Wednesday, December 24, 2014

மாறு பட்ட மார்கழி

ஒவ்வொரு மார்கழியும், இத்தனை வருடங்களாக, மயிலை மாட வீதி பஜனையுடன் திருப்தியாக ஓடிக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் அது கொஞ்சம் புரண்டு முப்பது நாட்களில் முப்பது கோவில்களாக மாறி ,மயிலையில்  நம்மைச் சுற்றி இவ்வளவு கோவில்களா என்று வியக்க வைத்தது. 

இம்முறை பாதை மாறி, ​கிருஷ்ண ​கா​ன சபா கூட்டிச் சென்று ஒரு பஜனை கலந்த காலட்சேபத்துக்கு அறிமுகப் படுத்தியது.   காலட்சேபதற்க்கு அப்பாற்ப்பட்டு இந்த நிகழ்வுக்குப் போவதிலேயே சில சவால்கள் இருந்தன. தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தாலும் கிளம்பவே 6.30 ​ஐ​  தாண்டி விடும்.காலைப் போழு​தென்பதால் முப்பாத்தம்மன் கோவிலருகில் வண்டி நிறுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.   

​கி​ருஷ்ண கான சபா- ஒரு பெரிய அரங்கு தான். சௌகரியமான இருக்கைகள். அனுமதி இலவசமானாலும் , ஒரு நிதானமான கூட்டம் தான் காலை ஏழு மணி வரையில், பின் போகப் போக அதிகரிக்கும். 

நிறைய நாற்காலிகள் இருப்பதால் உட்கா​ரும் இடத்தை கொஞ்சம் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். முதல் நாள் மேடைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில்.  ஆனால் போகப் போக பாகவதவரின் குரல் வளமும், சபாவின் ஒலி பெருக்கிகளும் செவிப்பறையை ஒரு கை பார்த்தது.  பத்து நாட்கள் கழித்து இன்றைய நிலை கடைசியி​லிருந்து ஒன்றிரண்டு வரிசை முன். சௌகரியமான இடம் பார்த்து உட்கார்ந்தால் மட்டும் போதாது. நமக்கு முன்னால் உட்காரப்,போகும் அன்பரின் உயரத்துக்கு விட்டலனை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டி இருந்தது. நேற்று ஒரு மாமிக்கு பாதி நேரம் தனக்கு முன்னால் உட்காருபவரை விரட்டுவதிலேயே கழிந்தது! ஆனால் அந்த விரட்டலில் உள்ள நியாயம் எனக்குப் புரியவில்லை- ஒரு வேளை என் உயரமும் அடிக்கடி ​ஞா​பகத்துக்கு வருவதாலோ என்னவோ ​!​
  
சபாக்காரர்கள் கொஞ்சம் இருக்கைகள் போடுவதில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் - முன்னால் உட்காருபவர்கள் மறைக்காமல். கல்லூரிகளில் அந்தக் காலங்களிலேயே கேலரி எனப்படும் கொலு போன்ற அமைப்பில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் , பல்வேறு உயரங்களில் இருந்தாலும் இது போன்ற சவால்களை சந்தித்ததே இல்லை. இவ்வளவு பிரபல​மான​ பல்​லா​ண்டுகளாக இருக்கும் சபா இதை எப்படி கோட்டை விட்டதென்று புரியவில்லை .

நடத்துபவரின் குரல் வளம் , பாடும் பாட்டுக்களிலும் உள்ள பக்தி தோய்ந்த பொருள், பக்க வாத்தியங்கள் பல மக்களை எழுந்து ஆட வைத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை- இந்த சம்பிரதாயத்துக்கு உரியது தான்.
  
சபாக்காரர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு சமாச்சாரம். அடுத்த நிகழ்சிக்காக வரும் கூட்டத்தை கொஞ்சம் ஒதுங்க வைத்து வெளியேறுபவர்கள் போன பின்பு அனுமதிக்கலாம். சில நாட்களுக்கு முன் ஏறக்குறைய அரங்கேறவிருந்த ஒரு தள்ளு முள்ளு கண்டிப்பாக தவிர்க்கப் பட வேண்டியது- குறிப்பாக வரும் முதியோர்களை மனதில் கொண்டால்.   

வெளியே பிரதமருடன் சேர்ந்து இந்தியாவை குப்பை இல்லாத நாடாக்குவதற்க்கு குரல் கொடுத்த அதே பெரிய மனுஷர்கள் தான், தான் முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய டிக்கட்டை பெருமையுடன் எங்கு பார்த்தாலும் கசக்கிப் போட்டு அரங்கை அசிங்கப் படுத்தியிருந்தார்கள் !

ஆனால் இவ்வளவு பிரபல காலட்சேப கோஷ்டியை கூட்டி வந்து, இத்தனை பெரிய பக்தர்
​ கூட்டத்தை சமாளித்து இலவசமாக ஒரு நிகழ்ச்சியை சுமார் இரண்டு வாரங்களுக்கு நடத்தும் நல்ல உள்ளம் கொண்ட அமைப்பார்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. சௌகரியமா​க  இருக்கையில் அமர்ந்து, மிதமான குளிர் கட்டுப்படுத்தப் பட்ட அரங்கில், கண்களை உறுத்தாமல் ​உள்ள வெளிச்சத்தில் ​இரண்டு மணி நேரம் நம்மை ​மெய் ​மறக்கச் செய்ய இவர்களுக்கு எப்படி கட்டுப்படியாகிறது என்று எண்ணி கொண்டு வரும் தட்டில் கொஞ்சம் தாரளமாக போடத்தான் தோன்றுகிறது.   

​உள்ளேயே அமைந்திருக்கும் ஒரு சிறிய கேண்டினும் மற்ற சபாக்களில் உள்ள பிரபல சமையல் வல்லுனர்களுக்கு சவாலாக  இல்லாத போதிலும் சுவையான சிற்றுண்டியை வழங்கிக் ​கொண்டிருக்கிறது.

காலட்சேபம் நடத்தும் கோஷ்டி பற்றி -சில வார்த்தைகள்- மிகுந்த கட்டுக் கோப்புடன் உள்ள ஒரு குழு. அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் மேடையில் அமர்ந்து கருமமே கண்ணாக பாகவதருக்கு உதவி ​, வாங்கிப் பாடி ஒரு நல்ல அருமையான சேவை செய்கிறது. 

கவனித்து, சந்தோஷப்பட்ட மற்றொரு விஷயம் - வந்தவர்களில் கணிசமானவர்கள் இன்றைய இளை​ஞர்கள், இளைஞிகள். நன்கு உன்னிப்பாக கவனித்து, கை தட்டி, தாளம் போட்டு, குறிப்புகள் எடுத்து சில நேரங்களில் தாளத்துகேற்ப்ப நல்ல நடனமும் ஆடுகிறார்கள்.   

சபையின் சேவை தொடரட்டும். மார்கழியின் மற்றொரு பரிமாணத்தை நன்கு அனுபவிக்க ​உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. .

Sunday, November 30, 2014

அன்று சொன்னது

சில நாட்களுக்கும் முன் படித்த செய்தித் தாளில் ஒரு அதிச்சி தகவல் -  "நம்ம வீட்டு சமையலறையில் கூடத் தொடங்கலாம், நாம் மிகவும் பயப்படும் தொற்றுக் கிருமிகள்" என்று !

ஆம், பெருநகரங்களில் சில ஆயிரம் வீடுகளில் விசாரித்ததில், இவர்களில் பெரும்பாலோர் வாரம் ஒரு முறை கூட சமையலறையை கிருமி நாசினி போட்டுக் கழுவுவது இல்லையாம். நிறையப் பேர் மாதம் ஒரு முறை தான் மிகச் சுத்தமாகக் கழுவுகிறார்களாம். 

இதனால் என்னவாகும்? பல வகை வயிற்று நோய்கள் வருமாம். சமையலறை பார்ப்பதற்க்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாதாம்- அதை தகுந்த விதமாக சுத்தமும் செய்யணுமாம். இந்த அவசர யுகத்தில் தினமும் இதையெல்லாம் செய்ய முடியாது தான் - அப்படிச் செய்தால் ஒண்ணா நடு நிசிக்கு முன்னாடி படுக்க முடியாது, இல்லைன்னா வெளிச்சாப்பாடு அதிகமாகும். 

ஆனால் குடிப்பதற்க்கு மினரல் பாட்டில் வாங்கும் நாம் இதற்க்கும் பயப்பட்டும், செலவழிக்கவும் வேண்டியது தான்.

இதற்க்காகத்தான் அந்த நாட்களில் பல விஷயங்களை நடைமுறையிலேயே வைத்திருந்தார்கள்.

அந்நாட்களில் உபயோகப் படுத்தும் மண் அடுப்பை தினமும் பசுஞ்சாணி போட்டு மெழுகுவார்கள்- ஏன்னா சாணி ஒரு  மிகச் சிறந்த கிருமி நாசினி. தரையை சாணி போட்டுத் துடைப்பார்கள். சாப்பிட்ட இடத்தை சாணியுடன் , மஞ்சள் தூள் கலந்து துடைப்பார்கள்- பூச்சி எப்படி வரும்?

ஆனால் டைனிங் டேபிள் வராத, தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட காலமது. இப்பல்லாம் சாப்பாட்டு மேசைக்கு வண்ணத் துணியை போர்த்தி, கீழே சிந்தாமல் நாசூக்காக சாப்பிடும் காலத்தில், சாணியை எங்கு மெழுகுவது?

தினமும் வாசலில் நன்றாகக் கழுவியபின்னும் , அரிசி மாவில் கோலம் போட்டு புண்ணியத்தையும் சம்பாதித்து, அதே சமயம் கொத்தித் தின்ன வரும் பறவைகளினால் எந்த பூச்சி பொட்டும் வராமலும் காத்தார்கள். இதையும் மீறி வாசல் கதவு இடுக்குகளில் உள்ள துவாரங்கள் வழியாக ஏதும் உள்ளே வரக்கூடாதென்று, ஒவ்வொரு வெள்ளியும் வாசக்காலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்தார்கள்.

இந்நாளிலோ, வாசக்காலுக்கு மஞ்சள் வண்ண பெயின்ட் அடித்து, வாசலிலும் ஸ்டிக்கர் கோலம் வைத்து விடுகிறோம். ஆனால் சாணி சமாசாரங்களை இன்றும் கடைப்பிடித்தால் பொருளாதாரத் தட்டுப்பாடும், வேலை வாய்ப்புகளும் பாதிக்கப் படும். பெஸ்ட் கன்ட்ரோல் ஆசாமிகள் வந்து கான்டிராக்ட் போட்டு பத்தே நிமிடத்தில் புஸ் புஸ் என்று எதோ அடித்து நாலு மாசம் கழித்து வருகிறேன் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் உடல் நலம் கருதி ஒத்துக் கொண்டால் கூட, சாணிக்கு எங்கே போகிறது? மாடுகளை பட்டிணத்திலுருந்து நெட்டித் தள்ளிய பால் பூத்துகளில் கிடைக்குமா?

நம் முன்னோர்கள் இந்த மாதிரி பல சமாச்சாரங்களை விட்டுச்சென்றார்கள். என்ன - காரணங்களைச் சொல்லலாமல் விட்டு விட்டார்கள்.  ஏனென்றால் அந்தக் காலத்தில் கேள்வி கேட்காமல் பிள்ளைகள் செய்வார்கள். மேலும் , எதிலுமே ஒரு இலை மறைவு காய் மறைவு இருந்தது. பிற்காலத்தில் பிள்ளைகள் இப்படி முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி வேறென்னல்லாம் சொல்லிருக்காங்க , கொஞ்சம் பார்க்கலாம்:

க்ரஹணத்தின் போது சாப்பிடாதே , வயிற்றைக் காலியாக வை- கதிர் வீச்சுக்களினால் ஜீரணக் கோளாறு வரும் என்று

எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு, விளக்கை அணைத்துப் படுத்து விடுவார்கள், மறுநாள் விடியலில் எழுந்திருப்பதற்க்கு. என்ன அந்தக் காலத்தில் டீ வியும் கிடையாது சீரியல்களும் கிடையாது நம்ம ஊர்ல!  இன்றும் அமெரிக்கர்கள் மாலை ஐந்து மணிலேந்து டின்னர் ஆரம்பிச்சுடராங்க. ஏன்னா, அங்கெல்லாம் காலை ஏழு மணிலேர்ந்தே வாடிக்கையாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கி விடும். லேட்டாவே எழுந்து பழக்கப் பட்ட நம்ம மக்கள், அங்கே போய் ரொம்ப கஷ்டப் பட்டு மாத்திக்கறதாகக் கேள்வி.

தோப்புக் கரணம் - இன்று யோகா வகுப்பில் சொல்கிறார்கள் , காது நுனிகளை மஸாஜ் செய்யும் பயன்களை.

பாழும் நெத்தியோட இருக்காதே - இன்று பல ஆராய்ச்சிகள்  நெற்றியில் பூசப்படுபவைகளின் பலன்களைப் பற்றியும் பொட்டு வைக்கப்படும் அந்த இடத்தின் மகிமை பற்றியும் பல விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன.

வடக்கே தலை வைத்துப் படுக்காதே - தெற்க்கு , வடக்கு துருவ சமாச்சாரங்கள் தான்

தொடை தட்டாதே - சில வகுப்பினர் இதை மயானங்களில்தான் செய்வதால்.

வெளியில் போகக் கிளம்பும் பொழுது தடுக்கினால் கொஞ்சம் உட்கார்ந்து, தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வது- மனத்தடுமாற்றத்தை சரி செய்து  அமைதிப் படுத்திக் கொள்ளத்தான்.

முதல் நாள் வயிற்றைக் காயப் போட்டால், மறு நாள் கண்டிப்பாகக் கீரை சாப்பிடுவது, காலி வயிற்றில் சுரந்து ஏமாந்து போன அமிலங்களின்  கோபத்தை சரிக் கட்டத்தான். இது போலத்தான், இரவில் கீரை வகைகள் சமைப்பதும், சாப்பிடுவதும்- அஜீர்ணத்தைக் கருதியும், இரவில் சமைக்கும் கீரைகளில் உள்ள பூச்சிகள் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் இருப்பதால். கிருபானந்த வாரியாரின் ஒரு உரையில் கேட்டது ஞாபகம் வருது:  "தவிர்க்கப் படவேண்டியவைகள்- இரவில் தயிர், சுடுகாட்டுப் புகை, தன்னை விட மூத்த பெண்களுடன் தகாத உறவு"

அன்று மூத்தோர்கள் சொன்ன பல விஷயங்களை கேள்வி கேட்காமல் செய்தாலே போதும் என்று தான் தோன்றுகிறது.

கண்ணதாசன் சொன்னது போல் "அன்று சொன்னதில் ,நிறைய அர்த்தங்கள் உள்ளது" போல. நம்ப மக்களும் இதெல்லாம் விளக்கிச் சொன்னா கேட்டுப்பானுக. சொல்லத்தான் பல பெரிசுகளுக்கு தெரியவமுல்லை, பொறுமையுமில்லை.

Thursday, November 27, 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்

ஓரளவு தெரிஞ்ச இங்லீஷை வச்சு இந்தியாவில் எல்லா எடத்துலேயும் ஒப்பேத்திடலாம்னு தான் நினைச்சுண்டு இருந்தேன், சென்னையை விட்டு  நகராத வரை.

1981ல் நண்பர்களெல்லாம் இல்லாமல் தனியாக கல்கத்தா, டெல்லி, ஜெய்பூர், பம்பாய் போன போது, முதன் முறை உறைத்தது. வண்டி விஜயவாடா தாண்டும் வரை எல்லாம் சுகமே. கரக்பூரில்  டீ எவ்வளவு என்று  கேட்டதற்கு கடைக்காரன் என்ன பதில் சொன்னான் என்பது ரயில் கல்கத்தா போகும் வரை புரியவில்லை. ஹௌரா ஸ்டேஷனில் என் அண்ணன் என்னை ஜாமினில் கூட்டிப் போகாமலிருந்தால் அப்படியே சென்னை திரும்பி இருப்பேன்.

கல்கத்தாவிலிருந்து டெல்லி போக ரயிலில் உட்கார்ந்தவுடன்  சுற்றி வர புரியாத பாஷை பேசினதைப் பார்த்து நான் பயந்த போது என் அண்ணன் தான் தைரியம் சொல்லி அனுப்பி வைத்தான். அவர்கள் என்னைப் பற்றித்தான், தென்னிந்தியாவையும் சேர்த்து, கொஞ்சம் மோசமாகப் பேசியதை சொல்லவே இல்லை. ராத்திரி பதினோரு மணிக்கு எதற்க்கு 'அண்டா' விற்கிறார்கள் என்பது என் ஹிந்தி பண்டித நண்பன் டெல்லியில் சொல்லத்தான் புரிந்தது.

அதன் பின் 1987ல் காஷ்மிர் பயணத்தின் போது, ஷாலிமார் எக்ஸ்ப்ரெஸ்ஸில் நாங்கள் பட்ட பாடு, இப்பொழுது நினைத்தாலும் அடி வயிறு கலங்குகிறது. நடு ராத்திரியில் சில போலிஸ்காரர்கள் எங்களுக்கு அருகில் சீட்டாடிக் கொண்டிருந்த ஒரு தமிழ் பேசும் வங்கி ஊழியர் கும்பலை சந்தேகத்துடனேயே கேள்விகள் கேட்டு, சில பண்ட மாற்றுகளுக்கப்புறம் தான் விட்டார்கள். நானும் என் நண்பனும் அது வரை பேசிக் கொண்டே வந்தவர்கள், இவர்களின் மிரட்டலைக் கேட்டவுடன், அப்படியே சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டோம் - தூங்கத்தான் இல்லை. பாஷை புரியா விட்டாலும் அவர்களின் மிரட்டலில் விளைந்தது அவ்வளவு திகில் !

83க்கப்புறம் வந்த கிரிக்கெட் ஆர்வத்தால்  தூர்தர்ஷனின் ஒரே சானலில் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் பொழுது 'அச்சி கேந்த்' புரியாவிட்டாலும் , நேரொளியால் சமாளிக்க முடிந்தது.

குடியரசு தினமோ, சுதந்திர தினமோ தொலைகாட்சியில் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயன்றும் எந்தப் பலனும் இல்லை. இன்றும் பிரதமரும், ஜனாதிபதியும் யாருக்காக  உரைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 'ஜெய் ஹிந்த்' சொல்லும் வரை காத்திருப்பது வழக்கமாகி விட்டது, அடுத்த நிகழ்ச்சிக்குப் போக

மூஞ்சி புத்தகத்தில் வரும் முக்கிய ஆங்கில செய்தி சானல்களில் போடும் வீடியோக்களிலும் இந்தியிலேயே பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், சண்டை போடுகிறார்கள். எதுக்குன்னுதான் தெரியவும் புரியவும் மாட்டேங்கிறது.

சரி நம்ம ஊர்ல தான் இப்படின்னா, அண்டை மாநிலமான கேரளத்துக்குப் போனா சம்சாரிக்கிறார்கள். ஆந்திராவில் மாட்லாடுகிறார்கள், மஹாராஷ்டிரத்தில் அச்சாவாக 'போல்" என்கிறார்கள்.

இதென்ன கொடுமை. என் நாட்டினுள்ளே,  நான்  இருக்குமிடத்தை விட்டு சில மணி நேரங்கள் போனாலே எந்த பாஷை தெரிய வேண்டும் என்று குழம்ப வேண்டி இருக்கே?

ஒரு சில தென் மாநிலங்களைத் தவிர எல்லா இடத்திலும் ஹிந்தியை வைத்து நடமாட முடியும் போலிருக்கிறது. மக்கள் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும், அதில் எத்தனை கட்டாயம், எது கட்டாயமாக கூடாது என்று இப்பொழுது இருக்கும், இன்னும் வரப்போகும் கட்சிகள் அனைத்தும் உரையாடிக் கொண்டே இருக்கட்டும். நம்ப ஊர்ல மட்டும் பிடிவாதமாக கூடாது என்று சொல்லி தள்ளி வைத்த ஹிந்தியை தெரிஞ்சுண்டால் தான் அடுத்த சுற்றுலாவில் கொஞ்சம் தைரியமாக கடையில் வேண்டியதைக் கேட்டு வியாபாரம் செய்ய முடியும்.  நம்ப வேலையைப் பாக்கலாம், அவர்கள் அவங்க பொழப்ப பார்க்கட்டும்.

ஏன்னா பேசின் ப்ரிட்ஜ் தாண்டினாலே 'வாயிருந்தும் சொல்வதற்க்கு வார்த்தை இன்றி தவிக்க' வேண்டி இருக்கு.


Tuesday, November 25, 2014

மீண்டும் அண்ணா சாலை

மாநகரப் பேருந்து என்ற அன்றைய பல்லவன் புதிய பாதையில் ஸ்மித் ரோடு வழியாக வந்து ,எப்பொழுதுமே கும்பலாக உள்ள இரானியைக் கடந்து,  டீ வீ எஸ் அருகாமையிலுருந்து அண்ணா சாலையில் நுழைந்த போது, பஸ் மட்டுமல்ல, நினைவுகளும் வழுக்கிக் கொண்டு ஓடின- கொஞ்சம் பின்னோக்கி !

1977ல் தொடங்கியது, முதலில் சாப்பாட்டு வேளையில் ஒரு சின்ன உலா. ஆர்ட்ஸ் காலேஜ் வரை சென்று ஒரு கிழவியிடம் வேர்க்கடலை வாங்கத்தான் நேரமிருக்கும், ஆனால் அதை தவற விட்டதே இல்லை. அன்றைய நாட்களில் வங்கிகள் நடத்திய வினோதமான ஒரு மணி ஸ்ட்ரைக் போதும் இந்த உலா கை கொடுத்தது. பகல் வேளை வெய்யிலில் அன்றைய ஸ்பென்சரிலோ அல்லது ஹிக்கின்பாதத்திலோ தஞ்சம்.  பின் ஆபீஸ் முடிந்து எல்லோரும் , ஒரு நான்கைந்து பேர், கிளம்பி பொடி நடையாக சாந்தி தியேட்டர் வந்து அங்குள்ள 'கோபி, டே' என்று வினோதமாகப் பெயர் கொண்ட  கடையில் டீயில் ஆரம்பித்து, நாட்டு நடப்புகளெல்லாம் பேசி அவ்வப்போது வந்து வந்து அக்கடைக்கு வியாபாரம் கொடுத்துகொண்டிருப்போம்.   

என்னவெல்லாம் பேசினோம் - தமிழ்த் திரையுலகம் தொடங்கி, அன்றைய ஆபீஸ் சமாச்சாரங்களை பேசி, சிரித்து, சிலரைத் திட்டி, சிலரை புகழ்ந்து, சிலரை எண்ணி வியந்து, உலக விசயங்களைத்  தொட்டு, கமலா- ரஜினியா, விம்பிள்டன், 83 உலகக் கோப்பை, ருத்ரையா... எல்லாம் அந்த அண்ணா சாலை என்ற அப்பொழுதைய மௌண்ட் ரோட்டில் தான், அண்ணா தியேட்டர் படிகளில் தான், அந்தக் கடை அருகில் தான். சில சனிக்கிழமைகளில்  தியேட்டர்களில் ஐக்கியமானதும் உண்டு. பேச்சு ரொம்ப சுவாரசியமாக இருந்தால் அப்படியே நடந்து வந்து மயிலாப்பூரில் மிச்சமிருந்த நண்பனை பெசந்த் நகருக்கு கடைசி பஸ்ஸில் ஏற்றி விடுவதும் உண்டு. வாகனம், செல் போன் எதுவுமில்லாத அந்த நாட்களில் சரியாக இந்த இடத்தில் அனேகமாக எல்லாருமே வந்தது இன்று ஆச்சரியப் பட வைக்கிறது. வெயிலாவது, மழையாவது எதையுமே பொருட் படுத்தியதில்லை.

எங்கள் கும்பலின் சிலருடைய  எதிர்காலங்களும் இங்கு இப்படித்தான் நிர்ணயிக்கப் பட்டது. CA படித்தவன் ஐ ஐ எம் போனது, ஒருவன் எங்கள் வங்கியை விட்டு மற்றொன்றுக்குத் தாவியது, ஒருவன் பதவி உயர்வில் டெல்லி போனது, இப்படிப் பலப் பல. சிலருடைய குடும்ப சமாச்சாரங்கள், சிலருடைய கல்யாண முடிவுகள், அன்னாரின் பருவ நிலைக் கோளாறுகள், இது படிக்கலாமா வேண்டாமா போன்ற சீரியஸ் விஷயங்கள் எல்லாம் அலசப் பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் அது.

கூட்டம் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கினாலும், என் போன்ற, வேற்றிடம்  போகாத சிலரால் பிடிவாதமாக இந்த நடைபாதையின் பெருமை காப்பாற்றப் பட்டு கடை பிடிக்கப் பட்டது. நடு நடுவில் ஊரிலுர்ந்து மக்கள் சென்னை வந்தால் விவாதிக்கப் படாத ஒரு சந்திக்கும் இடமாகவே அது இருந்தது. 
  
அப்படிப் பட்ட அந்த திவ்ய ஸ்தலத்தை இன்று பார்க்க நேர்ந்தது. சேரனின் சைக்கிள் இல்லாமல், பாட்டு இல்லாமல் ஞ்யாபகம் மட்டும் வந்தது .

டீக்கடை, காலத்துக்கேற்ப மாறி இருந்ததில் ஆச்சரியமில்லை. 
அன்றைய மங்கல் விளக்கு இன்று கண்ணைப் பறித்தது, கூடுதல் விளக்கினாலா அல்லது தேய்ந்து வரும் கண்களினாலா என்று தெரியவில்லை. 
குடித்த டீ விலை ஏறி தரம் இறங்கி இருந்தது! 
வருவோர் கூட்டம் அப்படியே தான் இருந்தது. அந்தக் கடை உள்ள இடம் அப்படி. 

மெதுவாக நகர்ந்து அண்ணா தியேட்டர் பக்கம் போய்ப் பார்த்தால்.......

அதே படிகளில் ஒரு இளைய கூட்டம் அட்டகாசமாகச் சிரித்து , கலாட்டா பண்ணி சந்தோஷமாக இருந்தது. அது எழுந்து மெதுவே நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி - அதே கடைக்கு டீ குடிக்க அனைவரும் நுழைந்தது! 

அடுத்த தலை முறை வந்து அந்த சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய சந்தோஷத்துடன் 21 பஸ்ஸில் ஏறினேன், வீடு திரும்ப. கடிகாரம் ஏழு காண்பித்ததுதான் கொஞ்சம் உறுத்தியது. அந்த முட்கள் ஒன்பதை நெருங்காமல் , அந்த இடத்தை விட்டு நகர்ந்ததே இல்லையே!!    

Saturday, November 22, 2014

சென்னையின் வேறு முகம்?

சென்னையின் பெருமைக்குரிய,  'மால்' என்று நாகரீகமாக அழைக்கப்படும் 'துரித' சந்தை அது.

குமுறிக் கொண்டிருக்கும் வானத்தைப் பின் தள்ளி உள்ளே நுழைந்தால், வண்ண மயமான சந்தை வெளியுலகக் கவலைகளை மறக்கடிக்க முயற்ச்சித்துக் கொண்டிருந்தது. எஸ்கலேட்டரிலிருந்து இறங்கியவுடன், வெளியே பத்து ரூபாய்க்கு விற்கப்படும் சமோசாவை நாற்பது ரூபாய்க்கு வாங்கி , ஒரு காலத்தில் தெருக் குழாய்களில் இரு கைகளையும் குவித்து ஆனந்தமாய் பருகும் தண்ணீரை, சுத்திகரிக்கப்பட்டு  தவிர்க்கப் பட வேண்டிய ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கி , முதுகுப் பையில் வைத்துக் கொண்டு அவசரமாக இன்னும் சில ரூபாய்களை விரயம் செய்ய விரைந்து கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில் நாகரீகத்தினுள் நுழைந்த நடுத்தர வர்கத்தினர் இன்னும் பிரமிப்புக் குறையாமல் கழுத்தை சுத்தி சுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே  நகர்ந்தார்கள். 'எக்ஸார்ஸிஸ்ட்' படத்தில் வரும் பேய்ப்பெண்ணின் கழுத்து இவர்களுக்கு ரொம்ப உபயோகமாக இருந்திருக்கும்

அண்மையில்அமெரிக்காவிலிருந்து திரும்பிய தம்பதியர் அங்கு வாங்கிய தள்ளு வண்டியில் தூங்கும் குழந்தையை வைத்து, இங்குள்ள ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுக்கப் பிரம்மப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தார்கள்.

நெடு நாளைய சீமாட்டிகளோ, தாதிகளிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு முகத்தில் சலிப்புடன் பின் வரும் கணவன்மார்களுடன் சன்னல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். தாதிகள் பஞ்சு மிட்டாய் வண்ணப் புடவையில் கூம்பு ஐஸ்க்ரீமை தனக்கும் குழந்தைக்குமிடையே மாற்றி மாற்றி பகிர்ந்து கையில் வழியாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஆக மொத்தம் அனைவரையும் சந்தோஷப் படுத்தும், பல வண்ணங்கள் கலந்த , குறிப்பாக வாரக் கடைசிகளில் தோன்றும் சொர்க்கபுரி உற்சாகத்தில் திளைத்திருந்தது. அங்குள்ள மக்களின் ஒரே கவலை கையிலுருக்கும் ப்ளாஸ்டிக் அட்டையை எங்கு தேய்ப்பது தான் என்பது போலத் தெரிந்தது.

சில நடுத்தர தந்தைமார்களின் பாடுதான் ரொம்ப பரிதாபமாக இருந்தது. 'இதெல்லாம் இங்கே யானை வில சொல்வான் . வெளியில வாங்கிக்கலாம்" என்று சொன்ன புருஷனை , 'அற்பப் பதரே' என்பது போல் ஒரு பார்வை பார்த்து, "ஏங்க கூட்டிட்டு வந்துட்டு பிசு நாரித்தனம் பண்றீங்க" என்று பல்லைக் கடித்த மனைவியை, லீவு நாள் மூடு கெடுக்காமல் அவர் சமாளிக்க முயன்றது பாவமாகவும் , சிரிக்க வைப்பதாகவும் தெரிந்தது !!

சில மணிகளில் கால் வலிக்கத் தொடங்க, வாங்கிய பைகளும் கைகளில் ஏற வீட்டுக்குப் போக வாசல் பக்கம் வந்தால் பெரீய கூட்டம். குமுறல் தாங்காமல் வானம் மடை திறந்து தெருக்கள் வழிந்தோடிக் கொண்டிருந்தன.

பள்ளம் பார்த்து, நெளியும் கூட்டத்தூடே வண்டியைச் செலுத்தும் போது தான் தென்பட்டது அந்தக் காட்சி. பக்கத்தில் வந்த மீன் பாடி வண்டியில் தலையில்  ஒரு ப்ளாஸ்டிக் பையை குடையாக்கி பின்னால் தன் வீட்டம்மாவை உட்கார வைத்து சொட்டச் சொட்ட நனைந்தாலும் சிரமப் பட்டு மிதிக்கும் பெரியவர்.

அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த, மழையிலும் பள பளக்கும் காரை சிரமப் பட்டு முந்த முயன்ற மீன் மாடியை, கார் ஓட்டிய இளைஞர் மழைத் தண்ணீர் உள்ளே வராமல் கொஞ்சமாக கண்ணாடியை இறக்கி, பாப் கார்ன் பையை வெளியே  போட்டு விட்டு "பெருசு, என்ன அவசரம். வண்டில இந்நேரம் கோடு போட்டுருப்பே" என்றார்.

பெரியவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை என்றாலும் அவரின் மெல்லிய புன்னகை " உனக்கென்ன, நனையாமல் உள்ளே இருக்கே. எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் மிதித்தால் தான் நான் வீட்டுக்கே போக முடியம் . அப்புறம் தான் உலை வைப்பதெல்லாம்" என்றது போலிருந்தது.

மழை, வண்டி வித்தியாசம் பார்க்காமல், மறுபடியும் பெய்யத் தொடங்கியது !

Monday, November 10, 2014

என்ன வளம் இல்லை ?

சமீபத்திய ஒரு நெடும் பயணம் கொடுத்த சில 'நிறைவுகள்'.

     பார்த்த இடங்கள்  நிறைய
     மஹாராஷ்ட்ரம் காண்பித்தது நிறைய
     அனுபவித்தது நிறைய
     கற்றுக் கொண்டது நிறைய

பக்தி ரஸத்தினூடே வந்த இடைச் செருகலான சில கலை மற்றும் கை வண்ணங்கள் நெகிழ வைத்தன.

பீமா சங்கர், த்ரையம்பகேஸ்வர் போன்ற கோவில் கோபுரங்களின் சிற்ப வேலைப் பாடுகள்  பிரமிக்க வைத்தன.

பஞ்சவடியில் இலக்குமணன் சூர்ப்பனகையின் அங்க வதம் செய்ததாகச் சொல்லப் படும், நர்மதாவும் கபிலா நதியும் கலக்கும் இடக்குமிடத்தில் உள்ள கல் வெட்டு தத்ரூபம்.

எல்லோரா - - - எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

21 குகைகளில் , பார்த்ததென்னவோ இரண்டு தான். அதற்க்குள் அவ்வளவு பிரமிப்பு, வியப்பு ! எல்லோருக்குமான சிற்பங்கள் இங்கே உள்ளன. ஒரு குகையில் மஹாபாரதக் கதைகள், ஒன்றில் சிவ புராணக் கதைகள், மற்றொரு இடத்தில் சிருங்கார ரசத்துக்கு குறைவில்லாத சிலைகள், கைலாசச் சிற்ப்பங்கள், தசாவதாரக் காட்சிகள் காண்பவரை கை கூப்ப வைக்கிறது. ஜைனக் குகைகளுக்கும் சிலைகளுக்கும் பஞ்சமே இல்லை. சில வேலைப் பாடுகள் மெய் சிலிர்க்க வைத்தன. இப்படி ஒன்றிரண்டு இல்லை, பலப் பல- ஆயிரத்தை தாண்டினால் ஆச்சரியமில்லை.

அவ்வளவு வருஷங்களுக்கு முன் எவ்வளவு பேர் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் ?

விஞ்ஞானம் அவ்வளவாக இல்லாத அந்நாட்களில் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள்?

சில சிலைகளில் உள்ள லேசான புன்னகைகளின் துல்லியம் அதிர வைத்தது ! அனைத்தையும் விட வியக்க வைத்தது, இந்தியாவில் அத்தனை நூற்றாண்டுகளுக்கும் முன்னாலிருந்த கை வண்ணம்.

இவையெல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் செய்தவையாம். ஆச்சரியத்தில் திறந்த வாய் ஔரங்கபாத் தாண்டும் வரை மூடவேயில்லை.

இந்திய அரசாங்கத்து தொல் பொருள் ஆராய்ச்சி மையம் இதை பாதுகாத்து, பராமரிக்கும் விதம் பாராட்ட வேண்டிய ஒன்று. குப்பைகள் மிகக் குறைவு. பச்சைப் பசேல் புற்கள் தினப்படி கவனிப்புக்குக் கட்டியம் கூறின.

பார்த்த இரண்டு குகைகளில், இருந்த சில மணிகளில் எடுத்ததோ இருநூறுக்கும் மேல்பட்ட புகைப் படங்கள், இருந்தும் மனம் அமைதிப் படவில்லை. ஒரு விதமான அதிர்ச்சியில், பிரமையில்தான் வெளியே வந்தேன். எல்லோருக்காக அமைக்கப் பட்ட, எல்லோருக்கும் ஏதாவது ஒன்று இருக்கும் எல்லோரா , எல்லோராலும் பார்க்கப் பட வேண்டிய ஒன்று.

பண்டரீபுரம், ஆலந்தி போன்ற இடங்களில், சாரி சாரியாக  நடை பயணத்தில் இவ்விரண்டு இடங்களுக்கும் போகும் பக்தர்கள் கூட்டிய பக்தி உணர முடிந்தது.

புண்டரீகநையே   நினைத்துப் பாடி, தன் சரீரத்துடன் மோக்ஷம் போன  துக்காராம் போன்றவர்கள் வாழ்ந்த பூமியில் கால் பதிப்பதிலும் ஒரு பெருமை இருந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் தன்னையும் , தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் கொஞ்சமும் பொருட் படுத்தாமல் தன்னை மறந்து பஜனை செய்யும் , ஆலந்தி என்ற ஒரு புராதானம் கமழும் இடத்தில் தவழும் பக்தி, அனுபவித்து உணர வேண்டிய ஒன்று.

புண்டரீகனுக்குச் சமைத்த அடுப்பையும், பாத்திரங்களையும் இன்னமும் பாதுகாக்கும் , பண்டரீபுரத்துக்கருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு தான் கண்ணனைக் கட்டிய உரலும் உள்ளதாகக் கூறுகிறார்கள், ஆனால் ஊர்ஜிதப் படுத்த ஆளில்லை.

மராத்திய மன்னர் சிவாஜிக்கு வாள் கொடுத்து ஆசிர்வதித்த துல்ஜா பவானி கோவிலின் கம்பீரத்தை நேரில் பார்த்தால் தான் உணர முடியும். அது கோவில் போலில்லாமல்  ஒரு கோட்டை போலிருந்தது பக்தியை விட வீரத்தைக் காட்டியதாக இருந்தது.

பூனாவின் மத்தியில் உள்ள கேல்கர் ம்யூசியம் கண்டிப்பாக பார்க்கப் பட வேண்டியதாகும். நாம் அ ன் நாட்களில் உபயோகித்த அனேகப் பொருட்கள் இங்கு பார்வைப் பொருளாக உள்ளது. குளியலரையில் உள்ள அக்கால பாய்லர்கள், தானியம் வைக்கும் பெட்டிகள், பாக்கு வெட்டிகள், திரிகைகள், சேவை நாழி, அந்தக் காலப் பாத்திரங்கள் - இவையெல்லாம் இன்னும் பழசாகவில்லை. ஆனால் சில வருடங்களில் மறக்கப் படும், ஆகையால் பாதுகாக்கப் பட வேண்டியவைகள். நன்கு பராமரிக்கிறார்கள்.

- எல்லோராவைச் செதுக்கிய கலைஞர்கள்
- துக்காராம், மீரா போன்ற பக்திமான்கள்
- பெற்றோர்களுக்காக வீட்டுக்கு வந்த கடவுளையும் காக்க வைத்த பிள்ளைகள்
- பூமியில் நிழல் படாத கோபுரங்களை அன்றே கட்டிய 'வில்லேஜ்  
  விஞ்ஞானிகள்'
- எம்மதமும் சம்மதம் என்று பிற மத குருக்களையும் போற்றி அன்னாரின்
  நினைவுச் சின்னங்களை இன்னும் பராமரித்து வழி காட்டும் தலைவர்கள்
-  நாட்டிற்க்காக சொந்த வாழ்க்கையை அற்பணித்தவர்கள்
- எதுவும் இல்லை என்று பாடும் அதிருப்தியாளர்களிடையே பால் புரட்சியும்,
  பசுமைப் புரட்சியும் செய்தவர்கள்

- இப்படிப்பட்டவர்கள் உள்ள  பூமி இது.

ஒன்றிரண்டு மாநிலத்தைப் பார்த்த வியப்பு இது. இன்னும் இருக்கும் இருபத்தி சொச்சத்தில் உள்ளவைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை

வெளி நாட்டு மோகத்தில் கடல் கடந்து, மேலோட்டமாக உள்ள இன்பங்களை வைத்து, நம் நாட்டை குறைவாக மதிப்பிடுபவர்கள் யோசிக்க வேண்டியவைகள் இவை.

'என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்' என்ற பாடல்  நினைவுக்கு வந்தது - கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது !


Wednesday, November 5, 2014

எங்கே தேடுவேன்?

கலைவாணர் பல ஆண்டுகளுக்கு முன் பாடினார் " எங்கே தேடுவேன்- பணத்தை எங்கே தேடுவேன்" என்று.

அன்று அவர் தேடியது இல்லாத சமாசாரத்தை.

இன்றோ -  இருப்பது, இல்லாதது, தேடுவது எதற்க்கும் பாதுகாப்பு இல்லை !

உள்ள பொருளை வங்கியில் வைத்தால் மூன்றாவது தெருவிலிருந்து பள்ளம்  நோண்டி அடி வழியாக ஆட்டையைப் போட்டுடறாங்க !

பாங்க நம்பாம சேத்த பணத்த ஃபைனான்ஸ் கம்பேனில போட்டா பணத்தோட கம்பெனியையும் தேட வேண்டி இருக்கு.

கொஞ்சூண்டு பணம் , நகைகளை வீட்ல வெச்சாகூட மூக்குல வேர்த்தா மாதிரி வந்து பட்டப் பகல்லையே அடிச்சுடறான். நகைகளெல்லாம் சேட்டுக் கடையில் தான் சேஃப் என்கிறார் நண்பர் !

மாச முதல்ல சம்பளத்த பஸ்ஸுல பாக்கெட் அடிக்கரதெல்லாம் பழைய கதை ஆயிடுச்சு, சம்பளம் அக்கௌண்ட் க்ரெடிட்டுக்கு மாறினதுக்குப்புறம்.

அவசரத்துக்கு செல் போன் வழியா பாங்க் அக்கௌண்ட் பாலன்ஸ் பார்த்தால், கொஞ்ச நேரத்துல நம்ப அவசர சிகிச்சை பிரிவில், அக்கௌண்ட்ல உள்ளதோ கட்சி மாறி வேறு இடம் புகுந்துடறது.

எசகு பிசகா ஏதாவது கடையில கார்டைத் தேச்சு பொருள் வாங்கினா, வீடு திரும்பினப்புறம், கார்டு மட்டும் தான் உங்க கையில- அத வச்சு பணம் , பொருள் எல்லாம் உருவிடறாங்க.

வீட்டுல இருந்தபடியே உலகத்தச் சுத்திப் பாக்கலாம்னு வலையில போனா , கொஞ்சம் அசந்தாலும் நீங்க போக நினச்ச மாதிரியே உள்ள வேற இடத்துக்குக் கூட்டிண்டு போய், பாஸ்வேர்ட்லேந்து எல்லாத்தையும் கறந்துடறாங்க. நன்றிக் கடனா நாம விஜயம் செஞ்ச இடத்திலேருந்து உபரியா ஒண்ணு ரெண்டு வைரஸையும் வெத்தல பாக்கு போல கொடுத்து, அனுப்பி வெக்கறாங்க.

முக நூல்ல நம்ப நண்பர்கள் மட்டும்தானேன்னு நிம்மதியா உலாவ முடியல்ல. நம்ம ஒண்ணு போட்டா, நடுவுல எவனோ புகுந்து விளம்பரம் போடறான், திறந்த வீட்ல ஏதோ நுழையற மாதிரி.

நம்ம வலையில போய் ஏதாவது தேடினா, உடனே உங்க மூஞ்சி புக் பக்கத்துல அதுக்கான விளம்பரம் உக்காந்துண்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிரத பாத்தா, முக நூல்காரனே நம்மள நோட்டம் உட்ரானோன்னு நினக்கத் தோணுது ! தப்புத்தான் .

மூலல உக்காந்து ஒரு கதை எழுதினாக் கூட எவனாவது சுட்டு படம் எடுத்துடுருவானோன்னு பயம்மா இருக்கு.

வீட்டுக்குள்ளயே உக்காந்து எங்கெயுமே போகாம வலையில படம் பாக்கலாம்னாக் கூட நம்ம வீட்டு வை ஃபை பாஸ்வேர்டை எவனோ உபயோகிச்சுண்டு இருக்கான்.

இப்பல்லாம்  கோவில் வாசல்ல விடற செருப்பு ரொம்ப சேஃப்.

பூட்டி வெச்ச வீடும், போட்டு வெச்ச பணமும், 16 டிஜிட் பாஸ்வேர்டும் தான் அம்பேல் போல !

அய்யயையோ, பக்கத்துல இருந்த மௌஸக் காணும் !




Tuesday, October 14, 2014

கேரள விஜயம் (3-8 , Oct 2014)


நினைத்தாலே இனிக்கும் - நேந்திரம் பழத்தால் நாவும், வளைந்து தழைந்த தென்னையின் பச்சையால் கண்ணும் ,  எங்கெங்கும் ஓடும் தண்ணிரால் மனமும்- கேரளத்தை கொஞ்சம் நிதானமாகப் பார்க்க ஆசை.

அனைத்தையும் நாலே நாளில் பார்க்க முடியுமென்றால் யார் தான் சலனப் படமாட்டார்கள் - பட்டேனே ! என்னுடன் சேர்ந்து சலனப் பட்ட 21 பேருடன் அதிகாலை 5 மணிக்கு திருச்சூரில் வந்து இறங்கினோம்.

04-Oct-2014(Sat)

முதல் தரிசனம்- வடுகநாதர் கோவில். குளிர்ந்த காலை, விரிந்து , பறந்து கிடந்த பச்சை புல் வெளிக்கு நடுவே பாரம்பரியக் கோவில்- கண்ணுக்குக் குளுமை. எதைப் பார்த்தாலும் படம் எடுக்கத் தூண்டிய அவா. கோவிலின் ஒரு கோடியிலுருந்து ராமேஸ்வரத்தையும், சிதம்பரத்தையும் நோக்கி கும்பிட வசதி. இங்குதான் ஆதி சங்கரரின் சமாதி இருப்பது என்பது இன்று தெரிந்து கொண்ட ஒரு விஷயம்.
வடுகனாதர் கோவில் வாசல்

சென்னை க்ரானைட்டுக்கு மாறாக பச்சை
கோவில் வடக்கு வாசல்
ஆதி சங்கரர் சமாதி





இரண்டாம் கோவில்: திருவெம்பாடி கிருஷ்ணர்

தெருவிலேயே வாசல் உள்ள கோவிலில் ஏற்றி இருந்த கொத்து விளக்குகள் அழகு. இரண்டு, மூன்று , நான்கு என்று எல்லா முகங்களும் ஏற்றுகிறார்கள். ஒரு மிஷின் தானாக சந்தனம் அரைத்துத் தள்ளிக் கொண்டிருந்தது

கொத்து விளக்கு

திருவெம்பாடி கோவில் முகப்பில்
திருவெம்பாடி

அதிகாலை எழுந்தது, அறக்கப் பறக்கக் குளித்தது, இரண்டு பெரீ....ய கோவில்கள் பார்த்தது, வயிறு அடம் பிடிக்க ஹோட்டல் "பத்தானி"ல் இடாலி, சுடுவெள்ளத்துடன் டிபன்.

கோவில் #3 - திருப்பரையார் ராமர்

குருவாயூர் போன்ற முகத் தோற்றத்தை அளிக்கும் கோவில், திருபரையார் ஆற்றின் மேல் உள்ளதால் இந்தப் பெயராம். உள்ளே நுழையுமுன் பட படவென்று வேட்டுச் சத்தம்- இங்கு மட்டுமில்லாமல் பல கேரளக் கோவில்களின் விசேஷமிது. ஒரு காலத்தில் , கபாலீஸ்வரர் கோவிலிலும் இது உண்டு. பின் வந்த நாகரீகத்திலும், அதிகக் கூலி முதலிய பிரச்சனைகளாலும் கை விடப் பட்டதாகக் கேள்வி. ஒன்று தெரிந்தது- இங்குள்ள கோவில்களில் கடவுள், பாரம்பரியம், சம்பிரதாயம் தான் முக்கியம்... மனிதர்கள் அல்ல. இங்கு தான் தமிழ்க் கோவில்கள் கோட்டை விட்டன.


திருப்பரையார் கோவில் முன்
த்ருப்பரையார் ஆற்றின் முன்
திருப்பரையார் பிரகாரம்

அருகிலுள்ள பரதனுக்கே உரித்த இருஞாள குடா, போக முடியவில்லை- நேரமாகி விட்டதால் , நடை சாத்தி விடுவார்களாம். கேரளத்தில் பல கோவில்கள் அதி காலை நாலு மணிக்கே திறந்து சீக்கிரமும் மூடி விடுகிறார்கள். இங்கு வர விரும்புவர்கள் தூக்கத்தை தொலைக்கத் தயாராக இருப்பது நல்லது.

புன்னத்தூர் ஆனக்கொட்டா

கேரளத்துக்கு வந்தபின் யானையைப் பார்க்காமல் இருக்கலாமா? குருவாயூர் அருகிலுள்ள புன்னத்தூர் யானக்கொட்டாவுக்கு வந்தால் கூட்டம் கூட்டமாக யானைகள். சில ஸ்பாட் ஜாகிங் செய்து கொண்டு, சில மண்ணை எடுத்து தலை, முதுகில் போட்டு இதமாக சொறிந்து கொண்டு, ஒரு யானை சுகமாகப் படுத்திருக்க மூன்று பேர்கள் அதைத் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள், சின்ன ரப்பர் ட்யூப் வழியாக ஷவர் வேற. இப்படியாக தத்தம் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்த யானைகள் முன் சில வேலையில்லா இளைஞர்கள் முதுகைக் காண்பித்துக் கொண்டு போட்டோ எடுக்க முயல, அது ஒரு சின்ன பிளிறலுடன் அரை அடி முன்னுக்கு வந்தவுடன் பிடித்தனர் ஒட்டம் , நம் இளைஞர்கள், பின்னங்கால் பிடரியில் பட, செல் போன் சிதறி விழ - தில்லி வெள்ளைப் புலி சமாசாரம் படிக்கலை போல- மத்தது போல சாய்ஸ்ல விட்டாங்களோ என்னவோ !!

கும்பல் கும்பலாக காலில் சங்கிலி பிணைத்திருந்த யானைகளூடே ஒன்றைக் காண்பித்து அது தான் தமிழக முதல்வர் கோவிலுக்குக் கொடுத்தது என்றார்கள்.
யானைக் குளியல்
சின்னப் பிளிறல்


இது முடித்து யானைப் பசியுடன் ஹோட்டலுக்குப் போனால் சோளத்தளவு சோறு போட்டு ஸ்பெஷல் சாப்பாடு என்று ஏமாற்றியவர்களை அடுத்த முறை அந்த யானையைப் பார்த்தால் கொஞ்சம் ஒட விட்டு வேடிக்கைப் பார்க்க சொல்ல வேண்டும் !

குருவாயூரிலிருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும், தங்க வைத்த ஹோட்டல் மூன்று நட்சத்திர வசதிகளுடன் ,அருமை. கண்ணை மூடினால் யானை தூக்கிய தும்பிக்கையுடன் எதிரே நின்றதால் தூக்கத்தைத் துறந்து மாலை ஐந்து மணிக்கு போன

 அடுத்த கோவில்: மம்மியூர் மஹாதேவன் 

குருவாயூர் கிருஷ்ணரைப் பார்த்து விட்டு , இந்தக் கோவிலைப் பார்க்கா விட்டால், தரிசனம் பூர்த்தி அடையாதென்பது ஒரு நம்பிக்கை. சின்னக் கோவிலாக இருந்தாலும் சட்டை, பாண்ட் விஷயத்தில் வெகு கண்டிப்பு. கேரளக் கோவில்களுக்குப் போகிறவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது - சட்டைகள் இங்கே சட்டை செய்யப் படுவதில்லை. எவ்வளவு வெய்யில் இருந்தாலும் கவலைப் பட வேண்டாம்- மேல் துண்டு காற்றோட்டத்தைப் பார்த்துக் கொள்ளும்.

   
மம்மியூர் சன்னதி முன்


கோவில் -5 : குருவாயூர் கிருஷ்ணர்

இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய ஹீரோவான கிருஷ்ணரைக் காண எல்லோரிடம் ஒரு பரபரப்பு தென்பட்டது. ஏகப்பட்ட பாதுகாப்பு முஸ்தீபுகளுக்குப் பின், இடுப்பு வேட்டி, மேல் துண்டு தவிர பாக்கி எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நீண்ட வரிசையில் போய் நின்றதும் உள்மனம் சொன்னது 'கொஞ்சம் நேரமாகும்" என்று. என்னவானாலும் பரவாயில்லை என்று சங்கல்பித்து பொழுதைக் கழிக்க முதல் படியாக விஷ்ணு சஹஸ்ர நாமம் கோவில் முன்னாலேயே முழுவதும் படித்தது, ஒரு சிலிர்க்க வைத்த உணர்வு! இரண்டு மணிக்கு மேல் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் வரிசையில் நின்று எல்லா விதமான அக்கப் போர்களையும் பேசி முடித்து, சன்னிதிக்குள் சென்று ஒன்றிரண்டு நிமிடமே கண்ணனைப் பார்த்தாலும், அந்த காத்திருப்பு இனித்து, மீண்டும் அடுத்த தரிசனத்துக்கு மனம் ஏங்க ஆரம்பித்தது.


                                


05-Oct-2014 (Sunday)

முதல் நாள் அலைச்சலும், மன நிறைவும் ஒரு நல்ல தூக்கத்துக்கு வழி வகுத்தாலும், மூன்று நட்சத்திர சுகங்களை முழுவதும் அனுபவிக்க முடியாமல் அலறியது, காலை நான்கு மணி அலாரம். சொன்ன படி எல்லோருமே முன்னப் பின்னே ஐந்து மணிக்குள் ஹோட்டல் வரவேற்ப்பில் வந்தால் அங்கு ஜானகி டூர்சின் ரமேஷ்  தன் ட்ரேட் மார்க் சிரிப்புடன் சூடான காபியுடன் காத்திருந்தார்.

ஆனால் வண்டியின் ஓட்டுனர்தான் சொல்லாமல் கொள்ளாமல் ஜூட் விட்டுருந்தார் - அன்று அவருக்கு பக்ரீத் பண்டிகையாம். சொல்லியிருந்தால் நாங்களும் ஈத் முபாரக் சொல்லி இருக்கலாம்.

டூர் ஏற்ப்பாடு செய்த ரமேஷ் தம்பதியர் , சுஜாதா பாஷையில் , கிரைஸிஸ் ஆசாமிகள். உடனே அடுத்த ஆளைப் பிடித்து, வேறு வண்டி ஏற்பாடு செய்து, சில பலரைச் சத்தம் போட்டு விட்டு எங்கள் கும்பல் நகர்ந்த போது, ஒரு இரண்டு மணி நேரங்கள் விரயமாயிருந்தன.

கோவில்-6 - கொடுங்கலூர்

சிரித்த முகத்துடன் வந்த புது ட்ரைவர் வைத்த காலை ஆக்சிலேட்டரிலுருந்து எடுக்காமலே நம்மைக் கொண்டு சேர்த்தது, கொடுங்கலூர்.  நம்ம ஊர் மாரியம்மன் கோவில் போல் தோற்றமளித்த கோவில் முன் பெரிய வரிசை இருந்தாலும் சுறுசுறுப்பாக நகர்ந்தது. சக்தி வாய்ந்த பகவதி அம்மன் கோவில் வாசலில் கட்டி இருந்த வாழைத்தாரில் பாதி காயாகவும், மீதி பழமாகவும்  இருந்தது இது வரை காணாத அதிசயம். கண்ணகி முக்தி அடைந்த இத்தலத்தில், அனைத்து சக்தியையும் அடக்கி வைத்திருந்ததாகச் சொல்லப்படும் ஒரு தூணையும் பார்க்க முடிந்தது.


அதிசய வாழைத் தார்
  
சுந்தரத் தமிழைப் பார்த்ததும் பசி போயிந்தே 
சீக்கிர தரிசனத்துடன் சந்தோஷமாக நாஸ்தாவுக்கு தேடினால் ஒரு ஹோட்டல் கூட திறக்கவில்லை, பண்டிகையாம் !! . தேடிப் பிடித்துச் சென்ற 'பிராமின்ஸ் ஹோட்டல்'  வாசல் போர்டில் இடாலி, உஈத்தப்பம், உழுந்து வடை, கப்ளப கிழங்கு, பச்சி (பஜ்ஜியாம் !!)  எல்லாம் இருந்தாலும், உள்ளே 'அழகன்' படத்தில் மம்மூட்டியாக வரும் அவசர டிபனான உப்புமா மட்டுமே இருந்தது. இருந்த பசிக்குக் கிடைத்த அமிர்தத்தை விழுங்கி விட்டு, பயமுறுத்தும் மேகங்களோடேஅடுத்து போய் சேர்ந்த:

கோவில்-7 - திருவாஞ்சிகுளம்

வெளியிலஇருந்து பார்க்க கொஞ்சம் தூக்கத்திலுருந்தார்போல தோற்றமளித்த சிவன் கோவில் உள்ளே அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. கோவிலின் ஒவ்வொரு மூலையும் பழமைக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தது.

       






கோவில்-8 - காலடி 

அடுத்துப் போன காலடியில், உச்சி வேளை தீபாராதனை. அந்தக் கோவில் உள்ள அருமையான சூழ்நிலை, அப்பொழுதுதான் முடிந்திருந்த ஹோமத்திலுருந்து வந்த புகை, அந்த இடத்தின் அமைதி, பின்புறம் ஓடும் ஆறு எங்களைச் சொக்க வைத்தது. ஆதி சங்கரரின் கதை சொல்லும் படங்கள், அங்கு வருபவர்களுக்கு ஒரு பிரசாதம்.












   


அதை முடித்து அந்தச் சுவை இன்னும் உள்ள போதே போன "ஆதி சங்கர பகவத் பாத கீர்த்தி ஸ்தம்ப மண்டபத்தில்" உள்ள அனைத்து படங்களும் ஒரு உன்னத நிறைவைக் கொடுத்தது.








       






அன்று மாலை  கோவில்- 9- சோட்டானிக்கரை பகவதி அம்மன் தரிசனம். மிதமான கூட்டத்தில் , இளம் மாலையில், அம்மனின் சன்னதியில் உள்ள தாழம்பூ விளக்கு ஒளியில், தரிசனம் சிலிர்க்க வைத்தது. திரும்பத் திரும்ப வந்து தரிசனம் செய்து விட்டு, பின் புறம் உள்ள கோவிலையும் தரிசித்து, அங்கு வேண்டுதலுக்கு வேட்டுப் போடும் காட்சியும் அதிசயித்து விட்டுப் புறப்பட்டோம்.

                                       

இதனுள் இரவு வந்து மாலையைக் கவ்வ, இதுவரை பொறுமை காத்த மேகங்களும் தன் விரக்தியக் காட்ட, மெல்லிய மழை நிறைந்த இருளில் வந்து சேர்ந்தது தான் கோவில்-10 - வைக்கம்.













அவ்வளவு பெரிய கோவில் சுற்று வட்டாரத்தை இது வரை கண்டதில்லை. எந்தப் பக்கம் போய் எந்தப் பக்கம் வருவது என்று முடிவு செய்வதற்க்குள், சிவனுக்கு அபிஷேகம் முடிந்து, தீபம் காட்டி கண் சிமிட்டும் நேரத்தில் நடையையும் சாத்தி விட்டார்கள். எல்லாமே பிரமாண்டம் தான் இந்தக் கோவிலில்

மணி எட்டை நெருங்க கொஞ்சம் வண்டியை விரட்டி, அவசர அவசரமாகப் பார்த்தது தான் கோவில்-11- காடுதுருத்தி.  மொத்தம் உள்ளே இருந்ததே ஐந்து நிமிடங்கள் தான், நாங்கள் வெளியே வர உம்மாச்சியும் தூங்கப் போய்ட்டார்



மேலும் ஒரு கோவிலப் பார்க்க முயன்று முடியாமல் போய், இரவு ஒன்பது மணிக்கு கோட்டயத்தில் உள்ள ஒரு அருமையான ஹோட்டலில் தஞ்சம். சாவியை வாங்கி , மாடிக்குப் போய் ரூமுக்குள் போனதும் தூங்கி விட்டோம்- அவ்வளவு அசதி, இருந்த மெத்தையும் அவ்வளவு சகம்.

06-OCT-2014 (MON)

முடிந்தவரை எல்லாக் கோவில்களும் இன்றே பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் காலை 3.30 மணிக்கே எழுப்பப் பட்டு, கோவில்-12- ஏட்டுமானூர் போன போது மணி ஐந்து. அந்த வேளையில், எண்ணை வழுக்கும் அந்தத் தரையில் மெல்ல நடந்தால், ஏட்டுமானூர் சிவன் , அருமையான தரிசனம். மெல்லிய ஹோமப் புகை, எண்ணை விளக்கு ஒளியூடே பார்த்த பகவானை , மார்கழியை நினைவுப் படுத்திய அந்த தரிசனத்தை  மறப்பது  கடினம்.


 



எங்களின் பொறுமைக்குப் பரிசாக ஜானகி டூர்ஸ் அளித்த சிறப்புப் பரிசுகள் தான் , அட்டவணையில் இல்லாத சில கோவில்கள். அதில் ஒன்று தான் கோவில்-13- குமார நல்லூர் பகவதி அம்மன். இப்படிப் பட்ட கோவில்களைப் பார்ப்பதே ஒரு பாக்யமென்றால், அந்த அதிகாலை அம்மனுக்கு அழகூட்டியது.

                                

                


அடுத்துப் போன கோவில்-14- திரு நகரா , ஒரு கோவிலைப் போலில்லாமல் ரிஸார்ட் போலிருந்தது. அவ்வளவு சுத்தம். இப்படிக் கூட ஒரு கோவிலைப் பராமரிக்க முடியுமாவென்று தமிழ் நாட்டு அறங்காவலர்கள் , இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சீவேலி எனப்படும் தரிசனத்துடன், ஸ்வாமி கூடவே சென்று வலம் வந்து, உள்ளே சன்னதிக்குப் போனால் சிலர் மெல்லிய குரலில் பாட்டுப் பாடியது, பக்தியைக் கூட்டியது.












அடுத்துப் போன கோவில்-15- தக்ஷிண குருவாயூர் , ஒரு இனிமையான இலவச இணைப்பு. சில நாட்களுக்கு முன் பார்த்த அதே கிருஷ்ணர், சின்ன அமைதியான கோவிலில்.







ஒரு நல்ல டிபனுக்கப்புறம், வேனில் சுகி சிவத்தின் தமிழ் வெள்ளத்துடன் சென்றடைந்த கோவில்-16- செங்கனாச்சேரி - பெரு நா முருகன். இந்தக் கோவிலில் எல்லா இடங்களிலும் முருகனின் வேல் தலை கீழாக இருந்தது. சூரனை சம்ஹாரம் பண்ணியவுடன் குருதி தோய்ந்த வேலுடன் வந்த முருகப் பெருமான் , குருதி மண்ணில் இறங்க வேலை தலை கீழாகப் பிடித்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள சித்திரங்கள் அனைத்தும் ஒரு விருந்து, வினாயகரின் சிரித்த முகத்தை இங்கு தான் முதன் முறையாகப் பார்த்தேன். இதுவும், எங்கள் திட்டத்தில் இல்லாத ஒரு கோவில் - வாழ்க ஸ்ரீ ஜானகி டூர்ஸ் குடும்பம் !







அடுத்து வந்த கோவில்-17- திருவள்ளா. 

வெய்யில் ஏறியதால் , இந்தக் கோவிலின்  பிரமாண்டமான பிரகாரங்களைத் தாண்டுவது எல்லோருக்கும் ஒரு சவாலாகத் தான் இருந்தது. கோவிலில் உள்ள சிற்பங்களும், சித்திரங்களும் காமிராக்களுக்கு நிறைய வேலை வைத்தது.






கோவில் -18, செங்கனூர் பகவதி அம்மன். 

இக்கோவிலைப் பற்றி முன்பே வலைதளங்களில் படித்திருந்த தால் நான் எதிர் பார்த்த கோவிலிது. முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒரு துரை இந்தக் கோவிலை இடிக்க உத்திரவிட்டதும், அவர் மனைவிக்கு நிற்காத உதிரப் போக்கால் சாகும் நிலை அடைய, அந்த உத்தரவை திரும்பப் பெற்றவுடன் சகஜ நிலை திரும்பியதாக நம்பப் படுகிறது. இன்றும் இந்தக் கோவில் அம்மனின் மாத விடாய் காரணமாக, மாதம் மூன்று நாட்கள் ,மூடுவதாகச் சொல்லப் படுகிறது. கொஞ்சம் சுமார் கூட்டத்துடன் ஒரு திருப்திக்ரமான தரிசனம்.












நல்ல வெய்யிலில் கொஞ்சம் விசாரித்துக் கொண்டே அடுத்த போன போனஸ் கோவில் -19 அரன்முளா பார்த்தசாரதி. மூடி விடுவார்களோ என்ற பயத்தில் ஓடினால் நிதானமாக உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்தது. கோவிலின் பின்புறத்தில் ஓடும் ஆறும் அதில் சென்ற படகும், சாதாரணனின் கேரள ஏக்கத்தை தணிப்பதாக இருந்தது.







ஆரிய பவன் என்ற பெயரால் ஏமாற்றப் பட்ட (அதோ வெள்ளையாக இருக்கே, அது தான் ஸார் மோர்) ஒரு மட்டமான சாப்பாட்டுக்குப் பின், வண்டியில் ஒடிய படத்தைப் பொருட்படுத்தாமல், காலை தொலைத்த  தூக்கத்தைச் சரிக்கட்டிக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கிப் பயணப் பட்டோம். நாலு மணிக்கு ஒரு நல்ல ஹோட்டலில் தஞ்சமடைந்து, இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கியமான கோவில்- 20 - அனந்தபத்மனாப ஸ்வாமி கோவில் சென்றடைந்தோம்.




இந்தக் கோவில் மூடித் திறக்கும் நேரம் காலம் தெரியா விட்டால் கொஞ்சம் நேரம் செலவழிந்திருக்கும். நல்ல வேளையாக ஹோட்டலில் விசாரித்து, சாய ரட்சைக்குப் போய் விஷ்ணு சஹஸ்ர நாமம் படித்து, பெருமாளை தொடு தூரத்தில் பார்த்தது, வாழ்க்கையில் குறித்துக் கொள்ள வேண்டிய நாள். இங்கும் குருவாயூரும் பார்த்த தரிசனத்துக்கு எவ்வளவு செலவழித்தாலும் தகும்.

திருவனந்தபுரத்தில் சில ராணுவ வீரர்கள் சேர்ந்து கட்டிய சின்ன ஆனால் சக்தி வாய்ந்த கோவில்-21, மிலிடரி வினாயகர் கோவில் தான், அடுத்து போனது. சின்னக் கோவிலில் நல்ல தரிசனத்துக்குப் பின் கிடைத்த வரம் அன்ன பூரணாவில் ஒரு நல்ல சாப்பாடு. நாளை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம் என்ற நல்ல செய்தியுடன், சுகமான ஹோட்டல் ரூமும், ஒரு நல்ல தூக்கத்துக்கு உதவியது.




07-OCT-2014 (TUES)

டூரின் கடைசி நாள், ஒரு சூப்பர் கோவிலுடன் ஆரம்பித்தது. கோவில்-22 - ஆற்றுக்கால் பகவதி.









இந்தக் கோவிலில் ஏப்ரல் ஐந்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் சுமர் 25 லட்சம் பேர் வந்து பொங்கல் வைப்பது ஒரு கின்னஸ் ரிகார்டாக அறிவித்தது, அங்கு இருந்த ஒரு பலகை. மிளிரும் வண்ணத்தில் இருந்த கோவிலை வளைத்து வளைத்து புகைப் படம் எடுத்து, மழை வந்தவுடன் வண்டி ஏறி முதன் முதலாக ஒரு கோவிலில்லா இடத்துக்குப் பயணப் பட்டோம்.

சுமார் 90 நிமிடங்களும், நல்ல அரட்டை அலசல்களுக்குப் பிறகு நாங்கள் வந்து சேர்ந்த இடம் 'பூவர்'. இங்கிருந்து வாடகைக்கு இரண்டு படகுகள் எடுத்து, பாதுகாப்பு பெல்ட் போட்டுச் சென்ற அந்தச் சவாரி, உற்சாகத்தின் உச்ச கட்டம், ஏகப்பட்ட புகைப் படங்களுடன்,











ஆரவாரத்துடன் அக்கரைக்குப் போய் கடலலையில் ஆடி ஓய்ந்து இரண்டு மணி சாப்பாட்டுக்குப் பிறகு, சிலருக்கு ஒரே ஏமாற்றம் ஷாப்பிங்கிற்க்கு நேரம் கிடைக்காதது தான். இதன் நடுவில் வந்த பெங்களூரூ செய்திகள் வேறு எல்லாரையும் குழப்பி ஒரு வழியாக 5:20க்கு ரயில் புறப்பட்டப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது.

நான் கவனித்த கேரளத்துக்கே உரிய சில சிறப்பு அம்சங்கள்:

  • பரந்து, விரிந்த கோவில்கள்- அனேகமாக எல்லாமே நன்கு பராமரிக்கப் படுகின்றன
  • த்வஜஸ்தம்பத்துக்கு பதிலாக , அடுக்கு அடுக்காக விளக்குகள்
  • எந்த சன்னிதியிலும் பிரசாதம் கொடுப்பதில்லை. தரிசனம் மட்டுமே
  • பிரசாதங்கள் முக்கியமாக தீர்த்தம், சந்தனம், புஷ்பம் மட்டுமே. சில இடங்களில் இனிப்பான பொறி, சர்க்கரைப் பொங்கலும் உண்டு !
  • த்வஜஸ்தம்பத்தின் கீழ் ஒரு ஆமை- இதன் உருவம்  ஒவ்வொரு கோவிலிலும் மாறிக் கோண்டே இருந்தது.
  • அனேகமாக பல கோவில்களில் யானை பராமரிப்பு இருக்கிறது
  • எங்குமே முழு பிரதக்ஷணம் இல்லை- அபிஷேக ஜலத்தைத் தாண்டக் கூடாது என்ற நம்பிக்கையால்.
  • வினாயகர் , கோவிலுக்கு உள்ளே தான் இருக்கிறது.
  • கோவில்கள் சீக்கிரமே திறந்து விடுகிறார்கள். மாலையில் அதே சுறு சுறுப்பில் மூடியும் விடுகிறார்கள்
  • அனேகமாக எல்லாக் கோவிலிலும் ஆண்களுக்கு மேல் வஸ்திரமோ அல்லது திறந்த மார்பு தான், சட்டை கூடாது. சில கோவில்களில் பாண்ட் கூட அனுமதி இல்லை. வேட்டிதான்
  • மின்சார விளக்கை விட பித்தளை விளக்குகள் அதிகம்
  • நிறைய கோவிகளில் சரம் சரமாக அதிர் வேட்டுகள் முழங்குகின்றன
  • எல்லாக் கோவில்களிலும் ஸாஸ்தா உண்டு

இது நான் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் மூலமாகப் போகும் மூன்றாவது நெடிய பயணம் (கர்னாடகா, நவ திருப்பதிக்குப் பிறகு).

ஒவ்வொரு முறையும் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறேன்- இது ஒரு நல்ல
 நிர்வாகத்திற்க்கு அறிகுறி. தப்புகள் நடக்கலாம். அது தப்பல்ல. ஆனால் ஒரே தப்பை மீண்டும் செய்யக் கூடாதென்பர். இதைத் தெரிந்து வைத்திருப்பது இவர்களின் பலம்.

இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்ற உற்சாகம் இவர்களிடையே காணப் படுவது இவர்களின் வளர்ச்சிக்கும், இந்தத் தொழிலில் நீட்சிக்கும் விதை விதைக்கிறது.

எதிர்பாரா நிகழ்வுகளை சமாளிக்கும் திறன் நன்கு தெரிகிறது.

இதெல்லாம் விட இவர்களின் உண்மையான எண்ணங்களும், நேர்மையும் இவர்களை வாடிக்கையாளர்களின் மனதுக்குள் ஒர் நல்ல இடத்திற்க்கு அழைத்துச் செல்லப் போகிறது.

குறையே இல்லையா என்று கேட்கலாம். குறை இல்லாமல் எது இருக்கிறது? சீதையையே தீக்குளிக்கச் சொன்ன பூமி இது. காந்தி போன்றவர்களையும் சந்தேகப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.  நாம் செய்யும் எதிலும் நிறைவு இல்லாமல் போகும் சாத்தியக் கூறு உள்ளதால் தான் அதற்கான முயற்ச்சிகள் எடுத்து, முறை வகுக்கிறார்கள். அவ்வப் பொழுது அந்த முறைப் படி நடக்கிறதா என்று சோதித்தும் பார்க்கிறார்கள்.

குறை என்பதை விட இன்னும் சிறப்பாகச் செய்ய சில உத்திகள் தென்பட்டன. எப்படி நான் இவர்களை ஒரு நல்ல வியாபாரியாக நடக்க எதிர்பார்க்கிறேனோ , அதே போல் ஒரு நல்ல வாடிக்கையாளராக நடக்க வேண்டிய ஒரு பொறுப்பும் , கடமையும் என்னிடத்திலும் உள்ளது.

நிறைகளை ஊரரியச் சொல்லி விட்டேன்.  குறை என்று ஓன்று இருந்தால், வியாபார தர்மப் படி,  அதை நான் அவர்களிடம் சொல்வது தான் முறை.  அப்படியாவது எனக்கு ரமேஷ் தம்பதிய்ரைப் பார்க்க கிடைக்கும் ஒரு சந்தர்பத்தை ஏன் நழுவ விட வேண்டும்?

இன்னும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் இதைப் போன்ற கோவில்களுக்குப் போவேன். சந்தர்ப்பம் அமைந்தால் இவர்களுடனேயே போகவும் ஆசைதான் !