஒரு பரவச நிலையில் வெளியில் வந்தால் போதும் என்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.

நவராத்திரி

இந்தியர்கள் வெகுவாகப்  புழங்கும் ஒரு தெருவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடக்கப் போவதாக பல வாரங்களுக்கு முன்னேயே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருந்தார்கள். இண்டியன் ஸ்டிரீட் எனப்படும் தெருவில் பட்டேல் ஸ்டோர்ஸும் , பிரியாணி அரிசி முதல் அப்பளம், வடாம் வரை அனைத்து இந்திய உணவுகளும் விற்க்கும் இந்தத் தெருவில் மாலை நடை பயிற்ச்சியின் போது பல இந்தியர்களைக் காண முடியும். தெருவின் இரண்டு முனைகளிலும் வண்ண விளக்குகள் மின்னியதைப் பார்த்து ஆஹா என்ன ஏற்ப்பாடு என்று வியந்து அருகே போனவுடன் தான் தெரிந்தது அது பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்ட போலிஸ்கார்கள் என்று. அருகிலுள்ள பெங்காலி ஹோட்டலில் அளவில்லாத சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி விட்டு வெளியில் வந்தால் குளிர் பிடுங்கித் தின்றது. முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மூடி அருகில் போனால் பெரிய மேடையில்  இரண்டு பேர் சுமாராகப் பாடிக் கொண்டிருக்க பல இந்தியர்கள்  குளிருக்காகவோ இல்லை பாடுபவர்களுக்காகவோ கையைக் காலை உதறி ஆடிக் கொண்டிருந்தார்கள்- கார்பாவாம் !
Garbha on Indian street

இங்கு ஒண்ணும் நம்ம ஊர் பக்திக்குக் கொஞ்சமும் குறைவில்லை தான் . ஒரு நல்ல சுத்தமான சூழ் நிலையில், வரிசையாக நின்று, அமைதியாக தரிசித்து, டாலர்களை அள்ளிப் போட்டு, பல கோவில்களில் சூடான பிரசாதம் எனப்படும் மதிய உணவையும் முடித்துக் கொண்டு மக்கள் திருப்தியாகத்தான் போகிறார்கள் .

அமெரிக்காவில் வந்து மக்கள் சாமி கும்பிட கோவில்கள் கட்டியதென்னவோ நியாயம் தான் , அதிலும் சுத்தமாக கழிப்பறைகளும் தேவை தான். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தியவர்கள் ,  இயற்கை உபாதைகளுக்குப் பின் கால் அலம்பவும் ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் பேஷாக இருந்திருக்கும்.

Friday, October 16, 2015

'அமெரிக்காவில் பார்த்ததும் பதிந்ததும்' - பாகம்- 2

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'பார்த்ததும் பதிந்ததும்' பதிவுக்கு வந்த சில கடிதங்கள் மென்மேலும் பகிரத் தூண்டியதால் , இதோ இன்னும்  சில பார்வைகள்:

அமெரிக்காவில் தங்கள் நாட்டுக் கொடியை பறக்கவிடுவதற்கு தயங்குவதே இல்லை. வீட்டு முன்னோ, காரிலோ எல்லா இடங்களிலும் , எல்லா அளவிலும் காணப்படுகிறது. தேசிய உணர்வைத் தூண்ட ஒரு நல்ல உத்தி.

நிறைய சைக்கிள்களைப் பார்க்க முடிகிறது. வண்டி ஓட்டினாலும் அவர்களும் பாதசாரிகளுக்கான விதிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமாம். நம்மூர் மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால்  நம்மூர்ப்படி நடைபாதையில்- ஆனால் அவர்கள் சட்டப்படி சரியாக எதிர் திசையில்- காற்றாய்ப் பறக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் சரியான அடி படும் 

போலிஸ்காரர்கள் ஆஜானுபாகுவாய் இருக்கிறார்கள். ஆகிருதிக்குக்காகவோ இல்லை அபராதத்துக்காகவோ , பொது மக்கள் அவர்களைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள்.

எங்கு ரோடு ரிப்பேர் நடந்தாலும் அங்கு கட்டாயமாக ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டுமென்பது ந்நாட்டு விதியாம். அதனால் விதி மீரல்கள் இருப்பதில்லை. நேற்று ஒரு போலீஸ்காரர் ஒரு பக்கம் தெருவில் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருக்க மற்ற முனையில் தெருப் பிள்ளைகளுடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார் .

கார் கண்ணாடியை இறக்கி விட்டு உரத்த சத்தத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே போகக் கூச்சப் படுவதே இல்லை.

கார்கள் அனேகம் பேர் வைத்திருக்கிறார்கள், ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு இங்கு நல்ல மவுசு. 

இந்தியாவில் காணாமற்போன அத்தனை குருவிகளும் இங்கு தான் உள்ளனவோ - அவ்வளவு குருவிகள் , கொத்துக் கொத்தாக மெல்லிய சத்தத்துடன் . இங்கு செல் டவர், ரேடியேஷன் போன்ற சமாச்சாரங்கள் கிடையாதா? நம்மவர்கள் விசாரித்துத் தேர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று 

நம்ப ஊரில் எண்பதுகளில் ஒரு ஸ்டேடஸ் சிம்பலாக விளங்கிய டீ வீ ஆண்டெனாக்களை, 2015ல் அமெரிக்காவில்  பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது 

நுகர்வோர்களுக்கு  ஏகப்பட்ட சலுகைகள்.  குக்கரிலிருந்து, ஆடைகள் வரை - எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 'சிவாஜி' மாதிரி பழகிப் பார்க்கலாம். பிடிக்க வில்லையென்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிக் கொடுத்து விடலாம். கேள்வி கேட்காமல் காசு கொடுக்கப் படும். தை அவ்வப்பொழுது தப்பாக தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது.

வெகுவாகக் கவர்ந்த மற்றொரு விஷயம். மொபைல் போனை எல்லாவற்றுக்கும் உபயோகப் படுத்துகிறார்கள்- அடுத்த பஸ் , ரயில் எப்பொழுது, ஒரு இடத்துக்குப் போக வழி - ரோட்டில் யாரையும் கேட்க  முடியாது, சொல்லவும் மாட்டார்கள். இந்தவாரக் கடைசியில் மழை வருமா,  பிட்ஸா ஆர்டர் கொடுக்க, கொடுத்த ஆர்டரின் ஸ்டேட்டஸ் அறிய , பார்மஸியில் கேட்ட மருந்துகள், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன், நேற்று  எடுத்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் ரெடியா - இப்படி சமய சஞ்சீவியாக உள்ள போன் இல்லா விட்டால் இவர்கள் பாடு கஷ்டம் தான். அதைவிடக் கொடுமை இன்டர்நெட் இல்லா விட்டால் - முக்கால் தேசம் முடங்கியே விடும் போல.

பார்த்த வரையில் பலரும் ஒரு ஒழுக்கத்துடன் இருக்கிறர்கள்.

நாம் எதிரில் நடந்து வரும் பொழுது அவர்கள் வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாலோ, நாயை வாக்கிங் கூட்டிச் சென்றாலோ ஒதுங்கி வழி விடுகிறார்கள்.  நாய்களை பிள்ளை போல் வளர்க்கும் இவர்கள் ஆபிஸில் இருந்து வந்தவுடன் சளைக்காமல் செய்யும் முதல் வேலை இந்தக் 'குழந்தையை' வெளியில் கூட்டிப் போவது தான் - "இல்லாவிட்டால் உட்கார விடமாட்டான்".

வாகன ஓட்டிகளின் பொறுமை ஆச்சரியப் பட வைக்கிறது. அனேகமாக எல்லோருமே நிறுத்தி புன்னகையுடன் பாதசாரிகளைக் கடந்து போகச் சொல்லி, பின்தான் போகிறார்கள். கலாச்சாரமும், விதிகளின் உக்கிரமும், கை நீட்டாத காவல் துறையும் - கை கோர்த்திருப்பது தெரிகின்றது.



சுலபமாகப் புன்னகைக்கிறார்கள். உற்சாகப் பிரியர்கள். எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். 

மொத்த விற்பனைக்கே பிரபலமான சில கடைகளில் தயங்காமல் அள்ளுகிறார்கள் - 48 பாட்டரிகள் கொண்ட ஒரு பாய், பட்டிணத்தில்  பூதத்தில் வரும் ஜாடி சைஸில் ஜூஸ் பாட்டில்கள், பல தரப்பட்ட வடிவங்களில் ரொட்டிகள் எல்லாவற்றையும் சளைக்காமல் வாங்குகிறார்கள். நிறைய, செலவழிக்காமலேயே தேதி முடிந்து போய் தூக்கியிம் போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன் 

இது ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கபுரி  போலும் - எப்பொழுதும் ஏதாவது ஒரு சேல் நடந்து கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் அட்டையுடன் உள்ள வீட்டம்மாக்களைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன்மார்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் உழைத்து, வார இறுதியில் கொண்டாடி,மறுபடியும் திங்களன்று நீள முகத்துடன் அடுத்த வார கவலைக்குக் கிளம்புகிறார்கள். 

நான் பேசிய சிலரின் படி- சேமிப்புத் திட்டங்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது. வங்கிகள் சேமிப்புக்குக் கொடுக்கும் வட்டி விகிதங்கள் வடிவேலு பேசுவதை விட காமெடியாக இருக்கிறது. வங்கியிலேயே அட்வான்ஸ் வாங்கி, நகை செய்து , அதற்க்கு எதிராகவே நகைக் கடன் வாங்கி, கடனை அடைத்து நகையை  சே(ர்)மிக்கும்  நம்ம வங்கி ஊழியர்களின் திறமைக்கு இங்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது . சிறு சேமிப்பில் நம்மவர்களை மிஞ்ச முடியாது.

 வெளி நாட்டில் சம்பாதித்து, இந்திய வங்கிகளில் சேமித்து, எந்த நாட்டு ஷேர் மார்கெட்டிலும் விடாமல் கூடுவாஞ்சேரி பக்கம் வீட்டைக் கட்டி செட்டில் ஆகும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள் . ஆனால் கொஞ்சம் கம்மி. அனேகமாக பலரும் பெற்றோர்களின் முதியோர் இல்லச் செலவு போக, இங்கேயே விரயம் செய்து,  வளரும் மகள்களை நினைத்துக் கொஞ்ச காலம் கவலைப் பட்டு, அடங்கி விடுகிறார்கள்.

நான் பார்த்தவரை தெருக்கள் அனேகமாக சுத்தமாக இருக்கின்றன. மரங்களிகளிலுருந்து உதிரும் இலைகளைக் கூட மிஷின் வைத்து தவறாமல் எடுத்து விடுகிறார்கள் 

தெருவில் தன்னிச்சையாக மாடுகளையோ அவைகள் போடும் சாணங்களையோ பார்க்காமல் மனது வெறுமையாக இருக்கிறது.

நாய்களைப் பொறுத்தவரை இங்குள்ள விதிகள் மிகக் கடுமை. அவைகளை நடை பயிற்சிக்குக் கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவைகளின் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால், நாயின் சொந்தக்காரருக்கு நூறு டாலர் வரை அபராதம் என்று மூலைக்கு மூலை அறிவித்திருக்கிறார்கள்   

உள்ளூர் மட்டுமில்லை , நெடுஞ்சாலைகளிலும் குப்பையோ, காகிதங்களையோ பார்க்க முடியவில்லை.

சாலைகளில் 100 கி மீ குறையாமல் வேகமாக காரில் பறக்கிறார்கள். சாலை பராமரிக்கும் விதம், விதிகளின் பயம், சுய கட்டுப்பாடு இவைகளெல்லாம் உதவுகின்றன. 

நியூயார்க் போன்ற பெரிய நகரங்களிலும் எவ்வளவு நெரிசல் இருந்தாலும் எந்தக் காரும் ஹார்ன் அடித்துத் தன் வெறுப்பைக் காட்டாமல் இருந்தது ஒரு பெரிய ஆச்சரியம்.

ஒரு சில நெடுஞ்சாலைகளில் ' அதிக வேகம் 70 மைல் ஆனால் குறைந்தது 45 மைல் போயே ஆக வேண்டும் ' என்பதும் ஆச்சரியமே!

கார்களில் முகப்பு விளக்குகளை, கொஞ்சம் வெளிச்சம் குறைந்தாலும் தானாக எரிய வைத்திருக்கிறார்கள். 

பார்த்த மற்றொரு ஆச்சரிய போர்டு 'இன்னும் இரண்டு மைல் காத்திருங்கள் SMS அனுப்ப'

அமெரிக்க ஆச்சரியங்கள் இன்னும் தொடருகின்றன......

Saturday, October 3, 2015

முடக்கிய தினத்தில் முடங்காத எண்ணங்கள்

பாரத தேசத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா வந்து சேர்ந்த போது , வெய்யில் நம்ம ஊர் போல இல்லா விட்டாலும் , சமயத்தில் தாக்கியது.

தமிழ் நாட்டில் கரண்ட்டே இல்லாமல் தகிக்கும் வெய்யிலை பார்த்தவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. ஆனால் நம்ம ஊரில் வேர்த்து ஊத்தி உடல் கண்ணீர் விட்டு விடும் - இங்கு வியர்வை குறைவு , அதுதான் ஆபத்தும்  கூட.

இருந்தும் பயணம் செய்ய, நடை பயில கொஞ்சம் அனுகூலமாகவே இருந்த சீதோஷ்ணம் திடீரென்று கோபித்துக் கொண்டது போல சட்டென்று சில டிகிரிகள் கீழே விழுந்து அனைவரையும் கம்பளிக்குள் இழுத்தது. ரொம்ப காலமாக இங்கேயே இருக்கும் , 'இதெல்லாம் குளிரா, ஜனவரி , பிப்ரவரி பார்' என்று எக்களித்தவர்கள் கூட நேற்று சரணடைந்து விட்டார்காள் -அவ்வளவு குளிர் , மழை காற்றுடன் சேர்ந்து ! பஹாமாஸைக் குறி வைக்கும் 'யோ க்வின்' என்ற  சூறாவளி, அமெரிக்காவிடம் கொண்ட ஒரு ஊடல் தானாம் இந்த ஒரு டிகிரி குளிர்.

உடனேயே பள்ளிகளை மூடி விட்டார்கள். தெருக்களில் நடமாட்டம் குறைந்து உள்ளூர் ரயில்களையும் குறைத்து விட்டார்கள். பலரும் வீட்டில் அடுத்த மாதம் எடுக்கக் காத்திருந்த ஹீட்டரை திருகி அதன் கணகணப்பில் சுகமாக கால் நீட்டி டீ வீ பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் - நல்ல வேளை இங்கெல்லாம் கரண்ட் போகாதாம். நல்ல மனம் கொண்ட சில கிளையண்டுகள் வீட்டிலேயே வேலை பாருங்கள் என்று சொல்ல,  கொடுத்து வைத்த  சில கம்பெனி ஊழியர்கள்  வீட்டிலேயே இருந்து கொண்டு, மனைவி செய்த சூடான பக்கோடாவை ருசித்துக் கொண்டே, இந்தியாவில் வெந்து கொண்டிருக்கும் மானேஜர்களிடம் கான்பெரென்ஸ் கால் பேசி வெறுப்பேத்திக் கொண்டிருந்தார்கள். குளிர் அதிகப்படுத்திய சோம்பேறித்தனத்தால் சில வீட்டு அம்மாக்கள் சமையலறையை மூட பீட்ஸாக் காரர்கள் கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இதே மழை , குளிர் தானே அவர்களுக்கும் ... ஹூம் ....சிலரின் கஷ்டம் சிலருக்கு ஆதாயம்.

வெளியே சுற்றியே பழக்கப் பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு மனம் மாட வீதியைத் தேடி ஓட , சில இடங்களில் 'பிசிறி' என்ற SKUNK போன்ற விலங்குகளும் அங்கங்கு தென் பட்டதால் வெளியில் போவது பாதுக்காப்பு கருதி வீட்டால் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பிசிறிகள் தன் அருகில் யார் வந்தாலும் உடம்பைத் திருப்பி, பின்புறத்திலுருந்து துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு திரவத்தை உமிழ்ந்தால் அதை பெற்றுக் கொள்பவர்கள் தாங்க முடியாத சரும அரிப்புகள் போன்ற உபத்திரவங்களுக்கு ஆளாவார்களாம். வேறு வழியின்றி  வீட்டுக்குள்ளேயே நடை பயில வேண்டி இருந்தது. குளிர் பிரதேசங்களில் உள்ள புத்திசாலி மக்கள் ஏன் த்ரெட்மில் கண்டு பிடித்தார்கள் என்று விளங்கியது. இப்படிப்பட்ட குளிர்கால பயிற்ச்சி நண்பனைத்தான்  நம் மக்கள் சாமர்த்தியமாக ஜிம்களில் வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டீ வியில்  எவ்வளவு  பணம் கொடுத்தாலும் சொல்ப தமிழ் சேனல்கள் தான் வருகிறது.

காசு கொடுத்து வாங்கும் உள்ளூர் சேனல்களில் வரும் ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற தொடர்களும் கொஞ்ச நேரம் தான் பார்க்க முடிகிறது - ஆனால் அபாரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பூ சுத்தாமல், கண்ணீர், மாமியார்-மாட்டுப் பெண் கொடுமை இல்லாமல் தொடர்கள் எப்படி எடுப்பது என்று நம்ம மக்கள் கொஞ்சம் கத்துக் கொள்ளலாம். ஆனால் நடு நடுவே வரும் விளம்பரங்கள் என்னவோ நம்ம ஊரே தேவலை என்று எண்ண வைக்கிறது.

இவற்றுக்கு நடுவே தவறாமல் நமக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் காமதேனு தான்  யூ டியூப் - ஜீ பூம்பா போல் எது கேட்டாலும் கொடுக்கிறது.

இன்னாள் வரை யூடியூப் மூலம் முழுசாக ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே பார்த்த எனக்கு இது ஒரு சவாலாகத்தான் இருந்தது. சமீபத்தில் வெளி வந்து அதே சூட்டில் புறமுதுகு காட்டி தியேட்டரை விட்டே ஓடிய  சில படங்களும், இப்பொழுதும் நன்றாகப் பேசப் படும் சில மாதங்களுக்கு முன் வந்த படங்களும் பார்த்த பொழுது வந்த சில எண்ணங்கள் :

முதலில் , காசு கொடுக்காமல் பார்த்த ஒரு லேசான வருத்தம் (குற்ற உணர்ச்சி?)

ரொம்ப ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்யப் பட்ட சில படங்களின் காலணா பெறாத கதைகள் . இப்படிப்பட்ட படங்களை எந்த நம்பிக்கையில் எடுக்கிறார்கள் - உண்மையிலேயே ஓடும் என்ற எண்ணத்திலா இல்லை நம் ரசிகர்கள் இன்னும் முட்டாள்களே- எதைக் கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலா? பின்னது தான் என்று தோன்றுகிறது.

எதிர்பார்த்து குப்புற விழுந்த சில படங்களை ஆரம்பித்த  அரை மணியிலேயே நாம் ஒதுக்கி எழுந்திருக்கும் பொழுது, அந்தத் தயாரிப்பாளர்களுக்கு அவரைச் சுற்றி உள்ள எவருமே சொன்னதில்லையா , இது எடுபடாது என்று?

சொல்ல பயமா இல்லை உண்மை நண்பர்கள் எவருமே இப்படிபட்டவர்களைச் சுற்றி இருப்பதில்லையா?

பணம் , புகழ் படுத்தும் பாடு எவரையும் உண்மையைச் சொல்ல விடுவதில்லையா?

எனக்கென்னவோ உண்மையாக, வெளிப்படையாக விமரிசனம் செய்யும் ஒரு குழுவை இவர்கள் வைத்துக் கொண்டால் பல நூறு கோடிகளை நட்டத்திலிருந்து காப்பாற்றலாம் , மற்றும் படம் கவிழ்ந்தவுடன் மிரட்டி வாங்கப்படும் நட்டங்களையும் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படியெல்லாம் படம் எடுத்தால் காசு கொடுத்து போகும் எவனுக்கும் இணைய தளத்தில் இலவசமாகவோ அல்லது திருட்டு முறையிலோ முதலில் பார்த்து விடுவோம் என்று தோன்றுவதில் என்ன அதிசயம்? இந்தக் குளிருக்கு சுகமாக இருந்தாலும், எரிச்சல் அதிகமாகத்தான் இருந்தது.

           -  -  நியூ ஜெர்ஸியின் ஒரு குளிர்ந்த மாலையில் வெளியே போக முடியாது வெதும்பிய மனத்தில்  எழுந்த சிந்தனைகள்  !

Thursday, September 24, 2015

விழிக்குமா வங்கிகள் ?

சமீபத்தில் ஒரு விசேஷத்துக்கு போன உறவினர் வீட்டில் சாப்பாடு முடிந்தவுடன் வெற்றிலை பாக்கு போடும் இடத்தில் பேசிக் கொண்டிருந்த பொழுது அந்த விசேஷத்துக்கு வந்திருந்த சில அந்தணர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள்- அதில் பாதிப் பேர் எழுபதைத் தொட்டிருப்பார்கள். திடீரென்று ஒரு வயதானவர் ' நீங்க வங்கிலயா வேலை பார்த்தேள்' என்று கேட்டு விட்டு எந்த வங்கி என்றும் கேட்டார். சொன்ன பதிலுக்குக் கூட காத்திராமல் மடை திறந்தால் போல் கொட்ட ஆரம்பித்தார்:

 ' இப்பல்லாம் ஒண்ணும் சரியில்லை. பாங்குக்குக்குள்ள நுழஞ்சதும் முன்ன மாதிரி சிரிக்க வேண்டாம், ஆனா ஏன் வந்தேங்கற மாதிரி  பாக்கரா'.

'கம்ப்யூட்டர் தான் வந்துடுத்தேன்னு பார்த்தா- இன்னும் லேட்டாறது. கோணா மூணான்னு பாஸ்புக்ல என்ட்ரி போட்றா'

' போதாக் குறைக்கு அப்பப்போ கம்ப்யூடர் வேல செய்யலன்னு திருப்பி அனுப்பிசுடறா. ஆத்திர அவசரத்துக்கு நம்பி போக முடியல . முன்னெல்லாம் நிறைய பேர் இருப்பா. இப்பல்லாம் எண்ணினாப் போல தான் இருக்கா. ஏன் இப்பல்லாம் ஆளே எடுக்கறதே இல்லையா" என்றார்.

இன்னும் ஒரு முதிர்ந்தவர் ' என் கணக்குலேர்ந்து மாசா மாசம் ஒரு அம்பதோ, நூறோ எடுத்துண்டே இருந்தா- என்னன்னு கேட்டா செக் புக் சார்ஜுன்னு சொன்னா. நான் இத்தனை வருஷமா செக்கு  வாங்கினதே இல்லயேன்னு சொன்னதும் , இனிமே எடுக்காம பாத்துக்கறேன். ஆனா இதுவரைக்கும் புடிச்சதை ஒண்ணும் பண்ண முடியாது'ன்னுட்டா.

வந்துதே கோபம் , மானேஜர் ரூமுக்குப் போய், என் மருமான் ரிஜர்வ் பாங்கில பெரிய இடத்துலதான் இருக்கான், நான் அவனண்ட சொல்ரேன்னு அவன் பேரையும் சொன்னப்புறம், மறுநாளே அந்தப் பணம் அக்கௌண்ட்ல திரும்பி வந்துடுத்து" என்றார்

நான் கிளம்பும்போது அவர் கேட்ட கேள்வி செவிட்டில் அறைந்து சிந்திக்க வைத்தது " டெப்பாஸிட் வரலேன்னா இப்படியெல்லாம் பண்றாளே இப்பெல்லாம். பாங்கு அவ்வளவு மோசமாவா இருக்கு? என்ன மாதிரி எத்தன பேருக்கு மருமான்கள்  வங்கிகள் பயப்படும் இடத்தில் இருக்கா? அப்ப அவர்கள் கிட்டேந்து இப்படித் தப்பு தப்பா புடிக்கறதெல்லாம்  அவ்வளவு தானா? எதற்க்கு இப்படி ஏமாத்தி பொழைக்கணும்"னு பொறிந்து தள்ளி விட்டார்.

ஒரு கஸ்டமர் மீட்டிங்கில் இருந்தது போல் போல் தெரிந்தாலும்  அது ஒரு சாதாரண மனிதனின் உண்மையான குமுறலாய்ப் பட்டது. 'அதுக்கப்புறம் அக்கௌண்டை க்ளோஸ் பண்ணி வேற தனியார் பாங்குக்கு மாத்திட்டேன்' என்றவுடன், புரிந்தது, பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏன், எப்படித்  தள்ளி போய்க் கொண்டிருக்கிறது என்று.

வந்த கம்ப்யூடர் எல்லாம் ஊழியர்களைத் தாண்டி வாடிக்கையாளர்களைத் தொடவே இல்லையா, இல்லை தொட்டது போதவில்லையா?

படித்த வாடிக்கையாளர்களுக்குக் கம்ப்யூடர் மூலம் வந்த நன்மைகள் எல்லாம் இப்படிப்பட்ட பாமர மக்களுக்கு போய்ச் சேரவே இல்லையா ?

இவை எல்லாம், என் கண் முன்னே நடந்த -கொஞ்சமும் கற்பனையோ பொய்யோ இல்லாத உண்மைச் சம்பாஷணைகள் என்பதால் அந்தக் கோப வார்த்தைகளின் தாக்கம் அதிக நேரம் என்னுள்ளே இருந்தது. முன்பெல்லாம் இருந்த ஆனால் இப்பொழுது கிடைக்காத அன்பான வரவேற்பு, வங்கிகள் சரியாகப் போகவில்லை என்ற வதந்திகள், வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து தவறான முறையில் பணத்தைக் கறக்கிறார்கள் என்றெல்லாம் எண்ண வைத்திருக்கிறது. அவ்வளவு வயதானவர்கள் பொய் சொல்வதற்கு எந்தத் தேவையுமில்லை என்றே தோன்றியது. ஏதோ சொல்வதற்க்கு இடமில்லை, கேட்பதற்க்கு ஆளும் இல்லையாததால் கிடைத்த சந்தர்பத்தில் கொட்டி விட்டுப் போகிறார்கள் போலும்!

க்ளாஸ் பாங்கிங்கில் இருந்து மாஸ் பாங்கிங் போவதாகச் சொன்ன இந்த வங்கிகள் இப்பொழுது தங்கள் மேல் அதே மாஸ் இவ்வளவு  மாசு கற்பிக்கும் அளவிற்க்கு விட்டதற்க்கு யார் காரணம் என்று எண்ணிப் பார்க்கிறார்களா?

மாஸ் பாங்கிங்குக்கு கிளாஸ் தேவையில்லை என்று யார் முடிவெடுத்தது ?

ஹை க்ளாஸ் மக்கள் வங்கிகளைக் கடனுக்கு மட்டுமே அண்டி பின் 'வாராக் கடன்' என்ற செல்லக் குழந்தையை விட்டுச் செல்கின்றன.  ஆனால் எதுவுமே அதிகம் அறியாத , அதிக எதிர்பார்ப்பு இல்லாத இப்படிப்பட்ட 'மாஸ்' தான் வங்கிகளின் ஆணி வேர் என்பதை எப்பொழுது பொதுத்துறை வங்கிகள் உணரப் போகின்றன?

வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனுக்கு  மட்டும் ஊழியர்களை பயமுறுத்தாமல், இந்தப் பக்கத்தையும் கவனிப்பதும், வாராக் கடன் என்பது வங்கிகள் தெரிந்தோ, தெரியாமலோ, எந்த அழுத்தத்தினாலோ கொடுத்து செய்த தவறுகள். ஆனால்  வங்கிகள் தேற, கரையேற இப்படிப்பட்ட சாதாரண மக்கள் இன்னும் முக்கியம் - உணருமா?

பெரும்பொழுதில் தூங்கிக் கொண்டே இருந்து ஆனால்   எழுந்திருக்கும் கொஞ்ச நேரத்தில் மக்களுக்கு நன்மை அளிக்கும் வாஸ்து புருஷன் போல , வங்கிகள் விழிக்குமா, விழித்தாலும் உதவுமா? சாதாரணர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

Thursday, September 17, 2015

நியூ ஜெர்ஸி- பார்த்ததும் பதிந்ததும் (இதுவரை)


  • மதிப்போ , பயமோ - சாலை விதிகளுக்குப் பணிகிறார்கள்.
  • வண்டிகள் தமக்குக் கொடுக்கப்பட்ட பாதைகளில் அசுர வேகத்தில் போகின்றன , ஆனால் பாதை மாறி ஆட்டோ போல் போவதை  இன்னும்  பார்க்கவில்லை
  • பாதசாரிகளுக்குத்தான் முன்னுரிமை, அவர்கள் தவறே செய்தால் கூட.
  • சாலைகளைக் குறுக்கே கடந்து ஓடுபவர்களையும் பார்க்க முடிந்தது- இதிலும் நம்மவர்கள் தான் அதிகம் என்பது தான் கொடுமை!
  • பாதசாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நடைபாதைகளின் அகலம் பொறாமைப் பட வைக்கிறது.
  • விதிகளுக்குப பணிந்தால் பயமில்லை. ஆனால், விதிகளை மதிக்காதவர்களுக்கு இடமில்லை 
  • நான் பார்த்த வரை , அனேகமாக கார் ஓட்டுவதில் , அதிகம் பேர் பெண்மணிகள் தான்
  • நடைபாதைகளில் நடப்பவர்களைத் தவிற நிறைய மூட்டைகள் தெரிகிறது - குப்பை !
  • குப்பை சேகரிப்பதிலும், அள்ளுவதிலும் ஒரு ஒழுங்கு முறை தெரிகிறது.
  • கொஞ்சம் பிரயத்தனப்பட்டுத் தேடினால் , நடைபாதைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களும், பிஸ்கோத்துக் கவர்களையும் காணலாம்.
  •  குழந்தைகளை பிறந்தவுடனே தள்ளி வைத்து விடுகிறார்கள் - நடக்கும் போது தள்ளு வண்டியில், காரில் பின்புறம் தனி சீட்டில்- அப்பா, அம்மாவின் வாசனையையும் , கதகதப்பையும் குழந்தைகள் எப்படி உணரும்? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை பெருகுவதில் என்ன ஆச்சரியம்?
  • நாயாகப் பிறந்தாலும் அமெரிக்காவில் தான் பிறக்க வேண்டும் - அவ்வளவு அனுசரணை, பராமரிப்பு
  • அன்பை வெளிப்படுத்தத் தயங்குவதே இல்லை - ஏர்போர்ட் எஸ்கலேட்டரிலோ, நடை பாதையிலோ, ஓடும் ரயிலிலோ - அன்பு பெருக்கெடுத்தால் தயங்காமல் கன்னத்தில் பதித்துக் கொள்கிறார்கள்.
  • கொஞ்சூண்டு தொப்பையை வைத்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க மெரினாவில் ஓடும் நம்ம ஊர்க்காரர்கள், இங்கு இருப்பவர்களைப் பார்த்தால் நிம்மதி அடைவார்கள். அவ்வளவு அபரிதமான உடல் வளர்ச்சி - கவலை படுவதாகத் தெரியவில்லை- பீட்ஸாக்களையும், ஐஸ்க்ரீம்களையும் விட்டு வைப்பதில்லை .
  • நன்றி சொல்லவோ , வாழ்த்துச் சொல்லவோ யோசிப்பதே இல்லை - மாலில் நாம் வாங்கிய பொருளுக்குப் பணம் கொடுத்தாலோ, எதிரே வரும் பொழுது வழி விட்டாலோ எதுவாக இருந்தாலும் சரி.
  • நம்மூர் போல 'ராத்திரியெல்லாம் ஒரே சளி, எதாவது மாத்திரை கொடுங்க'ன்னு பார்மசியில் கேட்டு மருந்து வாங்குவது கடினம்.
  • எதெற்கெடுத்தாலும் பொசுக் பொசுக்கென்று 911 கூபிட்டு விடுகிறார்கள்- அவர்களும் உடனே வருவதுதான் ஆச்சரியம்.
  • பள்ளிக்கு உள்ளே போகும் வரை அனேகமாக எல்லா குழந்தைகளும் செல் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
  • கையில் உள்ள பானத்தை உறிஞ்சிக் கொண்டே, இயர் போன் உதவியுடன் பேசிக் கொண்டே விறுவிறுவென நடக்கும் பலரைக் காண முடியும்.
  • அப்பொழுதுதான் ஆபிஸிலிருந்து திரும்பிய அப்பாக்கள் , பேக் பாக்கைக் கூட கழற்றாமல் குழந்தையை  பார்க் ஊஞ்சலில் வைத்து ஆட்டும் பொழுது, பத்தடி தள்ளி இளம் மனைவிகள் தத்தம் இந்திய அம்மாக்களுடன் நாளைய பிள்ளையார் சதுர்த்திக்கு எப்படி கொழுக்கட்டை பண்ணுவது என்று அறிந்து கொண்டிருக்கிறார்கள்.  
       - - - இன்னும் வரும்   

Saturday, August 29, 2015

பவித்ர நினைவுகள்

விடிவதற்க்கு முன்பே எழுப்பப் பட்டு, குளித்தவுடன் முழங்காலுக்கு கீழும் கால் முழிக்கு மேலும் தடுமாறும் சின்ன பட்டு வேஷ்டியுடன் ஒரு செல்ல மோதல். பட்டுக்குத் தான் தெரியும் இடுப்பில் இறுக்கப் பட்ட பெல்டால் அது மூச்சுக்கு எவ்வளவு திணறுகிறதென்று.  அப்பா, அண்ணன்களுடன் வரிசையாக, செம்மண் கோலத்தின் மேல் போடப்பட்ட பலகையில் உட்காருவதற்க்கு ஒரு பெருமை. சில சமயம் ஆத்து வாத்தியார் மெயில் வேகத்தில் 'மின்னல்' மாதிரி வந்து போய் விடுவார்- அதில் இல்லை சுரத்து. நாமே போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அந்தப் பொறுப்பை கொஞ்சம் இந்த விஷயங்களில் நாட்டம் அதிகமுள்ள ஒரு அண்ணனிடம் ஒப்படைக்கப் பட்டவுடன் அவர் தான் வாத்தியார். தட்டுத் தடுமாறி அவர் மந்திரங்களைச் சொல்ல, மற்றவர்களும் அதற்க்குப் பின் மொழிய , சில கடினமான சமஸ்கிருத வார்த்தைகளை அவர் வாயிலிருந்து எடுக்க நாங்கள் பட்ட பாடு கொஞ்சம் அதிகம் தான், ரொம்ப நேரமாக சமி, சமி என்று சொல்லி பின் 'ரொம்ப சாரி , அது சமர்ப்பயாமி' என்று சொன்னதை நினைத்து இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட கஷ்டங்களும் சிரிப்பும் நிறைந்த சில நிமிடங்களுக்குப் பின் பூணுல் போடுவதிலும் நம் பொறுமையை  சோதித்துத் தான் பார்த்தார்கள். கள்ளப் பூணுலெல்லாம் கடைசியில் தான் என்று உட்கார வைத்து கடைசியில் ஒரு வழியாக அந்த பவித்ரமான கயிறு வந்து விழுந்தவுடன் முதலில் உறுத்துவது அதன் நீளம் தான்- அநேகமாக அது இடுப்பிற்க்கு வெகு கீழே, டிராயர் பாக்கெட்டை தாண்டி எட்டிப் பார்க்கும். இன்னொரு சகோதரன் இந்த மாதிரி விஷயங்களில் சமய சஞ்சீவி - கொஞ்சம் உருட்டி, முடிந்து ஏதோ செய்து 'பயத்தங்காய்' என்று என்னெல்லாமோ சொல்லி அதன் நீளத்தை குறைத்து விடுவார். பின் எடுக்கும் ஹாரத்தியிலும் என் சகோதரிகளுக்குப் போடும் எட்டணா, ஒரு ரூபாய்க் காசுகளில் அவ்வளவு பெருமிதமிருக்கும்.

பின் வருவது முக்கியமான , வெகு நாட்களாக எதிர்பார்க்கப் படும் சம்பவம். நமக்கு பெரியவர் எவராயிருந்தாலும் அவர் காலில் விழுந்து கையை நீட்டினால் நாணயத்தின் சில்லிர்ப்பை உணரும் வரை கை மடங்காது ! என்னுடைய 1968ஆம் ஆண்டின் குறிப்பில் எதேச்சையாய் என்று பார்த்த வரிகள் "அப்பா இன்னும் தர வேண்டிய பாக்கி 75 காசு" இனிமையாக வலித்தது ஒவ்வொரு வருடமும் அன்றைய கலக்க்ஷனை ஆராய்வதில் ஒரு அலாதி சுகம். கொஞ்சம் குறைந்திருந்தால், அம்மா என்ற காமதேனு கொஞ்சம் அதிகம் கொடுத்து முகத்தின் பிரகாசத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

 'அவிட்டத்துக்கு அசடியும் சமைத்து விடுவாள்' என்ற நடைமுறைக்கேற்ப்ப அன்றைய தினம் சாப்பாடு ரொம்ப நேரமாகும். அதனால் காலையிலேயே இட்லி சட்னியை ஒரு கை பார்த்து விட்டு எல்லா சகோதரர்களும் கிளம்பிவிடுவோம்- உற்றார் உறவினர் அத்தனை பேர் வீட்டுக்கும், அவரவர் கால்களில் விழுந்து நல்லாசி பெற. ஸ்கூட்டர்கள் இல்லா அந்தக் காலத்தில் பல்லவன் உதவியுடன் பல்லாவரம் வரை கூடச் சென்று சில்லறைகளின் கலகலப்பையும் கூட்டி மதியம் இரண்டு மணிக்குத் திரும்பினால் வடை, பாயஸத்துடன் ஒரு அமிர்தமான சாப்பாடு.

இன்றைய தினங்களில் அனேகமாக எல்லாமே காலத்தின் கட்டாயத்தில் மறைந்து, மழுங்கி விட்டாலும், அவரவர் விருப்பத்திற்கேற்ப நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் ஆத்து வாத்தியார் என்பவர் காணாமல் போய் விட்டார். நாமே முதல் நாள் போய் குளத்தங்கரை, கோயில் போன்ற இடங்களில் வாங்கிய பூணுல் சமாச்சாரங்கள் தான். ஆபீஸ் போக வேண்டிய கட்டாயத்தில் மொத்த சம்ப்ரதாயங்களும் ஏழரை மணிக்கு முன் நடந்து விடுகின்றன. நமஸ்காரம் செய்தாலும், செய்யப் பட்டாலும் வரும் தக்ஷணையை யாரும் அதிகம் மதிப்பதில்லை- ஒரு வேளை காலத்துக்கேத்தால் போல் ரூபாய்க்கு பதில் டாலரோ, யூரோவோ போட்டால் மவுசு ஏறுமோ- தெரியவில்லை. ஹாரத்தி எடுப்பதற்குள் அலுவலகத்திலிருந்தோ இல்லை வராமலிருந்த வீட்டம்மாவிடமிருந்தோ தொடர்ந்து போன் கால்கள். பஸ் பிடித்துப் போய் ஆசி வாங்கின காலம் மலையேறி வாட்ஸாப்பில் வாழ்த்துச் சொல்லி, பூணுல் போட்டுக்கொள்கிறாப் போல போட்டோவையும் அனுப்பினால், க்ளௌட் மூலமாக வாழ்த்துக்கள் வந்து சேருகின்றன.

இவ்வளவு தூரம் வந்தபின் ஏதோ இதாவது நடக்கிறதே என்று சந்தோஷப் படுவதா, இல்லை இன்னும் சில வருடங்களில் இதுவும் இருக்குமோ என்று கவலைப் படுவதா, தெரியவில்லை !!

Tuesday, June 9, 2015

'தலை'யாய கடமை

தலைக் கவசம் என்னும் ஹெல்மெட் கட்டாயமாகும் ஆணை வருவதற்க்கு முன்னமேயே ஒரு சாரார் அதன் விளவுகளை பட்டியலிடத்  தொடங்கி விட்டனர்:
தலை வலி, முடி உதிருதல், ஜலதோஷம், முதுகு வலி இப்படிப் பல.

எது முக்கியம் - தலையா இல்லை முடியா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

பின்புறம், பக்கவாட்டில் வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை என்கிறார்கள்.
இது தவறான பழக்கம்- அதற்க்குத்தானே கண்ணாடிகள் உள்ளன?

கட்டாயமாக்க வேண்டாம், தலைக் கவசத்தின் உயிர் காக்கும் மதிப்பை மக்களுக்கு உணர்த்தினால் போதும் என்கின்றனர் சிலர்.
உணர்த்துவது மட்டும் போதுமா - சுடும் என்றால் தொட்டுப் பார்க்கும் இந்தத் தலைமுறையில்?

பெண்களுக்கு கட்டாயப் படுத்த வேண்டாம், ஆண்களுக்கு மட்டும் போதும் என்ற ஒரு வாதம் நடந்து கொண்டிருக்கிறது.
உயிரில் ஆண் என்ன , பெண் என்ன? உங்கள் மனைவுக்கும், மகள்களுக்கும் பாதுகாப்பு தேவை இல்லையா?

தொலை தூரப் பயணங்களுக்கு மட்டும் போதும், மற்றபடி அணிய வேண்டாம் என்பவர்க்கு ஒரு உண்மைச் சம்பவம் . ஒரு ஞாயிற்றுக் கிழமை, அதிக வாகன நடமாட்டமில்லாத பிற்பகலில் என் நண்பன் அடுத்த தெருவில் உள்ள கடைக்குப் பால் வாங்கச் சென்ற போது, ஸ்கூட்டி வழுக்கி தலையில் காயம் பட்டு, பிரபல மருத்துவமனையில் ஒரு வருடம் கோமாவில் இருந்து , பனிரெண்டு லட்சங்கள் செலவழித்தும் பயனில்லாமல் போய்ச் சேர்ந்தான். அந்தக் குடும்பம் செலவழிக்க முடியாமல், அவனைப் பார்த்துக் கொள்ளவும் ஆளில்லாமல் பட்ட பாடு... தேவையா ?  

ஹெல்மெட் என்றவுடன் போலிஸ்காரர் சம்பாதிப்பார் என்கின்றனர். இத்தனை கஷ்டங்கள் நமக்கு வரவிருக்கும் போது ஏன்  நாம் அவர் வாங்கும் லஞ்சத்தைப் பற்றிக் கவலை பட வேண்டும்?
எல்லோரும் ஹெல்மெட் போட்டு இவ்வழியில் வரும் லஞ்சத்தை ஒழிக்க உதவலாமே?
நாம் செய்யும் தவறிலிருந்து தப்பத் தானே குறுக்கு வழி தேடப் படுகிறது. இந்தத் தவற்றை, விதி மீறலைச் செய்யாமலேயே இருந்தால் ???  

குறுக்கு வழிகளைத் தவிர்த்து, நொண்டிச் சாக்குகளைத் தேடாமல் பேசாமல் அரசாணை வருகிறதோ இல்லையோ தலைக் கவசமணிந்தால் என்ன? தலைக்குத் தானே சுகம் !!

விதண்டா வாதத்தை விட்டு, விதி முறைகளைப் பின் பற்றினால் விதியையும் வெல்லலாமே!

ஹெல்மெட் பத்திய விவாதங்களின் போது எனக்கு எப்பொழுதுமே நினைவுக்கு வருவது , சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்த ஒரு பலகையில் இருந்த வாசகம்:
" BETTER A BROKEN HELMET THAN A BROKEN SKULL"

Sunday, May 24, 2015

யாருக்குச் சொந்தம்?

காலை பக்திமயமான கதைகளை கேட்டு சிறிது தெளிந்த மனத்தில் இருக்கும் பொழுது தொடர்வது சென்னையைச் சுற்றியுள்ள நிலங்களும் அதை எவ்வளவு மலிவாக இன்றே வாங்கலாம் என்ற காட்டுக் கத்தலும்தான். முதலில் சென்னைக்கு அருகே "ஒரு மனை நான்கு லட்ச ரூபாய்தான்" என்றார்கள். கடைவாயைத் துடைத்துக் கொண்டே திரும்பவும் பார்த்தால் 600 சதுர அடி மனை நாலு லட்சம்" என்றார்கள். ஆஹா ! விளம்பரத்திலேயே தொடங்குறாங்க வில்லங்கத்தை.

மனிதனின் அபார புத்தியை நினைத்தால் வியப்பாகத் தான் இருக்கு. ஏதோ படம் வரைவது போல் காற்றில் கோடுகளைப் போட்டு இது வரவேற்பறை, இது சமையலறை என்று அழகாகக் கூறு போட்டுவிட்டான். இந்த வான்வெளியில் இடையிடையே  மரச்சட்டங்களை நட்டு  அதைக் கதவு என்றழைத்து அவரவர்களின் எல்லையையும் நிர்ணயித்தும் விட்டான்.

 நில உரிமை விஷயம் கொஞ்சம் விவகாரமாகத் தான் இருக்கு.  நான் நிலம் வாங்குவதற்க்கு முன், ரொம்ப ஜாக்கிரதையாக வக்கீல் பார்த்துச் சொன்னார் " எல்லா டாக்குமென்ட்ஸையும் பாத்துட்டேன். ஒரு வில்லங்கமும் இல்லை. 13 வருஷம்  இல்லை 25 வருஷ வில்லங்கப்பத்திரம் இருக்கு. பட்டா, அடங்கல் எல்லாம் ஸ்ப்ஜாடாப் பாத்துட்டேன். தைரியமா வாங்கலாம்".  நியாயப் படி, சட்டப்படி எல்லாம் சரியாத்தான் இருக்கு.

ஆனால், அந்த 25 வருஷம் முன்னாடி  நிலத்தை யார் வெச்சுண்டிருந்தா, யாருக்கு வித்தா? இப்படியே பின்னோக்கிப் போனா, முதன் முதல் இந்த நிலத்தை யார் வெச்சுண்டிருந்தா, அவருக்கு யார் அதை விற்றது?? இதன் ஆரம்பம் என்ன?? யாருக்காவது தெரியுமா? கொஞ்சம் பிரபல நகைச்சுவை கேள்வியின் வாடை அடிப்பதைத் தாண்டி சிந்திக்க வேண்டி இருக்கிறது. இப்படியாக காற்றில் வரைந்து, நிலத்தைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கூறே போடாமலும் மொத்த விற்பனையாகவும் செய்கிறார்கள் என்று நம்ப வைப்பது சமீபத்தில் வந்த ஒரு செய்தி "மதுரையில் ஒரு கிரானைட் மலை காணவில்லை"

எதற்கு இவ்வளவு சிரமம்-  மலையைத் தோண்டியோ அல்லது நிலத்தை சுரண்டியோ பங்கு போடுவதை விட மிகச் சுலபமாக மேலோட்டமாக உள்ளதை அள்ளி விற்பதுதான் மணல் கொள்ளை போலும்.

இப்பவே சென்னை நிறைந்து செங்கல்பட்டு தாண்டி திண்டிவனம், மைலம் முருகன் கோவிலுக்கருகில் என்ற விளம்பரங்களைக் காண முடிகிறது. கொஞ்ச வருஷத்துக்குப் பின் சென்னை- கன்யாகுமரி பாதையில் உள்ள நிலங்கள் வாங்கப் பட்டு விட்டால், அதற்க்குப் பிறகு வரும் நம் பேரக் குழந்தைகள் எங்கு வீடு கட்டுவது? வங்கிகள் யாருக்கு வீட்டுக் கடன் கொடுப்பார்கள்?

இப்படியாக பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் இந்தியாவைக் கூறு போட்ட முதல் பங்கில் வந்தது தான் இன்றைய மாநிலங்கள் போல. இதில் தத்தம் மாநிலத்தில் ஓடும் நதிகளை தனக்குத் தான் என்று சொந்தம் கொண்டாடி இன்னொரு நீர் வியாபாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இதே நிலையில் போனால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் நம் சண்டைகள் இங்கிருந்து விண்ணுக்குத் தாவவும் வாய்ப்பிருக்கிறது போல் தெரிகிறது. சந்திரனிலும், செவ்வாயிலும் முன் போகும் நாட்டவர்கள் அவரவர்கள் கொடியை நட்டு சொந்தம் கொண்டாடத் துவங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் 
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான்  நிலம் தனைப் படைத்தான்

Tuesday, May 5, 2015

நரசிம்மரைத் தேடி

அந்த இடத்தை அடையும் பொழுது கிட்டத் தட்ட முழு இருள் சூழ ஆரம்பித்து விட்டது. ரொம்ப பிஸியான கும்பகோணம் - மாயூரம் சாலையில் பல வாகனங்கள், சிக்னல்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது, திருனாகேஸ்வரம் அருகில் சரேலென்று ஒரு சின்ன சந்தில் இடது புறம் திரும்பி விரைந்தால் அந்த அனேக இருளிலும் கிராமத்தின் மணம் தெரிந்தது. இடிந்து விழக் காத்திருக்கும் திண்ணை வீடுகள், சில மாதங்களுக்கு முன் குட்டையாக இருந்து இன்று வாடிக்கொண்டிருக்கும் பள்ளம், கிராமத்துக்கே உரித்தான மாரியம்மன் கோவில், தெருவில் விளயாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் , மங்கலான தெரு விளக்குகள் இவர்களைக் கடந்து,  இருட்டில் வழி தெரியாமல் கொஞ்சம் ஊர் சுற்றி விட்டு நுழைந்தால் ஒரு அமைதியான தெரு முனையில் வரதராஜப் பெருமாள் கோவில் இரவு உற்சவத்திற்க்கு வண்ண  விளக்குகளுடன் தயாராகிக் கொண்டிருந்தது. கோவில் முன்னே உள்ள ஒரு நீண்ட தெருவின் வீட்டு வாசல்கள் அப்பொழுது தான் தெளிக்கப்பட்ட நீரின் மண் கலந்த வாசத்துடன்  புது மணப்பெண்ணாக மின்னிக் கொண்டிருந்தன.

தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே கேட்டது உயர்ந்த குரலில் பாடல்கள். இக்கால ஹாலைக் கடந்து உள்ளே போனால் வியக்கத் தக்க மர வேலைப் பாடுகளுடன் வேயப்பட்ட கூரையடியில் ஒரு பஜனை குழு ஒலி பெருக்கி இல்லாமல் இயற்க்கைச் சூழ் நிலையில் மனம் மறந்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல மனம் படைத்தவரின் அருமையான வடை, பாயாஸ சாப்பாட்டிற்க்குப் பின் கூட்டம் மெதுவாக கோவிலை நோக்கிச் சென்றது. மாக்கோலம், வண்ண விளக்குகளிடையே கோலாகலம் பூண்டிருந்த கோவிலில் எல்லோரும் வந்து உட்கார வினாயகர் வரும்பொழுது மணி பதினொன்றைத் தாண்டியது. நன்றி நவிலல் எந்த நிகழ்ச்சிகளிலும் கடைசியில் தான் இருக்கும் ஆனால் இங்கோ முதலில் தொடங்கியது- அது ஏனென்றும் பிறகுதான் புரிந்தது. நன்றி சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு பணம், பொருள், உடலுழைப்புக் கொடுத்தவர்களின் பட்டியல் பிரமிப்பாக இருந்தது. அதில் ஒரு தொண்ணூறு வயது தம்பதியரும், இன்றைய ஐ டி துறையில் இருக்கும் பல இளைஞர்களும் ஒன்று சேர இருப்பதை அறிய நெகிழ்ச்சியாக இருந்தது.

சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத எனக்கே தூக்கம் வராமல் கட்டிப் போட்டது அங்கு நடந்த இசை நிகழ்ச்சி. பின்பு தான் தெரிந்து கொண்டேன் அன்று பல பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று ! வினாயகர் தொடங்கி, மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, முனிவர்கள் என்று பலரின் அறிமுகத்தின் பின் வந்த பிரகலாதன் குடும்பம் மெருகேற்றியது. ஹிரண்யன் நுழையும் போது செய்த ஆரவாரம் தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களையும் நிமிர்ந்து உட்கார வைத்தது. பிரகலாதனின் தாயார் லீலாவதி ஹிரண்யனிடன் தன் மகனுக்காக வாதாடி, வேண்டியது தாயுள்ளத்தைக் காட்டியது.

சென்னையில் கம்ப்யூட்டர் கோட் எழுதிக் கொண்டிருக்கும் பிரஹலாதனாக நடித்தவரின் உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. விடி காலையில் நரசிம்ஹரின் வரவு பலரை சாமியாட வைத்தது. இந்த உச்ச கட்ட பக்திக்குப் பின் முடியாது என்றறிந்து தான் நன்றி நவிலலை முதலிலேயே முடித்துக் கொண்ட அவர்களின் புத்திசாலித்தனம் புரிந்தது. இரவு முழுதும் விடாமல் பாடியும் சிறிதும் களைப்பை வெளிக் காட்டாமல் அதே உச்சஸ் தாயியில் பாடும் அந்த இசைக் குழுவைக் கேட்க எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம்.

நிகழ்ச்சி முடிந்து காலை ஆறு மணிக்கு ஹிரண்ய வேடம் போட்ட என் உறவினர் வந்து " என்ன மாமா எப்படி இருந்தது" என்று கேட்ட போது, அவர் கையில் உறை வாள் இல்லை என்று உறுதி செய்து கொண்டாலும், கொஞ்சம் தள்ளி நின்றே பதில் சொன்னேன். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. இந்த ஒரு இரவு நிகழ்ச்சிக்கு இந்த ஊர் மக்கள் படும் பாடு, எடுக்கும் முயற்சிகள்  நெகிழ வைக்கின்றது.

எத்தனையோ இரவுகள் சூப்பர் சிங்கருக்குகாகவும், நமக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கில புது வருஷத்துக்காகவும் செலவழிக்கும் பொழுது, இந்த ஒரு நல்ல நிகழ்ச்சியைக் காண ஒரு இரவு தூக்கம் ஒன்றும் பெரிய தியாகமில்லை என்று தோன்றுகிறது !




Thursday, April 16, 2015

தூண்டில் ஜாக்கிரதை

எண்பதுகளில் வலைத்தளங்கள் வந்த புதிதில் வலையில் நுழைய  வருடத்துக்கு 15000 ரூபாய் கேட்டு பாமரனுக்கு ஒரு எட்டாக் கனியாகவே வைத்திருந்தார்கள். அதனூடே தெரிந்த  வியாபாரத்துக்குக்காக, வரும் விளம்பர வருவாய்க்காக பின் மெதுவாக மக்களை வலைத் தளத்தில் உலவ  அனுமதித்து பின் பழக விட்டார்கள்.

மக்களுக்கு வலை என்ற போதை ஏற்றப்பட்டவுடன் எல்லாமே வலைத் தளம் என்றாயிற்று. யூ பி எஸ் சி பரீட்சை முடிவுகளிலிருந்து, வங்கி தேர்வு விளம்பரம், காலியுள்ள இடங்களுக்கான விவரங்கள் வரை எல்லாமே தினசரிகளில் வருவது நின்று போனது. அனைவருக்கும் இன்டெர்னெட் கற்றுக் கொடுத்து, எல்லா விவரங்களையும் அதன் வழியே அனுப்பி, வலை உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து கொடுத்து, கட்டியவரின் பிரிவைக் கூட தாங்க முடியும் ஆனால் கையளவு உலகத்தைக் காட்டும் கைபேசி கொஞ்ச நாள் கூட இல்லை என்றால் வாழ்வே சூனியம் என்று நம்ப வைக்கும் வரை ஒரு நாடகம் நடத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட இணை பிரியா நட்புக்குத் தான் இன்று விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் எல்லோரையும் சமமாக மதிப்பதா இல்லையா என்ற வாதத்தைத் தொடங்கி மறுபடியும் ஒர் ஏற்ற தாழ்வு நிலைக்கு வித்திட்டிருக்கிறார்கள். ஆம் இன்று பத்தி எரியும் ஒரு சூடான விவாதம் 'இணையச் சமன்' தான்.

இது ஒரு ஆதி கால வியாபார உத்தி, அதற்க்கு நாம் இன்றும் பலியாகிக் கொண்டிருப்பது தான் கொடுமை ! ஐம்பதுகளில் பலகாரக் கடைக்குப் போனால் வரவேற்று உட்கார வைத்து முதலில் ஒரு சின்ன துண்டு இனிப்பையோ அல்லது சூடாக அடுப்பிலிருந்து அப்பொழுது தான் இறக்கிய கொஞ்சம் தூள் பக்கோடாவையோ முதலில் கொடுத்து, வந்த வாடிக்கையாளர்களை தன் வசம் ருசியாக இழுத்த பின் தான் , வியாபார வலையை விரிப்பார்கள்.

இப்படித்தான் நாம் பாட்டுக்கு தேமேன்னு வரும் ஒற்றைச் சானலை வைத்துக் கொண்டு, பாதி நேரம் புரியாத ஜுனூன்களைப் பார்த்துக் கொண்டு புதுமணப் பெண் போல் வெள்ளி இரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்து, ஒளிமயமான ஒலியைக் கண்டு ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்தோம். அப்படிப்பட்டவர்களுக்கு பல சானல்களைக் காட்டி விளையாட்டிலுருந்து , பண வியாபாரம் வரை தொலைக் காட்சி என்றாகி இப்பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு பொட்டிகளுடன் அறு நூறு ரூபாய் வரை கொடுக்க வைத்து விட்டார்கள்.

அந்தக் கால திரிவைகளை நகர்த்தி, தோய்க்கும் கற்களை காணாமல் போகச் செய்து,  மிக்ஸிகளையும் , வாஷிங் மிஷினையும் கொண்டு வந்தது இந்த அவசரக் கால அனைவருக்கும் அலுவலகம் போகும் குடும்பங்களுக்கும் தேவையான ஒரு வரப் பிரசாதம் தான். ஆனால் இதிலிருந்து உருவாகும் ஒரு பெரிய மின்சாரத் தேவையை கவனிக்கத் தவறி சமாளிக்க முடியாமல் திணறும் போது  தனியார்கள் கேட்ட விலை கொடுத்தால் மின்சாரமும் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

விறகையும், மண்ணெண்ணைகளையும் தொலைத்து சமையல் வாயுவைத் திணித்து, இப்பொழுது அதை ஒரு உருளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் தனியாரிடம் வாங்கத் தயார் பண்ணப் பட்டிருக்கிறோம்

இப்படியாக , சும்மா இருந்தவர்களை வசதிகள் , சலுகைகள் காட்டி சொரிந்து விட்டு பின் அதற்க்கும் விலை கொடுக்கும் படி ஒரு கட்டாயத்தை நம்மை அறியாமலே நம் மேல் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்

அறுபகளில் நம் முன்னோர்கள் சொற்ப வருவாயில், குடும்பத்தை முன்னேற்ற படாத பாடு பட்டு கல்வியைக் கொடுத்து, பொருளாதார நிலையில் ஏற்றத்தை கொண்டு வந்ததை மறுபடியும் அதே நிலைக்குத் தள்ளி அந்த இருப்பவருக்கும் இல்லாதவர்களுகும் உள்ள இடைவெளியை தொடர்ந்து இருக்கச் செய்யத்தான் சில நடவடிக்கைகளோ என்று கூட தோன்றுகிறது.

பின் ஏன் இந்த பாகுபாடு?

காசு கொடுத்தால் அதிக வேகம், நிறைய தளங்களுக்கு அனுமதி. ஆனால் நான் சொல்லும், கட்டுப் படுத்தும் வலைத் தளங்களுக்கு மட்டும் தான் போக முடியும்.

காசு கொடுத்தால் தொலைகாட்சியில் நிறைய சேனல்கள், அதனால் தான் ஆயிரக் கணக்கான கோடிகளில் சூப்பர் போட்டிகளை வைத்து, பெயர் தெரியாத சானல்களில் அதைக் காட்டி, நம்மைக் காசு கொடுத்துப் பார்க்கத் தூண்டுகிறார்கள்.

காசு கொடுத்தால் சீரிய கல்வி இல்லையேல் கார்ப்பொரேஷன் பள்ளிதான். அதையும் சீர் செய்ய மாட்டோம், தரத்தை முன்னேர விட மாட்டோம்.

காசு கொடுத்தால் மருத்துவ, இஞ்சினீயரிங் கல்வியில் இடம்.

காசு கொடுத்துச் சேர்க்கும் கல்லூரிகளுக்குத் தான் கடைசி வருடத்தில் கல்லூரிக்கே வந்து பல்லைப் பிடித்துப் பார்த்து வேலை கொடுப்பார்கள். மற்றவர்கள் ?

காசு கொடுத்தால் நல்ல மருத்துவம் இல்லையேல் நலமாகாத பொது மருத்துவ கவனிப்புத் தான்

இப்படி காசு, காசு என்று எதற்கெடுத்தாலும் நோகச் செய்தால், இல்லாதவன் தளர்கிறான், தவறுகிறான்.

நம் தேவைகளை மட்டும் அடையாளம் கண்டு , தேவை இல்லாதவைகளை உணர்ந்து மலிவாகக் கொடுத்து ஆசை காட்டினாலும் உதறினால் தான் இந்த ஆதிக்கத்திலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

வண்ண மயமான , கனஉலகில் மற்றும் தோன்றிக் கொண்டிருந்த காட்சிகளை நேரிலும் விலை கொடுத்து வாங்க முடியும் என்று வியாபாரிகள் நம்மை இழுப்பதைக் கண்டு கொண்டாலே தப்ப முடியும்.

தூண்டிலில் உள்ள புழு மீனின் பசிக்கு அல்ல, மீன் பிடிப்பவனின் ருசிக்காகவே என்று உணர்ந்தால் வலையிலிருந்து தப்ப முடியும்.

இது பசியில் அலையும் மீனை விட ஆசையில் திரியும் மனிதனுக்குத் தான் அதிகம் பொருந்தும்

Saturday, April 11, 2015

மறதி

சின்ன வயசிலேயே என் அம்மாவிடம் கேட்ட கேள்வி " ஒருத்தர் இறந்த பின் , அவரை தகனம் செய்து விட்டு வந்தவுடன் ஏன் இனிப்போடு சாப்பாடு போடுகிறார்கள்".

பதில் (வந்ததாக) ஞாபகமில்லை, கேள்வி மட்டும் மனதில் தங்கி விட்டது- அடிக்கடி கேட்டுக் கொண்டதாலும் இருக்கும்.

என் உறவினர் பையன் சிறு வயதில் அகால மரணமடைந்தவுடன் அவரின் வயதான தகப்பனார் அன்று இனிப்புடன் சாப்பிட்டது, இன்னும் கண் முன் வந்து போகிறது. அது தவறா, சரியா என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால் உறுத்தியது. அதே சமயம் , அன்னாள் வழக்குகளில் இருந்த சில சம்பிரதாயங்களுக்கு எங்கோ பதில் உண்டு என்று மட்டும் உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. அதைத் தேடுவதுதான் கடினமாக இருந்தது.

தேடும் படலத்திந் போது - ஒரு சாரார் ' அது மக்கள் எந்த விதமான உணர்ச்சிகளிலிருந்தும் சகஜ நிலைக்குத் திரும்ப வைக்கும் முயற்சி தான்' என்றனர்.

சிலர் 'வாழ்வின் இன்ப துன்பங்கள்' மாறி மாறி வருவதை உணர்த்தத்தான்' என்றனர்.

'துக்கத்தைப் போக்கி வாழ்வின் நிஜப் பக்கத்துக்கு அழைத்து வரத்தான் உடனே இனிப்பு போடுகின்றனர்" என்றார்கள்.

வந்த பேரிழப்பை மறக்க வைக்கும் முயற்சி என்றார்கள்.

கிணற்றில் விழுந்தவன் ஏறினால் விழுங்கத் தயாராக மேலே காத்திருக்கும்  புலியைக் கண்டு அஞ்சி கீழே உள்ள கொடிய பாம்பினால் இறங்கவும் முடியாமல் புல்லைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது மேலே உள்ள தேனடையிலிருந்து சொட்டிய தேனைச் சுவைத்து வாழ்க்கை எவ்வளவு இனியது என்று நினைத்ததாகச் சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. துளி  இன்பத்தினால் கூட சூழ்ந்துள்ள அபாயங்களையும், இழப்புகளையும் நொடியில் மறக்க சாத்தியமிருப்பதாக நினைத்திக்கிறார்கள் !

சிறு குழந்தை தன் இள வயது நடவடிக்கைகளை உணராது இருப்பது மறதியாலா அல்லது முதிரும் பருவத்தாலா?.

எழுபதுகளில்  ஒரு முதிர்ந்த அரசியல்வாதி வருமான வரி கட்ட மறந்ததாகச் சொன்னார்.

சில முக்கிய காரியங்களை மறந்து நம் குடும்பத்திலும், அலுவலகத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்ட நேரங்கள் அனேகமாக எல்லோர் மனதிலும் வந்து போகலாம்.

இந்த மறதி - வரமா, சாபமா?

மறக்காமல் இருக்க இந்த விஞ்யான உலகில் பல உத்திகள் வந்து விட்டன. நீங்கள்  மறந்தாலும் தட்டி எழுப்ப உபகரணங்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் விஞ்யானத்தின் ஆட்சிக்கு உட்படுத்தி விட்டால் ,வாழ்க்கை ஒரு பொம்மாலாட்டமாகி விடுகிறது என்ற இன்றைய வாதத்தையும் ஒதுக்க முடியவில்லை.

சிலவற்றை மறந்தே ஆகவேண்டிய கட்டாயங்களும் இருக்கின்றன.

சமீபத்தில் படித்தது - நம் நெருங்கியவர்களின் மறைவு காலப் போக்கில்,  மொத்தமாக மறக்கப்படா விட்டாலும் நம் நினைவுகளை அந்த இழப்பிலிருந்து மறைக்கத்தான் வேண்டுமாம். தொடர்ந்து ஒருவர் அப்படிப்பட்ட சோகத்திலேயே படையப்பா, நீலாம்பரி போல்,ஆழ்ந்திருந்தால், புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் கூட உள்ளதாக சொல்லப் பட்டிருந்தது !

மறக்கவில்லையென்றால் எப்படி ஒரு நாடு நடத்தப் படும்? அனேகமாக பல பெரிய அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு உட்பட்டுத்தான் இருக்கிறார்கள். கேட்டால் அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா என்கிறார்கள். அப்படிப் பட்டவர்களை ஒதுக்குவதும் சாத்தியமாகப் படவில்லை, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குறுகிய வட்டத்துக்குள். அனேகமாக கரங்கள் இணைந்து நிற்கும் எல்லா அரசியல்வாதிகள் மேல் உள்ள  ஏதோ ஒரு கறை நம் கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தும் தேர்தல் சமயங்களில் ஒரு வித மறதி தான் நாம் அறியாமலே இவர்களுக்கு உதவுகிறது.

உறவினர்களிடையோ அல்லது நண்பர்களிடையோ இருந்த பல நாள் பகைகளும், சில காலங்கள் கடந்தால் கரைந்து விடுகிறது, தேவைப் பட்டால் மறந்தும் விடுகிறது.

பெற்றோர்களையும் சுற்றத்தையும் மனம் கவர்ந்தவருக்காக உதறி ஓடியவர்களையும் கூட பல வருடங்களுக்கப்புறம் பார்க்கும் பெற்றோர்கள் எல்லாவற்றையும் மறந்து வாரித்தான் அணைத்துக் கொள்கிறார்கள்.

அரசியலில் கட்சிகள் ஒருவருக்கொருவர் பரிமாரிக் கொண்ட நிந்தனைகள் மறந்துதான் கை கோர்க்கின்றனர், கூட்டணிகள் உருவாக்கப் படுகின்றன.

வல்லரசுகளும் அவ்வப் பொழுது தம் பகைமைகளை மறந்து உலக அமைதிக்காக கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

தேவைப் பட்ட பொழுது மறக்கத் தான் வேண்டி இருக்கிறது- பகைமையை, இழப்புகளை, வார்த்தைகளை, முறிந்த உறவுகளை. வாழ்வில் முன்னோக்கிச் செல்ல இந்த மறதி தேவையாக இருக்கிறது.

"மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை " என்ற கூற்றில் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இந்த மறதி ஒரு வரமாகவே உள்ளது

வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்காமல், வீட்டை விட்டுக் கிளம்பும் பொழுது அடுப்பை அணைக்காமல், சாயந்திரம் சினிமாவுக்கு அழைதுப் போவதாக நேற்று கொடுத்த வாக்குறுதிகள்  போன்ற மறதிகள் சாபமாகின்றன.

இப்படிப்பட்ட மறதிகளிலும் எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதை மறக்காமல் முடிவு செய்து கொண்டால், வாழ்வில் மறக்கப் படவேண்டிய நாட்கள் குறைவே !

Monday, March 30, 2015

பாதுகாப்பு !

சிலரை விசாரிக்கும் பொழுது கொடுப்பது
சிலர்  சிறைக்குச் செல்லும் போது கொடுப்பது
பலருக்கும் சிறையில் கொடுப்பது

சிலர் பதவியில் உள்ள பொழுது கொடுப்பது
சிலர் பதவியைத் துறந்த பொழுது வேண்டுவது

குற்றம் நடை பெறாமல் தடுக்க சில பாதுகாவலர்கள்
குற்றம் நடந்த இடத்தில் பல பாதுகாவலர்கள்

சிலரை அடித்துத் தள்ள வேண்டி இருக்கிறது மற்றவர்கள் பாதுகாப்பிற்காக
அப்படிப் பட்டவர்கள் பதவி ஏறினால் (சல்யூட்) அடித்துக் கொடுக்கக் கூடியது

மனிதர்களுக்கும், கணினிகளுக்கும் உள்ள பொது பாதுகாப்பு :
      சில கிருமிகள் அண்டாமல் இருக்க
      சில கிருமிகள் அண்டியதால் கொடுக்க

வாழ்க்கைத் துணைக்காக சிலர் வேண்டுவது பாதுகாப்பு
வாழ்க்கைத் துணையால் சிலர் தேடுவதும் அதே பாதுகாப்பு
சில வேண்டாத துணையால் சிலர் போவதும் பாதுகாப்பாக உள்ளே

பொருளுக்குத் தேடுவது.
இருக்கும் பொருளால் நாடுவது

மழையிலுருந்து பாதுகாப்பு- குடை
வெயிலிலிருந்தும் பாதுகாப்பு - குடை
வாழ்நாளுக்கும் பாதுகாப்பு - கொடை

கத்தியால் கிடைக்கும் பாதுகாப்பு
அதே கத்தியைக் காட்டும் பொழுது கத்தினால் போய் விடுகிறது

மாட்ச்சுக்கு முன் எதிர்பார்ப்பினால் கொடுப்பது
மாட்ச் எதிர்பார்ப்பில் சறுக்கியதால் வேண்டுவது

"தோணி வீட்டுக்குப் பாதுகாப்பு"படித்த செய்தியால் விளைந்த சிந்தனைகள்

Wednesday, March 18, 2015

செல்லாத ஃபோன்

எங்க வீட்டு ஸாஸ்த்ரிகளிடம் 'அவசரத்துக்கு உங்களை கூப்பிடணும்னா வேணும், உங்க செல் ஃபோன் நம்பரைக் குடுங்கோன்னு கேட்டா - ஐயா, நான் செல்லாத ஆசாமி. எனக்கு செல் ஃபோன் கிடையாது' என்பார். உண்மை அது இல்லை - வர லேட்டானா நச்சரிப்பாளோன்னு பயந்து தான் என்று அவரைக் கிண்டலடிப்போம்.

இந்நொரு  கொடுமை செல் ஃபோன் இருந்தும் அது உபயோகப் படாதபோது தான்.

குறிப்பாக வீட்டு அம்மிணிகள், பலர் படுத்துவதுண்டு.

வெளியில் வண்டி ஓட்டிக் கொண்டு போகும் பொழுது, அதை பத்திரமாக கைப்பையின் உள்....ளேளேளே வெச்சுடுவா. எவ்வளவு அலறினாலும் கேட்காது.

வண்டியை விட்டு இறங்கியவுடன், மிஸ்டு காலையாவது பார்த்தால் தேவலை. அதுவும் கிடையாது.

சமீபத்தில் என்னுடைய நண்பனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அவரது மனைவியை தொடர்பு கொள்ள முயற்ச்சித்த போது, எதிர்கொண்ட உண்மை இது.

அதே போல் வீட்டுக்குப் போனபின், கைப்பேசியை எங்காவது வைத்து விடுவது. அல்லது டீ வீயின் சத்ததில் அது அடிப்பதே யாருக்கும் கேட்பதில்லை.

இன்னும் சிலர் ஆபீசுக்குள் நுழையும் போதே அதன் வாயை அடைச்சுடறாங்க - நல்ல பழக்கம்தான். ஆனால் , ஆபீசை விட்டு வெளியே வரும்போது அதன் வாய்ப் பூட்டை எடுக்க மறந்து, பல கால்களை மிஸ் பண்ணி மிஸஸ் கிட்ட கால் வாங்கி, சில சமயம் ஒரு கால் ஒரு பக்கம் வாங்கி நடப்பவர்களையும் கண்டதுண்டு!

இதே போல் ஒரு திரையரங்குக்குள்ளோ அல்லது கதாகாலட்சேபத்திலோ அல்லது கச்சேரியிலோ இதனால் சில இம்சைகள் வருவதுண்டு.

திரையரங்கிலாவது சினிமாவின் சத்தத்தில் இதன் மணி ஹீனித்திருக்கும். கச்சேரிகளில் பாகவதர் தனி ஆவர்த்தனத்தில் உள்ள பொழுது அடித்தால், மற்றவர்களின் உச்சுக் கொட்டலிலேயே  நமக்கும் ஒரு ஆவர்த்தனம் நடக்கும்.

ஆனல் கதாகாலட்சேபத்திலோ, பிரவசனம் செய்பவர் பக்தியின் உச்சியில் நின்று கொண்டு, நம்மை சொர்க்கத்தின் வாசலில் நிற்க வைத்து என்னவெல்லாம் செய்தால் நம்மை கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று உரை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இந்த அழைப்பு மணி அழையா விருந்தாளியாக ஒலித்தால் மொத்த சபாவும் திரும்பிப் பார்த்து, கண்களால் எரித்து அப்படியே ரூட்டை மாத்தி நரகத்தின் பக்கம் தள்ளி விடுவார்கள். அதிலும் சில வயதானவர்கள் தத்தம் மக்கள் வாங்கிக் கொடுத்த கைபேசியை அடித்தால் எப்படி எடுப்பது, எப்படி தடுப்பது என்று தடுமாறுவதைப் பார்க்க கொஞ்சம் பாவமாகவே இருக்கும். இவர்களுக்கெல்லாம் கைபேசி வாங்கிக் கொடுக்கும் மஹானுபாவர்கள் அதை எப்படி உபயோகிப்பது, கூட்டத்தில் செல்லும் பொழுது எப்படி அதை(யும்) மௌன நிலைக்குத் தள்ளுவது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தால் , பெரியவர்கள் ரொம்ப வாழ்த்துவார்கள்.

இன்னும் சிலர் உபன்யாசம் போன்ற லௌகீக முறையைத் தவிர்த்து சொர்க்கத்துக்கு குறுக்கு வழியிலும் போகிறார்கள்- வண்டி ஓட்டும் பொழுது இந்த கைப் பேசியை தோளில் தாங்கி, அந்தப் பக்கம் கேட்பதை காதில் வாங்கி, எதிரில் வரும் வண்டியை மனதில் வாங்காததால். 

கைப்பேசி என்பது ஒரு வரம். யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள ஏதுவான ஒரு பெரிய சௌகர்யம். 

பல வருடங்களுக்கு முன் எங்காவது ஊருக்குப் போனால், முதல் வேலையாக  தங்கும் ஹோட்டலின் டெலிபோன் நம்பரைத்தான் வீட்டுக்குத் தெரியப் படுத்துவேன். அதுவும், என் வயதான அப்பா படுத்த படுக்கையாய் இருந்த பொழுது எங்கே என்னைத் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகமாக இருந்தது.

ஒரு அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் தொலை தூரப் பயணம் செய்பவர்கள் திரும்பி வந்து சொன்னால் தான் சௌக்கியம் என்று தெரியும். காசி போன்ற ஷேத்ராடனம் செல்பவர்களை ஏறக்குறைய கடைசி டாட்டாவே சொல்லி அனுப்புவார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். தொலை தொடர்பே இல்லாத காலமது. கடுதாசி எனப்படும் போஸ்ட் கார்டு போட்டால் அது வருவதற்க்குள் அனேகமாக போனவரே திரும்பி இருப்பார்- அவ்வளவு நாள் ஆகும். சில சமயம் வராமலே கூடப் போய் விடும்.

இதையெல்லாம் போக்கிய கைபேசி எவ்வளவு சௌகர்யம்- இப்படிப்பட்ட நண்பனைத் தொலைக்கலாமா?

Wednesday, March 11, 2015

அச்சமுண்டு அச்சமுண்டு !

எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் , ஒவ்வொருவருக்கும் ஒரு செல்ல பயம் உண்டு.
புஷ்டியான பயில்வானுக்கும் பல்லியையோ , கரப்பான் பூச்சியைக் கண்டாலோ பயம் வரலாம்.
கம்பி மீது நடப்பவர்களுக்கும் அடைந்த இடத்தில் பயம் தோன்றக் கூடும். வேகமாகக் கார் ஓட்டுபவர்களுக்கும் உயரத்தைக் கண்டால் பயம் இருக்க வாய்ப்புண்டு.

'தெனாலி' போல் எதைக் கண்டாலும் பயம் இல்லா விட்டாலும், சிலருக்கு சில அனுபவங்கள் மூலம் ஏற்பட்ட பயங்கள் நிறைய இருக்கலாம். எனக்குத் தோன்றிய சில:

விமானத்தில்-

- ஜிவ் என்று விமானம் உயரே எழும் பொழுது வயிற்றில் சுருண்டு எழுமே ஒரு பந்து- வார்னே போட்டது போல் எங்கிருந்து வந்ததென்றே சொல்ல முடியாது !

 - பறக்கும் பொழுது குறுக்கே இன்னொரு விமானம் இல்லை. ஒரு காக்கை கூட வந்து விடுமோ என்று பயம்

- விமானம் தரையைத் தொட்டவுடன், சில சமயம் கொஞ்சம் தாறுமாறாய் ஓடும் பொழுது, நாம் சைக்கிள் கற்றுக் கொண்ட முதல் நாள் ஞாபகம் வரும். ஆனால் பைலட்டின் இடுப்பில் குத்தி நேராக உட்காரச் சொல்ல முடியாமல் நாம் படும் அவஸ்தை நமக்குத் தான் தெரியும் !

சில வருஷங்களுக்கு முன் கயா என்ற புண்ய ஸ்தலத்துக்கு குடும்பத்துடன் போனோம். இரவு ஒன்பது மணிக்குப் போக வேண்டிய ரயில் சரியான நேரமாக 11.45க்குப் போனது. வழி தெரியாத ஊரில் ஒரு ஆட்டோவில் ஏறினால் ஓட்டுனரோ நரைன் கார்த்திகேயன் போல் அந்தச் சந்துகளில் போனது, இன்னும் பயம் விலகவில்லை. பனிரெண்டு மணிக்கு மேல் போலிஸ் சோதனை அதிகமாம், அதற்க்காகத்தான் அவ்வளவு வேகம் என்றார் சிரித்துக் கொண்டே. என்றும் மறக்க முடியாத பயம் !

வருடாந்திர சம்பவமாக நாம் நம் இரத்தம், சர்க்கரை போன்றவைகளை சோதித்து அதை நம் மருத்துவர் பார்க்கும் பொழுது, வரும் பயம் கொஞ்சம் அலாதி. சில சமயம் அவரின் முக மாறுதல்கள் பீதியைக் கிளப்பும். இதே சோதனையின் போன வருட அறிக்கையைக் கேட்டால் இரத்த அழுத்தம் எகிறும். எல்லாவற்றையும் விட நம் மார்பின் புகைப் படத்தை சொருகிய பொழுது டாக்டர்  கை பேசியில் பேசிக் கொண்டே பென்சிலால் கோடு போடுவாரே - அனுபவித்தால் தான் புரியும் !

அவசரமாக  இன்டெர்னெட் மூலம்  நம் வங்கிக் கணக்கினுள் நுழைய முயற்ச்சிக்கும்  பொழுது, திரும்பத் திரும்ப நம் பாஸ்வேர்டைக் கேட்கும் பொழுது வரும் சந்தேக பயம்- எவனாவது உள் பூந்து லவட்டிட்டானோ என்று !

ஏற்கனவே லேட்டு என்று  நம் டிரைவர் விரட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த இரவு நேரத்தில் நம் காரை ஒரு கும்பல் நிறுத்தும் பொழுது ! அப்புறம் தான் தெரியும் அவர்கள் அந்த கிராமத்து வாசிகள் , குறுக்கே விழுந்த மரத்துக்காக வண்டிகளுக்கு உபகாரம் செய்ய நினைத்தவர்கள் என்று !

நமக்குச் சம்பந்தமில்லாத குறுந்செய்திகள் நள்ளிரவிலும் நம் கைபேசியில் வரும் பொழுது . விசாரித்ததில் தெரிய வரும் அந்த ரோமியோ , ஜூலியட்டின் கைபேசி நம்பரை ஒரு எண் பிசகி அடிப்பது !

நம் பெண்ணோ, பிள்ளையோ தினசரி வரவேண்டிய நேரம் தாண்டியும் வராமல் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியாமல் போகும் பொழுது.

நம் வீட்டு கம்ப்யூட்டர் திடீரென்று மக்கர் பண்ணும் பொழுது-  நேற்று முடித்த முக்கிய வேலை அனுப்பப் படாமல் இன்னும் அதில்தான் உள்ளது என்று அப்பத்தான்  நினைவு வரும்.

சென்னை ரங்கனாதன் தெருவில் நடக்கும் பொழுது பாண்டி பஜாரில் நிறுத்திய காரை பூட்டினோமா என்று நினைக்கும் பொழுது.

இப்படியெல்லாம் அவரவர் வாழ்க்கையில் எத்தனையோ பயங்கள்.  அப்படியும் சிரித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.
வரும் இடுக்கண்ணை நினைத்தா இல்லை துன்பம் வரும் வேளையிலா!

அவரவருக்கே வெளிச்சம்.

Tuesday, March 3, 2015

நிலையற்ற நிரந்தரம்

எப்பொழுது கிரிக்கெட் விளையாட்டு பார்த்தாலும் இது நம் தினசரி வாழ்க்கைக்கு எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது என்றே வியந்திருக்கிறேன்.  நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறு தவறினாலோ அல்லது ஒருவரின் அலட்சியத்தாலோ நிலைமை தலை கீழாக மாறி விடுகிறது.

சௌகரியமான நிலையிலிருந்து சறுக்குவதில் வாழ்க்கைக்கு நிகர் கிரிக்கெட்டே.

அதே  போல் நிலமை மிக மோசமாக இருக்கும் பொழுதும் கூட  நிதானத்தைக் கடைப் பிடித்து, சிறுகச் சிறுக முன்னேறி இறுதியில் உச்சியைத் தொடவும் முடியும் என்றும் அறிவுறுத்துகிறது.

பெரியோர்கள் சொன்ன 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது இரண்டுக்கும் பொருந்தும்.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது சிலர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடரலாம் என்பர். இது 'எல்லாமே எப்பொழுதுமே' ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்ற ஒரு (மூட) நம்பிக்கையில் விளைவது.

என் குழுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வெளி நாட்டில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று இந்தியா திரும்ப வேண்டும் என்ற போது காரணம் கேட்டால் " சும்மாத்தான். வேண்டுமென்றால் மறுபடியும் போனால் போயிற்று" என்றவர், ஐந்து வருடங்களாகியும் இன்னும் போக முடியவில்லை. இவர் மறுபடியும் முயற்ச்சி பண்ணும் பொழுதுதான் உலகச் சந்தையின் சறுக்கல், அலுவலகத்தில் நடந்த மாற்றங்கள், வெளி நாட்டு வாடிக்கையாளர்களின் மன மாற்றம்" இப்படி பல காரணங்களால் இன்னும் மீனம்பாக்கம் தாண்ட முடியவில்லை.

கிரிக்கெட்டில் எல்லா பந்துகளையும் விளாசிக் கொண்டிருந்தவர் சின்ன காயம் காரணமாக கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு மறுபடியும் உள்ளே நுழைந்தால், அந்த சுலபம் கிடைக்காமல் திணறிய கதைகள் பல உண்டு.

இப்படித்தான் சிலர் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் ஒரு சில வருடங்களுக்குள் முடிக்க வேண்டிய உயர் கல்வியை  கொஞ்ச நாள் வேலை பார்த்து விட்டுத் தொடரலாம் என்று ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்தால் பழைய வேகத்தையும், புத்தி கூர்மையும் காணாமல் போவதை உணர்கிறார்கள்.

இதெல்லாம் நதி போலத்தான் - ஒடிக்கொண்டே இருந்தால் தான் நல்லது. கொஞ்சம் தயங்கினாலோ, நாமாகத் தடை போட்டாலோ திசை திரும்பி விடுகிறது.

மிகச் சுலபமாகத் தோன்ற வைக்கும் சந்தர்ப்பங்கள் நம் கதவைத் தட்டும் பொழுது, இது தான் ஒரே முறை நம் கதவு தட்டப் படுகிறது என்பது போல் நம் சிந்தனைகளையும், செயல்களையும் அதிகரிப்பது தான் புத்திசாலித் தனம். கையிலிருக்கும் களாக்காயை விட்டு விட்டு எங்கிருந்தோ எப்பொழுதோ கிடைக்கப் போகும் பலாக்காய்க்கு காத்திருப்பது ஒரு உசிதமான செயல் அல்ல.

கடைசி காலத்தில் வாயைத் திறக்க முடியுமோ, மனத்தால் கூட நினைக்க முடியுமோ முடியாதோ என்ற நிலையற்ற நேரங்களுக்காகத்தான்  "அப்போதைக்கு இப்பொதே சொன்னேன் நாராயணா", என்று அட்வான்ஸாகவே  நல்ல சொற்களையும், எண்ணங்களையும் மனக் கணக்கில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்களோ பெரியவர்கள் என்றும் தோன்றுகிறது. இப்பொழுது சுலபமாக அடிக்கக் கூடிய பந்தை விளாசி வெளியே அனுப்பலாம், அடுத்த முறை அது எசகு பிசகாக சுழன்று , திரும்ப வாய்ப்பிருப்பது என்பதை உணர்வோமாக !



Monday, February 23, 2015

வீடு வாங்கலியோ வீடு!

வீடுகள் விற்பதற்க்காக சென்னையில் ஒரு சந்தை சில நாட்களாக நடந்து கொண்டிருந்தது. நேற்று நானும் என் நண்பருக்காக அவருடன் சென்றிருந்தேன். கணினி, கைபேசிகளின் தாக்கம் உள்ளே நுழைவத்ற்கு முன்பே தெரிந்தது. உங்கள் பெயருடன், கை பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு, ஒரு குறுஞ்செய்தி மூலம் அனுமதி வழங்கப் படுகிறது. எவ்வளவு நாசூக்காக உங்களின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்கிறார்கள்.

நுழைந்தவுடன் நம்மைத் தாக்கும் குளிரூட்டப் பட்ட பிரம்மாண்டமான அரங்கம். நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பல மாடிக் குடியிருப்புகளின் பதாதைகள், உட்கார அருமையான நுரை மெத்தைகள் போட்ட சோபாக்கள், குளிருக்கு அடக்கமான கோட், ஸூட்டுடன் நாஸூக்காக உலவி நம்மை நெருங்கும் விற்பனையாளர்கள்- உள்ளே நுழையும் போதே கண்ணைக் கட்டியது. இப்படிப் பட்ட சந்தைகளில் நாம் நடமாட  முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு தான் உலா வர வேண்டும். இல்லையென்றால் பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் 'காப்பி சாப்பிடலாமா' என்று கேட்பதற்க்குள் கை நிறைய பேப்பர்களைத் திணித்து விடுகிறார்கள்.

பல பிரபல சென்னை வாழ் பன்மாடிக் கட்டிடங்கள் கட்டுவதில் வல்லுனர்களும் இங்கு ஆஜர். காதில் நிறையப் பட்டது சோளிங்க நல்லூர், கூடுவாஞ்சேரி, படூர் போன்ற இடங்கள். சிறுசேரியில் உள்ள பிரபல மென்பொருள் அலுவலகத்தைக் காட்டி , அங்கு வேலை செய்யும் பல்லாயிரக் கணக்கான இஞ்சினீயர்களே வாடகைக்கு வந்து விடுவார்கள், என்று நாக்கில் தேன் தடவிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது போலும் இது போன்ற நிறுவனங்களில் தான் திடுதிப்பென்று வீட்டுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அல்லது வாங்குபவர்களுக்கு அது தெரிந்திருக்காது என்ற நம்பிக்கையிலோ? தெரியவில்லை.

பெருங்களத்தூர் ரயில் நிலயத்திலுருந்து பத்து நிமிடங்கள் தான்- நாங்களே கூட்டிச் செல்கிறோம் - "எவ்வளவு நாளைக்கு ஸார்" என்று கேட்கத் தோன்றியது.

"இந்த பிளாக்கில் வாங்குபவர்களுக்கு கார் பார்க்கிங் உண்டு. ஆனால் இந்த பிளாக்கில் இல்லை" என்றார். "கொஞ்ச வருடங்கள்  கழித்து அவர்களும் கார் வாங்குவார்கள். அப்ப அவர்கள் எங்கு நிறுத்துவார்கள்"என்று கேட்டால் , இருக்குமிடத்தில் அங்கங்கதான்" என்ற பதிலைக் கேட்டு உணர்ந்தது "இப்படிப் பட்ட தொலை நோக்கில்லாதவர்களிடம் சிக்கினால், வாங்கியவர்கள் சண்டை போட, இவர்கள் பணத்தை எண்ணிக் கொண்டே போய்க் கொண்டே இருப்பார்கள். ஜாக்கிரதை" என்று உள்ளே மணி அடித்தது.

இப்படித்தான்  ஒருத்தர் கழுத்து டையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டே 'எங்கள் திட்டத்தில் 24 மணி நேர காவலர்கள், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட மைதானம் எல்லாம் தருகிறோம்' என்றார். இதெல்லாம் ஒரு விற்பனைக்குறிய உத்தியா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சொன்ன வசதிகளையோ/ சலுகைகளையோ பராமரிக்க ஆகும் மாசச் செலவு யார் கணக்கில்?

அடுக்கு மாடி என்றால் ஒன்றிரண்டு இல்லை- முப்பது , நாப்பது மாடி. இன்னும் ஆச்சரியப்பட வைத்தது, மாடி மேலே போகப் போக வீட்டின் விலையும் ஏறுமாம். முன்பெல்லாம் அதிக பட்சமாக இருந்த மூன்றாம் மாடிக்கு " கரண்ட் இல்லாத போது ஏற முடியாது, தண்ணி கஷ்டம் வந்தால் குடம் தூக்க முடியாது" என்ற காரணத்தால் ஒரு சதுர அடிக்கு இருபது ரூபாய் குறைப்பார்கள். கண்ணோட்டமும், வியாபரமும் தலை கீழாகப் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

குறைந்த பட்சம் அறுபது , எழுபது லகரத்துக் குறைந்து எந்த வீடும் கிடையாது. கேட்டால் புழுவைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, அடுத்து வருபவரிடம் நகருகிறார்கள் 'டை'யர்கள். இதெல்லாம் ஊருக்கு எந்தக் கோடியிலோ என்று கொஞ்சம் நகருக்குள் நிலவரம் பார்க்கலாம் என்றால் இங்கும் கோடிகள் தான் . "ரெண்டு ஸீக்கு குறைஞ்சு சிட்டில தேடாதேங்க ஸார்" என்று சொல்லிண்டே போனார், காலையிலிருந்தே இங்கு சுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர்.

இந்தச் சந்தையை அமைத்தவர்கள் கொஞ்சம் சிந்தித்துத் தான் இருக்கிறார்கள். 'இவ்வளவு பணத்திற்க்கு எங்க போக' என்று வியந்து வாய் திறந்து வெளியே வந்தால் திறந்த வாய் மூடுவதற்க்குள் அடுத்த அரங்கில் கடன் கொடுப்பவர்களெல்லாம் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.

கண்ணைப் பறிக்கும் கலரில் 'சிகாகோ' என்று பெயர் பொறித்த பெரிய சைஸ் பனியனுடன், வழுக்கைத் தலைக்கு மேலே தூக்கி விடப்பட்ட குளிர் கண்ணாடியுடன், அண்மையில்தான் பிள்ளை வீட்டிலுருந்து இந்தியா திரும்பி இருக்கிறேன் என்று கேட்காமலே பறை சாற்றும் எல்லா அறிகுறிகளுடன்  ஒருவர் "Actually it is for my son in U.S. How much is he eligible"  என்று ஆங்கிலத்தில் கடன் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி தத்தம் பெண், பிள்ளைகள் வெளி நாடுகளில் குளிருக்கு அடக்கமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி நெட் ஃப்ளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டிருக்க பல அப்பாக்கள் கையில் சட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்!

கொஞ்ச நேரத்திலேயே கால் வலிக்க , 'என்னமோ தெரியல ரொம்ப டயர்டா இருக்கு"ன்னப்போ, என் நண்பர் "கையில இருக்கறத இறக்கி வெச்சா கொஞ்சம் சுலபமாக மூச்சு விடலாம்" என்றார். அப்பத்தான் தெரிஞ்சது ,  வாழ்க்கையின் பாப புண்ணியங்களைப் போல, நமக்கே தெரியாமல்,நிறைய சேர்த்துக் கொண்டிருப்பது. கையில் கட்டு கட்டாக புத்தகங்கள், பல வண்ணத்தில் பேப்பர்கள். பலரும் அதை அப்படியே வாசலில் போட்டு விட்டுப் போகிறார்கள். குப்பை இரைவது மட்டுமில்லாமல், நிறைய காகித விரயங்களும்- தவிர்க்கப் பட வேண்டிய விஷயங்கள். வாசலில் பெரிய பெட்டிகள் வைத்து அதில் தேவை படாதைவகளைப் போடச் சொல்லி இருக்கலாம்- இதெற்க்கெல்லாம் பிரதமரையா ஒரு திட்டத்தோட வரச் சொல்ல முடியும்?

வெளியில் அரை இருட்டில் தட்டு தடுமாறி வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்க்குப் போனால், அங்கிருந்து வெளியே வர எந்த வழி காட்டிப் பலகைகளும் இல்லாது கொஞ்சம் சுற்றிய போது உரைத்தது- வீடு வாங்க வருபவர்களும், இப்படித்தான் பல கண் கவர் திட்டங்களைப் பார்த்து மயங்கி, விலையை நினைத்து எப்படி போவது என்று வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்களோ என்று !

சந்தை என்றால் கொஞ்சம் சல்லிசாக கிடைக்கும் என்பார்கள். ஆனால் லட்சங்களையும் கோடிகளையும் கூவி விற்கும் இந்தச் சந்தை கொஞ்சம் வினோதமாகத் தான் இருந்தது.

இந்த விலையில் ஒரு சாதாரணன் சென்னைக்கு அருகே வீடு வாங்குவது குதிரைக் கொம்பு தான். அதற்க்காக எல்லோரும் வெளி நாட்டுக்கும், மென் பொருள் கம்பெனியையுமா தேடிப் போக முடியும்- அங்கும் துரத்த ஆரம்பித்து விட்டார்களே !

வீட்டைக் கட்டிப் பார் என்றார்கள். வீட்டைக் கட்ட சுற்றிப் பார்ப்பதற்குள்ளேயே இப்படி மூச்சு வாங்கினால், வருங்கால சந்ததியினரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.  நிறையப் படிக்க வேண்டி இருக்கு, நிறைய உழைக்க வேண்டி இருக்கு. அவர்கள் இதை எவ்வளவு சீக்கிரம் உணருகிறார்களோ, அவ்வளவு நல்லது.