Wednesday, January 16, 2013

அதே கரும்பு தானே ?


பல வருஷங்களுக்கு முன்னால் பொங்கல் பண்டிகை மிக அதிகமான காரணங்களுக்காக எதிர்பார்க்கப் பட்டது.  மிக முக்கியமாக தமிழ் நாட்டில் வரும் நான்கு நாள் ஸ்கூல் லீவுக்காக. அடுத்து போகி , பொங்கல், கனு என்று மூணு நாளைக்கு தொடர்ச்சியாகக் கிடைக்கும் விருந்து சாப்பாட்டுக்காக.

ஆனால் அதை விட முக்கியமாக கனு நாளில் வரும் கரும்புத் துண்டுகள். மூன்று ரூபாய்க்கு வாங்கிய ஒரு கரும்பை எங்கள் குடும்பத்தில் உள்ள 2 அண்ணன், 2 அக்கா மற்றும் உறவினர் எல்லாருடனும் பங்கு போடணும். அப்பா அரிவாளை எடுத்துண்டு மதுரை வீரன் மாதிரி வரும் வரை மனம் படபடப்புடந்தான் இருக்கும். எல்லாருக்கும் பங்கு போட்டு, பெரிய துண்டை கடைகுட்டியாகிய நான் தேர்ந்தெடுத்த பின், அது சின்ன சின்னத் துண்டமாக்கப் பட்டு, தோல் சீவி, கொல்லைப்புறத்திலுள்ள தோய்க்கற கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டு சுவைக்கும் போது, அந்த சாற்றை விழுங்கி சக்கையை ஓரமாகத் துப்பும்பொழுது, கிடைக்கும் சந்தோஷம் அடடா ..

ஆனால் இன்றோ, போகி பண்டிகையன்று வாங்கிய ஐம்பது ரூபாய் கரும்பு கேட்பாறற்றுக் கிடந்து, இன்று காலை இரண்டாக வெட்டி வேலைக்காரிக்கும் வாட்ச்மானுக்கும் பாதியாகக் கிடைத்தது. அதிசயமாகவும் ஆச்சரியத்துடனும் ஏற்றுக் கொண்ட அவர்களுக்கு எங்க தெரியப் போகிறது - வீட்டில் பெரியவர்களின் பல் ப்ரச்சினையும், சிரிசுகளின் "இதையெல்லாமா தின்பார்கள்" என்ற உவ்வே பார்வையும் !

அதே இனிப்பு தானே அந்தக் கரும்பில்- பின்ன ஏன் மவுசு போயிடுத்து? அதுக்கும் வயிசாறதோ?

No comments:

Post a Comment