Wednesday, March 9, 2016

காக்க வைத்துக் காட்சி கொடுத்த நரசிம்ஹன்

என் உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பெயரில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் எழுதிய 'குறையொன்றுமில்லை' புத்தகத்தின்  முதல் பாகம் படித்தவுடன் ஏற்பட்ட தாக்கம் தான் ஒரு நரசிம்ஹரில்லை , நவ நரசிம்ஹரையும் காண வேண்டுமென்றெழுந்த அவா.

அவற்றைப் பற்றி மேலும் படிக்கப் படிக்கத் தெரிய வந்தது , அஹோபிலம் அருகிலுள்ள இந்த நவ நரசிம்ஹ க்ஷேத்திரத்தையும் நாம் தனியாகப் போய் பார்ப்பதென்பது ஒரு கடின முயற்ச்சி என்பது. அதன் பின் தான் எனக்குப் பரிச்சயமான ஸ்ரீ ஜானகி டூர்ஸின் 'அஹோபில' யாத்திரையைப் பற்றிக் கேள்விப் பட்டு விசாரிக்க, 2015 ஜனவரியில் முயற்ச்சிக்க , நரசிம்ஹர் என் விசாவைக் கிடப்பில் போட, இந்த வருடம் தொடர்ந்து கெஞ்ச , அவரின் அருட் பார்வையில் கிடைத்த அதிர்ஷ்டம் தான் ஒரு 18 பேர் கொண்ட குழுவில் சென்னையிலருந்து மும்பை மெயிலில் கிளம்பி மறுநாள் விடிகாலையில் பல் தேய்த்துக் கொண்டிருந்த பொழுது 'இறங்கு, இறங்கு- வண்டி கடப்பாவில்தான் நிற்கிறது' என்று  யாரோ கூவ, அவசரமாக இறங்கினோம் , இல்லை குதித்தோம் .  காத்திருந்த வேனில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர அரைத் தூக்கத்தில் பயணித்தால் வந்தது ஒரு காட்டின் நடுவிலுள்ள 'நவ அஹோபில தங்கும் விடுதி'.

சுத்தமான அறையில் சுகாதாரமான குளிர்ந்த காற்று மற்றும் நிறைய பூச்சிகளுடையே பயந்து கொண்டே குளித்து முடித்து போன முதல் இடம் 'அஹோபில லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி கோவில்'. மலை மேல் ஸ்வயம்புவாகத் தோன்றியுள்ள அத்தனை நரசிம்ஹர்களின் உற்சவ மூர்த்திகளையும் ஒரு சேரப் பார்க்க முடிந்த இந்தக் கோவில் வாசலிலேயே உள்ள அஹோபில மடத்தின் வயதான வைணவரின் சொல்ப ஆனால் சுவையான காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மூன்று ஜீப்புகளில் கிளம்பியது நம் குழு, வரவிருப்பது என்ன என்று தெரியாமல்.

வழக்கமாக வண்டிகள் சாலையில் தான் ஓடும். ஆனால் சாலை இருந்த சுவடே இல்லாத குண்டும் குழியுமாக உள்ள ஒரு பாதையில் நம் ஓட்டுனர் குத்து மதிப்பாக ஓட்ட, உள்ளே இருந்தவர்கள் உயிரைப் பிடிப்பதை விட மேல உள்ள கம்பியை கெட்டியாகப் பிடித்து இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ள , அடிக்கடி உச்சி மண்டை ஜீப்பின் உச்சியை முத்தமிட்ட அயர்ச்சியில் மயங்க , ஏதோ காஷ்மீர் பனிச்சறுக்கில் போவது போல் நம் ஓட்டுனர் அனாயசமாக் ஜீப்பை உருட்டினார். திடீரென்று 'அக்கடச்சூடு' என்று கத்தினார் - அங்கு அழகான புள்ளி மான் கூட்டம் , அருகிலேயே படு வெள்ளை நிறத்தில் சில மாடுகளும் ! சிறிது கண்ணை மூடித் தூங்கினாலும் ஜீப் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கி டங்கென்று இடித்து உச்சி வகுந்தெடுத்து எழுப்பி விட்டது- வாழ்வை ஒத்த ஏற்ற இரக்கப் பாதை  . இப்படியாக ஒரு ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப்பின் சென்றடைந்தது 'பாவன நரசிம்ஹர்' கோவில். அருமையான மலைகள் நடுவே அமர்ந்திருந்த நரசிம்ஹருக்கு நிதான அருச்சனையுடன் ஒரு வாய் இனிய பானகத்துக்குப் பிறகு கிளம்பவே மனது வராத அந்தக் கானகம் ஏனோ நான் மகாராஷ்ட்ராவில் பார்த்த பீமா சங்கரின் முதல் நினைவை கண் முன்னே காட்டி மறைந்தது.

முதல் நரசிம்ஹரைப் பார்த்த நினைப்பில் மனம் நெகிழ்ந்து கிடக்க தொடர்ந்த மீண்டும் ஜீப்பின் 'மண்டை இடிப் பயணம்' உறைப்பதற்கு முன் அடுத்த கோவில் என்று இறக்கி விடப்பட்ட இடம் கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது. ஒரு சிறிய காட்டுப் பகுதியின் ஒத்தையடிப் பாதையைத் தொடர்ந்து அழகாக புதிதாய் வெள்ளை அடிக்கப் பட்ட 130 படிகள் தென்பட்டாலும் ஏறும் வெயில் கொஞ்சம் படுத்த, மலை ஏறியவுடன் ஆஸ்வாஸப்  படுத்தியது  சிரித்த குருக்களின்  அன்பு முகமும் அதன் பின்னே ஒளிந்திருந்த பார்கவ நரசிம்ஹரின் உருவமும்தான். இந்தத் தலத்தின் சிறப்பு நரசிம்ஹர் வதம் செய்யும் பொழுது, ஹிரண்யனின் வலது கை உயர்த்திய வாளுடன் அப்படியே உறைந்து நிற்கும் காட்சிதான் !

திருப்தியான இரண்டு நரசிம்ஹ தரிசனத்துக்குப் பின் அஹோபில மடத்தின் எளிய மதிய உணவுக்குப் பின் அனைவரும் சற்று இளைப்பாற, குழுவில் இருந்த சில இசைப் பிரியர்கள் எம் எஸ் மற்றும் மகாராஜபுரத்தின் கீர்த்தனைகளை அவிழ்த்து விட கண்கள் சொருகி மனம் தானாக அமைதியடைந்தது.  கோழித் தூக்கம் கொடுத்த புத்துணர்வில் மீண்டும் உற்சாகம் பெருக்கெடுக்க, நாம் படையெடுத்த இடம் சத்ரவட நரசிம்ஹர். சிறியதாக இருந்தாலும் அமைதி சூழ்ந்த இந்த இடத்தில் தான் கந்தர்வர்களின் இனிய பாடலுக்கு ஆஹா ஓஹோ என்று கையைத் தட்டி அனுபவித்தாராம் நரசிம்ஹர். இதே நரசிம்ஹர் மதியம் மடத்துக்கு வந்திருந்தால் நம்மவர்களின் பாடல்களுக்கும் தலையாட்டி இருப்பாரோ?

ஒரு திருப்தியான தரிசனத்துக்குப் பின் சென்ற நான்காம் நரசிம்ஹ க்ஷேத்ரம் யோகானந்த நரசிம்ஹர். அருகிலுள்ள பால யோக நரசிம்ஹர் கோவிலும் , நவ நரசிம்ஹ ஸ்வாமி கோவில்களும் போனஸாகக் கிடைக்க, பார்த்த ஆறு கோவில்களும் மனதுக்கு அமைதியைக் கொடுக்க, அடித்த வெய்யிலும் உச்சி மண்டையில் ஜீப் முத்தமிட்ட இடம் கன்னிப் போக,  ஊருகாய் ஜாடி போல் குலுங்கிய உடம்பு சோர்ந்து போக இன்றைய கோவில்கள் அவ்வளவுதான் என்ற அறிவிப்பை குழு மூலைக்கடை தூள் பக்கோடா மற்றும் டீயுடன் கொண்டாடி அறைக்குத் திரும்பியது.

மறுநாள் விடிகாலையிலேயே எழுந்து, ஜானகி டூர்ஸின் ஸ்பஷலிடியான டிகிரி காபி கொடுத்த புத்துணர்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பினோம் 'மேல் அகோபிலம்' நோக்கி.

அதற்க்கு முன் 'அஹோபில நரசிம்ஹர்' என்ற மிக அழகான கோவிலுக்குள் சென்று பார்த்த பொழுதே அதன் பழமை தெரிந்தது.  சீதையைத் தேடி ராமர் அலைந்தபோது இங்கே வந்து நரசிம்ஹரை வணங்கியதாகக் கூறப்படுகிறது . குறுகிய பாறையின் கீழ் இருந்த நரசிம்ஹருக்கு திவ்யமான ஆராதனை செய்த இந்த திவ்ய தேசத்தில் சந்நிதிக்கு வெளியே பக்தர்களின் பாதம் பட்டு விடக்கூடாது என்று இரும்பு தடுப்புக்குள் வட்டமானதொரு பகுதி; அது என்ன என்று விசாரித்த பொழுது இருள் மண்டிக் கிடந்த இந்தப் பாதாளத்தில் ஒரு ஆலயம் இருந்ததாம். ஒரு காலத்தில் அன்றைய ஜீயர் அங்கு வந்த சில எதிரிகளுக்காக மறைந்து பூமிக்குள் சென்று ,  தினமும் வைகுந்தனை பூஜிக்கும் பொழுது , பூசை மணி கேட்டதாகவும், அந்த மணி சத்தம் திடீரென்று ஒரு நாள் நின்று போனதாகவும் அங்கு  இருந்த குருக்கள் சொன்ன போது புல்லரித்தது.

ஒரு நல்ல திவ்ய தேச தரிசனத்துக்குப் பின் , ஜானகி டூர்ஸின் அருமையான முன்னேற்ப்பாடால் கிடைத்த சில இட்லி வடைகளுக்குப் பிறகு நமது மேல் அகோபிலப் பயணம் துவங்கியது.

மிகக் கடினமான நடை பயணம் - பாதையே இல்லை- என்றோ தொண்ணூறுகளில்  போக நினைத்த ட்ரெக்கிங் நினைவுக்கு வந்தது . வயது வித்தியாசமில்லால் எல்லோரும் உற்சாகத்துடன் நடக்கத் துவங்க, முடியாத சிலர் டோலி என்ற தூளியில் ஏறி சவாரி செய்ய, கடின மலையேற்றம் தொடர்ந்தது. இந்தப் பயணத்துக்குத் தேவை உடல் பலமட்டுமில்லை , மன பலமும் கூட. ஒரு அதீத அபிலாஷை, நரசிம்ஹரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறி இருந்தால் போதும் - முழங்கால் வலி, உள்ளே வைத்த ஸ்டென்ட், எல்லாமே மற (றை)ந்து விடும்.  இந்த மனோ தைரியத்தில் தான் மலை ஏற ஆரம்பிக்கும் பொழுதே படியில் விழுந்து காலை பலமாகச் சிராய்த்துக் கொண்ட ஒரு மாமி, வலியுடன் உணர்ச்சியும் கூடி வரவழைத்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு ஜானகி டூர்ஸ் சமயோசிதமாக கொண்டு வந்த முதலுதவி களிம்பைப் பூசிக் கொண்டு , வலியையும் உதறி விட்டு நடக்கத் தொடங்கினார். சரியாகத் தான் சொன்னார்கள் முதல் அடியை நீ எடுத்து வைத்தால் மற்ற அடிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று . குழுவில் போகும் பொழுது ஒருத்தருக்கு ஒருத்தர் கை பிடித்து தூக்கி விடுவதைப் பார்க்கும் பொழுது , மனம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.  நேற்றுவரை பலரை மற்றவர்கள் பார்த்ததே கிடையாது.

கிளம்பும் பொழுதே கொடுத்த ஆளுயர தடியைப் பற்றி வாங்கும் பொழுது பலர் அதிகம் நினைக்கா விட்டாலும், பின்னால் ஜ்வாலா நரசிம்ஹரைக் காண மிகக் கடினமான , கைப்பிடிப்புக்கு ஒன்றுமில்லாத பாதைகளைக் கடக்கும் பொழுது நம்மை விழாமல் காத்த பெரும் கைப்பிடி அது தான் என்று அவர்களுக்குப் புரிந்ததில் ஆச்சரியமில்லை. அத்தனை கஷ்டங்களையும் சகித்து, பாறைகளைக் கடந்து, படியில்லா மலைகளில் ஏறி , மூச்சு வாங்கி, மலை உச்சியிலுருந்த ஜுவாலா நரசிம்ஹரைக் கண்டவுடன் கண்ணீரைக் கட்டுப் படுத்த கொஞ்சம் பிரயத்தனப் பட்டு போராட வேண்டி இருந்தது. அங்கு இருந்த சுயம்பு சிலைகளில் நரசிம்ஹரும் ஹிரண்யகசிபுவும் சண்டை போடுவதை இளம் பிரஹலாதன் பிரமிப்புடன் பார்க்க , அசுர குருவான சுக்ராச்சாரியார் உலகத்துக்கு ஒரு பெரிய பாடமும் சரித்திரமும் உருவாவதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சியும் நம் நாட்டின் வளமான பக்த சரித்திரத்தை பறைசாற்றின. நரசிம்ஹரின் ஆவேசம் காரணமாக இந்தக் குகை வெகுகாலம் நெருப்பு போல் கனன்று கொண்டிருந்ததாம் - பச்சைப் புல்லைக் காட்டினால் கூட உடனே பற்றிக் கொள்ளுமாம்; அதனால் தான் இங்குள்ள நரசிம்ஹருக்கு 'ஜ்வாலா' நரசிம்ஹர் என்று பெயர் வந்தது என்பதை அறிய கைகள் தன்னால் அந்த அக்கிரமத்தை அழித்த நரசிம்ஹரை நோக்கிக் கூப்பின. அங்கு ஜானகி டூர்ஸின் ரமேஷ் கையோடு  கொண்டு வந்திருந்த நாட்டுச் சர்க்கரையை ஜுவாலா நரஸிம்ஹருக்கு நைவேத்யம் பண்ணிக் கொடுத்தது , எல்லோரையும்  நெகிழ வைத்தது.

சற்றே அருகிலுள்ள  'ரத்த குண்டம்' என்று சொல்லப்படும் ஒரு சின்ன சுனையில் உள்ள தண்ணீரைக் கையிலெடுத்தால் இளம் சிவப்பாக இருப்பது , ஹிரண்ய வதத்திற்குப் பிறகு நரசிம்ஹர் இங்கு வந்து கரங்களைக் கழுவிக் கொண்டதால்  என்று ஒரு வழிகாட்டி விளக்கிக் கொண்டிருந்தார். அருகிலுருந்த வானுயர 'உக்ர ஸ்தம்பம்' என்ற தூணிலுருந்து தான் நரசிம்ஹர் வெளிப்பட்டதாகவும் சொன்னது அந்தக் கூற்றை ஆமோதிப்பது போலிருந்தது . இந்த ஸ்தம்பத்துக்குச் செல்வது மிகவும் கடினமென்றாலும் , அங்குள்ள காவிக் கொடியும், குங்குமக் கறைகளும்  பலர் வந்து போனதற்கான சுவடுகளைக் காட்டியது.

கண்ட காட்சிகளில் மனம் கனமற்றுப் போக , ஒரு துள்ளலுடன் மலை இரங்கத் தொடங்கிய குழு சிறிது நேரத்திலேயே அடுத்த சவால்களை எதிர் கொள்ளத் தொடங்கியது. இது தான் உயரம் என்று நினைத்தவர்களுக்கு அங்கிருந்து கீழ் இரங்கி, மறுபடியும் பல படிகளை ஏறி, காட்டுப் பாதையில் கடுமையாகத் தொடங்கிய வெய்யிலில் சிலர் திரும்பி விடலாமோ என்று நினைத்த பொழுது நான் சொன்ன 'திரும்புவதை விட முன்னேறி அடுத்த இலக்கை அடைவது சுலபமென்பதை' நாங்கள் அடுத்துக் கண்ட மாலோல நரசிம்ஹர் கோவிலில் பலரும் ஆமோதித்தனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்திலேயே மிகக் கடினமான பாகம் இந்த ஜுவாலா நரசிம்ஹரிலிருந்து மாலோல நரசிம்ஹரைக் காணும் பாதைதான். மிகவும் உடல் மற்றும் மன உறுதியைச் சோதிக்குமிடமும் இது தான். மேலும், "உண்மையான பக்தி இருந்தால் வந்து தரிசிக்கட்டும் என்று வனமும் விலங்குகளும் அடர்ந்த குகைகளில் நாராயணன் தன்னை வெளிப்படுத்திய புண்ணியத் தலம் அஹோபிலம்" என்று ஏன் சொல்கிறார்கள் என்பது  ஜுவாலா நரசிம்ஹரையும் , மாலோல நரசிம்ஹரையும் தரிசித்த பின் தான் புரிந்தது ! இந்த மாலோல நரசிம்ஹருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.  நவ நரசிம்ஹர்களில் எந்த மூர்த்தியை அடிப்படையாக வைத்து உற்சவரை அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, முதலாம் ஜீயரின் கனவில்  நாராயணன் தோன்றி , மாலோல நரசிம்ஹராஹக் காட்சி அளித்து ஒரு தீர்ப்பளித்ததாகவும் நம்பப்படுகிறது .

ஒரு சிறிய இளைப்பாறலுக்குப் பின் இன்னும் அதிக தூரமில்லை என்று நம்பிக்கை வந்து வேகமாக முன்னேறியது அடுத்தத் தலமான  குரோத வராஹ நரசிம்ஹர் கோவிலுக்கு.  பெரிய பாறைக்கடியில் அமர்ந்திருந்த பெருமாளை இருவர் மட்டுமே சேவிக்கக் கூடிய சிறிய இடத்தில் ஒரு அருமையான தரிசனம்.

கடின பாதையில் நடை பயணம் , மலை ஏற்றம் இத்துடன் முடிவடைந்ததென்பதால் அனைவரும் சந்தோஷமாக ஆனால் நன்றியுடன் கையிலுருந்த தடியைத் திருப்பிக் கொடுத்து விட்டு வேனில் ஏறி சிறிது தூரத்தில் உள்ள கடைசிக் கோவிலான ஸ்ரீ காரஞ்ச நரசிம்ஹர்  -ஆஞ்சனேயருக்குக் காட்சி கொடுப்பதற்காக வில்லுடன் தோற்றமளித்த இடம்.

1980களில் கடைசியாக இப்படிப்பட்ட ஒரு கடின நடை நான் எடுத்தது அழகர் கோவில் செல்லும் பொழுது - ஆனால் இவை இரண்டுக்குமிடையே இருந்த பெரிய வித்தியாசம் நடுவில் கடந்து போன வயது தான்.

சமீப காலத்தில் என் அனுபவத்தில் தோன்றிய சில எண்ணங்கள்- இப்படிப் பட்ட கடின பயணங்கள், மகாமஹம் போன்ற முயற்ச்சிகளை கூடிய மட்டும் வாழ்க்கையின் முதல் பகுதியில் முடித்துக் கொள்வது நல்லதென்று. அப்படித் தவற விட்டிருந்தால் புத்திசாலித் தனமாக இப்படிப்பட்ட டூர் ஆப்பரேட்டர்களைத் தேடிப் பிடித்துக் கொள்வது பல பிரச்சினைகளை எதிர் கொண்டு சமாளிக்க உதவும்    

இந்த இடத்தில் ஜானகி டூர்ஸ் பற்றி சில வரிகள்:

  • மிகத் திறமையாக பயணங்களை வடிவமைக்கிறார்கள் .
  • மூத்த குடிமக்களுக்கு நல்ல கவனிப்பு - மலை ஏறும்பொழுது ஒருவர் கீழே விழுந்தவுடன் உடனே ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்தது இவர்களின் அக்கறையைக் காட்டியது.
  • ரயிலில் முடியாதவர்களுக்கு வசதியான படுக்கைகளை மற்றவர்களிடமிருந்து பெற்று மாற்றிக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணம்.
  • விடிகாலையில் , காட்டின் நடுவே உள்ள தங்கும் விடுதியில் சுடச் சுடக் காப்பி கொடுப்பதற்க்கு இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  • கடந்த நான்கு வருடங்களாக இவர்களுடன் பல பயணங்கள் - கர்நாடகம், நவ திருப்பதி, கேரளா முதலிய இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இவர்களின் சிறந்த பணி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதில் முக்கியம் முன்னேறுவது மட்டுமில்லை , மேலும் முன்னேறி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் தான் இவர்களை இன்னும் இந்தத் துறையில் வெகு தூரம் கொண்டு போகப் போகிறது.
அஹோபில பயணம் -  இது ஒரு சாதாரண உல்லாசச் சுற்றுலா இல்லை . இதை மனதில் முதலில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கடக்க வேண்டிய பல கடினமான பாதைகள் உள்ளன- சில ஜீப்பிலும், பல கால் நடையாக காட்டுப் பகுதியிலும், கடினமான படியில்லாத மிகக் குறுகிய மலைப் பாதைகளிலும். கிளம்பு முன்னமேயே இவற்றை மனத்தில் கொண்டு நரசிம்மனைக் காண ஒரு திவ்ய பயணம் என்று புரிந்து கொண்டால் சில கஷ்டங்கள் கூட வலிப்பதில்லை.

செல்பவர்கள் செய்து கொள்ளக் கூடிய சில முன்னேற்ப்பாடுகள்:

கூடிய வரை ஆண்கள் முழுப் பேண்ட்டும் பெண்கள் சுடிதார் போன்ற புரண்டு, தடுக்கி விழாத உடை அணிவது நல்லது.

ஆண், பெண் இருவரும் ஜோல்னா போன்ற தோளில் மாட்டிக் கொள்கின்ற பையை எடுத்துக் கொண்டு இரு கைகளையும் கைத்தடி மற்றவைகளைப் பிடித்துக் கொள்ள தோதாக வைத்துக் கொள்வது நல்லது.

மலை ஏறும் பொழுது, சிலருக்கு தலை சுற்றல் போன்ற உபாதைகள் வந்தால் சமாளிக்க கொஞ்சம் சர்க்கரை, இனிப்பு/புளிப்பு மிட்டாய்கள், சீரக மிட்டாய், எலுமிச்சம் பழம், கொஞ்சம் பிஸ்கட்டுகள் வைத்துக் கொள்வது உசிதம்.

இது ஒரு காட்டுப் பகுதி - ஆகையால் வழியில் எதுவுமே கிடைக்காது என்பதை மனதில் வாங்கி அவரவர் தேவைக்கேற்ப எடுத்திச் செல்ல வேண்டும். ஆனால் குடி தண்ணீர் மட்டுமாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் சிலர் அவதிப் பட்டதையும் காண முடிந்தது.

ஜாக்கிரதை - குரங்குகள் நிறைய நடமாடும் இடமிது ! பெண்கள் கைப் பையை தவிர்க்கவும். குரங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வது மட்டுமில்லால் கைகளில் எந்த பாரமுமில்லாமல் வைத்துக் கொண்டால் விழாமல் சுதாரித்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

ஆகாரங்கள் - கிடைத்த சொல்ப  உணவுகளை உட்கொண்டு வயிற்றைக் காய விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த வனாந்திரத்தில் கிடைப்பதை அமிர்தமாக நினைத்து உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்  . இந்த இடத்திலேயும் ஜானகி டூர்ஸ் சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்ற இனிப்புகளுடன், கையில் கொண்டு வந்த அப்பளத்தை பொறிக்கச் செய்து சுவை கூட்டியது பாராட்டப் பட வேண்டிய ஒரு செயல். அதனுடன் அவர்களின் வழக்கமான பருப்பு பொடியும், புளிக் காய்ச்சலும் உங்களை பசியில்லாமல் கண்டிப்பாக வைத்துக் கொள்ளும்!

இவ்வளவு நேரமும் இனிமேல் படி கிடையாது , ஏற வேண்டாம் என்று சொல்லி சொல்லி எங்களை ஊக்குவித்த சின்ன பையனான ஆனால் அபார திறன் கொண்ட எங்களது வழி காட்டி , பிரியுமுன் பிரியமுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்ட பின் அவன் பெயரைக் கேட்ட பொழுது 'நரசிம்ஹன்' என்றவுடன் பேச்சு எழவில்லை. இதுதான் நாம் முதல் அடி எடுத்தவுடன், நரசிம்ஹன் மற்ற பாதைகளைக் காட்டுவானென்று சொல்கிறார்களோ என்று வியக்க வைத்தது !!

மடத்தில் வாங்கிய புத்தகத்தில் படித்தது ஞ்யாபகம் வந்தது  " உண்மையான  பக்தியும் உடலுறுதியும் இருந்தால் மட்டுமே அஹோபிலத்தின் நவ நரசிம்ஹர்களைத் தரிசித்துப் பரவசம் கொள்ள முடியும்". நன்றியுடன், அழைத்த நரசிம்ஹரையும் அவர் வழிகாட்டியாக அனுப்பிய நரசிம்ஹனையும் கை எடுத்துக் கூப்பியவுடன் 18 பக்தியால் மகிழ்ந்து , நெகிழ்ந்து போன இதயங்களுடன் வண்டி சென்னை நோக்கி நகர்ந்தது.

பின் குறிப்பு: ஏற்கனவே இது ஒரு நீளப் பதிப்பாக இருப்பதால், இந்த அஹோபில பயணத்தில் எடுத்த புகைப் படங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன் , அவற்றைக் காண விழைபவர்களை,  என்னுடைய புகைப் படங்களுக்கான பதிவுகளுக்குக்கான https://goo.gl/photos/Lu8tmJNTC7ZWmdey6   என்ற முகவரிக்கு அன்புடன் அழைக்கிறேன்.