Tuesday, January 16, 2018

மகன் தந்தைக்கு ஆற்றும் . . . .

ஒரு பிரபல முதியோர் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டங்களை  சில புகைப்படங்கள் மூலம் முகநூலில் பார்க்க நேர்ந்தது .

சில இளம் முதியோர்கள் அரிதாரம் பூசி கண்ணன் வேடமிட்டு குழலூதிக் கொண்டிருந்தனர்

ஒரு பெண்மணி ஏதோ வேடத்தில்  நடித்துக் கொண்டிருந்தார்

நடக்க முடியாத சிலர் முன்வரிசையில் அமர்ந்து கை தட்டிக் கொண்டிருந்தனர்

இன்னும் சிலரின் முகத்தில் இருந்த ஏக்கம்- நன்றாகத் தெரிந்தது.

ஆனால் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு சின்ன சம்பிரதாயத் சிரிப்புடன் இருந்த முகங்கள் மனதை பிசைந்தது . கண்டிப்பாக அந்த துக்கத்தின் காரணத்தைக் கண்டு பிடிக்க நோபல் பரிசோ இல்லை பத்மா விருதுகளோ தேவையில்லை . கூட்டத்திலுருந்து  சற்றே  ஒதுங்கி மற்றவர்களுடன் பட்டும் படாமலும் அமர்ந்து ஒரு கடமைக்காக கை தட்டும் பொழுதே தெரிந்தது அவர்கள் இந்த இல்லத்திற்கு சமீபத்தில் வந்தவர்கள் என்று .

ஏக்கம் எதற்கு -
-  குடும்பத்துடன் கொண்டாடிய போன வருட பொங்கலை  பற்றியா?,
-   தன் மகன் சிறு வயதில் பொங்கலன்று செய்த லூட்டி நினைவுகளாலா?
 - நகரின் அந்தக் கோடியில் புது வீட்டுக்கு குடி போயிருக்கும் மகன் என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற நினைவினாலா ....

சொல்ல முடியவில்லை  ! அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.

இப்படிப் பதைக்கும் முதிய உள்ளங்களை தனியே தவிக்க விட்டு தான் மட்டும் தன் இளம் மனைவியுடன்  தனிக்குடித்தனம்  சென்றிருக்கும் மகனின் மன நிலை என்னவாயிருக்கும் -  இருதலைக்கொள்ளி எறும்பா இல்லை விட்டது தொல்லையா ?

இப்படிப்பட்ட  மகனைப் படிக்க வைக்க அப்பா அலுவலகத்திலிருந்து  பின்னிரவில் சைக்கிள் மிதித்ததற்க்கும், அம்மா தையல் மிஷினுடன் ஒன்றிப் போனதற்க்கும் ஒரு அர்த்தமே இல்லையா ?

மாதம் அனுப்பும் முதியோர் இல்லக் கட்டணம் தான் எல்லாவற்றுக்கும் பதிலா , கைமாறா ?

தீபாவளியன்று பட்டாசு பொறி பட்டவுடன் துடித்துப் போய் நான் பற்றிக் கொண்ட , கன்றிப் போன அந்த கை விரல்கள் என் வலிக்கும் முழங்காலுக்கு தைலம் தடவ வராதா ?

படிக்கும் பொழுது இரவில் தூக்கம் வராமலிருக்க டீ போட்டுக் கொடுத்த அம்மாவுக்கு அதே போன்ற ஒரு நள்ளிரவில் மூச்சிரைத்தால் அடுத்த வீட்டுக்காரரோ அல்லது 108ஓ தான் ஆபத்பாந்தவனோ ?

நிற்க முடியாமல் ஒரு பக்கம் கைத்தடியும் அந்தப் பக்கம் மற்றோரு முதியவரும் தாங்கிப் பிடிக்க நின்று கை தட்டிக் கொண்டிருந்த அந்தப்           பெரியவரின் நமுட்டுச் சிரிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .

இந்தப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போழுது தொலைக்காட்சியில் தோன்றிய தினமும் ஒரு குறள்  - "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல் "  என்பதன் பொருள்  "மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.. " என்று விளக்கி வணக்கம் சொல்லுமுன் சிரித்தது என்னைப் பார்த்தோ என்று நான் நினைத்தது ஒரு பிரமையோ ?

Thursday, January 11, 2018

மானசீக திவ்ய தேச தரிசனம்

பல வருடங்களுக்கு முன்னமேயே மயிலாப்பூரை ஒரு 'happening place' என்று சொல்வர் என் நண்பர்கள் சிலர். மயிலையில் தான் சில சபாக்களில் நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருக்க, நடனங்கள் ஒரு புறம் அரங்கேற, அள்ளித்  தெளித்தாற் போல் மயிலை முழுதும் பரவிக் கிடைக்கும் கோவில்களில் உபன்யாசங்களும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளும் களை கட்டி ரசிகர்களை எங்கு போவது என்று முடிவு செய்ய முடியாமல் திணறும் காட்சிகளை வெகு சாதாரணமாக பார்க்க முடியும்.

இருபது வருடங்களுக்கு முன் நிலவிய அந்த நிலை இன்றும் - தொலைக்காட்சி,  உள்ளங்கையில் திரைப்படம், வலைத்தளங்கள் போன்ற கவர்ச்சிகளூடும் தொடர்ந்து இருப்பது வியக்க வைக்கும் சமாச்சாரமே. ஆனால் லஸ் கார்னரில் இருந்து கொண்டு பல நாட்கள் பிரயத்தனப்பட்டு பார்க்க வேண்டிய திவ்ய தேசங்களை மாதம் நான்காக இக்காலத்துக்கு ஏற்ப சுலப தவணைகளில் கொடுப்பது என்பதை நம்புவது கொஞ்சம் கடினமே . இதைத்தான் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமி  கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்துடன் இணைந்து  சில காலமாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் நாகேஸ்வர ராவ் பூங்கா அருகிலுள்ள ஒரு சிறிய, ஆனால் அழகிய அரங்கில் பொது மக்களை வரவேற்று விடா ப்பிடியாக கையில்  சுடச்சுட   ஒரு கோப்பை தேநீரையும் கொடுத்து,  இலவசமாக மூன்றோ அல்லது நான்கு திவ்ய தேசங்களுக்கோ  ஞான திருஷ்டியிலேயே அழைத்து செல்கிறார்கள்.

இந்த திவ்ய தேச விருந்துக்கு நடுவே  இங்கு நடக்கும் மற்றுமொரு   போட்டியிலும் மக்கள்  திணறுகிறார்கள்.  ஆம் , ஒவ்வொரு திவ்ய தேசத்தின் கதையையும் சிறப்புகளையும் தகுந்த ஆதாரங்களோடு முனைவர் சுதா சேஷய்யன் விளக்க அந்தந்த திவ்ய தேசங்களின்  பெருமை சொல்லும் பாடல்களையும் சுத்தமான கர்நாடக இசையாக  பக்க (கா) வாத்தியங்களுடன் கொடுக்கும் திருமதி வசுந்தரா ராஜகோபால் அவர்களின் குரல் வளம் 'சபாஷ் சரியான போட்டி' என்று கண் மூடி அனுபவிக்க வைக்கிறது.


இன்று நடந்த சொற்பொழிவில் எப்படி :

  • அரிமேய விண்ணகரம் என்ற திவ்ய தேசத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கும் பொழுது தன் சுண்டு விரலில் அம்மா போட்ட ராக்ஷா ரஸம் (இக்கால நகப்பூச்சு)  அழிந்து போய்விட்டதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டது ; 
  • திருவண் புருடோத்தமன் மக்களுக்கு நன்மை அளிக்க, தான் பழியைச் சுமந்தது, மற்றும் அழும் குழந்தைக்கு அன்னை பராசக்தியே நேரில் வந்து பாற்கடலையே பாலாகக் கொடுத்து பசியை தீர்த்தது ; 
  • திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய தேச விஜயத்தால் உலகையே ஆளும் வாய்ப்பும் கிட்டும் (இன்னும் நம்ம உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு  இது தெரியாது போல! ) ; 
  • திரு அனந்த புரம் என்ற திருவனந்தபுர பெருமாள் 12000 சாளக்கிராமத்தை மேல்  சயனித்திருப்பது  
        போன்ற அருமையான செய்திகளை எளியவர்களுக்கும் புரியும் படியான சொற்களில் உரைத்த மருத்துவருக்கு எவ்வளவு ஷொட்டு கொடுத்தாலும் மிகையாகாது . இருந்தாலும் அவருக்கு ஈடு கொடுத்து தேனாய் இசைத்த  வசுந்தரா அவர்கள் மிக அருகிலே அதே உயரத்திலேயே இருப்பது நமக்கு இரட்டை விருந்து .

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நான் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த உபன்யாச உரையை அனைவருக்கும் பகிர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்,  இதுவரை பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களைக் பார்த்து விட்டதாகவும் இன்னும் மீதமிருக்கும் விண்ணுலகில் உள்ள இரண்டு   திவ்ய தேசத்துடன் இந்நிகழ்ச்சி முடிவடையும் என்று அறிவித்தது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

ஆனால் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இது போன்ற சிறந்த சொற்பொழிவுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கும் திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகேடமியால் சும்மா இருக்க முடியாது என்றே தோன்றும் எனக்கு  . கூடிய விரைவில் மற்றுமொரு விருந்தை படைக்க அந்த பெருமாளே  அவர்களுக்கு  அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்த நல்ல உள்ளங்களை  வாழ்த்துவதில்  எந்த தயக்கமுமில்லை !

Sunday, January 7, 2018

இடது பதம் தூக்கி ....



போன வருடம் ,  2017ம் ஆண்டு, நவ கைலாயத்தில் தொடங்கி , நவ திருப்பதிகளையும் வலம் வந்து பின் வாரணாசி , மஹாகாலேஷ்வர் , ஓம்காரேஷ்வர் ஆகிய  ஜோதிர்லிங்க ஸ்தல விஜயங்களிலிருந்து இன்னும் மீளாத நினைவுகளூடே , புதிய  2018 ஆண்டை ஆருத்ரா தரிசன சிறப்பு சுற்றுலாவுடன் கிளம்பியது வரப்போகும் பொங்கலை முன்கூட்டியே வரவழைத்து  கரும்பைச் சுவைத்தது போல் இனிக்க,  புத்தாண்டு தினத்திலேயே பயணப்பட்டு மறுநாள் அதிகாலையில்  இராமேஸ்வரத்தில் வந்திறங்கியது ஒரு சிறிய குழு.

நாள்-2 (02-Jan-2018)

புதிய ஆண்டின் முதலிலேயே கிடைக்கவிருக்கும் தரிசனங்களை நினைத்து மனம் குதூகலித்தாலும் நடந்த விஷயங்களோ கொஞ்சம் தயங்க, கலங்க வைத்தது.  வழக்கமாக கிடைக்கும் பிரத்யேக அறை கிடைப்பதில் இருந்த சிரமம்,  கிடைத்த இடத்திலும் சரியாக வெந்நீர் கிடைக்காமல் ,  கொடுக்கப்பட்ட அறையிலும்  மின்சாரம் துண்டிக்கப்பட , கொஞ்சம் தொண்டை தண்ணீரை செலவிட்டபின் சோழிகள் சரியான கட்டங்களில் விழ - ஒரு புதிய அனுபவமாகத் தான் தொடங்கியது ஆண்டின் முதல் சுற்றுலா .

Rameswaram Agni Theertham
இருந்தும் பயணங்களில் இதெல்லாம் சகஜம் - ஓஹோ இதுதான் பயணத்தால் கிடைக்கும் அனுபவங்களோ என்று மனதை தேற்றிக் கொண்டு சிறிது அதிகமான பரபரப்புடன் காணப்பட்ட இராமேஸ்வரத்தின் கடலில் அக்னி தீர்த்த குளியலுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள் விறுவிறென்று திரும்பி பார்ப்பதற்குள் 22 தீர்த்த ஸ்நானங்களுடன் முடிவடைந்திருந்தது !

Rameswaram
எவ்வளவு கூட்டமிருந்தாலும் தேர்ந்தெடுத்த சரியான வழிகாட்டிகளால் துரித வழிகள் காட்டப்பட்டு, பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்பட,  ஸ்நானங்கள் முடிந்த குறைந்த நேரத்திலேயே ஒரு திருப்திகரமான இராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் தரிசனம் முடிந்தபின் , தங்கி இருந்த ஹோட்டலின் அருமையான பொங்கல் வடை காலை உணவு பதைத்திருந்த மனதை அமைதிப் படுத்த , குளித்த சுகமும் சேர்ந்து கண்ணை அழுத்த ஒரு சுகமான பயணத்திற்குப் பின் சென்றடைந்தது உத்திரகோச மங்கை,   இந்தப் பயணத்தின் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட நடராஜரின் மரகத மேனி தரிசனம்
Utharakosa Mangai Natarajar 
இதன் சிறப்பு இங்குள்ள மரகத நடராஜர் வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்க, வருடத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தின்  முதல் நாள் மட்டும் சந்தனம்  களையப்பட்டு , நள்ளிரவு அபிஷேகத்திற்குப்பின் மறுபடியும் சந்தனம் கொண்டு மூடப்படுவது தான். ஆகையால் இந்த சந்தன காப்பு இல்லாத மரகத தேகத்துடன் உள்ள தில்லை அம்பலத்தானைக்  காண பல லட்சங்கள் பேர் கொண்ட கூட்டம் இங்கு சேர்வது வழக்கம். நாங்களும் அந்த ஆசையுடன் தான் இந்தச் சுற்றுலாவில் சேர,  ஒரு புரிதல் குழப்பத்தினால் எங்களின் கணக்கு பிசகி நடராஜர் மீண்டும் சந்தன அங்கி பூசிக் கொண்ட பிறகு தான் பார்க்க முடிந்தது , பலரும்  ஜீரணிக்க, விழுங்க சிரமப்பட்ட ஏமாற்றமே.

இந்த ஒரு நாளில் மட்டும் பல லட்ச பக்தர்கள் கூடும் இந்நாளுக்கு இந்த கோவில் நிர்வாகத்தின் தயார் நிலை ஏமாற்றத்தை கூட்டியது. நாங்கள் சென்ற நண்பகல் நேரத்தில் அநேகமாக எல்லா கூட்டங்களும் குறைந்திருந்தது நூற்றுக்கும் குறைவான பக்தர்களே வந்தாலும் , இந்த புகழ் பெற்ற நடராஜரைக் காண பல நூறு மைல்களுக்கு அப்பாலிருந்த்தும் வந்த பக்தர்களுக்கு அங்குள்ள பந்தோபஸ்துக்கு வந்திருந்த காவலர்கள் , தத்தம்  சீருடைலேயே இருந்தாலும் விபூதி பிரசாதங்களைக் கொடுத்தது கோவில் நிர்வாகத்தின் மெத்தனமா , அங்கு இருக்கும் குருக்கள்களின் போதுமென்ற மனத்தால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப் பட்ட அலட்சியமா என்று புரியாமல் குழம்பினாலும் , பக்தி சிரத்தையுடன் குளித்து வெறும் வயிற்றுடன் நடராஜரைக் காண வந்த பக்தர்களை இதை விட அவமானப் படுத்த முடியுமா என்ற கேள்விதான் பிரதானமாக தலைதூக்கிக் காணப்பட்டது. கோவிலுக்கு ஒரு நாளில் வரும் சில லட்ச மக்களை எப்படி சமாளித்து திருப்தியாக அனுப்ப முடிவது என்று தெரியாமல் இருந்தால் பல நாட்களிலும் பல லட்சம் பக்தர்களை சமாளிக்கும் திருப்பதி போன்ற நிர்வாகங்களிலுருந்து கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே.  கடவுளுக்கு மிக அருகாமையில் பணி புரியும் ஒருவர் பிரகாரத்திற்கு வெளியிலேயே நின்று கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் நடராஜருக்கு சாற்றப்பட்ட சந்தனம் வைத்திருந்த கையை 'மற்ற கையையும் கவனிக்கப்படாமல்'  நீட்ட மாட்டேன் என்று சொன்னதிலேயே புரிந்தது இவர்களின் சிரத்தையும் பக்தர்கள் மேல் கொண்ட அக்கறையும்.  ஆண்டவன்  அருகாமையிலேயே இப்படி பணம் பத்தும் செய்யும் பொழுது ஓட்டுக்காக வறுமையை தற்காலிகமாக சமாளிக்க , நியாய படுத்த முடியாத செயல்களை செய்யும் மக்களை மட்டும் கண்டு ஏன் கேள்வி          கணைகள் பாய்கின்றன என்று நினைக்க வைத்தது.

UtharakosaMangai Temple
தெய்வாதீனமாக பாரத மக்களின் இயற்கையிலேயே சமாதானப் படுத்திக் கொள்ளும் சாத்வீக குணத்தினாலும் , கொடுப்பினையின் பால் கொண்ட அதீத நம்பிக்கையினாலும்,  மேலும் சீக்கிரமே விக்கெட்டுகளை இழந்தே பார்த்து பழக்கப்பட்ட கிரிக்கெட் மாட்ச் அனுபவத்தாலும் சுதாரித்துக் கொண்ட குழு அருகில் எழும்பிக் கொண்டிருக்கும் புதிய வராஹி அம்மன் கோவிலைக் கண்டு, பதைத்திருந்த மனதை திடப்படுத்திக் கொண்டு  எதுவுமே நடக்காதது போல் விரைந்தது ஏற்கனவே தாமதிக்கப் பட்ட மதிய உணவை நோக்கி !


RameswaramVaarahi Amman
மதிய உணவில் ஆசுவாசப்பட்ட மனதை மேலும் சாந்த படுத்தியது  சேதுக்கரையில் நிலவிய அமைதியான சூழ்நிலை. இலங்கைக்கே பாலம் அமைத்து கடக்க முடியாதென்று நினைத்த தடைகளையும் உடைத்தெறிந்த இந்த இடத்தின் மகத்துவவமும்,  அதை செய்து காட்டிய ஸ்ரீ ராமரின் அனுக்கிரகமும்   இந்தக் குழுவிற்கு இனிமேலும் சோதனைகள்வர விடாது செய்யும்  என்ற நம்பிக்கையுடன் முன்னேறியது பக்தர்கள் குழு .

Sethukkarai
அடுத்துச் சென்ற திருப்புல்லானி திவ்ய தேசத்தில் லட்சுமண சுவாமியின் மடியில் தலை வைத்து லேசாக கண் அயர்ந்த ஸ்ரீஇராமரையும்  அருகே வாய் பொத்தி நிற்கும் அனுமனையும் , சரணாகதி அடைந்த சமுத்திர ராஜனையும்  கண்டதும் இவர்களை விடவா நமக்கு சோதனை வந்து விடப் போகிறது என்று அமைதி அடைந்தது மனது. இன்று நடந்த சம்பவங்களுக்கும் சோதனைகளுக்கும்  எனக்கு இவ்வளவும் தேவையாகத்தான் இருந்தது.

Thiruppullaani
ஒவ்வொரு முறையும் தீர்த்த ஸ்நான ஸ்ரார்த்தங்களுக்குப் பிறகு விரைந்து கிளம்பியதால் ராமேஸ்வரத்தில் உள்ள சில அரிய இடங்களை காணாமல் கோட்டை விட்டது இம்முறைதான் தெரிய வந்தது .  நாகநாதர் கோவிலுக்குப் பிறகு போன துளசி பாபா மடம் என்ற இடத்தில் சில மிதக்கும் கற்களைக் காட்டி கோவில் கட்ட தகுந்த நன்கொடை கொடுத்தால் ஸ்ரீ இராமர் கையால் தடவிக் கொடுத்த ஓர் கல் இனாம் என்று சொன்னவுடன் 'தோ பார்றா' என்று நடையைக் கட்டினோம்.


அருகிலேயே உள்ள ஸ்ரீ கிருஷ்ண ப்ரணாமி மங்கள் மந்திர்என்ற பளபளப்பான கோவிலின் மாடியில் உள்ள மற்றமொரு பார்க்க வேண்டிய இடம் ஒரு அருங்காட்சியகம் .  பின் நிறைந்த மனத்துடனும் காலியான வயிற்றுடனும் ஆர்ய பவன் என்று பெயரைப் பார்த்து ஏமாந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களை எப்படி அதிருப்தி படுத்துவது என்பதை  விளக்கமாகக்  கற்றுக் கொடுத்தார்கள்.

Sri Krishnan Parnami Mangal Mandir Museum
நாள்-3 (03-Jan-2018)

ஒரு சுக உறக்கத்திற்குப்பின் அதிகாலையில் கிளம்பி இயற்க்கைச் சீற்றத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமான தனுஷ்கோடியைக் காண விரைந்து அதற்க்கு முன் தரிசித்தது அழகிய கோதண்டராம சுவாமி கோவிலை. விபீஷணருக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் செய்ததாக நம்பப் படும் இது ஓரு சிறிய ஆனால் அழகான பார்க்க வேண்டிய இடம்.

Dhanushkodi, Kodhanda Rama Swamy temple
போன வருட மார்ச் மாதத்தில் சென்ற போது சாலை போட்டு முடித்தும் எந்த 'மாண்புமிகு' விற்கோ காத்திருந்த சாலை நல்ல வேளையாக  திறக்கப் பட்டிருந்ததால் ஒரு முதுகை வளைக்கும் பயணம் தவிர்க்கப்பட்டு தனுஷ்கோடி கடற்கரையை அடைந்து சில போட்டோக்களை எடுத்துக் கொண்டு திரும்பிய சில நேரத்தில் ராமேஸ்வரத்தை விட்டு கிளம்பியது அந்த ஜாலியான குழு.

Dhanushkodi Beach
முன்னதாக ஹோட்டலில் காலை உணவுக்காக சென்ற பொழுது நடந்த சம்பவம் ஹோட்டல் என்ற நாவலை நினைவுப்  படுத்தியதில் கதாசிரியர் ஆர்தர் ஹெய்லியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இரண்டு நாள் பயணத்தில் அநேகமாக எல்லோரும் ஒருவரை ஒருவர் பரிச்சய படுத்திக் கொள்ள  சில  நட்பு வட்டங்கள் உருவாகின.

அடுத்து சென்ற இராமர் பாதம் என்ற சிறிய மலையிலுருந்து தெரியும் அருமையான காட்சிகள் புகைப்பட பிரியர்களுக்கு ஒரு விருந்து .

Panoramic view from Ramar Padham
இராமேஸ்வரத்தில் புதிய சுற்றுலா  மையமாக உருவெடுத்து வரும், அநேகமாக அனைவரும் மதிக்கும் முன்னாள் ராஷ்டிரபதியும்  விஞ்ஞானியுமான  அப்துல் கலாம் என்ற மாமனிதரின் நினைவிடத்திற்குத்தான், அடுத்து விரைந்தது.  மிக எளிமையாக அதே நேரத்தில்  நேர்த்தியாகவும் இருந்த நினைவிடம் வருங்காலத்தில் இன்னும் மிகப் பெரிய கூட்டங்களைக் காண விருப்பது என்னவோ உண்மை .










அடுத்து விரைந்த தேவிபட்டினம் என்ற தலத்தில் நாங்கள் அநேகமாக நண்பகலில் சென்றதால் ஐந்து நவபாஷாண விக்ரகங்கள் மட்டுமே  தெரிந்தன மற்றவைகளெல்லாம் ஏறி வரும் நீர் வரத்தால் மறைந்தே இருந்தது

Devipattinam
அநேகமாக எல்லோரும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருந்து , மக்கள் விநியோகித்த இனிப்பு மற்றும் காரங்களை முடித்தபின்னும்  போய்க்கொண்டே இருந்த வாகனம் ஓட்டுனரின் ஒரு புத்திசாலித்தனமான ஐடியாவினால் கிடைத்த போனஸ் காளையார் கோவில். ஐந்து பிரதான சந்நிதிகளைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான கோவிலில் இருந்த குருக்களின் மனதும் அதே அளவில் பறந்து இருந்ததால் நிதானமாக எல்லா சன்னதிகளிலும் தரிசன ஆரத்தி மிகுந்த திருப்தி அளித்தது.

Kalaiyar Koil
மாற்றிய பாதையில் கிடைத்த மற்றோரு போனஸ்தான் நாட்டரசன் கோட்டை. இந்த ஊருக்கும் எனக்கும் ஒரு ஐம்பது வ்ருடங்கள் தாண்டிய நினவுத் தொடர்பு இருந்ததால் இந்த மாற்று ஏற்பாடு எனக்கு மிகுந்த  மகிழ்ச்சி அளித்தது. இந்த ஊரின் கண்ணாத்தாள் கோவில் கண் நோய்களை தீர்ப்பதில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது மட்டுமல்லாது இக்கோவிலின் எதிரில் உள்ள குளத்தை குடிநீருக்கு மட்டும் உபயோகப்படுத்தும் இந்த ஊர்க்காரர்களின் கட்டுப்பாடும் வியக்க வைக்கும் ஒரு செயல் .

Nattarasankottai
நம் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் உலகிலேயே மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாக இருந்தாலும் சுற்றுலாத் துறையில் நாம் இன்னும் மக்களின் நம்பிக்கையைப் பெறாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று போதிய தகவல்கள் வேண்டிய நேரத்தில் இல்லாதது . ஒரு பிரசித்தி பெற்ற இடத்துக்குப் போவதற்கு முன் அநேக பயணிகள் அந்த  இடத்தின் பெருமை, அது திறந்து இருக்கும் நேரம், அந்த இடத்துக்கே உரித்தான சம்பிரதாயங்கள், அங்கு அனுமதிக்கப் படும் - முக்கியமாக அனுமதிக்கப்படாத- உடைகள், உடைமைகள் இப்படிப்பட்ட சில தகவல்கள் தான். ஆனால் நான் சமீபத்தில் சென்ற கேரள திவ்ய தேசங்கள் சிலவற்றிலும் திருக்கோஷ்டியூர் போன்ற இடங்களிலும் இப்படிப்பட்ட முக்கிய தகவல்கள் இல்லாத காரணங்களால் பயணிகள் படும் பாடு சொல்லி மாளா .  இத்தனை தடைக் கற்களையும் மீறி மக்கள் வருகிறார்களென்றால் அது அவர்களின் பக்தியால் ஏற்பட்ட வைராக்கியமே தவிர சுற்றுலாத் துறைக்கோ கோவில் நிர்வாகங்களுக்கோ இதில்  கொஞ்சமும் பங்கில்லை .

 திருக்கோஷ்டியூர் என்ற திவ்யமான தேசத்தை நாங்கள் சென்றடைந்த பொழுது அநேகமாக ஆறு மணி. சுவாமி புறப்பாடு நடக்க எல்லா ஏற்பாடுகளும் தெரிந்தும் அதற்க்கு ஏற்ப மக்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்தினாலும்  எப்பொழுது  தரிசிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. சிப்பந்தி ஒருவர் கொஞ்சமும் தயங்காமல் 'இன்று போய் தரிசனத்திற்கு நாளை வா என்றார்.  நகர மறுத்து ஒரு சின்ன வேலை நிறுத்தம் போல அடம் பிடித்தபின்தான் ஒருவர் வந்து -  சீருடை ஒன்றும் அணியாததால் அவர் கோவில் சிப்பந்தியா இல்லையா என்று சரியாக கணிக்க முடியவில்லை-  'கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லோருக்கும் தரிசனம் செய்து வைப்பதாகச்' சொன்னார் . ரங்கநாதரைப் போல்  நீண்டு பள்ளி கொண்டிருந்த பெருமாளை தரிசனம் செய்து வைத்து அதன் பின் ஒரு மிகக் குறுகிய பாதை வழியே -  ஒருவர் தான் செல்லலாம் - சில படிகள் ஏறி , அதன் பின் தவழ்ந்து சென்று மீண்டும் ஏறி , கோபுர உச்சிக்கு கூட்டிச் சென்று அங்குள்ள இராமானுஜரின் புராணத்தை  விளக்கியத்தைக் கேட்க  பக்தியால் சில ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

Narrow passage at Thirukoshtiyur
அந்த உச்சியில் நின்று இராமானுஜரின் பார்வையிலுருந்தே தெரிந்த அந்த வெள்ளை நிற வீட்டைப் பார்க்க இப்படிப்பட்ட  தரிசனத்திற்கு  எவ்வளவு சிரமப்பட்டாலும் தகும் என்று தோன்றியதும் உடையவருடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபீ  மறக்க முடியாத அனுபவம் . இங்கு 'அந்த யாரோ' மட்டும் வந்திராவிட்டால் நாங்கள் வீணாகத் திரும்பி இருப்போம் .

Selfie with the Saint
ஒரு சூடான காபிக்குப் பிறகு நாளின் கடைசி விஜயமாக திருப்பத்தூர் சிவன் கோவில் தரிசனம். கால பைரவருக்கு விசேஷமான இந்த பெரிய கோவில் ஆட்கள் இல்லாமல் அமைதி தரிசனமளித்தது நாள் முழுவதும் சுற்றிய கால்களுக்கு கொஞ்சம் சுகமாத்தான் இருந்தது .

Thiruppathur
சுற்றுலாவின் கடைசி இரவிலும் ஹோட்டல் கொஞ்சம் தன் பங்குக்காக பாடாய்ப் படுத்தி ஏ சி இல்லாமல் இரவு பத்து மணிக்கு மீண்டும் அறையை மாற்றி ..... நம்ம ஊருக்கும் வாடிக்கியாளர்கள் சேவைக்கும் ரொம்ப தூரம் !!

நாள்-4 (04-Jan-2018) 

அநேகமாக எல்லா இடங்களையும் பார்த்த கடைசி நாள் வழித்து வார்த்த தோசை போல் இருந்த சொச்ச மிச்சங்களைத்தான் பார்ப்பதாக இருந்ததால் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக எழுப்பப் பட்டோம். எல்லா இடங்களிலும் சிறிது சத்தமும் நிறைய பணமும் தான் வேலையை முடிக்க உதவுகிறது என்ற ஞானோதயத்துடன் கிளம்பினோம்.

முதலில் சென்ற கோவிலூர் சிவன் கோவில் அழகிய குளத்தினூடே உள்ள ஆழி மண்டபம், ராமேஸ்வரத்தை நினைவுப்படுத்தும் நீண்ட பாதைகள் என்றும் சிற்பங்களாலும் திகைக்க வைத்தது .

Koviloor
அருகிலேயே இருந்த குன்றக்குடி என்ற சிறிய மலை ஏறுவதற்குள் அனைவருக்கும் பௌண்டரிக்கு பந்தை  துரத்தியது போல் மூச்சு வாங்கியது  இப்படிப்பட்ட பயணங்களை வயது ஏறுவதற்குள் முடிக்க வேண்டும் என்று மீண்டும் நினவுப் படுத்தியது! பத்து ரூபாய் கொடுத்து ( பணம் கொடுத்து கிடைக்கும்  ஸ்பெஷல் தரிசனங்களை கோர்ட் தடைப்படுத்தியதாக ஒரு நினைவு - என் நினைவு சரிதானா?)  முருகனுக்கு கிட்ட போய் அதே கோரிக்கைகளை சொல்லிவிட்டு  பஸ் ஊழியர்கள் போல காத்திருக்க முடிவு செய்து திரும்பினோம்

Kunrakudi
பிள்ளையார்பட்டி அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகளின் எண்ணிக்கைகள் கொஞ்சம் பயமுறுத்தினாலும் கற்பக விநாயகர் ஏகாந்தமாய் உட்கார்ந்து கொண்டு திருப்தியாக காட்சி அளித்தது ஒரு எதிர்பாராத நிதான தரிசனம் .

Pillaiyarpatti
அப்புறம் தான் தெரிய வந்தது அங்கு வந்த வண்ண உடை அணிந்த பல பக்தர்கள் அருகாமையிலுள்ள இடங்களுக்கு கால் நடையாகவே சென்றிருப்பது. இந்த இடத்தில் சில பக்தர்கள் (அனைவரும் அல்ல)  செய்யும் ஒப்புக்கொள்ள முடியாத , நான் பார்த்த , செயல்களை குறிப்பிட வேண்டும். அநேகமாக எல்லோருமே தங்களை ஒரு தனிப் பிறவியாகவும் மற்றவர்களை  அற்ப பதர்கள் போலவும் நினைக்கிறார்களோ என்றெண்ணத் தோன்றும் அவர்களின் நடவடிக்கைகள்-  ரயிலில் அனைவரும் தூங்கினாலும் இவர்களின் கைபேசிலிருந்து உரக்க ஒலிக்கும் பக்திப் பாடல்கள் , ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களிலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பும் வழக்கும் - ஏன் என்று கேட்டதற்கு ஒரு முறை சுட்டெரிக்கப் பார்த்து விட்டு நகர்ந்தார், பல பேர் வரிசையில் நின்றாலும் இவர்களுக்கென்னவோ க்ரீன் சானலில் ஆண்டவன் விசா கொடுத்ததுபோல்  மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாமல் முந்தியடித்துக் கொண்டு முன்னேறுவர்  !! பக்திக்கு முன் சிறிது பணிவும் தேவை என்பதை உணர்ந்தால் சரி

வயிரவன் கோயில் என்ற நகரத்தாரால் பராமரிக்கப்படும் கோவில்  இங்குள்ள குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கிடையே அமைதியாக பல அற்புத சிற்பங்களுடன் காட்சி அளித்தது.

Vayiravan Temple
காரைக்குடிக்கே பிரசித்தமான கொப்புடையம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு நிகழ்ச்சியாக சிறுவர் சிறுமிகளூடே திருப்பாவை போட்டி நடந்து கொண்டிருக்க உச்சி கால தீபாராதனையுடன் அம்மனை தரிசித்தது ஒரு திருப்திகரமான அனுபவம்.

Koppudaiyamman temple
அன்னலட்சுமியின் மதிய உணவு தந்த தூக்கத்திற்குப் பிறகு சென்ற மாத்தூர் சிவன் கோவிலில் உயர்வு தரும் நந்தி சற்று உயரே சிம்ம பீடத்தில் இருந்தது முதன் முறையாக காணும் காட்சி .

Maathoor
Nandhi 
இலுப்பைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சிற்பங்களை ரசித்தபின் சென்ற நகரத்தார் கோவிலின் பராமரிப்பு பிரமிக்க வைத்தது.

Iluppakkudi
அருகிலேயே உள்ள யோக சனீஸ்வரர் ஆலயம் மிக சக்தி வாய்ந்ததாம்.

Yoga Saneeswarar Koil
 ஒட்டி இருந்த  108 பிள்ளையார் கோவிலின் விசேஷம் மேல் வரிசை  54 பிள்ளையாரும் வலஞ்சுழியாக இருக்க கீழ் வரிசை  அனைத்தும்  இடஞ்சுழி விநாயகர்கள்.

108 Pillayars
அரியக்குடி சிவன் கோவிலில் யாருமே இல்லாமலிருக்க அரியக்குடி பெருமாள் கோவில் புனரமைக்கப் படுவதால் பாலாலயத்தில் உள்ள பெருமாளின் தல வரலாற்றைச் சொன்ன பட்டரின் குரல் கேட்காத அளவுக்கு அருகிலிருந்த சில கும்பாபிஷேகக் கமிட்டி அங்கத்தினர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்.

Ariyakudi
எதிரில் இருந்த அருமையான  கோவிலில்  பிரத்யேக  நரசிம்மரை வணங்கி தலை நிமிர்ந்தால் பயண முடிவுக்கு ஆதரவளிப்பது போல நின்றிருந்த ஹனுமனை தரிசித்து காரைக்குடிக்கு கையசைத்து விடை கொடுத்தோம் !

Ariyakudi Narasimhar
 மூன்று நாட்கள்,  இருபத்து மூன்று கோவில்கள்,  சில சுற்றுலா தலங்கள் - இப்பொழுது நினைத்தால் மூச்சு வாங்குகிறது .

ஆனால் கண்ட காட்சிகள் தேனாய் இனிக்கிறது - என்றும்  இனிக்கும் !


இடது பதம் தூக்கி ஆடுபவனைக் காண வந்தவர்களையும் தரிசினத்திற்கும் சௌகரியமான அறைக்கும் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்ய வைத்ததும் அவன் செயலோ ?

இப்படிப்பட்ட திருத்தலங்களைக் காண  எந்த சிரமமும் எவ்வளவு காசும் செலவழிக்கலாம் - இருக்கும்போதே தூற்றிக் கொள்பவன் புத்திசாலி !!

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் பார்க்க வேண்டிய செட்டிநாட்டு திருத்தலங்களுக்காக  ஒற்றைக்கால் தவமும் தகும்