Sunday, January 13, 2013

மயங்க வைத்த மார்கழி

ஒரு நாள் சுருக்கப்பட்ட மார்கழி, இன்று 29  நாட்களுக்கப்புறம் இனிதே முடிவடைகிறது. இன்று காலை ஆறு மணிக்குக் கிளம்பிய பொழுது, எங்கள் தெருவின் அந்த முனை தெரியவில்லை- அவ்வளவு மூடு பனி. இல்லை அது புகை இல்லை. விடாமல் செய்த ப்ரசாரத்தினாலோ அல்லது உணர்ந்தோ போகி கொளுத்துதல் குறைந்துதான் இருந்தது.

இந்த வருட மார்கழியில் என்னுடைய ஒரு நெடு நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. எல்லா மார்கழி நாட்களிலும், இருட்டு உள்ளபோதே ஒரு கோவிலைப் பார்க்க வேண்டும் என்பதே அது. 29 நாட்களில் 33 கோவில்களைத் தரிசித்தேன்.  இதில் ஒரு ஆச்சர்யமான  உண்மை- 23 கோவில்கள் என்னைச் சுற்றி மயிலாப்பூரிலேயே உள்ளது. நம்மைச்சுற்றி இவ்வளவு கோயில்களா- அப்புறம் எதற்க்கு ஊர் ஊராகச் சுற்ற வேண்டும்?

ஆலய தரிசனம் முடித்து இந்த வருட மார்கழிக்குக் கடைசி முறையாக கோவிலருகே வந்த போது மாட வீதி களை கட்டியிருந்தது.

ஹரிதாஸ் கிரி பஜனை மண்டலி, ஸகல வாத்தியங்களுடன் உச்ச ஸ்தாயியில் இருந்தார்கள். சம்ப்ரதாய பஜனையில்  இவர்களை மீறுவது  கடினம்

பாபனாசம் சிவன் குழு '  நாளை வரும் என்று நம்பலாமா 'என்று கவலைப் பட்டு, ' நம்பிக்கெட்டவர் எவரையா' என்று முடித்தது, வரும் தை மாதத்தின் மேல் மிகுந்த நம்பிக்கையளித்தது .

மயிலையின் மார்கழிக்கு ஈடு இணையே இல்லை.

ஒரு சில நாட்கள் சீக்கிரம் எழுந்திருப்பதே கஷ்டமாக இருக்கு. இந்த பஜனைக் குழுவினர் ஒரு நாளைப்போல் தினமும் 3 மணிக்கு எழுந்து, இரண்டு மணி நேரம் மாட வீதி சுற்றி பாட்டும் பாட வேண்டும். அசாத்திய தைர்யம்- இல்லை- மன வலிவு வேண்டும். பாராட்டியே ஆக வேண்டும்- இல்லயேல் பொங்கல் மட்டுமில்லை, புண்ணியமும் கிடைக்காது

எனக்குத் தெரிந்து பல பேர் ' வேலைக்குப் போக முடியலே ஆனால் வேலையை விட்டால் என்ன செய்ய' என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சித்த இந்தப் பக்கம் வந்து பாருங்கள். அனுபவிக்க நிறைய இருக்கு.


3 comments:

  1. nicely written... wish I live in Mylapore and experience those moments

    ReplyDelete
  2. sir.. you should list down the temples you have visited and short description about that temple..!!

    ReplyDelete