Monday, February 23, 2015

வீடு வாங்கலியோ வீடு!

வீடுகள் விற்பதற்க்காக சென்னையில் ஒரு சந்தை சில நாட்களாக நடந்து கொண்டிருந்தது. நேற்று நானும் என் நண்பருக்காக அவருடன் சென்றிருந்தேன். கணினி, கைபேசிகளின் தாக்கம் உள்ளே நுழைவத்ற்கு முன்பே தெரிந்தது. உங்கள் பெயருடன், கை பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டு, ஒரு குறுஞ்செய்தி மூலம் அனுமதி வழங்கப் படுகிறது. எவ்வளவு நாசூக்காக உங்களின் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்கிறார்கள்.

நுழைந்தவுடன் நம்மைத் தாக்கும் குளிரூட்டப் பட்ட பிரம்மாண்டமான அரங்கம். நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கண்ணைக் கவரும் வண்ணத்தில் பல மாடிக் குடியிருப்புகளின் பதாதைகள், உட்கார அருமையான நுரை மெத்தைகள் போட்ட சோபாக்கள், குளிருக்கு அடக்கமான கோட், ஸூட்டுடன் நாஸூக்காக உலவி நம்மை நெருங்கும் விற்பனையாளர்கள்- உள்ளே நுழையும் போதே கண்ணைக் கட்டியது. இப்படிப் பட்ட சந்தைகளில் நாம் நடமாட  முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு தான் உலா வர வேண்டும். இல்லையென்றால் பக்கத்தில் இருக்கும் நண்பரிடம் 'காப்பி சாப்பிடலாமா' என்று கேட்பதற்க்குள் கை நிறைய பேப்பர்களைத் திணித்து விடுகிறார்கள்.

பல பிரபல சென்னை வாழ் பன்மாடிக் கட்டிடங்கள் கட்டுவதில் வல்லுனர்களும் இங்கு ஆஜர். காதில் நிறையப் பட்டது சோளிங்க நல்லூர், கூடுவாஞ்சேரி, படூர் போன்ற இடங்கள். சிறுசேரியில் உள்ள பிரபல மென்பொருள் அலுவலகத்தைக் காட்டி , அங்கு வேலை செய்யும் பல்லாயிரக் கணக்கான இஞ்சினீயர்களே வாடகைக்கு வந்து விடுவார்கள், என்று நாக்கில் தேன் தடவிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது போலும் இது போன்ற நிறுவனங்களில் தான் திடுதிப்பென்று வீட்டுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று. அல்லது வாங்குபவர்களுக்கு அது தெரிந்திருக்காது என்ற நம்பிக்கையிலோ? தெரியவில்லை.

பெருங்களத்தூர் ரயில் நிலயத்திலுருந்து பத்து நிமிடங்கள் தான்- நாங்களே கூட்டிச் செல்கிறோம் - "எவ்வளவு நாளைக்கு ஸார்" என்று கேட்கத் தோன்றியது.

"இந்த பிளாக்கில் வாங்குபவர்களுக்கு கார் பார்க்கிங் உண்டு. ஆனால் இந்த பிளாக்கில் இல்லை" என்றார். "கொஞ்ச வருடங்கள்  கழித்து அவர்களும் கார் வாங்குவார்கள். அப்ப அவர்கள் எங்கு நிறுத்துவார்கள்"என்று கேட்டால் , இருக்குமிடத்தில் அங்கங்கதான்" என்ற பதிலைக் கேட்டு உணர்ந்தது "இப்படிப் பட்ட தொலை நோக்கில்லாதவர்களிடம் சிக்கினால், வாங்கியவர்கள் சண்டை போட, இவர்கள் பணத்தை எண்ணிக் கொண்டே போய்க் கொண்டே இருப்பார்கள். ஜாக்கிரதை" என்று உள்ளே மணி அடித்தது.

இப்படித்தான்  ஒருத்தர் கழுத்து டையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டே 'எங்கள் திட்டத்தில் 24 மணி நேர காவலர்கள், நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட மைதானம் எல்லாம் தருகிறோம்' என்றார். இதெல்லாம் ஒரு விற்பனைக்குறிய உத்தியா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சொன்ன வசதிகளையோ/ சலுகைகளையோ பராமரிக்க ஆகும் மாசச் செலவு யார் கணக்கில்?

அடுக்கு மாடி என்றால் ஒன்றிரண்டு இல்லை- முப்பது , நாப்பது மாடி. இன்னும் ஆச்சரியப்பட வைத்தது, மாடி மேலே போகப் போக வீட்டின் விலையும் ஏறுமாம். முன்பெல்லாம் அதிக பட்சமாக இருந்த மூன்றாம் மாடிக்கு " கரண்ட் இல்லாத போது ஏற முடியாது, தண்ணி கஷ்டம் வந்தால் குடம் தூக்க முடியாது" என்ற காரணத்தால் ஒரு சதுர அடிக்கு இருபது ரூபாய் குறைப்பார்கள். கண்ணோட்டமும், வியாபரமும் தலை கீழாகப் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

குறைந்த பட்சம் அறுபது , எழுபது லகரத்துக் குறைந்து எந்த வீடும் கிடையாது. கேட்டால் புழுவைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, அடுத்து வருபவரிடம் நகருகிறார்கள் 'டை'யர்கள். இதெல்லாம் ஊருக்கு எந்தக் கோடியிலோ என்று கொஞ்சம் நகருக்குள் நிலவரம் பார்க்கலாம் என்றால் இங்கும் கோடிகள் தான் . "ரெண்டு ஸீக்கு குறைஞ்சு சிட்டில தேடாதேங்க ஸார்" என்று சொல்லிண்டே போனார், காலையிலிருந்தே இங்கு சுத்திக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர்.

இந்தச் சந்தையை அமைத்தவர்கள் கொஞ்சம் சிந்தித்துத் தான் இருக்கிறார்கள். 'இவ்வளவு பணத்திற்க்கு எங்க போக' என்று வியந்து வாய் திறந்து வெளியே வந்தால் திறந்த வாய் மூடுவதற்க்குள் அடுத்த அரங்கில் கடன் கொடுப்பவர்களெல்லாம் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள்.

கண்ணைப் பறிக்கும் கலரில் 'சிகாகோ' என்று பெயர் பொறித்த பெரிய சைஸ் பனியனுடன், வழுக்கைத் தலைக்கு மேலே தூக்கி விடப்பட்ட குளிர் கண்ணாடியுடன், அண்மையில்தான் பிள்ளை வீட்டிலுருந்து இந்தியா திரும்பி இருக்கிறேன் என்று கேட்காமலே பறை சாற்றும் எல்லா அறிகுறிகளுடன்  ஒருவர் "Actually it is for my son in U.S. How much is he eligible"  என்று ஆங்கிலத்தில் கடன் கேட்டுக் கொண்டிருந்தார். இப்படி தத்தம் பெண், பிள்ளைகள் வெளி நாடுகளில் குளிருக்கு அடக்கமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி நெட் ஃப்ளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டிருக்க பல அப்பாக்கள் கையில் சட்டி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்!

கொஞ்ச நேரத்திலேயே கால் வலிக்க , 'என்னமோ தெரியல ரொம்ப டயர்டா இருக்கு"ன்னப்போ, என் நண்பர் "கையில இருக்கறத இறக்கி வெச்சா கொஞ்சம் சுலபமாக மூச்சு விடலாம்" என்றார். அப்பத்தான் தெரிஞ்சது ,  வாழ்க்கையின் பாப புண்ணியங்களைப் போல, நமக்கே தெரியாமல்,நிறைய சேர்த்துக் கொண்டிருப்பது. கையில் கட்டு கட்டாக புத்தகங்கள், பல வண்ணத்தில் பேப்பர்கள். பலரும் அதை அப்படியே வாசலில் போட்டு விட்டுப் போகிறார்கள். குப்பை இரைவது மட்டுமில்லாமல், நிறைய காகித விரயங்களும்- தவிர்க்கப் பட வேண்டிய விஷயங்கள். வாசலில் பெரிய பெட்டிகள் வைத்து அதில் தேவை படாதைவகளைப் போடச் சொல்லி இருக்கலாம்- இதெற்க்கெல்லாம் பிரதமரையா ஒரு திட்டத்தோட வரச் சொல்ல முடியும்?

வெளியில் அரை இருட்டில் தட்டு தடுமாறி வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்க்குப் போனால், அங்கிருந்து வெளியே வர எந்த வழி காட்டிப் பலகைகளும் இல்லாது கொஞ்சம் சுற்றிய போது உரைத்தது- வீடு வாங்க வருபவர்களும், இப்படித்தான் பல கண் கவர் திட்டங்களைப் பார்த்து மயங்கி, விலையை நினைத்து எப்படி போவது என்று வழி தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்களோ என்று !

சந்தை என்றால் கொஞ்சம் சல்லிசாக கிடைக்கும் என்பார்கள். ஆனால் லட்சங்களையும் கோடிகளையும் கூவி விற்கும் இந்தச் சந்தை கொஞ்சம் வினோதமாகத் தான் இருந்தது.

இந்த விலையில் ஒரு சாதாரணன் சென்னைக்கு அருகே வீடு வாங்குவது குதிரைக் கொம்பு தான். அதற்க்காக எல்லோரும் வெளி நாட்டுக்கும், மென் பொருள் கம்பெனியையுமா தேடிப் போக முடியும்- அங்கும் துரத்த ஆரம்பித்து விட்டார்களே !

வீட்டைக் கட்டிப் பார் என்றார்கள். வீட்டைக் கட்ட சுற்றிப் பார்ப்பதற்குள்ளேயே இப்படி மூச்சு வாங்கினால், வருங்கால சந்ததியினரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.  நிறையப் படிக்க வேண்டி இருக்கு, நிறைய உழைக்க வேண்டி இருக்கு. அவர்கள் இதை எவ்வளவு சீக்கிரம் உணருகிறார்களோ, அவ்வளவு நல்லது.

Monday, February 16, 2015

போதனைகளும் வேதனைகளும்

தூர்தஷன் தொடங்கிய வருடங்களில் மக்கள் துரத்தித் துரத்தி- இல்லை திருகித் திருகி- உள்ள ஒன்றிரண்டு சானல்களுக்குள்ளேயே தான் உலாவினார்கள். இருந்த சில சானல்களுக்குள் எப்படி எல்லாவற்றையும் புகுத்துவது என்ற சங்கடம் ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்தது. அதற்க்குள்ளேயே தான் மதம், போதனை, கல்வி, விளையாட்டு, கேளிக்கை எல்லாமே. கொஞ்சமாக இருந்ததால் திகட்ட வாய்ப்பில்லாமல் அனைவரும் பொட்டியை சூழ்ந்த காலமது. கிரிக்கெட் மாட்ச் எப்படிப்பட்ட சுவாரசிய கட்டத்தில் இருந்தாலும் செய்திகள் நேரம் வந்து விட்டால், மாட்சை புறக்கணித்து பலரின் வயிற்றெரிச்சலையும் சாபங்களையும் சேர்த்துக் கொண்ட நேரமது. இதனால் பல நல்ல போட்டிகளின் இறுதிக் கட்டங்களுக்காகத் தாவி வானொலிக்கு வாழ்வளித்த காலம்.

இன்று சானல்களுக்குப் பஞ்சமும் இல்லை, வானொலியை யாரும் சீண்டுவதுமில்லை. கேபிள் வரவில் கிளம்பிய சானல் வியூகத்தில் வேறு வழியில்லாமல் புகுந்த மக்கள், இன்று எத்தனை சானல்கள் இருப்பது என்று தெரியாத,  ஆனால் எதையோ தேடிக்கொண்டே இருக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றோ கையில் கொஞ்சம் சில்லறையும், ஊருக்குள் செல்வாக்குமிருந்தால் உங்களுக்கான பிரத்யேகச் சானலைத் தொடங்கி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். பொட்டியைத் தட்டி உயிர்ப்பித்தால் மத போதனைகள், மருத்துவம், யோகா போன்ற உடலும் மனமும் சிறப்புற அறிவுறுத்தப் படும் பயிர்ச்சிகள், அரசியல், கட்சிகளின் சித்தாந்தங்கள், மற்ற கட்சிகளில் இல்லாதவைகள், செய்திகள், விளையாட்டு விமரிசனங்கள் , விவாதங்கள், நேர்முக அஞ்சல்கள், ...இப்படி எத்தனையோ.

இதில் குழந்தைகள் , பெரியவர்கள், மாணவர்கள், முதியவர்கள், சான்றோர்கள், பெண்மணிகள், இளைஞர்கள் கவனிக்க வேண்டியது என்று பல இருந்தாலும் சிலர் கவனிக்கக் கூடாத சேனல்களும் அடக்கம். பெற்றோர்களிடமும், மருத்துவர்களிடமும் தயங்கிக் கொண்டே கேட்க வேண்டிய சந்தேகங்கள் கூட ஆலோசகர்கள் பக்கத்தில் ஒரு இளம் பெண் சகிதம் உட்கார்ந்து தயக்கமில்லாமல் பேசுவர். அவர்களுக்கே உறுத்தியதாலோ என்னவோ, இவைகளெல்லாம்  பின்னிரவில் தான் ஒளிபரப்பாகின்றன.

வளர்ந்து வரும் நாடுகளிலும் வளரத் துடிக்கும் இளைய சமுதாயங்களுக்கிடையிலும் இது ஒரு தவிர்க்க முடியாத பரிணாமம், இதைத் தடுக்க முடியாது; தடுக்கவும்  கூடாது தான். ஆனால் எந்த ஒரு வளர்ச்சியுடனும் கை கோர்த்து வரும் ஆபத்துக்களை கவனமாகக் கண்காணித்து முறைப் படுத்த வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

கையில் சேனல் இருக்கிறது என்பதால் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாம் என்ற அபாயகரமான சூழ்நிலை உருவாகக் கூடாது. இது வளரும்  சமுதாயத்தையும், கல்வி அறிவற்றகளையும் திசை திருப்பி தவறான பாதைக்குக் கூட்டிச் செல்லக் கூடிய சாத்தியமுள்ளது.

உதாரணத்துக்கு, சில வியாதிகளுக்குக் கூறப்படும் நிவாரணங்கள் சரியா, சில  உடற் பயிர்ச்சி போதனைகள் அங்கீகரிக்கப் பட்ட வழிகளில் உள்ளதா, உலக நிகழ்வுகளின் வெளிப்பாடுகள் மற்ற நாடுகளுக்கிடையே நாம் கடைப்பிடிப்பதாக உறுதி கொண்டுள்ள வரையறைகளுக்குள் தான் உள்ளதா, விவாதிக்கப்படும் தலைப்புகளும், செய்திகளும், நிகழ்வுகளும் அதன் உண்மையான அர்த்தத்திலும் பின்னணியிலும்தான் இருக்கிறதா, பரப்பப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதாக உள்ளதா.... இவைகளெல்லாம் கவனிக்கப் பட்டு , கண்காணிக்கப் படுகிற தேவை உள்ளதா? சில நிகழ்ச்சிகளைக் காணும் பொழுது இப்படிப்பட்ட சந்தேகங்கள் வலுப்பெறுகின்றன.

இங்கு முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கும் சானல்களிடையே , வருங்காலத்தில் இன்னும் வரவிருக்கும் பல நூறு சானல்களிடையே அது சாத்தியமா, தேவையா என்பது தனி விவாதம். தவறான செய்திகளையும், போதனைகளையும், கருத்துகளையும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் முன் வரிசையில் உள்ளது என்பது மட்டும் தான் உறுதி.

நம்மிடம் உள்ள உபகரணத்தால் நம்மை உயர்த்திக் கொள்ளலாம், சமூகத்தையும் உயர்த்தலாம் ஆனால் மற்றவர்களின் நலனையும், சிந்தனைகளையும் சீரழிப்பது ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது, கூடாது. இங்கு தான் ஆட்சியாளர்களின் கடமைக்கேற்ற பங்கு நிறைய தேவைப்படுகிறது.

ஒரு விவாதத்தில் பொருளாதார 'நிபுணர்' சொல்லக் கேட்டது " வீடு கட்டக் கூட கடன் வாங்கக் கூடாது. சேர்த்து வைத்து பின் வாங்கிக் கொள்ளலாம்". இப்படி யாராவது வீடு கட்டி இருந்தால் - அவர் சேமிப்பில், அவரின் காலத்தில் அவரே வீடு வாங்கி இருந்தால், அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்து, இன்றைய பொருளாதார உலகில் இது நடைமுறை சாத்தியமில்லை.

நமக்கு உள்ள சந்தர்ப்பங்களை திறமையாகப் பயன் படுத்துவதில் தான் , நாம் முன்னேற்றம் காண்கிறோம். முன்பெல்லாம் பெரியோர்கள் 'கடன் வாங்கிச் செலவழிக்காதே" என்பர். ஆனால் இன்று  வீட்டுக்கும், கல்விக்கும் கடன் வாங்கினால் வீண் போகாது என்று நம்பப் படுகிறது. இரண்டுமே நாட்கள் போகப் போக , எதிர் பார்த்ததை விட , பலன்கள் பல கொடுக்க சாத்தியங்கள் உள்ளது.

கார்டுகளைப் பற்றியும் பல விதமான அபிப்ராயங்கள். தெளிவான நோக்குடன், மனதை குறுக்கு வழியில் செலுத்தாமல் செயல் பட்டால் க்ரெடிட்டோ டெபிட்டோ எந்தக் கார்டு மூலமும் கையைச் சுட்டுக் கொள்ளாமல் பணப் புழக்கத்தைச் சமாளித்து , நாம் ஒரு சிறிய லாபமும் ஈட்டலாம்.

தேவை - கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை. இருபது வருடங்களுக்கு மேலாக கறிகாய்க்குக் கூட கார்டைத் தேய்த்து வெற்றி கண்டவனின் கூற்றாக இதைக் கருதலாம்.

தொலைக் காட்சியில் பல 'நிபுணர்கள்' பேசுகிறார்கள்:
  • எப்படி நோய் தவிர்ப்பது 
  • எப்படி ஒரே மாதத்தில் பல லட்சங்கள் லாபம் பெறுவது 
  • எப்படி முக்தி அடைவது
  • சென்னைக்கு மிக அருகே, ஆனால் வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியாக உச்சிப் பிள்ளையாரையும் தரிசனம் செய்யக் கூடிய நிலங்களை குறைந்த விலையில் எங்கு வாங்குவது !
  • தீய பழக்களிலிருந்து விடு பட
  • எண்களை மாற்றிக் கண்களைத் திறப்பவர்கள்
  • சில நூறு ரூபாய் மதிப்புள்ள இயந்திரம், தாயத்துக்கள் மூலம் பல வருடத்து தீமைகளை விரட்ட
 இப்படிப்பட்ட கூற்றுகளில் விழுவதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லை என்று நினைக்கிறேன்.

நெடுந்தொடரில் நாயகி படும் கஷ்டம் தாங்காமல் கண்ணீர் சிந்தும் முன்னவர்கள் ஜாக்கிரதையாக ஏமாறி யாரிடமும் சொல்லாமல் மௌனமாகத் தாங்கிக் கொள்கிறார்கள்.

தத்தம் தலைவர்களுக்கும், ஹீரோக்களுக்கும் வெள்ளந்தியாக கை தட்டும் பின்னவரோ இழப்பு தாங்காமல் ஊரைக் கூட்டுகிறார்கள். இது தேவலை- மற்றவர்களுக்காவது ஒரு பாடமாக இருக்கும்.

 தொலைக் காட்சியில் வரும் சோப்புக் கட்டிதான் நேற்று சட்டையில் கொட்டிய சாம்பார் கறையை போக்கும் என்று நம்பி கடைக்கு ஓடுபவர்களையும் இத்தகைய சில போதகர்களையும் சேர்த்துப் பார்த்தால் கவலை அதிகரிக்கிறது.

சில உண்மைக்குப் புறம்பான போதனைகளைச் செய்ய ஏதுவாகும் தொலைக் காட்சி நிலையங்களுக்கும், நிறுவனங்களுக்கும்  எந்தப் பொறுப்பும் கிடையாதா? ஏதேனும் வரைமுறைகள் உண்டா?

பார்ப்பவர்களும், நடத்துபவர்களும், சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்பவர்களும், அரசும் சிந்திக்க வேண்டிய விஷயமிது.

Thursday, February 5, 2015

ஏழ்மைக்கு ஆசைப்படு

750 கோடி மில்லியன் டாலர் (இந்திய மதிப்புக்குக் கணக்குப் போட்டுக் கொள்ளவும்) சொத்துள்ளதாகச் சொல்லப்படும் பிரபல தொழிலதிபரை சில வங்கிகள் சமீபத்தில் விரும்பியே கடனைத் திருப்பி தராதவராக அறிவித்தது.

ஒரு படத்துக்கு பல கோடிகள் வாங்குவதாகக் கூறப்பட்ட முன்னணி திரைப்பட நடிகருக்கு வந்த சோதனை, ஒரு வங்கி அவர்பால் கொடுக்கப்பட்ட நிலத்தை ஏலம் விடுவதாக பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிவித்தது- காரணம் அவரது மனைவி அந்த வங்கியிலிருந்து வாங்கிய சில கோடி ரூபாய் கடனை நேரத்தில் திருப்பித் தராததால் என்று சொல்கிறார்கள்.

இப்படி பல பணக்காரர்கள் கதை கூகுளைத் தட்டினால் வந்து கொட்டும். நம் கவலை தொழிலதிபர்கள் பற்றியோ அல்லது நடிகர்கள் பற்றியோ அல்ல. இந்தக் கூற்றுகள் எந்தளவுக்கு உண்மை என்றும் தெரியாது.

ஆனால் வெளி மனிதன், சாதாரணன் நினைத்துக் கொள்வது 'இவர்களுக்கென்ன கவலை. ஏழு தலைமுறைக்கு சொத்திருக்கிறது" என்று. தெரியாதது பத்து தலைமுறைகள் கட்ட வேண்டிய கடனும் சிலருக்கு  இருக்கலாம் என்பது தான்.

நம்மைப் போன்ற  சராசரி மனிதனின் கவலை, இந்த மாத சம்பளம் துண்டு விழாமல் இருக்குமா? வருமான வரிக்கே அடுத்த இரண்டு மாத சம்பளமும் பலியாகி விடுமே ! பிள்ளைகளை காலேஜில் சேர்க்க வேண்டுமே ? ஒரு வீடு கட்ட வேண்டுமே? வயதாக ஆக ஓய்வுக்கு பிறகு எப்படி காலம் கடத்துவது என்பதுதான். இப்படிப்பட்ட உண்மையான கவலைகள் ஒருவனை நல்ல திட்டங்களுக்கு, நல்ல முயற்ச்சிகளுக்கு, நல்ல குறிக்கோளுக்குக் கூட்டிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இப்படியாக தனக்குள்ள கட்டுப் பாடுகளை மனதில் வைத்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக எங்கு எப்பொழுது சறுக்கி விடுவோமோ என்ற பயத்திலேயே நகர்கிறான் சாதாரணன்- ஆனால் முன்னேறுகிறான்.

வரும் சொல்ப சம்பளத்துக்கு, நிர்வாகம் வருமான வரி பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. வேலை இல்லாக் காலத்தில் உதவுவதற்க்காகக் கொடுக்குக் கூடிய ஓய்வூதியத்தையும் விட்டு வைக்காமல் வரி பிடித்துத் தான் கொடுக்கிறார்கள். மேலும் ரிடயர்மெண்ட் சமயத்தில் வந்த அல்ப பணத்தையும் வங்கியில் போட்டு மாதா மாதம் வரும் வட்டியில் சாப்பிடலாமென்றால் அதிலும் வருமான (?) வரியை கொஞ்சம் சுரண்டி விடுகிறார்கள் கடமை தவறா வங்கிகள்.

சரி எவ்வளவு முடியுமோ புடிங்கப்பா அப்படின்னு வலிக்காத மாதிரியே இருக்கும் அந்த சாதாரணனுக்குத் தான் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றுகிறது. மறைக்க ஏதுமில்லை, கொடுக்கறதுன்னா கொடு என்பவனுக்கு என்ன பயம்?

இதெல்லாம் விட்டுட்டு பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கிய கோடீஸ்வரன், சில கோடி ரூபாய் கடனுடன் ஒரு லட்சாதிபதியாகி, ஏறின புலியின் வாலை விட முடியாமல் மேலும் கடனாளியாவதில் என்ன பலன்?

எனக்கென்னவோ கோடிஸ்வரன் என்று பிறர் நினைக்க பஞ்சு மெத்தையில் படுத்துத் தூக்கம் வராமல் புரள்வதை விட, அன்றாடம் காய்ச்சியாக இருந்து , தரையில் போட்ட பாயில் அடிக்கும் வெயில் தெரியாமல் தூங்குவதே மேல் என்று தோன்றுகிறது.

ஆகையால் வருமானம், தேவைகளை விட, இருக்கும் செலவை விட குறைவாக   இருக்கவே எனக்கு ஆசை. என்னைத் தேடி வரிக்காரன் வரமாட்டான், என் பெயர் பத்திரிகையில் வங்கி வழியாக வராது. ஏன், சொந்தக் காரன் கூட நெருங்க மாட்டான்- ரொம்ப ஒட்டினால் கடன் கேட்பானோ என்ற பயத்தில்.

முக்கியமாக கொஞ்சம் குறைவு நம்மை நிறைவை நோக்கி நகர்த்துகிறது. நம்முள் நமக்குத் தெரியாமல் முடங்கிக் கிடக்கும் இன்னல்களை சமாளிக்கும் ஆற்றலை வெளிக் கொணர்கிறது. இது நம்முள் இருக்கிறது என்பதை நமக்கே உணர்த்துகிறது. குறைவுகள் ஒருவனின் சக்தியை தூண்டும் வல்லமை படைத்ததாகத் தோன்றுகிறது.

அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர் .
எதன் மேலும் ஆசை வைக்காதே என்கிறது சில தத்துவங்கள்

 என் அனுபவம்  சொல்வது கொஞ்சம் ஏழ்மைக்கு(ம்) ஆசைப்படு - அதில், அதிலிருந்து மீண்டு வர எடுக்கும் முயற்ச்சியில், கற்கும் பாடத்தில் நிறைய சந்தோஷமிருக்கிறது, நிம்மதி இருக்கிறது. முக்கியமாக பயமில்லை!!

குறை ஒன்றுமில்லை என்றால் கோவிந்தனுக்கு நன்றி சொல்லலாம்.
கொஞ்ச நஞ்சம் ஏதாவது இருந்தால் அதில் உள்ள சில நல்லவைகளை நினைத்து, பயமொன்றுமில்லை பரந்தாமா, என்று சொல்லி  முன்னேற முயற்ச்சிக்கலாமே !!