Monday, November 10, 2014

என்ன வளம் இல்லை ?

சமீபத்திய ஒரு நெடும் பயணம் கொடுத்த சில 'நிறைவுகள்'.

     பார்த்த இடங்கள்  நிறைய
     மஹாராஷ்ட்ரம் காண்பித்தது நிறைய
     அனுபவித்தது நிறைய
     கற்றுக் கொண்டது நிறைய

பக்தி ரஸத்தினூடே வந்த இடைச் செருகலான சில கலை மற்றும் கை வண்ணங்கள் நெகிழ வைத்தன.

பீமா சங்கர், த்ரையம்பகேஸ்வர் போன்ற கோவில் கோபுரங்களின் சிற்ப வேலைப் பாடுகள்  பிரமிக்க வைத்தன.

பஞ்சவடியில் இலக்குமணன் சூர்ப்பனகையின் அங்க வதம் செய்ததாகச் சொல்லப் படும், நர்மதாவும் கபிலா நதியும் கலக்கும் இடக்குமிடத்தில் உள்ள கல் வெட்டு தத்ரூபம்.

எல்லோரா - - - எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

21 குகைகளில் , பார்த்ததென்னவோ இரண்டு தான். அதற்க்குள் அவ்வளவு பிரமிப்பு, வியப்பு ! எல்லோருக்குமான சிற்பங்கள் இங்கே உள்ளன. ஒரு குகையில் மஹாபாரதக் கதைகள், ஒன்றில் சிவ புராணக் கதைகள், மற்றொரு இடத்தில் சிருங்கார ரசத்துக்கு குறைவில்லாத சிலைகள், கைலாசச் சிற்ப்பங்கள், தசாவதாரக் காட்சிகள் காண்பவரை கை கூப்ப வைக்கிறது. ஜைனக் குகைகளுக்கும் சிலைகளுக்கும் பஞ்சமே இல்லை. சில வேலைப் பாடுகள் மெய் சிலிர்க்க வைத்தன. இப்படி ஒன்றிரண்டு இல்லை, பலப் பல- ஆயிரத்தை தாண்டினால் ஆச்சரியமில்லை.

அவ்வளவு வருஷங்களுக்கு முன் எவ்வளவு பேர் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் ?

விஞ்ஞானம் அவ்வளவாக இல்லாத அந்நாட்களில் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள்?

சில சிலைகளில் உள்ள லேசான புன்னகைகளின் துல்லியம் அதிர வைத்தது ! அனைத்தையும் விட வியக்க வைத்தது, இந்தியாவில் அத்தனை நூற்றாண்டுகளுக்கும் முன்னாலிருந்த கை வண்ணம்.

இவையெல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் செய்தவையாம். ஆச்சரியத்தில் திறந்த வாய் ஔரங்கபாத் தாண்டும் வரை மூடவேயில்லை.

இந்திய அரசாங்கத்து தொல் பொருள் ஆராய்ச்சி மையம் இதை பாதுகாத்து, பராமரிக்கும் விதம் பாராட்ட வேண்டிய ஒன்று. குப்பைகள் மிகக் குறைவு. பச்சைப் பசேல் புற்கள் தினப்படி கவனிப்புக்குக் கட்டியம் கூறின.

பார்த்த இரண்டு குகைகளில், இருந்த சில மணிகளில் எடுத்ததோ இருநூறுக்கும் மேல்பட்ட புகைப் படங்கள், இருந்தும் மனம் அமைதிப் படவில்லை. ஒரு விதமான அதிர்ச்சியில், பிரமையில்தான் வெளியே வந்தேன். எல்லோருக்காக அமைக்கப் பட்ட, எல்லோருக்கும் ஏதாவது ஒன்று இருக்கும் எல்லோரா , எல்லோராலும் பார்க்கப் பட வேண்டிய ஒன்று.

பண்டரீபுரம், ஆலந்தி போன்ற இடங்களில், சாரி சாரியாக  நடை பயணத்தில் இவ்விரண்டு இடங்களுக்கும் போகும் பக்தர்கள் கூட்டிய பக்தி உணர முடிந்தது.

புண்டரீகநையே   நினைத்துப் பாடி, தன் சரீரத்துடன் மோக்ஷம் போன  துக்காராம் போன்றவர்கள் வாழ்ந்த பூமியில் கால் பதிப்பதிலும் ஒரு பெருமை இருந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் தன்னையும் , தன்னைச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களையும் கொஞ்சமும் பொருட் படுத்தாமல் தன்னை மறந்து பஜனை செய்யும் , ஆலந்தி என்ற ஒரு புராதானம் கமழும் இடத்தில் தவழும் பக்தி, அனுபவித்து உணர வேண்டிய ஒன்று.

புண்டரீகனுக்குச் சமைத்த அடுப்பையும், பாத்திரங்களையும் இன்னமும் பாதுகாக்கும் , பண்டரீபுரத்துக்கருகில் உள்ள ஒரு கிராமம். இங்கு தான் கண்ணனைக் கட்டிய உரலும் உள்ளதாகக் கூறுகிறார்கள், ஆனால் ஊர்ஜிதப் படுத்த ஆளில்லை.

மராத்திய மன்னர் சிவாஜிக்கு வாள் கொடுத்து ஆசிர்வதித்த துல்ஜா பவானி கோவிலின் கம்பீரத்தை நேரில் பார்த்தால் தான் உணர முடியும். அது கோவில் போலில்லாமல்  ஒரு கோட்டை போலிருந்தது பக்தியை விட வீரத்தைக் காட்டியதாக இருந்தது.

பூனாவின் மத்தியில் உள்ள கேல்கர் ம்யூசியம் கண்டிப்பாக பார்க்கப் பட வேண்டியதாகும். நாம் அ ன் நாட்களில் உபயோகித்த அனேகப் பொருட்கள் இங்கு பார்வைப் பொருளாக உள்ளது. குளியலரையில் உள்ள அக்கால பாய்லர்கள், தானியம் வைக்கும் பெட்டிகள், பாக்கு வெட்டிகள், திரிகைகள், சேவை நாழி, அந்தக் காலப் பாத்திரங்கள் - இவையெல்லாம் இன்னும் பழசாகவில்லை. ஆனால் சில வருடங்களில் மறக்கப் படும், ஆகையால் பாதுகாக்கப் பட வேண்டியவைகள். நன்கு பராமரிக்கிறார்கள்.

- எல்லோராவைச் செதுக்கிய கலைஞர்கள்
- துக்காராம், மீரா போன்ற பக்திமான்கள்
- பெற்றோர்களுக்காக வீட்டுக்கு வந்த கடவுளையும் காக்க வைத்த பிள்ளைகள்
- பூமியில் நிழல் படாத கோபுரங்களை அன்றே கட்டிய 'வில்லேஜ்  
  விஞ்ஞானிகள்'
- எம்மதமும் சம்மதம் என்று பிற மத குருக்களையும் போற்றி அன்னாரின்
  நினைவுச் சின்னங்களை இன்னும் பராமரித்து வழி காட்டும் தலைவர்கள்
-  நாட்டிற்க்காக சொந்த வாழ்க்கையை அற்பணித்தவர்கள்
- எதுவும் இல்லை என்று பாடும் அதிருப்தியாளர்களிடையே பால் புரட்சியும்,
  பசுமைப் புரட்சியும் செய்தவர்கள்

- இப்படிப்பட்டவர்கள் உள்ள  பூமி இது.

ஒன்றிரண்டு மாநிலத்தைப் பார்த்த வியப்பு இது. இன்னும் இருக்கும் இருபத்தி சொச்சத்தில் உள்ளவைகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை

வெளி நாட்டு மோகத்தில் கடல் கடந்து, மேலோட்டமாக உள்ள இன்பங்களை வைத்து, நம் நாட்டை குறைவாக மதிப்பிடுபவர்கள் யோசிக்க வேண்டியவைகள் இவை.

'என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்' என்ற பாடல்  நினைவுக்கு வந்தது - கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது !


1 comment:

  1. Well written. Our ancestors gave us many proud things. But this generation is going to leave the Earth in a more polluted manner, than what we inherited.

    ReplyDelete