Thursday, July 10, 2014

ஐயோ பாவம், ஐ டி

"பத்தாயிரத்துக்கு வித்துண்டு இருந்த நிலம் ஐயா. திடீர்ன்னு லட்சக் கணக்குல போகுது".. அத்தனை பல்லும் தெரிய சிரித்தார் அந்த நில புரோக்கர்.

"போன வருஷம் முப்பது லட்ஷத்துக்கு அந்த ஃப்ளாட்டு வந்தது. சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வந்து அப்புறம் வாங்குலாம்னு இவ சொன்னா. இப்ப என்னடான்னா அம்பது சொல்றாங்க" ன்னு கையைப் பிசைந்தார்.

"எங்க காலத்திலெல்லாம் ரயில்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் அனாதையாக இருக்கும். இப்ப என்னடான்னா ஃபர்ஸ்ட் ஏ ஸியே பறந்துடுது" - பெருசு என்று இந்தக் கால இளசுகளால் விவரிக்கப்படும் ஒரு பெரியவர்.

"ஆட்டோக்காரனுக்கு என்ன கேட்டாலும் கொடுத்துக் கெடுத்துட்டாங்க".

"முன்னெல்லாம் கறிகாய் விலை கேட்டு, பேரம் பேசி தான் வாங்கினோம். இப்ப ஸ்டிக்கர் பார்த்து, கார்டு தேய்ச்சு என்ன விலையாயிருந்தாலும் வாங்கிடறாங்க".

இப்படி பல புலம்பல்கள் - யாரைப் பற்றி?

எல்லாத்துக்கும் சொல்லும் ஒரே காரணம், அந்த ஐ டீதான் !

இதெல்லாம் பரவாயில்லை. முகனூலில் ஒரு அன்பர், "நாளெல்லாம் வேலை செய்பவர்களை கொத்தடிமை ஆக்கிக் கொள்ளும் ஐ டீ என்று எழுதி இருந்தார்". எனக்குப் பத்திக் கொண்டு வந்தது.

என்னவோ ஐ டீ கம்பெனிகளில் ஆளே கிடைக்காமல் தேடி இவர்கள் படிக்கும் குக்கிராமத்துக்கு வந்து ராவணன் சீதையைக் கவர்ந்தது போல் பேசிக் கொள்கிறார்களே?

படிப்பின் கடைசி வருஷத்துலேயே அப்ளிகேஷனைத் தட்டி விட்டு, சுமாரான இங்க்லீஷுடன் இருந்தாலும், தான் போட்ட ப்ராஜக்டையே விவரிக்க முடியா விட்டாலும், எந்தப் ப்ளாட்பாரத்திலும் (ப்ரொக்ராமிங் தான்) என்னால் வேலை செய்ய முடியும் என்று தலையில் அடித்து சத்தியம் செய்து கம்பெனிக்குள்ளே வந்ததும் அப்பாடா என்று பெரு மூச்சு விடும் சில இந்தக் கால இளைஞர்களே இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் சேர்ந்து ஒரு வருடத்துக்குள்ளேயே "என்னமோ தெரியல்லே, வேலை ஸ்வாரஸ்யமாகவே இல்லை. பாண்டு முடிஞ்சதும் எகிற வேண்டியது தான் " என்று சொல்லும் ஒரே இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

மற்ற பொது நிறுவனங்களைப் போல ஒரு நிரந்தரமான 1070-3-1340-2-1720 என்ற  ஒரே ஸ்கேல் இல்லாமல் , ஒவ்வொரு வருடமும் அள்ளிக் கொடுக்கா விட்டாலும், கிள்ளியாவது கொடுக்கிறார்கள்.  அதற்கென்ன, அதையும் கொஞ்சம் வாதாடி, சிரித்துக் கொண்டே சண்டை போட்டு, டிஸ்கஷன் முடிவில் ஒன்றுமே நடக்காதது போல் கை குலுக்கிவிட்டு காபி சாப்பிடப் போவார்கள்.  ஐடீ யில் இதெல்லாம் சாதாரணமப்பா.

இரண்டு வருஷமாகும் போதே, அமெரிக்காவா, ஆஸ்த்ரேலியாவான்னு யோசித்து , வீசா வாங்கி பயணித்து, முக நூலில் போட்டோவெல்லாம் போட்டு இளைப்பாறும் போதே அம்மா கேப்பா "எப்பப் பாக்க ஆரம்பிக்கலாம்னு". கொஞ்சம் பிகு பண்ணி, பற்பல கனவுகளுக்கு காம்ப்ரமைஸ் டாட்டா சொல்லி முடிக்கும் போது, திருமணம் தகையும். புதிய உறவும் ஐ டியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் - வாழ்வு வஸந்தம் தான்.

ஆனால் இதெல்லாம் ஒண்ணும் சும்மாக் கிடைக்காது. பல  நாட்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, சில நடு நிசிகளில் கிடைத்த சமோசா, பிஸ்கட்டுகளிலேயே உயிர் வாழ்ந்து, தேவையில்லாத யாருக்கோ வரவேண்டிய திட்டுக்களைச் சுமந்து... இப்படி பல விழுப்புண்களுடந்தான் இது கிடைக்கும். ஆனால் , இப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு புண்ணும், தழும்பும் ஒரு வெற்றிப் படிக்கட்டு என்பதில் சந்தேகமே இல்லை.

என்னுடன் வேலை பார்த்த ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார் "இந்தக் கம்பெனிக்காக எப்படி உழைக்கிறோம் " என்று. ஒவ்வொரு தடவையும் நான் அவரைத் திருத்தி இருக்கிறேன் "இதில் தியாகம் எதுவும் இல்லை. நன்றாக உழைத்ததால் தான் நன்றாகக் கொடுப்பார்கள்" என்று. "உழைத்தால் கொடுப்பார்கள், கொடுத்ததால் உழைக்கிறீர்கள்" என்பதை சிலர் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்

எங்கள் உறவிலேயே இரண்டு ஒரே வயசுப் பசங்க - ஒருத்தர் இஞ்சினீயரிங் படித்து டாலர்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மற்றவர் சரியான வேலை கிடைக்கும் படிப்பு இல்லாததால் பத்தாயிரத்தைத் தொடவே இன்னும் தினமும் கோவில் சுத்திக் கொண்டிருக்கிறார். ஒரே ஒரு டிகிரி, வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.

இப்படி இருக்கும் பொழுது ஏன் ஐ.டி யைக் குறை சொல்கிறார்கள் ?  புரியவே இல்லை.

சமீபத்தில் ஒரு வார இதழில் இந்தத் துறையைப் பற்றி, இந்தக் கால பாஷையிலேயே சொல்லணும்னா "கழுவி கழுவி ஊத்தி இருக்காங்க".  குறில் என்று சொல்லி நெடிலில் புலம்பி இருக்கிறார்கள். இதைப் படிச்சுட்டு முந்தா நாள் கான்காலில் க்ளையன்ட் கிட்ட டோஸ் வாங்கினவர்களும், போன அப்ரைஸலில் புண்ணான சிலரும் ஆமோதித்து இல்லாத மானேஜரை இருப்பதாக வரித்து குத்திக் குதறி இருந்தார்கள். இதிலெல்லாம் ஸீரியசாக எடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை. இந்த விதமான ஹை ப்ரஷர் உள்ள வேலைகளுக்கு இப்படி  ஒரு வடிகால் தேவைதான். இப்படி பேப்பர் புலிகளாக மாறி , கடித்துக் குதறினால் இவர்களின் மன அழுத்தம் குறையுமென்றால், சில கம்பெனிகளே கட்டு கட்டாக பேப்பரும் கொடுப்பார்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதற்க்கு முன் ஒரு தடவை கீழே பார்த்தால் தேவலை. ஆழமும், உயரமும் தலை சுற்றும். இந்த உயரம் ஒரு கூட்டுக் முயற்ச்சி. உங்கள் திறமைக்கு ஏணி அமைத்துக் கொடுத்து உங்களை ஏற்றி விட்டு நீங்கள் அழகு பார்த்துக் கொண்டிருக்கும்போது கம்பெனியும் டாலர்களை எண்ணுகிறார்கள்- இதில் எங்கு , என்ன தவறு இருக்கிறது? முற்க்காலம் போல்  சேர்ந்து ஒரே கம்பெனியில் இருந்து பென்ஷன், பி எஃப் வரைக்குமா இருக்கப் போகிறோம்? இரண்டோ மூன்றோ , அதிக பட்சம் ஐந்து வருடங்கள் தானே - ஒருவரை ஒருவர் சகித்துப் போகலாமே. அதறக்குள் என்ன இவ்வளவு பொருமல்.

என்னுடைய ஒரே அறிவுரை இது தான்- என்று உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்று தோன்றுகிறதோ, பேசிப் பாருங்கள். சரிப் படவில்லை என்றால் நகர வேண்டியது தான்.  நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் பலம் பற்றியும் புரியும், உலக நிலவரங்களும் விளங்கும், இன்னும் சில புதியவர்களுக்கும் வேலையும் கிடைக்குமே!

 எனக்குத் தெரிந்து எந்தக் கம்பெனியும் போகிறவர்களைக் காலைப் பிடித்துக் கெஞ்சுவதில்லை. சொல்லிப் பார்த்து சரி வரவில்லையெனில் விட்டு விடுவார்கள்.

இருந்து அனத்துவதை விட, இது எவ்வளவோ மேல்- இரு சாராருக்கும் தான் !








No comments:

Post a Comment