Tuesday, July 29, 2014

புண்ணிய பூமி

மயான வைராக்யத்தைப் பற்றி  நிறையவே எழுதி இருக்கிறார்கள், படித்தும் இருப்போம். 

இருப்பினும் ஒரு முறை அந்தப் புண்ணிய பூமிக்குப் போய் (முக்கியமாக திரும்பி)  வருவது, ஒருவனுக்கு பல படிப்பினைகளையும், சிந்தனைகளயும் உணர்த்த வல்லது. 

கம்பங்களி தின்றவனும், தங்க பஸ்பம் தின்றவனும் வரிசையில் காத்திருந்து ஒரே மேடையில் ஏறி அக்னியின் வயிற்றுக்குள் போகும்  ஒரு அதிசய காட்சியை இங்குதான் காண முடியும்.

சற்று முன் தான் ஒரு வீடியோவில் பிரபல ஆன்மீக போதகர் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் கவலைப் படுவதைப் பற்றிய ஒரு கேள்விக்கு, இந்த இடத்துக்குப் போய் வருவதை ஒரு மருந்தாகவும் போதித்துள்ளார் என்பதையும் பார்த்தேன். 

மரணம் உலகுக்கு என்னவெல்லாம் செய்கிறது?

உறவினர்களை ஓரிடத்திற்க்குள் கொண்டு வருகிறது.

நண்பர்களை, நலம் விரும்பிகளை அடையாளம் காட்டுகிறது. 

அப்படி இல்லாதவர்களையும் கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறது.

மனிதனின் பெருந்தன்மையை வெளிக் கொணர ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

சாதி, மத பேதங்களை அறுத்து மனித நேயத்தை வெளிக் கொணர்கிறது.

காசின் மதிப்பையும், அதற்க்கு நாம் கொடுத்திற்க்கும் இடத்தையும், அதன் அபரிமிதமான விலையையும் காட்டுகிறது.

சிலருக்கு பயத்தை அளிக்கிறது.

சிலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது.

சிலருக்கு சில  உண்மைகளை உணர்த்துகிறது.

 சதுர அடிகளின்  உண்மைத் தேவையை உணர்த்துகிறது.

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ" என்று பாடிய கவியரசரின் முத்துக்களை மீண்டும் எண்ணி வியக்க வைக்கிறது.

"இந்த ஊத்தை உடம்பின் நாற்ற மேடுகளைக் கண்டு மயங்காதே. ஒரு நாள் பிடி சாம்பலாகப் போகும் கட்டை இது" என்ற பட்டினத்தாரின் வைர வரிகளை உரைக்க வைக்கிறது

இந்த அனுபவம் எப்படிப் பட்டது என்று யாராலும் சொல்ல முடியாததால், இதனைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இத்தனை போதனைகளையும், இவ்வளவு சிந்தனைகளையும் தூண்டும் இதுவல்லவோ நிஜமான புண்ணிய பூமி !





No comments:

Post a Comment