Thursday, January 15, 2015

கை கோர்த்துக் கொண்டாடும் மயிலை

பொங்கலின் முந்தினம் மயிலையின் மாட வீதிகள் ஒரு பரபரப்புடன் இருந்தது. மார்கழிக்கு கையசைத்து விட்டு தையை வரவேற்க்கத் தயாராகிக் கொண்டிருப்பதில் உற்சாகம் தெரிந்தது. வழக்கமாக இருக்கும் குப்பையை தெற்கு மாட வீதியில் பார்க்க முடியாததற்க்குக் காரணம் பிரதமரின் சுத்த திட்டம் இல்லை-அவ்வளவு கூட்டம். தனி மனிதன் நடப்பதே கடினமாக இருந்ததைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருபுறமும் எல்லா வித வாகனங்களும் வரிசையில் யாரோ நகரக் காத்திருந்தது. எப்பொழுதும் நடைபாதையை ஒட்டி உள்ள கறிகாய் கடைகளும் தைரியம் பெற்று முன்னே நகர்ந்து இருந்த கொஞ்ச நஞ்ச ரோட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டது. சற்று தூரத்தில் மண்டையில் விளக்குச் சுற்ற வந்த வெள்ளை வாகனத்திலிருந்து வெளியேறிய மக்களுக்கான அறிவுரைகளை யாரும் சட்டை செய்வதாகத் தெரியவில்லை- அதைப்பற்றி அந்த வண்டியும் கவலைப் படாமல் தன்பாட்டுக்கு கூவிக் கொண்டே நகர்ந்தது. என்ன காரணத்திற்க்கோ எல்லோராலும் புறக்கணிக்கப் பட்ட மாட வீதிப் போக்குவரத்து தானே தன் பாட்டுக்குத் தன் மக்களைச் சுமந்து அன்ன நடையில் இயங்கிக் கொண்டிருந்தது.

கரும்பு, மஞ்சள், மொச்சை, மாவிலை, தேங்காய், தோரணம் போன்றவைகள் தை மாதத்தின் மணத்தை பரப்பிக் கொண்டிருந்தன. கலர் கலராக வெட்டப் பட்ட காய்கறிகள் சின்ன பொட்டலங்களுக்குள் பொங்கல் மறுநாள் அவியலுக்காக தயாராக இருந்தது. வாய்க்கு வந்த விலைக்கு விற்ற வாழைக்காயை உள்ளூர்வாசிகள் கேள்வி கேட்காமல் வாங்கிக் கொண்டிருந்தார்கள். முழம் முப்பது ரூபாய் என்ற 'மல்லீ'ப்பூவை வாங்குபவர்களை விட கண்களாலேயே முகர்ந்து விட்டுச் சென்றவர்கள் அதிகம். மாமிகள் முன்னே செல்ல அவர்களின் வேகத்துக்குத் தொப்பை மாமாக்கள் கையில் கரும்புடன் இரண்டு இரண்டு எட்டாக எடுத்து வைத்து ஈடு கட்ட முயன்று கொண்டிருந்தார்கள்.

இன்று அதே மாட வீதிக்கு நடக்கையில், வழியெங்கும் எல்லா வாசல்களிலும் பொங்கல் வாழ்த்துக்கள் வண்ண வண்ண கோலப் பொடிகளில் மிளிர்ந்தது. வீடோ, கடையோ, ஆஸ்பத்திரியோ,ஹோட்டலோ , இவைகளெல்லாம் திறந்திருக்கோ இல்லையோ எல்லா வாசல் படிகளிலும் வாழ்த்துக்கள் தென்பட்டன. மாட வீதிகள் கொஞ்சம் களைத்து, கூட்டம் குறைந்து நேற்று பிரசவித்த பெண் போல் காணப்பட்டாலும் உற்ச்சாகத்துக்கொன்றும் குறைவில்லை. கோவில் வாசல்களில் செருப்புக் கூட்டம் அதிகரித்திருந்தது. பத்திரமாக மாமிகளைக் கோவில் கூட்டத்திலுருந்து கை பிடித்து வெளியே கூட்டி வந்த மாமாக்கள் முகத்திலுள்ள பளபளப்பு வியர்வையிலா அல்லது மாமிகள் கட்டி இருந்த புதுப் பட்டுக்கான அடுத்த மாத க்ரெடிட் கார்ட் நினைப்பாலா என்பதைக் கணிப்பதில் சிரமம் இருந்தது.

பண்டிகைகளை வரவேற்பதிலோ, கொண்டாடுவதிலோ மயிலையும் தன் மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவது போல் தோன்றியது. போகியன்று வடக்கு மாட வீதி தெரு அடைத்து கோலம் போட்டு மார்கழியை வழி அனுப்ப, இன்றோ தெற்க்கு மாட வீதி தேயாமல் மக்களுக்கு தை மாதத்தை வரவேற்க்கக் கை கொடுத்துக் கொண்டிருந்தது. இதற்க்காகத் தான் மடிப்பாக்கத்திலும் கூடுவாஞ்சேரிகளிலும் அதிகமுள்ள ஒரு அறையையும் தனி வீட்டையும் விடுத்து பலர் இங்கு பரவாயில்லை என்று ஒடுங்கி இருக்கிறார்களோ?

No comments:

Post a Comment