Sunday, December 15, 2013

மயக்கும் மார்கழி

நினைத்தாலே இனிக்கிறது- பிறக்கப் போகும் மார்கழியை நினைத்து .

இந்த இனிய எதிர் பார்ப்பு, பல வருடங்களாகவே இருந்து கொண்டிருக்கு.

சின்ன வயதில், ஸ்கூல் படிக்கும் பொழுது, மார்கழியை விட அது வரும் டிசெம்பர் மாதம் பிடித்தது. அந்தக் குளிர் பிடித்தது. அரைத் தூக்கத்தில், அதி காலையில் கிழக்கு மாட வீதியில் வலம் வரும் அண்ணாஜி ராவ், பாபனாசம் சிவன் பஜனை ஓசை பிடித்தது. உண்மையைச் சொன்னால் மார்கழியைப் பற்றி ரொம்ப ஆசையாகப் பேசப்படும் பொங்கல் என்னை அவ்வளவாக ஈர்த்ததே இல்லை.

காலேஜ் போனப்புறம், அந்த அதிகாலைக் குளிரில் எழுந்து பால்கனியில் உட்கார்ந்து மேத்ஸ் போடப் பிடித்தது. நண்பர்களுடன் சுற்ற அந்த சீதோஷ்ண நிலை உதவியது. நிறைய லீவு இந்த மாதத்தில்தான் கிடைக்கும்.

வங்கியில் சேர்ந்தப்புறம் மார்கழியில் வரும் டிசம்பர் அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் அதிசயக் கன்னியாகத் தெரியும். புது வருடத்தில் வரும் லீவ் க்ரெடிட், புதுப் புது வருமானங்கள்.  நிறைய இந்த மாதத்தில்தான் டூர்கள் பல போயிருக்கிரேன், வெய்யிலும் விடுமுறை எடுப்பதால். இதனிடையே ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழியில் தான் மலரும்.

இப்படிஇருந்த மார்கழி, தொண்ணூறுகளில் மாறிப் போனது, வீட்டுக்கு வந்த ஒரு பெரியவர் திருப்பாவை பற்றி சொன்னவுடன் அதிகாலை எழுந்து அதைப் படித்து அனுபவித்தேன்.

சமீப காலமாக, குறிப்பாக வேலையிலிருந்து விலகியபின், ஏனோ மார்கழி அதிகமாக இனிக்கிறது. காலையில் நான்கு மணிக்கு வேண்டுமானாலும் எழுந்திருக்க முடிகிறது - தேவைப் பட்டால் மதியம் தூங்கலாமே. உறங்கும் வீட்டை தொந்தரவு பண்ணாமல் நாமே காபி போட்டுக் குடித்து, குளித்து, பூஜை செய்த பின்னும் மணி ஆறுதான் என்றால் ஒரு தனி சுகம் தான். இருள் பிரியாத காலையில் குளிரில் கோபுர தரிசனம் எனக்குப் பிடித்த ஒன்று- இதை மார்கழியில் தான் செய்ய முடியும்.

போன வருஷம் ஒரு திடீர் உந்துதலில், தினமும் ஒரு கோவில் என்று முப்பது கோவில்கள் சென்ற நினைவு இன்றும் இனிக்கிறது.

நான்கு மாட வீதியைச் சுற்றினால் சம்ப்ரதாய பஜனையிலுருந்து இன்றைய பஜனை வர எல்லாவற்றையும் அனுபவிக்கலாம். மதியம் சாப்பிட்ட பிறகு கூட ஏதாவது ஒரு சபாவுக்குள் நுழைந்தால் எதோ ஒரு கச்சேரி கண்டிப்பாக அனுபவிக்கலாம், இலவசமாக. இதையெல்லாம் மீறி சபாக்களில் கிடைக்கும் அறு சுவை உண்டி ஒரு சிறப்புச் சலுகைதான்.

எனக்குத் தெரிந்து மார்கழியில் ஏற்ப்படும் ஒரே நஷ்டம் அதி காலை நடைப்பயிர்ச்சிதான். மனம் தான் இவ்வளவு சந்தோஷமாக இருக்கே, கொஞ்சம் உடலைத் தள்ளி வைக்கலாமே என்றுதான் ஆறுதல் அடையலாம்.

Tuesday, November 19, 2013

தந்தையின் தாலாட்டு

அந்த பட்டை உரிக்கும் வெய்யிலில் நாங்கள் சென்னை ஆள்வார்பேட்டை சிக்னலைக் கடந்து நடந்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கு. எந்தவிதச் சட்டக் கட்டுப் பாடும் இல்லாத அந்த நாட்களில் அப்பொழுதுதான் சொல்லி இருந்தார்கள், எங்களுக்குப் பிறக்கப் போவது ஒரு பெண் குழந்தை என்று.

எங்களுக்கு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாததால், அந்தக் கால சூழலுக்கு மாறாக, ஒரு சந்தோஷம் தான் நிலவியது. பலர் நம்ப மறுப்பார்கள் ஆனால் உண்மையென்னவோ அப்பொழுது தோன்றிய ஒரு எண்ணம் 'இந்தப் பெண் நம் வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு ஒரு நாள் போகத்தான் போகிறாள்' என்று. அந்தப் பாலம் வரும்பொழுது கடந்து கொள்ளலாம் என்று அவசரமாக தலையை உலுக்கி அந்த எண்ணத்திலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

ஒரு பிள்ளையைச் செல்வம் என்பது ஏன் என்பது அது வளர வளர்த்தான் புரியும். அது முதலில் மல்லாந்து கொண்டே சிரிப்பது, பின் குப்புறப் படுத்து தலையைத் தூக்கிப் பார்ப்பது, நகர முயற்ச்சித்து முடியாமல் வாழ்க்கையின் முதல் தோல்வியில் துவண்டு வாய் கோணி அழுவது, பின் மற்றவர்களின் உந்துதலால் முன்னேறி விசுக் விசுக்கென்று அடி வயிற்றால் முன்னேறி துறத்தும் தாயை ஒட வைப்பது, தத்தி தத்தி நடக்க ஆரம்பித்ததும் தகப்பனுக்கு ஒட்டப் பரீட்சை வைத்து மூச்சு வாங்க வைப்பது, யாரும் பார்க்காதபோது கீழே கிடப்பதை வாயில் போட்டுக் கொள்வது - இது போன்ற எத்தனையோ விளையாட்டுக்களை ஒவ்வொன்றாக நடத்தி காட்டி , இன்பத்தை ஒரு வங்கிக் கணக்கு போல் சேமிப்பதாலோ அதற்க்குச் செல்வம் என்று பேர் வந்தது? இதையெல்லாம் அனுபவிக்காத பெற்றோர்கள் செல்வத்தை சிட் பஃண்டில் போட்டவர்கள் போலாவார்கள் !

என் பெண்ணை ஒவ்வொரு நிலையிலும் அருகிலிருந்து பார்த்து அனுபவித்த பாக்கியம் எனக்குக் கிட்டியது. எல்லா பொம்மைகளுடனும் விளையாடியது, ஊட்டி, கோடை பார்க்குகளில் ஓட விட்டது, படகு சவாரி செய்தது, கை பிடித்து ஸ்கூலிலுருந்து அழைத்து வந்தது, சாயந்திரம் அழைத்துவரச் செல்லும்போது உள்ள ஒரு எதிர்பார்ப்பு, கசங்கிய யூனிபாஃர்ம் கன்னத்து அழுக்குடன்  என்னைப் பார்த்ததும் பளீரென்று சிரித்தது- தனி சுகம்.

இன்று போலிருக்கு- முதன் முதலில் பென்ஸில் பிடித்து எழுத வராமல் அவள் அழுத போது, நானும் அவளை விடக் கீழிறங்கத் திட்டியது - இன்று அவளின் அச்சுப் போன்ற கையெழுத்தைப் பார்த்தால் என் அன்றைய கோபம் இன்று என்னை வெட்கப் பட வைக்கிறது.

அவளுடன் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதியது, எல்லாப் போட்டிகளுக்கும் அவளைத் தயார்  செய்தது- கொன்றை வேந்தன் எல்லா வரிகளையும் அலட்சியமாகச் சொல்லி முடித்து பரிசு வாங்கி வந்தவுடன், பரிசின் அருமை தெரியாமல் அவள் சாக்லேட் எங்கே என்று கேட்டது- இன்று இனிக்கிறது .

இன்றைய தலை அஜீத் கையால் அன்று பரிசு வாங்கிய பெருமை இன்று தான் அவளுக்கு உறைக்கிறது !!

இந்தக் கடுமையான போராட்டங்களுக்கிடையில் அவள் எப்பொழுது என் குழந்தையிலிருந்து என் நண்பி ஆனாள்?

அவளின் கடினமான நேரங்களில்  கண் கலங்கியவளை நான் அணைத்த போதா?

கூட நடந்து வரும் போது அறிவுரை சொல்லாமல் அவளைப் பேச விட்ட போதா?

அவள் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்து அனுசரித்துப் போன போதா?

அவளை ஒரு அப்பாவுக்கு பயப்படும் பெண்ணாக இல்லாமல் , ஒரு நல்ல தோழமைக் கூட்டணியாக நடத்திய போதா?

எப்படியோ தெரியாது. ஆனால் இவற்றினூடே  எப்பொழுதோ நான் பிடித்துக் கொண்டிருந்த விரல் மாறி என் விரல் அவளின் கையில் தஞ்சமான அன்று எனக்கு ஒரு சினேகிதி கிடைத்தாள்.

ஒரு வளர்ந்த பெண் பெற்றோருக்கு ஒரு வரப் ப்ரசாதம். எல்லா விஷயங்களிலும் கலந்து பேசிக் கொள்ளலாம்.

அவளின் புரிதல் அபீசிலிருந்து வந்த நான் அசதியுடன் எதுவும் பேசாமல்  சாய்வு நாற்காலியில் பாதி கண் மூடி  இருக்கும்போது கால் அமுக்கி விட்டு  " ஆபீஸில் ஏதேனும் ப்ரச்சனயா" என்ற கேள்வியில்  தெரிந்தது.

அவளின் அக்கறை , கேலிக்காக நான் முதியோர் இல்லம் பற்றிய விளம்பரங்களை ஊன்றிப் படிக்கும்போது வரும் கோபத்தில் தெரிந்தது.

அவளின் குழந்தைத்தனம், என்னை டைனிங் டேபிள் சுற்றி விரட்டியதில் தெரிந்தது

திருமணப் பேச்சு ஆரம்பித்தபின், அவள் முகத்தில் தெரிந்தது கவலையா, வரப்போகும் பிறிவினால் ஏற்ப்படும் சோகமா என்று தெரியாமல் மறைப்பதில் புத்திசாலித்தனம் தெரிந்தது.

திருமணம் முடிந்து அவளைப் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கார் நகர்ந்தபின் தான் எனக்குப் புரிந்தது- நான் இத்தனை நாளாக "வந்த பிறகு பார்த்துக் கொள்வோம்" என்ற அந்தப் பாலம் விச்வரூபமெடுத்து என் முன்னே நிற்கிறது என்று !

இந்த உலகிலேயே  ஒருவர் ஒரே நேரத்தில் சந்தோஷத்தின் உச்சியிலும், சோகத்தின் பிடிப்பிலும் இருப்பார் என்றால் அவர் பெண்ணைப் பெற்றவராகத்தான் இருக்க முடியும்.

தன் மாப்பிள்ளையிடம் பெண்ணை அறிமுகப் படுத்தி, கோத்ரம் மாற்றி கன்னிகாதானம் செய்யும் பொழுது, ஒரு தகப்பன் பெருமையின் உச்சிக்குச் செல்கிறான்.

இது நடந்த உடனே பெண் தன் வீட்டை விட்டு கணவனுடன் போகும்பொழுது பேச்சு வராமல் போகிறான்.

இதற்க்குப்பின் அவன் வாழப் போவது இது வரை வாழ்ந்த நினைவுகளிலும்,  இனி வரப் போகும் தன் பெருந்செல்வத்தின்  வாழ்க்கைக்காகவும்தான்.







Friday, November 1, 2013

புஸ்ஸாகும் தீபாவளி

எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து, ஒரு வருஷத்தின் பெரிய பண்டிகையே தீபாவளிதான். ஒரு மாசத்துக்கு முன்னாடியே பட்டாசு லிஸ்ட் போட ஆரம்பித்து, ஒரு க்ளயன்டுக்கு அனுப்பும் ரிபோர்ட் போல் பல முறை ரெவியூ பண்ணி, பின் அப்பா அனுமதிப்பதென்னவோ பத்து ரூபாய் தான்- ஆனால் அதில் கிடைக்கும் கை/பை நிறைய பட்டாசுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

வழக்கமாக நவராத்ரி லீவில் மைலாப்பூரிலேயே உள்ள ஒரு கடையில் துணி வாங்கி, தேரடி பக்கத்தில் உள்ள பாபு ராவிடம் கொடுத்தால் அவர் தீபாவளிக்கு இரண்டு நாள் முன் பேண்ட் என்ற பேரில் ஒரு பாவாடை தைத்துக் கொடுத்தாலும், முகம் கோணாமல் சந்தோஷமாக உடுத்துவோம்.

தீபாவளிக்கு முந்தைய இரவு தூங்கவே மாட்டோம். அண்ணா, அக்காக்களுடன் குளிருக்கு (ஆம் அப்பல்லாம் நவம்பரில் குளிர் உண்டு- இந்த மாதிரி வெய்யில் கிடையாது) போத்திக் கொண்டு மறு நாள் வெடிக்கப்போவதை மனசுக்குள்ளேயே ரிஹர்ஸல் பண்ணுவோம்.

காலை ரெண்டு மணிக்கு அரக்கப் பரக்க எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து (அப்படின்னா?), எல்லா பட்டாசையும் கரியாக்கிய பின் தான் வீட்டுக்குள்ளே வருவோம். இதற்க்கு நடுவில் வாசலில் நாதஸ்வரம், மேளக்காரர்கள் வந்து மங்கள வாத்யம் வாசிப்பார்கள். அதற்க்குப்பின், இட்லி, பஜ்ஜி சாப்பிட்டு விட்டு தெரிந்த சொந்தக்காராள் வீட்டுக்கெல்லாம் போய்ட்டு ஒரு மணிக்குத் திரும்பும் போது நல்ல பசி இருக்கும்.

காலைப் புகை இந்நேரம் நல்ல தொண்டை எரிச்சல் ஏற்ப்படுத்தி இருந்தாலும், மிச்ச சொச்ச சரங்களை ஒவ்வொன்றாக உதிர்த்து வெடித்து  இரவு சொக்கப் பனை முடியும் பொழுது, துக்கம் தொண்டைய அடைக்கும்- தீபாவளி முடிந்ததுக்கா இல்லை மறுநாள் ஸ்கூலுக்கா என்று தெரியாது. சில சமயங்களில் அன்று இரவு ஒரு நைட் ஷோவுடந்தான் தீபாவளி முடியும்.

இப்பல்லாம் இதில் ஒன்றுமே கிடையாது- இன்று காலை ஐந்து மணிக்கு ஒரு பட்டாசு சத்தம் கூட கேக்கல்ல. ஏன் இப்படி நம் பாரம்பரியப் பண்டிகைகள் களை இழந்து போகின்றன?

முதல் காரணம் ஆபீஸ்.  தீபாவளிக்கு ஒரே நாள் தான் லீவு. பாதி பசங்க வெளியூர்லேந்து டிக்கட் வாங்கர தொந்தரவுக்காகவே ஊருக்கு வருவதில்லை. மேற்கு வங்காளத்தில் பூஜாவுக்கு 4 , 5 நாள் லீவு விடறாங்க. வெளிநாடுகளில் க்ரிஸ்மஸுக்கு 15 நாள் முன்னமேயே மெயில் பக்கம் போகவே மாட்டேங்கராங்க. ரம்ஜான்போது அரபு நாடுகள் எல்லாமே தொழில்களை முடக்கி தத்தம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றன.

 நம்ம தீபாவளி, பொங்கலைத் தான் யாரும் மதிப்பதில்லை போலிருக்கு. நம்ம ஊர் பசங்கதான் சொல்லணும் இந்த நாள்லெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஆபிஸ் வரமாட்டேன்னு. ஒண்ணும் குடி முழுகி விடாது, இந்தப் பண்டிகை கொண்டாடாதவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் முன்யோசனை தான் தேவை அது இருந்தால் சமாளிக்கலாம்.

என்னமோ இந்தப் பட்டாசினால் தான் மாசு கெட்டுப் போயிடுவது போல ஒரு கும்பல் கிளம்பிடுது. நாம் ரோட்டில் போடும் பேப்பர்களும், ப்ளாஸ்டிக்குகளும் மறந்து விடுகின்றன.

 இந்த சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். ஏன் நம்ம ஊரில் வாகனங்கள் போடதா சத்தமா, விடாத புகையா. இதற்க்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் வேற.

இப்பல்லாம் கார்த்தால 5 மணிக்கு எழுப்பினாலே பசங்க ஏன் இவ்வளவு சீக்கிரம்னு திட்றாக. எழுந்ததுக்கப்புறம் முகனூல்ல வாழ்த்துக்கள். அதுக்கப்புறம் லேகியம் உண்டோ இல்லையோ, பட்டி மண்டபம் உண்டு. அதுக்குப்பின்னால் அப்படியே உட்கார்ந்த படியே டீ வீல படம் , படம் , படம் தான். போதாததுக்கு கிரிக்கெட் மாட்ச் இருந்தா கேக்கவே வேணாம்- நாளைக்குக் கார்த்தால மூடு இன்று மாட்ச் ரிசல்ட் பொறுத்துத் தான்.

இக்கால இளசுகளே- விழித்துக் கொள்ளுங்கள். நம் பாரம்பரிய பண்டிகைகளை முறைப்படி, அமைதியாக, சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்- எதற்க்காகவும் இவற்றை விட்டுக் கொடுக்காதீர்கள். பண்டிகை நாட்களில் லேப்டாப்பைத் திறக்காதீர்கள். டீ வீ போடாதீர்கள். குடும்பத்தாருடன் நிறைய பேசுங்கள். உறவினர் வீட்டுக்குச் செல்லுங்கள்.  நம் நாட்டில் சுதந்திரத்திலிருந்து, சம்பள உயர்வு  வரை எதுவுமே போராடமால் கிடைக்கவில்லை. இதற்க்கெல்லாம் அமைதியாக, அற வழியில் போராடுங்கள். அப்பத்தான் உங்க பிள்ளைகளுக்கும் இவையெல்லாம் மறக்காமல் இருக்கும்.

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்




  

Saturday, October 5, 2013

கேள்விக்கென்ன பதில்

'முளச்சு மூணு இலையும் விடலே.." - முகேஷின் குரல், உள்ளத்தை உருக்கி ஊடுருவி சிந்தனையையும் தூண்டுகிறது .

குழந்தைக்கு ரெண்டு வயசாகறத்துக்கு முன்னாடி, இன்னும் சரியாகவே பேசக்கூட வருமுன், வாரக்கடைசீல டீ வீ பார்த்து, வழக்கமான தூக்கத்துக்குப் பின் பெற்றோர்கள்அதன் முன்னேற்றத்தையும், வருங்காலத்தையும் நினைக்கலாம் என்று ஆரம்பித்து, கவலையில் முடிக்கிறார்கள். சில வாரங்களுக்குப் பின் அதை ஏதாவது ஒரு ப்ளே ஸ்கூல்ல போட்றதுதான் சரி என்று ஒருவர் சொல்ல, பின் இருவரும் ஒரு மனதாகிறார்கள். வீட்ல இருக்கற ஒரு பாட்டிம்மா மட்டும் எதுக்கு இவ்வளவு சீக்கிரம் ஸ்கூல்னு கேட்டா, அப்பத்தான் அதுக்கு நல்ல பழக்கங்களெல்லாம் வருங்கரா. குழந்தையோ எங்க தூங்கினால் என்ன, எங்கு விளையாடினால் எனக்கென்ன என்று விவரமரியாமல் வலையில் விழுகிறது. அப்ப ஆரம்பிக்கரது இதுகளோட ஓட்டம்.

 ஸ்கூலுக்குப் போனபின் அவனக் கேக்காமலேயே சாயங்காலம் ஸ்பெஷல் க்ளாஸ்- ஏன்னா, அப்பத்தான் முத ரேங்க் எடுக்க முடியும்- மாலை க்ரௌண்டுல விளையாடுற கிரிக்கெட் பாதி போச்சு

ரிபோர்ட் கார்டு வந்தால், ஏன் முதல் இரண்டு ரேங்க் எடுக்கவில்லை என்ற கேள்விக்கணைகள், அதைப் பிடிக்க இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமென்று மாத்தி மாத்தி உபதேசம்- பையன் மனசுக்குள் நினைச்சுப்பான் "இந்த உபதேசம் கேட்கற  நேரத்தில், இன்னும் சில 5 மார்க் கேள்விகளுக்கு பதில்கள் படித்திருப்பேன் என்று".

ஒன்பதாவதிலுருந்து, அவன் இதுவரை நழுவி ஓடிக்கொண்டிருந்த விளையாட்டுக்கு ஒரு முழு முற்றுப் புள்ளி. ஐ. ஐ.டி கோச்சிங், இஞ்சினீயரிங் கோச்சிங்னு காலைல அஞ்சு மணிலேர்ந்து ராத்திரி பன்னெண்டு மணி வரை குழந்தையை பெண்டு எடுத்தபின், ஒரு வழியாக அவன் பீ.ஈ சேர்ந்ததில்தான் எத்தனை த்ருப்தி.

அதை முடித்து பாங்க் மானேஜரோட சண்டை போட்டு அவன் கழுத்துவரைக்கும் லோன் வாங்கி அமெரிக்காவுக்குப் புடிச்சுத் தள்ளியாச்சு. எம். எஸ் முடிந்தவுடன், அவன் இந்தியா திரும்பி வருவானா என்ற சின்ன நப்பாசையை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி " அந்த கொழந்தை அத்தனை கடனை அடைக்க என்ன பண்ணும். அங்கதான் வேலை பாக்கணும்"னு சமாதானப் படுத்தியாச்சு.

கொஞ்சம் கடனை அடைத்த பின் பையன் மூச்சு விட்டு, அமெரிக்காவில் வாங்கிய காருக்கும், வாங்கப் போற வீட்டுக்கும் ஏத்தபடி சம்பாதிக்கும்  ஒரு ரோஸியையோ, ஜூலியையோ கல்யாணம் பண்ணிண்டாக் கூட இப்பல்லாம் ஒத்துண்டுடறா. ஒரு  ரெடி மேட் கொசுவப் புடவையுடன் அங்கே போய் , பாப் தலை மருமகள் கொசுவத்துடன் இருக்கும் போட்டோவை ஃபேஸ் புக்குல போட்டாத்தான் ஒரு த்ருப்தி.

ஆனா புள்ள என்ன சொன்னாலும், பேரப் பிள்ளை மேல் அவ்வளவு ஆசை இருந்தாலும் பெரியவர் மட்டும் கங்காதீஸ்வரர் சன்னிதி ஓட்டு வீட்டை விட்டு வர மாட்டேங்குறார் என்பதில் மாமிக்குக் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தும் அடுத்து வரும் ஆறு மாசத்தை எண்ணியே இந்த ஆறு மாசத்தை ஓட்டரது ஒரு சுகம்னு பேச ஆரம்பிச்சுருக்கா.

எல்லாம் நல்லாப் போயிண்டு இருக்கப்போ, அப்பாக்கோ அம்மாக்கோ உடம்பு முடியலைன்னா, குழந்தைகள் பதறிப் போயிடறது. உண்மையாகவே மனசு தவித்தாலும், உடனே ஒடி வர முடியல்லை- ஆபீஸ் வேலை, லீவு, வீஸா, டிக்கெட் என்று பல தொல்லைகள்.

ஆனால் ஊருல இருக்குறவாளுக்கு என்ன , ஆளாளுக்கு, வாய்க்கு வந்த படி பேசரா- "ஆமாம் ஊருலெ இல்லாத வேலை; எல்லாம் அந்த சட்டக்காரி கொடுக்குர ஸ்க்ரூ, அவன் இனிமே எங்க வரப்போறான்"னு- அந்தக் கொழந்தை மனசு பட்ற பாடு யாருக்குத் தெரியும்.

இவ்வளவு பேசராளே, அந்தக் குழந்தையோட ஒரே ஒரு கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமா.

"நான் பாட்டுக்கு தேமேன்னு , புரசவாக்கம் சன்னதித் தெருல கோலி விளயாடிண்டு இருந்திருப்பேன். என்னப் போய் வலுக்கட்டாயமாய் இரண்டு வயசுலேர்ந்து ஸ்கூல்ல போட்டு, எல்லாத்தையும் படிக்க வச்சு, அமெரிக்காவுக்கும் அனுப்பிச்சேளே. யாராவது ஒரு வார்த்தையாவது என்னைக் கேட்டேளா. நான் அப்பா அம்மா என்னென்ன சொன்னாளோ, அதைத்தானே செஞ்சேன்- அதுதானே படிச்சேன். அது தப்பா"

தெரிஞ்சாச் சொல்லுங்களேன் !




Friday, September 20, 2013

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு

பல வருஷங்கள் வெளி நாடு போய் திரும்பிய மகனை அம்மா பார்க்கும் இன்ப அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தேன். ஆம் . எவ்வளவு வருஷங்களாயிற்று ! நடுவில் ஒரு முறை பெங்களூரில் பார்த்த ஞாபகம். நான் சொல்வது பழைய எதிர் வீட்டில் குடி இருந்தவரையோ, மாமா புள்ளையையோ இல்லை!

நேற்று பனகல் பார்க் பக்கம் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியிருந்தது. சாயங்காலத்தில் தி நகருக்கு காரில் போவதை விட நடந்தே போகலாம். வழி நெடுக ஊர்ந்த பின் பார்க் பக்கத்தில் காரை நிறுத்த இடம் தேடுவதற்க்குள் எல்லோருக்கும் பசி வந்து சரவண பவன் சாப்பாடுடன் எதையும் வாங்காமல் திரும்பி வர மனமில்லாமல், ஆட்டோவைத் தேடினேன்.

அன்பாக ஊர்ந்து வந்து  120 ரூபாய் கேட்ட ஆட்டோக்காரரை ஒரு போலி அதிர்ச்சியுடன் பார்த்து ,பழக்க தோஷத்தில்  கூசாமல் 80 கேட்டு 100 ரூபாயில் உடன் படிக்கை ஏற்ப்பட்டு உட்கார்ந்து வண்டி கிளம்பியவுடன் தான் பார்த்தேன் அதை. "ஏம்பா, இப்பத்தான் மீட்டர் வந்துடுத்தே ஏன் அதைப் போடலை".

 "இது நாம் பேசியதுக்கு மேல் காட்டும்" என்று சொன்னவர் அத்துடன் நிற்க்காமல் மீட்டரையும் போட்டு "இதில் என்ன காட்றதோ அதையே கொடுங்க"ன்னார் அந்த நல்லவர்.

கொடியை மடக்கியவுடன், பளீரென்று உயிர் பெற்று, சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் மின்னிய மீட்டரைத்தான் அப்படித் தாய்ப் பாசத்துடன் பார்த்தேன். 25 ரூபாயில் ஆரம்பித்து ரொம்ப நேரம் அதிலேயே இருந்து, பிறகு 1.20 என்று படிப்படியாக முன்னேறி, எல்லா சிக்னலிலும் நின்று, அவ்வளவு கூட்டத்தில் ஊர்ந்த பின்னும், பனகல் பார்க் அடையும்போது காட்டியதென்னவோ 69.20 தான். எழுபது ரூபாயை வள்ளல் போல் நான் கொடுத்தவுடன் மறுபேச்சு பேசாமல் ஆட்டோ நகர்ந்ததை நம்பவே முடியவில்லை. சென்னையிலா ஆட்டோக்காரர் மீட்டர் போட்டு, இறக்கி விட்டவுடன் அதிகம் கேட்காமலா !!!

வந்த காரியத்தை முடித்தவுடன் திரும்பி வர ஆட்டோ தேடும்போது, மந்தைவெளின்னவுடன் முகத்தைத் திருப்பிண்டவர்கள் சிலர்.

ஒருவர் தயங்காமல் 150 கேட்டார்- "ஏன் மீட்டர் என்னாச்சு" என்று வந்த தைரியத்தில் நான் கேட்டவுடன் "அந்த வண்டில மீட்டர் இருக்கு போங்க" என்று உதவினார்.

மீட்டர் வைத்த மற்றொருவர் கொஞ்சம் பேசியபின் மீட்டருக்கு மேல் போட்டுக் குடுங்கன்னார். சரி மீட்டர் இருப்பதை ஒத்துக்கறார்ன்னு ஒரு சந்தோஷத்தில் "பத்து ரூபாய் மேல தரேன்னதும்" மீட்டரை போட்டு வண்டி நகர்ந்த பின் ஒரே புலம்பல் - "கொஞ்சம் கூட யோசிக்காம மீட்டர் போட்டுட்டாங்க சார். கட்டுப் படியே ஆகலை. நீங்கள்ளாம் ஒங்க பசங்களைப் படிக்க வச்சுட்டீங்க. நாங்க என்ன சார் பண்றது. வர வருமானத்தில அரிசியும் வாங்க முடியலை....." ஆட்டோவில் உள்ளே பார்த்தால், ரேடியோ, மணி மணியாய் சீரியல் செட் விளக்குகள் என்று ரதம் போலிருந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு மூலையில் தெரிந்தது அரசு வழங்கிய ரேட் அட்டை. வீடு திரும்பியவுடன் மீட்டர் காட்டிய 73 க்கு பதில் எண்பது வாங்கிக் கொண்டு அத்ருப்தியுடன் சென்றார்.

உண்மையிலேயே இவ்வளவு வருஷம் கழித்து சென்னை ஆட்டோக்களில்  மீட்டரைப் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்தது. அதை உபயோகிக்கவும் ஆரம்பித்து விட்டதில் பெரு மகிழ்ச்சி. இதற்க்காகப் பாடு பட்ட பல நிறுவனங்களுக்கும், பொது நலக் குழுக்களுக்கும், முக்கியமாக அரசுக்கும் ஒரு ஷொட்டு குடுத்தால்தான் நியாயம்.

ஆனால் இந்தச் சவாரி அனுபவத்தில் ஒரு கவலையும் வந்தது -  இது எவ்வளவு நாள் என்று- மீட்டர் போட மாட்டார்கள், போட்டாலும் ஜாஸ்தி கேட்பார்கள்... எல்லோரையும் த்ருப்திப் படுத்துவதும் கடினம்தான். எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள். இல்லே இதுவும் கொஞ்ச நாள் தானோ என்று.

இந்தக் கலியில், இன்று என்ன நடப்பதோ அதை அனுபவிப்பதே சிறந்தது என்று காலையில் வேளுக்குடியார் சொன்னதை நினைவில் வைத்து நகர்ந்தேன்



Saturday, August 17, 2013

நம்பிக்கை - சிறுகதை

என் இரண்டாவது தமிழ்ச் சிறுகதை "நம்பிக்கை"  இன்று www.sirukathaigal.com என்ற தளத்தில் ப்ரசுரிக்கப் பட்டது.

Saturday, August 3, 2013

கர்நாடகா சுற்றுலா - 2013

"ஆயிரம் கனவுகள் காண்கிறேன், அனந்த கோடி கற்பனைகள் செய்கிறேன்...".

நான்  கண்ட வெகு நாள் கனவான ஒரு கர்னாடகச் சுற்றுலாவுக்கு ஸ்ரீ ஜானகி டூர்ஸ் வழியாக ஒரு நல்ல விடிவு பிறந்தது. எந்த ஒரு கனவுக்கும் வரும் தடங்கல்களைத் தாண்டி 35 பேர் கொண்ட குழு ஜூலை 26ம் தேதி சென்னையிலிருந்து பயணப்பட்டது. ஆரம்பமே டென்ஷன்தான்- இருவர் ரயில் கிளம்பியவுடன் ஒடி வந்து ரன்னிங்கில் ஏறி ரொம்ப நேரம் ரயிலுடன் சேர்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள். சில ஆரம்ப கால தனிமைக்குப் பிறகு குடும்பங்கள் ஒன்று சேரத் தொடங்கின.

அமைப்பாளர்களின் அருமையான சாப்பாட்டுடன் ஆரம்பித்த பயணம் சின்ன மழைத்துளிகளுடன் தொடர்ந்தது மறுநாள் காலை மங்களூர் வரை. ஒரு அவசரக் குளியலுக்குப் பின் ஆரம்பித்த முதல் தரிசனம் 'கெட்டீல் துர்கா தேவி'. நுழைவாயிலில் அசுர வேகத்துடன் பாய்ந்தோடும் ஆற்றை ஆச்சர்யத்துடன் கடந்தால், கோவிலுள்ளே சாந்தமான அம்மன்.
Ketteel Durga Parameswari Temple

அந்த ஊரின் சிறப்பான உப்பீட்டுடன் (நம்மூர் உப்புமாதான்!)ஒரு சிற்றுண்டிக்குப் பிறகு 'ஹொஸ நாடு அன்ன பூரணி' கோவில். விட்டு விட்டு வந்த மழையுடன் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே போனால் அழகான பூங்காவுடன் ஒரு கோவில். பெரி....ய ஆஞ்ச நேயருக்கு வணக்கம் சொல்லி நகர்ந்தால்  தங்க அன்னபூரணி கையில் கரண்டியுடன் நமக்கு என்றும் அன்னம் கொடுக்கத் தயாராக நின்றாள். அந்த தங்கச் சிலையைப் பார்த்தபின் எப்படி வரும் பசி?
Hosanadu temple entrance

லேசான மழையுடன் பயணித்து, உடுப்பி க்ருஷ்ணனை பார்க்குமுன் அங்கு அமர்ந்து எதையுமே கண்டு கொள்ளாமல் பாடிக் கொண்டே பூ தொடுக்கும் முதிய பெண்களைக் கண்டால் யாருக்குமே சொல்லாமல் பக்தி வரும். குட்டி க்ருஷ்ணனை ஒரு சிறு ஜன்னல் வழியாக சில செகண்டே பார்க்க முடிந்தது. திருப்பதி ஜரகண்டியைப் போல் இங்கும் போலீஸ்காரிகள் கன்னடத்தில் ஏதோ சொல்லி தள்ளிவிட்டார்கள். க்ருஷ்ணர் சன்னிதிக்குப் பிறகு பெரிய வரிசை உள்ள இடம்- இலவச உணவுக் கூடம். ஆனால் சும்மா சொல்லக் கூடாது- கூப்பிட்டு, வற்ப்புறுத்திச் சாப்பிடச் சொல்கிறார்கள்- நாங்கள் தான் நேரம் கருதி சாப்பிடவில்லை.

கோவிலிலிருந்து எங்கள் பஸ்ஸுக்கு வருவதற்க்குள்  பேய் காற்றுடன் ஒரு பெரு மழை அடித்து எங்கள் குடைகளை நிலை குலையச்செய்து, ஐந்து நிமிடத்துக்குள் தொப்பலாக நனைத்தன. கோவர்தன  மலை ஒன்று தான் எங்களை நனையாமல் காத்திருக்கக் கூடும்- ஆனால் மானிடச் செருக்கில் மான் மார்க் குடையை நம்பி யாரும் கண்ணனை அழைக்காததால், அவரும் வரவில்லை.

அடை மழையில் ஒரு சூடான சாப்பாட்டுக்குப் பிறகு அரைத்தூக்கத்தில் கும்பாஷி வினாயகர் கோவிலடைந்தோம். நவீனக் கோவில், அழகான பிள்ளையார், அமைதியான தரிசனம்.

ரொம்பக் கேள்விப்பட்டு எதிர் பார்த்த 'முருடேஷ்வரா சிவன் கோவில்' ஏமாற்றவில்லை. முதலில் ஒரு பதினெட்டு மாடி கோபுரத்துக்குள் லிஃப்டில் ஏறினால், கண் கொள்ளா காட்சி- சுருண்டோடிவரும் அலைகள் ஒரு பக்கம். இன்னொரு புறம் ஒரு ஓங்கி உயர்ந்த சிவன் சிலை- பார்க்கவே ப்ரமிப்பாகவும் ஒர் மயிர்கூச்செரிதலும் இருந்தது.  பின் ஒரு ஐந்து நட்சத்திர வசதி போல் உள்ள அறையில் நுழைவு. இங்கெல்லாம் சீக்கிரமே ஹோட்டல்கள் மூடி விடுவதால் முதலில் டின்னரை முடிக்க ஏற்ப்பாடு- இங்குதான் ஜானகி டூர்ஸின் அனுபவம் தெரிந்தது. டின்னர் சாப்பிட்ட ஹோட்டல் கடலைப் பார்த்து, அலை மேல் உள்ள ஒரு பால்கனியிலிருந்ததால், அங்கு பல அயிட்டங்கள் இல்லையென்று சொன்னதையும் மக்கள் பொருட்படுத்தவில்லை. திரும்பி வந்து நிதானமாக ஹோட்டல் அறையைப் பார்த்தால், பால்கனிக்கு அடியில் வந்து கடலலை தொட்டுத் தொட்டுச் சென்றது. ஓவென்று இரைச்சல் வேறு- சென்னைவாசிகளுக்கு சுனாமி ஞாபகம் வந்தவுடன், அங்கிருந்தவர்கள் அவசரமாகச் சொன்னார்கள் அரபிக் கடலிலில் சுனாமி வராதென்று (அப்படியா?). எது எப்படியோ, இருந்த களைப்பில் 'அந்த அரபிக் கடலோரம் ' படுத்ததுதான் தெரியும், மறு நாள் காலை 3.45 அலாரத்துக்குத்தான் எழுந்தோம்.
Murudeshwara Temple









விடிகாலைப் பொழுதில் அறைக் கதவைத் திறந்தவுடன்  ப்ரம்மாண்டமான சிவ தரிஸனம். இந்த ஒரு ஏற்ப்பாட்டுக்காகவே ஜானகி டூர்ஸுக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம். விடிய விடியப் பயணித்து கொல்லூர் அடைந்த போது, மழை எங்களுடன் ஒட்டிக் கொண்டது. இதுவரை சீக்கிரம் கிடைத்த தரிசனத்தாலோ என்னவோ, அம்மன் கொஞ்சம் காக்க வைத்து பின் நல்லாசி புரிந்தாள். அங்கிருந்து தொடங்கிய பயணம் எங்களை மிகவும் சோதித்தது- மோசமான பாதை, கடுமையான மழை, எதிரில் வரும் எந்த வண்டியும் ஹார்ன் அடிக்கக் கூடாது என்று சபதம் போலும், தூங்க விடாமல் வயிற்றில் புளி கரைந்து கொண்டே இருந்தது. ஒரு சிலருக்கு காலையில் லபக்கிய பூரியும், வடையும் புளிப்பு மிட்டாய்களைத் தேடி நடு நடுவே வண்டி கொஞ்சம் ' நிப்பாட்டுங்கப்பா'க்கப்புறம், ஊர்ந்துதான் போனது. கர்னாடகா போர்டுகள் வேறு சிருங்கேரி இன்னும் 70 KM என்று காட்டி கொஞ்ச நேரத்துக்கப்புறம் 72 KM காண்பித்து படுத்தியது. அடிக்கடி கடக்கும் எல்லா ஆறுகளும் வெள்ளப் பெருக்கில் இருந்ததை தமிழ் நாட்டவர்கள் மிட்டாய்க் கடை போல் பார்த்தார்கள். ஆனால் இன்னமும் கர்னாடகா தண்ணீர் தர மாட்டேன்னு சொன்னா வேறு எதோ உள் குத்து தான் என்பது நிதர்சனம்.

ஒரு வழியாக முக்கி முனகி 2 மணிக்கு ஸ்ருங்கேரி வந்தால் கோவில் சாத்தி விட்டார்கள்- அதனால் என்ன என்று இலவச அன்ன தானக் கூடத்துக்குள் நுழைந்து விட்டோம். ஒரு பெரீரீரீய.... ஹால்- மொத்தம் 2000 பபேர் சாப்பிடலாமாம். தட்டுக்கள் அலம்பி அடுக்கி இருந்ததைப் பார்க்கவே காணக் கண் கோடி வேண்டும். உட்கார வைத்து, தட்டு வைத்து சுமார் இரண்டு அடி மேலிருந்து முதலில் பாயஸம் பரிமாரினார்கள் - ம்ஹூம் - போட்டார்கள். பின் நான் ஒரு நாள் முழுதும் சாப்பிடக் கூடிய அளவு சாதம், முதலில் ரஸம், அப்புறம்தான் சாம்பார், அதன் பின் மோர்- ஆம் எல்லாம் துரித கதியில் யாரும் பேசாமல் சாப்பிட வேண்டும். காய் கிடையாது. எங்கள் குழுவில் உள்ள முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் (அடியேனையும் சேர்த்துத்தான்) கொண்டு சென்ற மிக்ஸர், சிப்ஸ், ஊருகாய்கள் போன்றவை கை கொடுத்தன. கை அலம்பும் போது, வரும் எல்லோருக்கும் சோறு போடும் அந்த உள்ளங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
Srungeri
Plates waiting to Serve










பின் துங்கபத்திரை நதியில் கால் நனைத்து, ஆமை உள்ள இடத்தையும் பார்த்தவுடன் கோவில் திறந்து அழகிய சாரதாம்பாளின் தரிசனம். ஒரு சூடான டீக்குப் பிறகு தர்மஸ்தலா. முருடேஷ்வராவில் உள்ள ஹோட்டலுக்கு இங்குள்ளது கொஞ்சம் ஏமாற்றம் தான் அளித்தது, ஆனால் அதன் காரணம் மறு நாள் தான் புரிந்தது.
Dharmasthala

வழக்கம்போல் மறுநாள்  காலை 3:30 மணிக்கு எழுந்து கிளம்பல்- மழை விடாமல் எங்களுடன் வந்தது. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை தர்மஸ்தலாவில் சில சமயங்களில் திருப்பதி போல் கூட்டம் வரும் என்று- அங்கு செய்திருந்த ஏற்ப்பாடுகள் அதைக் குறித்தன. ஆனால் நல்ல காலமாக அன்று கூட்டமில்லை. எங்கு பார்த்தாலும் தர்மச் சத்திரங்கள்- மக்கள் தங்க. அப்புறம் எப்படி ஹோட்டலைத் தேட. சூப்பர் டிபனுக்கப்புறம், சுப்ரமண்யா.
Subrahmanya

 கொஞ்சம் விட்ட மழை தரிசனம் பெய்யும் பொழுது ஒரு கொட்டு கொட்டி தீர்த்தது. மக்கள் இந்த ஊர்ச் சிறப்பான காபிப் பொடிக்கு விரைந்தனர்- நமக்கு எப்பவுமே லியோதான். அதன் பின் போன கதிரியில் (ஆம் சாக்ஸஃபோன் இடம் தான்) ஒரு அழகான, சுத்தமான கோவில். கதவுகளில் வெள்ளியில் அருமையான வேலைப்பாடு - "போட்டோல்லாம் எடுக்கக் கூடாதுங்க...". கோவிலுக்கு மேல ஒரு மலை- அதில் உள்ள சிவலிங்கத்துக்கு நாமே அங்கு வரும் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
Kadri

அதற்க்குபின் பார்த்த குத்ரோலி கோகர்ணா - ஒரு ஐந்து நக்ஷத்ரக் கோவில் - அவ்வளவு சுத்தம், அவ்வளவு அழகு, அவ்வளவு வேலைப்பாடுகள்.
Kudroli Gokarna

மங்களூர் மங்களாம்பிகையைத் தரிசித்து எங்கள் சுற்றுலாவை இனிதே முடித்தோம்.

கண்ணில் பட்டதும், பிடித்ததும்:
  • எல்லா கோவில்களிலும் தீர்த்தமும், சந்தனமும்
  • உண்டிகள் நிறைய இல்லை- காசும் கேட்பதில்லை
  • பல கோவில்களில் கழிப்பறைகள் படு சுத்தம்
  • வெல்லம் போடாத சாம்பார், ரசம் கிடைக்கும் ஹோட்டல்கள் பல உள்ளன  
  • எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளில் தண்ணீர் நிற்ப்பதில்லை
  • அனேகமாக எல்லாக் கோவில்களுமே நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன
  • சுலபமாகச் சிரிக்கிறார்கள்
  • குழுவிலுள்ள சிலர் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது வாங்கினால் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்ததில் சில உண்மையான உள்ளங்களை அடையாளம் காண முடிந்தது
அமைப்பாளர்கள் ஜானகி டூர்ஸைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது:
  • எல்லா இடங்களிலும் சிறப்பான ஏற்ப்பாடு .
  • முதல் நாள் வீட்டுச் சாப்பாடு, எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து கவனிப்பு.
  • ருசியான ஊருகாயும், புளிக் காய்ச்சலும் கொண்டு வந்த அவர்களின் அநுபவத்தினால் செய்த முன்னேற்ப்பாட்டை பாராட்டியே ஆகவேண்டும். 
  • ஒரு கோவிலுக்குப் போகுமுன் அதன் தல வரலாற்றை டேப்பில் போட்டுக் காண்பிப்பது நல்ல உபயோகமான உத்தி.
  • கண்டிப்பாக இவர்களின் அனுபவத்தால் ஒரு அரை நாளாவது சேமித்திருப்போம்.
எனக்கென்னவோ  இவர்கள் காசுக்கு மட்டுமே இதைச் செய்யவில்லை என்று தோன்றுகிறது. அதை மீறி ஒரு ஆசையும் தெரிகிறது

குறையே இல்லையா எனலாம். யாரிடம் தான் குறை இல்லை. சிலவற்றை இன்னும் நன்றாகச் செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் . இவ்வளவு நிறைவாகச் செய்தவர்களுக்கு சிறு சிறு குறைகளை வெகு சுலபமாக நிறைவாக்கத் தெரியும்.

குழுவில் உள்ள 33 பேரும் ஸ்ரீ ஜானகி டூர்ஸின் உரிமையாளர்களான ரமேஷ், ப்ரியா தம்பதியர்களை வாழ்த்தியதில் மிகையே இல்லை.

இந்த ஐந்து நாட்களில் கர்னாடகத்தின் பன்னிரெண்டு  ப்ரதான கோவில்களைப் பார்த்ததில் எனக்கு வந்து சேரும் புண்ணியத்தில் நிச்சயம் அவர்களுக்கும் பங்கு உண்டு !

Sunday, July 14, 2013

தந்திக்கு ஒரு பாட்டு


தந்திக் கம்பிகளில் தத்தித் தாவி வரும்  ஒரு செய்தித் துறைவழி இன்று நாள் குறிக்கப் பட்டு, அது குற்றுயிரும், குலையுயிரும் அல்லாமல் நன்றாக சுகமாகவே தன் முடிவை எதிர் நோக்கி உள்ளது. ஆக்கியவன் அழிப்பதில் என்ன குறை இருக்கிறது. இதற்க்கு ஏன் இப்படிப் புலம்புகிறார்கள்? வில்லன் வயதாகி விட்டாலோ, கதா நாயகன் பொலிவிழந்து விட்டாலோ விலகத் தானே வேண்டும்?

தந்திக்கான பயம் போய் ரொம்ப நாளாச்சு. முன்பெல்லாம், இரவு நேரத்தில் எதிர் பாராமல் கதவு தட்டப்பட்டால் வீடே விழித்துக் கொள்ளும். உடனே உறவில் உள்ள அனைத்து பெரியவர்களின் ஞாபகமும் வரும்.

என் முதல் ஞாபகம் - என் அப்பாவுடன் கச்சேரி ரோட் தந்தி ஆபீஸ் போய் என் அக்கா புஷ்பவதியான செய்தியை உறவினர்களுக்கு விரைந்து கம்பி வழியாகத் தெரிவித்து, ஆங்கிலத்தில் ஒரு புது வார்த்தையும் கற்றுக் கொண்டது. ஆம் அப்பல்லாம் அதை விழாவாகக் கொண்டாடும் காலம்- இப்பல்லாம் பெண்களே கையில் கம்பை எடுத்துக்   கொள்வார்கள். பின் என் உறவினரின் அகால மரணத்துக்கு நடு இரவில் தி. நகர் ஆபிஸில் "கார்த்தாலைக்குள்ள போய்டுமா ஸார்".  நன்றாக இருக்கும் நினைவு என் சகோதரன் தனக்குப் பிறக்கும் குழந்தை பற்றிய செய்திக்கு வழி மேல் விழி வைத்துக் இரவெல்லாம் சாக்லேட்டோடு காத்துக் கொண்டிருந்தது. அதென்னமோ தெரியாது- இப்படிப்பட்ட செய்தியெல்லாம் நடு ராத்திரியில்தான் தந்தி மூலம் வரும்.

மொபைல் என்ன, வீட்டுக்கு டெலிபோனே இல்லாத காலமது. கொஞ்சம் கொஞ்சமாக டெலிபோன்களும், செல்களும் வந்த பின்னும், பிடிவாதமாக அரசுத் துறைகளும், வங்கிகளும் தந்தியை விடாமல் பிடித்தாலும், விஞ்ஞானத்தின் அசுர வேகத்துக்கு இடம் கொடுக்க முடியாமல் தந்தியின் இறுதி நாட்கள் அப்பொழுதே தெரிய ஆரம்பித்தன. ஆனால் எப்பொழுது நம் இளையவர்கள் குறுஞ்செய்திகளுக்கு தந்தி பாஷை உபயோக்கிக்க ஆரம்பித்தார்களோ, அப்பொழுதே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும், தந்தி மறைந்தாலும் அதன் அடுத்த வாரிசு உருவாகிக் கொண்டிருக்கிறது என்று.

வளர்ந்து வரும் முன்னேற்றத்துக்கிடையே உணர்ச்சிகளுக்கு இடம் கிடையாது.  எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும்- அது மின் விசிறியோ, ஸ்கூட்டரோ, நாமோ, சச்சினோ, கவாஸ்கரோ, கபிலோ - களத்திலுருந்து மறைந்துதான் ஆகவேண்டும்.

அது போலவே, நம் பலரிடையே பல வருடங்கள் வாழ்ந்தும், இக்கால மக்கள் பலருக்குத் தெரியாமல் இருந்தும், நற்பணி புரிந்த தந்திக்கு, இது நாம் விடை கொடுக்க வேண்டிய நேரம் தான்.  இது காலத்தின் கட்டாயமேயொழிய  வேலையில் குறைபாடுகளினால் அல்ல.

யாராவது மறைந்து விட்டால், வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள் - மறைந்தவரே வந்து அந்த வீட்டுக்குக் குழந்தையாகப் பிறப்பார் என்று.

மறைவதற்க்கு முன்னே மறு அவதாரமாக வந்த  தந்தியின் இரட்டைக் குழந்தைகள் தானோ - ஈ மெய்லும், எஸ். எம். எஸ்சும்?

தந்தி தன் அவசரத்தை காட்டி விட்டதோ?


Friday, July 5, 2013

கண்ணீர் விட்டோ வளர்த்தோம்

இன்று காலை மெரினா நடைப்பயிர்ச்சியின் போது ஒரு காட்சி. ஒரு முதியவர் கையில் ஒரு முழு ரொட்டியுடன் வந்து உட்கார்ந்து, அங்குள்ள நாய்களுக்கு பிச்சு பிச்சு போட ஆரம்பித்தவுடன். மெதுவாக காகங்களும் கூடின. சற்று தள்ளி கண்ணை பாதி மூடி, கை நீட்டியபடியே உட்கார்ந்திருந்த இன்னொரு முதியவர் இதன் சப்தத்தைக் கேட்டு , உடனே எழுந்து ஓடி வந்து ஒரு ரொட்டித் துண்டைத் தானும் வாங்கிக் கொண்டு போனார். காக்கை, நாய் கூட்டத்துடன் போட்டி போட்டு ஒரு மனிதனும்  சாப்பாட்டை வாங்கிய அந்தக் காட்சி என்னை வேதனைப் படுத்தியது - அப்படி முதன் முதலாக ஓடி வரும் பொழுது அந்த மனிதனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்று நினைத்தால் " தனி மனிதனுக்கு . .... ." . என்று பாடிய முண்டாசு கவி மனக் கண் முன் வந்து போனார்.

அப்படிப்பார்த்தால் நாம் எல்லோருமே எதற்க்காகவோ கையேந்திக் கொண்டுதான் இருக்கிறோமோ?

நேற்று தொலைக் காட்சியில் ஒரு கிராமம் எப்படி ஒரு குடம் தண்ணீருக்கு அவதிப்படுகிறது என்று காட்டினார்கள்.

தினம் தினம் நாமே மின்சாரம் கிடைக்கப் பல தவங்கள் செய்கிறோம்.

சுதந்திரம் வாங்கிய உடன் என்ன கனவுகள் கண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால்,

கிலோ தக்காளி ஐம்பது ரூபாய் விற்க்கிறது. கறிகாய் வாங்கி இனாமாகக் கொடுக்கப்பட்ட தேங்காய் பத்து ரூபாயாம். ஓசிக்கு வாங்கின ஒடச்ச கடலை பத்து ரூபாய்க்கு மேல்.  ஒரு ரூபாய்க்கு எந்த மரியாதையும் இல்லை. குடிக்கும் தண்ணியை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கு.

முன்னேற்றம் இல்லாமல் இல்லை - வீட்டில் கிடக்கப் பிறந்தவர்கள் என்றழைக்கப் பட்ட பெண்டிரும் அலுவலகம் போகிறார்கள், புருஷனுக்குப் பின்னும் வீடு திரும்புகிறார்கள். இருபதுக்கும் முப்பதுக்கும் பாக்கெட் பால் வாங்கும் இவர்களுக்குத் தாய்ப் பாலின் அருமையும் தெரிவதில்லை. குழந்தைகளுக்குக் காவலிருந்த பெரியவர்கள் முதியோர் இல்லத்தில், பிறந்த குழந்தைகள் க்ரெச்சில் - இருவருக்குமே கவனிக்க ஆளில்லாததால் ! வீட்டைக் காக்க  நாய் வாங்கி வெளியூர் போகும் போது அதற்க்கும் க்ரெச்சுத்தான்.

 இப்படி ஒரு புறம் இருக்க , இன்னும் சிலர் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள்.  ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய் பறக்கிறார்கள். அந்தந்த அரசாங்கமோ ஐந்து வருடங்களுக்கொரு முறை இவர்களைப் பற்றி கொஞ்ச நேரம் கவலைப் பட்டு பின் மறக்கிறது.

ஏழைகளை கவனிக்காமலில்லை- பல சலுகைகள், பல முன்னுரிமைகள், பல வசதிகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தும் போதவில்லை. எடுத்துச் சொல்ல ஆளுமில்லை- ஏனென்றால் அவர்களெல்லாம் முதியோர் இல்லத்தில் !

சுதந்திரத்துக் முன் என்ன இருந்ததாம்: கட்டுப்பாடு (அன்னிய?), கலப்படமில்லா பண்டங்கள், நற்க்கல்வி, கொஞ்ச படிப்புக்கும் சொல்லத் தயங்காத வேலை, வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த உதவிய விலைவாசி, நல்ல சுகாதாரமான  சுற்றுப்புற சூழ்நிலை, இருப்பதைக் கொண்டு வாழும் மன நிம்மதி.

எதற்க்குப் போராடினோம்: தேவையில்லா அன்னிய தலையீடு

கிடைத்தது - சுதந்திர பூமி, சில வருட சுத்த அரசியல் மற்றும் தலைவர்கள்

வேண்டாமல் கிடைத்தது: எல்லாவற்றிலும் அரசியல், சாதிப் ப்ரச்சினைகளை ஊதிப் பார்ப்பவர்கள், லஞ்சம்

இழந்தது:  நிஜ பேச்சுரிமை- உண்மையைப் பேசினால் எங்கிருந்து குரல் வரும் என்று தெரியாது, ஆனால் வரும்.

சில நிஜத் தலைவர்களால் நாடு உண்மையிலேயே முன்னேறியது- தொழில் நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவம், உயர் கல்வி, தொலை காட்சி, கை பேசி, கணினி போன்றவற்றால் உலகமே சுருக்கப் பட்டது

புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தில்  நாடே மயங்கும் பொழுது, சிறுசுகளைக் கேட்கவா வேண்டும். கல்லூரிக்கு வரும் பொழுது கையில் புத்தகம் உண்டோ இல்லையோ, கைபேசி நிச்சயம் உண்டு. என்னது? யார் சொன்னார்கள் அதெல்லாம் தடைப் பட்டவை என்று. இவையெல்லாம் போக இடைப் பட்டதுதான் கல்வியும், கல்லூரியும் !

இப்பெல்லாம் இளைஞர்கள் சினிமா பார்க்கக் கட் அடிப்பதே இல்லை. எதற்க்கு அதெல்லாம். அது தான் 24 மணி நேரமும் தொலை காட்சியில் பார்க்கலாம். இல்லேன்னா மடிக் கணினியில் பார்க்கலாம். அவசரமென்றால் கைபேசியிலேயே பார்க்கலாம் - விஞ்ஞானம் !

படிப்பு வருகிறதோ இல்லையோ, வயசுக்கேத்த விவரங்கள் வர வர சீக்கிரமே தெரிய வருகிறது- உபயம் சுதந்திர இந்தியாவின் முற்ப்போக்குப் பார்வை.  தொலைக் காட்சியில் தெரிவது  எல்லாம் அருகாமையிலே வந்து விடுகிறது. இந்த படிக்கும் நேரத்தில்தான் எத்தனை கவனச் சிதறல்கள் .

எல்லாவற்றையுமே கேள்வி கேட்கும் மனப்பான்மை. எதையுமே ஒத்துக்கொள்ளாத நிலை - குறிப்பாக பெரியவர்கள் . இலை மறைவு காய் மறைவு என்பது மறைந்து போனதால் காதலும் கத்தரிக்காயும் தானே வந்து ஒட்டிக் கொண்டது. சம உணர்வு, பாகுபாடில்லா சமுதாயம் என்று ஏதேதோ சொல்லி எல்லாவற்றையும் உதறி, ஒன்றும் தெரியாத சில அப்பாவிகள் இடியாப்பச் சிக்கலில் மாட்டி, செய்வதறியாது தவித்து  உயிரையும் விடுகிறார்கள்.

இவ்வளவு இருந்தும் படிக்கிறார்கள் - சாதிக்கிறார்கள்- சம்பாதிக்கிறார்கள். ஆனால், சம்பாத்யம் வந்தவுடன் மறந்து விடுகிறார்கள். தன் பெற்றோரை, நடந்து வந்த பாதையை, தன் கடமைகளை, தன் நாட்டையும் ! கையில் கரன்சி வந்தவுடன் உலகமே வேறாகத் தெரிகிறது- எல்லாமே அலம்பி விட்ட மாதிரி இருக்கு.

காசு வந்தவுடன் கண் மூடிப் ப்ரார்த்தித்தால் பரவாயில்லை- அனுபவித்தால் பரவாயில்லை- கண் மூடித்தனமாக் நடக்கிறார்கள். காசுக்காக வந்த கும்பலும் கை கூட,  புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், வயசுக்கேர்ப்ப மயங்குகிறார்கள். அளவு கடந்து ஆபத்தைத் தாண்டும் பொழுது வரும் அறிவுரைகளயும் புறக்கணிக்கிறார்கள் - மயக்கத்தால்.

தேவையில்லாச் செலவு, அளவுக்கு மீறிய ஆசை, இன்றே அனுபவித்தாக வேண்டிய நிர்ப்பந்தங்கள் - நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கிறது- காசு உள்ளவரை. முன்பெல்லாம் வேலைக்குச் சேர்ந்தால் ரிடயர் ஆகும் வரை அது தான் வேலை. ஆனால் இப்புதிய  நாட்டில் அதெல்லாம் கிடையாது. இரண்டு வருஷத்துக்குமேல் வேலை மாற்றாதவன் இவர்கள் பாஷையில் ஒரு (அப்)பாவி.

இப்படி 'சரிகமப" என்று சந்தோஷமாக ஓடி கொண்டிருந்த சங்கீத வாழ்க்கையில் அடுத்து வருவது - 'ரி'- ரிசஷன், ரிட்ரென்ச்மென்ட் எல்லாம். இந்த 'ரி' யை எதிர்பார்க்காததால், எல்லா சந்தோஷங்களும் ரீவைண்ட்தான் பண்ண முடிகிறது - மனக் கண்ணில். சேமிப்பு இல்லை, சில சௌகர்யங்களுக்கு அடிமைப் பட்டாயிற்று ஆனால் முடியவில்லை, ஈ ம் ஐ தொண்டையைபிடிக்க, நெஞ்சு வலிக்கிறது. எழுந்து பார்த்தால் ஐ. சீ. யூ தான்

என்ன ஆயிற்று? எங்கு தடம் புரண்டோம்? எந்த பருவத்தில் தடம் புறள்கிறோம்? மாணவர்களாகவா, இளைஞர்களாகவா, படித்தவர்களாகவா, பிள்ளைகளாகவா, இந்தியனாகவா?

எது சுதந்திரம் ? எதற்க்கு சுதந்திரம்? இதற்க்கா சுதந்திரம்?

பின் குறிப்பு: இது தொலைகாட்சியிலும், செய்தித்தாள்களிலும் சில நாட்களாக வந்த சில செய்திகளை அறிந்து,  மனம் கலங்கி , குழம்பி  பின் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத, மனம் போன போக்கில் ஒரு ஆதங்கத்தில் எழுதிய கட்டுரை. புரிந்தவர்கள் தோள் கொடுக்கலாம்- உடன் நடக்கலாம், மற்றவர்கள் நகரலாம்.

Friday, June 7, 2013

ஒரு ப்ரதோஷ நாளில்

ப்ரதோஷ காலத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் அங்கு ஈசான்ய மூலையில் ப்ரதோஷ ஸ்வாமியிடம் ஆசி வாங்கி வருவது, சில வருஷங்களாக எனக்கு வாடிக்கையாய்ப் போன சமாச்சாரம். ஆனால் எனக்குப் பலர் பல விதமான கோவில்களிலிருந்து  ப்ரதோஷ அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்கள்- குறிப்பாக சுருட்டப்பள்ளி போன்ற கோவில்கள் ப்ரதோஷத்துக்கே ப்ரசித்தி பெற்றது. அதனால் வெகு நாட்களாக ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அது " ஸ்ரீ ஜானகி டூர்ஸ்" வழியாக அமைந்தது.

நேற்று (6.6.2003), நாலு மணிக்கு எழுந்து அவசரமாகக் கிளம்பி லஸ்ஸில் உள்ள ஆபீஸ் வாசலுக்குப் போனால், காத்திருந்தது இரண்டு ஏ.ஸி வண்டிகள். ஓவ்வொத்தராகச் சேர்த்துக் கொண்டு முதல் கோவிலான "மெய்ப்பேடு" சென்றடைந்தபோது மணி 10. பழைய கோவில், யாருமே இல்லை, வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இளம் குருக்கள், 'எனக்கென்ன தெரியும்' என்பது போல் பார்த்து, தீபாராதனை காட்டி அனுப்பினார். ஆமாம் பாவம் அவர் என்ன "கஸ்டமர் சர்வீஸ்" பற்றிய பயிற்ச்சியா எடுத்திருக்கிறார். அங்கேயே வாசலில் ப்ரேக் ஃபாஸ்ட் முடித்துக் கொண்டு, அடுத்த ஊர் "கூவம்" பறந்தோம்.

வழியில் சில பச்சை வயல்கள், நாம் சென்னைக்கு அருகாமையில் தான் இருக்கோமா என்று சந்தேகிக்க வைத்தது. சில அக்ரஹாத்தெருக்கள், திண்ணை வீடுகளைக் கடந்தால் தெரிந்தது பெரிய கோவில். அருகில் அருமையான குளம், வற்றவே வற்றாது என்றார்கள் . இங்கிருந்து தான் சென்னை வரை வரும் கூவம் வருகிறது என்றார்கள்- எது உண்மையோ அந்த திரிபுராந்தக ஸ்வாமிக்கும், திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் தான் வெளிச்சம். 1921ம் வருஷத்து மணி கோவிலின் பழமையைக் காட்டினாலும், புதிதாகப் பெயின்ட் அடிக்கப் பட்ட வாகனங்கள் கோவிலுக்கு கவனிப்பார் இருப்பதைச் சொல்லியது.

அடுத்துச் சென்ற பேரம்பாக்கம் கோவில் புதிய வண்ணத்துடன், நல்ல காற்றோத்துடன் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. கோவிலின் இளம் குருக்களின் நல்ல சேவையை விட அவருடன் இருந்த குட்டிப் பையனின் சுட்டித்தனமும், அவன் எல்லோருக்கும் ப்ரசாதமும், தண்ணீரும் கொடுத்ததும், அனைவரையும் கவர்ந்தது.

அடுத்தத் தலம் - ஜலனாதீஸ்வரர் கோவில், தக்கோலம். கிரிராஜ கன்னிகாம்பாள் சமேத ஜலனாதஈஸ்வரர் கோவிலின் சிறப்பம்சம், குரு பகவானின் அபூர்வக் கோலம். தலையை ஒரு புறம் சாய்த்து பக்தர்களின் குறையக் கேட்பதாக ஐதீகம். அங்கிருந்த குருக்கள் அனைவரையும் உட்கார வைத்து சங்கல்பம் செய்து அருமையாக பூஜை செய்தார். மெய்ப்பேடு குருக்கள் சிறுவன் இவரிடம் கொஞ்ச காலம் அப்ரெண்டிசாக இருப்பது பின்னவரின் எதிர்காலத்துக்கு நல்லது. அதென்னவோ படிப்பு, திருமணம் என்ற இரண்டு முக்கிய போஸ்டுக்களை கையில் வைத்திருப்பதாலோ என்னவோ, எல்லா குரு ஸ்தலங்களிலும் நல்ல கூட்டம்.

ஒரு நல்ல த்ருப்தியோடு புறப்பட்ட வேன்களை, திருவாலங்காடு ரயில்வே கேட் படுத்தியது. பிடிவாதமாக ஏழு வண்டியை அனுப்பிய பின்தான் எங்களுக்குப் பிரியா விடை கொடுத்தது. ஆனால் அந்த 30 நிமிடங்களில் கூட வருபவர்களுடன் நல்ல பழக முடிந்தது. அங்கு பிஸ்கட்டும், நொறுகுகளையும்  வாங்கி எல்லோருக்கும் கொடுத்த ஜானகி டூர் மக்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

திருவாலங்காடு வந்து ஒரு சின்ன அம்மன் கோவிலுக்குப் பின் ஒரு சிம்பிள் ஆனால் சுவையான மதியச் சாப்பாடு. பின் நல்ல வெயிலைப் பொருட்படுத்தாமல் சென்ற ஐந்து சபையில் ஒன்றான ரத்தின சபை திருவாலங்காடு சிவன் கோவில் அருமை. பெரிய ப்ரகாரம், உயர்ந்த மேல் கூரையினால் வந்த சில்லிப்பு வெயிலை மறக்க வைத்தது.  வெளியே வந்தால் வெயில் தாக்கிப் ப்ரகாரம் சுற்றியதில் கால்களைப் புண்ணாக்கியது.

அதற்க்குப்பின் பெய்த மழையைத்தாண்டி ஆந்திராவில் உள்ள சுருட்டப்பள்ளி வந்த போது, அங்கு நேற்றே ப்ரதோஷம் முடிந்ததால் சற்று நிதானமாக அம்மனின் மடியில் தலை வைத்து ரங்கனாதர் போன்ற கோலத்தில் படுத்திருந்த சிவ பெருமானின், அருமையான கோலத்தைப் பார்க்க முடிந்தது. அந்த ஊர் என் தாயாரை நினைவு படுத்தியது. ஒரு காலத்தில் அவர் இங்கு ஒவ்வொரு மாதமும் வருவார்.

அவசரமாக ஒரு காபிக்குப் பிறகு சென்ற "திருக்கண்டிலம்", ஒரு அருமையான கிராமம். நல்ல குளம் எங்களை வரவேற்றது. இந்த நாளின் முழு தாக்கமும் இங்கு கிடைத்தது. நாங்கள் உள்ளே நுழையும் பொழும் சிவனுக்கு அருமையான பாடல்களுடன் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு பெரியவர் சுறு சுறுப்பாக அலைந்து கொண்டிருந்தார். கேட்டபின்தான் தெரிந்தது அவருக்கு வயது 103 என்று !! பின் நடந்த ப்ர்தோஷ ஊர்வலத்தில் நானும் இரண்டாவது சுற்றுக்குத் தோள் கொடுத்தது எனக்கு எதிர் பாராமல் கிடைத்த பாக்கியம். கபாலி கோவிலில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று- அவ்வளவு போட்டி இருக்கும்.

எல்லாவற்றையும் விட சென்னைக்குத் திரும்பும் ட்ராஃபிக் தான் ரொம்பப் படுத்தியது. ஆனால் இதை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஸ்ரீ ஜானகி டூர்ஸை பாராட்டியே ஆகவேண்டும். ஒரு தனிப்பட்ட அக்கறை, திரும்பும் பொழுது அவரவர் வீட்டுக்கு முடிந்த வரை அருகில், முடியாதவர்களுக்கு தகுந்த வழியனுப்பு, நடுவில் ஒரு வயதானவருக்கு கண்ணில் சொட்டு மருந்து போடும் அக்கறை, சக்கரை இல்லாத காபி, காரம் இல்லாத  வீட்டில் தயாரித்த உணவு, எல்லாவற்றுக்கும் மேலாக உரிமையாளர் ரமேஷ் எல்லா டூருக்கும் கூடவே வந்து, அன்பாகப் பேசுவது - இவையெல்லாம் இன்னும் இவர்களுக்கு உள்ள ஒரு நல்ல எதிர் காலத்தைக் காட்டுகிறது. அதற்க்கு அத்தனை கோவில் சிவன் களும், பெருமாள்களும் உதவுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.



Sunday, May 26, 2013

டீ எம் எஸ்

"சட்டி சுட்டதடா . . . . கை விட்டதடா " என்ற ஒலியை மீறி சமயலுள்ளிலிருந்து ஒரு ஓங்கிய குரல் " டேய், வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலேல, அமத்துடா அந்த ரேடியோவை" - அம்மா.  இது மட்டுமல்ல- "போனால் போகட்டும் போடா" , "வீடு வரை உறவு"- இப்படிப் பல பாடல்களுக்குத் தடை வீட்டில். என் முதல் அறிமுகம் அந்தக் குரலுக்கும், அபசகுனத்துக்கும், ரேடியோவுக்கும்.

ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் என் அண்ணனின் முதன் சம்பளத்தில் வாங்கிய, ஒரு மூலையில் மஞ்சள் துணி போர்த்திய அந்த பிலிப்ஸ் ரேடியோவில் கேட்ட பல பாடல்கள் பாடியதென்னவோ "டீ. எம்.எஸ், பீ சுசீலா"தான். வேற பெயரே தெரியாது. மிஞ்சிப் போனால் "பீ. பீ எஸ், எல்.ஆர், ஈஸ்வரி" - அவ்வளவுதான்.

கர்னாடிக்கோ, வெஸ்டெர்னோ, குத்துப் பாட்டோ, எதுவானாலும் அவர் பாடுவார். எம், ஜீ. ஆரோ, சிவாஜியோ, ரவிச்சந்திரனோ யாருக்கும் அவர் தான் குரல் கொடுப்பார். அழகிய தமிழ் மகள் இவள், ஒரு ராஜா ராணியிடம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற துள்ளல் பாடல்களுக்கும் அவர் குறைவு வைக்கவில்லை. பாட்டும் நானே, மாப்ளே போன்ற கர்னாடகத்தையும் விட்டு வைக்கவில்லை. தவப் புதல்வனில் உஷா உத்துப்புடன் பாடிய அன்றைய மேலை நாட்டுப் பாடலிலும், முத்துக் குளிக்க வாரீகளா,   என்னடி ராக்கம்மா போன்ற குத்துகளிலும் அவரின் திறமையால் ஜொலித்தார்.

இருந்தும் அவருடைய சோகப் பாடல்கள் தான் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. யாரால் மறக்க முடியும் அவரின் கண்ணீர் வரிகளை?

பாசமலர் பார்த்து, தியேட்டரில் நான் அழுததாக என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அது கதைக்காகவா, பாட்டுக்காகவா என்று இது வரை தெரியவில்லை.

அக்காலத் தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சிவாஜி - எம்ஜீயார் நடிப்பா, வாலி-கண்ணதாசன் வரிகளா அல்லது இவரின் குரலா என்ற முடியாத வாதம் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

அவர் வீட்டுக்கருகாமையில் வசிப்பதால், தினமும் காலை நடையின் போது அவர் வீட்டை கடக்கும்போது ஒரு சில வினாடிகள் மனம் நினைக்காமல் இருந்ததில்லை. ஒரு விதத்தில் இந்த முடிவு சில மாதங்களாக நான் எதிர் பார்த்துகொண்டிருந்ததுதான். தொண்ணூருக்கு மேல் எதிர்பார்ப்பது, ஒரு ரசிகனுக்கு வேணும்னா ஆசையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நல்லதல்ல. இருந்தும் அது நம்மைத் தாக்கும்பொழுது, மனம் கனக்காமலிருப்பதில்லை.

இந்தக் கால இளம் ரசிகர்கள் சிலருக்கு அவர் பெருமை தெரியவில்லையென்றால் தப்பில்லை. இது எவர் குற்றமுமில்லை.  அவர் பாடியது போல் மனிதன் மட்டுமில்ல காலமும் மாறித்தான் விட்டது.

இன்று காலை அவர் வீட்டுப் பக்கம் சென்றால் ஒரே கூட்டம்- போலீஸ். இறுதி பயணத்துக்குத் தயாராகும் டீ.எம். எஸ்சுக்கு நான்  "அந்த  நாலு பேருக்கு நன்றி " என்று சொல்லி. தள்ளி இருந்தே விடை கொடுத்தேன்

அவர் பூத உடலை எரித்தாலும் ஆட்டோக்களிலும், மொஃபஸல் பஸ் நிலயங்களிலும், பழய டேப்பில் அவர் என்னமோ தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கப் போகிறார். "எங்கே நிம்மதி  எங்கே நிம்மதி" என்றவருக்கு வழி கிடைத்துப் புறப்பட்டுவிட்டாரோ!

 கொஞ்ச காலமாகவே டீ. எம்.எஸ், ராம மூர்த்தி, பீ.பீ.எஸ் போன்ற  தூண்கள் நிலை குலைவது தமிழ் இசையின் துரதிர்ஷ்டமே.






Sunday, May 19, 2013

அக்கரை

என்னுடைய விபரீதமான ஒரு ஆசையால், மற்றவர்களுக்கும், தமிழுக்கும் வரப்போகும் இம்சையை மறந்து, ஒரு அசட்டுத் தைரியத்தில் நான் தமிழில் வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடமாவதற்க்குள் விளையாட்டாக ஒரு இருபது தொகுப்புகளையும் எழுதி விட்டேன்.  நட்புக்கு இலக்கணமாக உள்ள என் பல நண்பர்களில் சிலர் "உனக்கு இவ்வளவு சரளமாக தமிழில் எழுத வருமா"  என்று வியந்து பாராட்டுக் கடிதமும் அனுப்பினார்கள். இதில் ஒரு தமிழ் எழுத்தாளரும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்ட ஒருவரின் பேரனும் ஆவர். பின்னவர்தான், என்பால் கொண்ட அக்கறையில் எனக்கு ஒரு வித்தியாசமான கூட்டத்திற்க்குச் செல்லுமாறு கை காட்டினார்.

என் மேலும், என் எழுத்தின் மேலும் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நண்பர், என் முன்னாள் மேலாளர், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் எனக்குக் காட்டிய அந்த பாதையில் சென்றபோது வந்ததுதான் "அக்கரை" கூட்டம்.

மூவரால் தொடங்கிய 'அக்கரை' - ப்ரதி மாதம் மூன்றாம் சனிக்கிழமை எளிய முறையில் கூடி எண்ணங்களைப் பரிமாரிக் கொள்ளும் ஓர் அமைப்பு. ஆங்கிலத்தில் உள்ள "Look before you leap" என்ற எச்சரிக்கையை மறந்து நானும் நேற்று அந்தக் கூட்டத்தில் ஆஜரானேன். எனக்கு சிபாரிசு செய்த நண்பர் வராததால் வெய்யில் மேலும் உரைத்தது.

என்னைத் தவிர அங்கு உள்ள அனேகரும் தமிழுக்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்கள் என்று புரிந்தது. அங்கிருந்த சில ப்ரபலங்களை கண்டு கொள்ள முடியாதது  எனக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளியை பறை சாற்றியது.

மிக எளிமையாகத் தொடங்கிய கூட்டம் ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடப் பேச்சு முறையில் நன்றே நடந்தது. கூட்டம் என்னவோ தமிழில் மட்டும்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு, என் தமிழைத்  தூசு தட்டி, கொஞ்சம் சுமாராக என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

ஆனால் பேச்சுக்கள் ஜோக்குக்கும் ஹ்யூமருக்கும் உள்ள வித்தியாசத்தில் தொடங்கி, சூது கவ்விய ஐ பி எல் வரை வந்து  பின் கடைசியில் பேசிய இளைஞரின் அமெரிக்கா வாடைத்தமிழில் தங்கம் ஏன் வாங்கக்கூடாது வரை சென்ற போது ஒரு விரிவான பேச்சுத்திடல் தெரிந்தது. இடையில் வைணவ, சைவ சங்கதிகளையும் அருமையாக விளக்கியவர்களுக்குப் பிறகு வந்த பெண்மணியின் தன் இல்லாத மாமியாரை  நினைவுகூர்ந்ததில் வந்த கண்ணீரில் ஒரு நிஜம் தெரிந்தது.

இந்தியாவில் ஓடும் ஆண் பெயர் கொண்டஒரே நதி ஏன் "க்ருஷ்ணா" இல்லை என்ற விளக்கம் என் போன்ற பாமரனின் புருவங்களை மேலே இழுத்தன

ஒருவர் நாம் கோபப்படும்பொழுது ஏன் உரக்கப் பேசுகிறோம், அன்பாகப் பேசும் பொழுது ஏன் ரகசியக் குரலில் பேசுகிறோம் என்பதையும் அருமையாக விளக்கினார். லால்குடியின் மறைவுக்கிறங்கியதில் இழப்பின் பரிமாணத்தை உணர முடிந்தது.

வயிற்றுப் பசிக்கு போண்டாவுடன் அறிவுப் பசிக்கும் ஒரு கேள்வியை எல்லோருக்கும் கொடுத்து, சரியான விடைக்கு ஒரு பொற்க்கிழியையும் கொடுத்து வந்தவர்களை  உற்ச்சாகப் படுத்தினார்கள்

இப்படியாக ஒரு மணிக்குமேல் நடந்த பேச்சுக்கள் இது என்ன வகை- தமிழார்வமா, பேச்சுத்திறனை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமா என்று வியந்தபோது, அமைப்பாளர் ராணிமைந்தன் வந்து "இது ஒரு நட்பு வட்டம், நம் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்" என்று கை கூப்பி விடை கொடுத்த பொழுது, அடுத்த கூட்டம் எப்போ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

பேச்சும், அதன் சுதந்திரமும் பல இடங்களிலும் பறிக்கப்படும் நிலையில் இப்படியும் ஒரு அக்கரையா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை

Friday, May 3, 2013

சுஜாதாவைப் போன்ற ஒரு குறிஞ்சி


என்னுடைய முதல் அறிமுகம் சுஜாதா எழுத்துக்கு - 1968 என்று நினைக்கிறேன். குடும்பத்துடன் பழனிக்குப் போயிருந்த பொழுது என் அண்ணா வாங்கிய குமுதத்தில் முதல் முதலாக சுஜாதாவின் கதை படித்தேன். நைலான் கயிறு என்ற ஞாபகம்- அந்த 12 வயதிலும் என்னை சுண்டி இழுத்த வார்த்தைகள்.

அதற்க்கப்புறம் எங்கு போனாலும் சுஜாதா புத்தகத்துக்கான வேட்(கை)டை தான். திருச்சி குல தெய்வம் கோவிலுக்கு போனபின் உடனே மேய ஆரம்பிப்பது, பெரிய கடை வீதியில் உள்ள பழய புத்தகக் கடைகளுக்குத்தான். எத்தனை புத்தகங்கள் நான்கு ரூபாய்க்கெல்லாம் வாங்கி இருக்கேன். பத்து ரூபாய் தாண்டாமல் இருந்தால் அள்ளி விடுவேன். ஒரு தடவை பல கோவில்களுக்குத் தனியாய் பயணித்த போது, திருச்சியில் வாங்கிய இந்தப் புத்தகங்கள் மட்டுமே துணையாய் இருந்திருக்கு.

அந்தத் தனிப்பட்ட நடை - 'ஏறினான்' என்பதை மாடிப்படி போலவே எழுதுவது. ஒரு கதையில் திருகாணி படத்தைப் போட்டு பக்கத்தில் 'யூ' என்று போட்டதில் அந்தக் கால விடலைகளில் பலருக்கு இன்னும் புரியவில்லையாம்!

அந்த ஆல்ரௌண்ட் அறிவு - சுமார் 40 வருஷங்களுக்கு முன்னமேயே ஒரு கம்ப்யூட்டரை எப்படிப் ப்ரொக்ராம் பண்ணி தேவைப் பட்ட கதை வரவழியப்பதென்று- 30% காதல், 35% இளமை, 20% குடும்பம், 10% சண்டை என்று எழுதி அதன் அவுட்புட்டையும் தெரிவித்தார்.

 அவரின் 'கம்ப்யூட்டரே கதை சொல்லு" புத்தகத்தில் சொல்லும் சீ பீ யூ போன்ற டெக்னிகல் ஸமாச்சாரங்களின் விளக்கம் பல இன்ஸ்டிடூட்டுகளை வெட்கப் பட வைக்கும். அன்னாரின் ஃப்ளோ சார்ட்டுக்கான உதாரணத்தை நான் தொடாத  வகுப்பே இல்லை.

தொடாத சப்ஜெக்டே இல்லை எனலாம். அவர் கதையில் வரும் உதாரணங்களிலிருந்து பல சட்ட நுணுக்கங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆர்தர் ஹெயிலி, இர்விங்க் வாலஸ் போன்ற பல ப்ரபலங்கள் கையாண்ட வகையில்,  கதையில் வசந்துக்குச் கணேஷ் சொல்வது போல் படிப்பவர்களுக்கு விவரிக்கும் பாணி அருமை.

கட்டுரைகளில் அவர் அறிவின் ஆழம் இன்னும் தீர்க்கமாகத் தெரியும். அது திரைப் படங்களை விமரிசிப்பதாக இருக்கட்டும், அல்லது புத்தகங்களைப் பற்றியோ, அல்லது கதை எழுதுவது எப்படி என்பதோ எதிலும் ஒரு தீர்க்கம்.

அவரின் நகைச்சுவைதான் அவரை இன்னமும் நெருங்கிய நண்பனாக்கியது. அவரின் பையாக்குட்டி, வசந்த்தின் சவால் - ஆண்கள் செய்வதெல்லாம் பெண்களாலும் செய்ய முடியும் என்று ஒரு பெண் கதாபாத்திரம் சொன்னவுடன்... அவரின் மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்குக்காக இன்னும் பலர் காத்திருக்கிறர்களாம் !

அவரின் இருநூறு புத்தகங்கள் படித்தபின் ஒரு இறுமாப்பிலுர்ந்தேன். இன்டெர்னெட் வந்தப்புரம்தான் தெரிந்தது இன்னும் எவ்வ்வ்வளவு இருக்குன்னு.

எல்லாவற்றையும் எல்லாருக்கும் வாங்கிப் படிக்க சக்தி இருக்காது. இந்த மாபெரும் எழுத்தாளனின் பேனா இன்னும் பலருக்குக் கிட்ட, சில மலிவு விலைப் புத்தகங்களை வெளியிடலாம். ஈ புக் என்ற பெயரில் மோசமான பீ டீ ஃப் களைப் படிப்பதை விட இதைச் செய்யலாம் என்று தோன்றுகிறது

அதிசயமாக அவதரிப்பவற்றை குறிஞ்சிப் பூ பூத்தாற்ப் போல என்பார்கள். குறிஞ்சியாவது 12 வருடங்களுக்கொரு முறை கண்டிப்பாக வரும். சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் அரிய குறிஞ்சி வகை

இன்று சுஜாதாவின் பிறந்த நாள்.. இவர் தன் பிள்ளைகளுக்கு ரங்கனின் ப்ரசாதம் என்ற பெயர் வைத்தது போல், இவர் அப்பா இன்று இருந்திருந்தால் இவருக்கு "எழுத்துப் ப்ரசாத் என்று வைத்திருப்பாரோ !

 அன்னாரின் படைப்புகளை இன்று படிக்க ஆரம்பிக்கும் புதிய ரசிகர்களுக்கு பிறந்த  நாள் வாழ்த்துக்கள்

Thursday, April 25, 2013

இன்று(ம்) இனிக்கும் அன்றைய விடுமுறை


ஏப்ரல் கடைசி- அனேகமாக எல்லா ஸ்கூலும் இன்னும் சில தினங்களில்  கோடைக்காக மூடி விடுவார்கள், பசங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

எங்கள் காலத்தில் நாங்கள் உடனே கிளம்பி விடுவோம் டால்மியாபுரத்துக்கோ அல்லது கண்டனூருக்கோ.

பின்னது ஒரு நல்ல பொட்டை கிராமம் அந்தக் காலத்தில். சின்ன ஊர், கொஞ்சமே தெருக்கள் அதில் நிறைய வீடுகள்- முழுக்க செட்டியார்கள். கல கலவென சிரித்துப் பழகும் அவர்களிடம் உண்மையான சந்தோஷமும், நட்பும் வெளிப்படையாகத் தெரியும்.

அந்த ஊருக்குச் செல்ல ஒன்றும் பெரிய பெரிய காந்தங்கள் இல்லை. இருந்தாலும் காலை எழுந்தவுடன் அருகிலுள்ள கண்மாயில் போய் மணிக்கணக்கில் குளிக்கிறேன் பேர்வழி என்று ஆட்டம்.

பின் சாப்பாட்டுக்குப்பின், வெளியே பட்டை உரிக்கும் வெயில் தெரியாமல் வீட்டின் இரண்டாவது முற்றத்தில் கேரம் போர்டு அல்லது ட்ரேட் கலாட்டா. அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளெல்லாம் இங்குதான் குடி- அதெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது.

மதியம் இரண்டு மணிக்கு பெரியம்மா எல்லோரையும் வட்டமாக உட்கார வைத்து கையில் கவளம் கவளமாகக் கொடுக்கும் சில்லென்ற தயிர் சாதம், மாவடு - டிபனாம்- ஆனால் அமிர்தமாக இருக்கும்.

நான்கு மணியடித்தால் என் பெரியப்பா - அந்தக் கால ஸ்கூல் ஹெச். எம்- சகிதம் நீண்ட நடை, அனேகமாக ரயில்வே ஸ்டேஷனில் முடியும். ரயில்களை வரவேற்று, வழியனுப்பி விளையாடுவோம்.

இல்லேன்னா, கண்மாய் பக்கத்தில் உள்ள வையக்கரை என்ற அடர்ந்த தோப்புக்குப் பயணம். தோப்பில் கையைத் தூக்கினால் மாங்காய் இடிக்கும். மாம்பழங்களை தின்னப் பொறுமை இல்லாமல் ஒரு ஓட்டை போட்டு சாற்றை  உரிஞ்சுவோம்.

இரவு சாப்பாட்டுக்குப் பின் வாசலில், நிலா வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டிலிலோ அல்லது திண்ணையிலோ வெகு நேரம் வரை கதை கேட்டு விட்டுத் தூக்கம்.


இதன் நடுவில் ஒரு நாள் சினிமா. கிராமத்து டென்ட்டு கொட்டாய். இடை வேளையில் சூஸ் பெர்ரி. கொட்டும் கோடை மழையில் அன்று பார்த்த ' நான்' சினிமா இன்று நினைத்தாலும் டவுசரின் ஈரம் ஒட்டுகிறது

இப்படியே ஒரு மாதம் போனாலும் கிளம்பும் தினத்தன்று துக்கம் தொண்டையை அடைக்கும்.

இன்றைய நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அன்று டீ வீ இல்லை. இருக்கும் ஒரே ரேடியோ என் பெரியப்பா வசம். அது அருகில் இல்லாவிட்டால் அவர் தூங்க மாட்டார். இங்லீஷ் நீயூஸ் கேக்கலேன்னா அவருக்கு மறுநாள் மலச்சிக்கல் உறுதி -அவ்வளவு ஒட்டுதல். நேரு இறந்தபோது கூட அவர் மாடியில் சேதி கேட்டு கீழே இருக்கும் எங்களுக்கு ஒலிபரப்புவார்.

டெலிபோனா- அப்டீன்னா?

வீட்டில் உள்ள ஒரே மின் விசிறி பெரியப்பா அல்லது பெரியவர்களுக்குத்தான். குழந்தைகள் அதை எதிர் பார்ப்பதே கிடையாது. பின்ன கரண்ட் எதுக்கு? அது இருந்தா என்ன- போனால் என்ன?

ஒண்ணு கவனிச்சேளா- மே மாதத்திலும் கண்மாயில் நிறைய தண்ணீர்.

அந்தக் காலத்தில் நிறைய இருந்தது - தண்ணீர், மின்சாரம், பெரிய மனஸு- சந்தோஷம்

இப்ப இருக்கறது- பவர் கட், கேன் தண்ணி, கேபிள் டீ வீ, செல் ஃபோன் - ஐயையோ விருந்தினர்களா!

எதைக் கொடுத்து எதை வாங்கியிருக்கிறோம்?

ஆனால் எப்பவுமே நேற்று நன்றாகத்தான் இருக்கிறது. இன்றே அனுபவித்து விடலாமே?





Sunday, March 10, 2013

கொடிது கொடிது

கொடிது கொடிது வறுமை கொடிது என்ற ஔவையின் நினைவு வந்தது, ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி பார்க்கும் பொழுது.

தினசரிப் பற்றாக்குறையால் கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் ஒரு குடும்பமே ஏறக்குறைய தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கருத்து வித்தியாசத்தால் சிறு வயதில் பெற்றோர்கள் பிரிந்ததால் தடுமாறும் குடும்பம்.

கடன் தொல்லையால் பூட்டிய தன் கடையை விட்டு ஓடி முதலாளி ஸ்தானத்திலிருந்து தினக் கூலித்தொழிலாளியான ஒருவர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு தொல்லை.

'அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்பது போல் பலருக்கு படிக்க முடியாமல் பல தடைகள். பார்த்த பொருளை வாங்கப் போய், இந்தக் காசு இருந்தால் நாளை பால் வாங்கலாமே என்று பின் வாங்கும் சிறுமி.

உண்மையான காரணத்தையும் தன் படிக்கும் ஆவலையும் சொல்லியும் கல்விக் கடன் கொடுக்கும் வங்கி  அதிகாரியின் அலட்சியப் போக்கால் வன்முறையைக் கூட கையாள நினைத்த ஒரு மாணவன்.

பணம், பணம், பணம்..... எங்கு போனாலும் இந்த வைட்டமின் 'ப' வைத் தேடும் ஜனம். நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்? நம் முன்னோர்களும் இதை விடக் குறைவாகத்தான் சம்பாத்தித்தார்கள். நிறையக் குழந்தைகளுடன், உற்றார் உறவினருடன் பெரிய குடும்பங்களை  சமாளித்திருக்கிறார்கள்- எப்படி? நாம் எங்கு தடுமாறுகிறோம்?

நிகழ்ச்சியின் முன் பகுதியில், இன்றைய பொறாமைப் படக்கூடிய ஐ.டியில் உள்ள ஒரு தம்பதியினர் கஷ்டப் படுவதாகச் சொன்னதற்க்கு அவர்களின் காரணம் மாதத் தவணை என்று சொல்லக் கூடிய ஈ.எம்.ஐ. சிக்கனத்துக்காக நகருக்குத் தள்ளி வீடு வாங்கி அதன் முழுப் பலனை அனுபவிக்காமல், டீ.வீ, வாஷிங் மிசினுக்காக மேலும் மாதத் தவணையைக் கூட்டிக் கொண்டு, உடம்புக்கு வந்தால் கூட சமாளிக்க முடியாத அபாயகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சிலர் இப்படி. ஆனால் மற்றொரு பக்கம் நகைக் கடைகளிலும், புடவைக் கடைகளிலும்,  நக்ஷத்ர ஹோட்டல்களிலும் கூட்டத்திற்க்குக் குறைவில்லை. எப்படி வந்தது இந்த எதிர் முனைகள்?

இதில் முக்கியமான அம்சம் 'படிப்பு'. இயற்க்கையிலேயே நன்றாகப் படிப்பவனுக்குப் ப்ரச்சினைகள் குறைவு. கொஞ்சம் சுமாராகப் படிப்பவர்களுக்கு பெற்றோர்களின் வளத்தால் சரியும் அதிர்ஷ்டத்தை சரி செய்தால் பின் அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள். படிப்பும் இல்லாமல், ஆதரவுக் கரம் நீட்டவும் ஆளில்லாமல் இருப்பவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாக இருக்கு. எப்படியோ முட்டி மோதி படித்து வேலைக்கு வந்தால் ஓரளவு புத்திசாலித்தனமாக இருந்தால் பிழைக்க வழி உண்டு. ஆகையால், இளைஞர்களும், இளைஞிகளும் படிப்பை எக்காரணத்துக்கும் உதாசீனப் படுத்தக்கூடாது.

வேலைக்கு வந்தவுடன் கஷ்டப் பட்டு வந்த பலர் ஜாக்கிரதையாக வாழ்ந்து முன்னேறுகிறார்கள். ஆனால் இப்பொழு பலர் அகலக் கால் வைத்து மாட்டிக்கொள்கிறார்கள். மேலை நாட்டு மோகம், தேவையில்லாப் பழக்கங்கள், சுற்றத்தார் எதிர்பார்ப்பு, வரட்டு ஜம்பம் இவற்றால் உருவாகிறதுதான், இந்தத் தவணை முறைக் கூட்டம்.

இந்தக் கஷ்டங்களெயெல்லாம் சமாளிக்க கொஞ்சம் சமயோசிதம் இருந்தால் போதும். முதல் வழி திட்டமிட்டுச் செலவழிப்பது. பட்ஜெட் போடாமல் உள்ள குடும்பம் சரிவில் ப்ரேக் இல்லாமல் போகும் வண்டி போலத்தான். ஒடும் பொழுது நன்றாகத்தான் இருக்கும் ஆனால் தடங்கல் வரும் பொழுது நிலைகுலையும்.

ஒவ்வொரு செலவின் போதும் ஒரு முறை "இது தேவைதானா" என்று மனைவிடமோ, கணவனிடமோ பேசிப் பின் முடிவு செய்வது நல்லது.

ஒரு எதிர்பாராத சூழ்நிலைக்கு நாம் எந்தளவுக்கு தயாராக உள்ளோம் என்பதை ஒவ்வொரு மாதமும் ஆராய வேண்டும்.

கேளிக்கை, ஆடம்பரம், மகிழ்ச்சி எல்லாம் தேவைதான்- ஆனால் விரலுக்குத் தகுந்த வீக்கம் புரையோடாமல் காக்கும்.

ப்ளாஸ்டிக்கைத் தவிருங்கள்- ஆம் முடிந்தால் க்ரெடிட் கார்டே வைத்துக் கொள்ளாதீர்கள். அதை எப்படி நமக்குச் சாதகமாக உபயோகப்படுத்துவது என்று தெரியாதவர்கள், இதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வருமானத்தில் குழந்தைகள் படிப்பு, பெரியவர்கள் பராமரிப்பு, மருத்துவச் செலவுகள், பிற்க்காலப் பராமரிப்பு இவையெல்லாம் இல்லையென்றால், எச்சரிக்கையாக இருங்கள்- உங்கள் நீர்க் குமிழி வாழ்க்கையை நினைத்து.

எவ்வளவுதான் யோசித்து, நிதானமாகக் குடும்பம் நடத்தினாலும் எதிர்பாராத செலவுகள் வரத்தான் செய்யும். ஆனால் இப்படி ஜாக்கிரதையாக இருந்தால் அதைச் சமாளிப்பதற்க்கான தைரியம் தானாக வரும்.

ஒன்று நிச்சயம்- நம் முன்னோர்களுக்கு இதை விடப் ப்ரச்சினைகளும், இப்பொழுதை விட அதை சமாளிக்கக் கூடிய சக்திகளும் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் இதற்க்காக யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை!

இந்தத் தேடல் எல்லா மனிதனுக்கும் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களான டாட்டா, பிர்லா போன்றவர்கள் கூட இதைதான் தேடுகிறார்கள், சாதாரண மனிதனும் இதைத்தான்  நாடுகிறான். சிலர் தக்க வைத்துக் கொள்ளப் பாடு படுகிறார்கள். சிலர் வாழ இதைத் தேடுகிறார்கள். உங்கள் கொள்கை, புத்திசாலித்தனம், சாமர்த்தியம், நட்பு, வளர்ப்பு ஆகியவை முடிவு செய்கின்றன  நீங்கள் தேடுபவரா அல்லது அதை வைத்துகொண்டு ஓடுபவரா என்பது.

இந்த மன வருத்தத்திலும், ஒரு வெளிச்சம். பல சௌகர்யங்கள் இருந்தும், எனக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்று அனத்துபவர்களுக்கு இது ஒரு விழிப்பை ஏற்ப்படுத்தட்டும்- உங்களுக்குக் கீழே எத்தனையோ கோடி. உள்ளதை வைத்து த்ருப்தியாக இருக்கவும்

Wednesday, March 6, 2013

வன யுத்தம்

என்றுமே எனக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் போன்றவர்கள் மேல் எந்த விதமான இரக்கமும் இருந்தது கிடையாது. ஒரு உயிரையே கொல்லக் கூடாது  என்பவனுக்கு, இத்தலை கொலைகள் செய்தவன் மேல் வேறு எப்படிப்பட்ட எண்ணம் இருக்கக் கூடும். ஆனால், வீரப்பனைப் பற்றியும், அவன் ஏன் இப்படி மாறினான், எப்படிக் கொல்லப் பட்டான் என்று வந்த  பல செய்திகளினால் ஓர் ஆர்வம் எழுந்தது. நாணயத்தின் மற்றொரு பக்கத்தையும் பார்க்கும் ஆர்வம் தூண்டப்பட்டது. அதனாலேயே, 'வன யுத்தம்'  படத்தைப் பார்ப்பதற்க்காகக் காத்திருந்தேன்.  இன்னும் கொஞ்ச நாட்களில் அரங்கை விட்டுப் போகும் வாய்ப்பு அதிகமானதால் இன்று துணிந்தேன்.

பரபரப்புடன் தொடங்கிய படம், பத்து நிமிடங்களில் பிசு பிசுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன உத்தியை நன்றாக வளர்க்காமல், ஐந்து நிமிடங்களில் அதை விட்டு அடுத்த சம்பவத்துக் கூட்டிச் செல்லப் படுகின்றோம். ஒவ்வொரு சம்பவத்துக்கும் இடையே அப்படி ஒரு வேகம். கீழே போடப்படும் இடம் பற்றிய எழுத்துக்களும் நம்மிடம் போட்டி போடுகின்றன.  இந்த வேகத்தினால் படம் பார்க்கும் எண்ணம் போய் எதோ புத்தகம் படிப்பது போலிருந்தது.

அனேகமாக தமிழ் நாட்டில் பலருக்கும் வீரப்பன் கதை பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் இதைப் பார்க்க மெனக்கெடுவது, தெரியாத உண்மைகளைத் தேடி. ஆனால் ஏமாற்றப் படுகிறார்கள்.

ஒவ்வொரு சம்பவமாக கையிலெடுக்கிறர்- இளம் பிராயம், ஏன் யானைத் தந்தத்திலிருந்து சந்தன மரங்கள், இளம் காட்டதிகாரி ஸ்ரீனிவாசை நம்ப வைத்துக் கொல்வது, குண்டு வைத்து போலிஸ் ஜீப்பை தகர்ப்பது, ராஜ்குமாரைக் கடத்துவது, சுட்டுக் கொல்லப் படுவது என்று. ஆனால் எதிலும் எதிர்பார்க்கும் அதிகப் படியான செய்திகள் இல்லை. இந்தச் சம்பவங்கள் தான் ஏற்கனவே தெரியுமே- அல்லது வலையில் நிரைய இருக்கே. இதற்க்கு எதுக்கு நான் 150 ரூபாய் கொடுத்து பார்க்கணும்?  ஒரு நல்ல கதையை சொல்லத் தெரியாமல் வீணடித்திருக்கிறார்.  பாலச்சந்தரும், சுஜாதாவும் பிறந்த தமிழ்னாட்டில் கதை சொல்லத் தெரியவில்லை என்றால் வெட்கமாக இருக்கு.

இந்தக் கதைக்கு ஏன் இப்படி சென்சாருடன் போராடினார்களென்று தெரியவில்லை. ஆனால் பல விஷயங்கள் காண்பித்த  மற்றும் காண்பிக்கப் படாத காட்சிகளினால் தெரிகிறது இது வெளி வர பட்ட பாடு. புரியும் என்று நினைக்கிறேன் !

நடு நடுவில் வரும் ஏகப்பட்ட ஆங்கில வசனங்கள் யாருக்கு என்று தெரியவில்லை. 'பொல்லாதவனு"க்குப் பின், நான் கிஷோரின் பெரிய விசிறி. ஆனால், படத்தில் அர்ஜுனைத்தவிர யாரும் நடிக்க முயர்ச்சிக்கக் கூட இல்லை என்பதுதான் வருத்தமே. அர்ஜுனுக்கு இந்த ரோல் அல்வா சாப்பிடுவது போல் . சும்மா ப்ரேக்கில் வந்து  அனாயாசமாக  நடித்து விட்டுப் போயிருக்கார். பெயருக்கு ஒரு பெண்ணை அறிமுகப் படுத்தியவுடன் நான் கூட பயந்தேன், ஏதாவது டூயட் வந்துடப் போர்தேன்னு - நல்ல வேளை.

காயம் பட்ட போலீஸ் அதிகாரியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போவதற்க்கென்ன இவ்வளவு பரபரப்பு? ஏதோ க்ளைமாக்ஸ் போன்ற தேவையற்ற பில்டப்.

படத்தின் உண்மை நாயகன் காமிராதான். அழகை அள்ளி அள்ளிக் காண்பித்திருக்கு- ஆனால் கதை இல்லாததால் எடுபடவில்லை.

வீரப்பனைப் பார்த்தால் பயம் வரவில்லை. மேக்கப்பும் , சிந்தனையும் போறாது. பின்னிசையை வைத்து பயமுறுத்தப் பார்த்துத் தோல்வியே அடைகிறார் .

ஒரு நல்ல கதையையும், சந்தர்ப்பத்தையும் வீணடித்து, தமிழ்னாட்டு மக்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்கள் காசையும், நம்முடைய நேரத்தையும் விரயமாக்கியது தான் மிச்சம்.

படம் முடிந்தவுடன், பெயர்கள் போடப்பட்டும், சில உண்மையான பாத்திரங்களைக் காட்டும் பொழுது, அரங்கில் உள்ள மக்கள் அப்படியே நின்று பார்த்தனர்- இவர்களுக்குத்தான் இன்னும் எத்தனை நம்பிக்கை தமிழ் சினிமாவின் பெயரில்.


Monday, March 4, 2013

விதண்டாவாதம்

ஒவ்வொரு நாளும் , தினந்தோறும் சில சூடான செய்திகள், ஹோட்டல் மெனு போல. இவை இல்லாவிட்டால் பத்திரிகைகள் இல்லை. சிலருக்கு பத்திரிகை இல்லாத நாட்கள்  உதயமாவதே இல்லை. அப்படிப் பலப் பல செய்திகள் தோன்றிக்கொண்டே இருக்கும் இன்னாட்களில், மிதமான சூட்டுடன் தினமும் பரிமாரப்படும் ஒன்று தான் ஒரு மூத்த காந்தியவாதியின் உண்ணா நோன்பு- எதற்க்காக- தனக்கு ஓய்வூதியம் அதிகப்படுத்துபதற்க்காகவோ , முதியவர்களின் சலுகைகளைக் மேலும் கூட்டுவதற்க்காகவோ அல்ல. இக்கால இளைஞர்களின் நலனுக்காக. குடி என்ற ஒரு கொடிய, ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விரும்பி வாங்கித் தக்க வைத்துக் கொண்ட ஒரு பழக்கத்துக்கு எதிராக. அதற்க்கு அரசின் ஆதரவை விலக்கிக் கொள்ள.

எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். அதில் எனக்கு நாட்டமும் இல்லை. அதைச் சாக்கடை என்று நினைக்கவுமில்லை, அப்படி இருந்தாலும் அதைக் கழுவி சுத்தம் செய்ய மனமுமில்லை. காசுக்குச் செய்ய பலர் இருக்க, அவர்களின் பிழைப்பில் மண் போட விருப்பமுமில்லை.

ஆனால் குடிக்கு எதிரான குரல் அரசியலில்லை. இது ஒரு சமூக விழிப்புணர்வு. அவ்வளவு தான். அதையும் மீறி இது குடும்ப நலனுக்காக என்று நினைப்பதால், இந்தப் போரட்டத்தின்பால், என் மனம் இழுக்கப்பட்டது. பல முறை இதிலும், என் மற்ற வலைப் பூக்களிலும் இதைப் பற்றி என் கருத்தை  எழுதி இருக்கிறேன்- திரும்பச் சொல்ல விழயவில்லை.

ஆனால் வேண்டியோ, வேண்டாதையோ, திரும்பத் திரும்ப இது என்னைத் தாக்குகிறது. தொலைக் காட்சியத் திருகினாலே, சில சேனல்களில் கும்மாளங்கள் இருந்தாலும், பல சேனல்களில் குடிபழக்கத்தைப் பற்றி, இதனால் வரும் விளைவுகளைப் பற்றிச் சொல்லி என்னை மிகவும் பயமுறுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும், நல்ல வேளை நம் வீட்டில் யாரும் இல்லை என்று சமாதானம் செய்து கொண்டாலும், என் நண்பர்களைப் பற்றிக் கவலைப் படத்தான் வேண்டியிருக்கு (இல்லேன்னா நான் என்ன நண்பன்? )

பல போராட்டங்கள், பல சாலை மறியல்கள், பல கடையடைப்புப் போராட்டங்கள், பல நபர்களால்- இவற்றையெல்லாம் மீறி ஏன் இந்தப் பெரியவரின் போராட்டம் என்னைக் கவர்ந்தது? இவரிடம் சுய நலம் இல்லை, விளம்பர வேட்கை இல்லை. காசுத்தேவை இல்லை. ஒரு அரசியல்வாதியோ அல்லது அரசியல் கட்சியோ போராடினால், உடனே நமக்குத் தோன்றும் அவர்களின் ஆதாயம் இதில் கொஞ்சமுமில்லை. பின் என்னதான் இவரிடம் இருக்கு. ஒரு அக்கரை. சமூக அக்கரை. நம் வருங்கால இளைஞர்கள் மேல் அக்கரை- ஒரு கரிசனம். ஒரு தந்தையைப் போல் பாடு படுகிறார்.

மற்றுமொன்று இவர் கடைப்பிடிக்கும் காந்திய வழி. அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல், உண்மையான ஒரு உண்ணாவிரதம். 

இந்தப் பெரியவர் இப்படி ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, ஊடகங்கள் பல பேச்சாளர்களைப் பேச வைத்து, கருத்துக்களை பரிமாறி ஒரு நல்ல சூழ் நிலையை உருவாக்கிகொண்டிருக்கிறது- அதுதான் ஊடகங்களிடம் நாம் எதிர்பார்க்கும் ஒரு சேவை கூட. ஆனால் விவாதத்தின் தேவைக்காக சிலரை ஆதரிப்பாளர்களாகவும், சிலரை எதிர்ப்பாளர்களாகவும் வைப்பது, சில நேரங்களில் விபரீதமாக முடிகிறது. உதாரணத்துக்கு, ஒரு விவாதத்தில், ப்ரபல எழுத்தாளர் ஒருவர் எதிரணியில் இருந்தார் என்பதற்க்காகவோ என்னவோ தெரியவில்லை- தன் பங்குக்கு "குடிப்பது ஒரு தனி மனிதரின் உரிமை. இதில் விவாதிப்பதற்க்கு என்ன இருக்கு" என்று ஆரம்பித்தார். உடனே எதிரணி நண்பர் "இவர் எதிரணியில் இருப்பதர்க்காகவே இப்படிப் பேசுகிறார் போலிருக்கு " என்றும் உரைத்தார்.

எது தனி மனித உரிமை, சுதந்திரம்? இவர்கள் என்ன சாப்பாடு சாப்பிடுவதையா எதிர்க்கிரார்கள்? ஒருவன் குடித்து விட்டு , அது அவரை மட்டும் தாக்கினாலே அந்தக் குடும்பத்தினர் சும்மா இருக்க முடியாது. ஏனென்றால், நம் இந்தியக் கலாச்சாரம் அப்படி. நம் குடும்பத்தில் ஒருவர் அவதிப் பட்டால், மொத்தக் குடும்பமே சேர்ந்து , ஒன்று கூடி அவரை அந்தக் கூட்டிலிருந்து விடுவிக்கும்
அக்கறை கொண்ட சமூகம். மேலை நாட்டைப் போல திருமணத்துக்குப் பின் உடனே மனைவியுடன் பிரிந்து சென்று பின் பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு வந்தால் , உறவினர் வருகையாக நினைப்பவர்கள் அல்ல. 

மேலும், குடித்து விட்டு ஒருவன் அவதிப்படும் பொழுது, அவன் குடும்பம் பொருளாதார நிலையால் பாதிக்கப் படுகின்றது.  அவன் தெரு முனையில் விழுந்து கிடக்கும் பொழுது, அவன் குடும்பத்தினர், மான ரீதியாக பாதிக்கப் படுகின்றனர். ஒருவன் குடித்து நோய்வாய்ப்பட்டு அவதிப் படும் பொழுது, அவன் குடும்பமே மன உளைச்சலால் அவதிப் படுகின்றனர்.  

இங்கு நாம் பொதுவாகக் குடிப்பவர்களைப் பற்றிப் பேசினாலும், குடிக்கும் மேல் தட்டு மக்களை விட கீழ்த்தட்டு வர்க்கம் தான் மிகுந்த அவதிக்குள்ளாகிறது. ஒரு பெரிய ஹோட்டலிலோ, கிளப்பிலோ குடித்து விட்டு ட்ரைவர் பத்திரமாகக் கொண்டு வந்து வீட்டில் விடுபவர்களைப் பற்றி அல்ல. தினக்கூலியாக நூறு  ரூபாய் வாங்கி, அதில் பெரும் பகுதியைக் குடித்து விட்டு தள்ளாடிக்கொண்டு வீடு திரும்பும்போது, உலை வைக்கக் காத்திருக்கும் மனைவி, சிறு குழந்தைகளைக் கட்டி பிடித்து அழுவார்களே- அந்தக் குடும்பங்களை நினைத்து. அது அழுகையோ, ஓலமோ அல்ல. அந்தப் பேசப்படாத வசனம் " இந்தப் பாவி இன்றும் காசு கொண்டு வரவில்லை. இன்றும் நீங்கள் பட்டினிதான்" என்று மருகும் போது.

இப்படி ஒரு பழக்கம் தேவைதானா? இதேபோல் உங்கள் மனைவியோ, மகனோ, மருமகனோ குடித்து விட்டு ரோட்டில் கிடக்கலாமா?  இதனால் உங்களுக்கு புற்று நோயோ, காச நோயோ வந்தால் குடும்பம் உங்களைக் கண்டு கொள்ளாமல் விடலாமா?  நீங்கள் மட்டும் குடும்பத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, உங்களுக்கு நோய் வந்தபின் அவர்கள் உங்களைத் தாங்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா? அதில் என்ன நியாயம் உள்ளது?

ஆனால் என் கவலை இதை விட , இப்படிக் கூட்டம் போட்டு டீ வீயில் பேசும் இந்த அதி புத்திசாலிகளப் பற்றித்தான். இப்படியெல்லாம் பேசி சின்ன வயசுப் பசங்களைக் குழப்பி விட்டு, பின் அவர்கள் குடித்து, கண்ட சித்தாந்தங்களைப் பேசித் திரியும் போது, இந்த மேதாவிகள் காணாமல் போய்விடுகிறார்கள். டீ வீயில் பேசுபவர்களுக்கும் ஒரு சமூக பொறுப்புணர்வு தேவையில்லையா? யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசி விடலாமா? இப்படியே விட்டால் கண்டிப்பாக டீ வீக்கும் சென்சார்கள் தேவைதான்.

இன்னொரு விவாதத்தில் ஒரு குடும்பப் பெண் சொல்கிறாள் " இவர் வீட்டில் குடிப்பதோ அல்லது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதோ பரவாயில்லை. நானே சில சமயங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வெளியே குடிக்கக் கூடாது". நம் பெண்களும், அடக்க வேண்டிய சமயத்தில்  எப்படி வளைந்து கொடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் !

இன்று உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் பாட்டில்களைப் பார்க்கும் உங்கள் மகனுக்கு பின்னால் உங்களுக்கு ஞானோதயமோ, வியாதியோ வந்த பிறகு எப்படிப் புரிய வைக்கப் போகிரீர்கள் இது தப்பு என்று. 


முடிவாக இதே டீ வீயில் மக்களரங்கத்தில் கேட்ட இன்னொரு பெண்ணின் வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகிறது - " எது தப்பு? நீங்கள் தனியாகச் செய்யும் எந்த ஒரு காரியத்தை  நாலு பேர் முன் செய்யத் தயங்கிகுறீர்களோ, அது தான் தப்பு".  இதற்க்கு விவாத மேடையும், அரை குறை அறிவு ஜீவிகளும் தேவையில்லை. இது உங்கள் வாழ்க்கை, நீங்களே புரிந்து, முடிவெடுத்துக் கொள்ளுங்கள்



Monday, February 18, 2013

என் நேரம் !!


சில விஷயங்கள் நடக்கும் போது நமக்கே ஆச்சர்யமாக இருக்கும்- இது எப்படி எனக்கு மட்டும் ஏறுக்கு மாறாகவே நடக்கிறதுன்னு. கொஞ்சம் கவனிங்க:

ஹிந்து பேப்பர் சரியில்லேன்னு வேற பேப்பருக்கு மாறினா, இப்பத்தான் ஹிந்தூல, நல்ல நல்ல ஆர்ட்டிகிளா வருது.

நான் ஆபீசுக்குப் போரதுக்கு முன்னாடி லேப்டாப்பை மூடினப்புறம்தான், டிங், டிங்குன்னு மெயிலா வருது

நான் கீஸர் போட்றப்பத்தான் கரண்ட் போகுது.

நான் வாசக் கதவைப் பூட்டும் போது தான், வீட்டுகுள்ளே ஃபோன் அடிக்குது

நாம வெளியே போயிட்டு வந்தப்புறம்தான் கேஸோ, குரியரோ "இப்பத்தான் "வந்துட்டுப் போறாங்க"

நாம சிக்னல் கிட்ட வரும்போது தான், பச்சையிலிருந்து ஆரஞ்ச் வருது.

நம் வண்டி கோவிலைக் கடக்கும்போதுதான், ரோடோர ஆஞ்சனேயர் கோவிலில் திரை போடுகிறார்கள்

நான் பில் போடப்போகும் போது தான், பேப்பர் ரோல் தீர்ந்து போறது

ரொம்ப நேரம் காத்திருந்து, என் டர்ன் வர போது தான் டாக்டர் பத்து நிமிஷம் கமர்ஷியலுக்கு ப்ரேக் விட்றார்

மார்கழி மாசம் கோவில் ப்ரசாதம் வாங்கும் போது நான் கிட்ட வரப்ப தான் குருக்கள் குணா படத்தில வர மாதிரி காத்திருக்கச் சொல்ரார்.

தினமும் கரெக்ட்டா வர கார் ட்ரைவர், அவசர மீட்டிங் இருக்கறப்போதான் லேட்டா வரார்.

பாங்குல என் டோக்கன் நம்பர கூப்பிட்டு , உட்காரச் சொல்லிட்டுத்தான் கேஷியர் உள்ளே போய் பணம் எடுக்கப் போறார். திரும்பி வரும் போது தான் அவருக்கு தன் மச்சினி கல்யாணம் நிச்சயமான போன் வருது- சிரித்து சிரித்து பேசுகிறார் என் நகங்கள் காணாமல் போறது பற்றி கவலைப்படாமல்.

செக்குல டேட் போடும்போதுதான் பேனா மக்கர் பண்ணுது

மனைவி வெளியே போயிருக்கும் போது ஒரு ரகசிய காப்பியை லபக்கலாங்ர போதுதான் கேஸ் தீந்து போய் அது யார் பக்கம்னு காட்றது


இன்னும் எத்தனை எத்தனையோ. இதெத்தான் உப்பு விக்கப் போனா மழை வருது, மாவு விக்கப் போனா காத்தடிங்குதுங்குராரோ கமல் 'அபூர்வ சகோதரர்களில்' !!

இதச் சமாளிக்க ஆங்கிலத்தை துணைக்குக் கூப்பிட வேண்டியதுதான் - "You are not matured until you expect the unexpected"

Tuesday, January 29, 2013

யுவர் ஹானர் முன் என் ஹானர்


முதன் முறையாக நேற்று கோர்ட்டுக்குப் போனேன் கைதியாகவோ இல்லை ஹெல்மெட் போடாததற்க்காகவோ இல்லை. என் நண்பன் நுகர்வோர் கோர்ட்டில் யாருக்கெதிராகவோ வழக்குப் போட, அது வாய்தா வாங்கி வாங்கி நேற்று போயே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட, இப்பொழுது பார்த்து நண்பன் ஆஸ்பத்ரியில் படுக்க, அவன் சார்பாக ஒரு கடிதம் கொண்டு போனேன்.

பயந்து கொண்டே கொஞ்சம் பதை பதைப்புடன் வீட்டருகே உள்ள கோர்ட்டுக்கு 10 மணிக்கு சென்றேன். ஏகப்பட்ட நோட்டீஸ் ஒட்டியிருந்த போர்டை தாண்டி ஒருவர் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தார். திரும்பி செல்லில் பேசிக்கொண்டே கண்களால் என்ன என்றார். நான் சொன்னது அவருக்குப் புரியாததால் போனை மறைத்து கோர்ட் ஹாலில் காத்திருக்கச் சொன்னார்.  அரைஇருட்டான பெரிய ஹால் - நிறைய காலி நாற்காலிகள் - ஒவ்வொருவராக வக்கீல்கள் வந்து கொண்டிருந்தார்கள். வயசானவர், கோட்டு போட்டு செருப்புப் போட்டவர், ஆண்ட்ராய்ட்டுடன் இளைஞர், வெற்றிலைச் சாறு கீழே விழாமல் இருக்க வாயை வான் நோக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது வேட்டி கட்டிய வக்கீல், ஜீன்ஸ் போட்ட இளைஞீ - இப்படி பலர்.


சினேகிதன் சொன்னது பென்ச்சு கிளார்க்கிடம் லெட்டெரை கொடுத்துட்டு நீ ஓடியே போயிடலாம்னு. ஆனால் என் நேரம், பென்ச்சு க்ளார்க்கு கவுத்துட்டார்- அவர் மச்சினிக்கு சீமந்தமோ இல்லை அவருக்குத்தான் முழங்கால் வலியோ தெரியவில்லை- சரியாக திங்கள் கிழமை பார்த்து லீவடிச்சுட்டார். என்னைப் பார்த்து உங்க கேஸ் நம்பரைக் கூப்பிடும்போது நீங்களே கடுதாஸியைக் குடுத்துடுங்கோன்னார்கள்.

மெதுவாக ஏற்றிய உஷ்ணம் திடீரென்று "ஸைல.....ன்ஸ்" என்ற உரத்த குரலால் எகிரியது. ஒரு டவாலி முன்னே வர, பின் கம்பீரமாக டை கட்டிய நடுத்தர வயது , பார்த்தாலே "ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்" என்ற நீதிபதி முறைப்பாக உள்ளே வந்து அனைவரது வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டே உள்ளே சென்றார். சிரிது நேரத்தில் மறுபடியும் வணங்கி காந்தி படத்தி முன் அமர்ந்தார். உடனே பாதுகாப்புக்காக ஒரு கயிறு அவர் மேசை முன்னே கட்டப்பட்டது. 

கணினி இல்லாமலே அவர்களின் வேகம் அசர வைத்தது. சினிமாவில் வருவதுபோல் அல்லாமல் மெதுவாகப் பேசியதால் அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. நீதிபதி வழக்குகளை கவனித்த அவசரத்தில் முடங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கை நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. பாவம், அந்த ஹாலை ஏ.ஸி செய்திருக்கலாம் - ஜனவரியிலேயே பலருக்கு வேர்த்தது- வெயிலினாலா இல்லை வழக்காலா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.

என் நண்பனின் வழக்கைக் கூப்பிட்ட உடனே நான் பவ்யமாக கடித்ததை நீட்டினேன். நீளக் கோட்டை நெற்றியில் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயசான வக்கீல் ஓடி வந்து நீங்கள் தான் 'என் நண்பன் பெயரைச் சொல்லி" அவரா என்றார். என் இல்லை என்ற தலையாட்டல் எனக்கென்னவோ அவர் முகத்தில் ஒரு த்ருப்தியை வரவழைத்தது போல் இருந்தது. நீதிபதி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கடித்ததை அவசரமாகப் படித்துவிட்டு 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பெத்தேன் பிழைத்தேன் என்று வெளியே வந்தவுடன் தான் தோன்றியது நான் ஏன் பயப்பட வேண்டும் என்று. 

ஒரு சாதாரணமான குரியாராகப் போன போதே இப்படி இருந்தால் உண்மைக் கைதியாகவோ, குற்றம் சாட்டப் பட்டவர் மனம் எப்ப்படி இருக்கும்?

சினிமாவில் அடிக்கடி பார்க்கும் சில இடங்களுக்கு தப்பித் தவறி ஒரு தடவை கூட  போகச் சகிக்காது போலிருக்கு! 

வெளியில் வந்தவுடன் முதல் காரியமாக ஸ்கூட்டியில் எல்லா பேப்பர்ஸும் இருக்கான்னு பாத்துண்டேன். இங்கெல்லாம் வந்து நிக்க நமக்கு சரிப்படாது 



Monday, January 28, 2013

என் பார்வையில் 'கும்கி'


யானையின் கம்பீரத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். அதனால் கூடிய சீக்கிரம் தூக்கி விடுவார்கள் என்று சொன்னதால் இன்று வலுக்கட்டாயமாக சத்யம் தியேட்டரில் கும்கி படம் பார்த்தேன். எதிர் பார்த்தபடி யானையை வைத்து படம்- ஆனால் எதிர்பாராத விதமாக யானை ஹீரோ அல்ல.

யானை வருது வருது என்றே கதை பண்ணியிருக்கிறார்கள். சில இடங்களில், பகல், இரவு, பகல், இரவு என்று மாற்றி மாற்றி காட்டி திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் கதை  திக்குத் தெரியாமல் அலைகிறது.

ஹீரோ நண்பனுக்கு உதவ கோவில் யானையை வைத்து கண் கவர் ரம்மியமான சூழ்நிலையில் உள்ள கிராமத்துக்கு வந்து அழகிய இளம் கதாநாயகியைப் பார்க்கிறார். காட்டு மக்களின் நம்பிக்கையை ஏமாற்ற முடியாமல் காதலில் சிக்கித் திணறி, டைரக்டருடன் சேர்ந்து திசை தெரியாமல் எப்படி முடிப்பதென்று தெரியாமல் ஓடுகிறார்.

விக்ரம் ப்ரபு நல்ல உயரம், நல்ல நிறம், நடிப்புத் தேவலை. ஆனால் சில இடங்களில் தாத்தா போல் கண்களால் நடிக்க முயல்கிறார்- அதற்க்கு இது ரொம்ப சீக்கிரம். முதலில் நன்றாக நடிக்க வேண்டும். சில இடங்களில் ப்ரமை பிடித்தவர் போல் நிற்க்கிறார். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். ஹீரோயின் லக்ஷ்மி மேனன் அழகாக இருக்கிறார்-15 வயசுக்கு நடிப்பும்  பரவாயில்லை. அந்த காலத்து 'கல்லுக்குள் ஈரம்' அருணா போல் இருக்கிறார்- அவர் போல் காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.

இமானின் இசை பல இடங்களில் திரும்பிப் பார்க்க வைக்கிறது- சூழ்நிலைக்கேற்ப்ப இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ரொம்ப சீக்கிரம் வருவது போல் இருந்தது. சில இடங்களில் கொஞ்சம் ஜாரிங்காகவும்  இருந்தது. ஆனால் படத்துக்குப் படம்  இமானின் இசை அழுந்த ஒரு முத்திரயை பத்தித்துக் கொண்டே முன்னேறுகிறது.

'நல்ல  நேரம்' , 'அன்னை ஓர் ஆலயம்' போல் இதில் யானைக்கு நிரைய நடிக்க வாய்ப்பு கொடுக்காமல், கேமராவை வைத்தே கண்ணை உருட்டி இருக்கிறார்கள்.

பாட்டு எடுத்த இடங்கள் அருமை. லொகேஷன் கண்டு பிடித்தவருக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம். எனக்கென்னவோ இந்தப் படத்தில் பாடல்கள், லொகேஷன் தான் ஹீரோ, ஹீரோயின் என்றே தோன்றுகிறது. அந்த அருவி உச்சியில் ஒரு காட்சி, கண்களை விட்டு அகல மறுக்கிறது. காமிராவுக்கு ஒரு முத்தம் கொடுத்தாலும் தகும்- அப்படி விளையாடி இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல் இருக்கு. ஆடுகளம் பார்த்தபின் ஏதோ நாமே கோழிச் சண்டை போட்டது போல் கையில் ரத்தப் பிசு பிசுப்பை உணர முடிந்தது. இதில் அது இல்லை- கையை பிசையத்தான் முடிந்தது. ஆனால் கடைசி யானகள் சண்டை நன்கு எடுக்கப்பட்டிருக்கிறது.

தம்பி ராமையாவின் நகைச்சுவை நன்றாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் ஓவர் தொண தொண- விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.  குறைத்திருந்தால் அலுப்புத் தட்டாமல் இருந்திருக்கும் 

முடிவில் காதலை வாழ வைப்பதா, படத்துக்குப் பெயர் வைத்ததால் யானையை உயர்த்துவதா, இல்லை கொஞ்சம் மண்ணின் மணம் பாடுவதா என்று அங்குமிங்கும் அலைந்து , ஒரு குழப்பத்திலேயே நமக்கு விடை கொடுக்கிறார் .

படம் முழுவதும் யானையின் பிளிரல் கேட்டாலும், வெளியே வரும் பொழுது ஒரு நிறைவு இல்லை.

இன்னும் யோசித்திருந்தால், சிவாஜி பேரனுக்கு இன்னும் ஒரு பெரிய சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம். 

கொஞ்சம் அடி சறுக்கி இருந்தாலும் விழவில்லை  -     ஒரு முறை பார்க்கலாம். 

Saturday, January 19, 2013

சிந்திக்க ஒரு குறும்படம்


வழக்கமாக குறும்படமோ, நெடும்படமோ நாம் பொழுது போக்குக்குத்தான் பார்ப்போம்.

வித்தியாசமாக  - சிந்திப்பதற்க்காக ஒரு குறும் படம்:http://youtu.be/ufvA_VNj--M

Thursday, January 17, 2013

புத்தகக் கண்காட்சி - 2013

இந்த வருட புத்தகக் காட்சிக்கு போய் வந்தாச்சு. சுமார் மூன்று மணி  நேரம் நல்ல விருந்து, நல்ல கால் வலி, நல்ல பசியுடன் கவனித்த, ரசித்தது சில:

  •  காந்தி சத்திய சோதனை - ஆங்கிலப் புத்தகம் 36 ரூபாய் ஆனால் தமிழில் 54 ரூபாய்- ஆஹா- செம்மொழிக்குத்தான் என்ன ஆதரவு 
  •    மனோரமா இயர் புக்- குண்டுப் புத்தகம் 180 ரூபாய் தான்- கண்டிப்பாக விலைக்கு ஏற்ற சமாச்சாரம் இருக்கும்- வாங்க ஆசை- ஆனால் வீட்டில் படிக்கத்தான் ஆள் இல்லை
  •   இந்திய அரசின் புத்தகங்கள் படு சல்லிசான விலையில் , வாங்க ஆளின்றிக் கிட(டை)க்கிறது. க்ருஷ்ண மேனன்    புத்தகம் 13 ரூபாய்க்கு சந்தோஷமாக வாங்கினேன். கட்டாயம் படிப்பேன்.
  •          விருது பெற்ற "Emperor of Maladies"என்ற புற்று நோய் பற்றிய ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருக்கும் புத்தகத்தை, ரூ 500/- என்ற விலை பார்த்து நைஸாக நகர்ந்தேன். மலிவாக இருந்தால் கண்டிப்பாக வாங்கி இருப்பேன். சுதா மூர்த்தி புத்தகங்களும் இப்படித்தான் வாங்க விடாமல் ஏமாற்றின
  •           நடிகர் சிவகுமாரின் புத்தகங்கள் இந்த வருடம் நிறைய கண்ணில் பட்டது
  •           எப்பொழுது நான் லைப்ரரிக்கோ, இந்த மாதிரி இடத்துக்குக் கிளம்பினாலும் என் அம்மா கேட்கும் வை.மு. கோதைனாயகி புத்தகங்கள்  நிறைய இருந்தது- அம்மா தான் இல்லை.
  •          திருக்குறளுக்கும், பாரதி கவிதைகளுக்கும் இன்னும் உள்ள  வரவேற்ப்பு மனசுக்கு சுகமாக இருந்தது.
  •        Indian Thought Publishers என்ற ஸ்டால்  Lean Sigma, Edward De Bono  போன்ற புத்தகங்களுடன் ஒரு வித்தியாசத்தை அளித்தது.
  •          கிருஷ்ணனும்  குரானும் எதிர் எதிர் ஸ்டால்- தமிழ் நாட்டின் பெருமை சொல்லியது 
  •        ஆல் இண்டியா ரேடியோவாவது ஸீ டீக்கள் வைத்திருந்தார்கள்- கூரியர் கம்பெனிக்கு இங்கு என்ன வேலை என்று புரியவில்லை
  •        வைதீகஸ்ரீ  ஸ்டாலில் கொசுவ புடவை மாமி ஸெல் போனில் ஆங்கிலத்தில் அசாத்யமாக பேசிக் கொண்டிருந்தாள்
  •        அனேகமாக எல்லா புத்தகங்களும், கை சுடுமளவுக்கு விலை
  •    பல ப்ரபலங்கள் வாங்க ஆளில்லாததால், பத்திகைகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
  • கூட்டம் இருந்தது- ஆனால் எல்லோரும் வாங்க வந்தவர்களாகத் தெரியவில்லை. விலை பரை மிரட்டி இருக்கக் கூடும்.
  • நிறைய வியாபார நோக்கப் புத்தகங்கள் தான்- இலக்கியம், கவிதை குறைவு.
  •  இந்த வருடமும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு மவுசு இல்லை. ஆனால் ஒரே ஒரு கடையில் மட்டும் "Shop soiled books"  என்று சேஸ் மற்றும் இர்விங்க் வாலஸ் புத்தகங்களை படு சீப்பாக வைத்திருந்தார்கள்.

வழக்கமான சமாச்சாரங்கள் - பாப்கார்ன், நல்ல கேண்டீன், மனுஷ்யபுத்ரன், ஞானி- போன்றவை இருக்கத்தான் செய்தன. ஆயிரமிருந்தும்  இருண்ட பார்க்கிங்கிலுருந்து தடவிக் கொண்டே கார் எடுக்கும்போது என்னவோ ஒன்று குறைந்த மாதிரி இருந்தது - சொல்லத் தெரியவில்லை. 

ஒன்று நிச்சயம். இதே போல் விலை ஏறிக் கொண்டிருந்தால், மக்கள் வேடிக்கைதான் பார்க்க வருவார்கள்- வாங்குவது இன்னும்  குறையும்.

பி. கு: மேக்கில் தமிழ் படுத்துகிறது. தாறுமாறான Indentationஐ மன்னித்து சமாச்சாரத்தை மட்டும் படிக்கவும்