Tuesday, November 1, 2016

என் அக்டோபர் காதல்

எனக்கும் அக்டோபருக்கும் ஒரு எழுதப் படாத நட்பு இருந்து கொண்டிருக்கிறது.

- சென்னை வெய்யிலின் தாக்கம் குறையத் தொடங்கும் மாதம் (முன்பெல்லாம்)
- பல பண்டிகைகள் வரும், குறிப்பாக தீபாவளி.
-  இந்த மாதத்தில் நடந்த பல சம்பவங்கள் மறக்க முடியாமல் இன்றும் அசை போட வைத்துக் கொண்டே இருக்கின்றன . 

இப்படியாக அக்டோபர் எனக்கு பிடித்துப் போக பல காரணங்களைக் கூறலாம்.

என் மற்றொரு நண்பன் மழை. நான் எடுக்கும் எந்த ஒரு நல்ல முடிவின் போதும் கண்டிப்பாக ஒரு லேசான மழையாவது வந்து ஆமோதித்தே தீரும் - அனேகமாக அது கன மழையாக இருந்தால் மிகப் பெரிய முன்னேற்றமாகத்தான் இருக்கும். இது நம்பிக்கையோ , எதிர் பார்ப்போ இல்லை. உண்மையில் நடந்தது தான்.

குறிப்பாக அக்டோபர் மழையுடன் சேர்ந்து நிகழ்ந்த ஒன்றிரண்டு சம்பங்கள் மறக்க மறுக்கின்றன

அந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர்  மாதக் கடைசியில், வழக்கமான கூட்டம் தான் இருந்தது வங்கியில். கொஞ்சமும் தலை தூக்க முடியாமல் வேலை செய்து கொண்டிருந்த அப்படிப்பட்ட ஒரு அரிய தருணத்தில் மிகவும் பரிச்சயப் பட்ட குரலின் குட் மார்னிங் கேட்டு தலை நிமிர்ந்தால், நட்பு அதிகமுள்ள ஒரு வங்கி வாடிக்கையாளர் அசாதாரண பதற்றத்தில் இருந்தார். கௌண்டரின் உள்ளே வந்து உரிமையோடு பக்கத்தில் உட்கார்ந்து  ' இப்ப சொல்றது இன்னும் கொஞ்ச நேரத்துக்காகவாவது ரகசியமாக வெச்சுக்கோங்க' என்ற பீடிகையுடன் ' இந்திரா காந்திய சுட்டுட்டாங்க. இறந்து  போயிட்டதா தகவல்-மேலும் டெல்லியிலே ஒரே கலவரமாம் . ஜாக்கிரதையா இருங்க' ன்னு சொல்லிட்டு ஓடியே போயிட்டார். சென்னை சாந்தோமில் உள்ள அவர் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு  இப்படிப் பட்ட சேதிகளை முதலில் ஆராய்ந்து மக்களுக்குச் சொல்லும் அதிகாரம் இருந்ததால் 'உண்மையா' என்று கேட்கத் தோன்றவில்லை.   

கேட்டதை மற்ற நண்பர்களுடன் அதே ரகசியகமாகப் பகிர்ந்த பிறகு வீட்டுக்குப் போக வெளியே வந்தால் செய்தி கசிந்ததற்க்கான ஆதாரங்கள் சில ஷட்டர்கள் மூடும் சத்தத்தால் தெரிந்தன. இதற்க்கு முன் இப்படிப்பட்ட தலைவர்கள் இறந்த போது சென்னையில் நடந்த சில கலவரங்கள் ஞாபகத்துக்கு வர சைக்கிளை மிதித்து அருகிலுள்ள பள்ளிக் கூடத்தில் படிக்கும் எங்க வீட்டுப் பையனையும் அவன் நண்பனையும் கூட்டிக் கொண்டு , கூடவே நான்கு ரேடியோ பாட்டரிகளையும் (கலவரம் நடந்தால் கரண்டு பிடுங்கப்படலாம் என்பதால்) வாங்கிக் கொண்டு பத்திரமாக வீட்டில் சேர்த்த பிறகு தான் கொஞ்சம் நிதானப் பட்டது. 

இதனுடன் நில்லாமல் சைக்கிளை மிதித்து சில நண்பர்கள் தி நகரில் கூடி விவாதித்து விட்டு வீடு திரும் பொழுது பார்த்த வன்முறைகள் இன்றும் பீதி ஏற்படுத்துகின்றன. அப்புறம் தான் தெரிய வந்தது டெல்லி கலவரங்களை நினைத்தால் சென்னை ஒன்றுமே இல்லை என்று.    

அதே அக்டோபர் கடைசி தினத்தில் 2002ஆம் ஆண்டு காலை பொழிந்த பலத்த மழை என்னை அவ்வளவு பாதிக்கவில்லை ஏனென்றால் என் மனமெல்லாம் நான் அன்று எடுத்து வைக்கப் போகும் மிகப் பெரிய அடியில் இருந்தது. கால் நூற்றாண்டுக்கு மேல் ஒட்டி உறவாடிய வங்கிக்கு கையசைத்து விடை கொடுத்து, என் மனதுக்குப் பிடித்த அடுத்த துறையில் வேலைக்கு போகும் முதல் நாள். கொட்டிய மழையைப் பொருட்படுத்தாது ஆட்டோவில் சென்று அந்த அண்ணா சாலை அலுவலகத்தில் நுழைந்தால் அங்கு வேறு விதமான வெள்ளம் - புதிய ப்ரோஜக்டுக்குச்  சேர வந்த நிறைய தலைகள், அன்று தொடங்கும் பயிற்ச்சியில் கொடுத்த 'அறிவுப் பரிமாற்றத்தில்' கிடைத்த லீஸிங் பற்றிய வெள்ளமான விவரங்கள் - இப்படி மூழ்கி இரவு ஒன்பது மணி அளவில் வெளியே வந்தவுடன் தான் தெரிந்தது அன்று நாள் முழுவதும் சுமார் எட்டு மணி நேரத்துக்கு மேல் மழை கொட்டித் தீர்த்து சென்னையை புரட்டிப் போட்டிருக்கிறது என்று. கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆட்டோ பிடித்து காலைத் தூக்கி ஸீட் மேல் வைத்தும் நனைந்து (நீந்திக்) கொண்டே வந்த போது இரவு மணி 10.30. அன்று ஏற்பட்ட வெள்ளத்தில் புரண்ட சென்னை சாலையால் பல பஸ்கள் அங்கங்கு நின்று போக , அன்று பார்த்து தன் முதல் நாள் வண்டலூர் கல்லூரியில் பொறியியல் கல்வி தொடங்கிய என் அண்ணன் மகன் , செல் போன் இல்லா அந்தக் காலத்தில் என்ன ஆனான் என்று கவலைப் பட்டு ஒரு வழியாக இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது வேற கதை.

இதே போல் 1986 என்று நினைக்கிறேன். கடமைக்கு ஒரு  பணி ஆற்றிக் கொண்டிருந்த போதிலும் என் திருப்திக்காக துரத்திக் கொண்டிருந்த மற்றோரு பணி படித்தறிந்ததை கற்றுக் கொடுப்பது. இப்படி ஆசைப்பட்டு அதற்கொரு மஹானுபாவன் வாய்ப்பளித்த களிப்பில் ஒரு அக்டோபர் மாலையில் வெளியில் வந்தால் வானம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கவலைப் படாமல் வண்டியை உருட்டி வேகத்தைக்கூட்டினாலும் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அருகில் வந்த பொழுது இனிமேல் என்னால் முடியாது என்பது போல் வானம் மடை திறந்து ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்து என்னையும் முழுமையாக நனைத்தது. சரி , இனிமேல் இப்படி ஈரம் சொட்டும் உடையில் பாடமெல்லாம் எடுக்க முடியாது என்று தைரியமாகப் போன எனக்கு ஷாக் கொடுத்தார் மேலாளர் - 'இன்று நல்ல நாள். வகுப்பை ஆரம்பித்து விடலாம் ' என்று. ஈர சாக்ஸை உலரவைத்து விட்டு வெறும் காலுடன் முழுவதும் நனைந்த பேண்டு, ஷர்ட்ஆங்காங்கே ஜில்லுப்பாக கிசு கிசு மூட்ட எடுத்த முதல் வகுப்பு அனுபவம் ; மிகப் பெரிய வரவேற்பு கொடுத்து மேலும் பதினைந்து வருடங்கள் ஓடியது, மற்றுமொரு மறக்க முடியாத அக்டோபர்  நாள் தான்.

இந்த இனிய உறவின் நினைவு ஒவ்வொரு  அக்டோபர் மாதமும் வரத் தவறுவதில்லை.

Wednesday, September 7, 2016

ஒரு 'கிரேசி' முயற்சி

சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் குமுதத்தில் படித்த நாடகக் கதை!

அன்று படிக்கும் பொழுது அனுபவித்த அதே ஜோக்குகள் - 70 எம் எம்  திரை, திருவோண நட்சத்திரம் ரயிலை விடும் - போன்றவை இன்றும் குபீர் சிரிப்பைக் கிளப்பியது.

இப்படிப்பட்ட ஒரு அரிய , சுவையான , பின்னோக்கிப் போன பயணத்தை அளித்தது நாடகப்பிரியா குழுவின் 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம் ' என்ற நகைச்சுவை நாடகம் ,  மீண்டும் நேற்று அரங்கேறிய பொழுது கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் உதவியால் காண நேர்ந்தது.

நீளம் சற்று குறைவானதுதான் என்றாலும் நகைச்சுவைக்கு ஒன்றும் குறைவில்லை . கூர்ந்து கவனிக்கா விட்டால் ஒரு ஜோக் மக்கள் சிரிப்பிலும், கை தட்டலிலும் பறந்து விடும் என்ற அபாயம் எப்பொழுதும் இருந்தது . எஸ் வீ சேகர் இருந்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அந்த காலத்தில் ஒரு பேச்சு உலவியது - "இவர் எல்லா இடத்துலயும் , எல்லாரைப் பத்தியும் ஜோக் அடிக்கறதால் இவர் அரசியலுக்கு வந்த புதிதில் மக்கள் அதைக் கூட ஏதோ தமாஷ்தான் என்று நினைத்தார்கள்" என்று . அதற்க்கேற்றாற்போல் இவர் தேர்ந்தெடுத்த சின்னமும் அந்த எண்ணத்தைக் கூட்டியது. அதற்குப்பின் பானை தென்னையை வீழ்த்தியதெல்லாம் வேறு கதை , நமக்கு இங்கு தேவை இல்லாதது, நம் தொகுப்பிற்கு அப்பாற்பட்டது!

நாடக முடிவில் பேசிய சேகர் , இதை இவ்வளவு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூசி தட்டி எடுத்து மேடையேற்ற எவ்வளவு கஷ்டப்பட்டோம்  என்று விவரித்தார்.

உண்மை தான் , பல இடங்களில் சில நடிகர்கள் வசனங்களைக்  கோட்டை விட்டாலும் சேகர் நுழைந்து அதையும் ஒரு வசனமாகவே புகுத்தி, சரி செய்த பொழுது தெரிந்தது அவருக்கு நகைச்சுவை உணர்வு இன்னும்  துளி கூட குறையவில்லை என்று.

பேசிக் கொண்டே லாவகமாக நகர்ந்து வந்து சக நடிகர்களை மைக் அருகில் வரச் சொன்னது , அவருடைய  கூர்மையான நாடக உணர்வு சற்றும் குறையவில்லை என்பதையும் காட்டியது.

இவ்வளவையும் கவனித்துக் கொண்டே நொடிக்கு நொடி காட்சிக்கேற்றார்  போல் உடையை மாற்றிக் கொள்ளும் சேகருக்கு ஒரு சபாஷ்.

ஒரு  நடிகரின் உருவம்  கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்பதைக் கூட ' நீ கூடத்தான் பார்த்தா அவ புருஷன் மாதிரி இல்ல, தம்பி மாதிரி இருக்கே ' என்று வசனமோட வசனமாக பேசிய பொழுது , அவர் இந்த தூசி தட்டி எடுத்த நாடகத்தை பல முறை மேடை ஏற்றப் போகிறார் என்ற எண்ணமும் புரிந்தது.

மிக சிரத்தையாக 'மைலாப்பூரில் கிரவுண்டு விலை 45000, பெட்ரோல் விலை பத்து பைசா ஏறி ஒரு ரூபாய் தாண்டி விட்டது ' போன்ற வசனங்களால் 2016 இல் போடும் இந்த  நாடகத்தை எழுபதுகளுக்கு தள்ளி விட்டுக் கொண்டே இருந்தது ஒரு நல்ல முயற்ச்சி.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும், கவுண்டரிலிருந்து சூரி வரை வந்து போன பிறகும், இன்றைய மக்கள் நாற்பது வருட வயதான ஜோக்குக்கு குலுங்கிச் சிரித்தது , மோகனின் நகைச்சுவைக்  கிரீடத்தில் பதித்த  மற்றுமொரு வைரக் கல்.

கிரேசி மோகனின் வசனமும், சேகரின் மேடை அனுபவமும்  தூண்களாக நின்று இந்த நாற்பது வருட நகைச்சுவை நாடகத்தை தொய்வு விழாமல் பார்த்துக் கொண்டதற்குப் பாராட்டியே ஆக வேண்டும்.

சேகர் மேலும் தன் பின்னுரையில் , வார நாளாக இருந்தும் நாரத கான சபா உள்ளேயும் , கார் பார்க்கிங்கிலும் நிரம்பி வழிந்ததற்கு  மோகனின் வசனங்களைக் காரணம் காட்டியது அவர்களின் நட்பையும் , நாடகத் துறையில் இன்னும் உலவும் நாகரிகத்தையும்,  பரஸ்பர மரியாதையையும் காட்டியது.

 'மக்கள் நாடகங்களை ஆதரிக்க  வேண்டும், எல்லா நாடகங்களையும் பார்க்க வேண்டும்' என்று அவர்  வேண்டிக்கொண்ட பொழுது நாடகங்களின் மேல் உள்ள அவரின் அதீதப் பற்று , நாடகத் துறை மங்கிக் கொண்டிருக்கிறதே என்ற ஆற்றாமை  போன்றவை தெரிந்தது .

இன்றும் சேகர், சோ, மௌலி , மோகன், மனோகர் போன்றவர்கள் போட்டது போன்ற  நாடகங்கள் வந்தால் மக்கள் பார்க்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.  வந்தால் சொல்லுங்களேன் !!

Monday, July 18, 2016

சிரிக்க சிந்திக்க

ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது
பேச்சாளர்களை எப்படி தேர்வு செய்வது
சிரிப்போ , சிந்தனையோ --- எப்படி திகட்டாமல் கொடுப்பது
வந்தவர்களை எப்படி கவனிப்பது
நிகழ்ச்சியைக் காண வந்தர்களுக்கு எப்படி திகட்டாத, அசௌகரியங்கள் இல்லாத சில மணி நேரங்களைக் கொடுப்பது

ஈவண்ட் மானேஜ்மேன்ட் என்ற பெரிய சமாச்சாரத்தை தங்களின் உழைப்பினாலும், முப்பது வருடங்களுக்கு  மேற்பட்ட அனுபவத்தினாலும்  அனாயாசமாக செய்து காட்டி இருக்கும் சென்னை திருவல்லிக்கேணி ஹியூமர் கிளப் நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய ஷொட்டு.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பாளிகள் வந்தாலும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நான்கு மணிக்குச் சரியாக   மாம்பலம் சகோதரிகளின் இனிய குரலில் அரங்கில் 'சாந்தியை நிலவ' விட்டு  நிகழ்ச்சியை தொடங்கியதிலேயே தெரிந்தது இவர்களின் திட்டமிடும் ஆற்றல் .

தொடக்கத்திலிருந்தே  காரியத்தில்  குறியாய் இருந்து, தான் அதிகம் பேசாமல் , முக்கிய பேச்சாளர்களை பேச விட்டு, இடை இடையே அடுத்த வருட நிகழ்ச்சிக்கும் ஆதரவு தேடும்  இந்தக் கிளப்பின் செயலாளர் பாராட்டப் பட வேண்டியவரே.

முதலில் உரையாற்ற வந்த சொல்லின் செல்வர் சுகி சிவம் அவர்கள் தமிழ் மடை திறந்து நகைச்சுவை கலந்த உரையில் அனாயாசமாக இன்றைய தேதியில் முக்கியமாக எல்லோராலும் நிமிர்ந்து பார்க்கக் கூடிய சொல் - 'மகிழ்ச்சி' - என்றால் என்ன என்பதை:

-  "40%  தான் விரும்பும் ஒருவருடனோ இல்லை தன்னை விரும்புவருடனோ இருப்பது,
- மற்றோர் 40% தான் விரும்புவதைச் செய்வது என்றும்
- பத்து சதவிகிதம் தான் இதில் பணம் இடம் பெறுகிறது" என்றும் சொல்லி சுகமான குளிர் அரங்கில் கண் அசர முயலும் சிலரின் கண்களையும் திறந்து வைத்தார்.

இவருக்கு கணக்கு சரியாக வராதோ என்று நாம் வியப்பதற்கு முன் நிதானமாகத் தொடர்ந்தார் 'மீதமுள்ள பத்து சதவிகிதத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ' என்று. இவர் குறிப்பிட்ட ' Happiness' என்ற ஒரு குறும் படத்தை யூ டியூபில் பார்த்துக் கொள்ள பலரும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

யாரோ ஒருவர் மஹாபெரியவரிடம் ராம ஜென்ம பூமிக்குப் போகுமுன் உத்தரவு வாங்கப் போன போது, பெரியவர் அவரை 'கிருஷ்ண ஜென்ம பூமியையும்' பார்த்து வரச் சொன்னதின் உள் அர்த்தம் - நன்கு அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.

இவர் ஏன் பேச்சை முடிக்கிறார் என்று நாம் ஏங்கும் பொழுது   தொடர்ந்த   மோஹன சுந்தரம் , ஒரு சர வெடிப் பேச்சாளர். ஒரே வாக்கியத்தில் சில முறை ஒன்றுக்கு மேற்பட்ட நகைச் சுவையையும் கலந்து ஒரு நாற்பத்து ஐந்து நிமிடங்கள் அரங்கைக் கலக்கி விட்டு அமர்ந்த போது தொலைக் காட்சியில் முன்பெல்லாம் தென்பட்ட மதுரை முத்துவை நினைத்து மனம் ஏங்கியது - அப்படி ஒரு இடை விடாத நகைச் சுவை. இவர் பேச்சின்  தனிச் சிறப்பு -நிறைய வீட்டு  சம்பந்தப்பட்ட நகைச்சுவை இருந்தாலும் அவற்றை  வீட்டுமக்களையும்  பக்கத்தில்  வைத்துக் கொண்டே  ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்பது தான்.

மனம் நிறைந்து, எழுந்து எழுந்து, வாய் விட்டுச் சிரித்த பார்வையாளர்களின் உடம்பைக் கருதியோ என்னவோ அடுத்துப் பேச அழைத்த பர்வீன் சுல்தானா சிந்திக்க , உணர நிறைய விஷயங்களை முன் வைத்தார்.

'அடங்கிய மனமே குரு ' ,
 'எப்பொழுதுமே தோற்ப்பதற்க்கு தயாராக இருப்பவர்களை யார் ஜெயிக்க முடியும்' ,

போன்ற தெளிவான கருத்துக்களை சிறிது ஆவேசத்ததுடன் அள்ளி வீசினார். பேச்சைக் கேட்கக் கேட்க புரிந்தது அது ஆவேசம் இல்லை , தெரிந்து கொண்ட விடயங்களைத் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என்று. பேச்சாளரின் பெயரைக் கேட்டு எடை போட்ட நண்பர்களை விவேகானந்தர், சாக்ரடிஸ், மஹா பெரியவர், யேசுநாதர், நபிகளார்  போன்றவர்களின் கருத்துக்களை அனாயாசமாக உரைத்து வெட்கப் பட வைத்தார். அன்னாரின்  உரையில் விளக்கிய 'விஸ்வரூபத்தின்' விளக்கத்தை நான் இது வரை கேட்டதில்லை!

 "கவலை என்ற பறவை என் மேல் பறக்க, நான் கவலைப்  பட மாட்டேன்
 ஆனால் அவை என் மேல் கூடு கட்ட விட மாட்டேன்"

 - என்றுரைத்த போது முண்டாசுக்கவியின் ஆவேசமும், உறுதியும் நினைவுக்கு வந்தது. மக்களை பலத்த சிந்தனையில் ஆழ்த்தி உரத்த கையொலிக்கு நடுவே அமர்ந்த போது , பார்வையாளர்கள் நகைச் சுவையிலிருந்து சிறிது விலகி நின்று , அந்த அம்மையாருக்கு ஆச்சி மனோரமா விருது  கொடுத்ததைக் கூட உள்  வாங்காமல்,  நம்மைச் சுற்றி உள்ள மகான்களும் அவர்களுரைக்கும் மகத்தான சிந்தனைகளிலும் ஆழ்ந்து போயிருந்தார்கள்.

நகைச் சுவை மன்றத்தார் அந்த அரங்கை இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்த அந்தப் பள்ளியின் முதன்மையாளரை கௌரவப் படுத்திய பிறகு தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த முனைவர்  ஞானசம்பந்தம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த மக்களை எழுப்பி தன் கொஞ்சும் தமிழில்  மீண்டும் நகைச்சுவை தீபாவளிக்கு கூட்டிச்சென்றார்.

சரியாக எட்டு மணிக்கு தேசிய கீதத்திற்குப் பிறகு வெளியே வந்த மக்கள் பலரின் மனதிலும் அசை போடப்பட்டிருந்த வரிகள் , கடைசியில் பேசிய முனைவரைச் சாரும்  : " பிரதானமாக ஹிந்துக்களாலே நடத்தப் படும் இந்த நிகழ்ச்சியில் ஒரு முகமதியருக்கு விருது கொடுத்து , தலை சிறந்த ஆன்மிகப் பேச்சாளர் சொல்லின் செல்வம் கைகளால் இந்தக் கல்லூரியின் முதல்வரான ஒரு கிருத்துவருக்கு மேடையில் கௌரப்படுத்தப் படுவதை எண்ணிப் பெருமைப் படுகிறேன் ".

இதை விட மனம் நிறைந்த சுவை வேறு எங்கு கிடைக்கும் ?

வீட்டிற்கு வந்ததும்தான்  பார்த்தேன் அரங்கில் நுழையுமுன், குடிநீர் பாட்டிலையும் தின்பண்டங்களையும் தவிர,  என்னென்னவோ   கையில் திணித்திருந்ததை.

அதில் இவர்களின் 1983 ஆம் ஆண்டுக் கனவாக இருந்தவை:

"நம் கிளப்பிலே 500 அங்கத்தினர் சேர்க்க வேண்டும்.
நாரத கான சபா போன்ற பெரிய அரங்கிலே ஆண்டு விழா நடத்த வேண்டும்
ஆயிரம் பேர் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொருவருக்கும் ஒரு பை நிறைய பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும்
சிரிக்க வைக்க வேண்டும்
ஒரு நாலு மணி நேரம் அவர்கள் தங்கள்  கவலையை மறந்து ஆரோக்கியமாக சிரிக்க வேண்டும் "

சாதித்துத்தான் இருக்கிறார்கள்!
 மூவரணி,  அமைதியாக இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை குலுங்க வைத்திருக்கிறார்கள் - வாழ்த்துக்கள்.

மன்றத்தினர் பகிர்ந்த வலைத்தளத்தின் இணைப்பையும் இங்கு பகிர்வதால் நான் அடைவது:  'மகிழ்ச்சி'   !!  https://youtu.be/sWmyx5ZzSlk

Sunday, July 10, 2016

ஒரு மழைக்கால மராத்திய விஜயம்


Raring to take off from the Chennai Airport !
அந்த 16 பேர் குழு  கிளம்பும் பொழுதே மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானைப் பார்த்து சென்னையின்  வானம்  பிரிவில் தான் கண் கலங்குகிறதென்று எண்ணி  எந்த சந்தேகமும் படாமல் சுற்றுப் பயண இயக்குனர்கள் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் கொடுத்த இட்லிகளை அருமையான . தக்காளி சட்னியுடன் உள்ளே தள்ளி விட்டு இண்டிகோ விமானப் பயணத்தை அனுபவித்துப் பின் புனேவில் இறங்கியபின் தான் கவனித்தனர், புனேயும் ஆனந்தக்  கண்ணீர் வடித்துத் தங்களை வரவேற்றதை !! சென்னையின் பிரசித்தி பெற்ற வெயிலைத் தொலைத்தாலும் சந்தோஷப் பட முடியாதபடி , அந்தக் குளு குளு வானிலையிலும்  புனேயின் சாலைப் போக்குவரத்து நெரிசல் போரூர் சந்திப்பெல்லாம் ஜுஜுபி என்று சொல்லி வியர்க்க வைத்தது.

Dagdusheth Vinayagar Temple, Pune
எப்படியோ சமாளித்து, நீந்தி, பல வாகங்களுக்கு மறு வாழ்வு கொடுத்ததில் கலங்கிய இதயத்திற்கு  இகோஸ்பிரின் மாத்திரை எடுத்து வந்திருப்பதை மனைவியிடம் உறுதி செய்து கொண்டிருக்கும் போதே வண்டி நின்ற இடம் 'தக்தூ  சேத் ஹல்வாயி கணபதி' கோவில். இந்தியாவிலா - ஏழ்மையா என்று கேள்வி கேட்பது போல் தங்கமும், வெள்ளியும் அணிந்து அருமையாக தரிசனம்  கொடுத்துக் கொண்டிருந்தார்   விநாயகர்.   ஒரு சாதாரண இனிப்புக்கு கடைக்காரர் தனக்கு விநாயகர் அளித்த வியாபார லாபத்துக்கு  நன்றியாகக் கட்டப் பட்டதாகச் சொல்லப்படும்  இந்தக் கோவில் புனேயில் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

Narayanpur Balaji temple

மனம் திருப்தி அடைந்தாலும் வயிற்றில் அலாரம் அடிக்கத் தொடங்க ஒரு ஹோட்டலைப் பிடித்து இனிப்பான தக்காளி சூப்புடன் (பாயச பாத்திரத்தில் சூப்  கலக்கி விட்டானோ  ??!!) சாப்பாட்டை முடித்து சென்ற அடுத்த இடம் - நாராயண்பூர். திருப்பதி போன்று நெடு நெடுவென்று நின்ற பெருமாள் தரிசனம் .  கோவில் - சுத்தத்திலும் உயர்ந்து நின்றது .

Satara - Nataraj temple

நிதானமாக நின்று அடிக்கும் மழையைப் பொருட்படுத்தாது முன்னேறியது , சத்தாரா என்ற  இடத்திற்கு . இந்த  ஊரில் உள்ள நடராஜர் கோவில்சிறப்பு -  மேற்கு இந்தியாவில் சிதம்பரத்தைப் போன்ற ஒரு கோவில் வேண்டுமென்று கட்டப் பட்டதாம் .  உத்தர சிதம்பர நடராஜர் என்றழைக்கப்படும் இந்தக் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களும் தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் முதல்வர்களின் உதவியால் கட்டப் பட்டவையாம். முக்கியமாக மஹா பெரியவர் இங்கு பல காலம் தங்கி இருந்த இடம். 

இவ்வளவு தொலைவு கடந்து வந்தாலும், சிரமம் பாராமல்  என் மனைவியின் பிறந்த நாளை , கோலாப்பூர் ஹோட்டலில் சிறப்புடன் கொண்டாட வாழ்த்தி வழி வகுத்த அனைவருக்கும் நன்றி.


வந்த அலுப்புத் தீரத் தூங்கி மறுநாள் விடிகாலை கண்ட தரிசனம், கோலாப்பூர் மஹாலக்ஷ்மி ! மிகப் பழமையான இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்களும் , வேலைப் பாடுகளும் சரியான பராமரிப்பு இல்லாமலும் தனித்து நின்றன. இந்தக் கோவிலின் மற்றோரு சிறப்பு துல்ஜா பவானி, காசி அன்னபூரணி போன்ற சன்னதிகளும் முறையாக அமைக்கப் பட்டிருப்பது.

Kohlapur Mahalakshmi Temple

கோலாப்பூரிலுந்து ஒரு சுமாரான சாலையில் சில மணி நேர பயணத்திற்குப் பின் வந்தது 'பண்டரிபுரம்'. விட்டலனின் இடத்தில் கால் பதித்ததும் வந்த சந்தோஷம் அங்கு சொல்லப் படும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவியும் செய்தியும், தரிசனத்திற்கு எட்டிலிலுருந்து பத்து மணி நேரம் வரை ஆகும் என்ற நிலவரமும் கொஞ்சமும் கலங்க வைக்கவில்லை. இவ்வளவு தூரம் நம்மை அழைத்து வந்த பாண்டுரங்கன் , அதையும் பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த திட நம்பிக்கை கொஞ்சமும் பொய்த்துப் போகாமல் , இருபது நிமிடங்களுக்குள் குழுவில் உள்ள பதினாறு பேரும் மனம் நிறைந்த தரிசனம் பார்க்க வழி வகுத்துக் கொடுத்தது எப்படி என்பதை விட்டலைத் தான் கேட்க வேண்டும் !!

Pandaripuram
நிறைந்த மனத்துடன் ஒரு இஞ்சி சுக்கு கலந்த தேனீருக்குப் பின் நம்ம ஊர் ஆட்டோவில் கிளம்பினோம் , சில உள்ளுர்க் கோவில்களைக் காண. பல லட்ச பக்தர்கள் குவியும் இந்த ஊரின் சாலை மற்றும் சுகாதார நிலை சொல்லிக் கொள்வது போல் இல்லை. நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்தது போல் பிரதமரின் 'சுத்தமான இந்தியா' கனவு இன்னும் இங்கு வந்து சேரவில்லை போல. குண்டும் குழியுமான சாலை , அதில் விதிகள் என்றால் என்ன என்று ஒன்றும் புரியாமல் தலையைத் திருப்பிப் பார்க்கும் மாடுகளும் , மனிதர்களும் . தெருவில் நிதானமாக ஓடும் கழிவு நீர் . கண்டிப்பாக அரசாங்கமும், கோவில் பராமரிப்பதற்கு தானங்கள் செய்யும் பல தர்மவான்களும் காலம் தாழ்த்தாமல்  கவனிக்க வேண்டிய ஒன்று.

Braving rain, awaiting dharshan
இவ்வளவு சங்கடங்கள் இருந்தும் , எதையும் சட்டை செய்யாமல் தெருவில் தரிசனத்திற்காக  பல மைல் தொலைவில் பொறுமையுடன் மழை, வெய்யிலைப் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் எளிய கிராமத்து மக்களை எவ்வளவு தட்டிக் கொடுத்தாலும் தகும். 

நம்ம ஊர் ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமைப் படுவது போல் ஓட்டுகிறார்கள் அங்கு உள்ளவர்கள் - அந்த வேகத்தில் எங்கு யாரை இடித்துச் சாய்ப்பார்களோ என்ற பயத்தில் கண்களை மூடி  உட்காந்ததும் முதலில் நிறுத்திய இடம்  துக்காராம் மந்திர்.  இங்கு அவர் பயன்படுத்திய மரக்கட்டில் போன்றவைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.

Cot used by Dhukkaram
அதன் பின் பார்த்த கோரா கும்பர் கோவிலிலும் இப்படிப்பட்ட ஞாபகார்த்த சின்னங்கள் காணப்பட்டது .

Gora Kumbar 
அதன்பின் பார்த்தது கோவில் அல்ல - முனிவர்களிலுருந்து, புண்டரீகன், வேதங்களுக்கு முதல்வன் இவர்களிலுருந்து காந்தி, நேரு , அமெரிக்க ஜனாதிபதி வரை அனைவரின் மண்  உருவ பொம்மைகளும் வைக்கப் பட்டிருக்கின்றன.  ஒரு அருங்காட்சியகம் போல் உள்ள அந்த இடம் வருங்கால மக்களுக்கு  ஒரு சரித்திர வழிகாட்டியாக அமைக்கப் பட்டிருப்பது புரிந்தது.

Sree Santh Kaikadiya Viswapunyadaam
ஆனால் இது கட்டப் பட்டிருக்கும் விதமோ அவ்வளவு சுலபமாக இல்லை. ஏறி, இறங்கி, ஏறி, இறங்கி, குறுகிய பாதைகளில் பயணித்து சிறிது நேரத்தில் ஒரு பயம் கூட வந்துவிடுகிறது- நாம் சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று. ஒரு மணி நேரம் கடந்து, வியர்த்து வெளியில் வந்தால் அதன் அமைப்பை நினைத்து பிரமிப்பு தான் மிஞ்சுகிறது. அந்த இடத்தின் பெயரும் அமைப்பைப் போல் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது - ஸ்ரீ சாந்த் கைக்கடிய விஸ்வ புண்யதாம்.

இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் அன்றிரவு தங்கி ஆனந்தம் அடைந்தோம் .

மறுநாள் எங்கள் பயணம் தொடர எதிரே ஆஷாட ஏகாதசிக்கு பாண்டுரங்கனை தரிசனம் செய்ய சாரை சாரையாக வந்த மக்களைக் காண பிரமிப்பாக இருந்தது. வெகு தூரத்திலிருந்து கால் நடையாகவே வந்து கொண்டிருந்த இவர்களில் அநேகம் பேர் முதியவர்கள் -  பஜனை செய்து கொண்டே செல்கின்றனர்.   ஆங்காங்கு வயல்களில் உள்ள பம்பு செட்டுகளில் குளித்து, ஒரு ஓரமாக தீ மூட்டி ஆகாரம் செய்து பிறகு நடை பயணத்தை தொடருகிறார்கள் . பல முதியவர்கள் அப்படியே வயல்களில் படுத்து  இளைப்பாறியதையும் காண முடிந்தது. இப்படி ஆச்சரிய பட்டுக் கொண்டே நாங்கள் வந்தடைந்த இடம் சனி ஷிங்ன்னாப்பூர்.

Sani Shingnapur
ஸ்னைஸ்வரனின் சுயம்பு உருவத்தைக் காண பலரும் பக்தியுடன் வந்து குவிகிறார்கள். இவருக்கு எண்ணெய் சாற்றுவது விசேஷமாகையால் மக்கள் பாட்டில் பாட்டிலாக ஊற்றும் எண்ணெய் பகவானை அடைய சிறு பாதை அமைத்து அதன் வழியே செல்லும் எண்ணெய் சனீஸ்வரன் தலை மேல் அபிஷேகமாக விழுவதை நாமே காணலாம் .

குளிர்ந்த மேகங்கள் குடை பிடிக்க மனமும் குளிர எங்கள் பயணம் தொடர்ந்தது ஷிரிடி நோக்கி. சாயிநாதனைக் காண விரைந்த குழுவிற்கு வியாழக் கிழமை கூட்டம் கொஞ்சம் திகைப்பைக் கொடுத்தாலும் பொறுமையாக முன்னேற மாலை சுமார் ஆறரை மணிக்கு நிறுத்தப் பட்டோம். எப்படியாவது மாலை ஹாரத்திக்கு முன் தரிசனம் செய்யத் துடித்த சிலருக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும். சாயிராமின் எண்ணங்கள் வேறாக இருந்தது. அங்கே இருந்த தொலைகாட்சிப் பெட்டியில் பகவானின் உடை மற்றும் , மாலைகள் மாற்றும்  காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த எங்களை திடீரென்று கதவுகளைத் திறந்து ஹாரத்தி பார்க்க அனுமதித்தது பெரிய ஆனந்த ஆச்சரியம். ஒரு நாற்பது  நிமிடங்கள் சாயிநாதனுக்கு நேரெதிரே அமர்ந்து முழு நிகழ்ச்சியையும்  கண்டு களித்து பிரமிப்புடன் வெளியே வந்தோம் . கேட்டதோ சில நொடி தரிசனம் , கிடைத்ததோ நாற்பது நிமிடங்கள் !!!

Shirdi

மறுநாள் காலை உணவாக சில நாட்களாகக் கிடைக்காத பொங்கலைப் பார்த்த குழு 'கண்டேன் பொங்கலை' என்று பாய்ந்து இரண்டு டம்பளர் பொங்கல் பருகியவுடன் - ஆம், பொங்கல் ஆறாய் ஓடியது - கிளம்பியது , பயணத்தின் கடைசி ஸ்தலத்துக்கு.  சென்ற அநேக இடங்களில் கிடைத்த அமோக தரிசனத்தில் திளைத்த குழு நான்காம் நாள் காலை மிகுந்த உற்சாகத்துடன் காணக் கிளம்பியது-  த்ரியம்பகேஸ்வர்  ஜ்யோதிர்லிங்க தரிசனத்திற்கு. கொட்டும் மழையில் வந்தடைந்து ஒரு மணி நேரம் காத்திருந்து  சில நொடிகள்  தரிசித்ததாலும் கிடைத்த  சிவ தரிசன சுகம் அலாதி.

Thrayambakeshwar

என்றுமே எல்லாம் நேராக நடந்து விடுவதில்லை . எல்லாக் கோவில்களிலும் கிடைத்த அமோகமான தரிசனத்தில் திளைத்திருந்த குழுவிற்கு காத்திருந்தது திரயம்பகேஸ்வரிலுந்து புனே வரும் பயணம். வழி நெடுக 'சாலை மேம்பாடு ' என்ற பெயரில் வெட்டிப் போட்டிருக்க ஒரு ஏழு மணி நேர பயணத்திற்குப் பின் சக்கையாக வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு புனேயில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கும் வசதி !

Pune Keys Hotel
கொடுத்த காசுக்கு சரியாக இருக்கும் அறையைச் சுற்றிப் பார்க்கக் கூட முடியாமல் இரவு பதினோரு மணிக்கு படுத்து மறுநாள் காலை 3.30 மணிக்கு எழுப்பப்  பட்டவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் அந்த அதிகாலையிலும் ஜானகி டூர்ஸ் ரமேஷின் ஸ்பெஷலான சுடச் சுடக் காபி !

மீண்டும் ஒரு முறை புனேயின் மழையை ரசித்துக் கொண்டே வந்த குழு சென்னையில் எட்டு மணிக்குத் தரை தொட்டபின் நினைவுக்கு வந்ததெல்லாம் நல்ல தரிசனங்கள், வயிற்றை நெகிழ்த்தாத சாப்பாடு, தேவைப்பட்டால் உபயோகப் படுத்தத் தயாராக இருந்த புளிக்காய்ச்சல்,  பருப்புப் பொடி, தக்காளித் தொக்கு, அதிகாலை காப்பி , அனைவரும் மற்றவர்களுக்குப்   பகிர்ந்து கொடுத்த நொறுக்கு தீனிகள், கடலை மிட்டாய்கள், கொய்யாக்காய்கள்,  ... இப்படி இனிய நினைவுகள் தான்.

நான்கு நாட்களில் மூவாயிரம் கிலோ மீட்டர்கள் விஸ்தாரத்தில்  இப்படி ஒரு நல்ல சுற்றுலாவுக்கு வாய்ப்பளித்த அந்த ஆண்டவனுக்கு, ஏற்படுத்திக் கொடுத்த ஸ்ரீ ஜானகி டூர்ஸின் ரமேஷ், பிரியா தம்பதியருக்கு , கூட வந்து நட்பு வட்டாரத்தை விரிவுப் படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தவிர வேறு என்ன சொல்லுவது !!     

Sunday, May 15, 2016

முச்சந்தியில் வாக்காளன்

போன வருடத்திலிருந்தே எதற்கெடுத்தாலும் சொல்ல ஆரம்பித்தார்கள் , அடுத்த வருடம் தேர்தல் என்று.

ஸ்கூல் பையன் போல் பரீட்சை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது , இப்பொழுது வந்தே  விட்டது.

போன முறை யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பது இப்பொழுது  முக்கியமில்லை; அன்றைய அன்றாடத்  தேவைகளுக்கு யார் சரிப்படுவார்கள் என்று பார்த்துத் தான் செய்திருக்க வேண்டும்.

இது வரை ஆறு அல்லது ஏழு முறை வாக்களித்திருப்பேன் - என் ஒவ்வொரு தேர்வும் சரியா தவறா என்று கூட கணிக்க முடியவில்லை - அவ்வளவு மாற்றங்களா இல்லை என் எதிர்ப்பார்ப்பும் தேர்ந்தெடுத்தவர்களின் குறிக்கோளும் மாறுபடுகின்றதாலா - புரியவில்லை.

இந்த முறையும் , வாக்களிப்பதற்கு ஒரு நாளே உள்ள நிலையில், பிரசாரத்தின் நேரமும் முடிந்த நிலையில் , இதுவரை யாருமே, எந்தக் கட்சியுமே என் போன்றவர்களை மதித்து வாக்குக் கேட்கவில்லை .

என்னுடைய இந்த வரிக்கு ஒரு நல்ல புரிதல் தேவை.

என்னை மதித்து கேட்கவில்லை என்ற கோபத்திலோ , என் வாக்கின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அகம்பாவத்திலோ சொல்லப்பட்டதல்ல அது.

அறுபதுகளில்  மயிலை கீழ மாட வீதியில் நான் வசித்துக் கொண்டிருந்த பொழுது மேள தாளம் சத்தம் கேட்டு ஓடி வந்து வீதியில் பார்த்தால் எந்தக் கட்சி என்று புரியாத வயதானாலும்  இரட்டைக் காளைகளிடையே ஒரு பெரிய மூவண்ணக் கொடி தெரியும். அதன்பின் நீல நிறத்தில் வெள்ளை நட்சத்திர பாட்ஜ் சட்டையில் குத்திக் கொள்ளக் கொடுத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.  வீட்டின் கதவைத் தட்டி கும்பிடு போட்டதும் நினைவில் உள்ளது.

எனது இன்றைய சந்தேகம் ஏன் வீடு தேடி வந்து கெஞ்சவில்லை என்பது அல்ல. என் போன்றவர்கள் அவர்களின் பார்வையில் இருக்கிறோமா இல்லையா என்பதுதான்.

நிற்க .

போன முறை யாருக்கு வாக்களித்திருந்தாலும் , அதனால் என் வாழ்வில் , வாழ்க்கை நடைமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா, என் கஷ்டங்கள் கவனிக்கப் பட்டிருக்கிறதா ? சிந்திக்க வேண்டிய நேரம்.

அப்படி இல்லையென்றாலும் , இந்த முறை தேர்வினால் ஏதேனும் மாற்றம், முன்னேற்றம், தீர்வு வருமா ? எதிர்பார்ப்புகளை எடை போடும் நேரம்

குழப்பம் தான் மிஞ்சுகிறது.

சரி - நாம் தான் பல முக்கிய கட்சிகளின் உழைப்பை, சாதனைகளை கவனிக்கத் தவறி விட்டோம். இவர்களின் இன்றைய  நிலைப்பாட்டை ஊடகங்கள், விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ளாம் என்றால் தங்களின் சாதனைகள், செய்ய விருக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக மற்றவர்கள் எங்கு தவறினார்கள் என்று சுட்டிக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். வித விதமான தவறுகளை வெவ்வேறு கட்சிகள் செய்வதால் சாதாரணனின் பிரச்சினை தீர்ந்து விடுமா , இல்லை அது தான் ஒரு முடிவெடுக்கவாவது உதவுமா ? மீண்டும் குழப்ப முச்சந்திதான்

அதற்க்காக சுலபமான முடிவாக வாக்குப் போடாமல் என் கடமையிலிருந்து தவறவும் இஷ்டமில்லை. மேலும் என் வாக்கை நானே போட விரும்புவதால் கண்டிப்பாக ஒரு நடை போயே தீர வேண்டும் .

நம் வாழ்வில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ , தேர்தல் பணிகளில் , தேர்தல் முறைகளில்,  கண்காணிப்பில்  நல்ல மாற்றம், முன்னேற்றம்  தெரிகிறது. வீட்டிலிருந்தே நமது வாக்காளர் எண்ணை அனுப்பினால் அதே குறுஞ்செய்தியாக என் வாக்காள விவரங்களும் , எந்த வாக்குச் சாவடி என்றும் சௌகரியமாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் தனது  பிடியை இறுக்கி நியாயத்தை நிலை நாட்டப் பாடு படுவது ஒன்றிலிருந்தே தெரிகிறது , நம் தேசத்தில் இன்னும் ஜனநாயகமாக தேர்தல் நடத்துவதற்கு எல்லா முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று.

பல எதிர்ப்புகளிலிருந்தும், பண பலத்தை சமாளித்தும், பல்லாயிரம் போட்டியாளர்களையும் அவர்களுக்கு பணி புரிந்து ஆதரவு அளிக்கும் லட்சக் கணக்கான ஆதரவாளர்களையும் எதிர்கொண்டு பாடு படும் இந்த அரசாங்க முயற்ச்சிக்காகவாவது , நாம் ஒரு நடை வாக்குச் சாவடிக்குச்   சென்று  இன்றைய தேதியில் யார் உண்மையாக உழைக்க முயல்பவர் என்று கண்டறிந்து என் வாக்கை அவர்களுக்கு அளித்து, என் சிறிய கடமையையாவது நான் செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத் துள்ளேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இந்தியனுக்குள்ளே என்றும் இருக்கும் ஒரு நம்பிக்கை இம்முறையும் தேர்ந்தெடுக்கத் தூண்டுகிறது

முடிவே எடுக்காமல் முச்சந்தியில் நின்று விழிப்பதைவிட ,  ஏதாவது ஒரு முடிவெடுப்பதும் சரியென்றே தோன்றுகிறது.

தவறென்றால் , இருக்கவே இருக்கிறது ,  அடுத்த சந்தர்ப்பத்தில்  திருத்திக் கொள்ளலாம் . 

Monday, April 18, 2016

படித்தது!

சென்னையில் உள்ள மாவட்ட நூலகங்கள் உதவியுடன் சுஜாதாவின் சில புத்தகங்களை படிக்க நேர்ந்தது. நன்றி என் நண்பனுக்கு- நூலக அறிமுகத்துக்கு!

இரு வாரங்களில் நான்கு புத்தகங்கள்-சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் உட்பட.

படிக்க படிக்க அந்த எழுத்தாற்றலின் வேகத்தை , அகலத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வரி அனேகமாக அன்னாரின் எல்லா புத்தகங்களும் படித்த பின்னால் வருவதில் ஆச்சரியமில்லை.

நிற்க சுஜதா புராணம்.

இந்த வாரத்தில் படித்த இரண்டு நாவல்கள் -

உள்ளம் துறந்தவன் - அபார வேகம் , ரிவர்ஸ் ஸ்னாபரி முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வரை எல்லாவற்றையும் தொடுகிறார். வஸந்த் இல்லா விட்டாலும் அந்தக் கதா பாத்திரம் உள்ள பிரமையை எழுத்து மூலம் வாசகர்களுக்கு நினைவு படுத்துவதில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிகிறது. அந்த சின்ன இருதய நோய் சம்பந்தப் பட்ட விளக்கத்தின் எளிமையில் ஆர்தர் ஹைலியின் Final Diagnosisஐ மிஞ்சுகிறார் !! பங்குச் சந்தையில் தன் அறிவு விஸ்தாரணத்தை அநாயாசமாகக் காட்டி இருக்கிறார்.

இருந்தும், இயக்குனர் சிகரத்தை சிலர் குறை கூறுவது போல், கதையை முடிக்க தடுமாறி இருக்கிறார். தடுமாற்றத்தில் அதுவரை இருந்த விறுவிறுப்பு கொஞ்சம் மழுங்கிப் போய் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்களைக் தவிர்க்க முடியவில்லை .  இப்படிப்பட்ட சில குறைகள் இருந்தும் ரசிக்கக் கூடிய நாவல்.

அடுத்த நாவல் - ஒரே ஒரு துரோகம் - நண்பரின் மனதுக்கு பிடித்த மைதானம்  -  'துரோகம்' . இதில் உள்ள வியக்கத் தக்க விஷயம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கதாநாயகனும் (அவனே வில்லனும் கூட) கதாநாயகியும் , மாற்றி மாற்றி அவர்கள் மன எண்ணங்களில் கதையை நகர்த்தி இருப்பது. ஒரே நிலைமையை  இவர்கள் இருவரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற அருமையான உத்தியைக் கையாளுவதற்கு பல கதை, கட்டுரைகள் எழுதிய வளமான சிந்தனையும் , முதிர்ந்த எழுத்தாற்றலும் அவசியம் தேவை. அதற்க்கொன்றும் ஆசிரியருக்கு குறைச்சலில்லை - ஆகையால் வாசகருக்கு பக்கத்துக்கு பக்கம் விருந்துதான். இந்தக் கதையின் முடிவிலும் அவரசரமும் , நம்பகத் தன்மை குறைவும் நம்மைத் தாக்குவது தான் சிறிது ஏமாற்றமளிக்கிறது . சமீபத்தில் படித்த மற்றொரு கட்டுரையில் சுஜாதா எழுதி இருந்தார் - ' பல நிறைவேறாத ஆசைகளும், விபரீதக் கற்பனைகளும் எழுத்து மூலம் வெளிப்படுத்த முடிகிறது ' - இந்தக் கதையில் அந்தக் கூற்றை நன்கு காண முடிகிறது!

வயதில் மூத்தவராக இருந்தாலும் எழுதுகோலில் உள்ள இளமை - ஆசிரியரை மீண்டும் ஒரு முறை ' ரசிக்கக் கூடிய ராஸ்கல் ' என்று சொல்லத் தூண்டுகிறது.

அடையாறு  மாவட்ட நூலகம் : அமைதியான, மரங்கள் சூழ்ந்த பிரதான சாலையில் , பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில், வண்டிகள் சௌகர்யமாக நிறுத்த இடத்துடன். கொஞ்சம் இருட்டு, பழைய வாசனைகளை சகித்துக் கொண்டால் அறுபது ரூபாய் வருடச் சந்தா கட்டி மூன்று புத்தகங்களை பதினைந்து நாட்களுக்குள் படித்து மறுபடியும் எடுக்கலாம். பாலகுமாரன், சிவசங்கரி, வாஸந்தி , சுஜாதா , சோ போன்றவர்களின் புத்தகங்கள் நிறைய உள்ளன. புத்தகங்கள் தேடுவதை விட நூலகத்தில் சேர விண்ணப்பத்தை தமிழில் நிரப்புவதில்தான் அதிக சிரமம் இருந்தது . 

Monday, April 11, 2016

வாழ்வில் எத்தனை 'மை'?

சில மாதங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு பெரியவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். பல வருஷங்களுக்கு முன்னால் நல்ல  பதவியில் இருந்தவர், தன் பெரிய குடும்பமான பல பெண்களுக்கும்  நல்ல முறையில் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னும்  கையில் ஒரு கணிசமான தொகையுடன் ஓய்வு பெற்று யார் கையையும் நம்பாமல் தனித்து, தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். எப்பொழுதுமே சிரித்த முகம், வாய் நிறைய புன்னகையுடன் 'வாங்க வாங்க' என்று வரவேற்ப்பார்.

வாழ்க்கைதான் அவ்வளவு சுலபமில்லையே. அவரது மனைவிக்கு சின்ன விபத்து நேர்ந்து நடப்பதில் சிரமமிருந்தாலும், அப்படியே காலம் தள்ளிக் கொண்டிருந்தார். கொஞ்ச காலமாக, வெளியே போவதில்லை- கண் பார்வை மங்குவதால், வயதும் ஏறிக்கொண்டே இருப்பதால் - ஞாபக மறதியும் தொற்றிக் கொண்டிருந்தது.

இந்த முறை என்னைப் பார்த்தவுடன் வரவேற்று, உபசரித்ததைப் பார்த்து நான் மகிழ்வதற்க்குள் "நீங்கள் யார்" என்றார் ! எனக்கு அவரின் நினைவு தப்புவதைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது யாரென்று புரியாமலே வாய் நிறைய வரவேற்ற உள்ளத்தைக் கொண்டாடுவதா என்று புரியவில்லை. அதன்பின் அவர் மனைவி வந்து "நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுகாதேங்கோ " என்றார்.

என்னைத் தடுமாற வைத்தது - அவரின்  அன்றைய நிலை

சில வருஷங்களுக்கு முன் என் மற்றொரு நண்பர் ஒருவர் இப்படித்தான் - நன்றாக இருந்தவர், திடீர் வியாதியால் மூக்கில் டியூபெல்லாம் வைத்து கடைசி வரை பேச முடியாமலே போய் விட்டார். இறுதி நேரத்திலும்  அவர் மனதில் என்ன நினைத்தார் என்பதே தெரியாமல் போய் விட்டது.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், அவருடைய மிகப் பெரிய ஆசையாக 'அனாயாச மரணத்தை'த் தான் குறிப்பிட்டுருந்தார்.

பலருக்கும் உள்ள பல பயங்களில் மிகப் பெரிய பயங்களில் ஒன்றானது - நினைவிருந்தும் பேச முடியாமல் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதுதான். அது ஒரு கொடுமையான நிலை. நம் உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியும், ஆனால் பேச முடியாது. சில சமயம் கனவுகளில் இது போன்ற காட்சிகள் வரும் - குப்பென்று வியர்த்து எழுந்திருப்போம்.

அந்தப் பெரியவர் சுருண்டு படுத்துக் கிடந்த கோலம், என் மனதைப் பிழிந்து விட்டது. எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எந்த ராஜ்ஜியத்தை ஆண்டவனாக இருந்தாலும், கம்பங்களியோ, தங்கபஸ்பமோ எது தின்றாலும் முதுமை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

முதுமை என்பதே நிறைய பேர் விரும்பாத,  பலர் புரிந்து கொள்ளத் தவறிய ஒரு கட்டாய நிலை.

அதில் உறவினர்கள், நண்பர்கள்  சூழாமல் தனிமை என்பது கொடுமை.

இந்தக் கொடுமையே பலருக்கு மனதளவில் பாதித்து வெறுமையையும் ஏற்படுத்தும்.

இதில் வறுமையும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம், மனிதனின் வேதனைக்கு.

 இதில் கல்யாணமாகாத பெண் என்று நிறைவேறாத கடமைகளும் மீதமிருந்தால் வியாதியே தேவையில்லை

 முதுமை, தனிமை, வெறுமை, வறுமை, கடமை - வாழ்வில் இவ்வளவு மைகளா?

இதில் பொறுமை எப்படி வரும்?

Wednesday, March 9, 2016

காக்க வைத்துக் காட்சி கொடுத்த நரசிம்ஹன்

என் உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பெயரில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் எழுதிய 'குறையொன்றுமில்லை' புத்தகத்தின்  முதல் பாகம் படித்தவுடன் ஏற்பட்ட தாக்கம் தான் ஒரு நரசிம்ஹரில்லை , நவ நரசிம்ஹரையும் காண வேண்டுமென்றெழுந்த அவா.

அவற்றைப் பற்றி மேலும் படிக்கப் படிக்கத் தெரிய வந்தது , அஹோபிலம் அருகிலுள்ள இந்த நவ நரசிம்ஹ க்ஷேத்திரத்தையும் நாம் தனியாகப் போய் பார்ப்பதென்பது ஒரு கடின முயற்ச்சி என்பது. அதன் பின் தான் எனக்குப் பரிச்சயமான ஸ்ரீ ஜானகி டூர்ஸின் 'அஹோபில' யாத்திரையைப் பற்றிக் கேள்விப் பட்டு விசாரிக்க, 2015 ஜனவரியில் முயற்ச்சிக்க , நரசிம்ஹர் என் விசாவைக் கிடப்பில் போட, இந்த வருடம் தொடர்ந்து கெஞ்ச , அவரின் அருட் பார்வையில் கிடைத்த அதிர்ஷ்டம் தான் ஒரு 18 பேர் கொண்ட குழுவில் சென்னையிலருந்து மும்பை மெயிலில் கிளம்பி மறுநாள் விடிகாலையில் பல் தேய்த்துக் கொண்டிருந்த பொழுது 'இறங்கு, இறங்கு- வண்டி கடப்பாவில்தான் நிற்கிறது' என்று  யாரோ கூவ, அவசரமாக இறங்கினோம் , இல்லை குதித்தோம் .  காத்திருந்த வேனில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர அரைத் தூக்கத்தில் பயணித்தால் வந்தது ஒரு காட்டின் நடுவிலுள்ள 'நவ அஹோபில தங்கும் விடுதி'.

சுத்தமான அறையில் சுகாதாரமான குளிர்ந்த காற்று மற்றும் நிறைய பூச்சிகளுடையே பயந்து கொண்டே குளித்து முடித்து போன முதல் இடம் 'அஹோபில லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி கோவில்'. மலை மேல் ஸ்வயம்புவாகத் தோன்றியுள்ள அத்தனை நரசிம்ஹர்களின் உற்சவ மூர்த்திகளையும் ஒரு சேரப் பார்க்க முடிந்த இந்தக் கோவில் வாசலிலேயே உள்ள அஹோபில மடத்தின் வயதான வைணவரின் சொல்ப ஆனால் சுவையான காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மூன்று ஜீப்புகளில் கிளம்பியது நம் குழு, வரவிருப்பது என்ன என்று தெரியாமல்.

வழக்கமாக வண்டிகள் சாலையில் தான் ஓடும். ஆனால் சாலை இருந்த சுவடே இல்லாத குண்டும் குழியுமாக உள்ள ஒரு பாதையில் நம் ஓட்டுனர் குத்து மதிப்பாக ஓட்ட, உள்ளே இருந்தவர்கள் உயிரைப் பிடிப்பதை விட மேல உள்ள கம்பியை கெட்டியாகப் பிடித்து இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ள , அடிக்கடி உச்சி மண்டை ஜீப்பின் உச்சியை முத்தமிட்ட அயர்ச்சியில் மயங்க , ஏதோ காஷ்மீர் பனிச்சறுக்கில் போவது போல் நம் ஓட்டுனர் அனாயசமாக் ஜீப்பை உருட்டினார். திடீரென்று 'அக்கடச்சூடு' என்று கத்தினார் - அங்கு அழகான புள்ளி மான் கூட்டம் , அருகிலேயே படு வெள்ளை நிறத்தில் சில மாடுகளும் ! சிறிது கண்ணை மூடித் தூங்கினாலும் ஜீப் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கி டங்கென்று இடித்து உச்சி வகுந்தெடுத்து எழுப்பி விட்டது- வாழ்வை ஒத்த ஏற்ற இரக்கப் பாதை  . இப்படியாக ஒரு ஒன்றரை மணி நேரப் பயணத்துக்குப்பின் சென்றடைந்தது 'பாவன நரசிம்ஹர்' கோவில். அருமையான மலைகள் நடுவே அமர்ந்திருந்த நரசிம்ஹருக்கு நிதான அருச்சனையுடன் ஒரு வாய் இனிய பானகத்துக்குப் பிறகு கிளம்பவே மனது வராத அந்தக் கானகம் ஏனோ நான் மகாராஷ்ட்ராவில் பார்த்த பீமா சங்கரின் முதல் நினைவை கண் முன்னே காட்டி மறைந்தது.

முதல் நரசிம்ஹரைப் பார்த்த நினைப்பில் மனம் நெகிழ்ந்து கிடக்க தொடர்ந்த மீண்டும் ஜீப்பின் 'மண்டை இடிப் பயணம்' உறைப்பதற்கு முன் அடுத்த கோவில் என்று இறக்கி விடப்பட்ட இடம் கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது. ஒரு சிறிய காட்டுப் பகுதியின் ஒத்தையடிப் பாதையைத் தொடர்ந்து அழகாக புதிதாய் வெள்ளை அடிக்கப் பட்ட 130 படிகள் தென்பட்டாலும் ஏறும் வெயில் கொஞ்சம் படுத்த, மலை ஏறியவுடன் ஆஸ்வாஸப்  படுத்தியது  சிரித்த குருக்களின்  அன்பு முகமும் அதன் பின்னே ஒளிந்திருந்த பார்கவ நரசிம்ஹரின் உருவமும்தான். இந்தத் தலத்தின் சிறப்பு நரசிம்ஹர் வதம் செய்யும் பொழுது, ஹிரண்யனின் வலது கை உயர்த்திய வாளுடன் அப்படியே உறைந்து நிற்கும் காட்சிதான் !

திருப்தியான இரண்டு நரசிம்ஹ தரிசனத்துக்குப் பின் அஹோபில மடத்தின் எளிய மதிய உணவுக்குப் பின் அனைவரும் சற்று இளைப்பாற, குழுவில் இருந்த சில இசைப் பிரியர்கள் எம் எஸ் மற்றும் மகாராஜபுரத்தின் கீர்த்தனைகளை அவிழ்த்து விட கண்கள் சொருகி மனம் தானாக அமைதியடைந்தது.  கோழித் தூக்கம் கொடுத்த புத்துணர்வில் மீண்டும் உற்சாகம் பெருக்கெடுக்க, நாம் படையெடுத்த இடம் சத்ரவட நரசிம்ஹர். சிறியதாக இருந்தாலும் அமைதி சூழ்ந்த இந்த இடத்தில் தான் கந்தர்வர்களின் இனிய பாடலுக்கு ஆஹா ஓஹோ என்று கையைத் தட்டி அனுபவித்தாராம் நரசிம்ஹர். இதே நரசிம்ஹர் மதியம் மடத்துக்கு வந்திருந்தால் நம்மவர்களின் பாடல்களுக்கும் தலையாட்டி இருப்பாரோ?

ஒரு திருப்தியான தரிசனத்துக்குப் பின் சென்ற நான்காம் நரசிம்ஹ க்ஷேத்ரம் யோகானந்த நரசிம்ஹர். அருகிலுள்ள பால யோக நரசிம்ஹர் கோவிலும் , நவ நரசிம்ஹ ஸ்வாமி கோவில்களும் போனஸாகக் கிடைக்க, பார்த்த ஆறு கோவில்களும் மனதுக்கு அமைதியைக் கொடுக்க, அடித்த வெய்யிலும் உச்சி மண்டையில் ஜீப் முத்தமிட்ட இடம் கன்னிப் போக,  ஊருகாய் ஜாடி போல் குலுங்கிய உடம்பு சோர்ந்து போக இன்றைய கோவில்கள் அவ்வளவுதான் என்ற அறிவிப்பை குழு மூலைக்கடை தூள் பக்கோடா மற்றும் டீயுடன் கொண்டாடி அறைக்குத் திரும்பியது.

மறுநாள் விடிகாலையிலேயே எழுந்து, ஜானகி டூர்ஸின் ஸ்பஷலிடியான டிகிரி காபி கொடுத்த புத்துணர்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பினோம் 'மேல் அகோபிலம்' நோக்கி.

அதற்க்கு முன் 'அஹோபில நரசிம்ஹர்' என்ற மிக அழகான கோவிலுக்குள் சென்று பார்த்த பொழுதே அதன் பழமை தெரிந்தது.  சீதையைத் தேடி ராமர் அலைந்தபோது இங்கே வந்து நரசிம்ஹரை வணங்கியதாகக் கூறப்படுகிறது . குறுகிய பாறையின் கீழ் இருந்த நரசிம்ஹருக்கு திவ்யமான ஆராதனை செய்த இந்த திவ்ய தேசத்தில் சந்நிதிக்கு வெளியே பக்தர்களின் பாதம் பட்டு விடக்கூடாது என்று இரும்பு தடுப்புக்குள் வட்டமானதொரு பகுதி; அது என்ன என்று விசாரித்த பொழுது இருள் மண்டிக் கிடந்த இந்தப் பாதாளத்தில் ஒரு ஆலயம் இருந்ததாம். ஒரு காலத்தில் அன்றைய ஜீயர் அங்கு வந்த சில எதிரிகளுக்காக மறைந்து பூமிக்குள் சென்று ,  தினமும் வைகுந்தனை பூஜிக்கும் பொழுது , பூசை மணி கேட்டதாகவும், அந்த மணி சத்தம் திடீரென்று ஒரு நாள் நின்று போனதாகவும் அங்கு  இருந்த குருக்கள் சொன்ன போது புல்லரித்தது.

ஒரு நல்ல திவ்ய தேச தரிசனத்துக்குப் பின் , ஜானகி டூர்ஸின் அருமையான முன்னேற்ப்பாடால் கிடைத்த சில இட்லி வடைகளுக்குப் பிறகு நமது மேல் அகோபிலப் பயணம் துவங்கியது.

மிகக் கடினமான நடை பயணம் - பாதையே இல்லை- என்றோ தொண்ணூறுகளில்  போக நினைத்த ட்ரெக்கிங் நினைவுக்கு வந்தது . வயது வித்தியாசமில்லால் எல்லோரும் உற்சாகத்துடன் நடக்கத் துவங்க, முடியாத சிலர் டோலி என்ற தூளியில் ஏறி சவாரி செய்ய, கடின மலையேற்றம் தொடர்ந்தது. இந்தப் பயணத்துக்குத் தேவை உடல் பலமட்டுமில்லை , மன பலமும் கூட. ஒரு அதீத அபிலாஷை, நரசிம்ஹரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற வெறி இருந்தால் போதும் - முழங்கால் வலி, உள்ளே வைத்த ஸ்டென்ட், எல்லாமே மற (றை)ந்து விடும்.  இந்த மனோ தைரியத்தில் தான் மலை ஏற ஆரம்பிக்கும் பொழுதே படியில் விழுந்து காலை பலமாகச் சிராய்த்துக் கொண்ட ஒரு மாமி, வலியுடன் உணர்ச்சியும் கூடி வரவழைத்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு ஜானகி டூர்ஸ் சமயோசிதமாக கொண்டு வந்த முதலுதவி களிம்பைப் பூசிக் கொண்டு , வலியையும் உதறி விட்டு நடக்கத் தொடங்கினார். சரியாகத் தான் சொன்னார்கள் முதல் அடியை நீ எடுத்து வைத்தால் மற்ற அடிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று . குழுவில் போகும் பொழுது ஒருத்தருக்கு ஒருத்தர் கை பிடித்து தூக்கி விடுவதைப் பார்க்கும் பொழுது , மனம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.  நேற்றுவரை பலரை மற்றவர்கள் பார்த்ததே கிடையாது.

கிளம்பும் பொழுதே கொடுத்த ஆளுயர தடியைப் பற்றி வாங்கும் பொழுது பலர் அதிகம் நினைக்கா விட்டாலும், பின்னால் ஜ்வாலா நரசிம்ஹரைக் காண மிகக் கடினமான , கைப்பிடிப்புக்கு ஒன்றுமில்லாத பாதைகளைக் கடக்கும் பொழுது நம்மை விழாமல் காத்த பெரும் கைப்பிடி அது தான் என்று அவர்களுக்குப் புரிந்ததில் ஆச்சரியமில்லை. அத்தனை கஷ்டங்களையும் சகித்து, பாறைகளைக் கடந்து, படியில்லா மலைகளில் ஏறி , மூச்சு வாங்கி, மலை உச்சியிலுருந்த ஜுவாலா நரசிம்ஹரைக் கண்டவுடன் கண்ணீரைக் கட்டுப் படுத்த கொஞ்சம் பிரயத்தனப் பட்டு போராட வேண்டி இருந்தது. அங்கு இருந்த சுயம்பு சிலைகளில் நரசிம்ஹரும் ஹிரண்யகசிபுவும் சண்டை போடுவதை இளம் பிரஹலாதன் பிரமிப்புடன் பார்க்க , அசுர குருவான சுக்ராச்சாரியார் உலகத்துக்கு ஒரு பெரிய பாடமும் சரித்திரமும் உருவாவதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சியும் நம் நாட்டின் வளமான பக்த சரித்திரத்தை பறைசாற்றின. நரசிம்ஹரின் ஆவேசம் காரணமாக இந்தக் குகை வெகுகாலம் நெருப்பு போல் கனன்று கொண்டிருந்ததாம் - பச்சைப் புல்லைக் காட்டினால் கூட உடனே பற்றிக் கொள்ளுமாம்; அதனால் தான் இங்குள்ள நரசிம்ஹருக்கு 'ஜ்வாலா' நரசிம்ஹர் என்று பெயர் வந்தது என்பதை அறிய கைகள் தன்னால் அந்த அக்கிரமத்தை அழித்த நரசிம்ஹரை நோக்கிக் கூப்பின. அங்கு ஜானகி டூர்ஸின் ரமேஷ் கையோடு  கொண்டு வந்திருந்த நாட்டுச் சர்க்கரையை ஜுவாலா நரஸிம்ஹருக்கு நைவேத்யம் பண்ணிக் கொடுத்தது , எல்லோரையும்  நெகிழ வைத்தது.

சற்றே அருகிலுள்ள  'ரத்த குண்டம்' என்று சொல்லப்படும் ஒரு சின்ன சுனையில் உள்ள தண்ணீரைக் கையிலெடுத்தால் இளம் சிவப்பாக இருப்பது , ஹிரண்ய வதத்திற்குப் பிறகு நரசிம்ஹர் இங்கு வந்து கரங்களைக் கழுவிக் கொண்டதால்  என்று ஒரு வழிகாட்டி விளக்கிக் கொண்டிருந்தார். அருகிலுருந்த வானுயர 'உக்ர ஸ்தம்பம்' என்ற தூணிலுருந்து தான் நரசிம்ஹர் வெளிப்பட்டதாகவும் சொன்னது அந்தக் கூற்றை ஆமோதிப்பது போலிருந்தது . இந்த ஸ்தம்பத்துக்குச் செல்வது மிகவும் கடினமென்றாலும் , அங்குள்ள காவிக் கொடியும், குங்குமக் கறைகளும்  பலர் வந்து போனதற்கான சுவடுகளைக் காட்டியது.

கண்ட காட்சிகளில் மனம் கனமற்றுப் போக , ஒரு துள்ளலுடன் மலை இரங்கத் தொடங்கிய குழு சிறிது நேரத்திலேயே அடுத்த சவால்களை எதிர் கொள்ளத் தொடங்கியது. இது தான் உயரம் என்று நினைத்தவர்களுக்கு அங்கிருந்து கீழ் இரங்கி, மறுபடியும் பல படிகளை ஏறி, காட்டுப் பாதையில் கடுமையாகத் தொடங்கிய வெய்யிலில் சிலர் திரும்பி விடலாமோ என்று நினைத்த பொழுது நான் சொன்ன 'திரும்புவதை விட முன்னேறி அடுத்த இலக்கை அடைவது சுலபமென்பதை' நாங்கள் அடுத்துக் கண்ட மாலோல நரசிம்ஹர் கோவிலில் பலரும் ஆமோதித்தனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணத்திலேயே மிகக் கடினமான பாகம் இந்த ஜுவாலா நரசிம்ஹரிலிருந்து மாலோல நரசிம்ஹரைக் காணும் பாதைதான். மிகவும் உடல் மற்றும் மன உறுதியைச் சோதிக்குமிடமும் இது தான். மேலும், "உண்மையான பக்தி இருந்தால் வந்து தரிசிக்கட்டும் என்று வனமும் விலங்குகளும் அடர்ந்த குகைகளில் நாராயணன் தன்னை வெளிப்படுத்திய புண்ணியத் தலம் அஹோபிலம்" என்று ஏன் சொல்கிறார்கள் என்பது  ஜுவாலா நரசிம்ஹரையும் , மாலோல நரசிம்ஹரையும் தரிசித்த பின் தான் புரிந்தது ! இந்த மாலோல நரசிம்ஹருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.  நவ நரசிம்ஹர்களில் எந்த மூர்த்தியை அடிப்படையாக வைத்து உற்சவரை அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, முதலாம் ஜீயரின் கனவில்  நாராயணன் தோன்றி , மாலோல நரசிம்ஹராஹக் காட்சி அளித்து ஒரு தீர்ப்பளித்ததாகவும் நம்பப்படுகிறது .

ஒரு சிறிய இளைப்பாறலுக்குப் பின் இன்னும் அதிக தூரமில்லை என்று நம்பிக்கை வந்து வேகமாக முன்னேறியது அடுத்தத் தலமான  குரோத வராஹ நரசிம்ஹர் கோவிலுக்கு.  பெரிய பாறைக்கடியில் அமர்ந்திருந்த பெருமாளை இருவர் மட்டுமே சேவிக்கக் கூடிய சிறிய இடத்தில் ஒரு அருமையான தரிசனம்.

கடின பாதையில் நடை பயணம் , மலை ஏற்றம் இத்துடன் முடிவடைந்ததென்பதால் அனைவரும் சந்தோஷமாக ஆனால் நன்றியுடன் கையிலுருந்த தடியைத் திருப்பிக் கொடுத்து விட்டு வேனில் ஏறி சிறிது தூரத்தில் உள்ள கடைசிக் கோவிலான ஸ்ரீ காரஞ்ச நரசிம்ஹர்  -ஆஞ்சனேயருக்குக் காட்சி கொடுப்பதற்காக வில்லுடன் தோற்றமளித்த இடம்.

1980களில் கடைசியாக இப்படிப்பட்ட ஒரு கடின நடை நான் எடுத்தது அழகர் கோவில் செல்லும் பொழுது - ஆனால் இவை இரண்டுக்குமிடையே இருந்த பெரிய வித்தியாசம் நடுவில் கடந்து போன வயது தான்.

சமீப காலத்தில் என் அனுபவத்தில் தோன்றிய சில எண்ணங்கள்- இப்படிப் பட்ட கடின பயணங்கள், மகாமஹம் போன்ற முயற்ச்சிகளை கூடிய மட்டும் வாழ்க்கையின் முதல் பகுதியில் முடித்துக் கொள்வது நல்லதென்று. அப்படித் தவற விட்டிருந்தால் புத்திசாலித் தனமாக இப்படிப்பட்ட டூர் ஆப்பரேட்டர்களைத் தேடிப் பிடித்துக் கொள்வது பல பிரச்சினைகளை எதிர் கொண்டு சமாளிக்க உதவும்    

இந்த இடத்தில் ஜானகி டூர்ஸ் பற்றி சில வரிகள்:

  • மிகத் திறமையாக பயணங்களை வடிவமைக்கிறார்கள் .
  • மூத்த குடிமக்களுக்கு நல்ல கவனிப்பு - மலை ஏறும்பொழுது ஒருவர் கீழே விழுந்தவுடன் உடனே ஒரு மருந்தை எடுத்துக் கொடுத்தது இவர்களின் அக்கறையைக் காட்டியது.
  • ரயிலில் முடியாதவர்களுக்கு வசதியான படுக்கைகளை மற்றவர்களிடமிருந்து பெற்று மாற்றிக் கொடுக்கும் ஒரு நல்ல எண்ணம்.
  • விடிகாலையில் , காட்டின் நடுவே உள்ள தங்கும் விடுதியில் சுடச் சுடக் காப்பி கொடுப்பதற்க்கு இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  • கடந்த நான்கு வருடங்களாக இவர்களுடன் பல பயணங்கள் - கர்நாடகம், நவ திருப்பதி, கேரளா முதலிய இடங்களுக்கு சென்றிருக்கிறேன். இவர்களின் சிறந்த பணி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதில் முக்கியம் முன்னேறுவது மட்டுமில்லை , மேலும் முன்னேறி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் தான் இவர்களை இன்னும் இந்தத் துறையில் வெகு தூரம் கொண்டு போகப் போகிறது.
அஹோபில பயணம் -  இது ஒரு சாதாரண உல்லாசச் சுற்றுலா இல்லை . இதை மனதில் முதலில் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கடக்க வேண்டிய பல கடினமான பாதைகள் உள்ளன- சில ஜீப்பிலும், பல கால் நடையாக காட்டுப் பகுதியிலும், கடினமான படியில்லாத மிகக் குறுகிய மலைப் பாதைகளிலும். கிளம்பு முன்னமேயே இவற்றை மனத்தில் கொண்டு நரசிம்மனைக் காண ஒரு திவ்ய பயணம் என்று புரிந்து கொண்டால் சில கஷ்டங்கள் கூட வலிப்பதில்லை.

செல்பவர்கள் செய்து கொள்ளக் கூடிய சில முன்னேற்ப்பாடுகள்:

கூடிய வரை ஆண்கள் முழுப் பேண்ட்டும் பெண்கள் சுடிதார் போன்ற புரண்டு, தடுக்கி விழாத உடை அணிவது நல்லது.

ஆண், பெண் இருவரும் ஜோல்னா போன்ற தோளில் மாட்டிக் கொள்கின்ற பையை எடுத்துக் கொண்டு இரு கைகளையும் கைத்தடி மற்றவைகளைப் பிடித்துக் கொள்ள தோதாக வைத்துக் கொள்வது நல்லது.

மலை ஏறும் பொழுது, சிலருக்கு தலை சுற்றல் போன்ற உபாதைகள் வந்தால் சமாளிக்க கொஞ்சம் சர்க்கரை, இனிப்பு/புளிப்பு மிட்டாய்கள், சீரக மிட்டாய், எலுமிச்சம் பழம், கொஞ்சம் பிஸ்கட்டுகள் வைத்துக் கொள்வது உசிதம்.

இது ஒரு காட்டுப் பகுதி - ஆகையால் வழியில் எதுவுமே கிடைக்காது என்பதை மனதில் வாங்கி அவரவர் தேவைக்கேற்ப எடுத்திச் செல்ல வேண்டும். ஆனால் குடி தண்ணீர் மட்டுமாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் சிலர் அவதிப் பட்டதையும் காண முடிந்தது.

ஜாக்கிரதை - குரங்குகள் நிறைய நடமாடும் இடமிது ! பெண்கள் கைப் பையை தவிர்க்கவும். குரங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வது மட்டுமில்லால் கைகளில் எந்த பாரமுமில்லாமல் வைத்துக் கொண்டால் விழாமல் சுதாரித்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

ஆகாரங்கள் - கிடைத்த சொல்ப  உணவுகளை உட்கொண்டு வயிற்றைக் காய விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த வனாந்திரத்தில் கிடைப்பதை அமிர்தமாக நினைத்து உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்  . இந்த இடத்திலேயும் ஜானகி டூர்ஸ் சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்ற இனிப்புகளுடன், கையில் கொண்டு வந்த அப்பளத்தை பொறிக்கச் செய்து சுவை கூட்டியது பாராட்டப் பட வேண்டிய ஒரு செயல். அதனுடன் அவர்களின் வழக்கமான பருப்பு பொடியும், புளிக் காய்ச்சலும் உங்களை பசியில்லாமல் கண்டிப்பாக வைத்துக் கொள்ளும்!

இவ்வளவு நேரமும் இனிமேல் படி கிடையாது , ஏற வேண்டாம் என்று சொல்லி சொல்லி எங்களை ஊக்குவித்த சின்ன பையனான ஆனால் அபார திறன் கொண்ட எங்களது வழி காட்டி , பிரியுமுன் பிரியமுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்ட பின் அவன் பெயரைக் கேட்ட பொழுது 'நரசிம்ஹன்' என்றவுடன் பேச்சு எழவில்லை. இதுதான் நாம் முதல் அடி எடுத்தவுடன், நரசிம்ஹன் மற்ற பாதைகளைக் காட்டுவானென்று சொல்கிறார்களோ என்று வியக்க வைத்தது !!

மடத்தில் வாங்கிய புத்தகத்தில் படித்தது ஞ்யாபகம் வந்தது  " உண்மையான  பக்தியும் உடலுறுதியும் இருந்தால் மட்டுமே அஹோபிலத்தின் நவ நரசிம்ஹர்களைத் தரிசித்துப் பரவசம் கொள்ள முடியும்". நன்றியுடன், அழைத்த நரசிம்ஹரையும் அவர் வழிகாட்டியாக அனுப்பிய நரசிம்ஹனையும் கை எடுத்துக் கூப்பியவுடன் 18 பக்தியால் மகிழ்ந்து , நெகிழ்ந்து போன இதயங்களுடன் வண்டி சென்னை நோக்கி நகர்ந்தது.

பின் குறிப்பு: ஏற்கனவே இது ஒரு நீளப் பதிப்பாக இருப்பதால், இந்த அஹோபில பயணத்தில் எடுத்த புகைப் படங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன் , அவற்றைக் காண விழைபவர்களை,  என்னுடைய புகைப் படங்களுக்கான பதிவுகளுக்குக்கான https://goo.gl/photos/Lu8tmJNTC7ZWmdey6   என்ற முகவரிக்கு அன்புடன் அழைக்கிறேன்.

Wednesday, January 6, 2016

உறைத்தது

நினைத்த உடனே காலில் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி ஷூவும் , குளிர் கோட்டும் போடாது சிறிது தொலைவு போனபின் -

எல்லா திசையிலிருந்தும் வரும் வாகனங்களையும் சமாளித்து லாவகமாக ஒதுங்கி ரோட்டிலேயே நடக்கும் பொழுது -

நடை பாதையில் நடக்காமல் அது தேடியும் கிடைக்காத பொழுது -

முன் போகும் வாகனத்திலிருந்து வரும் புகை நாசியைத்  தாக்கி தானாக கைக்குட்டையை எடுக்கும் போது -

ஒரு கை தேர்ந்த வித்தைக் காரனாக, சிக்னல் இல்லாத தெருவை வாகனங்கள் வராத நேரத்தில் விருட்டென்று கடந்த போது -

தெருவில் சொல்ப வாகனங்களே போனாலும் பெருத்த ஹார்ன் சப்தம் கேட்ட போது- 

சந்தையில் 'காலி.... பிளவர் பத்தே ரூபா' என்ற சத்தம் செவிப்பறையை தாக்கிய பொழுது -  

 நடக்கும் பொழுது காசே கொடுக்காமல் பட்சணக் கடையிலிருந்து வரும் வெங்காய பக்கோடாவின் கம கம வாசனையை அனுபவித்த போது -

பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றாமல் முழங்களாகக் காத்திருக்கும் ரோஜாவையும் , மல்லீப்பூக்களையும் பார்த்த பொழுது -

வைகறையில் மாட வீதிகளில் பாண்டு ரங்கனை கூவி அழைத்த பஜனை கோஷ்டியைக் கண்ட பொழுது - 

கொசு வலையைத் தேடும் போழுது -

மின்சாரம் போய் போய் வந்த பொழுது - 

வங்கியில் பணமெடுக்கப் போனால் வாசலிலேயே ஒரு கும்பல் உதட்டைப் பிதுக்கிய பொழுது -

மடியில் கனமே இல்லாத ஏடீஎம் குஷியாய் குளு குளு அறையில் யாருக்கும் உதவாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்த பொழுது -

  .. . . . . . . . உறைத்தது , நான் என் ஊருக்குத் திரும்பி விட்டேன் என்று !