நாளை மார்கழி - நினைத்தாலே இனிக்கிறது.
பொங்கலுக்காக இல்லை. ஏனென்றால் இது வரை
எங்க வீட்டுல இந்த விடிகாலை நைவேத்யம் போன்ற உபத்ரவப் பழக்கம் கிடையாது !
அதிகாலைக் குளிரில் குளித்து, திருப்பாவை
, திருவெம்பாவை சொல்லி அவசர அவசரமாக வாசலுக்கு வந்தால், அகல் விளக்குகள் கார்த்திகை
மாலையிலுருந்து, மார்கழிக் காலைக்கு டியூட்டி
மாறி இருக்கும்.
மாட வீதி பஜனை பார்க்கப் போனால், பாதி
இருட்டில் கம்பீரமாகத் தெரியும் கோயில் கோபுரம் - நினைத்தாலே சிலிர்க்கிறது. கடந்த
சில வருடங்களாக, இயற்க்கை நியதிக்கப்பாற்ப்பட்டு, மார்கழியில் சில நாட்களில் மழை
பின்னியது. ஆனால், மழையோ, குளிரோ, பனியோ- விடாது 30 நாட்களும் நான்கு மாட வீதியைச்
சுற்றி வரும் பஜனை அன்பர்களோ தவறாமல் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் ஆபீஸ்,
குடும்பம் இத்யாதி பிடுங்கல்கள் உண்டு- ஆனால் சளைப்பதில்லை.
இதில் இளைஞர்களும்,பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளுடய சின்ன மாமிகளும் அடக்கம். பஜனைக்கு நடுவே சற்றே ஒதுங்கி அப்பப்போ,
ஆண்ட்ராயிடைத் தொட்டு மெயில் பார்க்கும் இளைஞர்களையும், கணவனிடம் குழந்தைக்கு
பிஸ்கட் வைக்க ஞாபகப் படுத்தும் இளம் அம்மாக்களையும் அவர்களின் உறுதியையும் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.
இந்த முப்பது நாட்களும் தவறாமல் பஜனை நடத்துவதும்
ஒரு கூட்டு முயர்ச்சிதான். பஜனைத் தலைவரிலிருந்து, தம்புரா- ஹார்மோனியம்
போடுபவரும், நடு வழியில் காய்ந்து போன தொண்டைக்கு சூடான பால் தரும் அன்பரும், பஜனை
முடிந்தவுடன் ஆகாய மார்க்கமாக வரும் ராவணன் போல் காரில் வந்து மனைவியை அவசரமாகக் கொத்திச்செல்லும் கணவர்களும் - எல்லாருமே
முக்கியமானவர்கள்தான். ஏதேதோ நிகழ்ச்சிகளை ஆராயும் IIM
மாணவர்கள் இதையும் ஒரு process க்குக்காவோ, team workக்குக்காவோஆராயலாமே !
வளர்ந்து வரும் மேல் நாட்டு மோகங்களையும்,
போன வருடம் கல்யாணம் பண்ணி இந்த வருடம் முடித்து வைக்கும் மக்களையும் நினைத்துக்
கவலைப் பட்டாலும், இவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.
எனக்குத் தெரிந்து மார்கழி காலைக்கு ஏற்ற
இடங்கள் மைலாப்பூர் மாட வீதி, கபாலி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம். திருப்பாவை அருளிய
ஸ்ரீவில்லிபுத்தூர் போக ஆசை.
சிறுவனாய் ஒரு காலத்தில், காலை 4 மணிக்கு
எழுந்து, ஹார்லிக்ஸ் குடித்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கிழக்கு மாட வீதி இன்றைய
ஐ, ஓ. பி வாசலில் "அம்பா உனை நம்பினேன்" என்று நான் பாடிய போது, என்
அம்மாவில் முகத்தில் தெரிந்த பெருமை இன்னும் ஞ்யாபகமிருக்கு. இந்த வருட
மார்கழிக்குச் சில வித்தியாசமான ப்ளான் இருக்கு - முடித்துவிட்டு, முடிந்தால்
சொல்கிறேன்.
Is it முடிந்தால், முடித்துவிட்டு சொல்கிறேன். or
ReplyDeleteமுடித்துவிட்டு முடிந்தால் சொல்கிறேன்.
Either way it is enjoyable.
V Rajendran
முடிந்தது- சொல்லி இருக்கிறேன் - ' மயங்க வைத்த மார்கழியில் "
ReplyDelete