Thursday, October 22, 2015

அமெரிக்காவில் கடந்த சில பக்திப் பாதைகள்

சென்னையில் இருந்தவரை , அவ்வப்போது கோவில்களுக்குப் போவது ஒரு பிடித்த அம்சமான நடவடிக்கையாக இருந்தது. அமெரிக்கா வந்தவுடன் அது இருக்காது என்று எதிர்பார்த்தது தான். ஆனால் இங்கும் , சில சந்துகளிலுருந்து  சாயந்திர வேளை நடையின் பொழுது இந்தியர் வாழும் பகுதிகளில் பஜனை சத்தங்களும் , பிரசாத வாசனைகளையும் உணர ஒரு இனிய அதிர்ச்சி.

சந்திர கிரஹணத்தன்று , சூடாக பிரயாணி விற்பனையாகிக் கொண்டிருக்கும் தெருவுக்குப் போகும் வழியில் பக்தர்களின் ஆக்ரோஷமான ஜால்ரா சப்தங்கள் அவர்களின் பரவச நிலையின் எல்லையைக் காட்டியது.

பிரதான வீதி ஒன்றிலேயே , பழக் கடைகளுக்கும், பல் டாக்டர்களுக்கும் இடையே, கண்ணாடி வழியே கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரித்தது பல கடவுள் சிலைகள்- உள்ளே மங்கலாக குளிருக்கோ இல்லை பக்திக்கோ பட்டுச் சால்வை போர்த்தப்பட்டுத் தெரிந்தன.

விநாயகர் சதுர்த்திக்கு இந்தியர்கள் நிறைய வந்து போகும்  பிரதான  வீதியில் பிளாட்பாரத்தில் ஒரு விநாயகர் சிலையை வைத்து பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் கழுத்தைச் சுற்றி மைக் அணிந்து கொண்டு உரக்க மந்திரங்கள் சொன்ன சாஸ்திரிகள்.

ப்ளஷிங்க் (FLUSHING)   என்ற இடத்தில் உள்ள விநாயகர் கோவில் மிகப் பிரசித்தம். சதுர்த்தி முடிந்து சில தினங்கள் கழித்து ஒரு ஞாயிறன்று விநாயகரை வெள்ளித் தேரில் வைத்து வீதி உலா வர விழாக் கொண்டிருந்த இடத்தை அமெரிக்கா என்று நம்பக் கடினமாக இருந்தது. பட்டுப் புடவைகள் சரசரக்க மாமிகள் கோலாட்டம் ஆட, பட்டு வேட்டிகளிலும் , பஞ்ச கச்சத்திலும் மாமாக்கள் மைக் பிடித்து ஸ்லோகங்கள் சொல்ல , பல இந்தியர்கள் உற்சாகத்துடன் தெருவில் நடந்தனர். குடிநீர் , குளிர்பானம், சின்ன மணி பர்ஸ் இப்படி பல இலவசங்களும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அழகான , மிகச் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்தக் கோவிலில் மக்கள் அமைதியாக வரிசையில் நின்று தரிசனம் செய்தார்கள். முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் சுடச்சுட சாம்பார் சாதம், லட்டு பிரசாதம். உடன் கொடுத்த தயிர் சாதம் கிருஷ்ணருக்கு ரொம்பப் பிடிக்கும் - அவ்வளவு க்ரீம். வந்த கூட்டத்துக்கும் விநியோகிக்கப்பட்ட பிரசாதங்களுக்கும் தெருவில் இருந்த குப்பை மிகக் கம்மிதான். நம்பிக்கையை தள்ளி வைத்து இவ்வளவு கூட்டத்தையும் , தேர் பவனியையும் பராமரித்து பாதுகாப்புக் கொடுத்த அமெரிக்க போலீஸ், அவர்கள் விரும்பும்  பல-மத-நம்பிக்கைக்கு நல்ல உதாரணம்.

Flushing Temple Car


ப்ரிட்ஜ் வாட்டர்  (Bridge Water)

ஜெர்சியிலிருந்து ஒரு மணி தூரத்தில் இங்கு உள்ள இந்தக் கோவிலில் அனேகமாக எல்லா பிரசித்தமான தெய்வங்களின் சந்நிதிகளும் இருக்கின்றன. சில்லென்ற மார்பிள் தரையை அனுபவித்துக் கொண்டே நடந்தால் எல்லா ஸ்வாமிகளும் ஒரு சுத்தமான எண்ணை பிசுக்கு, விபூதி குங்குமம் சிதறாத சூழ்நிலையில் இருப்பதைக் காணலாம் - பெருமாள் , திருப்பதியை நினைவில் கொண்டு வரும் ஒரு ஏழு அடி பிரம்மாண்டம்;  ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியும், அங்கங்கு சத்தியநாராயணா பூஜையும், இங்கு பிரபலமாக இருக்கும் ஸ்வாமினாரயணன், விட்டல் மற்றும் நவ கிரஹங்கள். எல்லா சந்நிதிக்கு முன்னும் ஸ்ரீ ரங்கம் கோவில் தூண்களில் காசு சொருகும் நம்மவர்கள் இங்கு தாராளமாக டாலர்களை தூவி இருந்தார்கள்.  பலி பீடங்கள் இருக்கக் கூடிய  இடங்களில் நம்ம ஊர் வெள்ளை சோற்றுக்கு பதில் காகித கப்பில் பொங்கல் வைத்திருந்தார்கள். குருக்கள் மந்திரங்களைச் சொல்லி , "Anybody else want to do archanaa " என்று கூவி விட்டு  ஹாரத்தி காண்பித்து எல்லோரையும் பரவச நிலைக்குக் கூட்டிச் சென்றார். தமிழ் நாட்டில் கோவில் நடத்துபவர்கள் இங்கு வந்து எப்படி கோவில் வளாகத்துக்குள்ளேயே ஒரு சுத்தமான கழிப்பறையையும் பராமரிக்கலாம் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
Bridge Water temple

அக்ஷர்தாம் - (Akshardham)

ராபின்ஸ்வில்லே என்னும் இடத்தில் உள்ள 'அக்ஷர்தாம்' உலகிலேயே பெரிய கோயில் என்று வந்த ஒரு செய்தியுடனும், இதே கோவிலை தில்லியில் பார்த்த ஒரு எதிர்பார்ப்புடனும் சென்றேன். ஏக்கர் ஏக்கராக நிலத்தை வளைத்துப் போட்டு, விஸ்தாரமான கார் பார்க் கொடுத்து, ராஜஸ்தான் மார்பிள்களால் இழைத்துக் கட்டப்படும் ஒரு பெரிய இடம். தில்லி அளவு செக்யூரிட்டி கெடுபிடிகள் கிடையாது. செல் போன், ஐ பேட் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லலாம், ஒரு நிலை வரை போட்டோவும் எடுக்கலாம்.
Akshardham

பிரதான மண்டபத்தில் உள்ள மார்பிள் சிலைகள் மேல் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் விளக்குகளின் பளீர் கண்ணைப் பறிக்கின்றது. நாம் உள்ளே நுழைந்து எந்தப் பக்கம் ஆரம்பிக்கலாம் என்று திணறும் போது, அமைதியாக நம் அருகில் வரும் வழி காட்டிகள் எளிய நடையில் அந்த இடத்தைப் பற்றி சொல்கின்றனர் - காசு எதுவும் கொடுக்க வேண்டாம். எப்படி வாசலில் உள்ள இரண்டு தூண்கள் வருபவர்களை பவித்ரமாக்குகின்றன; 250 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் 2700 தொண்டர்களைக் கொண்டு நடக்கும் இந்தப் பணி பத்து சதவிகிதம் தான் முடிந்து இருக்கின்றன; இங்குள்ள 97 தூண்களை அவர்கள் எதிர்பார்ப்புக்குக் கொண்டு வர இன்னும் பல வருடங்கள் ஆகும்... இப்படிப் பல தகவல்கள்.

ஒவ்வொரு தூணிலும் ஒரு கதைக்கான சிற்பங்கள் - மிக நுண்ணியமாக செதுக்கப் பட்டவை. வெகு அழகாக வடிக்கட்ட ஒரு வெண் தாடியை உணர கையை அதனருகில் கொண்டு சென்ற போது, எங்கிருந்தோ புகை மண்டலத்திலுருந்து , கத்தி பட கதாநாயகன் போல் வந்த ஒரு பணியாளர் சிலைகளை தொடக்கூடாதென்றும், எப்படி ஒரு அன்பர் ஒரு சிலையை உடைத்து விட்டார் என்று கையைப் பிடித்துக் கூட்டிப் போய் சிரித்துக் கொண்டே காண்பித்தார் . சிலைகளின் தத்ருபம், புத்திசாலித்தனமாகப் பொருத்தப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் உள்ள தூண்கள் ...எழுபதுகளின்  'வசந்த மாளிகையை' நினைவுப் படுத்தின .

இவற்றுள் ராமர், வியாசர், துருவர், நாம்தேவ், துக்காராம், திருவள்ளுவர் இப்படி பல தெரிந்த பிரபலமானவர்களைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தால் சிவன், பார்வதி அவர்களின் பிள்ளைகளை வைத்து முருகன் மூத்த பிள்ளை என்று ஒரு கூக்ளி போட்டு சிவன் குடும்பத்தில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தனர்.

இந்த இடத்தால் என்ன லாபம் என்றால் ' இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்தும் நம் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட நம் வரலாறு தெரிய வேண்டும் என்பதே ' என்று அந்த வழி காட்டி சொன்னது முற்றிலும் உண்மை என்றே நம்ப வைத்தது. வழக்கம் போல் கோவிலுக்கு மறு புறத்தில் உள்ள கடையில் நம்ம ஊர் பட்சணங்களின் வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது.

ஸ்வாமினாராயன் கோவில்

நம்ம ஊருல அஞ்சு விளக்குன்னு சொல்றமாதிரி , இங்கும் ஐந்து தெருக்கள் கூடும் இடத்தை Five Corner என்றழைக்கிறார்கள். இங்குள்ள ஸ்வாமினாராயன் கோவில் இந்த இடத்தில் பிரபலம் என்றதால்  ஒரு குளிர்ந்த மாலையில் நுழைந்தோம். இந்தியக் கோவில்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசைகள் தான் இருக்கும். ஆனால் இந்தக் கோவிலிலோ நுழைந்தவுடன் தம்பதிகளைப் பிரித்து தனித்தனியாக சாமி கும்பிட வைக்கிறார்கள். இந்தப் பிரிவினை இறுதி வரை வெளியில் வந்து காலணிகளை எடுக்கும் வரை நடப்பது தான் ஆச்சரியம். சரி தரிசனம் பார்த்தது போதும் என்று எழுந்தால் அமுக்கிப் பிடித்து 'இருந்து போகலாமே, இன்னும் அரை மணியில் மகா பிரசாதம் கொடுக்கப் போகிறார்கள்' என்று நம்ப ஊரில் கிரெடிட் கார்ட் வியாபாரி போல் பிடிவாதம் பிடித்தார்கள். அப்படியும் நான் மசியாததால் நைவேத்யத்துக்கு முன்னேயே பிரசாதத்தைக் கையில் திணிக்க ஒரு பரவச நிலையில் வெளியில் வந்தால் போதும் என்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.

நவராத்திரி

இந்தியர்கள் வெகுவாகப்  புழங்கும் ஒரு தெருவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடக்கப் போவதாக பல வாரங்களுக்கு முன்னேயே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருந்தார்கள். இண்டியன் ஸ்டிரீட் எனப்படும் தெருவில் பட்டேல் ஸ்டோர்ஸும் , பிரியாணி அரிசி முதல் அப்பளம், வடாம் வரை அனைத்து இந்திய உணவுகளும் விற்க்கும் இந்தத் தெருவில் மாலை நடை பயிற்ச்சியின் போது பல இந்தியர்களைக் காண முடியும். தெருவின் இரண்டு முனைகளிலும் வண்ண விளக்குகள் மின்னியதைப் பார்த்து ஆஹா என்ன ஏற்ப்பாடு என்று வியந்து அருகே போனவுடன் தான் தெரிந்தது அது பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்ட போலிஸ்கார்கள் என்று. அருகிலுள்ள பெங்காலி ஹோட்டலில் அளவில்லாத சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி விட்டு வெளியில் வந்தால் குளிர் பிடுங்கித் தின்றது. முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மூடி அருகில் போனால் பெரிய மேடையில்  இரண்டு பேர் சுமாராகப் பாடிக் கொண்டிருக்க பல இந்தியர்கள்  குளிருக்காகவோ இல்லை பாடுபவர்களுக்காகவோ கையைக் காலை உதறி ஆடிக் கொண்டிருந்தார்கள்- கார்பாவாம் !
Garbha on Indian street

இங்கு ஒண்ணும் நம்ம ஊர் பக்திக்குக் கொஞ்சமும் குறைவில்லை தான் . ஒரு நல்ல சுத்தமான சூழ் நிலையில், வரிசையாக நின்று, அமைதியாக தரிசித்து, டாலர்களை அள்ளிப் போட்டு, பல கோவில்களில் சூடான பிரசாதம் எனப்படும் மதிய உணவையும் முடித்துக் கொண்டு மக்கள் திருப்தியாகத்தான் போகிறார்கள் .

அமெரிக்காவில் வந்து மக்கள் சாமி கும்பிட கோவில்கள் கட்டியதென்னவோ நியாயம் தான் , அதிலும் சுத்தமாக கழிப்பறைகளும் தேவை தான். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தியவர்கள் ,  இயற்கை உபாதைகளுக்குப் பின் கால் அலம்பவும் ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் பேஷாக இருந்திருக்கும்.

Friday, October 16, 2015

'அமெரிக்காவில் பார்த்ததும் பதிந்ததும்' - பாகம்- 2

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய 'பார்த்ததும் பதிந்ததும்' பதிவுக்கு வந்த சில கடிதங்கள் மென்மேலும் பகிரத் தூண்டியதால் , இதோ இன்னும்  சில பார்வைகள்:

அமெரிக்காவில் தங்கள் நாட்டுக் கொடியை பறக்கவிடுவதற்கு தயங்குவதே இல்லை. வீட்டு முன்னோ, காரிலோ எல்லா இடங்களிலும் , எல்லா அளவிலும் காணப்படுகிறது. தேசிய உணர்வைத் தூண்ட ஒரு நல்ல உத்தி.

நிறைய சைக்கிள்களைப் பார்க்க முடிகிறது. வண்டி ஓட்டினாலும் அவர்களும் பாதசாரிகளுக்கான விதிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமாம். நம்மூர் மக்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால்  நம்மூர்ப்படி நடைபாதையில்- ஆனால் அவர்கள் சட்டப்படி சரியாக எதிர் திசையில்- காற்றாய்ப் பறக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும் சரியான அடி படும் 

போலிஸ்காரர்கள் ஆஜானுபாகுவாய் இருக்கிறார்கள். ஆகிருதிக்குக்காகவோ இல்லை அபராதத்துக்காகவோ , பொது மக்கள் அவர்களைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள்.

எங்கு ரோடு ரிப்பேர் நடந்தாலும் அங்கு கட்டாயமாக ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டுமென்பது ந்நாட்டு விதியாம். அதனால் விதி மீரல்கள் இருப்பதில்லை. நேற்று ஒரு போலீஸ்காரர் ஒரு பக்கம் தெருவில் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருக்க மற்ற முனையில் தெருப் பிள்ளைகளுடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தார் .

கார் கண்ணாடியை இறக்கி விட்டு உரத்த சத்தத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே போகக் கூச்சப் படுவதே இல்லை.

கார்கள் அனேகம் பேர் வைத்திருக்கிறார்கள், ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு இங்கு நல்ல மவுசு. 

இந்தியாவில் காணாமற்போன அத்தனை குருவிகளும் இங்கு தான் உள்ளனவோ - அவ்வளவு குருவிகள் , கொத்துக் கொத்தாக மெல்லிய சத்தத்துடன் . இங்கு செல் டவர், ரேடியேஷன் போன்ற சமாச்சாரங்கள் கிடையாதா? நம்மவர்கள் விசாரித்துத் தேர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று 

நம்ப ஊரில் எண்பதுகளில் ஒரு ஸ்டேடஸ் சிம்பலாக விளங்கிய டீ வீ ஆண்டெனாக்களை, 2015ல் அமெரிக்காவில்  பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது 

நுகர்வோர்களுக்கு  ஏகப்பட்ட சலுகைகள்.  குக்கரிலிருந்து, ஆடைகள் வரை - எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 'சிவாஜி' மாதிரி பழகிப் பார்க்கலாம். பிடிக்க வில்லையென்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிக் கொடுத்து விடலாம். கேள்வி கேட்காமல் காசு கொடுக்கப் படும். தை அவ்வப்பொழுது தப்பாக தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது.

வெகுவாகக் கவர்ந்த மற்றொரு விஷயம். மொபைல் போனை எல்லாவற்றுக்கும் உபயோகப் படுத்துகிறார்கள்- அடுத்த பஸ் , ரயில் எப்பொழுது, ஒரு இடத்துக்குப் போக வழி - ரோட்டில் யாரையும் கேட்க  முடியாது, சொல்லவும் மாட்டார்கள். இந்தவாரக் கடைசியில் மழை வருமா,  பிட்ஸா ஆர்டர் கொடுக்க, கொடுத்த ஆர்டரின் ஸ்டேட்டஸ் அறிய , பார்மஸியில் கேட்ட மருந்துகள், டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன், நேற்று  எடுத்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் ரெடியா - இப்படி சமய சஞ்சீவியாக உள்ள போன் இல்லா விட்டால் இவர்கள் பாடு கஷ்டம் தான். அதைவிடக் கொடுமை இன்டர்நெட் இல்லா விட்டால் - முக்கால் தேசம் முடங்கியே விடும் போல.

பார்த்த வரையில் பலரும் ஒரு ஒழுக்கத்துடன் இருக்கிறர்கள்.

நாம் எதிரில் நடந்து வரும் பொழுது அவர்கள் வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தாலோ, நாயை வாக்கிங் கூட்டிச் சென்றாலோ ஒதுங்கி வழி விடுகிறார்கள்.  நாய்களை பிள்ளை போல் வளர்க்கும் இவர்கள் ஆபிஸில் இருந்து வந்தவுடன் சளைக்காமல் செய்யும் முதல் வேலை இந்தக் 'குழந்தையை' வெளியில் கூட்டிப் போவது தான் - "இல்லாவிட்டால் உட்கார விடமாட்டான்".

வாகன ஓட்டிகளின் பொறுமை ஆச்சரியப் பட வைக்கிறது. அனேகமாக எல்லோருமே நிறுத்தி புன்னகையுடன் பாதசாரிகளைக் கடந்து போகச் சொல்லி, பின்தான் போகிறார்கள். கலாச்சாரமும், விதிகளின் உக்கிரமும், கை நீட்டாத காவல் துறையும் - கை கோர்த்திருப்பது தெரிகின்றது.



சுலபமாகப் புன்னகைக்கிறார்கள். உற்சாகப் பிரியர்கள். எல்லாவற்றையும் கொண்டாடுகிறார்கள். 

மொத்த விற்பனைக்கே பிரபலமான சில கடைகளில் தயங்காமல் அள்ளுகிறார்கள் - 48 பாட்டரிகள் கொண்ட ஒரு பாய், பட்டிணத்தில்  பூதத்தில் வரும் ஜாடி சைஸில் ஜூஸ் பாட்டில்கள், பல தரப்பட்ட வடிவங்களில் ரொட்டிகள் எல்லாவற்றையும் சளைக்காமல் வாங்குகிறார்கள். நிறைய, செலவழிக்காமலேயே தேதி முடிந்து போய் தூக்கியிம் போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன் 

இது ஷாப்பிங் பிரியர்களின் சொர்க்கபுரி  போலும் - எப்பொழுதும் ஏதாவது ஒரு சேல் நடந்து கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் அட்டையுடன் உள்ள வீட்டம்மாக்களைப் பற்றிக் கவலைப் படாமல் கணவன்மார்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் உழைத்து, வார இறுதியில் கொண்டாடி,மறுபடியும் திங்களன்று நீள முகத்துடன் அடுத்த வார கவலைக்குக் கிளம்புகிறார்கள். 

நான் பேசிய சிலரின் படி- சேமிப்புத் திட்டங்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கிறது. வங்கிகள் சேமிப்புக்குக் கொடுக்கும் வட்டி விகிதங்கள் வடிவேலு பேசுவதை விட காமெடியாக இருக்கிறது. வங்கியிலேயே அட்வான்ஸ் வாங்கி, நகை செய்து , அதற்க்கு எதிராகவே நகைக் கடன் வாங்கி, கடனை அடைத்து நகையை  சே(ர்)மிக்கும்  நம்ம வங்கி ஊழியர்களின் திறமைக்கு இங்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது . சிறு சேமிப்பில் நம்மவர்களை மிஞ்ச முடியாது.

 வெளி நாட்டில் சம்பாதித்து, இந்திய வங்கிகளில் சேமித்து, எந்த நாட்டு ஷேர் மார்கெட்டிலும் விடாமல் கூடுவாஞ்சேரி பக்கம் வீட்டைக் கட்டி செட்டில் ஆகும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள் . ஆனால் கொஞ்சம் கம்மி. அனேகமாக பலரும் பெற்றோர்களின் முதியோர் இல்லச் செலவு போக, இங்கேயே விரயம் செய்து,  வளரும் மகள்களை நினைத்துக் கொஞ்ச காலம் கவலைப் பட்டு, அடங்கி விடுகிறார்கள்.

நான் பார்த்தவரை தெருக்கள் அனேகமாக சுத்தமாக இருக்கின்றன. மரங்களிகளிலுருந்து உதிரும் இலைகளைக் கூட மிஷின் வைத்து தவறாமல் எடுத்து விடுகிறார்கள் 

தெருவில் தன்னிச்சையாக மாடுகளையோ அவைகள் போடும் சாணங்களையோ பார்க்காமல் மனது வெறுமையாக இருக்கிறது.

நாய்களைப் பொறுத்தவரை இங்குள்ள விதிகள் மிகக் கடுமை. அவைகளை நடை பயிற்சிக்குக் கூட்டிக் கொண்டு போகும் பொழுது அவைகளின் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால், நாயின் சொந்தக்காரருக்கு நூறு டாலர் வரை அபராதம் என்று மூலைக்கு மூலை அறிவித்திருக்கிறார்கள்   

உள்ளூர் மட்டுமில்லை , நெடுஞ்சாலைகளிலும் குப்பையோ, காகிதங்களையோ பார்க்க முடியவில்லை.

சாலைகளில் 100 கி மீ குறையாமல் வேகமாக காரில் பறக்கிறார்கள். சாலை பராமரிக்கும் விதம், விதிகளின் பயம், சுய கட்டுப்பாடு இவைகளெல்லாம் உதவுகின்றன. 

நியூயார்க் போன்ற பெரிய நகரங்களிலும் எவ்வளவு நெரிசல் இருந்தாலும் எந்தக் காரும் ஹார்ன் அடித்துத் தன் வெறுப்பைக் காட்டாமல் இருந்தது ஒரு பெரிய ஆச்சரியம்.

ஒரு சில நெடுஞ்சாலைகளில் ' அதிக வேகம் 70 மைல் ஆனால் குறைந்தது 45 மைல் போயே ஆக வேண்டும் ' என்பதும் ஆச்சரியமே!

கார்களில் முகப்பு விளக்குகளை, கொஞ்சம் வெளிச்சம் குறைந்தாலும் தானாக எரிய வைத்திருக்கிறார்கள். 

பார்த்த மற்றொரு ஆச்சரிய போர்டு 'இன்னும் இரண்டு மைல் காத்திருங்கள் SMS அனுப்ப'

அமெரிக்க ஆச்சரியங்கள் இன்னும் தொடருகின்றன......

Saturday, October 3, 2015

முடக்கிய தினத்தில் முடங்காத எண்ணங்கள்

பாரத தேசத்திலிருந்து சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா வந்து சேர்ந்த போது , வெய்யில் நம்ம ஊர் போல இல்லா விட்டாலும் , சமயத்தில் தாக்கியது.

தமிழ் நாட்டில் கரண்ட்டே இல்லாமல் தகிக்கும் வெய்யிலை பார்த்தவர்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. ஆனால் நம்ம ஊரில் வேர்த்து ஊத்தி உடல் கண்ணீர் விட்டு விடும் - இங்கு வியர்வை குறைவு , அதுதான் ஆபத்தும்  கூட.

இருந்தும் பயணம் செய்ய, நடை பயில கொஞ்சம் அனுகூலமாகவே இருந்த சீதோஷ்ணம் திடீரென்று கோபித்துக் கொண்டது போல சட்டென்று சில டிகிரிகள் கீழே விழுந்து அனைவரையும் கம்பளிக்குள் இழுத்தது. ரொம்ப காலமாக இங்கேயே இருக்கும் , 'இதெல்லாம் குளிரா, ஜனவரி , பிப்ரவரி பார்' என்று எக்களித்தவர்கள் கூட நேற்று சரணடைந்து விட்டார்காள் -அவ்வளவு குளிர் , மழை காற்றுடன் சேர்ந்து ! பஹாமாஸைக் குறி வைக்கும் 'யோ க்வின்' என்ற  சூறாவளி, அமெரிக்காவிடம் கொண்ட ஒரு ஊடல் தானாம் இந்த ஒரு டிகிரி குளிர்.

உடனேயே பள்ளிகளை மூடி விட்டார்கள். தெருக்களில் நடமாட்டம் குறைந்து உள்ளூர் ரயில்களையும் குறைத்து விட்டார்கள். பலரும் வீட்டில் அடுத்த மாதம் எடுக்கக் காத்திருந்த ஹீட்டரை திருகி அதன் கணகணப்பில் சுகமாக கால் நீட்டி டீ வீ பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் - நல்ல வேளை இங்கெல்லாம் கரண்ட் போகாதாம். நல்ல மனம் கொண்ட சில கிளையண்டுகள் வீட்டிலேயே வேலை பாருங்கள் என்று சொல்ல,  கொடுத்து வைத்த  சில கம்பெனி ஊழியர்கள்  வீட்டிலேயே இருந்து கொண்டு, மனைவி செய்த சூடான பக்கோடாவை ருசித்துக் கொண்டே, இந்தியாவில் வெந்து கொண்டிருக்கும் மானேஜர்களிடம் கான்பெரென்ஸ் கால் பேசி வெறுப்பேத்திக் கொண்டிருந்தார்கள். குளிர் அதிகப்படுத்திய சோம்பேறித்தனத்தால் சில வீட்டு அம்மாக்கள் சமையலறையை மூட பீட்ஸாக் காரர்கள் கல்லாக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இதே மழை , குளிர் தானே அவர்களுக்கும் ... ஹூம் ....சிலரின் கஷ்டம் சிலருக்கு ஆதாயம்.

வெளியே சுற்றியே பழக்கப் பட்ட நம்மைப் போன்றவர்களுக்கு மனம் மாட வீதியைத் தேடி ஓட , சில இடங்களில் 'பிசிறி' என்ற SKUNK போன்ற விலங்குகளும் அங்கங்கு தென் பட்டதால் வெளியில் போவது பாதுக்காப்பு கருதி வீட்டால் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட பிசிறிகள் தன் அருகில் யார் வந்தாலும் உடம்பைத் திருப்பி, பின்புறத்திலுருந்து துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு திரவத்தை உமிழ்ந்தால் அதை பெற்றுக் கொள்பவர்கள் தாங்க முடியாத சரும அரிப்புகள் போன்ற உபத்திரவங்களுக்கு ஆளாவார்களாம். வேறு வழியின்றி  வீட்டுக்குள்ளேயே நடை பயில வேண்டி இருந்தது. குளிர் பிரதேசங்களில் உள்ள புத்திசாலி மக்கள் ஏன் த்ரெட்மில் கண்டு பிடித்தார்கள் என்று விளங்கியது. இப்படிப்பட்ட குளிர்கால பயிற்ச்சி நண்பனைத்தான்  நம் மக்கள் சாமர்த்தியமாக ஜிம்களில் வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டீ வியில்  எவ்வளவு  பணம் கொடுத்தாலும் சொல்ப தமிழ் சேனல்கள் தான் வருகிறது.

காசு கொடுத்து வாங்கும் உள்ளூர் சேனல்களில் வரும் ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற தொடர்களும் கொஞ்ச நேரம் தான் பார்க்க முடிகிறது - ஆனால் அபாரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பூ சுத்தாமல், கண்ணீர், மாமியார்-மாட்டுப் பெண் கொடுமை இல்லாமல் தொடர்கள் எப்படி எடுப்பது என்று நம்ம மக்கள் கொஞ்சம் கத்துக் கொள்ளலாம். ஆனால் நடு நடுவே வரும் விளம்பரங்கள் என்னவோ நம்ம ஊரே தேவலை என்று எண்ண வைக்கிறது.

இவற்றுக்கு நடுவே தவறாமல் நமக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் காமதேனு தான்  யூ டியூப் - ஜீ பூம்பா போல் எது கேட்டாலும் கொடுக்கிறது.

இன்னாள் வரை யூடியூப் மூலம் முழுசாக ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே பார்த்த எனக்கு இது ஒரு சவாலாகத்தான் இருந்தது. சமீபத்தில் வெளி வந்து அதே சூட்டில் புறமுதுகு காட்டி தியேட்டரை விட்டே ஓடிய  சில படங்களும், இப்பொழுதும் நன்றாகப் பேசப் படும் சில மாதங்களுக்கு முன் வந்த படங்களும் பார்த்த பொழுது வந்த சில எண்ணங்கள் :

முதலில் , காசு கொடுக்காமல் பார்த்த ஒரு லேசான வருத்தம் (குற்ற உணர்ச்சி?)

ரொம்ப ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்யப் பட்ட சில படங்களின் காலணா பெறாத கதைகள் . இப்படிப்பட்ட படங்களை எந்த நம்பிக்கையில் எடுக்கிறார்கள் - உண்மையிலேயே ஓடும் என்ற எண்ணத்திலா இல்லை நம் ரசிகர்கள் இன்னும் முட்டாள்களே- எதைக் கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலா? பின்னது தான் என்று தோன்றுகிறது.

எதிர்பார்த்து குப்புற விழுந்த சில படங்களை ஆரம்பித்த  அரை மணியிலேயே நாம் ஒதுக்கி எழுந்திருக்கும் பொழுது, அந்தத் தயாரிப்பாளர்களுக்கு அவரைச் சுற்றி உள்ள எவருமே சொன்னதில்லையா , இது எடுபடாது என்று?

சொல்ல பயமா இல்லை உண்மை நண்பர்கள் எவருமே இப்படிபட்டவர்களைச் சுற்றி இருப்பதில்லையா?

பணம் , புகழ் படுத்தும் பாடு எவரையும் உண்மையைச் சொல்ல விடுவதில்லையா?

எனக்கென்னவோ உண்மையாக, வெளிப்படையாக விமரிசனம் செய்யும் ஒரு குழுவை இவர்கள் வைத்துக் கொண்டால் பல நூறு கோடிகளை நட்டத்திலிருந்து காப்பாற்றலாம் , மற்றும் படம் கவிழ்ந்தவுடன் மிரட்டி வாங்கப்படும் நட்டங்களையும் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படியெல்லாம் படம் எடுத்தால் காசு கொடுத்து போகும் எவனுக்கும் இணைய தளத்தில் இலவசமாகவோ அல்லது திருட்டு முறையிலோ முதலில் பார்த்து விடுவோம் என்று தோன்றுவதில் என்ன அதிசயம்? இந்தக் குளிருக்கு சுகமாக இருந்தாலும், எரிச்சல் அதிகமாகத்தான் இருந்தது.

           -  -  நியூ ஜெர்ஸியின் ஒரு குளிர்ந்த மாலையில் வெளியே போக முடியாது வெதும்பிய மனத்தில்  எழுந்த சிந்தனைகள்  !