Sunday, July 20, 2014

விழி மூடி யோசித்தால்.....

ஒரு சினிமாவில் வந்தது போல் 'சும்மா இருப்பது' என்பது ஒரு சாதாரண விஷயமே அல்ல- இந்த ஞானோதயம் அடியேனுக்கு சில நாட்களுக்கு முன் தான் வந்தது.

பல பிரபலங்களும், சில ஸ்ரீ க்களும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் , 'ரா'ப் பகலும் மெய் வருத்தமும் பாராமல் செய்யும் தொண்டு எவ்வளவு சிறந்தது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. ஒரு பத்து நிமிடமாவது ஒரு மனிதனை கண் மூடி இருக்கச் செய்வது மட்டுமில்லாமல், அவர்கள் மனதை ஒருமைப் படுத்தச் செய்யும் பயிற்ச்சி மூலமாக அவர்களின் தொண்டு சாதாரணமானதே அல்ல.

சில வருடங்களுக்கு முன்னே டாக்டரின் சிபாரிசில் நான் மேற்க்கொண்ட ஒரு தியான வகுப்பின் முயற்சிக்குப்  பின் டெபாஸிட் இழந்தவன் போல் துண்டைத் தேடி ஓடியவன் தான் - இன்னும் அந்தப் பக்கம் தலையே வைக்கவில்லை.

அன்று பல வருஷங்களாயுடுத்தே, செக் பண்லாம்னு கண் டாக்டர் கிட்ட போனப்புறம் தான் தெரிந்தது, மறுபடியும் மாட்டிக் கொண்டது.  நுழைந்தவுடன் விசாரித்து ரெண்டு கண்ணுலயும் சொட்டு மருந்து போட்டார் ஒருத்தர். ஆரம்ப எரிச்சலுக்குப் பிறகு, கொஞ்சம் பழக்கப் படுத்தி ஆஸ்வாசப் படுத்திக் கொள்ளு முன்னமேயே மேலும் ரெண்டு சொட்டு விட்டு அந்த எரிச்சலை அப்படியே மெய்ன்டைன் பண்ணினார்.

வேறு வழியில்லை என்று தெரிந்ததும் சீனர் கன்ஃபூஸியஸ் சொன்னது போல கிடைத்ததை அனுபவிக்க ஆரம்பித்தேன். ஒரு நாற்பது வருஷமாக தொலைக்காட்சி நம்மை எப்படி அடிமைப் படுத்தி இருக்கிறது என்று புரிந்தது. கண்ணை மூடிக் கொண்டே ரேடியோ கேட்பது போல் அங்கு நடந்த பேச்சுக்கள் -  இல்லாத டாக்டரைப் பார்த்தே தீர வேண்டும் என்று ஒரு பேஷண்டின் பிடிவாதம் , அருகில் இருந்த ஒரு மாமியின் தயவால் நேற்று "தெய்வம் தந்த வீடு" சீரியலில் என்ன நடந்தது என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது, மேட்ச் பார்க்க முடியாத குறையையும் ஓரளவு அங்கு நடந்த  நேற்றைய மாட்ச்சின் அலசலால் நன்கு தெரிந்த கொள்ள முடிந்தது. தன் பிள்ளையயோ, மருமகளையோ கண் மூடி இருந்த போதிலும் விவரித்து வருத்தப் பட்ட போது "கண்ணுல மருந்து போட்டுண்டு அழக் கூடாது" என்றார் சொட்டு மருந்தார் !

இதெல்லாம் கேட்டு அலுத்துப் போய் மூன்றாவது எரிச்சலூட்டும்  சொட்டுகளுக்குப் பிறகு மனதைச் செலுத்தினால் ஒரு சில மணித் துளிகள் மனம் என்னுடைய ஃபேவரைட்டான இராமர் பட்டாபிஷேகத்துக் போய் பின் அலைய ஆரம்பித்து, மோடியிலுருந்து, முக நூல் வரை நடந்து , அடுத்த மாதம் வெளியிட வேண்டிய சைபர் சொசைடி மென் பேப்பர் வரை சென்று , அயர்னிங்காரன் வரவேயில்லியே வரை அங்குமிங்கும் திரிந்தது.

அப்பத்தான் புரிந்தது தியானம் என்பது எவ்வளவு கடினம் என்பது. பா விஜய் சொன்னது போல் எந்தப் பெண்ணும் வரா விட்டாலும், மஹாரஜபுரத்தாராலோ இல்லை மாதவனாலோ மனம் 'அலை பாய்ந்து "கொண்டே தான் இருந்தது.

இந்தப் பிடியிலுருந்து எப்படி தப்பிக்கப் போறோம்னு கொஞ்சம் கலங்க ஆரம்பித்தபோது, சில செகண்டுகளே நினைத்த ராமபிரான் அனுப்பிய தூதர் போல் வந்த கம்பௌண்டர், கண்ணைத் திறக்கச் சொல்லி இன்னாட்டு காந்தியாக எனக்கு எண்ணச் சுதந்திரம், மிட்டாய் கொடுக்காமலே, அளித்தார்



No comments:

Post a Comment