Sunday, December 24, 2017

மலைக்க வைத்த மலை நாட்டு திவ்ய தேசங்கள்

போன டிசம்பர் (2016) மாதத்தின் 'ஐந்து நாட்களில் நாற்பது சோழ நாடு திவ்ய தேச தரிசனத்தின்'  இனிய நினைவுகள் இன்னும் மறவாத நிலையில், ஸ்ரீ ஜானகி டூர்ஸ் அனைத்து கேரள மலை நாடு திவ்ய தேசங்களையும் நான்கு நாட்களில் பார்க்கப் போவதாக அறிவித்தவுடன் 'உள்ளேன் ஐயா' என்று கையைத் தூக்கி பந்திக்கு முந்திக் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இன்று , பயணம் முடிந்தவுடன் நினைவு கூர்ந்து பார்ப்பதில் பெருமையும் இனிமையும் மேலோங்கி நிற்கிறது .

கேரள விஜயம் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் போன்று அதற்க்கென்று நிறைய முன்னேற்பாடுகள் தேவை. அங்கு வழக்கமாக கிடைக்கும் கொட்டை அரிசியை சமாளிக்க வேண்டும் , கையில் விரலுடன் சேர்த்து எப்பொழுதும் குடையும் இருக்க வேண்டும். முக்கியமாக அதிகாலை எழுந்திருக்க  பழக்க வேண்டும் ஏனென்றால் அங்குள்ள அநேக கோவில்களை நான்கு மணிக்குத் திறந்து சீக்கிரமே நடை சார்த்தி , உம்மாச்சியை தட்டி தாச்சி தூங்க வைத்து விடுவார்கள்.  அதிகாலை இயற்கை உபாதைகளுக்கு கூடுதலாக ஒன்றிரண்டு மலை வாழைப் பழங்களை உள்ளே தள்ள வேண்டும் ; ஜானகி   டூர்சில் அந்த பயம் தேவையில்லை - ரமேஷ் அதிகாலை நான்கு மணிக்கு கூட சுடச் சுட பில்டர் காபி கொடுத்து விடுகிறார் !! இப்படி அவரவர்கள் தங்கள் உடல்கூற்றுக்கு ஏற்ப தயார் செய்து கொள்வது முக்கியம் . ஆனால் இருந்த கழுத்தளவு வேலைகள் நடுவே மேற்கூறிய எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தைரியமாக திருவனந்தபுரம் மெயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் வரவேற்றது அருமையான இட்டிலிகளும் தயிர் சாதமும் !

சரியாக ரயில் டிக்கெட் கூட வாங்காத சில கருப்பு உடை அணிந்த பக்தர்கள் ( ஒரே படுக்கையில் விளக்கு அணைத்தவுடன் இருவர் படுத்திருந்தனர்) , தாங்கள் என்னவோ ரயிலையே விலைக்கு வாங்கி விட்டதாக நினைத்து போட்ட ஆர்ப்பாட்டம் . . . . மசாலா நெடி எல்லோரையும் கைக்குட்டையை நோக்கி ஓட வைத்த தின் பண்டங்கள் , மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் ஐந்து பேர், எல்லோரும் படுத்து விளக்கை அணைத்தவுடன் செல் போனில் உரத்த ஒலியில் பக்தி பாடல்கள் - இந்த எல்லா உபத்திரவங்களை மீறி எதோ தூங்கி காலை ஐந்து மணிக்கு திருச்சூரை அடைந்தவுடன்  குளிர்ந்த காலையும்  சிரித்த முகத்துடன் வரவேற்ற வேன்  ஓட்டுனரும் நம்பிக்கையை  கூட்டினர் .

நாள்-2 (20-Nov-2017) :

அருமையான ஹோட்டலில் ஒரு நல்ல வெந்நீர் குளியலுக்குப் பின் துவங்கிய யாத்திரை இரிஞ்சாக்குடா என்ற நாலம்பலங்களில்  ஒன்றான   க்ஷேத்திர விஜயத்துடன்தொடங்கியது . நாலம்பலம் என்பது கேரளத்தில் ஸ்ரீ ராமர் சகோதரர்களுக்கான உள்ள நான்கு கோவில்கள். இதில்   இரிஞ்சாக்குடா   பரதன் கோவில்.

IRUNJALAKUDA
அடுத்து போனது சத்ருக்ன சுவாமியின்  பாயாமல்   என்ற திருக்கோவில்.  அநேகமாக எல்லா கேரளக் கோவில்களை போல் இதுவும் படு சுத்தமாக , அமைதியுடன் ஒரு ரிசார்ட் போன்ற அமைப்பின் நடுவே அழகிய பெருமாள் அரையிருட்டில் பல கேரள விளக்குகளின் ஒளியூடே அற்புதக் காட்சி அளித்தார்.

PAAYAAMMAL
பின் விரைந்த ஸ்ரீ ராமரின் த்ரிபரையார்   என்ற கோவில் முகப்பே வெகு அழகாக நம்மை வரவேற்கும். ஒரு திரைப்பட செட் போன்ற வண்ணக் கூரையைத் தாண்டியவுடன் வெகு பவ்யமாக வணங்கும் ஹனுமனை ஸ்ரீ இராமரின் பார்வையிலேயே கருணையைப் பொழியும் ஒரு சித்திரம் பக்தியை பன்மடங்கு தூண்ட வல்லது.  வெடி வெடித்து நேர்த்திக்கடனை செலுத்தும் இத்தலத்தின் பின்புறம் ஓடும் ஆறு ஒரு அருமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது. கோவிலுள் ஜொலித்த கேரள விளக்குகளும் , வண்ணக் குடையும் ஆற்றைச்சுற்றி நிற்கும் தென்னைகளும் , நீங்கள் கேரளத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யும்.

TRIPAAYAR
அதி வேகமாக வந்தும் வடக்குநாதன் கோவில் மூடி விட்டதால் அதன் எதிரே உள்ள 'படான்ஸ்' உணவகத்தின் மதிய உணவு கொடுத்த கோழி தூக்கத்திற்குப் பிறகு சென்றது 'திருநாவாயா' (1) என்ற திவ்ய தேசம். பரதப்புழா  என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கும்  நவமுகுந்தனின்     இந்தத் திருக்கோவிலின் அழகு இங்கு உங்களை புகைப்படம் எடுக்காமல் நகர விடாது .

THIRUNAVAYA
கார்த்திகை இருள் அதி விரைவில் சாலைகளை கவர்ந்து கொள்ள பின் சென்ற  ' திருவித்வக்கோடு ' (2)  , ஒரு மிகப் பழமையான திவ்ய தேசம். இன்னும் சில நிமிடங்களே மூடுவதற்கு இருந்த நிலையில் துளி ஒளி கூட இல்லாத நிலையிலும் அநேகமான மூத்த குடிமக்களே இருந்த எங்கள் குழு அந்த முக்கால் இருட்டிலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் விரைந்ததற்கான ஒரே காரணம் இந்தச் சூழலில் அமர்ந்திருக்கும் பெருமாளை தரிசித்தே தீர வேண்டும் என்ற வைராக்யமாகத் தான் இருக்க வேண்டும்.  நகுல சஹாதேவனுக்கு சந்நிதிகள் உள்ள , முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஒரு உகந்த இடமாகக் கருதப்படும் இந்தத் திருத்தலத்தில் , நாம் அதி வேக வேனில் வந்தும் கஷ்டப்பட்டதாகப் புலம்பும் பொழுது அந்தக் காலத்தில் நடந்தே வந்து மங்களாசாசனம் பாடிய குலசேகராழ்வாரை நினைத்து  கை கூப்பாமல்  இருக்க முடியவில்லை .

THIRUVITHVACODE
நாள்-3 (21-Nov-2017) :

நடந்த நடைக்கும் கவர்ந்த மைல்களுக்கும் தங்க வைத்த இடத்தின் ஏ.சி கொடுத்த சுகத்தில் தூக்கம் தானாக வந்து மட்டையாகிப் போக,  நான்கு மணி அலாரம் தான் நித்திரையைக் கலைக்க உதவியது. அதிகாலை தரிசனமாக 'திருமூழிக்குளம்' (3) என்ற லட்சுமண சுவாமி கோவில் திவ்ய தேசமட்டுமின்றி நாலம்பத்திலும் ஒன்றாகும். அதிகாலையிலேயே போனதால் கேரளக் கோவில்களுக்கே உரித்தான 'சீவேலி' என்ற பிரதக்ஷணங்களையும் காண முடிந்தது. பெரிய கோவிலின் சுற்றி உள்ள நூற்றுக் கணக்கான விளக்குகளை எப்பொழுது, எப்படி ஏற்றுவார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

THIRUMOOZHIKULAM
அடுத்துச் சென்ற 'திருக்காக்கரை' (4) என்ற மக க்ஷேத்திரம் இரண்டு  கோவில்களை கொண்டது. முகப்பில் இருந்த வாமன அவதார சிலையும் கோவிலைச் சுற்றி போடப்பட்டிருந்த வண்ண மயமான தரையும் , காலை நடை பயிற்சி போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களின் தாபத்தைத் தணித்து அழகிய புகைப்படத்தையும் ஞாபகார்த்தமாக கொடுத்து அனுப்பி வைத்தது.

THIRUKAAKARA
பாஷை பரிச்சயமில்லாத தேசத்தில் வண்டி ஓட்டுனரின் 'இதோ இதோ' என்ற உறுதியை நம்பித்தான் பயணிக்க வேண்டி இருக்கிறது . ஓட்டுனரின் இந்த உறுதி மொழி இம்முறை சற்றே ஏமாற்றத்தை அளிக்க விரைவாக சிந்தித்த பயண மேலாளர் விடாமல் பிடிவாதமாக கூடவே ஓடி வரும் சிறிய ஓடையின் அழகில் மயங்கி வண்டியை நிறுத்தி ஆலப்புழாவிற்க்கே பிரபலமான  ஒரு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தது அன்னாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் !  மிகக்  குறைந்த செலவில் ஏறக்குறைய ஒரு மணி நேர படகு சவாரி அனைவரையும் பசி மறந்து ரசிக்க வைத்தது.  கேரளத்துக்கே உரிய தென்னைகள் தலை குனிந்து ஓடும் தண்ணீரை முத்தமிட முயல , அமைதியாக நீந்திக் கொண்டிருந்த வெள்ளை நாரைகளும் சில கருப்பு வாத்துகளும்  பயந்து  சிறகடிக்க  குழுவினர் பாய்ந்து பாய்ந்து கேரள அழகை கைப்பேசியின் சொல்ப மெகா பைட்டுகளில் முடக்க முயன்று வெற்றியும் பெற்றனர் .

ALLEPPEY_BOATING
அற்புத படகு சவாரிக்குப்  பின் விரைந்த திருக்கொடிதானம் (5) என்ற திவ்ய தேசம் ஒரு நல்ல சாப்பாட்டிற்கு பின் சிறிது கண் அசர முயன்றவர்களை ஒரு தீடீர் மழையால் எழுந்து அமர வைத்தது . பெருமாளே வந்தாலும் கேரளக் கோவில்கள் உரித்த நேரத்தில் தான் திறப்பார்கள்.

THIRUKADITHAANAM
பொறுமையாக இருந்ததற்கு கிடைத்த அறிய பரிசான  அருமையான  சாயரக்ஷை தரிசனத்திற்குப் பிறகு கிடைத்த ரமேஷின் சுடச் சுட காபி மக்களை மட்டும் ஊக்குவிக்காமல் ஓட்டுநரையும் உசுப்பியதில் ஆக்சிலேட்டர் மேல் வைத்த காலை எடுக்க மறந்ததால் ஆரண்முழா பார்த்தசாரதி (6) கோவிலான அடுத்த திவ்ய தேசத்தை விரைவாகவே அடைய முடிந்தது.

ARANMULA
இந்த ஓட்டம் போதாது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த திவ்ய தேசமான  திருவள்ளா (7) மூடி விடுவார்கள் என்று பயமுறுத்தியதால் எவ்வளவு விரைந்தாலும் ஒரு சிலரே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. சீவேலி தொடங்கியதால் அங்கு இருந்த பட்டர் அறிவுரையின் பேரில் பொறுமையாக காத்திருந்ததில் மீதமிருந்த சிலரும் தரிசனம் செய்து கொள்ள அனைவரும் திருப்தியாக வாசலில் இருந்த தங்க தூண் அருகே சில புகைப் படங்களுக்குப் பின் சந்தோஷமாக மசால் தோசை சாப்பிட ஹோட்டல் திரும்ப முடிந்தது .

THIRUVALLA
நாள்-4 (22-Nov-2017) :

 திருவள்ளாவில் இருந்த ஹோட்டல் தங்குவதற்கு அருமையாக இருந்தாலும் அதிகாலையில் வெந்நீர் கொடுக்காமல் படுத்தி எடுக்க, சிலர் கிளம்ப வேண்டிய நேரத்திலும் துண்டைக் கட்டிக்க கொண்டு குளிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க நேரம் பறந்தது. கொடுத்த காலை உணவு நன்றாக இருந்தாலும் வெந்நீர் கடுப்பில் ஆளாளுக்கு கவுண்டரில் இருந்த நேற்றுத்தான் வேலைக்கு சேர்ந்திருந்த பெண்ணை வறுத்து எடுத்த திருப்தியில் கிளம்பினார்கள் .

அடுத்து சென்ற திருவண்வண்டூர் (8) என்ற நம்மாழ்வார் பாடிய இந்த திவ்ய தேசம் காலை நேரத்தில்   அருமையாக இருந்தாலும் எந்த மஹாநுபாவனோ  தரையை சரியாக பாவாமல் சிறிய கற்களை போட்டு நிரப்பி இருந்ததால் அனைவரும் கொஞ்சம் நொண்டி அடித்துக் கொண்டே  விரைந்தார்கள் .

THIRUVANVANDUR
அடுத்து விரைந்த திருச்சிற்றாறு (9) என்ற திவ்ய தேசம் ஒரு சிறிய , ஆனால் அழகிய கோவில். கூட்டமே இல்லாத அமைதியான காலையில் ஒரு மன நிறைவான தரிசனம் .

THIRUCHITTAARU
பின் சென்ற திருப்புலியூர் (10)  , ஒரு மிகப் பெரிய அழகான கோவில். கோடைகால விடுதி போல பராமரிக்கப் படும் இந்த இடத்தில் உள்ள பீமனின் பெரிய கதை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பெரிய ஈர்ப்பு.  இதனருகில் நின்று புகைப் படம் எடுக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வளவு பரபரப்புகளுக்கு நடுவே சில உள்ளூர் பக்தர்கள் அமைதியாக பாடிக்கொண்டிருந்தார்கள் !!

THIRUPULIYUR
பக்கத்திலிருந்த த்ரிப்போரூர் முருகன் கோவில், திவ்ய தேசமாக இல்லா விட்டாலும் , இந்த சுற்றுலாவில் கிடைத்த ஒரு நல்ல போனஸ். இந்த எளிய கோவிலில் இருந்த சில அறிய சிற்பங்கள் அதிசயிக்க வைத்தது .

THRIPORUR
பின் திருவனந்தபுரத்திற்கு  வந்த நீண்ட பயணம் நல்ல வாநிலையாலும் , நடுவில் எல்லோரும் சுவைத்த ஐஸ்க்ரீமினாலும்  சற்றும் சிரமம் தெரியாமல் அமைந்தது.

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் (11) தரிசனம் என்றுமே கொஞ்சம் பரபரப்பானது தான். ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் , வேட்டியைத் தவிர எதற்குமே அனுமதி கிடையாது- போதாக் குறைக்கு மாலை வேளையில்  உடனுக்குடன் கதவைச் சாத்தி விடுவார்கள். டிசம்பர் மாதத்தில் இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களின் கூட்டம் வேறு. இவை அனைத்தும் இருந்தும் இந்த முறை கிடைத்த தரிசனம் அருமை. எடுத்துச் சென்ற விஷ்ணு ஸஹஸ்ரநாம புத்தகத்தை திறப்பதற்குள் தரிசனம் நிறைவடைந்திருந்தது . வெளியே வந்ததும் மீண்டும் உள்ளே சென்று கிட்டிய  தரிசனம் தான் கூடுதலான ஊக்க போனஸ் !

ANANTHA PADMANABHA SWAMY
பெரிய கோவிலில் நிறைவான தரிசனம்,  ஸ்ரீ ஜானகி டூரின் சொன்ன எல்லா திவ்ய தேசங்களும் நிறைவடைந்திருந்த ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு அனைவரிடமும் தெரிந்தது. அருகிலுள்ள சிப்ஸ் கடைக்கு சில ஆயிரங்களைக்  கொடுத்து விட்டு எடுத்துச்சென்ற  பெட்டியின் அளவைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிப்ஸ் பொட்டலங்களை அள்ளிக் கொண்டு நடந்தே வந்து அருகிலுள்ள இந்தப் பகுதியில் மிகப் பிரபலமான மிலிட்டரி விநாயகரின் கூட்டமிருந்தும் நிறைவான தரிசனம்.

MILITARY VINAYAGAR
தினத்தின் , சுற்றுலாவின் கடைசி தரிசனமாகக் கிடைத்தது , சக்தி வாய்ந்த உலக சாதனைகளில் கூட்டத்திற்காக இடம் பிடித்திருந்த  ஆற்றுக்கால் பகவதி  கோவில் .

AATRUKAAL BAGAWATHY
நாள்-5 (23-Nov-2017) :

ஸ்ரீ ஜானகி டூர்சில் சொன்னது என்னவோ கேரளத்தில் உள்ள பதினொன்று திவ்ய தேசங்கள் தான்  - சொன்னபடி அவைகளை திவ்யமாக தரிசிக்க வைத்து கடமையை முடித்து சொன்ன சொல்லைக்  காப்பாற்றியும் விட்டார்கள்   ஆனால் மலை நாடுகள் திவ்ய தேசம் மொத்தம் பதிமூன்று. மீதமிருந்த இரண்டு திவ்ய தேசங்கள் தமிழ் நாட்டில் இருந்ததாலோ என்னவோ அவைகள் இந்த பட்டியலில் சேர்க்கப் படவில்லை. ஆனால் மீண்டும் நாகர்கோவில் அருகிலுள்ள இந்த இரண்டு திவ்ய  தேசங்களுக்கும் எடுத்து கூட்டிக் கொண்டு வருவது சிரமமென்பதால் திருவனந்தபுரத்தை சுற்றிப் பார்க்கக் கொடுத்திருந்த கடைசி நாளை நான் இந்த இரண்டு திவ்ய தேசங்களையும் பார்க்க செலழிப்பதாக முடிவு செய்திருந்தேன் .

ஹோட்டல் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்யேக காரில் கிளம்பிய நான்கு பேர் குழு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது பெருமாளை தரிசிப்பதிலேயே குறியாக இருந்தது அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து நான்கு மணிக்கு கிளம்பியதிலேயே தெரிந்தது.

கொஞ்சம்  தேவைக்கு அதிகமாகவே டென்க்ஷன் இருந்தததற்குக் காரணம் யாருமே இந்த இரண்டு கோவில்களின் நடை திறப்பு விவரங்களை சரியாக சொல்லாததுதான். இருந்தும் அதிகாலையிலேயே கிளம்பியதால் கிட்டத்தட்ட ஆறேகால் மணிக்கே திருவட்டாறு (12)  திவ்ய தேசத்தை அடைந்தது , நிம்மதியை அளித்தது. கோவிலில் பாலாலயம் நடந்து கொண்டிருந்தாலும் திடீரென்ற அங்கு வந்த ஒருவர் எங்களை கூட்டிச் சென்று புதிதாக வடிவமைக்கப் படும் சயனப் பெருமாளை, அவரது நீண்ட விரல்களை, ப்ரத்யேகமாகக் காண உதவியது சிலிர்க்க வைத்தது.

THIRUVATTARU
மிக அருகிலேயே இருந்த திருப்பதிசாரம் என்றழைக்கப்படும் திரு வெண்பரிசாரம் (13) என்ற திவ்ய தேசம் அமைந்திருந்தது ஒரு சிறிய கிராம சூழ் நிலையில். கோவிலைச் சுற்றி இருந்த அக்ரஹாரம் , அங்கு வசிக்கும் மக்களின் உபசரிப்பு அந்த ஊரை விட்டு புறப்படவே விடவில்லை . உள்ளே நுழைந்தவுடன் எங்களின் பரபரப்பை  பார்த்த கோவில் சிப்பந்தி கோவில் மூட இன்னும் நிறைய நேரமிருப்பத்தைச் சொன்னது எங்கள் மூச்சைக் கொஞ்சம் சீராகியது . கூட்டமே இல்லாத அமைதியான அதிகாலையில் கிடைத்த தரிசனம் இந்த மலை நாட்டு திவ்ய தேச தரிசன முயற்சிக்கு கிடைத்த நிறைவுப் பரிசாகவே கருத முடிந்தது.   கோவிலின் எதிரே அமைந்திருந்த அழகிய குளத்தைக் கண்ட பிறகு நகர்ந்த எங்கள் மன நிறைவு சொல்லி மாளாது.

THIRUVEN PARISAARAM
சென்ற காரும் இருந்த டென்க்ஷனில் ஒரு சக்கரத்தின் காற்றை இழந்தும் நாங்கள் திருவனந்தபுரத்தை  சௌகரியமாக  நண்பகலில் அடைய முடிந்தது.

அசர வைத்தது :  கேரளத்தின் பல மூலைகளில் பல கோலங்களில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் ;  நாம் இந்தக் காலத்திலும் அதி நவீன வாகனங்களிலும் போக சிரப் படும் இடங்களில்  நம்மாழ்வார் போன்றவர்கள் நடந்தே சென்று பாடல்கள் பாடி இருப்பது; இந்தக் கோவில்களில் இருக்கும் சுத்தம் ; எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் பாரம்பரியத்தைக் காக்கும் கோவில் நிர்வாகங்கள்;  மலை நாட்டு திவ்ய தேசங்கள் இதே மேம்பட்ட நிலையில் இன்னும் பல காலங்கள்  இருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் நன்றாகவே தெரிகிறது !

 திரும்பிப் பார்க்க வைத்த தருணங்கள்:   இந்தப் பக்கத்துக்கு கோவில்களின் நேரங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்ட தினசரி பயண ஏற்பாடு ; அநேகமாக எல்லா இடங்களிலுமே கிடைத்த, வயிற்றை பதம் பார்க்காத உணவு;  இவர்களுக்கே உரித்தான அதிகாலை பில்டர் காபி;  இப்படி எல்லாமே அமைந்தது பாக்கியமே.   நான் ஐந்து வருடங்களுக்கு மேலாக இவர்களுடன்  பயணப் பட்டுக் கொண்டிருப்பதால், ஸ்ரீ ஜானகி டூர்சின் அணுகுமுறையில் ஒரு நல்ல முதிர்ச்சியைக் காண முடிகிறது !

இது போன்ற தனி மனிதர்களால் அணுகுவதற்கே சிரமப்படும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் தான் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் போன்ற நிறுவனங்களின் சேவைகள் தனித்து நிற்க்கின்றன. வளர்ந்து வரும் போட்டிகளை உணர்ந்து தனித்துவமிக்க மேம்பட்ட சேவைகளை ஜனங்களுக்கு அளிக்கும் நிறுவனங்களுக்கு பரபரப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை !!