Monday, December 24, 2012

வைகறை வெளிச்சம்


ஒரு மணி நேரத்துக்கு முன் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் - மார்கழிப் பொங்கல் போல் சுடச் சுட இங்கே.

இன்று காலை 4 மணிக்கு எழுந்து, மெயில் பார்க்காமல் குளித்து, சிற்றஞ்ச்சிரு காலே  நாராயணனையும்  அண்ணாமலையானையும்  போற்றிவிட்டு, கோவிலுக்குப் போக   ஸ்கூட்டியை திருகியபோது போது மணி 6. இன்னும் இருள் பிரியாத நேரம். பனிக் காற்று காதில் புகுந்து குறுகுறுக்க, மயிலையின் சின்ன தெருக்களில் பயணம். சில வீட்டு வாசல்களில் மாமிகள் பலர் , பனியிலுருந்து காத்துக் கொள்ள தலைக்குத் துண்டு சகிதம்,வித விதமாக வண்ணப் பொடிகளில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.சாணியில்  பரங்கிப்பூ வைக்காவிட்டாலும் இந்தப் பழக்கத்தை விடாமல் செய்வது எனக்குப் பிடித்தது. கொடி தூக்கி, மேடை ஏறி முழங்கும் பெண்களை விட  நம் பாரம்பர்யத்துக்கும் கலாச்சாரத்துக்கும்  இவர்கள் அதிகம் செய்கிறார்கள் என்று தோன்றியது.ஒரு வீட்டு வாசலில் சிவப்பில் பெரிய கோலம்- பார்த்தால் க்ரிஸ்துமஸ் தாத்தா. அருமை- கோலமும், ஐடியாவும்!

சென்னை கார்ப்பொரேஷனின் கடமை உணர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எல்லா நாட்களிலும் ஏழு மணி வரை எரியும் தெரு விளக்குகள் மார்கழியில் மட்டும் காலை ஐந்து மணிக்கே காணாமல் போகிறது. கோலம் போடும் மாமிகளையோ ஏன் திருவாதிரைக்காக உலா வரும் மாணிக்கவாசகரைக் கூட கிட்டே போனால்தான் பார்க்க முடிந்த்து- அவ்வளவு இருட்டு. பின்னவருக்காவது தீவட்டி இருந்தது, மாமிகளுக்கு தீவட்டித் தடியன் கூட இல்லை.

ஆனால் அந்த அறைகுறை வெளிச்சத்தில் பல்லக்கில் ஸ்வாமி, மந்திரம் ஓதும் பஞ்சகக்ச மாமாக்களுடன், சாம்பிராணி புகையூடே பிரமாத தரிசனம். மாணிக்கவாசக ஸ்வாமிகள் பல்லக்கைச் சுமந்து வந்த்ததில் ட்ராக் சூட்டில் மூன்று இளைஞர்கள்-சிலிர்த்துப் போனேன், ஆனால் இந்தச் சிலிர்ப்புக்கு காரணம் மார்கழி அல்ல.
 

எனக்கென்னவோ என் மயிலை தான் உலகில் வாழச் சிறந்த இடம் என்று தோன்றியது அவரவருக்குத் தான் வாழும் இடம் தான் வைகுண்டம், கைலாசம் எல்லாம் - காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

யார் சொன்னது இந்தக் காலஇளைஞர்களுக்குப் பொறுப்பில்லை என்று- கொடுத்துப்பாருங்கள் தெரியும் அவர்களது அக்கரையும், ஸ்ரத்தையையும். மார்கழிக் கோலத்தில் க்ரிஸ்த்மஸ் தாத்தா போடும் பெண்ணும், ட்ராக் சூட்டில் ஸ்வாமி பல்லக்குத் தூக்கும் இளைஞர்களும் எதிர் கால இந்தியாவுக்கு நிறைய நம்பிக்கைத் தருகிறார்கள். வருங்காலத்தில் கோவிலுக்கும் மசூதிக்கும் சண்டை போட்டுக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. இவர்கள் புரிந்தவர்கள் எது தேவை, எது வீண் வம்பு, என்று வறையறுத்துக் கொள்வார்கள். இந்தச் சமுதாயத்துக்கு அரசியல் விளையாட்டுகளுக்கு நேரம் இருக்காது. .அந்த அரைகுறை இருட்டிலும், இந்தியாவின் எதிர்காலம் மட்டும் இவர்கள் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.

2 comments: