Saturday, January 14, 2017

சோழ நாட்டு திவ்ய தேச தரிசனங்கள் - 2016

 'உண்மையான காதல் என்றுமே சுலபமான பாதையில் செல்வதில்லை' என்று சொல்லுவார்கள் (The path of true love never runs smooth) .

என்னளவில் அது எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஒரு மிகச் சாதாரணமான காரியமாக இருந்தாலும் , கொஞ்சம் நம்மைச் சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கும். முடிவில் நன்றாகவே நடக்கும் என்ற அனுபவத்தினால் தான் இதனைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.

இப்படித்தான் மிகத் துல்லியமாக ஏரியா வாறாக ஜானகி டூர்ஸின் ரமேஷ் அனுப்பிய குறுஞ்செய்திப்படி அதிகாலை 4 : 45 க்கே தயாராக இருந்தும், நாங்கள் பயணிக்கப் பட வேண்டிய வேனுக்கு முன் இன்னொரு மஹாநுபாவன் வண்டியை நிறுத்தி விட்டு ஏதோ டீ வீ சீரியல் பார்க்கப் போயிட்டார் போல- மணி ஏழாகியும் கிளம்பிய பாடில்லை. டென்க்ஷன் விண்ணை முட்டி மஹாவிஷ்ணு என்னவென்று மேலிருந்து எட்டிப் பார்த்ததெல்லாம் ஒன்றுமே அறியாத ரமேஷ் அலை பேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டே மந்தைவெளி நாற்சந்தி நடுவில் அலைந்ததைக் கண்டு மனமிரங்கிய பெருமாள் ஒரு வழியாக எட்டு மணிக்கு பயணம் தொடங்க வழி செய்தார். இருந்தாலும் தனுர் மாதத்தில் பெருமாளை நாற்பது திவ்ய தேசங்களில் தரிசனம் செய்ய விழைந்த பதினாறு புண்யாத்மாக்களைச் சுமந்து கொண்ட வண்டி தாம்பரம் தாண்டிய பின் தான் ரமேஷுக்கு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்க கொள்ள முடிந்தது. என்னைப் போல் வண்டியினுள் இருந்தவர்களுக்கு இந்தக் கவலையும் இல்லை -ஏனென்றால் எங்கள் கண்களுக்கு ரமேஷ் அந்தத் தேரோட்டிக் கண்ணனாகத் தெரிந்ததால் கவலையை அவனிடத்தில் விட்டு விட்டு காலை மூன்று மணிக்கே எழுந்ததில் கண்கள் சொருக கொஞ்சம்  சாய்ந்து அமர்ந்து கொண்டவுடன் தட்டி எழுப்பி  ஒரு வெறியோடு அருமையான காலை உணவு கொடுத்த ரமேஷ் அப்போது எங்களுக்கு கடோத்கஜனாகவே தெரிந்தார்.


முதல் நாளே நெய்வேலியில் ஒரு நல்ல மதிய உணவு கிடைத்தாலும் , மாலை நான்கு மணி வரை கொஞ்சம் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருந்த பயணம் சீர்காழியை அடைந்தவுடன் திடீர் உத்வேகம் பெற்றது. அந்த மாலையில் திருவாலியில் தொடங்கிய திவ்ய தேச தரிசனங்கள், நடுவில் திருநகரியில் மக்கள் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்த பொழுது  ரமேஷ் கலக்கிய ஸ்பெஷல் காப்பியால் உந்தப்பட்டாலும் ,  இரவினுள் எந்தவித அதிக சிரமமில்லாமல் பதிமூன்று க்ஷேத்திரங்களைக் கண்டது அதிசயமே. அலைந்த உடம்பிற்கும் நிரம்பிய மனதுக்கும் , மறுநாள் இதைவிட மோசமான நீண்ட தூர பயண எண்ணத்துக்கும் ஆறுதலாக இருந்தது வசதியான மாயூர அறை.



ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின் இரண்டாம் நாள் விடிகாலை தரிசித்த 'திரு இந்தளூர்' ராஜ கோபுரமே ஒரு கம்பீரத் தோற்றமளித்தது. திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாளை எழுப்பி ஆசி வாங்கிய பிறகு சென்ற 'தேரழுந்தூர்'  கோவில் தோற்றமே ஒரு தெய்வீகமாக தக தகவென்று  மிளிர்ந்தது.

எவ்வளவு அவசரமாக ஓடினாலும் , திவ்ய  தேச பட்டியலில் இல்லா விட்டாலும் பார்க்கலாம் என்று தீர்மானித்த மயூரநாதர் கோவிலில் அம்மனை மட்டும் தான் தரிசிக்க முடிந்தது. ஆனால் அங்கு கண்ட 1928ஆம் ஆண்டு தேதியிட்ட  ஒரு கல்வெட்டு அதிசயிக்க வைத்தது .


மதிய உணவுக்கு  பெரிய பெயரை நம்பிப் போன ஹோட்டல் உணவின் தரத்தில் ஏமாற்றினாலும் சில நல்ல புகைப் படங்கள் எடுக்க உதவியது.




அடுத்துச் சென்ற 'திருக்கண்ணபுரம்' என்ற அருமையான திவ்ய தேசத்திற்கு சீக்கிரம் போனதால் கோவில் எதிரிலுள்ள பெரிய குளக்கரையில் அமர்ந்த நேரம் மறக்க மறுக்கும்   மணித் துளிகள்.

சாய ரட்சையில் திருநாகையில் கண்ட சௌந்தர ராஜப்  பெருமாள் தரிசனம் என்றும் இனிக்கும் .

அடுத்துச் சென்ற 'திருக்கண்ணங்குடி' யில் திவ்ய தீபாராதனை காட்டிய குருக்களின் தாயில்லாப் பெண் படிக்க பணம் கொடுக்க முடியாது கஷ்டப் படுவதைக் கேட்ட பொழுது அதே நாராயணனிடம் கொஞ்சம் அதிகமாக அந்தப் பெண்ணுக்கும் சேர்த்து வேண்டிக் கொள்ளத்தான் முடிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை, மதிய உணவுக்கு ஏமாற்றப் பட்டது போலவே, இரவு களைத்து த(தூ)ங்கப் போன திருவாரூர் ஹோட்டலிலும் ரூம் இல்லை என்று டென்க்ஷனை கூட்டி அந்த நாளை முடித்தார்கள்.

 மீண்டும் விடிய விடிய எழுந்து சில கோவில்களை பார்த்த மூன்றாம் நாளில்  கண்ட திருவாரூர் தியாகேசர் கோவில் ஒரு அதிகாலை அற்புதம்.



கமலாலயத்தின் முன் நின்று சில நிமிடங்கள் அந்த தனுர் மாதக்காலையின் குளிர்ந்த காற்றை அனுபவித்தது என்று நினைத்தாலும் ஜில்லென்று இ(னி)ருக்கும்  . ஒரு அருமையான காலை சிற்றுண்டிக்குப் பிறகு  தொடர்ந்த பயணம் மற்றுமொரு பிரம்மாண்டமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலுக்கு.



குழந்தை கிருஷ்ணனை மடியில் ஒரு நொடி சுமந்த மன நிறைவுடன் சென்றது கும்பகோணம் சாரங்கபாணி கோவில்.  இப்படிப்பட்ட நெருக்கமான பயண அட்டவணையில் கிடைப்பதற்கு அறிய சில நிமிட மதிய ஒய்வு குடந்தை 'பாப்பி' ஹோட்டலின் இதமான சூழ்நிலையில் கிடைத்தது.

சீக்கிரம் வந்தே பழக்கப்பட்ட இந்தக் குழுவுக்கு நாச்சியார் கோவிலில் கிடைத்த பரிசு அங்குள்ள புகழ் மிக்க பாவை விளக்கு வாங்கக் கிடைத்த கொஞ்ச நேர அவகாசம். அதன்பின் பார்த்த ஒப்பிலியப்பன் கோவிலில் கிடைத்த கூட்டமில்லா தரிசனம் ,  ஒரு ஆச்சரியம் தான் . அடுத்து பயணப்பட்ட நாதன் கோவில் என்றழைக்கப்படும் திருநந்திபுர விண்ணகரம் என்ற சிறு கிராமத்தை அடைவதற்குள் ஒரு த்ரில்லர் படத்தில் உள்ள எல்லா உணர்வுகளும் கிடைத்தது . மிகக் குறுகிய சந்துகளில் புகுந்து சென்ற எங்கள் வண்டியை சரியாக வழிகாட்ட யாருமில்லாத போதும், பெரிதும் நம்பிய கூகிள் மேப் கை விடவில்லை. சில திகில் நிமிடங்களுக்குப் பின் பார்த்த 'நாதன் கோவிலோ ' அற்புதமான ஒரு அழகிய கோவில் .

மூன்று நாட்களின் கடுமையான சுற்றுப் பயணம் உடலில் தெரிய ஆரம்பித்தாலும், பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு உந்தியதே இரவு நன்கு தூங்க உதவிய சௌகரியமான விடுதிகள் , அதிகாலை காபி மற்றும் முக்கியமாக பார்த்துக் கொண்டிருக்கும் சில அறிய திவ்ய தேசங்கள். இப்படியாக நான்காம் நாள் அதிகாலை எழுந்து கும்பகோணத்திலிருந்து சுமார் 45 நிமிட பிரயாணத்துக்குப் பின் அடைந்த அருமையான கிராமம் திருவெள்ளியங்குடி. பெருமாள் கோவில் திறக்கப் படாததால் அருகிலுள்ள ஒரு சிவன் கோவிலை அங்குள்ள மக்கள் திறந்து விட, நம் குழு அங்கு விளக்குகள் ஏற்றி கோவிலையே ஒரு அதிகாலை தரிசனத்திற்கு வழி வகுத்துக் கொடுத்தது ஒரு நல்ல அனுபவம். மார்கழி அதிகாலையில் அங்கு உள்ள கிராம மக்கள் தெருவைக் கூட்டி, விட்டு வாசலில் கோலங்கள் போட்டது கடும் குளிரையும் மறந்து நின்று பார்க்கத் தூண்டியது .
















பின் அங்குள்ள கோலவில் இராமனை  தரிசித்ததில் தெரிந்து கொண்டது இங்கு வந்தால் எப்பேர்ப்பட்ட கண் சார்ந்த நோய்களும் குணமாகி விடும் என்பதே. அதன் பின் திருஆதனூர் என்ற அழகிய கோவிலைத் தரிசித்து திரு புள்ள பூதங்குடியில் கண்ட ஒரு அதிசயம் 'உத்யோக நரசிம்மர்' .

பின் சென்ற கபிஸ்தலத்தில் , கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த கஜேந்திர வரதரின் அமோகக் காட்சியைக் கண்டு அதிசயித்து பின் சென்ற திரு ஆடுதுறை என்ற தலத்தில் மரத்தில் தாமாகவே தோன்றிய சங்கு வியக்க வைத்தது.



அதன்பின் சென்ற, கும்பகோணம் - தஞ்சை பிரதான சாலையில் அமைந்திருக்கும்  திருக்கண்டியூர் என்ற கோவிலில் இருந்த பட்டர் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்திலும் இருந்ததால் ஒரு அவசர தரிசனத்துடன் நகர்ந்தது நம் குழு .

  காஞ்சியில் ஒரு சிவத்தலத்தினுள் அமைந்த திவ்ய தேசம் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் தஞ்சை அருகே உள்ள தஞ்சை மாமணிக் கோவில் என்ற திவ்ய தேசமோ மூன்று கோவில்களைக் கொண்டது. அதாவது, மூன்றும் சேர்ந்தது தான் ஒரு திவ்ய தேசம் !!

தஞ்சையில் ஒரு நிறைவான மதிய உணவிற்குப் பிறகு வெகு நேரம் பயணித்து அடைந்த இடம் திருப்பேர் நகர் என்ற கோவிலடி.



 வெகு சீக்கிரமே வந்ததால் அந்த கிராமத்தை ஒரு சுற்று சுற்றி வர நேர்ந்ததில் காண முடிந்தது கோவிலுக்கு எதிரிலேயே உள்ள ஒரு வீட்டில் இந்தக் கோவிலின் அப்பக்குடத்தான் பெருமாளுக்குப் பிரதான பிரசாதமான அப்பம் செய்யும் இடம். பெருமாளுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் நான் போய் வாங்கி வந்த பாலை வைத்து காபி போட்டுக் கொடுத்து இந்தக் காலத்திலும்  காசைப் பற்றி அதிகம் கண்டு கொள்ளாமலிருந்து அதிசயிக்க வைத்தது.

பின் சென்ற திரு அன்பில் என்ற கோவிலில் பட்டர் விளக்கை அணைக்கச் சொன்னதும்  தக தகவென்று மின்னும் பெருமாளை கண்டது சிலிர்க்க வைத்த தரிசனம். நாளின் கடைசி கோவில்களாக உத்தமர் கோவிலும், உறையூரையும் கண்டு பின் சென்றடைந்தது ஸ்ரீ ரங்கம்.

பொது விடுமுறையாதலால் சொல்ல முடியாத கூட்டம் என்று முதல் நாளே பீதியைக் கிளம்பியதால் மீண்டும் , தொடர்ந்து  ஐந்தாவது நாளாக சீக்கிரம் எழுந்து கோவிலருகே எல்லோரும் கை காட்டிய 'முரளி கடையில்' ஒரு சூப்பர் காபிக்குப் பின் கிளம்பிய எங்களுக்கு  ஸ்ரீ ரங்கனின் திவ்ய தரிசனம் உடனே கிடைத்தது பாக்கியமே.


தாயாரையும் , உடையவரையும் தரிசித்து வெளியே வந்து குழுவிற்கு அநேகமாக எல்லா கோவில்களையும் பார்த்த திருப்தியில் வீடு திரும்பும் மன நிலை வரத் தொடங்கி இருந்ததில் ஆச்சரியமில்லை.

உள்ளூர் வாசி கை காண்பித்து உதவிய ஒரு எளிய மெஸ்ஸில் அருமையான சிற்றுண்டிக்குப் பிறகு சென்னை நோக்கிப் புறப்பட்டு வந்து சேர்ந்ததோ பயணத்தின் நாற்பதாவது திவ்ய தேசமான திருவெள்ளறை.



 முடிக்கப் படாத மொட்டைக் கோபுரம் , ஆனால் நெகு நெகுவென ஓங்கி வளர்ந்து நின்ற புண்டரீகாட்ச பெருமாள் வருபவர்களை சுண்டி இழுத்தது. கோவிலின் பிரமாண்டத்தாலும் , பயணக் களைப்பினாலும் ஒரு சிலர் தாயார் சன்னதியை பார்க்காது நகர அங்குள்ள பட்டர் கோபமடைந்து எப்படி அவர்களெல்லாம் பாபிகள் என்று சொன்னதை விட அவர் சொன்ன 'எமன் உங்களைக் கண்டவுடன் கள்ளரைக்கு வருமுன் வெள்ளறையைக் கண்டாயோ என்று கேட்பான்' என்று சொன்னது மேலும் அழுத்தமாகப் பதிந்தது.

ஒரு மிகுந்த மன நிறைவுடன்  நாற்பது திவ்ய தேசங்கள் , மேலும் மூன்று பிரசித்த பெற்ற சிவ ஸ்தலங்கள் என்று ஐந்து நாட்களில் பார்த்து, நிறைவாக திருச்சியில் எங்கள் குல தெய்வத்தையும் பார்த்து நன்றி சொல்லி விட்டு வந்த போது அடைந்த மன நிறைவுக்கு முன் ஐந்து நாள் அசதியும், உடல் வலியும்  காணாமல் போயிருந்தது .

 சென்ற இடங்களில் எல்லாம் எழுந்த ஒரே வியப்பு , நம் தேசத்தில் இவ்வளவு பழமையான, புராணச் சிறப்பு வாய்ந்த இத்தனை தலங்களா !

இவையெல்லாம் கட்டுக் கதை இல்லை - ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள். ஏகப்பட்ட சான்றுகள் இருக்கின்றன - சான்று என்று ஒன்று தேவைப்பட்டால்.

இவற்றையெல்லாம் தரிசிக்க தேவைப் படுவது நிதி மட்டுமல்ல  - குறிப்பாகச் சொன்னால் நிதி பட்டியலில் கடைசியில் தான் வரும்.

முதலில் உடல் ஆரோக்கியம், இவ்வளவு இடங்களுக்கும் நேரம் விரயமாகாமல் கூட்டிச் செல்ல ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நல்ல பயண ஏற்பாட்டாளர்கள்,  நல்ல தங்குமிடம், உடலுக்கு சுகமான ஆகாரங்கள் , அழைத்துப் போக வழிகாட்டி, கூட வர அதே மன ஓட்டமுடையவர்கள், நண்பர்கள்- இவை அனைத்தையும் ஒன்று சேர்ந்து சீராக கிடைப்பது என்பது தான் ஒருவரின் அதிருஷ்டம். எங்களுக்கு கிட்டியது.

முயன்றால் உங்களுக்கும் கிடைக்கும். நீங்களும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Note: To view more pictures on this Divya Desam tour , please visit my picture blog:  http://kapalipics.blogspot.in/2017/01/forty-divya-desams-some-frozen-frames.html