Wednesday, September 7, 2016

ஒரு 'கிரேசி' முயற்சி

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் குமுதத்தில் படித்த நாடகக் கதை!

அன்று படிக்கும் பொழுது அனுபவித்த அதே ஜோக்குகள் - 70 எம் எம்  திரை, திருவோண நட்சத்திரம் ரயிலை விடும் - போன்றவை இன்றும் குபீர் சிரிப்பைக் கிளப்பியது.

இப்படிப்பட்ட ஒரு அரிய , சுவையான , பின்னோக்கிப் போன பயணத்தை அளித்தது நாடகப்பிரியா குழுவின் 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் ' என்ற நகைச்சுவை நாடகம் ,  மீண்டும் நேற்று அரங்கேறிய பொழுது கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் உதவியால் காண நேர்ந்தது.

நீளம் சற்று குறைவானதுதான் என்றாலும் நகைச்சுவைக்கு ஒன்றும் குறைவில்லை . கூர்ந்து கவனிக்கா விட்டால் ஒரு ஜோக் மக்கள் சிரிப்பிலும், கை தட்டலிலும் பறந்து விடும் என்ற அபாயம் எப்பொழுதும் இருந்தது . எஸ் வீ சேகர் இருந்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அந்த காலத்தில் ஒரு பேச்சு உலவியது - "இவர் எல்லா இடத்துலயும் , எல்லாரைப் பத்தியும் ஜோக் அடிக்கறதால் இவர் அரசியலுக்கு வந்த புதிதில் மக்கள் அதைக் கூட ஏதோ தமாஷ்தான் என்று நினைத்தார்கள்" என்று . அதற்க்கேற்றாற்போல் இவர் தேர்ந்தெடுத்த சின்னமும் அந்த எண்ணத்தைக் கூட்டியது. அதற்குப்பின் பானை தென்னையை வீழ்த்தியதெல்லாம் வேறு கதை , நமக்கு இங்கு தேவை இல்லாதது, நம் தொகுப்பிற்கு அப்பாற்பட்டது!

நாடக முடிவில் பேசிய சேகர் , இதை இவ்வளவு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூசி தட்டி எடுத்து மேடையேற்ற எவ்வளவு கஷ்டப்பட்டோம்  என்று விவரித்தார்.

உண்மை தான் , பல இடங்களில் சில நடிகர்கள் வசனங்களைக்  கோட்டை விட்டாலும் சேகர் நுழைந்து அதையும் ஒரு வசனமாகவே புகுத்தி, சரி செய்த பொழுது தெரிந்தது அவருக்கு நகைச்சுவை உணர்வு இன்னும்  துளி கூட குறையவில்லை என்று.

பேசிக் கொண்டே லாவகமாக நகர்ந்து வந்து சக நடிகர்களை மைக் அருகில் வரச் சொன்னது , அவருடைய  கூர்மையான நாடக உணர்வு சற்றும் குறையவில்லை என்பதையும் காட்டியது.

இவ்வளவையும் கவனித்துக் கொண்டே நொடிக்கு நொடி காட்சிக்கேற்றார்  போல் உடையை மாற்றிக் கொள்ளும் சேகருக்கு ஒரு சபாஷ்.

ஒரு  நடிகரின் உருவம்  கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பதைக் கூட ' நீ கூடத்தான் பார்த்தா அவ புருஷன் மாதிரி இல்ல, தம்பி மாதிரி இருக்கே ' என்று வசனமோட வசனமாக பேசிய பொழுது , அவர் இந்த தூசி தட்டி எடுத்த நாடகத்தை பல முறை மேடை ஏற்றப் போகிறார் என்ற எண்ணமும் புரிந்தது.

மிக சிரத்தையாக 'மைலாப்பூரில் கிரவுண்டு விலை 45000, பெட்ரோல் விலை பத்து பைசா ஏறி ஒரு ரூபாய் தாண்டி விட்டது ' போன்ற வசனங்களால் 2016 இல் போடும் இந்த  நாடகத்தை எழுபதுகளுக்கு தள்ளி விட்டுக் கொண்டே இருந்தது ஒரு நல்ல முயற்ச்சி.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும், கவுண்டரிலிருந்து சூரி வரை வந்து போன பிறகும், இன்றைய மக்கள் நாற்பது வருட வயதான ஜோக்குக்கு குலுங்கிச் சிரித்தது , மோகனின் நகைச்சுவைக்  கிரீடத்தில் பதித்த  மற்றுமொரு வைரக் கல்.

கிரேசி மோகனின் வசனமும், சேகரின் மேடை அனுபவமும்  தூண்களாக நின்று இந்த நாற்பது வருட நகைச்சுவை நாடகத்தை தொய்வு விழாமல் பார்த்துக் கொண்டதற்குப் பாராட்டியே ஆக வேண்டும்.

சேகர் மேலும் தன் பின்னுரையில் , வார நாளாக இருந்தும் நாரத கான சபா உள்ளேயும் , கார் பார்க்கிங்கிலும் நிரம்பி வழிந்ததற்கு  மோகனின் வசனங்களைக் காரணம் காட்டியது அவர்களின் நட்பையும் , நாடகத் துறையில் இன்னும் உலவும் நாகரிகத்தையும்,  பரஸ்பர மரியாதையையும் காட்டியது.

 'மக்கள் நாடகங்களை ஆதரிக்க  வேண்டும், எல்லா நாடகங்களையும் பார்க்க வேண்டும்' என்று அவர்  வேண்டிக்கொண்ட பொழுது நாடகங்களின் மேல் உள்ள அவரின் அதீதப் பற்று , நாடகத் துறை மங்கிக் கொண்டிருக்கிறதே என்ற ஆற்றாமை  போன்றவை தெரிந்தது .

இன்றும் சேகர், சோ, மௌலி , மோகன், மனோகர் போன்றவர்கள் போட்டது போன்ற  நாடகங்கள் வந்தால் மக்கள் பார்க்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.  வந்தால் சொல்லுங்களேன் !!