Saturday, November 28, 2015

நன்றியுடன் ஒரு வெள்ளி

அமெரிக்காவின் பல இடங்கள், சில நாட்களாக, ஒரு கொண்டாட்டம் கலந்த ஜுரத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்மூரைப் போல் பிள்ளைகள் கல்லூரி முடித்து வேலைக்கும் போய் கல்யாணம் செய்து கொள்ளும் வரை இங்கு பெற்றோர்கள் அடை காப்பதில்லையாம். பள்ளியில் ஒரு அளவு வரை கொண்டு வந்து சேர்த்து விட்டு, இனி மேற்படிப்பு தேவை என்றால் பிள்ளைகளையே பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி விடுகிறார்கள். அவர்களும் அதை ஒரு சவாலாகவே ஏற்று தொடர்வதால் அனேகமாக அனைவருக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. தானே சம்பாதித்து , தாம் வாங்கிய கடனை அடைக்கும் பிள்ளைகள் தத்தம் வாழ்க்கையை தாமே அமைத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்கிறார்கள்.

பணம் , பொறுப்பு, சுய சிந்தனை எல்லாம் சிறு வயதிலேயே வந்து விட மெதுவாக பெற்றோர்களிடமிருந்து விலகியே வாழ்கிறார்கள். இதனால் பெற்றோர்களை தாங்கள் மறந்து விடவில்லை என்பதைத்தான் இந்த நன்றி நவிலும் நாளான நவம்பர் கடைசி வியாழனன்று வெளிப் படுத்துகிறார்களாமாம். அங்கங்கு சிதறிக் கிடக்கும் அண்ணன், தங்கைகள் அனைவருமே இந்த நாளில் தன் பெற்றோர்களிருக்குமிடம் அடைந்து , அவர்களை வணங்கி, ஆசி பெற்று பரிசுகளைப் பரிமாறி  கொண்டாடுகிறார்கள். சரித்திர ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களே நினைவில் தங்கிக் கொண்டிருன்றன என்கின்றனர் பேசிய சிலர்.

ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னமேயே எல்லா பஸ், விமானங்களிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நாளின் கொண்டாட்டம் நியூயார்க் நகரின் மையப் பகுதியில் ஒரு பிரதான வீதியில் நடக்கும் ஒரு மிகப் பிரசித்தி பெற்ற ஊர்வலத்துடன் தொடங்குகிறது. இதில் மெக்டொனால்ட் முதல் நியூயார்க் போலீஸ் வரை அனைவரும் கலந்து கொண்டு அணி வகுத்துப் போவதைக் காண இந்த வருடம் பத்து லக்ஷத்துக்கும் மேல் கூட்டம் கூடியதாக ஒரு தகவல். தொலை காட்சியில் வரும் பிரபலங்களுடன் சாண்டா க்ளாஸ்  போன்றவைகளும் அணி வகுத்து வருவதால் குழந்தைகளின் வரவேற்புக்குக் குறைவே இல்லை- இந்த ஊர்வலத்துடன் ஓயாது கூடவே வரும் இசை பெரியவர்களையும் ஆட வைக்கிறது.

நாள் முழுவதும் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்து நிறைவேற, பசிக்கு வான் கோழியின் துணையை தேடிக் கொல்ள்கிறார்கள். இந்த வருடம் சுமார் நாற்பத்து மூன்று லட்சம் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப் பட்ட வான் கோழிகள் இதற்காக உயிர்த் தியாகம் செய்ததாக ஒரு செய்தியும் படித்தேன். வயிறு நிறைய, மறுநாள் மக்கள் கடைகள் பக்கம் பரிசுகள் வாங்க  திரும்பத்  தொடங்க வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு விலையை அதிரடியாகக் குறைக்க எங்கும் திருவிழாக் கோலம் தான். சில பண்டங்களை வாங்க இணைய தளத்திலேயே பதிவு செய்ய முடியும்; அனேகமாக இப்படிப்பட்ட எல்லா பண்டங்களுமே இலவசமாக வீடு தேடி வருகிறது.



சில சமாச்சாரங்கள் சந்தையில் தான் அடி மாடு விலை என்பதால் கடை திறக்கும் போதே வெள்ளம் அலை மோதுகிறது. இங்கு காத்திருந்து, பின் கதவு திறந்தவுடன் ஓடி வரும் கூட்டம் உண்மையிலேயே Door Buster என்ற பதத்தை நியாயப் படுத்துகிறது.

நேற்று எடுத்ததாகச் சொல்லப்பட்ட , மக்களின் ஷாப்பிங் பசியைக் காட்டும் இந்த காணொளிக் காட்சி பிரமிக்க வைக்கிறது : https://youtu.be/SA5P4MsNGfI

ஜே சி பென்னி போன்ற பிரபலமான சில கடைகளில் அதிகக் கூட்டத்தில் கேட்ட குரல்கள்:
' மாப்பிள்ள , ஒரு மணி நேரமா கியூவே நகரல்லே '
'பசிக்குதுன்னா இப்ப என்னம்மா பண்றது, லைன விட்டு போக முடியாதே'
'ஏமண்டி , இக்கட....."  - - - - - போன்றவைகள் உண்மையிலேயே கேட்ட சில குரல்கள்

ஐம்பது இன்ச் டிவியைக் கூட வாங்கிக் கொண்டு தானே அதைத் தூக்கிக் கொண்டும் ஒருவர் பஸ்ஸில் போகிறார், அவர்களே வீட்டில் போய் பொருத்தியும் கொள்ளுவார்களாம். இங்கு இதைத் தூக்கிக் கொண்டு போக வண்டியோ, ஆட்களோ கிடையாது.

 ஒரு கடையின் வாசலில்  குவித்து  வைத்திருந்த மலை போன்ற சாமான்களைப் பார்த்து, எனக்கு வீட்டுக்கு வந்து கூட வெகு நேரம் தூக்கமே வரவில்லை - இதை எப்படி எடுத்துப் போகப் போகிறார்கள் என்று நினைத்து!

எல்லா பொருள்களுக்குமே கணிசமான தள்ளுபடி இருந்தாலும் அதற்க்கு பில் போட்டு பணம் கொடுப்பதற்க்குள் நாக்கு தள்ளி விடுகிறது. இவ்வளவு வியாபாரம் நடக்கும் இந்தக் கடைகளில் எனக்கென்னவோ வாடிக்கையாளர்களை இன்னும் சீக்கிரமாக அனுப்ப அவர்கள் வழி செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரு காலத்தில் ஆங்கில வருட முதல் தேதியில் நம்மூரில் விவேக் போன்றவர்கள் இப்படிப் பட்ட 'அள்ளிக் கொள்ளுங்கள், அதிரடி விலையில்' போன்ற சந்தைகளில் நிமிஷமாக பில் போட்டு பார்சல் பண்ணி விடுவார்கள். இங்கு மால்களிலும், ஷாப் ரைட், காஸ்ட்கோ  போன்ற மகா சந்தைகளும் கூட பில் போடும் கௌண்டர்கள் மிகக் குறைவு. வாடிக்கையாளர்களின் பொறுமையை இப்படிச் சோதிக்கக் கூடாது.

ஆனால் இன்றைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டது போல் கோடிக்கணக்கான பொது ஜனங்கள் 4500 இணைய தளங்கள் வழியாகவும் , நேரிலும் வந்தும் கடைகள் திறக்கும் பொழுதே உள்ளே விரைந்து   'என்ன நடந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வாங்கியே தீருவேன்' என்ற முடிவுடன் இருப்பதாலும் , 1200 கோடி டாலர்கள் வியாபாரம் நடப்பதாலும், இதைக் கறுப்பு வெள்ளி என்று சொன்னாலும் வியாபாரிகளுக்கு என்னவோ சுபீக்ஷ வெள்ளியாகத் தான் இருக்கிறது !   

Monday, November 16, 2015

பிள்ளை தேடும் பருவ மழை

ஒரு காலத்தில்
மனிதன், விலங்குகளை வேட்டையாட
விலங்குகள், தாம் பிழைக்க, மனிதனைத் துரத்த
ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தப்ப முயல
அனைவரும் ஓட ,
எல்லோருடனும் நிம்மதியும் ஓடத் துவங்கியது.

விலங்குகளை விரட்டிய மனிதனுக்கு மண்ணாசை வாட்ட,
விலங்குகள் வாழ்ந்த காட்டுக்கும்  சொந்தம் கொண்டாடலானான்

வனங்கள் அழிந்து வீடுகள் முளைக்க
மரங்களின் தாகம் தீர்த்த நீர் நிலைகளும் தேவையற்றுப் போக
ஆற்றுப் படுகைகளிலும் மனிதக் காடுகள் முளைக்கலாயின

தான் வளர்த்த பிள்ளைகளான மரங்களைத் தேடி
மாரி அவ்வப் பொழுது ஓடி வர
காணாமல் போன, பொழிந்து வந்த பாதைகளைத்  தேடி அங்குமிங்கும்  அலைய

ஆங்காங்கே நட்டு வைத்த மரங்கள் மறைந்து போய்
கான்க்ரீட் காடுகளை உற்றுப் பார்த்து உச்சி முகர
வழி தெரியாமல் ஓடும் என்னைப் பார்த்து

வெள்ளமே ஏன் வந்தாய் என்று
அதட்டுகிறார்கள் , புலம்புகிறார்கள்.

- நனைந்த தமிழகத்தின் நிலை நினைத்து
ஒரு குளிர்ந்த காலையில்
பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலிருந்து
மறுகும் ஒரு சென்னை வாசி

Wednesday, November 11, 2015

கண்டேன் சுதந்திர தேவியை

அமெரிக்கா வந்து சுதந்திர மாதாவைப் பார்த்து , அதனுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளா விட்டால் இந்தப் புண்ணிய பூமியை மிதித்த பலன் கிடைக்காது என்ற ஒரு அதீத நம்பிக்கையாலும் என்னுள்ளே இருக்கும் ஒரு உந்துதலினாலும் போன வார இறுதியில் அதைக் காண பயணப் பட்டோம். சாதாரணமாக இந்த அமெரிக்காவுக்கே விளக்கேற்றும் நங்கையைக் காண ஒன்றும் அதிக சிரமப் பட வேண்டாம். ஆனால் இந்த சிலையின் தலை அருகே போய்ப் பார்க்க கொஞ்சம் பிரயத்தனப் பட வேண்டும். சில மாதங்களுக்கு முன்னமேயே முன் பதிவு செய்ததால் இந்த மாதாவின் தலை அருகே கிட்டத்தட்ட 100 மீட்டர்களுக்கு மேல் ஏறிச் சென்று பார்க்க முடிந்தது .
ஆனால் இங்கு போக ஏகப் பட்ட முன்னேற்பாடுகள், முஸ்தீபுகள் - எதை எடுத்துக் கொள்ளலாம் எது கூடாது போன்றவைகள் ஒரு பெரிய அட்டவணையாக போடப் பட்ட வலைத் தளத்தை படித்து விட்டுப் போவது உசிதம். சில அபாரமான போட்டோஜெனிக் காட்சிகளைக் கடந்து லிபர்ட்டி பார்க் போவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடி. விமான நிலையம் போல் பெல்ட், ஷூ, ரிஸ்ட் வாட்ச் எல்லாவற்றையும் கழட்டிய பின்னும் நான் வைத்திருந்த மூக்குக் கண்ணாடிக் கூட்டை வாங்கி வெகு ஜாக்கிரதையாக ஏதோ தொடக் கூடாத பொருளைப் பார்ப்பது போல் ஆராய்ந்து திருப்பிக் கொடுத்தார்கள். நம்ம ஊர்ப் பெண்களுக்கு அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகளால் மேலும் தலைவலி. மாட்டார்கள் என்று தெரிந்தும் கழற்ற முடியுமா என்று கேட்டு அதி தீவிரப் பரிசோதனைக்குப் பிறகு ஒரு வழியாக அனுமதித்தார்கள். இவற்றுக்கெல்லாம் மேல் வானத்தில் எப்பொழுதும் 'விர்ரிட்டுக்' கொண்டிருக்கும் ஹெலிகாப்டர்களின்  ஒலி - இந்நாட்டில் பழகிக் கொள்ள வேண்டிய ஒன்று.

கரையிலுருந்து கொஞ்ச தூரம் படகுச் சவாரி - மிஸ் நியூஜெர்ஸி , மிஸ் ப்ரீடம் என்று பெயரிடப்பட்ட இந்தப் படகுகளில் நூறு பேருக்கு மேல் ஏறலாம், அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் தலைக்கு மேல் தெரிந்தது. கிளம்பியவுடன் படகு ஓட்டுனர் அன்பாக வரவேற்று இந்தச் சவாரியின் மகிமையை சிரமம் பார்க்காமல் விவரித்தார். பாவம் அதைக் கேட்கத்தான் ஆட்களில்லை- ஏனென்றால் படகு நகர்ந்தவுடன் கூடவே தொடரும் அருமையான காட்சிகளைப் படமெடுப்பதில் அனைவரும் பிஸி.

ஒரு சிறிய சவாரிக்குப் பின் , எல்லிஸ் தீவைக் கடந்து அந்தத் தீவை நெருங்க நெருங்க , சுதந்திர தேவியின் பிரம்மாண்டமான சிலை நம்மை அணுக சுற்றிலும் ஒரு பரபரப்பு. ஒரு சாதாரணப் பச்சை நிறத்திலுள்ள சிலையின் கையில் பளபளப்பாக எரியும் ஒரு சுதந்திரத்   தீச்சுவாலையைப் பார்த்துக் கொண்டே தீவினுள் போனால் இன்னாட்டிற்க்கே உரித்தான ஒரு ஒழுங்கு தெரிந்தது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைகளுக்கேற்ப்ப, சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு முதலில் கண்ணில் பட்ட இடங்கள் கேண்டீனும் , கழிப்பறையும் தான்.

உள்ளே நுழையும் முன் மற்றுமொரு தீவிர சோதனை - அதி முக்கியமான சமாச்சாரங்கள் தவிர எல்லாவற்றையும் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க அறிவுறுத்தல் - இரண்டு டாலர்களுக்கு இந்தப் பெட்டகத்தை வாடகைக்கு எடுப்பது ஒரு இனிய அனுபவம் - இரண்டு டாலர் நோட்டுகளை உள்ளே தள்ளினால் எந்த உயரத்திலுள்ள பெட்டகம் நமக்குத் தேவை என்று கேட்கிறது, அதன் பின் நம் கை ரேகையை பதிவு செய்து கொண்டு அது தான் பெட்டகத்தின் சாவி, நீ வரவில்லை எனில் அது காலி என்று மிரட்டி விட்டு நகர்ந்தால் மற்றொரு பெண்மணி நம் டிக்கெட்டுகளை வாங்கி நமது அடையாளச் சீட்டையும் வாங்கி அதிலுள்ள போட்டோ நீ தானா என்று முகத்தருகே வந்து ஆராய்ந்து உறுதி செய்து கொண்டு ஓகே சொல்கிறார். எதற்க்கு இவ்வளவு கெடுபிடி என்று கேட்பதற்குள் கூட வந்த நமது உள்ளூர் ஆசாமி 'மிகச் சுதந்திரமாக , நட்பாக இருக்க விட்ட இவர்களை இப்படி மாற்றியது நடந்த பல கசப்பான சம்பவங்கள் தான் ' என்பதை மறுக்க முடியவில்லை.

இவற்றையெல்லாம் தாண்டி மற்றொரு அறைக்குள் போனால் அன்பாக உங்களை வரவேற்று, எவ்வழி செல்ல வேண்டும் என்று உதவி, நமது வருகை இனிமையாக அமைய வாழ்த்துகிறார் ஒரு வரவேற்ப்பாளர் . இதைத் தாண்டி ஒரு சின்ன பொருட்காட்சியகம்  - அதில் இந்தச் சிலையின் பூர்வீகம், எந்தெந்த வருடங்களில், எப்படி செய்யப் பட்டது, அதைச் செய்ய பயன் படுத்திய கருவிகள் எல்லாம் வைக்கப் பட்டிருந்தன.


அதையும் தாண்டினால் ஏற ஆரம்பிக்கும் படிகள் மெதுவாகக் குறுகிக் கொண்டே போய் ஒரு இடத்தில் ஒருவருக்கு மேல் போக முடியாத அகலத்தில் உள்ளது. ஒவ்வொரு பத்து படிகளுக்குப் பிறகும் மூச்சு வாங்குபவர்கள் ஆஸ்வாஸம் செய்ய ஒரு சின்ன ஒதுக்குப் புறம்.



இப்படியாக ஒரு இருநூறு படி ஏறிய பின் சுதந்திர தேவியின் தலை அருகிலுள்ள 'கிரௌன்' எனப்படும் இடத்தை வந்தடைந்தால் அங்குள்ள ஒரு சிப்பந்தி அன்புடன் வரவேற்று அந்த இடத்தின் மகத்துவத்தை விளக்கி நமக்குப் புகைப் படம் எடுக்கவும் உதவுகிறார்.

'நீங்கள் பாவம் , நாள் முழுவதும் இங்கேதான் இருக்க வேண்டுமோ ' என்று உணர்ச்சி வசப்பட்டு  என்னுடன் வந்தவர் கேட்க',  அவர் ' இல்லை. இரண்டு மணி நேரம்  தான் நாங்கள் இங்கு இருக்க முடியும் . ஏனென்றால் 300 அடி உயரத்தில் இருக்கும் இவ்விடத்தில் பாத்ரூம் கிடையாது ' என்று சொன்னவர் நாங்கள் திரும்பும் பொழுது டியூடி முடிந்ததோ இல்லை வேறு என்ன அவசரமோ- எங்களுடனேயே  இறங்கியும் வந்து விட்டார்.

இந்த சிகரத்திலுருந்து பார்த்தால் புகழ் பெற்ற ப்ரூக்ளின் பாலத்திலுருந்து எல்லாமே பொம்மை போல் தெரிந்தது. எங்கு திரும்பினாலும் போட்டோ எடுக்கத் தூண்டும் காட்சிகள்.
திரும்பும்  பாதையும் அதே ஒற்றையடியாக  இருந்தாலும் அது ஒரு வழிப்பாதையாக இருந்தது. வருபவர்கள் விழாமல் பிடித்துக் கொள்ள பளபள உலோகத்தில் கை பிடித்துக் கொள்ள வசதியாக கம்பிகள்- சுத்தமாகவும் இருந்தது.

கொலைப் பசியுடன் கீழிறங்கி வந்தால் மூடிக் கொண்டிருந்த கேண்டீனில் கிடைத்த இலை தழைகளை கொறித்த பொழுது நமக்கு கம்பெனி கொடுக்க வந்த பல ஸீகல் பறவைகள்  ரிச்சர்ட் பாஷை நினைவுப் படுத்தின. இப்படிப்பட்ட அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு வரும் பொழுது மக்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :  ஐ டி கார்ட் கண்டிப்பாகத் தேவை - இல்லா விட்டால் திருப்பி அனுப்பப் படுவீர்கள்; பசிக்கு என்ன கொண்டு சென்றாலும் மேலே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது; நடப்பதற்கு, படி ஏறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பழகிக் கொள்வது நல்லது. அனேகமாக நீங்கள் திரும்பும் பொழுது கேண்டினும் கடையைக் கட்டி விடுகிறார்கள் - ஆகையால் காலை வேலைகளின் முற்பகுதியில் முன் பதிவு செய்வது புத்திசாலித் தனம் .

எத்தனை சிரமமிருந்தாலும் பார்க்க வேண்டிய ஒரு இடம். கால் வலித்தாலோ, மூச்சு வாங்கினாலோ வீடு திரும்பியபின் அமிர்தாஞ்சன் தடவி சரி செய்து கொள்ளலாம். என்நேரமும் , எந்த தட்ப வெட்ப நிலையிலும் கையை உயர்த்தி சுதந்திரத்தின் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் அந்தப் பெண்மணியைக் காண இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம்.

இந்தப் இடத்தின் முக்கியத்தை உணர்த்தவும், சில பிரமிப்பான காட்சிகளைக் காணவும் அங்கங்கே இணைத்துள்ள சில புகைப் படங்களையும் காண இதை http://chinthikkiren.blogspot.com/  என்ற தளத்தில் படிக்க அன்புடன் அழைக்கிறேன்.