Sunday, May 24, 2015

யாருக்குச் சொந்தம்?

காலை பக்திமயமான கதைகளை கேட்டு சிறிது தெளிந்த மனத்தில் இருக்கும் பொழுது தொடர்வது சென்னையைச் சுற்றியுள்ள நிலங்களும் அதை எவ்வளவு மலிவாக இன்றே வாங்கலாம் என்ற காட்டுக் கத்தலும்தான். முதலில் சென்னைக்கு அருகே "ஒரு மனை நான்கு லட்ச ரூபாய்தான்" என்றார்கள். கடைவாயைத் துடைத்துக் கொண்டே திரும்பவும் பார்த்தால் 600 சதுர அடி மனை நாலு லட்சம்" என்றார்கள். ஆஹா ! விளம்பரத்திலேயே தொடங்குறாங்க வில்லங்கத்தை.

மனிதனின் அபார புத்தியை நினைத்தால் வியப்பாகத் தான் இருக்கு. ஏதோ படம் வரைவது போல் காற்றில் கோடுகளைப் போட்டு இது வரவேற்பறை, இது சமையலறை என்று அழகாகக் கூறு போட்டுவிட்டான். இந்த வான்வெளியில் இடையிடையே  மரச்சட்டங்களை நட்டு  அதைக் கதவு என்றழைத்து அவரவர்களின் எல்லையையும் நிர்ணயித்தும் விட்டான்.

 நில உரிமை விஷயம் கொஞ்சம் விவகாரமாகத் தான் இருக்கு.  நான் நிலம் வாங்குவதற்க்கு முன், ரொம்ப ஜாக்கிரதையாக வக்கீல் பார்த்துச் சொன்னார் " எல்லா டாக்குமென்ட்ஸையும் பாத்துட்டேன். ஒரு வில்லங்கமும் இல்லை. 13 வருஷம்  இல்லை 25 வருஷ வில்லங்கப்பத்திரம் இருக்கு. பட்டா, அடங்கல் எல்லாம் ஸ்ப்ஜாடாப் பாத்துட்டேன். தைரியமா வாங்கலாம்".  நியாயப் படி, சட்டப்படி எல்லாம் சரியாத்தான் இருக்கு.

ஆனால், அந்த 25 வருஷம் முன்னாடி  நிலத்தை யார் வெச்சுண்டிருந்தா, யாருக்கு வித்தா? இப்படியே பின்னோக்கிப் போனா, முதன் முதல் இந்த நிலத்தை யார் வெச்சுண்டிருந்தா, அவருக்கு யார் அதை விற்றது?? இதன் ஆரம்பம் என்ன?? யாருக்காவது தெரியுமா? கொஞ்சம் பிரபல நகைச்சுவை கேள்வியின் வாடை அடிப்பதைத் தாண்டி சிந்திக்க வேண்டி இருக்கிறது. இப்படியாக காற்றில் வரைந்து, நிலத்தைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கூறே போடாமலும் மொத்த விற்பனையாகவும் செய்கிறார்கள் என்று நம்ப வைப்பது சமீபத்தில் வந்த ஒரு செய்தி "மதுரையில் ஒரு கிரானைட் மலை காணவில்லை"

எதற்கு இவ்வளவு சிரமம்-  மலையைத் தோண்டியோ அல்லது நிலத்தை சுரண்டியோ பங்கு போடுவதை விட மிகச் சுலபமாக மேலோட்டமாக உள்ளதை அள்ளி விற்பதுதான் மணல் கொள்ளை போலும்.

இப்பவே சென்னை நிறைந்து செங்கல்பட்டு தாண்டி திண்டிவனம், மைலம் முருகன் கோவிலுக்கருகில் என்ற விளம்பரங்களைக் காண முடிகிறது. கொஞ்ச வருஷத்துக்குப் பின் சென்னை- கன்யாகுமரி பாதையில் உள்ள நிலங்கள் வாங்கப் பட்டு விட்டால், அதற்க்குப் பிறகு வரும் நம் பேரக் குழந்தைகள் எங்கு வீடு கட்டுவது? வங்கிகள் யாருக்கு வீட்டுக் கடன் கொடுப்பார்கள்?

இப்படியாக பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் இந்தியாவைக் கூறு போட்ட முதல் பங்கில் வந்தது தான் இன்றைய மாநிலங்கள் போல. இதில் தத்தம் மாநிலத்தில் ஓடும் நதிகளை தனக்குத் தான் என்று சொந்தம் கொண்டாடி இன்னொரு நீர் வியாபாரமும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இதே நிலையில் போனால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் நம் சண்டைகள் இங்கிருந்து விண்ணுக்குத் தாவவும் வாய்ப்பிருக்கிறது போல் தெரிகிறது. சந்திரனிலும், செவ்வாயிலும் முன் போகும் நாட்டவர்கள் அவரவர்கள் கொடியை நட்டு சொந்தம் கொண்டாடத் துவங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் 
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான்  நிலம் தனைப் படைத்தான்

Tuesday, May 5, 2015

நரசிம்மரைத் தேடி

அந்த இடத்தை அடையும் பொழுது கிட்டத் தட்ட முழு இருள் சூழ ஆரம்பித்து விட்டது. ரொம்ப பிஸியான கும்பகோணம் - மாயூரம் சாலையில் பல வாகனங்கள், சிக்னல்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது, திருனாகேஸ்வரம் அருகில் சரேலென்று ஒரு சின்ன சந்தில் இடது புறம் திரும்பி விரைந்தால் அந்த அனேக இருளிலும் கிராமத்தின் மணம் தெரிந்தது. இடிந்து விழக் காத்திருக்கும் திண்ணை வீடுகள், சில மாதங்களுக்கு முன் குட்டையாக இருந்து இன்று வாடிக்கொண்டிருக்கும் பள்ளம், கிராமத்துக்கே உரித்தான மாரியம்மன் கோவில், தெருவில் விளயாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் , மங்கலான தெரு விளக்குகள் இவர்களைக் கடந்து,  இருட்டில் வழி தெரியாமல் கொஞ்சம் ஊர் சுற்றி விட்டு நுழைந்தால் ஒரு அமைதியான தெரு முனையில் வரதராஜப் பெருமாள் கோவில் இரவு உற்சவத்திற்க்கு வண்ண  விளக்குகளுடன் தயாராகிக் கொண்டிருந்தது. கோவில் முன்னே உள்ள ஒரு நீண்ட தெருவின் வீட்டு வாசல்கள் அப்பொழுது தான் தெளிக்கப்பட்ட நீரின் மண் கலந்த வாசத்துடன்  புது மணப்பெண்ணாக மின்னிக் கொண்டிருந்தன.

தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே கேட்டது உயர்ந்த குரலில் பாடல்கள். இக்கால ஹாலைக் கடந்து உள்ளே போனால் வியக்கத் தக்க மர வேலைப் பாடுகளுடன் வேயப்பட்ட கூரையடியில் ஒரு பஜனை குழு ஒலி பெருக்கி இல்லாமல் இயற்க்கைச் சூழ் நிலையில் மனம் மறந்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல மனம் படைத்தவரின் அருமையான வடை, பாயாஸ சாப்பாட்டிற்க்குப் பின் கூட்டம் மெதுவாக கோவிலை நோக்கிச் சென்றது. மாக்கோலம், வண்ண விளக்குகளிடையே கோலாகலம் பூண்டிருந்த கோவிலில் எல்லோரும் வந்து உட்கார வினாயகர் வரும்பொழுது மணி பதினொன்றைத் தாண்டியது. நன்றி நவிலல் எந்த நிகழ்ச்சிகளிலும் கடைசியில் தான் இருக்கும் ஆனால் இங்கோ முதலில் தொடங்கியது- அது ஏனென்றும் பிறகுதான் புரிந்தது. நன்றி சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு பணம், பொருள், உடலுழைப்புக் கொடுத்தவர்களின் பட்டியல் பிரமிப்பாக இருந்தது. அதில் ஒரு தொண்ணூறு வயது தம்பதியரும், இன்றைய ஐ டி துறையில் இருக்கும் பல இளைஞர்களும் ஒன்று சேர இருப்பதை அறிய நெகிழ்ச்சியாக இருந்தது.

சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத எனக்கே தூக்கம் வராமல் கட்டிப் போட்டது அங்கு நடந்த இசை நிகழ்ச்சி. பின்பு தான் தெரிந்து கொண்டேன் அன்று பல பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று ! வினாயகர் தொடங்கி, மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, முனிவர்கள் என்று பலரின் அறிமுகத்தின் பின் வந்த பிரகலாதன் குடும்பம் மெருகேற்றியது. ஹிரண்யன் நுழையும் போது செய்த ஆரவாரம் தூங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களையும் நிமிர்ந்து உட்கார வைத்தது. பிரகலாதனின் தாயார் லீலாவதி ஹிரண்யனிடன் தன் மகனுக்காக வாதாடி, வேண்டியது தாயுள்ளத்தைக் காட்டியது.

சென்னையில் கம்ப்யூட்டர் கோட் எழுதிக் கொண்டிருக்கும் பிரஹலாதனாக நடித்தவரின் உழைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. விடி காலையில் நரசிம்ஹரின் வரவு பலரை சாமியாட வைத்தது. இந்த உச்ச கட்ட பக்திக்குப் பின் முடியாது என்றறிந்து தான் நன்றி நவிலலை முதலிலேயே முடித்துக் கொண்ட அவர்களின் புத்திசாலித்தனம் புரிந்தது. இரவு முழுதும் விடாமல் பாடியும் சிறிதும் களைப்பை வெளிக் காட்டாமல் அதே உச்சஸ் தாயியில் பாடும் அந்த இசைக் குழுவைக் கேட்க எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம்.

நிகழ்ச்சி முடிந்து காலை ஆறு மணிக்கு ஹிரண்ய வேடம் போட்ட என் உறவினர் வந்து " என்ன மாமா எப்படி இருந்தது" என்று கேட்ட போது, அவர் கையில் உறை வாள் இல்லை என்று உறுதி செய்து கொண்டாலும், கொஞ்சம் தள்ளி நின்றே பதில் சொன்னேன். அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. இந்த ஒரு இரவு நிகழ்ச்சிக்கு இந்த ஊர் மக்கள் படும் பாடு, எடுக்கும் முயற்சிகள்  நெகிழ வைக்கின்றது.

எத்தனையோ இரவுகள் சூப்பர் சிங்கருக்குகாகவும், நமக்கு சம்பந்தமே இல்லாத ஆங்கில புது வருஷத்துக்காகவும் செலவழிக்கும் பொழுது, இந்த ஒரு நல்ல நிகழ்ச்சியைக் காண ஒரு இரவு தூக்கம் ஒன்றும் பெரிய தியாகமில்லை என்று தோன்றுகிறது !