Thursday, November 27, 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்

ஓரளவு தெரிஞ்ச இங்லீஷை வச்சு இந்தியாவில் எல்லா எடத்துலேயும் ஒப்பேத்திடலாம்னு தான் நினைச்சுண்டு இருந்தேன், சென்னையை விட்டு  நகராத வரை.

1981ல் நண்பர்களெல்லாம் இல்லாமல் தனியாக கல்கத்தா, டெல்லி, ஜெய்பூர், பம்பாய் போன போது, முதன் முறை உறைத்தது. வண்டி விஜயவாடா தாண்டும் வரை எல்லாம் சுகமே. கரக்பூரில்  டீ எவ்வளவு என்று  கேட்டதற்கு கடைக்காரன் என்ன பதில் சொன்னான் என்பது ரயில் கல்கத்தா போகும் வரை புரியவில்லை. ஹௌரா ஸ்டேஷனில் என் அண்ணன் என்னை ஜாமினில் கூட்டிப் போகாமலிருந்தால் அப்படியே சென்னை திரும்பி இருப்பேன்.

கல்கத்தாவிலிருந்து டெல்லி போக ரயிலில் உட்கார்ந்தவுடன்  சுற்றி வர புரியாத பாஷை பேசினதைப் பார்த்து நான் பயந்த போது என் அண்ணன் தான் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தான். அவர்கள் என்னைப் பற்றித்தான், தென்னிந்தியாவையும் சேர்த்து, கொஞ்சம் மோசமாகப் பேசியதை சொல்லவே இல்லை. ராத்திரி பதினோரு மணிக்கு எதற்க்கு 'அண்டா' விற்கிறார்கள் என்பது என் ஹிந்தி பண்டித நண்பன் டெல்லியில் சொல்லத்தான் புரிந்தது.

அதன் பின் 1987ல் காஷ்மிர் பயணத்தின் போது, ஷாலிமார் எக்ஸ்ப்ரெஸ்ஸில் நாங்கள் பட்ட பாடு, இப்பொழுது நினைத்தாலும் அடி வயிறு கலங்குகிறது. நடு ராத்திரியில் சில போலிஸ்காரர்கள் எங்களுக்கு அருகில் சீட்டாடிக் கொண்டிருந்த ஒரு தமிழ் பேசும் வங்கி ஊழியர் கும்பலை சந்தேகத்துடனேயே கேள்விகள் கேட்டு, சில பண்ட மாற்றுகளுக்கப்புறம் தான் விட்டார்கள். நானும் என் நண்பனும் அது வரை பேசிக் கொண்டே வந்தவர்கள், இவர்களின் மிரட்டலைக் கேட்டவுடன், அப்படியே சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டோம் - தூங்கத்தான் இல்லை. பாஷை புரியா விட்டாலும் அவர்களின் மிரட்டலில் விளைந்தது அவ்வளவு திகில் !

83க்கப்புறம் வந்த கிரிக்கெட் ஆர்வத்தால்  தூர்தர்ஷனின் ஒரே சானலில் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் பொழுது 'அச்சி கேந்த்' புரியாவிட்டாலும் , நேரொளியால் சமாளிக்க முடிந்தது.

குடியரசு தினமோ, சுதந்திர தினமோ தொலைகாட்சியில் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயன்றும் எந்தப் பலனும் இல்லை. இன்றும் பிரதமரும், ஜனாதிபதியும் யாருக்காக  உரைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 'ஜெய் ஹிந்த்' சொல்லும் வரை காத்திருப்பது வழக்கமாகி விட்டது, அடுத்த நிகழ்ச்சிக்குப் போக

மூஞ்சி புத்தகத்தில் வரும் முக்கிய ஆங்கில செய்தி சானல்களில் போடும் வீடியோக்களிலும் இந்தியிலேயே பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். எதுக்குன்னுதான் தெரியவும் புரியவும் மாட்டேங்கிறது.

சரி நம்ம ஊர்ல தான் இப்படின்னா, அண்டை மாநிலமான கேரளத்துக்குப் போனா சம்சாரிக்கிறார்கள். ஆந்திராவில் மாட்லாடுகிறார்கள், மஹாராஷ்டிரத்தில் அச்சாவாக 'போல்" என்கிறார்கள்.

இதென்ன கொடுமை. என் நாட்டினுள்ளே,  நான்  இருக்குமிடத்தை விட்டு சில மணி நேரங்கள் போனாலே எந்த பாஷை தெரிய வேண்டும் என்று குழம்ப வேண்டி இருக்கே?

ஒரு சில தென் மாநிலங்களைத் தவிர எல்லா இடத்திலும் ஹிந்தியை வைத்து நடமாட முடியும் போலிருக்கிறது. மக்கள் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும், அதில் எத்தனை கட்டாயம், எது கட்டாயமாக கூடாது என்று இப்பொழுது இருக்கும், இன்னும் வரப்போகும் கட்சிகள் அனைத்தும் உரையாடிக் கொண்டே இருக்கட்டும். நம்ப ஊர்ல மட்டும் பிடிவாதமாக கூடாது என்று சொல்லி தள்ளி வைத்த ஹிந்தியை தெரிஞ்சுண்டால் தான் அடுத்த சுற்றுலாவில் கொஞ்சம் தைரியமாக கடையில் வேண்டியதைக் கேட்டு வியாபாரம் செய்ய முடியும்.  நம்ப வேலையைப் பாக்கலாம், அவர்கள் அவங்க பொழப்ப பார்க்கட்டும்.

ஏன்னா பேசின் ப்ரிட்ஜ் தாண்டினாலே 'வாயிருந்தும் சொல்வதற்க்கு வார்த்தை இன்றி தவிக்க' வேண்டி இருக்கு.


No comments:

Post a Comment