Monday, April 18, 2016

படித்தது!

சென்னையில் உள்ள மாவட்ட நூலகங்கள் உதவியுடன் சுஜாதாவின் சில புத்தகங்களை படிக்க நேர்ந்தது. நன்றி என் நண்பனுக்கு- நூலக அறிமுகத்துக்கு!

இரு வாரங்களில் நான்கு புத்தகங்கள்-சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் உட்பட.

படிக்க படிக்க அந்த எழுத்தாற்றலின் வேகத்தை , அகலத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வரி அனேகமாக அன்னாரின் எல்லா புத்தகங்களும் படித்த பின்னால் வருவதில் ஆச்சரியமில்லை.

நிற்க சுஜதா புராணம்.

இந்த வாரத்தில் படித்த இரண்டு நாவல்கள் -

உள்ளம் துறந்தவன் - அபார வேகம் , ரிவர்ஸ் ஸ்னாபரி முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வரை எல்லாவற்றையும் தொடுகிறார். வஸந்த் இல்லா விட்டாலும் அந்தக் கதா பாத்திரம் உள்ள பிரமையை எழுத்து மூலம் வாசகர்களுக்கு நினைவு படுத்துவதில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிகிறது. அந்த சின்ன இருதய நோய் சம்பந்தப் பட்ட விளக்கத்தின் எளிமையில் ஆர்தர் ஹைலியின் Final Diagnosisஐ மிஞ்சுகிறார் !! பங்குச் சந்தையில் தன் அறிவு விஸ்தாரணத்தை அநாயாசமாகக் காட்டி இருக்கிறார்.

இருந்தும், இயக்குனர் சிகரத்தை சிலர் குறை கூறுவது போல், கதையை முடிக்க தடுமாறி இருக்கிறார். தடுமாற்றத்தில் அதுவரை இருந்த விறுவிறுப்பு கொஞ்சம் மழுங்கிப் போய் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்களைக் தவிர்க்க முடியவில்லை .  இப்படிப்பட்ட சில குறைகள் இருந்தும் ரசிக்கக் கூடிய நாவல்.

அடுத்த நாவல் - ஒரே ஒரு துரோகம் - நண்பரின் மனதுக்கு பிடித்த மைதானம்  -  'துரோகம்' . இதில் உள்ள வியக்கத் தக்க விஷயம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கதாநாயகனும் (அவனே வில்லனும் கூட) கதாநாயகியும் , மாற்றி மாற்றி அவர்கள் மன எண்ணங்களில் கதையை நகர்த்தி இருப்பது. ஒரே நிலைமையை  இவர்கள் இருவரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற அருமையான உத்தியைக் கையாளுவதற்கு பல கதை, கட்டுரைகள் எழுதிய வளமான சிந்தனையும் , முதிர்ந்த எழுத்தாற்றலும் அவசியம் தேவை. அதற்க்கொன்றும் ஆசிரியருக்கு குறைச்சலில்லை - ஆகையால் வாசகருக்கு பக்கத்துக்கு பக்கம் விருந்துதான். இந்தக் கதையின் முடிவிலும் அவரசரமும் , நம்பகத் தன்மை குறைவும் நம்மைத் தாக்குவது தான் சிறிது ஏமாற்றமளிக்கிறது . சமீபத்தில் படித்த மற்றொரு கட்டுரையில் சுஜாதா எழுதி இருந்தார் - ' பல நிறைவேறாத ஆசைகளும், விபரீதக் கற்பனைகளும் எழுத்து மூலம் வெளிப்படுத்த முடிகிறது ' - இந்தக் கதையில் அந்தக் கூற்றை நன்கு காண முடிகிறது!

வயதில் மூத்தவராக இருந்தாலும் எழுதுகோலில் உள்ள இளமை - ஆசிரியரை மீண்டும் ஒரு முறை ' ரசிக்கக் கூடிய ராஸ்கல் ' என்று சொல்லத் தூண்டுகிறது.

அடையாறு  மாவட்ட நூலகம் : அமைதியான, மரங்கள் சூழ்ந்த பிரதான சாலையில் , பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில், வண்டிகள் சௌகர்யமாக நிறுத்த இடத்துடன். கொஞ்சம் இருட்டு, பழைய வாசனைகளை சகித்துக் கொண்டால் அறுபது ரூபாய் வருடச் சந்தா கட்டி மூன்று புத்தகங்களை பதினைந்து நாட்களுக்குள் படித்து மறுபடியும் எடுக்கலாம். பாலகுமாரன், சிவசங்கரி, வாஸந்தி , சுஜாதா , சோ போன்றவர்களின் புத்தகங்கள் நிறைய உள்ளன. புத்தகங்கள் தேடுவதை விட நூலகத்தில் சேர விண்ணப்பத்தை தமிழில் நிரப்புவதில்தான் அதிக சிரமம் இருந்தது . 

Monday, April 11, 2016

வாழ்வில் எத்தனை 'மை'?

சில மாதங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு பெரியவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்னால் நல்ல  பதவியில் இருந்தவர், தன் பெரிய குடும்பமான பல பெண்களுக்கும்  நல்ல முறையில் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னும்  கையில் ஒரு கணிசமான தொகையுடன் ஓய்வு பெற்று யார் கையையும் நம்பாமல் தனித்து, தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். எப்பொழுதுமே சிரித்த முகம், வாய் நிறைய புன்னகையுடன் 'வாங்க வாங்க' என்று வரவேற்ப்பார்.

வாழ்க்கைதான் அவ்வளவு சுலபமில்லையே. அவரது மனைவிக்கு சின்ன விபத்து நேர்ந்து நடப்பதில் சிரமமிருந்தாலும், அப்படியே காலம் தள்ளிக் கொண்டிருந்தார். கொஞ்ச காலமாக, வெளியே போவதில்லை- கண் பார்வை மங்குவதால், வயதும் ஏறிக்கொண்டே இருப்பதால் - ஞாபக மறதியும் தொற்றிக் கொண்டிருந்தது.

இந்த முறை என்னைப் பார்த்தவுடன் வரவேற்று, உபசரித்ததைப் பார்த்து நான் மகிழ்வதற்க்குள் "நீங்கள் யார்" என்றார் ! எனக்கு அவரின் நினைவு தப்புவதைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது யாரென்று புரியாமலே வாய் நிறைய வரவேற்ற உள்ளத்தைக் கொண்டாடுவதா என்று புரியவில்லை. அதன்பின் அவர் மனைவி வந்து "நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுகாதேங்கோ " என்றார்.

என்னைத் தடுமாற வைத்தது - அவரின்  அன்றைய நிலை

சில வருஷங்களுக்கு முன் என் மற்றொரு நண்பர் ஒருவர் இப்படித்தான் - நன்றாக இருந்தவர், திடீர் வியாதியால் மூக்கில் டியூபெல்லாம் வைத்து கடைசி வரை பேச முடியாமலே போய் விட்டார். இறுதி நேரத்திலும்  அவர் மனதில் என்ன நினைத்தார் என்பதே தெரியாமல் போய் விட்டது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், அவருடைய மிகப் பெரிய ஆசையாக 'அனாயாச மரணத்தை'த் தான் குறிப்பிட்டுருந்தார்.

பலருக்கும் உள்ள பல பயங்களில் மிகப் பெரிய பயங்களில் ஒன்றானது - நினைவிருந்தும் பேச முடியாமல் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதுதான். அது ஒரு கொடுமையான நிலை. நம் உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியும், ஆனால் பேச முடியாது. சில சமயம் கனவுகளில் இது போன்ற காட்சிகள் வரும் - குப்பென்று வியர்த்து எழுந்திருப்போம்.

அந்தப் பெரியவர் சுருண்டு படுத்துக் கிடந்த கோலம், என் மனதைப் பிழிந்து விட்டது. எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எந்த ராஜ்ஜியத்தை ஆண்டவனாக இருந்தாலும், கம்பங்களியோ, தங்கபஸ்பமோ எது தின்றாலும் முதுமை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

முதுமை என்பதே நிறைய பேர் விரும்பாத,  பலர் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு கட்டாய நிலை.

அதில் உறவினர்கள், நண்பர்கள்  சூழாமல் தனிமை என்பது கொடுமை.

இந்தக் கொடுமையே பலருக்கு மனதளவில் பாதித்து வெறுமையையும் ஏற்படுத்தும்.

இதில் வறுமையும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம், மனிதனின் வேதனைக்கு.

 இதில் கல்யாணமாகாத பெண் என்று நிறைவேறாத கடமைகளும் மீதமிருந்தால் வியாதியே தேவையில்லை

 முதுமை, தனிமை, வெறுமை, வறுமை, கடமை - வாழ்வில் இவ்வளவு மைகளா?

இதில் பொறுமை எப்படி வரும்?