Saturday, November 17, 2012

"துப்பாக்கி" முனையில்


"துப்பாக்கி" படம் பார்த்தபின் தங்கிய சில நினைவுகள்:

வித்தியாசமான விஜை- கொஞ்சம் அதிக குறும்பு, கூடிய இளமை, ஒரு சோம்பேரித்தனமான ஆனால் எதிரிகளைத் தகர்க்கும் அதிரடி, அசரவைக்கும் நடனம். முதல்வன் அர்ஜுனையும், அயன் சூரியாவையும் அடிக்கடி நினைவுப் படுத்துகிறார் - ஆனால் மாறுபட்டு நிற்க்கிறார்

கண்களை உறுத்தாத வண்ணங்கள்- சில இடங்களில் கேமராவின் அபார ஓட்டத்துடன் ஈடு கொடுக்க வேண்டி இருக்கிறது

இயக்குனர் முருகதாஸ்- தன் வித்தியாசமான கதையின் மேல் அபார நம்பிக்கை. நிறைய சிந்தித்திருக்கிறார்- நிறைய பேருடன் விவாத்தித்திருக்கிறார்- உழைப்பு தெரிகிறது. இவரின் புத்திசாலித்தனம் ஹீரோயினை அளவோடு உபயோகித்திருப்பதில், விஜையை தேர்ந்தெடுப்பதில் தெரிகிறது. காவல்துறைக்கும் ராணுவத்துக்கும் உள்ள வேறுபாட்டை மிக மெலிதாக  உணர்த்த முற்ப்பட்டிருப்பது ஒரு நல்ல முயற்ச்சி

ஹாரிஸ் ஜெயராஜ் - ஏமாற்றி இருக்கிரார். பாட்டுக்கள் நினைவில் நிற்க்கவில்லை- முணுமுணுக்க வைக்கவில்லை. கூகுள் கூகுள் திணிக்கப் பட்டு ப்ரபலமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

பாடல்கள் இல்லாமல் இந்தப் படம் ஒரு ஆர்னால்டின் படம் போல் இருந்திருக்கும். ஆனால் கல்லா கட்டாது. ரசிகர்களுக்கும், தமிழ்ப் பட உலகுக்கும், முக்கியமாக முருகதாஸ் அடுத்த படம் எடுப்பதற்க்கும், இவை தேவைப்படுகிறது. பரவாயில்லை - இந்த உலக நன்மைக்காக இந்தச் செல்ல இம்சைகளை சகித்துக் கொள்ளலாம்.

சத்யன்- சிந்திக்க வைக்கிறார். தன் கதாபாத்திரம் மூலம் ஒரு இயற்க்கையான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் கவர்கிறார். ஒரு நடிகனாக இவர் கடந்து வந்த பாதையால் வியக்க வைக்கிறார். சின்ன சின்ன வாய்ப்புகளை எப்படி உபயோகப் படுத்திக் கொண்டு தன் இடத்தை நிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார்! கொஞ்ச உதவியும், நிறைய உழைப்புடனும் ஒருவர் எப்படி முன்னேரலாம் என்பதற்க்கு ஒரு நல்ல உதாரணம்

டைட்டிலில் இருக்கும் முன்னாள் குற்றவியல் தலைவர் கார்த்திகேயனுக்கு நன்றி எதற்க்கு  என்பதற்க்கு கதையில் விடை கிடைக்கிறது. சுஜாதாவிர்க்கு ஒரு நல்ல மாற்று நபரை கண்டுபிடித்த முருகதாசின் சிந்தனைக்கு ஒரு ஓ போடலாம். இக்காலக் கதாசிரியர்களின் புத்திசாலித்தனத்துக்கு, "sleeper cell"  என்னும் புதிய சிந்தனை ஒரு உதாரணம்.

பிடித்தது: பத்து ரீலிலும் எதையோ எதிர்பார்த்து உட்கார வைத்தது, விஜயின் இளமை, குறும்பு, சத்யன் வழியாக ரசிகர்களுடன் பேசும் முருகதாசின் புத்திசாலித்தனம், கதையில் உள்ள சில புதிய நுணுக்கங்கள்/உத்திகள்.

பிடிக்காதது: இவ்வளவு பிடித்தபோது, இது எதற்க்கு- விட்டுத் தள்ளுவோம். இல்லாததைத் தேடுவதை விட இருப்பதை ரசிப்போம்.

ஏமாற்றுவதர்க்கு மன்னிக்கவும். பேனாவை எடுத்து என் எண்ணங்களை கிழிக்க தயாராக வேண்டாம். இது துப்பாக்கி பட விமரிசனம் அல்ல-விமரிசனம் எழுதுவது என் நோக்கமுமல்ல. இந்தப் படத்தை 120 ரூபாய் டிக்கட்டுக்குக் கொடுத்து, மேலும் 500 ரூபாய் செலவழித்து பாப் கார்ன் கொரித்துக் கொண்டே 3 மணி நேரம் தியேட்டரில் செலவழித்தற்க்கு, எனக்கு இதை வெளிப் படுத்துவதற்க்கான உரிமை இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

கில்லிக்குப் பின் நிறையப் பேசப்படும் என்று தோன்றுகிறது. விஜய் இப்படிக் கவனமாகத் தேர்ந்தெடுத்தால், இன்னும் நிறைய நாட்கள் அவரின் பல நல்ல படங்களை எதிர்பார்க்கலாம். 

Friday, November 2, 2012

நீலம் புயலுடன் ஒரு பயணம்


வெகு நாளாகவே கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கு, கா(ர்)ல் போன போக்கில் போக வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் ஒரு மாசம் முன்னாடி டிக்கட் ரிசெர்வ் பண்ணும் போது எதையுமே எதிர் பார்க்காமல் அக்டோபர் 29க்கு சோழன் எக்ஸ்ப்ரசில் ஐந்து பேர் தயாராகி விட்டோம். கிளம்பும் முதல் நாளிலிருந்து வானமும், டீவீ யில் ரமணனும் பயமுறுத்தத் தொடங்கினார்கள். நான் இதைப்போல நிறைய மழை, புயல்களைப் பார்த்ததால் புத்தர் போல் இருந்தேன். என் மன்னியோ, நான் டிக்கட்டை ரத்து செய்வதை பார்ப்பதற்க்கு தயாராக இருந்தாள்.

கிளம்பற தினம் வானம் சும்மாவானும் சில உறுமல்களும், பல பஞ்சுப் பொதிகைகளுமாக பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் போகப் போக மழை இல்லாமல் ப்ரமாதமான அனுபவம் கிட்டியது. அதே சந்தோஷத்தில் , சாயந்திரம் ஆதி கும்பேஸ்வரன் அன்னாபிஷேகத்தையும், மங்களாம்பிகையையும் தரிசித்து, ஒரிரு தோசைகளுடன் அந்த 
நாளை இனிதே முடித்துக் கொண்டோம்.

மறுநாள் சூரியனார் கோவில் போகும் போதே தொடங்கிய மழை , கஞ்சனூர் சுக்ரனுடன் கூடவே வந்து, வைத்தீஸ்வரன் கோவிலில் நான் தரிசனம் செய்யும் பொழுது, ஊரை புரட்டிப் போட்டது. விடாது தொடர்ந்து திருவெண்காடு புதஸ்தலத்திலும் ஃபோட்டோ எடுக்க விடாமல் படுத்தியது. நாங்கள் சென்ற கீழ்பெரும்பள்ளம் மற்றும் திருக்கடையூரில் துணைக்கு நின்ற மழை, திருநள்ளாரில் சனீஸ்வரைக் கண்டவுடன் என்ன குஷியோ அப்படி ஒரு பேயாட்டம் போட்டது.  இந்த நேரத்தில் எங்களுக்கு மழையுடன் ஒரு பரிச்சயம் ஏற்ப்பட்டு, அது இல்லாவிட்டால் எங்களுக்குத் தனிமை தெரிய ஆரம்பித்து. இந்த உற்ச்சாகத்தில், கூத்தனுர் சரஸ்வதியையும் பார்த்தோம். வாசல் கடைகளில் நிறைய பேனா, நோட்டுப் புஸ்தகங்கள்- கடைக்காரர் சொன்னது "ஜனவரி ஆரம்பிச்சால் போதும், எல்லாரும் ஹால் டிக்கட்டோட வந்துருவாங்க" . அதற்க்குப்பின் திருமெய்ச்சூர் லலிதா சஹ்ஸ்ரநாம கோவிலையும் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பியபின், என்ன அதிசயம்- ஒரு சொட்டு மழை கூட இல்லை. இன்னுமொரு அனுபவம் என்னான்னா, நாங்கள் காரில் போகும்போது இல்லாத மழை, காரை விட்டுக் கோவிலுக்குள் போகும்போது வந்து விடும். இதனால் எல்லா கோவில்களுக்கும் நாங்களும் கடவுள் போல குடையுடன் தான் போனோம்!

விடிய விடிய மழை பெய்தாலும், விடாமல் வானிலை அறிக்கை பயமுறுத்தினாலும், மறுநாள் எல்லோருக்கும் ஒரு அரிய வைராக்யம் வந்து விட்டது- மற்ற கோவில்களையும் பார்த்தே விடுவது என்று. சூடான பொங்கலும், ஒரு கும்பகோணம் டிகிரி காபிக்குப் பிறகு, கொட்டும் மழையில் திங்களூரை நோக்கிப் பயணப்பட்டோம். மணல் அள்ளும் நூற்றுக்கணக்கான லாரிகள் வழியில் பொறுமையை சோதித்து நேர விரயம் செய்தது. ஒரு சூப்பர் மழையின் நடுவே, சந்திர தரிசனம். அதே கொட்டும் மழையிலும் ஒரு அருமையான ஆலங்குடி குரு சந்திப்பு. ஆம்- பெரிய கோவில் - தமிழகத்துக்கே உரிய கரண்ட் இல்லாத இருட்டு- அழகிய ஆலங்குடி குரு பகவானின் தரிசனம் எண்ணை விளக்குகளுக்கிடையே. திரும்பி வரும் வழியில் ஒரு எதிர்பாராத கோவில்- வலங்கைமான் ' பாடை கட்டி ' மாரியம்மன்.

 ஒரு நல்ல சாப்பாட்டுக்கப்புறம் கோவிந்தபுரம் புதிய கோவில் - அழகிய இடமாக இருந்தாலும் ஏனோ மனதில் நிற்க்கவில்லை- கொஞ்சம் காமராஜர் அரங்கம் போலிருந்தது. அதற்க்கப்புறம் பார்த்த அதிஷ்டானம் தான் நான் எதிர் பார்த்தது போல- அருமையான சூழ்நிலை. தொடர்ந்து 'ஐயாவாடி' என்று அழைக்கப் படும் "ஐய்வர் பாடி" - அங்குள்ள ப்ரத்யங்கரா தேவி மிகுந்த சக்தியுடையவர் என்றும், பல ப்ரபலங்கள் அங்கு வந்துள்ளதாகவும் சொன்னார்கள். சன்னதியிலுள்ள கூரைகள் முழுக்க உத்ராக்ஷங்கள். ஆதலால் கர்பூர தீபாரதனைகள் தவிர்க்கப் படுவது சிந்திக்க வைத்தது.

அதற்க்கப்புறம் கிடைத்தது ஒரு மறக்க முடியாத சந்திப்பு. ஆம் - உப்பிலியப்பனும் நானும். இந்தக் கோவிலை திருப்பதிக்கு இணையாகச் சொல்வார்கள். ஏழுமலையானுடன் தனியாக ஒரு பத்து நிமிடம் - நம்பும்படியாக இருக்காது. ஆனால் நடந்தது அதுதான். விடா மழையுடன் கடைசியாக ராகுஸ்தலமான திருநாகேஸ்வரம், முடித்து ஹோட்டல் திரும்பியதும் ஒரு சொட்டு மழை கூட இல்லை. என்னுடன் வந்தவர் "ஆண்டவன் நம் பொறுமையை எப்படிச் சோதித்திருக்கிறார்" என்று சொன்னது உண்மையோ என்று சிந்திக்க வைத்தது.

சில நினைவுகள் சில சிந்தனைகள், சில வேதனைகள்:
  1. விழுப்புரம் ஸ்டேஷனில், 20 ரூபாய் என்று அச்சடித்த சாப்பாட்டு பொட்டலத்தை 24 ரூபாய்க்கு விற்றதும்,  என் அண்ணா உடனே ரெய்ல்வேக்கு எஸ். எம். எஸ்  கொடுத்து பதில் வாங்கியது.
  2. நிறைய இடங்களில் மழையில் மூழ்கிய பயிர்கள்
  3. எங்கும் பச்சை
  4. குப்பை, குப்பை - மூட்டை மூட்டையாக குப்பை எல்லா கோவில் அருகிலும்
  5. கும்பகோணச் சந்தையில் பச்சைக் கறிகாய்கள்
  6. குடந்தை டிகிரி காபி
  7. கும்பகோணத்தவர்களின் உபசரிப்பு.
  8. ஹோட்டலில் க்ரெடிட் கார்ட் என்றவுடன் கடைசியில் பே பண்ணினால் போதும் என்றது - இன்னும் வியாபாரம் கெடவில்லை
  9. ஸ்டேஷனில் கொடுக்கும் டபரா, டம்ளர் காபி
  10. அருமையான ரயில் பயணம்
  11. வழியில் பார்த்த உண்மையான பாரதி ராஜாத்தன கிராமங்கள்
நாங்கள் சென்னை வந்ததும் முதலில் கவனித்து- எங்கும் எங்களைத் துரத்திய மழை இங்கு இன்று ஒரு பொட்டு  கூட இல்லை. அடுத்த டூருக்கு மனம் ஆசைப்பட்டது