Tuesday, October 14, 2014

கேரள விஜயம் (3-8 , Oct 2014)


நினைத்தாலே இனிக்கும் - நேந்திரம் பழத்தால் நாவும், வளைந்து தழைந்த தென்னையின் பச்சையால் கண்ணும் ,  எங்கெங்கும் ஓடும் தண்ணிரால் மனமும்- கேரளத்தை கொஞ்சம் நிதானமாகப் பார்க்க ஆசை.

அனைத்தையும் நாலே நாளில் பார்க்க முடியுமென்றால் யார் தான் சலனப் படமாட்டார்கள் - பட்டேனே ! என்னுடன் சேர்ந்து சலனப் பட்ட 21 பேருடன் அதிகாலை 5 மணிக்கு திருச்சூரில் வந்து இறங்கினோம்.

04-Oct-2014(Sat)

முதல் தரிசனம்- வடுகநாதர் கோவில். குளிர்ந்த காலை, விரிந்து , பறந்து கிடந்த பச்சை புல் வெளிக்கு நடுவே பாரம்பரியக் கோவில்- கண்ணுக்குக் குளுமை. எதைப் பார்த்தாலும் படம் எடுக்கத் தூண்டிய அவா. கோவிலின் ஒரு கோடியிலுருந்து ராமேஸ்வரத்தையும், சிதம்பரத்தையும் நோக்கி கும்பிட வசதி. இங்குதான் ஆதி சங்கரரின் சமாதி இருப்பது என்பது இன்று தெரிந்து கொண்ட ஒரு விஷயம்.
வடுகனாதர் கோவில் வாசல்

சென்னை க்ரானைட்டுக்கு மாறாக பச்சை
கோவில் வடக்கு வாசல்
ஆதி சங்கரர் சமாதி





இரண்டாம் கோவில்: திருவெம்பாடி கிருஷ்ணர்

தெருவிலேயே வாசல் உள்ள கோவிலில் ஏற்றி இருந்த கொத்து விளக்குகள் அழகு. இரண்டு, மூன்று , நான்கு என்று எல்லா முகங்களும் ஏற்றுகிறார்கள். ஒரு மிஷின் தானாக சந்தனம் அரைத்துத் தள்ளிக் கொண்டிருந்தது

கொத்து விளக்கு

திருவெம்பாடி கோவில் முகப்பில்
திருவெம்பாடி

அதிகாலை எழுந்தது, அறக்கப் பறக்கக் குளித்தது, இரண்டு பெரீ....ய கோவில்கள் பார்த்தது, வயிறு அடம் பிடிக்க ஹோட்டல் "பத்தானி"ல் இடாலி, சுடுவெள்ளத்துடன் டிபன்.

கோவில் #3 - திருப்பரையார் ராமர்

குருவாயூர் போன்ற முகத் தோற்றத்தை அளிக்கும் கோவில், திருபரையார் ஆற்றின் மேல் உள்ளதால் இந்தப் பெயராம். உள்ளே நுழையுமுன் பட படவென்று வேட்டுச் சத்தம்- இங்கு மட்டுமில்லாமல் பல கேரளக் கோவில்களின் விசேஷமிது. ஒரு காலத்தில் , கபாலீஸ்வரர் கோவிலிலும் இது உண்டு. பின் வந்த நாகரீகத்திலும், அதிகக் கூலி முதலிய பிரச்சனைகளாலும் கை விடப் பட்டதாகக் கேள்வி. ஒன்று தெரிந்தது- இங்குள்ள கோவில்களில் கடவுள், பாரம்பரியம், சம்பிரதாயம் தான் முக்கியம்... மனிதர்கள் அல்ல. இங்கு தான் தமிழ்க் கோவில்கள் கோட்டை விட்டன.


திருப்பரையார் கோவில் முன்
த்ருப்பரையார் ஆற்றின் முன்
திருப்பரையார் பிரகாரம்

அருகிலுள்ள பரதனுக்கே உரித்த இருஞாள குடா, போக முடியவில்லை- நேரமாகி விட்டதால் , நடை சாத்தி விடுவார்களாம். கேரளத்தில் பல கோவில்கள் அதி காலை நாலு மணிக்கே திறந்து சீக்கிரமும் மூடி விடுகிறார்கள். இங்கு வர விரும்புவர்கள் தூக்கத்தை தொலைக்கத் தயாராக இருப்பது நல்லது.

புன்னத்தூர் ஆனக்கொட்டா

கேரளத்துக்கு வந்தபின் யானையைப் பார்க்காமல் இருக்கலாமா? குருவாயூர் அருகிலுள்ள புன்னத்தூர் யானக்கொட்டாவுக்கு வந்தால் கூட்டம் கூட்டமாக யானைகள். சில ஸ்பாட் ஜாகிங் செய்து கொண்டு, சில மண்ணை எடுத்து தலை, முதுகில் போட்டு இதமாக சொறிந்து கொண்டு, ஒரு யானை சுகமாகப் படுத்திருக்க மூன்று பேர்கள் அதைத் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள், சின்ன ரப்பர் ட்யூப் வழியாக ஷவர் வேற. இப்படியாக தத்தம் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த யானைகள் முன் சில வேலையில்லா இளைஞர்கள் முதுகைக் காண்பித்துக் கொண்டு போட்டோ எடுக்க முயல, அது ஒரு சின்ன பிளிறலுடன் அரை அடி முன்னுக்கு வந்தவுடன் பிடித்தனர் ஒட்டம் , நம் இளைஞர்கள், பின்னங்கால் பிடரியில் பட, செல் போன் சிதறி விழ - தில்லி வெள்ளைப் புலி சமாசாரம் படிக்கலை போல- மத்தது போல சாய்ஸ்ல விட்டாங்களோ என்னவோ !!

கும்பல் கும்பலாக காலில் சங்கிலி பிணைத்திருந்த யானைகளூடே ஒன்றைக் காண்பித்து அது தான் தமிழக முதல்வர் கோவிலுக்குக் கொடுத்தது என்றார்கள்.
யானைக் குளியல்
சின்னப் பிளிறல்


இது முடித்து யானைப் பசியுடன் ஹோட்டலுக்குப் போனால் சோளத்தளவு சோறு போட்டு ஸ்பெஷல் சாப்பாடு என்று ஏமாற்றியவர்களை அடுத்த முறை அந்த யானையைப் பார்த்தால் கொஞ்சம் ஒட விட்டு வேடிக்கைப் பார்க்க சொல்ல வேண்டும் !

குருவாயூரிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும், தங்க வைத்த ஹோட்டல் மூன்று நட்சத்திர வசதிகளுடன் ,அருமை. கண்ணை மூடினால் யானை தூக்கிய தும்பிக்கையுடன் எதிரே நின்றதால் தூக்கத்தைத் துறந்து மாலை ஐந்து மணிக்கு போன

 அடுத்த கோவில்: மம்மியூர் மஹாதேவன் 

குருவாயூர் கிருஷ்ணரைப் பார்த்து விட்டு , இந்தக் கோவிலைப் பார்க்கா விட்டால், தரிசனம் பூர்த்தி அடையாதென்பது ஒரு நம்பிக்கை. சின்னக் கோவிலாக இருந்தாலும் சட்டை, பாண்ட் விஷயத்தில் வெகு கண்டிப்பு. கேரளக் கோவில்களுக்குப் போகிறவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது - சட்டைகள் இங்கே சட்டை செய்யப் படுவதில்லை. எவ்வளவு வெய்யில் இருந்தாலும் கவலைப் பட வேண்டாம்- மேல் துண்டு காற்றோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும்.

   
மம்மியூர் சன்னதி முன்


கோவில் -5 : குருவாயூர் கிருஷ்ணர்

இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய ஹீரோவான கிருஷ்ணரைக் காண எல்லோரிடம் ஒரு பரபரப்பு தென்பட்டது. ஏகப்பட்ட பாதுகாப்பு முஸ்தீபுகளுக்குப் பின், இடுப்பு வேட்டி, மேல் துண்டு தவிர பாக்கி எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நீண்ட வரிசையில் போய் நின்றதும் உள்மனம் சொன்னது 'கொஞ்சம் நேரமாகும்" என்று. என்னவானாலும் பரவாயில்லை என்று சங்கல்பித்து பொழுதைக் கழிக்க முதல் படியாக விஷ்ணு சஹஸ்ர நாமம் கோவில் முன்னாலேயே முழுவதும் படித்தது, ஒரு சிலிர்க்க வைத்த உணர்வு! இரண்டு மணிக்கு மேல் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் வரிசையில் நின்று எல்லா விதமான அக்கப் போர்களையும் பேசி முடித்து, சன்னிதிக்குள் சென்று ஒன்றிரண்டு நிமிடமே கண்ணனைப் பார்த்தாலும், அந்த காத்திருப்பு இனித்து, மீண்டும் அடுத்த தரிசனத்துக்கு மனம் ஏங்க ஆரம்பித்தது.


                                


05-Oct-2014 (Sunday)

முதல் நாள் அலைச்சலும், மன நிறைவும் ஒரு நல்ல தூக்கத்துக்கு வழி வகுத்தாலும், மூன்று நட்சத்திர சுகங்களை முழுவதும் அனுபவிக்க முடியாமல் அலறியது, காலை நான்கு மணி அலாரம். சொன்ன படி எல்லோருமே முன்னப் பின்னே ஐந்து மணிக்குள் ஹோட்டல் வரவேற்ப்பில் வந்தால் அங்கு ஜானகி டூர்சின் ரமேஷ்  தன் ட்ரேட் மார்க் சிரிப்புடன் சூடான காபியுடன் காத்திருந்தார்.

ஆனால் வண்டியின் ஓட்டுனர்தான் சொல்லாமல் கொள்ளாமல் ஜூட் விட்டுருந்தார் - அன்று அவருக்கு பக்ரீத் பண்டிகையாம். சொல்லியிருந்தால் நாங்களும் ஈத் முபாரக் சொல்லி இருக்கலாம்.

டூர் ஏற்ப்பாடு செய்த ரமேஷ் தம்பதியர் , சுஜாதா பாஷையில் , கிரைஸிஸ் ஆசாமிகள். உடனே அடுத்த ஆளைப் பிடித்து, வேறு வண்டி ஏற்பாடு செய்து, சில பலரைச் சத்தம் போட்டு விட்டு எங்கள் கும்பல் நகர்ந்த போது, ஒரு இரண்டு மணி நேரங்கள் விரயமாயிருந்தன.

கோவில்-6 - கொடுங்கலூர்

சிரித்த முகத்துடன் வந்த புது ட்ரைவர் வைத்த காலை ஆக்சிலேட்டரிலுருந்து எடுக்காமலே நம்மைக் கொண்டு சேர்த்தது, கொடுங்கலூர்.  நம்ம ஊர் மாரியம்மன் கோவில் போல் தோற்றமளித்த கோவில் முன் பெரிய வரிசை இருந்தாலும் சுறுசுறுப்பாக நகர்ந்தது. சக்தி வாய்ந்த பகவதி அம்மன் கோவில் வாசலில் கட்டி இருந்த வாழைத்தாரில் பாதி காயாகவும், மீதி பழமாகவும்  இருந்தது இது வரை காணாத அதிசயம். கண்ணகி முக்தி அடைந்த இத்தலத்தில், அனைத்து சக்தியையும் அடக்கி வைத்திருந்ததாகச் சொல்லப்படும் ஒரு தூணையும் பார்க்க முடிந்தது.


அதிசய வாழைத் தார்
  
சுந்தரத் தமிழைப் பார்த்ததும் பசி போயிந்தே 
சீக்கிர தரிசனத்துடன் சந்தோஷமாக நாஸ்தாவுக்கு தேடினால் ஒரு ஹோட்டல் கூட திறக்கவில்லை, பண்டிகையாம் !! . தேடிப் பிடித்துச் சென்ற 'பிராமின்ஸ் ஹோட்டல்'  வாசல் போர்டில் இடாலி, உஈத்தப்பம், உழுந்து வடை, கப்ளப கிழங்கு, பச்சி (பஜ்ஜியாம் !!)  எல்லாம் இருந்தாலும், உள்ளே 'அழகன்' படத்தில் மம்மூட்டியாக வரும் அவசர டிபனான உப்புமா மட்டுமே இருந்தது. இருந்த பசிக்குக் கிடைத்த அமிர்தத்தை விழுங்கி விட்டு, பயமுறுத்தும் மேகங்களோடேஅடுத்து போய் சேர்ந்த:

கோவில்-7 - திருவாஞ்சிகுளம்

வெளியிலஇருந்து பார்க்க கொஞ்சம் தூக்கத்திலுருந்தார்போல தோற்றமளித்த சிவன் கோவில் உள்ளே அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. கோவிலின் ஒவ்வொரு மூலையும் பழமைக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தது.

       






கோவில்-8 - காலடி 

அடுத்துப் போன காலடியில், உச்சி வேளை தீபாராதனை. அந்தக் கோவில் உள்ள அருமையான சூழ்நிலை, அப்பொழுதுதான் முடிந்திருந்த ஹோமத்திலுருந்து வந்த புகை, அந்த இடத்தின் அமைதி, பின்புறம் ஓடும் ஆறு எங்களைச் சொக்க வைத்தது. ஆதி சங்கரரின் கதை சொல்லும் படங்கள், அங்கு வருபவர்களுக்கு ஒரு பிரசாதம்.












   


அதை முடித்து அந்தச் சுவை இன்னும் உள்ள போதே போன "ஆதி சங்கர பகவத் பாத கீர்த்தி ஸ்தம்ப மண்டபத்தில்" உள்ள அனைத்து படங்களும் ஒரு உன்னத நிறைவைக் கொடுத்தது.








       






அன்று மாலை  கோவில்- 9- சோட்டானிக்கரை பகவதி அம்மன் தரிசனம். மிதமான கூட்டத்தில் , இளம் மாலையில், அம்மனின் சன்னதியில் உள்ள தாழம்பூ விளக்கு ஒளியில், தரிசனம் சிலிர்க்க வைத்தது. திரும்பத் திரும்ப வந்து தரிசனம் செய்து விட்டு, பின் புறம் உள்ள கோவிலையும் தரிசித்து, அங்கு வேண்டுதலுக்கு வேட்டுப் போடும் காட்சியும் அதிசயித்து விட்டுப் புறப்பட்டோம்.

                                       

இதனுள் இரவு வந்து மாலையைக் கவ்வ, இதுவரை பொறுமை காத்த மேகங்களும் தன் விரக்தியக் காட்ட, மெல்லிய மழை நிறைந்த இருளில் வந்து சேர்ந்தது தான் கோவில்-10 - வைக்கம்.













அவ்வளவு பெரிய கோவில் சுற்று வட்டாரத்தை இது வரை கண்டதில்லை. எந்தப் பக்கம் போய் எந்தப் பக்கம் வருவது என்று முடிவு செய்வதற்க்குள், சிவனுக்கு அபிஷேகம் முடிந்து, தீபம் காட்டி கண் சிமிட்டும் நேரத்தில் நடையையும் சாத்தி விட்டார்கள். எல்லாமே பிரமாண்டம் தான் இந்தக் கோவிலில்

மணி எட்டை நெருங்க கொஞ்சம் வண்டியை விரட்டி, அவசர அவசரமாகப் பார்த்தது தான் கோவில்-11- காடுதுருத்தி.  மொத்தம் உள்ளே இருந்ததே ஐந்து நிமிடங்கள் தான், நாங்கள் வெளியே வர உம்மாச்சியும் தூங்கப் போய்ட்டார்



மேலும் ஒரு கோவிலப் பார்க்க முயன்று முடியாமல் போய், இரவு ஒன்பது மணிக்கு கோட்டயத்தில் உள்ள ஒரு அருமையான ஹோட்டலில் தஞ்சம். சாவியை வாங்கி , மாடிக்குப் போய் ரூமுக்குள் போனதும் தூங்கி விட்டோம்- அவ்வளவு அசதி, இருந்த மெத்தையும் அவ்வளவு சகம்.

06-OCT-2014 (MON)

முடிந்தவரை எல்லாக் கோவில்களும் இன்றே பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் காலை 3.30 மணிக்கே எழுப்பப் பட்டு, கோவில்-12- ஏட்டுமானூர் போன போது மணி ஐந்து. அந்த வேளையில், எண்ணை வழுக்கும் அந்தத் தரையில் மெல்ல நடந்தால், ஏட்டுமானூர் சிவன் , அருமையான தரிசனம். மெல்லிய ஹோமப் புகை, எண்ணை விளக்கு ஒளியூடே பார்த்த பகவானை , மார்கழியை நினைவுப் படுத்திய அந்த தரிசனத்தை  மறப்பது  கடினம்.


 



எங்களின் பொறுமைக்குப் பரிசாக ஜானகி டூர்ஸ் அளித்த சிறப்புப் பரிசுகள் தான் , அட்டவணையில் இல்லாத சில கோவில்கள். அதில் ஒன்று தான் கோவில்-13- குமார நல்லூர் பகவதி அம்மன். இப்படிப் பட்ட கோவில்களைப் பார்ப்பதே ஒரு பாக்யமென்றால், அந்த அதிகாலை அம்மனுக்கு அழகூட்டியது.

                                

                


அடுத்துப் போன கோவில்-14- திரு நகரா , ஒரு கோவிலைப் போலில்லாமல் ரிஸார்ட் போலிருந்தது. அவ்வளவு சுத்தம். இப்படிக் கூட ஒரு கோவிலைப் பராமரிக்க முடியுமாவென்று தமிழ் நாட்டு அறங்காவலர்கள் , இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சீவேலி எனப்படும் தரிசனத்துடன், ஸ்வாமி கூடவே சென்று வலம் வந்து, உள்ளே சன்னதிக்குப் போனால் சிலர் மெல்லிய குரலில் பாட்டுப் பாடியது, பக்தியைக் கூட்டியது.












அடுத்துப் போன கோவில்-15- தக்ஷிண குருவாயூர் , ஒரு இனிமையான இலவச இணைப்பு. சில நாட்களுக்கு முன் பார்த்த அதே கிருஷ்ணர், சின்ன அமைதியான கோவிலில்.







ஒரு நல்ல டிபனுக்கப்புறம், வேனில் சுகி சிவத்தின் தமிழ் வெள்ளத்துடன் சென்றடைந்த கோவில்-16- செங்கனாச்சேரி - பெரு நா முருகன். இந்தக் கோவிலில் எல்லா இடங்களிலும் முருகனின் வேல் தலை கீழாக இருந்தது. சூரனை சம்ஹாரம் பண்ணியவுடன் குருதி தோய்ந்த வேலுடன் வந்த முருகப் பெருமான் , குருதி மண்ணில் இறங்க வேலை தலை கீழாகப் பிடித்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள சித்திரங்கள் அனைத்தும் ஒரு விருந்து, வினாயகரின் சிரித்த முகத்தை இங்கு தான் முதன் முறையாகப் பார்த்தேன். இதுவும், எங்கள் திட்டத்தில் இல்லாத ஒரு கோவில் - வாழ்க ஸ்ரீ ஜானகி டூர்ஸ் குடும்பம் !







அடுத்து வந்த கோவில்-17- திருவள்ளா. 

வெய்யில் ஏறியதால் , இந்தக் கோவிலின்  பிரமாண்டமான பிரகாரங்களைத் தாண்டுவது எல்லோருக்கும் ஒரு சவாலாகத் தான் இருந்தது. கோவிலில் உள்ள சிற்பங்களும், சித்திரங்களும் காமிராக்களுக்கு நிறைய வேலை வைத்தது.






கோவில் -18, செங்கனூர் பகவதி அம்மன். 

இக்கோவிலைப் பற்றி முன்பே வலைதளங்களில் படித்திருந்த தால் நான் எதிர் பார்த்த கோவிலிது. முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒரு துரை இந்தக் கோவிலை இடிக்க உத்திரவிட்டதும், அவர் மனைவிக்கு நிற்காத உதிரப் போக்கால் சாகும் நிலை அடைய, அந்த உத்தரவை திரும்பப் பெற்றவுடன் சகஜ நிலை திரும்பியதாக நம்பப் படுகிறது. இன்றும் இந்தக் கோவில் அம்மனின் மாத விடாய் காரணமாக, மாதம் மூன்று நாட்கள் ,மூடுவதாகச் சொல்லப் படுகிறது. கொஞ்சம் சுமார் கூட்டத்துடன் ஒரு திருப்திக்ரமான தரிசனம்.












நல்ல வெய்யிலில் கொஞ்சம் விசாரித்துக் கொண்டே அடுத்த போன போனஸ் கோவில் -19 அரன்முளா பார்த்தசாரதி. மூடி விடுவார்களோ என்ற பயத்தில் ஓடினால் நிதானமாக உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்தது. கோவிலின் பின்புறத்தில் ஓடும் ஆறும் அதில் சென்ற படகும், சாதாரணனின் கேரள ஏக்கத்தை தணிப்பதாக இருந்தது.







ஆரிய பவன் என்ற பெயரால் ஏமாற்றப் பட்ட (அதோ வெள்ளையாக இருக்கே, அது தான் ஸார் மோர்) ஒரு மட்டமான சாப்பாட்டுக்குப் பின், வண்டியில் ஒடிய படத்தைப் பொருட்படுத்தாமல், காலை தொலைத்த  தூக்கத்தைச் சரிக்கட்டிக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கிப் பயணப் பட்டோம். நாலு மணிக்கு ஒரு நல்ல ஹோட்டலில் தஞ்சமடைந்து, இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கியமான கோவில்- 20 - அனந்தபத்மனாப ஸ்வாமி கோவில் சென்றடைந்தோம்.




இந்தக் கோவில் மூடித் திறக்கும் நேரம் காலம் தெரியா விட்டால் கொஞ்சம் நேரம் செலவழிந்திருக்கும். நல்ல வேளையாக ஹோட்டலில் விசாரித்து, சாய ரட்சைக்குப் போய் விஷ்ணு சஹஸ்ர நாமம் படித்து, பெருமாளை தொடு தூரத்தில் பார்த்தது, வாழ்க்கையில் குறித்துக் கொள்ள வேண்டிய நாள். இங்கும் குருவாயூரும் பார்த்த தரிசனத்துக்கு எவ்வளவு செலவழித்தாலும் தகும்.

திருவனந்தபுரத்தில் சில ராணுவ வீரர்கள் சேர்ந்து கட்டிய சின்ன ஆனால் சக்தி வாய்ந்த கோவில்-21, மிலிடரி வினாயகர் கோவில் தான், அடுத்து போனது. சின்னக் கோவிலில் நல்ல தரிசனத்துக்குப் பின் கிடைத்த வரம் அன்ன பூரணாவில் ஒரு நல்ல சாப்பாடு. நாளை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம் என்ற நல்ல செய்தியுடன், சுகமான ஹோட்டல் ரூமும், ஒரு நல்ல தூக்கத்துக்கு உதவியது.




07-OCT-2014 (TUES)

டூரின் கடைசி நாள், ஒரு சூப்பர் கோவிலுடன் ஆரம்பித்தது. கோவில்-22 - ஆற்றுக்கால் பகவதி.









இந்தக் கோவிலில் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் சுமர் 25 லட்சம் பேர் வந்து பொங்கல் வைப்பது ஒரு கின்னஸ் ரிகார்டாக அறிவித்தது, அங்கு இருந்த ஒரு பலகை. மிளிரும் வண்ணத்தில் இருந்த கோவிலை வளைத்து வளைத்து புகைப் படம் எடுத்து, மழை வந்தவுடன் வண்டி ஏறி முதன் முதலாக ஒரு கோவிலில்லா இடத்துக்குப் பயணப் பட்டோம்.

சுமார் 90 நிமிடங்களும், நல்ல அரட்டை அலசல்களுக்குப் பிறகு நாங்கள் வந்து சேர்ந்த இடம் 'பூவர்'. இங்கிருந்து வாடகைக்கு இரண்டு படகுகள் எடுத்து, பாதுகாப்பு பெல்ட் போட்டுச் சென்ற அந்தச் சவாரி, உற்சாகத்தின் உச்ச கட்டம், ஏகப்பட்ட புகைப் படங்களுடன்,











ஆரவாரத்துடன் அக்கரைக்குப் போய் கடலலையில் ஆடி ஓய்ந்து இரண்டு மணி சாப்பாட்டுக்குப் பிறகு, சிலருக்கு ஒரே ஏமாற்றம் ஷாப்பிங்கிற்க்கு நேரம் கிடைக்காதது தான். இதன் நடுவில் வந்த பெங்களூரூ செய்திகள் வேறு எல்லாரையும் குழப்பி ஒரு வழியாக 5:20க்கு ரயில் புறப்பட்டப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது.

நான் கவனித்த கேரளத்துக்கே உரிய சில சிறப்பு அம்சங்கள்:

  • பரந்து, விரிந்த கோவில்கள்- அனேகமாக எல்லாமே நன்கு பராமரிக்கப் படுகின்றன
  • த்வஜஸ்தம்பத்துக்கு பதிலாக , அடுக்கு அடுக்காக விளக்குகள்
  • எந்த சன்னிதியிலும் பிரசாதம் கொடுப்பதில்லை. தரிசனம் மட்டுமே
  • பிரசாதங்கள் முக்கியமாக தீர்த்தம், சந்தனம், புஷ்பம் மட்டுமே. சில இடங்களில் இனிப்பான பொறி, சர்க்கரைப் பொங்கலும் உண்டு !
  • த்வஜஸ்தம்பத்தின் கீழ் ஒரு ஆமை- இதன் உருவம்  ஒவ்வொரு கோவிலிலும் மாறிக் கோண்டே இருந்தது.
  • அனேகமாக பல கோவில்களில் யானை பராமரிப்பு இருக்கிறது
  • எங்குமே முழு பிரதக்ஷணம் இல்லை- அபிஷேக ஜலத்தைத் தாண்டக் கூடாது என்ற நம்பிக்கையால்.
  • வினாயகர் , கோவிலுக்கு உள்ளே தான் இருக்கிறது.
  • கோவில்கள் சீக்கிரமே திறந்து விடுகிறார்கள். மாலையில் அதே சுறு சுறுப்பில் மூடியும் விடுகிறார்கள்
  • அனேகமாக எல்லாக் கோவிலிலும் ஆண்களுக்கு மேல் வஸ்திரமோ அல்லது திறந்த மார்பு தான், சட்டை கூடாது. சில கோவில்களில் பாண்ட் கூட அனுமதி இல்லை. வேட்டிதான்
  • மின்சார விளக்கை விட பித்தளை விளக்குகள் அதிகம்
  • நிறைய கோவிகளில் சரம் சரமாக அதிர் வேட்டுகள் முழங்குகின்றன
  • எல்லாக் கோவில்களிலும் ஸாஸ்தா உண்டு

இது நான் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் மூலமாகப் போகும் மூன்றாவது நெடிய பயணம் (கர்னாடகா, நவ திருப்பதிக்குப் பிறகு).

ஒவ்வொரு முறையும் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறேன்- இது ஒரு நல்ல
 நிர்வாகத்திற்க்கு அறிகுறி. தப்புகள் நடக்கலாம். அது தப்பல்ல. ஆனால் ஒரே தப்பை மீண்டும் செய்யக் கூடாதென்பர். இதைத் தெரிந்து வைத்திருப்பது இவர்களின் பலம்.

இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற உற்சாகம் இவர்களிடையே காணப் படுவது இவர்களின் வளர்ச்சிக்கும், இந்தத் தொழிலில் நீட்சிக்கும் விதை விதைக்கிறது.

எதிர்பாரா நிகழ்வுகளை சமாளிக்கும் திறன் நன்கு தெரிகிறது.

இதெல்லாம் விட இவர்களின் உண்மையான எண்ணங்களும், நேர்மையும் இவர்களை வாடிக்கையாளர்களின் மனதுக்குள் ஒர் நல்ல இடத்திற்க்கு அழைத்துச் செல்லப் போகிறது.

குறையே இல்லையா என்று கேட்கலாம். குறை இல்லாமல் எது இருக்கிறது? சீதையையே தீக்குளிக்கச் சொன்ன பூமி இது. காந்தி போன்றவர்களையும் சந்தேகப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.  நாம் செய்யும் எதிலும் நிறைவு இல்லாமல் போகும் சாத்தியக் கூறு உள்ளதால் தான் அதற்கான முயற்ச்சிகள் எடுத்து, முறை வகுக்கிறார்கள். அவ்வப் பொழுது அந்த முறைப் படி நடக்கிறதா என்று சோதித்தும் பார்க்கிறார்கள்.

குறை என்பதை விட இன்னும் சிறப்பாகச் செய்ய சில உத்திகள் தென்பட்டன. எப்படி நான் இவர்களை ஒரு நல்ல வியாபாரியாக நடக்க எதிர்பார்க்கிறேனோ , அதே போல் ஒரு நல்ல வாடிக்கையாளராக நடக்க வேண்டிய ஒரு பொறுப்பும் , கடமையும் என்னிடத்திலும் உள்ளது.

நிறைகளை ஊரரியச் சொல்லி விட்டேன்.  குறை என்று ஓன்று இருந்தால், வியாபார தர்மப் படி,  அதை நான் அவர்களிடம் சொல்வது தான் முறை.  அப்படியாவது எனக்கு ரமேஷ் தம்பதிய்ரைப் பார்க்க கிடைக்கும் ஒரு சந்தர்பத்தை ஏன் நழுவ விட வேண்டும்?

இன்னும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் இதைப் போன்ற கோவில்களுக்குப் போவேன். சந்தர்ப்பம் அமைந்தால் இவர்களுடனேயே போகவும் ஆசைதான் !