என்றைக்குமே எனக்கு டீ வீ பார்ப்பதில் ஒரு தயக்கமான நாட்டம்தான். என்னுடைய பார்வை
எல்லாம் கிரிக்கெட், பாடல்கள், அப்பப்போ சினிமா (கொஞ்சம் வருடங்களுக்கு முன்னால்
வரை), மற்றும் எப்பொழுதுமே செய்திகள்- ஆங்கிலமும், தமிழும்.
இப்பொழுதெல்லாம் ,
ரிடயர் ஆனதுக்கப்புறம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் பார்க்க
தொடங்கியுள்ளேன் - ஆனால் என்றைக்குமே சீரியல்களுக்கு ஒரு பெரிய நோ நோ தான் -
எதற்க்கு வீணாக உணர்ச்சிகளை சிந்தி உடம்பைக் கெடுத்துக்கணும்.
சமீப காலமாக வரும்
சில உண்மை நிகழ்சிகள் என்னை திடுக்கிடச் செய்வதோடு, கொஞ்சம் சிந்திக்கவும்
வைத்தது. அனேகமாக எல்லா பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம்: குடி, பெண்.
மனசாட்சியே இல்லாமல்,
மிகவும் சாதுவாக இருந்து கொண்டு ஆனால் வெளியே ஒரு பெண்ணிடம் தனி உலகம் நடத்துகிறார்கள்-
இது ஒரு ரகமென்றால் இன்னொன்று குடியினால் வந்த
விளைவுகள் - மனைவியை அடி, உதை, வேலைக்கு போகாமல் இருப்பது, குறுக்கு
வழியில் பணம், கெட்ட சகவாசம், பெண் - இப்படி இன்னொரு ரூட். நம் தமிழ்
சினிமாவுக்கும் பல நாட்டுகள் இதைச் சுற்றித்தான் இருக்கும் போல- அதனால் தான்
உண்மைக் கதை போல் இருக்கு- நல்லா கல்லா கட்டுகிறது.
சிறு பையன் முதல்
பெரியர் வரை குடிபழக்கம். இது என்ன கேடு கெட்ட வழிமுறை? ஒரு கணவன் தன் மூவாயிரம்
சம்பளத்தில், இரண்டாயிரம்தான் வீட்டிற்க்குத் தருகிறார் என்கிறாள் ஒரு பெண்- மாதம்
ஆயிரம் ரூபாய் குடிப்பதற்க்கா? குடும்பம் என்னாவது?
ஒருவன் தன் வாழ்னாள்
முழுவதும் மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால், அறுபது வயதில், எத்தனை லட்சங்கள்
கிடைக்கும் தெரியுமா? இதை ஏன் ஒரு பென்ஷன் போல் எடுத்துக் கொள்ளக் கூடாது? அல்லது,
மூன்று மாதங்களுக்கு ஒரு கிராம் தங்கம் வாங்கினால், பெண் கல்யாணத்துக்கோ அல்லது
மனைவிக்கோ எவ்வளவு நகை செய்யலாம்? பிற்க்காலச் செலவுக்கு இது எப்படிக் கை
குடுக்கும் தெரியுமா ?
சரி- உங்களிடம் நிறைய
பணம் இருக்கிறதென்றே வைத்துக் கொண்டால்- உடம்பு என்னாவது? ஒரு எட்டு அப்பலோ
கான்சர் ஸ்பெஷாலிடியோ, அடயார் ஆஸ்பத்ரியோ எட்டிப் பாருங்கள். அப்புறம் சோடா புட்டி
கூட தொட மாட்டீர்- அவ்வளவு அவஸ்தை. ரகம் ரகமாக கான்சரில் எத்தனை விதம். வாயில்,
வயிற்றில், மலத்துவாரத்தில், முதுகுத் தண்டுவடத்தில், மூளையில் இப்படி பல அவஸ்தை.
ஒன்றுமே பழக்கம் இல்லாமல், என் அண்ணனுக்கு புற்று நோய் வந்து, அவசரமாக வாரிக் கொண்டதுபோல்
நடந்தால், உலகமே உண்மயில் இரங்கும். இப்படி ஏதாவது பழக்கம் என்றால் உலகம் என்ன,
உங்கள் உறவே காரித் துப்பும். இது தேவையா?
நீங்கள் அதி
புத்திசாலியாகவோ அல்லது அதி மேதையாகவோ இருந்தாலும், கடைசியில் கிடைக்கும் பட்டம்
என்னவோ - "ஓ அந்தக் குடிகாரனா"
இந்தப்
பழக்கத்துக்குள் உலவும் சோஷலிசமோ வியப்பானது - இதற்க்குப் பணக்காரனோ ஏழையோ
பாகுபாடே கிடையாது. இருவரும் வாந்தியெடுத்து, ஒரே ப்ளாட்பாரத்தில்தான்
கிடப்பார்கள்.
இதனால் என்ன சுகம்-
உலகமே மதிப்பதில்லை. பெண்டாட்டி , பிள்ளைகள் அவமானத்தில் புழுங்குகிறார்கள். காசு
விரயம். டாக்டர் புழுவைப்போல பார்க்கிறார். குடிப்பவனுக்கு அவஸ்தை வேறு. அப்படி
இந்தக் கண்றாவிதான், குடிப்பதற்க்காவது நன்னயிருக்கா - அதுவும் இல்லை.
குடிச்சுட்டு ஒவ்வொருத்தன் மூஞ்சி போற போக்கே சொல்லுது. அப்புறம் ஏன் ?
இது எப்படி ஒருத்தரை
தொத்திக்கறது? ஸ்கூல் முடியறப்பவே ட்ரீட்டில் ஆரம்பிக்கறது. சில அப்பாக்களுக்குத்
தெரிவதே இல்லை, சிலருக்கு தர்ம சங்கடம் ஏன்னா அவரே தாக சாந்தி ஆசாமி. காலேஜ்ல
கேட்கவே வேண்டாம், ஆசை காட்டியே வழிக்குக்கு கொண்டுவந்திருவாங்க. ஆபீஸ் போனால்
இதற்க்கான கேள்வி கேட்காத பாஸ்போர்ட்டும் , வீசாவும் கிடைத்த மாதிரி. வாரம்
முழுக்க வேலை செய்யராங்களோ இல்லயோ, வெள்ளிக்கிழமையானால் முகத்தில் தனி பொலிவு,
சந்தோஷம். கொஞ்ச நஞ்சம் தயங்கறவங்களையும் சகாக்களும், சீனியர்களும்
சரிக்கட்டிடுவாங்க. இதுதான் ஆரம்பம். அதற்க்கப்புறம் முடிவு அவரவர் வேகத்தைப்
பொறுத்தது.
சமீபத்திய காளானான IT கம்பெனிகளின் சம்பளங்கள், பலரை ஊட்டி வளர்க்கின்றன. இதனால் தான் ஒண்டுக்
குடித்தனத்தில் இருந்து கஷ்டப்பட்டுப் படித்து வேலை கிடைத்தும், இன்னும் பல பேரால்
வீடு கூட வாங்க முடியவில்லை. காரணம் உள்ளேயே இருக்கு.
நான் ஒண்ணும்
குடிக்கரவனெல்லாம் அயோக்யன் மற்றவர்களெல்லாம் யோக்யர்கள் என்று சொல்லவில்லை. நம் உடலுக்குக்
கேடு, அதோடு நம் குடும்பத்தவர்களுக்கும் மஹா ஸ்ரமம். வெள்ளைக்காரனிடமிருந்து கற்றுக்கொள்ள
எவ்வளவோ இருக்கு, அதையெல்லாம் விட்டுட்டு இந்த சனியன் மட்டும் ஏன்?
பெண்கள் இன்னும்
தைர்யமாக வேண்டும். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனை, வீட்டுக்குள்
சேர்க்காமல் இருக்கணும். குடிக்காத அப்பாக்கள்,
மகன் குடித்துவிட்டு வந்தால் அந்தக் கால அப்பாக்கள் போல் பெல்ட்டை உருவ
வேண்டும். இதெல்லாம் இந்தக் காலத்துக்கு ரொம்ப ஓவராகத்தான் தெரியும்- ஆனால்
குடும்பதுக்காகவும், உடம்புக்காகவும் செய்தே ஆக வேண்டும்- பின்னாடி புலம்பியோ, டீ
வீ யில் பேட்டி கொடுத்தோ ப்ரயோஜனம் இல்லை.
அரசாங்கமும் உதட்டளவு
சொல்லாமல், மது விலக்கை அமுல் படுத்தினால், இது கொஞ்சம் குறையலாம். அதற்கென்ன
கள்ளச் சரக்கு அடிப்பார்கள், பாண்டி போவார்கள் என்று அடுக்கலாம்- அப்படிப்பட்ட
தீவிர ரசிகர்களை குடும்பம்தான் மேற்சொன்னபடி கவனிக்க வேண்டும்- அப்படியும்
திருந்தலேன்னா எக்கேடு கெட்டு போன்னு விட வேண்டியதுதான்.
எனக்குப்
பாலிடிக்சில் ஆர்வம் கிடையாது- ஆனால் அதெப்படி குஜராத்தில் மட்டும் ரொம்ப
வருஷமாகவே மது விலக்கு இருக்காமே - ஏன் நாம் செய்யக்கூடாது? உடம்பப் பாத்துக்கோங்கப்பா.