Monday, December 24, 2012

வைகறை வெளிச்சம்


ஒரு மணி நேரத்துக்கு முன் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் - மார்கழிப் பொங்கல் போல் சுடச் சுட இங்கே.

இன்று காலை 4 மணிக்கு எழுந்து, மெயில் பார்க்காமல் குளித்து, சிற்றஞ்ச்சிரு காலே  நாராயணனையும்  அண்ணாமலையானையும்  போற்றிவிட்டு, கோவிலுக்குப் போக   ஸ்கூட்டியை திருகியபோது போது மணி 6. இன்னும் இருள் பிரியாத நேரம். பனிக் காற்று காதில் புகுந்து குறுகுறுக்க, மயிலையின் சின்ன தெருக்களில் பயணம். சில வீட்டு வாசல்களில் மாமிகள் பலர் , பனியிலுருந்து காத்துக் கொள்ள தலைக்குத் துண்டு சகிதம்,வித விதமாக வண்ணப் பொடிகளில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.சாணியில்  பரங்கிப்பூ வைக்காவிட்டாலும் இந்தப் பழக்கத்தை விடாமல் செய்வது எனக்குப் பிடித்தது. கொடி தூக்கி, மேடை ஏறி முழங்கும் பெண்களை விட  நம் பாரம்பர்யத்துக்கும் கலாச்சாரத்துக்கும்  இவர்கள் அதிகம் செய்கிறார்கள் என்று தோன்றியது.ஒரு வீட்டு வாசலில் சிவப்பில் பெரிய கோலம்- பார்த்தால் க்ரிஸ்துமஸ் தாத்தா. அருமை- கோலமும், ஐடியாவும்!

சென்னை கார்ப்பொரேஷனின் கடமை உணர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எல்லா நாட்களிலும் ஏழு மணி வரை எரியும் தெரு விளக்குகள் மார்கழியில் மட்டும் காலை ஐந்து மணிக்கே காணாமல் போகிறது. கோலம் போடும் மாமிகளையோ ஏன் திருவாதிரைக்காக உலா வரும் மாணிக்கவாசகரைக் கூட கிட்டே போனால்தான் பார்க்க முடிந்த்து- அவ்வளவு இருட்டு. பின்னவருக்காவது தீவட்டி இருந்தது, மாமிகளுக்கு தீவட்டித் தடியன் கூட இல்லை.

ஆனால் அந்த அறைகுறை வெளிச்சத்தில் பல்லக்கில் ஸ்வாமி, மந்திரம் ஓதும் பஞ்சகக்ச மாமாக்களுடன், சாம்பிராணி புகையூடே பிரமாத தரிசனம். மாணிக்கவாசக ஸ்வாமிகள் பல்லக்கைச் சுமந்து வந்த்ததில் ட்ராக் சூட்டில் மூன்று இளைஞர்கள்-சிலிர்த்துப் போனேன், ஆனால் இந்தச் சிலிர்ப்புக்கு காரணம் மார்கழி அல்ல.
 

எனக்கென்னவோ என் மயிலை தான் உலகில் வாழச் சிறந்த இடம் என்று தோன்றியது அவரவருக்குத் தான் வாழும் இடம் தான் வைகுண்டம், கைலாசம் எல்லாம் - காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

யார் சொன்னது இந்தக் காலஇளைஞர்களுக்குப் பொறுப்பில்லை என்று- கொடுத்துப்பாருங்கள் தெரியும் அவர்களது அக்கரையும், ஸ்ரத்தையையும். மார்கழிக் கோலத்தில் க்ரிஸ்த்மஸ் தாத்தா போடும் பெண்ணும், ட்ராக் சூட்டில் ஸ்வாமி பல்லக்குத் தூக்கும் இளைஞர்களும் எதிர் கால இந்தியாவுக்கு நிறைய நம்பிக்கைத் தருகிறார்கள். வருங்காலத்தில் கோவிலுக்கும் மசூதிக்கும் சண்டை போட்டுக்கொள்வார்கள் என்று தோன்றவில்லை. இவர்கள் புரிந்தவர்கள் எது தேவை, எது வீண் வம்பு, என்று வறையறுத்துக் கொள்வார்கள். இந்தச் சமுதாயத்துக்கு அரசியல் விளையாட்டுகளுக்கு நேரம் இருக்காது. .அந்த அரைகுறை இருட்டிலும், இந்தியாவின் எதிர்காலம் மட்டும் இவர்கள் முகத்தில் பளிச்சென்று தெரிந்தது.

Thursday, December 20, 2012

என்ன விலை?


முன்பெல்லாம் சின்னப் பையனா இருந்த காலத்தில் எனக்கும் நண்பர்கள் வட்டம், அரட்டை, ஊர் சுத்துதல் எல்லாம் இருந்திருக்கு. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன், ஒரு ஜில் காப்பிக்கு அப்பறம் நேரா கிரிக்கெட் விளையாட க்ரௌண்ட்தான். ஆனால் , ஆறாவது மணிக்கு வீடு வந்தாகணும், உடனே படிப்புச் சத்தம் கேட்டாகணும். அப்பெல்லாம் ரேடியோ கூட கிடையாது, இருந்தாலும் கொஞ்சம் ப்ரொக்ராம் தான் அப்புறம் வெறும் புஸ் சத்தம்தான். எட்டு மணிக்குச் சாப்பிட்டு , பத்து மணிக்குள்ள எல்லா லைட்டும் அணைக்கப் படும். காலையில் 5 மணிக்கு வீடு விழிக்கும்- எழுந்திருக்கல்லேன்னா கொஞ்ச நேரத்தில் தலையில் தண்ணி கொட்டப் போவதாக அப்பாவிடம் இருந்து ஒரு அதட்டல் போதும், எல்லோரும் அவரவர் வேலையில்.

பசங்களுக்கு இப்படின்னா, பொட்டைக் குட்டிகளுக்கு ( இப்படித்தான் பெண் குழந்தைகளை செல்லமாக விவரிப்பார்கள்) கேட்கவே வேண்டாம். கத்தி சினிமாப் பாட்டு பாடக் கூடாது, ரொம்ப நேரம் கண்ணாடி முன்னால நிக்கப்டாது, தாவணியை ஒழுங்காச் சுத்திக்கணும் (பூணூல் மாதிரி போடாதே !), கொலுசுன்னா என்ன? , ஜன்னல் பக்கம் ரொம்ப நேரம் போகாதே - இப்படி பல விதிமுறைகள். வெளியே தனியே போகக் கூடாது, அப்படியே போனாலும் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் விளக்கு வைப்பதற்க்கு முன் வீட்டில் இருந்தாக வேண்டும். ரோட்டுல காவாலிப் பசங்க சீட்டி அடித்தாலும் கன்னத்தில் அறையாம தலையக் குனிஞ்ஜுண்டே வர பாட்டி சொல்லிக் கொடுப்பா

சினிமாவெல்லாம் வருஷத்துக்கு ஒண்ணோ, ரெண்டோதான்- அதுவும் வீட்டோடுதான். பசங்களுக்கே சைக்கிளெல்லாம் பத்தாவதுக்கபுறம்தான். பொம்மனாட்டிக் குட்டிகளுக்கெல்லாம் எதுக்கு சைக்கிள்ம்பா.

பொண்கள் ஸ்கூல் தாண்டுமுன் ஜாதகத்தைத் தூக்கிடுவா - அதுகளும் பதில் பேசாம தலய குனிஞ்சுண்டே புன்னகையோட அமைதியா கிடைச்ச வாழ்க்கையையும், புருஷனையும், மாமியாரையும் ஏத்துகிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கத் தயாராயிடுவா. அப்படிப்போனவள்  ஒரு வருஷத்தக்கப்புறம் பெரிய வயிற்றுடன், நிறய வெட்கத்துடன் வளை காப்புக்குத்தான்  திரும்பி வருவா.

அப்பெல்லாம் கம்ப்யூட்டர் இல்லை, ஃபேஸ் புக் இல்லை, சாட் இல்லை, ஈ மெயில் இல்ல, ஸெல் போன் இல்லை, பாக்கெட் மணி இல்லை, அவுட்டிங்க் இல்லை, டேட்டிங்க் இல்லை, பெண்களிடமிருந்து சம்பளமுமில்லை.

அதனால் தானோ என்னவோ நடு இரவு சம்பவங்களும் சாலை விபத்துக்களும், பாலியல் சம்பந்தப் பட்ட அச்சுறுத்தல்களும் - இல்லாமல் இல்லை- ஆனால் மிகக் குறைவு. இதெல்லாம் நாம் நம் சுதந்திரத்துக்கு, உரிமைகளுக்கு, முன்னேற்றத்துக்கு கொடுக்கும் விலையோ ? இப்படிப்பட்ட விலையில் வரும் அனுபவங்கள் தேவையா? ஒரே குழப்பமா இருக்கு.

கட்டுக் கட்டாக சம்பாதித்தாலும், அப்பப்ப உலகம் சுற்றினாலும், பீரோ நிறைய துணி மணிகள் இருந்தாலும், வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்கூட்டியும், காரும் இருந்தாலும், கரண்ட் போனால் இன்வர்டெரும், படுத்தபடியே டீ வீயை நிறுத்த முடிந்தாலும், ஃப்ரிட்ஜ் நிரைய இருந்தாலும் , உள்ளங்கையில் உலகம் தெரிந்தாலும் ஏன் நிறைவு வரவில்லை? இன்னும் எதைத் தேடி ஒடிகொண்டே இருக்கிறோம்? ஆஸ்பத்ரிக்கு அலைந்து கொண்டே இருக்கிறோம்? அப்பல்லாம் இவ்வளவு ஹார்ட் அட்டாக் இல்லையே- ஆபீஸ்ல ஸ்ட்ரெஸ்ன்னா என்னன்னு கேப்பா? யாராவது செத்து போனா 60 வயதுக்கு மேல தான் இருக்கும். இப்பெல்லாம் முப்பதுலயும், நாப்பதுலயும் அல்பாயுசுகள் ஜாஸ்த்தியாயிடுத்தே?

குடிச்சுட்டு வந்தா ஊரே தூத்தும்- இப்ப குடிக்காதவனை ஒரு மாதிரியாப் பார்க்கறதுகள். சிகரெட் பிடிக்க ஓரமாக ஒதுங்குவா. பெரியவாளைப் பாத்தா சிகரெட் கை முதுகுக்குப் பின்னால போகும் - இப்பல்லாம் மூஞ்சிலயே ஊதறா. பொம்மனாட்டிகளும் பாருக்கு போரா, சிகரெட்டும் பிடிக்கறா. பாரதியின் 'பாருக்குள்ளே நல்ல நாடு' பாடலை தப்பாப் புரிஞ்சுண்டுட்டாளே?

புடவையோ, தாவணியோ போட்டால் உடம்பு தெரியக் கூடாதும்பா - இப்ப நடுவுல கொஞ்சம் துணியைக் காணோம்- முழங்காலுக்குக் கீழே துணியே தெரியறதில்லை.

முன்னேற்றத்துக்கு இதுவா விலை? எது முன்னேற்றம் - இப்ப இருக்கறதா இல்லை அப்ப இருந்ததா- தெரியலயே? முதல்வன் படத்துல சொல்றா மாதிரி, வாழ்க்கைக்கு ஏதாவது ரீவைண்ட் பட்டன் இருந்தால் பேசாம அந்தக் காலத்துக்கே போயிடலாமோ?

எதுக்கும் இன்னிக்கு ராத்திரி சூப்பர் சிங்கர் பாத்துட்டு அப்புறம் முடிவு பண்ணுவோம்

Friday, December 14, 2012

மாதங்களில் என் மார்கழி


நாளை மார்கழி - நினைத்தாலே இனிக்கிறது. பொங்கலுக்காக இல்லை. ஏனென்றால்  இது வரை எங்க வீட்டுல இந்த விடிகாலை நைவேத்யம் போன்ற உபத்ரவப் பழக்கம் கிடையாது !

அதிகாலைக் குளிரில் குளித்து, திருப்பாவை , திருவெம்பாவை சொல்லி அவசர அவசரமாக வாசலுக்கு வந்தால், அகல் விளக்குகள் கார்த்திகை மாலையிலுருந்து, மார்கழிக் காலைக்கு டியூட்டி
மாறி இருக்கும்.

மாட வீதி பஜனை பார்க்கப் போனால், பாதி இருட்டில் கம்பீரமாகத் தெரியும் கோயில் கோபுரம் - நினைத்தாலே சிலிர்க்கிறது. கடந்த சில வருடங்களாக, இயற்க்கை நியதிக்கப்பாற்ப்பட்டு, மார்கழியில் சில நாட்களில் மழை பின்னியது. ஆனால், மழையோ, குளிரோ, பனியோ- விடாது 30 நாட்களும் நான்கு மாட வீதியைச் சுற்றி வரும் பஜனை அன்பர்களோ தவறாமல் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் ஆபீஸ், குடும்பம் இத்யாதி பிடுங்கல்கள் உண்டு- ஆனால் சளைப்பதில்லை.

இதில் இளைஞர்களும்,பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுடய சின்ன மாமிகளும் அடக்கம். பஜனைக்கு நடுவே சற்றே ஒதுங்கி அப்பப்போ, ஆண்ட்ராயிடைத் தொட்டு மெயில் பார்க்கும் இளைஞர்களையும், கணவனிடம் குழந்தைக்கு பிஸ்கட் வைக்க ஞாபகப் படுத்தும் இளம் அம்மாக்களையும் அவர்களின் உறுதியையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த முப்பது நாட்களும் தவறாமல் பஜனை நடத்துவதும் ஒரு கூட்டு முயர்ச்சிதான். பஜனைத் தலைவரிலிருந்து, தம்புரா- ஹார்மோனியம் போடுபவரும், நடு வழியில் காய்ந்து போன தொண்டைக்கு சூடான பால் தரும் அன்பரும், பஜனை முடிந்தவுடன் ஆகாய மார்க்கமாக வரும் ராவணன் போல் காரில் வந்து மனைவியை அவசரமாகக் கொத்திச்செல்லும் கணவர்களும்  - எல்லாருமே முக்கியமானவர்கள்தான். ஏதேதோ நிகழ்ச்சிகளை ஆராயும் IIM  மாணவர்கள் இதையும் ஒரு process க்குக்காவோ,  team workக்குக்காவோஆராயலாமே !

வளர்ந்து வரும் மேல் நாட்டு மோகங்களையும், போன வருடம் கல்யாணம் பண்ணி இந்த வருடம் முடித்து வைக்கும் மக்களையும்  நினைத்துக் கவலைப் பட்டாலும், இவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து மார்கழி காலைக்கு ஏற்ற இடங்கள் மைலாப்பூர் மாட வீதி, கபாலி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம். திருப்பாவை அருளிய ஸ்ரீவில்லிபுத்தூர் போக ஆசை.

சிறுவனாய் ஒரு காலத்தில், காலை 4 மணிக்கு எழுந்து, ஹார்லிக்ஸ் குடித்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கிழக்கு மாட வீதி இன்றைய ஐ, ஓ. பி வாசலில் "அம்பா உனை நம்பினேன்" என்று நான் பாடிய போது, என் அம்மாவில் முகத்தில் தெரிந்த பெருமை இன்னும் ஞ்யாபகமிருக்கு. இந்த வருட மார்கழிக்குச் சில வித்தியாசமான ப்ளான் இருக்கு - முடித்துவிட்டு, முடிந்தால் சொல்கிறேன்.