Friday, January 30, 2015

ஒரு வித்தியாசமான பராமரிப்பு !!

நாம் ஒரு இடத்தை அணுகும் போது அனேகமாக அங்கு பரவியுள்ள வாசனையை வைத்தே கண்டு பிடித்து விட முடியும், அங்கு என்னென்ன நடவடிக்கைகள் உள்ளன என்று . என் சிறு வயதில் டால்மியாபுரம் வருவதை சில மைல்களுக்கு முன்னாலேயே அதன் இரட்டைக் குழல் புகை போக்கிகளும், அதனூடே வெளியேறும் புகையின் (துர்) நாற்றமும் காட்டிக் கொடுத்து விடும். பல்லாவரம் அருகில் உள்ள பவுடர் தொழிற்சாலையும், முண்டியம்பாக்கம் பக்கத்தில் சர்க்கரை ஆலைகளும் மேலும் சில உதாரணங்கள் - அவற்றிலிருந்து வரும் நறுமணங்கள் இன்று நினைத்தாலும் என் நாசியை சோதிக்கின்றன.

ஆனால் நான் சமீபத்தில் போன அந்த இடத்தில் இதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை. அந்த அமைதியான பரந்த இடத்தில், அவ்வப்போது ஆடும் மரத்தின் கிளைகளும், தூரத்தே ஒலிக்கும் நாம சங்கீர்த்தனமும்  தான் கேட்டன. ஐநூறு மாடுகளுக்கு மேல் இருக்கும் இடம் என்பது உள்ளே போய் பார்த்தால் தான் தெரிகிறது.

ஒரு சாதாரண குடிலைப் போல் காட்சி தரும் அந்த கோசாலையில் வாயிலில் அழகான கிருஷ்ணர் சிலை நம்மை வரவேற்கிறது. புன்னகையுடன் வரவேற்கும் ஓர் அம்மையார் நம் விருப்பத்திற்க்குப் பிறகு சொன்ன விவரங்கள் பிரமிக்க வைத்தன.
கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் என்ற ஒரு அழகான ஊரில் இருக்கும் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துக்கு அருகில் தோன்றி வெகு விரைவாக மக்களைக் கவர்ந்து வரும் ஸ்ரீ விட்டல் ருக்மிணி ஸமஸ்தான் எனப்படும் அழகிய வானளாவிய பாண்டுரங்கன் கோவில் உள்ளே தான் இருக்கிறது, இங்கு விவரிக்கப்படும் கோசாலை.

 இங்கே பராமரிக்கப் பட்டு வரும் ஏறக்குறைய ஆயிரம் மாடுகள், பல இடங்களிலுருந்து வந்தனவாம். அனேகமாக துவாரகையுலிருந்து கொண்டு வரப்பட்டவைகள் தான் என்றாலும், சில மதுராவிலிருந்தும், சில பிருந்தாவனிலிருந்தும், ஓங்கோலிலுருந்தும், சில ஜெர்ஸி பசுக்களும் உள்ளன. ஒரு சில பசுக்களின் காதுகள் நீண்டு மஞ்சள் கொத்தின் இலை போலிருந்ததற்க்குக் காரணம் கண்ணனின் குழலோசை கேட்டு அவற்றின் செவிகள் சந்தோஷத்தில் இப்படி  நிலை மாறியதாகக் கூறுகிறார்கள்.

கண்ணனின் குழ்லோசை கேட்டு குளிர்ந்த காதுகள்
கன்றுக்குட்டிகள் உற்சாகமாக இருந்ததைச் சுட்டிக் காட்டி, இங்கு கன்றுக்குட்டிகள் கட்டப் படுவதில்லை. அவை எப்பொழுது தேவையானாலும் தாய்ப் பசுவிடம் பால் குடிக்க ஏதுவாக சுதந்திரமாக திரிய விட்டிருக்கிறார்கள் என்று சொன்னது எவ்வளவு உண்மை என்பதை சந்தோஷத்தை தன் முகத்தில் வெளிப் படுத்திய அந்த வெள்ளைக் கன்றிடம் காண முடிந்தது.

வரிசை வரிசையாகக் கட்டி இருந்த பசுக்கள் நான் போன போது காலை உணவான வைக்கோல் மற்றும் இதர பண்டங்களை பசியோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் வேலையைத் தொடர்ந்தன.

மின் விளக்கு, விசிறிகளுடன் பசுக்கள்

நிமிர்ந்து பார்த்தால் மேற்கூரையின் கீழே இன்னும் ஒரு ஓலை லேயர் தெரிந்தது. அதன் கீழ் சீராக இடை வெளி விட்டு மின் விசிறிகள் பொருத்தப் பட்டிருந்தன. ஆம் மாட்டுக் கொட்டாயில் மின் விசிறிகள் பொருத்தி கும்பகோணத்தின் பிரசித்தி பெற்ற வெயில் சூட்டிலுருந்து இந்தக் கால் நடைகளைக் காப்பாற்றுகின்றனர் !

இங்குள்ள பசுக்களிடம் கறந்த பாலை விற்பனை செய்வதில்லையாம். கன்று குடித்தது போக உள்ள மீதி அருகிலுள்ள திருவிடைமருதூர் மஹாலிங்கேஸவருக்கு அபிஷேகத்துக் கொடுத்து விடுகிறார்கள். அப்படியும் மீதமிருந்தால் அவற்றை மோராக்கி பாண்டுரங்கன் கோவில் வாயிலில் வைத்து விடுகிறார்களாம், யார் வேண்டுமானாலும் பருக !

ஒரு பசுவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு ஐநூறு இருந்த காலம் போய் இன்று சுமார் ஆயிரத்தைத் தாண்டி விட்டதாம். இருந்தும் யாரிடத்திலும் கேட்காமல் இவர்களே பராமரிக்கிறார்கள்- விருப்பப் பட்டு யாரேனும் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பெற்று வளர்த்து பெரியவனாக்கி கை நிறைய சம்பாதிக்க வைத்த  பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம் தேடும் இந்தக் காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு நிழல் கொடுத்து, சீதோஷ்ணத்திலுர்ந்து பாதுகாத்து, சத்தான உணவும் கொடுத்து, அதிலிருந்து வருபவைகளையும் வியாபார நோக்கில்லாத நல்ல சேவைகளுக்குக் கொடுக்கும் அந்த நல்ல உள்ளங்களை நினைத்தால் சிலிர்க்கிறது.

காசோலை கேட்காத இந்த  கோசாலை அந்த வழி போனால் ஒரு நடை பார்க்க வேண்டிய ஒன்று.

Sunday, January 25, 2015

ஒபாமா தம்பதியின் இந்தியப் பயணம்

ஒபாமா தம்பதியினரும் ஒரு சாதாரணனைப் போல் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடிய சில வேடிக்கையான கற்பனை நிகழ்வுகள்:

மிட்சலின் லேசான தொண்டை கரகரப்பு அவர் ஊரிலிருந்து கிளம்பும் நாளில் சீக்கிரம் எழுந்து தலைக்குக் குளித்து புளியோதரை போன்றவைகள் செய்ததால் என்று நம்பப் படுகிறது.

அமெரிக்க விமான நிலையத்தில் ஒபாமாவின் ஹாண்ட் பேகேஜில் அதிக எடை இருந்ததால் சில சாமான்கள் அவரின் பெட்டிக்கு மாற்றப் பட்டதாம்.

ஒபாமாவின் செல் போனில் சார்ஜ் போயிருந்ததால் தில்லியில் வந்து இறங்கியவுடன் இருந்த ஏகப்பட்ட மிஸ்டு காலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தாராம்.

தில்லி விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த தம்பதியினரை கால் டாக்ஸிக்காரர்கள் மொய்த்துக் கொண்டு மோடி வீட்டுக்குக் கூட்டிச் செல்ல ஐயாயிரம் ரூபாய் வரை கேட்டிருக்கின்றனர். கடைசியில் தில்லியின் ஃபட் ஃபட்டியில் சென்றதாகத் தகவல்.

ஆக்ராவுக்கு ஒட்டகத்தில்தான் சவாரி செய்ய முடியும் என்று ஏமாற்றப் பார்த்த சில தரகர்களின் பேச்சை நம்பி தாஜ் மஹால் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப் படுகிறது.

பழைய தில்லி மார்கெட்டில் தன் குழந்தைகளுக்காக ஆசையாக வாங்க விரும்பிய பொம்மை துப்பாக்கி போன்ற விளையாட்டுப் பொருள்களை விமான நிலைய சோதனை கருதி தடுத்த ஒபாமாவின் செயலால் மிகுந்த வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிரார்களாம் வீட்டம்மா.

ஆனால் கரோல் பாக் தெருக்களில் பல செருப்பு ஜோடிகளும் , கைப் பைகளும் வாங்கிக் கொடுத்து அவரை சரி செய்து விட்டார்களாம். ஒபாமாவுக்குத்தான் சரியான அளவில் புகழ் பெற்ற தில்லி குர்த்தா கிடைக்காதது மனைவிக்குக் கொஞ்சம் வருத்தமாம்.

வரும் வழியில் "பதினாலு நாட்களில் ஹிந்தி" புத்தகம் களவாடப் படாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக பேரம் செய்திருக்கலாம் என்று நினைக்கிறார்களாம்.

திரும்புவதற்க்கு முன் குல்ஃபி சாப்பிட அஜ்மல் கான் ரோடுக்குப் போக தம்பதியினர் வழி விசாரித்தாக சொல்கிறார்கள்!

இவர்களின் ரிடர்ன் டிக்கட் இன்னும் கன்ஃபர்ம் ஆகாததால், அம்மையாரின் முகத்தில் கொஞ்சம் கவலை தெரிகிறது என்கிறார்கள்.

Thursday, January 15, 2015

கை கோர்த்துக் கொண்டாடும் மயிலை

பொங்கலின் முந்தினம் மயிலையின் மாட வீதிகள் ஒரு பரபரப்புடன் இருந்தது. மார்கழிக்கு கையசைத்து விட்டு தையை வரவேற்க்கத் தயாராகிக் கொண்டிருப்பதில் உற்சாகம் தெரிந்தது. வழக்கமாக இருக்கும் குப்பையை தெற்கு மாட வீதியில் பார்க்க முடியாததற்க்குக் காரணம் பிரதமரின் சுத்த திட்டம் இல்லை-அவ்வளவு கூட்டம். தனி மனிதன் நடப்பதே கடினமாக இருந்ததைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருபுறமும் எல்லா வித வாகனங்களும் வரிசையில் யாரோ நகரக் காத்திருந்தது. எப்பொழுதும் நடைபாதையை ஒட்டி உள்ள கறிகாய் கடைகளும் தைரியம் பெற்று முன்னே நகர்ந்து இருந்த கொஞ்ச நஞ்ச ரோட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டது. சற்று தூரத்தில் மண்டையில் விளக்குச் சுற்ற வந்த வெள்ளை வாகனத்திலிருந்து வெளியேறிய மக்களுக்கான அறிவுரைகளை யாரும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை- அதைப்பற்றி அந்த வண்டியும் கவலைப் படாமல் தன்பாட்டுக்கு கூவிக் கொண்டே நகர்ந்தது. என்ன காரணத்திற்க்கோ எல்லோராலும் புறக்கணிக்கப் பட்ட மாட வீதிப் போக்குவரத்து தானே தன் பாட்டுக்குத் தன் மக்களைச் சுமந்து அன்ன நடையில் இயங்கிக் கொண்டிருந்தது.

கரும்பு, மஞ்சள், மொச்சை, மாவிலை, தேங்காய், தோரணம் போன்றவைகள் தை மாதத்தின் மணத்தை பரப்பிக் கொண்டிருந்தன. கலர் கலராக வெட்டப் பட்ட காய்கறிகள் சின்ன பொட்டலங்களுக்குள் பொங்கல் மறுநாள் அவியலுக்காக தயாராக இருந்தது. வாய்க்கு வந்த விலைக்கு விற்ற வாழைக்காயை உள்ளூர்வாசிகள் கேள்வி கேட்காமல் வாங்கிக் கொண்டிருந்தார்கள். முழம் முப்பது ரூபாய் என்ற 'மல்லீ'ப்பூவை வாங்குபவர்களை விட கண்களாலேயே முகர்ந்து விட்டுச் சென்றவர்கள் அதிகம். மாமிகள் முன்னே செல்ல அவர்களின் வேகத்துக்குத் தொப்பை மாமாக்கள் கையில் கரும்புடன் இரண்டு இரண்டு எட்டாக எடுத்து வைத்து ஈடு கட்ட முயன்று கொண்டிருந்தார்கள்.

இன்று அதே மாட வீதிக்கு நடக்கையில், வழியெங்கும் எல்லா வாசல்களிலும் பொங்கல் வாழ்த்துக்கள் வண்ண வண்ண கோலப் பொடிகளில் மிளிர்ந்தது. வீடோ, கடையோ, ஆஸ்பத்திரியோ,ஹோட்டலோ , இவைகளெல்லாம் திறந்திருக்கோ இல்லையோ எல்லா வாசல் படிகளிலும் வாழ்த்துக்கள் தென்பட்டன. மாட வீதிகள் கொஞ்சம் களைத்து, கூட்டம் குறைந்து நேற்று பிரசவித்த பெண் போல் காணப்பட்டாலும் உற்ச்சாகத்துக்கொன்றும் குறைவில்லை. கோவில் வாசல்களில் செருப்புக் கூட்டம் அதிகரித்திருந்தது. பத்திரமாக மாமிகளைக் கோவில் கூட்டத்திலுருந்து கை பிடித்து வெளியே கூட்டி வந்த மாமாக்கள் முகத்திலுள்ள பளபளப்பு வியர்வையிலா அல்லது மாமிகள் கட்டி இருந்த புதுப் பட்டுக்கான அடுத்த மாத க்ரெடிட் கார்ட் நினைப்பாலா என்பதைக் கணிப்பதில் சிரமம் இருந்தது.

பண்டிகைகளை வரவேற்பதிலோ, கொண்டாடுவதிலோ மயிலையும் தன் மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவது போல் தோன்றியது. போகியன்று வடக்கு மாட வீதி தெரு அடைத்து கோலம் போட்டு மார்கழியை வழி அனுப்ப, இன்றோ தெற்க்கு மாட வீதி தேயாமல் மக்களுக்கு தை மாதத்தை வரவேற்க்கக் கை கொடுத்துக் கொண்டிருந்தது. இதற்க்காகத் தான் மடிப்பாக்கத்திலும் கூடுவாஞ்சேரிகளிலும் அதிகமுள்ள ஒரு அறையையும் தனி வீட்டையும் விடுத்து பலர் இங்கு பரவாயில்லை என்று ஒடுங்கி இருக்கிறார்களோ?

Tuesday, January 6, 2015

ஐ டீயும் ஜிந்தாபாத்தும்

ரொம்ப நாளாகவே மற்ற ஆபிஸுகளில் உள்ளவர்களுக்கு ஐ டி ஆசாமிகள் மேல் ஒரு காண்டு- எவ்வளவு டீக்காக ட்ரஸ் பண்ணிண்டு போறா, கழுத்தில் தொங்கும் பட்டய வேணும்னே நம்ம க்ராஸ் பண்ணும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கறா, லேட்டானாலும் வீட்டு வாசல்ல கார்ல வந்து டம்பமா இறங்கறா, ஏகப்பட்ட சம்பளம், எப்ப வேணும்னாலும் உள்ளேயே கிடைக்கும் காபி, டீ வகையறா. ஹும்ம்ம்....

ஐ டி ஆசாமிக்கு மத்தவங்களப் பாத்து பெருமூச்சு - அஞ்சு மணிக்கு கைய உதறிண்டு போயிடறா, வேல முடிஞ்சுதா இல்லையாங்கறதப் பத்தி எல்லாம் கவலை கிடையாது,  கம்ப்யூட்டர் வேல செய்யலேன்னா கவல இல்லை, அப்படியே வெச்சுட்டு போயிடலாம்,  வேலை நேரத்துக்குள்ள மட்டும் தான் அதிகாரம் பண்ண முடியும், ஆபிசை விட்டு படி இறங்கினா கூப்பிட முடியாது, சனி, ஞாயிறெல்லாம் தொந்தரவு கிடையாது. ஹும்ம்ம்ம்ம்....

இப்படி ஒருத்தருக்கொருத்தர்  அக்கரைப் பச்சைகளைப் பார்த்து பெருமூச்சு விட்டே ஒரு மானியமில்லா சிலிண்டரை ரொப்பிண்டிருக்காங்க .  இன்னிலையில் இவ்விருவர்களுக்குமிடையே  ஆபீஸ் நடைமுறைகள்  கொஞ்சம் மாறினா எப்படி இருக்கும்னு ஒரு (விபரீத?) கற்பனை:

யூனியன் உள்ள ஐ டீ கம்பெனி:

1. "சார் மணி ஆறாயிடுச்சி, இனிமே நம்மாளுங்க உக்காரணும்னா வாங்க ஓ டீ  ஹவர்ஸ் பேசலாம்"

2. "புது டிஃபெக்டெல்லாம் கூடுதல் வேல சார், அதுக்கு தனி ஆள் போடுங்க.  நம்ம டீமூ  பழைய டிஃபெக்ட்டுங்கள மட்டும் தான் கண்டு பிடிப்பாங்க"

3. தோழர்களே, இன்னேலேர்ந்து நாம் work to Rule பண்ணப் போரோம். ஏதாவது பிரச்சனைன்னா லீடருக்கு மெயில் அனுப்பிச்சுட்டு வீட்டுக் கிளம்பிடுங்க.

4. மானேஜர் கூப்பிட்டு ஏதாவது வேலை குடுத்தா, நீங்க எதுவும் பேசத் தேவ இல்ல. லீடர் வழியா பேச சொல்லுங்க

5. ஆறு மணிக்கு மேல ப்ரொஜக்ட் டைரக்டரே கூப்டா கூட போன எடுக்காதேங்கப்பா.

6. சார் வேணும்னே எங்காளுங்க டிஃபெக்டை கண்டு பிடிக்கலன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்

7. ஸ்பெக்குல ஏதானும் புரியல்லேன்னா, நீங்க ஒண்ணும் க்ளையண்ட் கிட்ட டைரக்டா பேசத் தேவை இல்ல. லீடப் பேசிப் புரிஞ்சுண்டு உங்களுக்கு விளக்கச் சொல்லுங்க.

8. எதுக்கு சார் எங்காளுங்களை கான் காலுக்கு அனாவசியமா இழுக்குறிங்க- அதெல்லாம் உங்க வேலை!

9. நாளைக்குள்ள கிளையண்டுக்கு அனுப்பணும்னு இப்ப சொன்னா வேலக்கு ஆகாது சார்

10. அந்த லீடு வேணும்னே எங்காளுங்களை பொங்கல், தீபாவளின்னு லீவு நாளா பாத்து ஆபீசுக்கு வரச் சொல்றதாக பசங்க சொல்றங்க

ஐ டி வழியை தத்தெடுத்த  ஒரு ஆபிஸ்:

1. என்னா சார், அநியாயமா இருக்கு. டெஸ்பாச்சுல ஒண்ணுமே வேலை செய்யாத அந்த பொண்ணுக்கு அப்ரைசல்ல பி கொடுத்துட்டு , கவுண்டர்ல லோல் பட்ட எனக்கு சி கொடுத்திருக்கீங்க.

2. ஒங்களுக்கே நியாயமா இருக்கா. பத்து வருஷமாச்சு காலேஜு முடிச்சு. இங்க்ரிமெண்ட் கேட்டா இப்பப் போய் இந்த வருஷம் என்ன புதுசா படிச்சேன்னு கேக்கறிங்க

3. சார் இப்பவே மணி ஏழாச்சு இன்னும் இதை முடிச்சுட்டுதான் போகணுங்கரீங்க

4. நேத்து நைட்டு ஒம்பது மணிக்கு லீட் பண்ணின ஃபோனை எடுக்கலயாம். அதுக்காக மெமோ கொடுக்கறதெல்லாம் ரொம்ப ஓவர் சார்.

5. இன்னா சார் ப்ரிண்டர்ல மாட்டிகின பேப்பர்லாம் நாங்களே தான் எடுக்கணுமா?

6. என்ன கொடுமை ஸார், மானேஜர் மட்டும் அஞ்சு மணிக்கே போயிடறாரு, நாங்க மட்டும் மாங்கு மாங்குன்னு வேல செய்யணுமா?

7. எதுக்கு சார் கஸ்டமர் என்ன திட்டினாலும் சிரிச்சுண்டே இருக்கச் சொல்ரீங்க- ஒண்ணுமே புரியலயே ஸார் !!

8. போங்க ஸார். ஐ. டீ ஆபிஸ் போலன்னு சொல்லிட்டு  இப்ப என்னடான்னா  லேட்டாச்சு, வேன் வரலன்னு அக்கௌண்டண்ட் ஸ்கூட்டில பின்னாடி உக்காந்துண்டு போகச் சொல்ரீங்க

9. ஐ டீ மாதிரி ஜோரா இருக்கலாம்னு நினைச்சா , எல்லா வேலயும் நம்மளயே பண்ணச் சொல்ராங்களே

10. ஐ டீ கம்பெனி மாதிரின்னு சொன்னீங்க. ஆன்சைட்டு பிராஞ்சுக்கே அனுப்ப மாட்டேங்கறீங்க? 

Saturday, January 3, 2015

கொண்டாட்டத்தில் தடுமாற்றம்

மனிதனுக்கும் விவாதங்களுக்கும் அப்படி என்ன ஒரு ஒற்றுமையோ, ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அது மதமோ, மொழியோ, பண்டிகைகளோ, கொண்டாட்டமோ , தேசிய விஷயமோ, விஞ்யானமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக குறைந்தது இரண்டு கருத்துக்களாவது இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

சிலரின் இன்றைய தாபம்: ஆங்கில புத்தாண்டு- கொண்டாடும் முறை; கொண்டாடலாமா கூடாதா?  நமக்கும் , ஆங்கிலப் புத்தாண்டுக்கும் என்ன சம்பந்தம்?

இருபத்து சொச்ச வயதில், எனக்கு நினைவு தெரிந்து ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட முதல் நினைவு. நெருங்கிய நண்பர்கள் சிலர் அன்றைய ஒரே சானல் உடைய தொலைக்காட்சிப் பெட்டி உள்ள நண்பன் வீட்டில் இரவு பத்து மணியளவில் கூடினோம். அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் அவரின் அம்மாவுக்கு தொந்தரவு இல்லாத ஒலியில் தூர்தர்ஷன் கொண்டாடும் ஒற்றைச் சானல் புத்தாண்டை வரவேற்று, ஒரு ரோட்டுக் கடை டீயுடன் முடித்து பின் சைக்கிளில் வீடு திரும்பினோம்.

பின்னொரு வருடத்தில் நண்பர்களுடன் நள்ளிரவு காட்சியில் ரஜினி படத்தினூடே திரையரங்கம் போட்ட புத்தாண்டு வாழ்த்து ஸ்லைடை  பார்த்து ஆரவாரித்து பின் பெசண்ட் நகர்  நண்பன் வீட்டில் தங்கிக் கழித்திருக்கிறோம்.  

பெரிய குடியிருப்பில்  சொந்த வீட்டில் முதன் முறையாக வந்த ஒரு புத்தாண்டில் சில அண்டை வீட்டாருடன் மெரினா பீச்சில் அமர்ந்து சமோசாவுடன் துவங்கிய ஆண்டுகள் இன்னும் நினைவில் காரமாக இருக்கிறது (தண்ணீர் கொண்டு போக மறந்ததால்)! 

வருடங்கள் போகப் போக ஆங்கிலப் புத்தாண்டுகள் தொலைக் காட்சி முன்னமேயே வரவேற்க்கப்பட்டன. 

பிறகு சில வருடங்கள் சீக்கிரமே தூங்கி பட்டாசு சப்தங்கள் மூலம் எழுப்பப்பட்டு அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவி, மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி பின் அமைதியாக தூக்கத்தைத் தொடர்ந்த நாட்களும் உண்டு.

சமீபத்திய ஆங்கிலப் புத்தாண்டு முதன்  முறையாகக் கொஞ்சம் வித்தியாசமாக பக்தி கலந்து ஆரம்பித்தது. 

இப்படியாக வருடங்கள் போகப் போக, வயதென்ற எண் மாற மாற கொண்டாடும் எண்ணமும், முறையும், சிந்தனையும் மாறிக் கொண்டே வருகிறது என்பது என் அனுபவம். இப்படி பலருக்கும், பல விதமான அனுபவங்கள் நிலைமைக்குத் தகுந்து மாறலாம்.

ஆனால் கடந்து போன கிட்டத்தட்ட அறுபது வருடங்களில் ஒரு வருடம் கூட தமிழ் புத்தாண்டை அதிகாலை தீபங்கள் , காய் கனிகளுடன் வரவேற்க்க நான் தவறியதே இல்லை! 

என் குறுகிய அனுபவத்திலேயே இவ்வளவு வேறுபாடுகள் , புத்தாண்டுகளை வரவேற்ப்பதில். இத்தனை வருடங்களிடையே நாம் வானொலியைத் தூக்கி எறிந்து, கருப்பு வெள்ளை பெட்டியை ஒதுக்கி வண்ணத் தொலைக்காட்சிகள் கொஞ்சம் திகட்டி, கணினியில் உலகைப் பார்த்து, இப்பொழுது கையளவில்  நோக்கிக் கொண்டிருக்கிறோம்,  சைக்கிள்களையும், கை ரிக்ஷாக்களையும் சைக்கிள் ரிக்ஷாக்களையும் புறந்தள்ளி, இரண்டு சக்கர வாகனங்களுக்கு மாறி, கார்கள் சாலைகளை அடைக்க விட்டிருக்கிறோம். நாம்  இவ்வளவு மாறியும், நம் கொண்டாட்டங்களின் முறைகள் கொஞ்சம் மாறுபடுவதில் என்ன ஆச்சரியம்?

நம் பழக்க வழக்கங்களும் மாறாமலா இருக்கின்றன- எத்தனை பேர் வீட்டிலோ, அலுவலகத்திலோ ஆங்கில நாளிதழை விடுத்து உள் நாட்டு மொழியில் நாட்காட்டி வைத்திருக்கிறார்கள்? என் மகனுக்கு ஜனவரி 29 என்றில்லாமல் தை மாதம் 15 ஆம் தேதி கல்யாணம் என்று எத்தனை பேர் அழைக்கிறார்கள்? 

எனக்குத் தெரிந்து யாரும் என் மேல் இந்தக் கொண்டாட்ட விதையைத் திணிக்கவில்லை- பின் எது கொண்டாடத் தூண்டுகிறது ? ஜனவரி வந்தால் கையளவு லீவு ஏறியது. இருந்த பணியில் புதிய வருமானங்கள் வந்தன. டிசம்பர் மாதத்தில் சேர்ந்ததால் ஒரு வருடம் கூடி சம்பளம் ஏறி பல வண்ணக் கதவுகள் திறந்தது எனக்குக் கிடைத்த தனி போனஸ். ஏப்ரல் கையளவு தூரத்தில் தெரிய மனம் வருடாந்திர விடுமுறைக்கு ஏங்க ஆரம்பித்தது. கொண்டாடப்பட வேண்டிய சீதோஷ்ண நிலை. மனதைக் கவரும் மார்கழி- இவ்வளவு வரவுகளை ஏன் கொண்டாடக் கூடாது? கொண்டாடினால் என்ன நட்டம்?

நம் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் நகர்கின்றது என்பது என் எண்ணம். ஒரு வருடம் மாறும் பொழுது - ஆங்கிலமோ, தமிழோ அல்லது பிற மொழியோ- தன்னிச்சையாக தனக்கு ஒரு நல்ல காலம் பிறக்காதா என்று நினைக்கிறான், ஏங்குகிறான் அதற்க்காக அவன் படும் கஷ்ட நிலை பொறுத்து கடவுளை நாடுகிறான். எந்தக் கடவுள் என்பது அவரவர் மதம், நம்பிக்கை சார்ந்த விஷயம் . இந்தச் செயலில் என்ன தவறு?  நிஜமோ இல்லையோ, உண்மையோ தவறோ ஏதோ ஒரு சின்ன புல்லைப் பிடித்து முன்னேற முயல்பவனை ஏன் இப்படி அலைக்கழிக்க வேண்டும்?

இத்தனை ஆட்சேபங்களை எழுப்பும் மக்களும், அவர்களின் தத்தம் மதங்களிலும், பழக்கங்களிலும் கூறப்படும் எல்லா நியதிகளையும் நேரம் தவறாமல் கடைப் பிடிக்கிறார்களா என்று யோசித்தால் கொஞ்சம் தொனி குறையும் என்று தோன்றுகிறது. சட்டென்று நிறுத்தி இன்றைய அவர்களின்  மாதத் தேதியையும், வருடப் பெயரையும் கேட்டால் விளங்கும்.

இப்படிப்பட்டவர்கள் உள்ளூர் மொழிப் புத்தாண்டுக்கு விடுமுறை கூட அளிக்காது வேலை வாங்கும் நிறுவனங்களையும் கொஞ்சம் கேள்வி கேட்டால் நல்லது.

எல்லை மீறாத வரையில் எல்லாம் சுகமே. போதையில் வாகனமோட்டி கண்மண் தெரியாத வேகத்தில் போய் புத்தாண்டுக்கும் தனக்கும் எந்த பந்தமும் கொண்டாடாமல் சாலையில் போகும் தனி மனினைத் தாக்கும் வகையில்  கொண்டாடினால் அது கண்டிக்கப் பட வேண்டியதது தான்.

உறுத்தாமல் , ஒருவரையும் படுத்தாமல், மற்றவர்கள் பாதையில் குறுக்கிடாமல் ஒருவர் தன் பாட்டுக்குத் தன் மனதுக்குப் பிரியமான  செயல்களைச் செய்தும் , வரும் ஆண்டிற்க்காக இஷ்ட தெய்வத்தை பிரார்தித்து சந்தோஷப் படுவதும் , தப்பாகப் படுவது எப்படி என்று புரியவில்லை. இதில் கலாச்சாரம் எங்கு கெடுகிறது என்றும் தெரியவில்லை !

தடுமாறிக் கொண்டே கொண்டாடுவது தவறு. கொண்டாடுவதில் என்ன தடுமாற்றம் ?!