Sunday, November 30, 2014

அன்று சொன்னது

சில நாட்களுக்கும் முன் படித்த செய்தித் தாளில் ஒரு அதிச்சி தகவல் -  "நம்ம வீட்டு சமையலறையில் கூடத் தொடங்கலாம், நாம் மிகவும் பயப்படும் தொற்றுக் கிருமிகள்" என்று !

ஆம், பெருநகரங்களில் சில ஆயிரம் வீடுகளில் விசாரித்ததில், இவர்களில் பெரும்பாலோர் வாரம் ஒரு முறை கூட சமையலறையை கிருமி நாசினி போட்டுக் கழுவுவது இல்லையாம். நிறையப் பேர் மாதம் ஒரு முறை தான் மிகச் சுத்தமாகக் கழுவுகிறார்களாம். 

இதனால் என்னவாகும்? பல வகை வயிற்று நோய்கள் வருமாம். சமையலறை பார்ப்பதற்க்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாதாம்- அதை தகுந்த விதமாக சுத்தமும் செய்யணுமாம். இந்த அவசர யுகத்தில் தினமும் இதையெல்லாம் செய்ய முடியாது தான் - அப்படிச் செய்தால் ஒண்ணா நடு நிசிக்கு முன்னாடி படுக்க முடியாது, இல்லைன்னா வெளிச்சாப்பாடு அதிகமாகும். 

ஆனால் குடிப்பதற்க்கு மினரல் பாட்டில் வாங்கும் நாம் இதற்க்கும் பயப்பட்டும், செலவழிக்கவும் வேண்டியது தான்.

இதற்க்காகத்தான் அந்த நாட்களில் பல விஷயங்களை நடைமுறையிலேயே வைத்திருந்தார்கள்.

அந்நாட்களில் உபயோகப் படுத்தும் மண் அடுப்பை தினமும் பசுஞ்சாணி போட்டு மெழுகுவார்கள்- ஏன்னா சாணி ஒரு  மிகச் சிறந்த கிருமி நாசினி. தரையை சாணி போட்டுத் துடைப்பார்கள். சாப்பிட்ட இடத்தை சாணியுடன் , மஞ்சள் தூள் கலந்து துடைப்பார்கள்- பூச்சி எப்படி வரும்?

ஆனால் டைனிங் டேபிள் வராத, தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமது. இப்பல்லாம் சாப்பாட்டு மேசைக்கு வண்ணத் துணியை போர்த்தி, கீழே சிந்தாமல் நாசூக்காக சாப்பிடும் காலத்தில், சாணியை எங்கு மெழுகுவது?

தினமும் வாசலில் நன்றாகக் கழுவியபின்னும் , அரிசி மாவில் கோலம் போட்டு புண்ணியத்தையும் சம்பாதித்து, அதே சமயம் கொத்தித் தின்ன வரும் பறவைகளினால் எந்த பூச்சி பொட்டும் வராமலும் காத்தார்கள். இதையும் மீறி வாசல் கதவு இடுக்குகளில் உள்ள துவாரங்கள் வழியாக ஏதும் உள்ளே வரக்கூடாதென்று, ஒவ்வொரு வெள்ளியும் வாசக்காலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தார்கள்.

இந்நாளிலோ, வாசக்காலுக்கு மஞ்சள் வண்ண பெயின்ட் அடித்து, வாசலிலும் ஸ்டிக்கர் கோலம் வைத்து விடுகிறோம். ஆனால் சாணி சமாசாரங்களை இன்றும் கடைப்பிடித்தால் பொருளாதாரத் தட்டுப்பாடும், வேலை வாய்ப்புகளும் பாதிக்கப் படும். பெஸ்ட் கன்ட்ரோல் ஆசாமிகள் வந்து கான்டிராக்ட் போட்டு பத்தே நிமிடத்தில் புஸ் புஸ் என்று எதோ அடித்து நாலு மாசம் கழித்து வருகிறேன் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் உடல் நலம் கருதி ஒத்துக் கொண்டால் கூட, சாணிக்கு எங்கே போகிறது? மாடுகளை பட்டிணத்திலுருந்து நெட்டித் தள்ளிய பால் பூத்துகளில் கிடைக்குமா?

நம் முன்னோர்கள் இந்த மாதிரி பல சமாச்சாரங்களை விட்டுச்சென்றார்கள். என்ன - காரணங்களைச் சொல்லலாமல் விட்டு விட்டார்கள்.  ஏனென்றால் அந்தக் காலத்தில் கேள்வி கேட்காமல் பிள்ளைகள் செய்வார்கள். மேலும் , எதிலுமே ஒரு இலை மறைவு காய் மறைவு இருந்தது. பிற்காலத்தில் பிள்ளைகள் இப்படி முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி வேறென்னல்லாம் சொல்லிருக்காங்க , கொஞ்சம் பார்க்கலாம்:

க்ரஹணத்தின் போது சாப்பிடாதே , வயிற்றைக் காலியாக வை- கதிர் வீச்சுக்களினால் ஜீரணக் கோளாறு வரும் என்று

எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு, விளக்கை அணைத்துப் படுத்து விடுவார்கள், மறுநாள் விடியலில் எழுந்திருப்பதற்க்கு. என்ன அந்தக் காலத்தில் டீ வியும் கிடையாது சீரியல்களும் கிடையாது நம்ம ஊர்ல!  இன்றும் அமெரிக்கர்கள் மாலை ஐந்து மணிலேந்து டின்னர் ஆரம்பிச்சுடராங்க. ஏன்னா, அங்கெல்லாம் காலை ஏழு மணிலேர்ந்தே வாடிக்கையாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கி விடும். லேட்டாவே எழுந்து பழக்கப் பட்ட நம்ம மக்கள், அங்கே போய் ரொம்ப கஷ்டப் பட்டு மாத்திக்கறதாகக் கேள்வி.

தோப்புக் கரணம் - இன்று யோகா வகுப்பில் சொல்கிறார்கள் , காது நுனிகளை மஸாஜ் செய்யும் பயன்களை.

பாழும் நெத்தியோட இருக்காதே - இன்று பல ஆராய்ச்சிகள்  நெற்றியில் பூசப்படுபவைகளின் பலன்களைப் பற்றியும் பொட்டு வைக்கப்படும் அந்த இடத்தின் மகிமை பற்றியும் பல விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன.

வடக்கே தலை வைத்துப் படுக்காதே - தெற்க்கு , வடக்கு துருவ சமாச்சாரங்கள் தான்

தொடை தட்டாதே - சில வகுப்பினர் இதை மயானங்களில்தான் செய்வதால்.

வெளியில் போகக் கிளம்பும் பொழுது தடுக்கினால் கொஞ்சம் உட்கார்ந்து, தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வது- மனத்தடுமாற்றத்தை சரி செய்து  அமைதிப் படுத்திக் கொள்ளத்தான்.

முதல் நாள் வயிற்றைக் காயப் போட்டால், மறு நாள் கண்டிப்பாகக் கீரை சாப்பிடுவது, காலி வயிற்றில் சுரந்து ஏமாந்து போன அமிலங்களின்  கோபத்தை சரிக் கட்டத்தான். இது போலத்தான், இரவில் கீரை வகைகள் சமைப்பதும், சாப்பிடுவதும்- அஜீர்ணத்தைக் கருதியும், இரவில் சமைக்கும் கீரைகளில் உள்ள பூச்சிகள் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் இருப்பதால். கிருபானந்த வாரியாரின் ஒரு உரையில் கேட்டது ஞாபகம் வருது:  "தவிர்க்கப் படவேண்டியவைகள்- இரவில் தயிர், சுடுகாட்டுப் புகை, தன்னை விட மூத்த பெண்களுடன் தகாத உறவு"

அன்று மூத்தோர்கள் சொன்ன பல விஷயங்களை கேள்வி கேட்காமல் செய்தாலே போதும் என்று தான் தோன்றுகிறது.

கண்ணதாசன் சொன்னது போல் "அன்று சொன்னதில் ,நிறைய அர்த்தங்கள் உள்ளது" போல. நம்ப மக்களும் இதெல்லாம் விளக்கிச் சொன்னா கேட்டுப்பானுக. சொல்லத்தான் பல பெரிசுகளுக்கு தெரியவமுல்லை, பொறுமையுமில்லை.

No comments:

Post a Comment