Tuesday, November 25, 2014

மீண்டும் அண்ணா சாலை

மாநகரப் பேருந்து என்ற அன்றைய பல்லவன் புதிய பாதையில் ஸ்மித் ரோடு வழியாக வந்து ,எப்பொழுதுமே கும்பலாக உள்ள இரானியைக் கடந்து,  டீ வீ எஸ் அருகாமையிலுருந்து அண்ணா சாலையில் நுழைந்த போது, பஸ் மட்டுமல்ல, நினைவுகளும் வழுக்கிக் கொண்டு ஓடின- கொஞ்சம் பின்னோக்கி !

1977ல் தொடங்கியது, முதலில் சாப்பாட்டு வேளையில் ஒரு சின்ன உலா. ஆர்ட்ஸ் காலேஜ் வரை சென்று ஒரு கிழவியிடம் வேர்க்கடலை வாங்கத்தான் நேரமிருக்கும், ஆனால் அதை தவற விட்டதே இல்லை. அன்றைய நாட்களில் வங்கிகள் நடத்திய வினோதமான ஒரு மணி ஸ்ட்ரைக் போதும் இந்த உலா கை கொடுத்தது. பகல் வேளை வெய்யிலில் அன்றைய ஸ்பென்சரிலோ அல்லது ஹிக்கின்பாதத்திலோ தஞ்சம்.  பின் ஆபீஸ் முடிந்து எல்லோரும் , ஒரு நான்கைந்து பேர், கிளம்பி பொடி நடையாக சாந்தி தியேட்டர் வந்து அங்குள்ள 'கோபி, டே' என்று வினோதமாகப் பெயர் கொண்ட  கடையில் டீயில் ஆரம்பித்து, நாட்டு நடப்புகளெல்லாம் பேசி அவ்வப்போது வந்து வந்து அக்கடைக்கு வியாபாரம் கொடுத்துகொண்டிருப்போம்.   

என்னவெல்லாம் பேசினோம் - தமிழ்த் திரையுலகம் தொடங்கி, அன்றைய ஆபீஸ் சமாச்சாரங்களை பேசி, சிரித்து, சிலரைத் திட்டி, சிலரை புகழ்ந்து, சிலரை எண்ணி வியந்து, உலக விசயங்களைத்  தொட்டு, கமலா- ரஜினியா, விம்பிள்டன், 83 உலகக் கோப்பை, ருத்ரையா... எல்லாம் அந்த அண்ணா சாலை என்ற அப்பொழுதைய மௌண்ட் ரோட்டில் தான், அண்ணா தியேட்டர் படிகளில் தான், அந்தக் கடை அருகில் தான். சில சனிக்கிழமைகளில்  தியேட்டர்களில் ஐக்கியமானதும் உண்டு. பேச்சு ரொம்ப சுவாரசியமாக இருந்தால் அப்படியே நடந்து வந்து மயிலாப்பூரில் மிச்சமிருந்த நண்பனை பெசந்த் நகருக்கு கடைசி பஸ்ஸில் ஏற்றி விடுவதும் உண்டு. வாகனம், செல் போன் எதுவுமில்லாத அந்த நாட்களில் சரியாக இந்த இடத்தில் அனேகமாக எல்லாருமே வந்தது இன்று ஆச்சரியப் பட வைக்கிறது. வெயிலாவது, மழையாவது எதையுமே பொருட் படுத்தியதில்லை.

எங்கள் கும்பலின் சிலருடைய  எதிர்காலங்களும் இங்கு இப்படித்தான் நிர்ணயிக்கப் பட்டது. CA படித்தவன் ஐ ஐ எம் போனது, ஒருவன் எங்கள் வங்கியை விட்டு மற்றொன்றுக்குத் தாவியது, ஒருவன் பதவி உயர்வில் டெல்லி போனது, இப்படிப் பலப் பல. சிலருடைய குடும்ப சமாச்சாரங்கள், சிலருடைய கல்யாண முடிவுகள், அன்னாரின் பருவ நிலைக் கோளாறுகள், இது படிக்கலாமா வேண்டாமா போன்ற சீரியஸ் விஷயங்கள் எல்லாம் அலசப் பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் அது.

கூட்டம் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கினாலும், என் போன்ற, வேற்றிடம்  போகாத சிலரால் பிடிவாதமாக இந்த நடைபாதையின் பெருமை காப்பாற்றப் பட்டு கடை பிடிக்கப் பட்டது. நடு நடுவில் ஊரிலுர்ந்து மக்கள் சென்னை வந்தால் விவாதிக்கப் படாத ஒரு சந்திக்கும் இடமாகவே அது இருந்தது. 
  
அப்படிப் பட்ட அந்த திவ்ய ஸ்தலத்தை இன்று பார்க்க நேர்ந்தது. சேரனின் சைக்கிள் இல்லாமல், பாட்டு இல்லாமல் ஞ்யாபகம் மட்டும் வந்தது .

டீக்கடை, காலத்துக்கேற்ப மாறி இருந்ததில் ஆச்சரியமில்லை. 
அன்றைய மங்கல் விளக்கு இன்று கண்ணைப் பறித்தது, கூடுதல் விளக்கினாலா அல்லது தேய்ந்து வரும் கண்களினாலா என்று தெரியவில்லை. 
குடித்த டீ விலை ஏறி தரம் இறங்கி இருந்தது! 
வருவோர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. அந்தக் கடை உள்ள இடம் அப்படி. 

மெதுவாக நகர்ந்து அண்ணா தியேட்டர் பக்கம் போய்ப் பார்த்தால்.......

அதே படிகளில் ஒரு இளைய கூட்டம் அட்டகாசமாகச் சிரித்து , கலாட்டா பண்ணி சந்தோஷமாக இருந்தது. அது எழுந்து மெதுவே நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி - அதே கடைக்கு டீ குடிக்க அனைவரும் நுழைந்தது! 

அடுத்த தலை முறை வந்து அந்த சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்துடன் 21 பஸ்ஸில் ஏறினேன், வீடு திரும்ப. கடிகாரம் ஏழு காண்பித்ததுதான் கொஞ்சம் உறுத்தியது. அந்த முட்கள் ஒன்பதை நெருங்காமல் , அந்த இடத்தை விட்டு நகர்ந்ததே இல்லையே!!    

No comments:

Post a Comment