Monday, February 16, 2015

போதனைகளும் வேதனைகளும்

தூர்தஷன் தொடங்கிய வருடங்களில் மக்கள் துரத்தித் துரத்தி- இல்லை திருகித் திருகி- உள்ள ஒன்றிரண்டு சானல்களுக்குள்ளேயே தான் உலாவினார்கள். இருந்த சில சானல்களுக்குள் எப்படி எல்லாவற்றையும் புகுத்துவது என்ற சங்கடம் ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்தது. அதற்க்குள்ளேயே தான் மதம், போதனை, கல்வி, விளையாட்டு, கேளிக்கை எல்லாமே. கொஞ்சமாக இருந்ததால் திகட்ட வாய்ப்பில்லாமல் அனைவரும் பொட்டியை சூழ்ந்த காலமது. கிரிக்கெட் மாட்ச் எப்படிப்பட்ட சுவாரசிய கட்டத்தில் இருந்தாலும் செய்திகள் நேரம் வந்து விட்டால், மாட்சை புறக்கணித்து பலரின் வயிற்றெரிச்சலையும் சாபங்களையும் சேர்த்துக் கொண்ட நேரமது. இதனால் பல நல்ல போட்டிகளின் இறுதிக் கட்டங்களுக்காகத் தாவி வானொலிக்கு வாழ்வளித்த காலம்.

இன்று சானல்களுக்குப் பஞ்சமும் இல்லை, வானொலியை யாரும் சீண்டுவதுமில்லை. கேபிள் வரவில் கிளம்பிய சானல் வியூகத்தில் வேறு வழியில்லாமல் புகுந்த மக்கள், இன்று எத்தனை சானல்கள் இருப்பது என்று தெரியாத,  ஆனால் எதையோ தேடிக்கொண்டே இருக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றோ கையில் கொஞ்சம் சில்லறையும், ஊருக்குள் செல்வாக்குமிருந்தால் உங்களுக்கான பிரத்யேகச் சானலைத் தொடங்கி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். பொட்டியைத் தட்டி உயிர்ப்பித்தால் மத போதனைகள், மருத்துவம், யோகா போன்ற உடலும் மனமும் சிறப்புற அறிவுறுத்தப் படும் பயிர்ச்சிகள், அரசியல், கட்சிகளின் சித்தாந்தங்கள், மற்ற கட்சிகளில் இல்லாதவைகள், செய்திகள், விளையாட்டு விமரிசனங்கள் , விவாதங்கள், நேர்முக அஞ்சல்கள், ...இப்படி எத்தனையோ.

இதில் குழந்தைகள் , பெரியவர்கள், மாணவர்கள், முதியவர்கள், சான்றோர்கள், பெண்மணிகள், இளைஞர்கள் கவனிக்க வேண்டியது என்று பல இருந்தாலும் சிலர் கவனிக்கக் கூடாத சேனல்களும் அடக்கம். பெற்றோர்களிடமும், மருத்துவர்களிடமும் தயங்கிக் கொண்டே கேட்க வேண்டிய சந்தேகங்கள் கூட ஆலோசகர்கள் பக்கத்தில் ஒரு இளம் பெண் சகிதம் உட்கார்ந்து தயக்கமில்லாமல் பேசுவர். அவர்களுக்கே உறுத்தியதாலோ என்னவோ, இவைகளெல்லாம்  பின்னிரவில் தான் ஒளிபரப்பாகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளிலும் வளரத் துடிக்கும் இளைய சமுதாயங்களுக்கிடையிலும் இது ஒரு தவிர்க்க முடியாத பரிணாமம், இதைத் தடுக்க முடியாது; தடுக்கவும்  கூடாது தான். ஆனால் எந்த ஒரு வளர்ச்சியுடனும் கை கோர்த்து வரும் ஆபத்துக்களை கவனமாகக் கண்காணித்து முறைப் படுத்த வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

கையில் சேனல் இருக்கிறது என்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாம் என்ற அபாயகரமான சூழ்நிலை உருவாகக் கூடாது. இது வளரும்  சமுதாயத்தையும், கல்வி அறிவற்றகளையும் திசை திருப்பி தவறான பாதைக்குக் கூட்டிச் செல்லக் கூடிய சாத்தியமுள்ளது.

உதாரணத்துக்கு, சில வியாதிகளுக்குக் கூறப்படும் நிவாரணங்கள் சரியா, சில  உடற் பயிர்ச்சி போதனைகள் அங்கீகரிக்கப் பட்ட வழிகளில் உள்ளதா, உலக நிகழ்வுகளின் வெளிப்பாடுகள் மற்ற நாடுகளுக்கிடையே நாம் கடைப்பிடிப்பதாக உறுதி கொண்டுள்ள வரையறைகளுக்குள் தான் உள்ளதா, விவாதிக்கப்படும் தலைப்புகளும், செய்திகளும், நிகழ்வுகளும் அதன் உண்மையான அர்த்தத்திலும் பின்னணியிலும்தான் இருக்கிறதா, பரப்பப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளதா.... இவைகளெல்லாம் கவனிக்கப் பட்டு , கண்காணிக்கப் படுகிற தேவை உள்ளதா? சில நிகழ்ச்சிகளைக் காணும் பொழுது இப்படிப்பட்ட சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன.

இங்கு முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கும் சானல்களிடையே , வருங்காலத்தில் இன்னும் வரவிருக்கும் பல நூறு சானல்களிடையே அது சாத்தியமா, தேவையா என்பது தனி விவாதம். தவறான செய்திகளையும், போதனைகளையும், கருத்துகளையும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் முன் வரிசையில் உள்ளது என்பது மட்டும் தான் உறுதி.

நம்மிடம் உள்ள உபகரணத்தால் நம்மை உயர்த்திக் கொள்ளலாம், சமூகத்தையும் உயர்த்தலாம் ஆனால் மற்றவர்களின் நலனையும், சிந்தனைகளையும் சீரழிப்பது ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது, கூடாது. இங்கு தான் ஆட்சியாளர்களின் கடமைக்கேற்ற பங்கு நிறைய தேவைப்படுகிறது.

ஒரு விவாதத்தில் பொருளாதார 'நிபுணர்' சொல்லக் கேட்டது " வீடு கட்டக் கூட கடன் வாங்கக் கூடாது. சேர்த்து வைத்து பின் வாங்கிக் கொள்ளலாம்". இப்படி யாராவது வீடு கட்டி இருந்தால் - அவர் சேமிப்பில், அவரின் காலத்தில் அவரே வீடு வாங்கி இருந்தால், அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்து, இன்றைய பொருளாதார உலகில் இது நடைமுறை சாத்தியமில்லை.

நமக்கு உள்ள சந்தர்ப்பங்களை திறமையாகப் பயன் படுத்துவதில் தான் , நாம் முன்னேற்றம் காண்கிறோம். முன்பெல்லாம் பெரியோர்கள் 'கடன் வாங்கிச் செலவழிக்காதே" என்பர். ஆனால் இன்று  வீட்டுக்கும், கல்விக்கும் கடன் வாங்கினால் வீண் போகாது என்று நம்பப் படுகிறது. இரண்டுமே நாட்கள் போகப் போக , எதிர் பார்த்ததை விட , பலன்கள் பல கொடுக்க சாத்தியங்கள் உள்ளது.

கார்டுகளைப் பற்றியும் பல விதமான அபிப்ராயங்கள். தெளிவான நோக்குடன், மனதை குறுக்கு வழியில் செலுத்தாமல் செயல் பட்டால் க்ரெடிட்டோ டெபிட்டோ எந்தக் கார்டு மூலமும் கையைச் சுட்டுக் கொள்ளாமல் பணப் புழக்கத்தைச் சமாளித்து , நாம் ஒரு சிறிய லாபமும் ஈட்டலாம்.

தேவை - கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை. இருபது வருடங்களுக்கு மேலாக கறிகாய்க்குக் கூட கார்டைத் தேய்த்து வெற்றி கண்டவனின் கூற்றாக இதைக் கருதலாம்.

தொலைக் காட்சியில் பல 'நிபுணர்கள்' பேசுகிறார்கள்:
  • எப்படி நோய் தவிர்ப்பது 
  • எப்படி ஒரே மாதத்தில் பல லட்சங்கள் லாபம் பெறுவது 
  • எப்படி முக்தி அடைவது
  • சென்னைக்கு மிக அருகே, ஆனால் வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியாக உச்சிப் பிள்ளையாரையும் தரிசனம் செய்யக் கூடிய நிலங்களை குறைந்த விலையில் எங்கு வாங்குவது !
  • தீய பழக்களிலிருந்து விடு பட
  • எண்களை மாற்றிக் கண்களைத் திறப்பவர்கள்
  • சில நூறு ரூபாய் மதிப்புள்ள இயந்திரம், தாயத்துக்கள் மூலம் பல வருடத்து தீமைகளை விரட்ட
 இப்படிப்பட்ட கூற்றுகளில் விழுவதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லை என்று நினைக்கிறேன்.

நெடுந்தொடரில் நாயகி படும் கஷ்டம் தாங்காமல் கண்ணீர் சிந்தும் முன்னவர்கள் ஜாக்கிரதையாக ஏமாறி யாரிடமும் சொல்லாமல் மௌனமாகத் தாங்கிக் கொள்கிறார்கள்.

தத்தம் தலைவர்களுக்கும், ஹீரோக்களுக்கும் வெள்ளந்தியாக கை தட்டும் பின்னவரோ இழப்பு தாங்காமல் ஊரைக் கூட்டுகிறார்கள். இது தேவலை- மற்றவர்களுக்காவது ஒரு பாடமாக இருக்கும்.

 தொலைக் காட்சியில் வரும் சோப்புக் கட்டிதான் நேற்று சட்டையில் கொட்டிய சாம்பார் கறையை போக்கும் என்று நம்பி கடைக்கு ஓடுபவர்களையும் இத்தகைய சில போதகர்களையும் சேர்த்துப் பார்த்தால் கவலை அதிகரிக்கிறது.

சில உண்மைக்குப் புறம்பான போதனைகளைச் செய்ய ஏதுவாகும் தொலைக் காட்சி நிலையங்களுக்கும், நிறுவனங்களுக்கும்  எந்தப் பொறுப்பும் கிடையாதா? ஏதேனும் வரைமுறைகள் உண்டா?

பார்ப்பவர்களும், நடத்துபவர்களும், சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்பவர்களும், அரசும் சிந்திக்க வேண்டிய விஷயமிது.

1 comment:

  1. Akhiladevi Kumaran wrote: "Good Article, Sir. அனைவர் மனதிலும் நெருடும் எண்ணங்களை அருமையாக கூறி இருக்கிறீர்கள்! இது போதாதென்று, சில நல்ல நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் விளம்பரங்களின் மூலமும் தேவையற்ற போதனைகள் தினந்தோறும் வாரி வழங்கப்படுகின்றன!!"

    ReplyDelete