Tuesday, July 29, 2014

புண்ணிய பூமி

மயான வைராக்யத்தைப் பற்றி  நிறையவே எழுதி இருக்கிறார்கள், படித்தும் இருப்போம். 

இருப்பினும் ஒரு முறை அந்தப் புண்ணிய பூமிக்குப் போய் (முக்கியமாக திரும்பி)  வருவது, ஒருவனுக்கு பல படிப்பினைகளையும், சிந்தனைகளயும் உணர்த்த வல்லது. 

கம்பங்களி தின்றவனும், தங்க பஸ்பம் தின்றவனும் வரிசையில் காத்திருந்து ஒரே மேடையில் ஏறி அக்னியின் வயிற்றுக்குள் போகும்  ஒரு அதிசய காட்சியை இங்குதான் காண முடியும்.

சற்று முன் தான் ஒரு வீடியோவில் பிரபல ஆன்மீக போதகர் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் கவலைப் படுவதைப் பற்றிய ஒரு கேள்விக்கு, இந்த இடத்துக்குப் போய் வருவதை ஒரு மருந்தாகவும் போதித்துள்ளார் என்பதையும் பார்த்தேன். 

மரணம் உலகுக்கு என்னவெல்லாம் செய்கிறது?

உறவினர்களை ஓரிடத்திற்க்குள் கொண்டு வருகிறது.

நண்பர்களை, நலம் விரும்பிகளை அடையாளம் காட்டுகிறது. 

அப்படி இல்லாதவர்களையும் கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறது.

மனிதனின் பெருந்தன்மையை வெளிக் கொணர ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

சாதி, மத பேதங்களை அறுத்து மனித நேயத்தை வெளிக் கொணர்கிறது.

காசின் மதிப்பையும், அதற்க்கு நாம் கொடுத்திற்க்கும் இடத்தையும், அதன் அபரிமிதமான விலையையும் காட்டுகிறது.

சிலருக்கு பயத்தை அளிக்கிறது.

சிலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது.

சிலருக்கு சில  உண்மைகளை உணர்த்துகிறது.

 சதுர அடிகளின்  உண்மைத் தேவையை உணர்த்துகிறது.

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ" என்று பாடிய கவியரசரின் முத்துக்களை மீண்டும் எண்ணி வியக்க வைக்கிறது.

"இந்த ஊத்தை உடம்பின் நாற்ற மேடுகளைக் கண்டு மயங்காதே. ஒரு நாள் பிடி சாம்பலாகப் போகும் கட்டை இது" என்ற பட்டினத்தாரின் வைர வரிகளை உரைக்க வைக்கிறது

இந்த அனுபவம் எப்படிப் பட்டது என்று யாராலும் சொல்ல முடியாததால், இதனைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இத்தனை போதனைகளையும், இவ்வளவு சிந்தனைகளையும் தூண்டும் இதுவல்லவோ நிஜமான புண்ணிய பூமி !





Sunday, July 20, 2014

விழி மூடி யோசித்தால்.....

ஒரு சினிமாவில் வந்தது போல் 'சும்மா இருப்பது' என்பது ஒரு சாதாரண விஷயமே அல்ல- இந்த ஞானோதயம் அடியேனுக்கு சில நாட்களுக்கு முன் தான் வந்தது.

பல பிரபலங்களும், சில ஸ்ரீ க்களும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் , 'ரா'ப் பகலும் மெய் வருத்தமும் பாராமல் செய்யும் தொண்டு எவ்வளவு சிறந்தது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. ஒரு பத்து நிமிடமாவது ஒரு மனிதனை கண் மூடி இருக்கச் செய்வது மட்டுமில்லாமல், அவர்கள் மனதை ஒருமைப் படுத்தச் செய்யும் பயிற்ச்சி மூலமாக அவர்களின் தொண்டு சாதாரணமானதே அல்ல.

சில வருடங்களுக்கு முன்னே டாக்டரின் சிபாரிசில் நான் மேற்க்கொண்ட ஒரு தியான வகுப்பின் முயற்சிக்குப்  பின் டெபாஸிட் இழந்தவன் போல் துண்டைத் தேடி ஓடியவன் தான் - இன்னும் அந்தப் பக்கம் தலையே வைக்கவில்லை.

அன்று பல வருஷங்களாயுடுத்தே, செக் பண்லாம்னு கண் டாக்டர் கிட்ட போனப்புறம் தான் தெரிந்தது, மறுபடியும் மாட்டிக் கொண்டது.  நுழைந்தவுடன் விசாரித்து ரெண்டு கண்ணுலயும் சொட்டு மருந்து போட்டார் ஒருத்தர். ஆரம்ப எரிச்சலுக்குப் பிறகு, கொஞ்சம் பழக்கப் படுத்தி ஆஸ்வாசப் படுத்திக் கொள்ளு முன்னமேயே மேலும் ரெண்டு சொட்டு விட்டு அந்த எரிச்சலை அப்படியே மெய்ன்டைன் பண்ணினார்.

வேறு வழியில்லை என்று தெரிந்ததும் சீனர் கன்ஃபூஸியஸ் சொன்னது போல கிடைத்ததை அனுபவிக்க ஆரம்பித்தேன். ஒரு நாற்பது வருஷமாக தொலைக்காட்சி நம்மை எப்படி அடிமைப் படுத்தி இருக்கிறது என்று புரிந்தது. கண்ணை மூடிக் கொண்டே ரேடியோ கேட்பது போல் அங்கு நடந்த பேச்சுக்கள் -  இல்லாத டாக்டரைப் பார்த்தே தீர வேண்டும் என்று ஒரு பேஷண்டின் பிடிவாதம் , அருகில் இருந்த ஒரு மாமியின் தயவால் நேற்று "தெய்வம் தந்த வீடு" சீரியலில் என்ன நடந்தது என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது, மேட்ச் பார்க்க முடியாத குறையையும் ஓரளவு அங்கு நடந்த  நேற்றைய மாட்ச்சின் அலசலால் நன்கு தெரிந்த கொள்ள முடிந்தது. தன் பிள்ளையயோ, மருமகளையோ கண் மூடி இருந்த போதிலும் விவரித்து வருத்தப் பட்ட போது "கண்ணுல மருந்து போட்டுண்டு அழக் கூடாது" என்றார் சொட்டு மருந்தார் !

இதெல்லாம் கேட்டு அலுத்துப் போய் மூன்றாவது எரிச்சலூட்டும்  சொட்டுகளுக்குப் பிறகு மனதைச் செலுத்தினால் ஒரு சில மணித் துளிகள் மனம் என்னுடைய ஃபேவரைட்டான இராமர் பட்டாபிஷேகத்துக் போய் பின் அலைய ஆரம்பித்து, மோடியிலுருந்து, முக நூல் வரை நடந்து , அடுத்த மாதம் வெளியிட வேண்டிய சைபர் சொசைடி மென் பேப்பர் வரை சென்று , அயர்னிங்காரன் வரவேயில்லியே வரை அங்குமிங்கும் திரிந்தது.

அப்பத்தான் புரிந்தது தியானம் என்பது எவ்வளவு கடினம் என்பது. பா விஜய் சொன்னது போல் எந்தப் பெண்ணும் வரா விட்டாலும், மஹாரஜபுரத்தாராலோ இல்லை மாதவனாலோ மனம் 'அலை பாய்ந்து "கொண்டே தான் இருந்தது.

இந்தப் பிடியிலுருந்து எப்படி தப்பிக்கப் போறோம்னு கொஞ்சம் கலங்க ஆரம்பித்தபோது, சில செகண்டுகளே நினைத்த ராமபிரான் அனுப்பிய தூதர் போல் வந்த கம்பௌண்டர், கண்ணைத் திறக்கச் சொல்லி இன்னாட்டு காந்தியாக எனக்கு எண்ணச் சுதந்திரம், மிட்டாய் கொடுக்காமலே, அளித்தார்



Thursday, July 10, 2014

ஐயோ பாவம், ஐ டி

"பத்தாயிரத்துக்கு வித்துண்டு இருந்த நிலம் ஐயா. திடீர்ன்னு லட்சக் கணக்குல போகுது".. அத்தனை பல்லும் தெரிய சிரித்தார் அந்த நில புரோக்கர்.

"போன வருஷம் முப்பது லட்ஷத்துக்கு அந்த ஃப்ளாட்டு வந்தது. சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வந்து அப்புறம் வாங்குலாம்னு இவ சொன்னா. இப்ப என்னடான்னா அம்பது சொல்றாங்க" ன்னு கையைப் பிசைந்தார்.

"எங்க காலத்திலெல்லாம் ரயில்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் அனாதையாக இருக்கும். இப்ப என்னடான்னா ஃபர்ஸ்ட் ஏ ஸியே பறந்துடுது" - பெருசு என்று இந்தக் கால இளசுகளால் விவரிக்கப்படும் ஒரு பெரியவர்.

"ஆட்டோக்காரனுக்கு என்ன கேட்டாலும் கொடுத்துக் கெடுத்துட்டாங்க".

"முன்னெல்லாம் கறிகாய் விலை கேட்டு, பேரம் பேசி தான் வாங்கினோம். இப்ப ஸ்டிக்கர் பார்த்து, கார்டு தேய்ச்சு என்ன விலையாயிருந்தாலும் வாங்கிடறாங்க".

இப்படி பல புலம்பல்கள் - யாரைப் பற்றி?

எல்லாத்துக்கும் சொல்லும் ஒரே காரணம், அந்த ஐ டீதான் !

இதெல்லாம் பரவாயில்லை. முகனூலில் ஒரு அன்பர், "நாளெல்லாம் வேலை செய்பவர்களை கொத்தடிமை ஆக்கிக் கொள்ளும் ஐ டீ என்று எழுதி இருந்தார்". எனக்குப் பத்திக் கொண்டு வந்தது.

என்னவோ ஐ டீ கம்பெனிகளில் ஆளே கிடைக்காமல் தேடி இவர்கள் படிக்கும் குக்கிராமத்துக்கு வந்து ராவணன் சீதையைக் கவர்ந்தது போல் பேசிக் கொள்கிறார்களே?

படிப்பின் கடைசி வருஷத்துலேயே அப்ளிகேஷனைத் தட்டி விட்டு, சுமாரான இங்க்லீஷுடன் இருந்தாலும், தான் போட்ட ப்ராஜக்டையே விவரிக்க முடியா விட்டாலும், எந்தப் ப்ளாட்பாரத்திலும் (ப்ரொக்ராமிங் தான்) என்னால் வேலை செய்ய முடியும் என்று தலையில் அடித்து சத்தியம் செய்து கம்பெனிக்குள்ளே வந்ததும் அப்பாடா என்று பெரு மூச்சு விடும் சில இந்தக் கால இளைஞர்களே இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் சேர்ந்து ஒரு வருடத்துக்குள்ளேயே "என்னமோ தெரியல்லே, வேலை ஸ்வாரஸ்யமாகவே இல்லை. பாண்டு முடிஞ்சதும் எகிற வேண்டியது தான் " என்று சொல்லும் ஒரே இடமும் இதுவாகத்தான் இருக்கும்.

மற்ற பொது நிறுவனங்களைப் போல ஒரு நிரந்தரமான 1070-3-1340-2-1720 என்ற  ஒரே ஸ்கேல் இல்லாமல் , ஒவ்வொரு வருடமும் அள்ளிக் கொடுக்கா விட்டாலும், கிள்ளியாவது கொடுக்கிறார்கள்.  அதற்கென்ன, அதையும் கொஞ்சம் வாதாடி, சிரித்துக் கொண்டே சண்டை போட்டு, டிஸ்கஷன் முடிவில் ஒன்றுமே நடக்காதது போல் கை குலுக்கிவிட்டு காபி சாப்பிடப் போவார்கள்.  ஐடீ யில் இதெல்லாம் சாதாரணமப்பா.

இரண்டு வருஷமாகும் போதே, அமெரிக்காவா, ஆஸ்த்ரேலியாவான்னு யோசித்து , வீசா வாங்கி பயணித்து, முக நூலில் போட்டோவெல்லாம் போட்டு இளைப்பாறும் போதே அம்மா கேப்பா "எப்பப் பாக்க ஆரம்பிக்கலாம்னு". கொஞ்சம் பிகு பண்ணி, பற்பல கனவுகளுக்கு காம்ப்ரமைஸ் டாட்டா சொல்லி முடிக்கும் போது, திருமணம் தகையும். புதிய உறவும் ஐ டியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் - வாழ்வு வஸந்தம் தான்.

ஆனால் இதெல்லாம் ஒண்ணும் சும்மாக் கிடைக்காது. பல  நாட்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, சில நடு நிசிகளில் கிடைத்த சமோசா, பிஸ்கட்டுகளிலேயே உயிர் வாழ்ந்து, தேவையில்லாத யாருக்கோ வரவேண்டிய திட்டுக்களைச் சுமந்து... இப்படி பல விழுப்புண்களுடந்தான் இது கிடைக்கும். ஆனால் , இப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு புண்ணும், தழும்பும் ஒரு வெற்றிப் படிக்கட்டு என்பதில் சந்தேகமே இல்லை.

என்னுடன் வேலை பார்த்த ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார் "இந்தக் கம்பெனிக்காக எப்படி உழைக்கிறோம் " என்று. ஒவ்வொரு தடவையும் நான் அவரைத் திருத்தி இருக்கிறேன் "இதில் தியாகம் எதுவும் இல்லை. நன்றாக உழைத்ததால் தான் நன்றாகக் கொடுப்பார்கள்" என்று. "உழைத்தால் கொடுப்பார்கள், கொடுத்ததால் உழைக்கிறீர்கள்" என்பதை சிலர் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்

எங்கள் உறவிலேயே இரண்டு ஒரே வயசுப் பசங்க - ஒருத்தர் இஞ்சினீயரிங் படித்து டாலர்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். மற்றவர் சரியான வேலை கிடைக்கும் படிப்பு இல்லாததால் பத்தாயிரத்தைத் தொடவே இன்னும் தினமும் கோவில் சுத்திக் கொண்டிருக்கிறார். ஒரே ஒரு டிகிரி, வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.

இப்படி இருக்கும் பொழுது ஏன் ஐ.டி யைக் குறை சொல்கிறார்கள் ?  புரியவே இல்லை.

சமீபத்தில் ஒரு வார இதழில் இந்தத் துறையைப் பற்றி, இந்தக் கால பாஷையிலேயே சொல்லணும்னா "கழுவி கழுவி ஊத்தி இருக்காங்க".  குறில் என்று சொல்லி நெடிலில் புலம்பி இருக்கிறார்கள். இதைப் படிச்சுட்டு முந்தா நாள் கான்காலில் க்ளையன்ட் கிட்ட டோஸ் வாங்கினவர்களும், போன அப்ரைஸலில் புண்ணான சிலரும் ஆமோதித்து இல்லாத மானேஜரை இருப்பதாக வரித்து குத்திக் குதறி இருந்தார்கள். இதிலெல்லாம் ஸீரியசாக எடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை. இந்த விதமான ஹை ப்ரஷர் உள்ள வேலைகளுக்கு இப்படி  ஒரு வடிகால் தேவைதான். இப்படி பேப்பர் புலிகளாக மாறி , கடித்துக் குதறினால் இவர்களின் மன அழுத்தம் குறையுமென்றால், சில கம்பெனிகளே கட்டு கட்டாக பேப்பரும் கொடுப்பார்கள்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதற்க்கு முன் ஒரு தடவை கீழே பார்த்தால் தேவலை. ஆழமும், உயரமும் தலை சுற்றும். இந்த உயரம் ஒரு கூட்டுக் முயற்ச்சி. உங்கள் திறமைக்கு ஏணி அமைத்துக் கொடுத்து உங்களை ஏற்றி விட்டு நீங்கள் அழகு பார்த்துக் கொண்டிருக்கும்போது கம்பெனியும் டாலர்களை எண்ணுகிறார்கள்- இதில் எங்கு , என்ன தவறு இருக்கிறது? முற்க்காலம் போல்  சேர்ந்து ஒரே கம்பெனியில் இருந்து பென்ஷன், பி எஃப் வரைக்குமா இருக்கப் போகிறோம்? இரண்டோ மூன்றோ , அதிக பட்சம் ஐந்து வருடங்கள் தானே - ஒருவரை ஒருவர் சகித்துப் போகலாமே. அதறக்குள் என்ன இவ்வளவு பொருமல்.

என்னுடைய ஒரே அறிவுரை இது தான்- என்று உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்று தோன்றுகிறதோ, பேசிப் பாருங்கள். சரிப் படவில்லை என்றால் நகர வேண்டியது தான்.  நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் பலம் பற்றியும் புரியும், உலக நிலவரங்களும் விளங்கும், இன்னும் சில புதியவர்களுக்கும் வேலையும் கிடைக்குமே!

 எனக்குத் தெரிந்து எந்தக் கம்பெனியும் போகிறவர்களைக் காலைப் பிடித்துக் கெஞ்சுவதில்லை. சொல்லிப் பார்த்து சரி வரவில்லையெனில் விட்டு விடுவார்கள்.

இருந்து அனத்துவதை விட, இது எவ்வளவோ மேல்- இரு சாராருக்கும் தான் !








Saturday, May 31, 2014

நமக்கென்ன

"தெரியுமா, நாளைலேர்ந்து ரெண்டு மணி நேரம் பவர் கட்டாம். எப்ப வேணும்னாலும் கரண்ட்டு போகுமாம்

நமக்கென்னக் கவலை . அதான் வீட்ல  இன்வெர்டர் இருக்கே !"

"சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கண்ணாடி விழரதாமே, யார் மேலயாவது விழுந்தா என்னாறது?

நம்ம வீட்டுக்கும் ஏர்போர்ட்டுக்கும் என்ன சம்பந்தம். இப்போதைக்கு ஒருத்தன் இங்கேயேதான், பொண்ணோ படிச்சிண்டிருக்கா... நமக்கென்ன !"

"இந்த 21G பஸ் ரூட்ட மாத்திட்டானாம். இனிமே மந்தைவெளி தொடாமே அடையார் வழியே போயிடுவானாம்

நம்ப அந்த பஸ்ஸுல போய் எந்தக் காலம் ஆச்சு. இதென்ன வேண்டாத கவலை".

"ரோட்ல ஒரு லைட்டும் எரியல. ஒரே கும்மிருட்டு. யாருமே கண்டுக்கறதில்லை.

நம்ப வீட்ல தான் எல்லோருமே சீக்கிரம் வந்துடறாளே- நமக்கென்ன கவலை!"

.
.
.
.
"என்ன ஏதோ கவலையா இருக்கே போலிருக்கு?

நம்ம பொண்ணோட ஃப்ரண்ட் யாரோ அமெரிக்காலேந்து வராளாம். ஏர்போர்ட்டுக்கு அவ ப்ரெண்ட்ஸோட போவேன்னு பிடிவாதம் பிடிக்கறா.

போட்டுமே, இந்தக் காலத்துல இதெல்லாம் பார்த்தா முடியுமா?

இல்ல.... இருந்த ஒரே நேர் பஸ்ஸோட ரூட்டையும் மாத்திட்டான். ஏர்போர்ட்டுக்கு போயிட்டு  ராத்திரி வேளைலே கொஞ்ச தூரம் நடந்து தான் வரணும். அடிக்கடி கரண்ட் வேற போய் கடை வெளக்குக் கூட இல்லாம ஒரே இருட்டு......"







Thursday, April 10, 2014

அழைப்புக்கு மரியாதை

"மின்னஞ்சலில் கல்யாணப் பத்திரிகையை ஸ்கேன் பண்ணி அனுப்புவது இப்போது வழக்கமாகி வருகிறது. இதில் சௌகர்யங்கள் பல. தபால் செலவோ, தாமதமோ இல்லை. Send விசையை அழுத்தியதும், பத்திரிகை உலகெங்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது. காகிதச் சிக்கனம். 200 பேருக்கு அனுப்புவதற்க்கு 900 காப்பி அடித்துவிட்டு, மிச்சப் பத்திரிகைகளை என்ன செய்வதென்று தவிக்கத் தேவையில்லை. கிடைக்கவில்லை என்று பெறுனர் பொய் சொல்ல முடியாது..." 

கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கு முன்னேயே அந்த அதிசய எழுத்தாளர் சுஜாதா எழுதியதை இன்று படித்தவுடன் அசந்து போனேன். எவ்வளவு உண்மை! எங்கள் வீட்டில் நடந்த சமீபத்திய கல்யாணத்தில் நான் இன்னும் ஒரு படி மேலே போய் அத்தனை பேருக்கும் அதே மெயிலை கல்யாணத்துக்கு முதல் நாள் மறுபடியும் அனுப்பினேன் - ஞாபகப் படுத்த!

நம்ப பக்கத்துக் கல்யாணங்கள் தான் தமாஷ் என்றால் அதில் கல்யாணத்துக்குக் கூப்பிடுவதும், அதற்க்குக் கூப்பிட்டவர்களின் நடவடிக்கைகளும் கொஞ்சம் தமாஷாகவே இருக்கும்.

சுஜாதா சொன்னது போல் பத்திரிகைகள் மெய்ல் மூலம் அனுப்பப் பட்டாலும், அது வந்து சேர்ந்தது என்று ஒரு கால் கடிதாசி பதில் போடும் பழக்கம்  அரவே கிடையாது. இன்றும் இது  வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாகச் சொல்கிறார்கள். மற்ற வழக்கங்களில் அமெரிக்காவைப் போற்றும் நம்மவர்கள் இதையும் அனுசரிக்கலாமே?

கூப்பிட்டவர்கள் வருவார்களா, மாட்டார்களா, வந்தாலும் மூன்று வேளைகளில் எப்ப வருவார், இதெல்லாம் அனுப்பியவர் கற்பனைக்கே விடப் படும். பழைய நாட்களில் உள்ள RSVP மறுபடியும் வந்தால் நிறைய உணவு வீணடிப்பதை தவிர்க்கலாம்.

இதைச் சரிக்கட்ட ஒவ்வொரு வேளைக்கும் தனித் தனியாகப் பத்திரிகை என்ற உத்தி உருவானது ஒரு விதத்தில் உதவியது.

வருபவர்களில் பல ரகம் - சரியாகக் கூப்பிட்ட வேளைக்குத்தான் வரும் புரிந்தவர்கள்.

கூப்பிட்ட வேளைக்கு வர முடியாமல், அதற்க்கு பதில் வேறு வேளைக்கு வரலாமா என்று நம்மைக் கேட்கும் உண்மையான நண்பர்கள். எனக்கு இவர்களை ரொம்பப் பிடித்திருக்கு. ஏனென்றால், எப்படியாவது கூப்பிட்ட மரியாதைக்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணம், முயற்ச்சி. நிச்சயம் பாராட்டத் தக்கவர்கள்.

வராவிட்டாலும் நிகழ்ச்சி முடிந்து சில  நாட்களில் நேரில் வந்து விசாரிக்கும் சிலரிடம் இருந்த தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தை புரிந்து கொள்ளலாம். சிலர் தொலைபேசியும் விசாரிப்பார்கள். சிலர் அதே ஈமெய்லுக்கும் பதில் போட்டு வாழ்த்துவார்கள். எல்லாவற்றிலும் ஒரு உண்மையோ, வர முடியவில்லை என்ற ஆதங்கமோ, தவற விட்ட வருத்தமோ நன்றாக உணர முடியும்.

நிகழ்ச்சிக்கு பல வாரங்களுக்கு முன்னேயே அலைந்து திரிந்து, கஷ்டப்பட்டு சிலரின் விலாசத்தை வாங்கி பத்திரிகை போட்ட சந்தோஷம், சிலரின் பதில்களில் சுரீர் என்று கடிக்கவும் செய்யும்.

வரவில்லை என்றாலும் பரவயில்லை, விசாரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. சிலர் கிணற்றில் விழுந்த கல் போல் நேரில் பார்த்தாலும் அதைப் பற்றி ஒன்றுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.

மருத்துவர்கள் பலரும் இதெல்லாம் தேவை இல்லாத ஒரு உபாதையாகத்தான் நினைக்கிறார்கள்.

இன்றைய அவசர உலகில் உள்ள சிலர் இதற்க்கான இடத்தை கொடுக்காமல் , கண்ணில் தென்படாத மானேஜரையும் க்ளையன்டையும் திட்டி, அலுவல்களின் உள்ளேயும் அடைக்கலம் அடைகிறார்கள்

ஆனால் சிலரின் காரணங்கள் இதைவிடக் கசப்பாக இருக்கும்.

"என்ன கல்யாணம் ஆயிடுத்தா. மறந்தே போயிட்டேன்"

"வரணுந்தான் இருந்தேன். அன்னிக்குன்னு பாத்து ஃபைனல்ஸ் மாட்ச் இருந்தது"

"இல்ல மாப்ள. க்ளப்லஉக்காந்து பேசிண்டே இருந்தோமா, டைம் போனதே தெரியல"

"ஒர்க்கிங் டேயோனோ, அதான் வரலே. இல்லேன்னா கண்டிப்பா வந்திருப்பேன்"

இவர்களிடமெல்லாம் எனக்கென்னவோ கொடுத்த பத்திரிகையே இருக்காது என்று தான் தோன்றுகிறது. அவ்வளவு அக்கறை.

இதில் மறந்து போவது என்னவென்றால் அழைப்பவரின் மன நிலையைத்தான். அழைத்தவர் வந்தவுடன் அவர் முகத்தில் பீறிட்டுவரும் சந்தோஷத்தை வராதவர் தவற விடுகிறார்.

ஒவ்வொரு அழைப்புக்குப் பின்னும் உள்ள ஒரு ஆதங்கத்தை - வந்து என் மகனையோ, மகளையோ ஆசிர்வதியுங்கள்- ஒரு எதிர்பார்ப்பைச் சிதற விடுகிறார்.

நிகழ்ச்சி முடிந்து நம்மைச் சுற்றி, நம் நலனில் அக்கறை கொண்ட இவ்வளவு உள்ளங்களா என்று கொடுக்கும் பூரிப்பை.

இதெல்லாம் விட பெரிய கொடுமை, சில அலுவலகங்களில், நிகழ்ச்சி முடிவதற்க்கு முன்னமேயே, சில பத்திரிகைகள் குப்பைத் தொட்டியிலிருந்து எட்டிப் பார்க்கும். கொடுத்தவர் கண்ணில் உதிரம் - இப்படி ஒரு நண்பனா என்பதற்க்கா அல்லது முப்பது ரூபாய் பத்திரிகை அவசர கதியில் மூலையில் போனதற்க்கா என்று நிர்ணயிப்பது, கொஞ்சம் கடினம்தான்

என் உறவினர் ஒருத்தர் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கண்டிப்பாக போவார். சாப்பிடாவிட்டாலும் தலையையாவது காட்டுவார். அவரிடம் கேட்டதற்க்கு " எனக்குக் கொடுத்த அழைப்புக்கு மரியாதை கொடுக்கணும். அதான் என் நோக்கம்- I must honor the invitation " என்பார். இவர்களைப் போன்ற ஜனங்கள் என்னவோ குறைந்து கொண்டே போவது போல எனக்குத் தோணுது.





Wednesday, January 29, 2014

ஈரம்

எனக்குத் தெரிந்து பிறக்கப் போகும் குழந்தை பற்றிய செய்தி நடு நிசியில் வந்தாலும்  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்க்குத் தயாராக இனிப்பு வாங்கி வைத்துள்ள தந்தையும் இருந்திருக்கிறார்.

குழந்தை வயிற்றில் எவ்வளவோ உதைத்தும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அலுவலகத்துக்குப் போய் அவனுக்காக சம்பாதித்த தாய்மார்கள் நிறைய உண்டு.

கூடப் பிறந்தவன் முன்னேற தியாகங்கள் செய்த சகோதரர்கள் பல.

குடும்ப முன்னேற்றத்துக்காக ஏராளமான அவள் ஒரு தொடர் கதை கவிதாக்கள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் எவ்வளவோ சகித்து, சில தியாகங்கள் செய்துதான் அப்பா, பிள்ளை, மகள், அண்ணா, தம்பி, தங்கை உறவுகள் உருவாகின்றன.

ஆனால் கேள்விப்படுகிற சமீபத்திய தலைப்புச் செய்திகளோ அதிர வைக்கிறது:

தட்டிக் கேட்ட  தந்தையை கொன்ற மகன்.

சொத்துத் தகறாரில் அண்ணனைப் போட்டுத் தள்ளிய தம்பி.

வயதான அக்காவைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன் மனதுக்குப் பிடித்தவனுடன் தலைமறைவான தங்கை.

தூங்கும் பொழுது தந்தையின் வாயில் ஆசிட் ஊற்றிய மகன்.

கேட்கவே கொடூரமாக இருக்கிறதே- இதைச் செய்பவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும். சாக்லேட்டுடன் காத்திருந்த தந்தை நினைத்திருப்பாரா, தன் மகன் பாலுக்கு பதில் அமிலம் ஊற்றுவானென்று?

எப்படி அம்மாவை எட்டி உதைக்க முடிகிறது - தொட்டிலுக்கு முன்னேயே வந்த பழக்கம் பால் குடி மறந்த பின்னும் மறக்காமல் போனதேன்?

சின்ன வயதில் ஓன்றாக விளையாடி, திருட்டு மாங்காய் காக்காய் கடியில் பகிர்ந்த மனங்கள் எப்படி கால் க்ரௌண்டுக்கும் அரை க்ரௌண்டுக்கும் அரிவாளைத் தூக்குகின்றது ?

இருபதுக்கு வருடங்களுக்கு மேல் ஒன்றாக உண்டு, உறங்கிய சொந்தங்களை விட்டு  எப்படி நேற்று வந்தவனுடன், புதிய வாழ்க்கையைத் துவங்க கால் ஓட்டமெடுக்கிறது.

எது ரத்த பந்தங்களுக்கு எதிராக வாள் தூக்க வைக்கிறது- மண்ணா, பொன்னா, பெண்ணா?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதைப் பற்றி முன்னேயே பல கவிகள் கண் கலங்கி பாடி இருக்கிறார்கள்.

அருணகிரி பாடிய " மகனே , இந்த ஊத்தை உடம்பின் நாற்ற மேடுகளைக் கண்டு மயங்காதே. ஒரு நாள் பிடி சாம்பலாகப் போகும் கட்டையிது"

"அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே"

"கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளேதான், தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளதான்"

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

இவ்வுலகில் கவி பாடிய பலரும் ஏதோ ஒருவகையில் அனுபவித்துத்தான் பாடி இருக்கிறார்கள். நாம் தான் கவனிக்கவில்லை.

இந்த நாட்டின் மண் வற்றலாம், ஆனால் நெஞ்சின் ஈரம் வற்றுவது கொடுமை.


Sunday, December 15, 2013

மயக்கும் மார்கழி

நினைத்தாலே இனிக்கிறது- பிறக்கப் போகும் மார்கழியை நினைத்து .

இந்த இனிய எதிர் பார்ப்பு, பல வருடங்களாகவே இருந்து கொண்டிருக்கு.

சின்ன வயதில், ஸ்கூல் படிக்கும் பொழுது, மார்கழியை விட அது வரும் டிசெம்பர் மாதம் பிடித்தது. அந்தக் குளிர் பிடித்தது. அரைத் தூக்கத்தில், அதி காலையில் கிழக்கு மாட வீதியில் வலம் வரும் அண்ணாஜி ராவ், பாபனாசம் சிவன் பஜனை ஓசை பிடித்தது. உண்மையைச் சொன்னால் மார்கழியைப் பற்றி ரொம்ப ஆசையாகப் பேசப்படும் பொங்கல் என்னை அவ்வளவாக ஈர்த்ததே இல்லை.

காலேஜ் போனப்புறம், அந்த அதிகாலைக் குளிரில் எழுந்து பால்கனியில் உட்கார்ந்து மேத்ஸ் போடப் பிடித்தது. நண்பர்களுடன் சுற்ற அந்த சீதோஷ்ண நிலை உதவியது. நிறைய லீவு இந்த மாதத்தில்தான் கிடைக்கும்.

வங்கியில் சேர்ந்தப்புறம் மார்கழியில் வரும் டிசம்பர் அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் அதிசயக் கன்னியாகத் தெரியும். புது வருடத்தில் வரும் லீவ் க்ரெடிட், புதுப் புது வருமானங்கள்.  நிறைய இந்த மாதத்தில்தான் டூர்கள் பல போயிருக்கிரேன், வெய்யிலும் விடுமுறை எடுப்பதால். இதனிடையே ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழியில் தான் மலரும்.

இப்படிஇருந்த மார்கழி, தொண்ணூறுகளில் மாறிப் போனது, வீட்டுக்கு வந்த ஒரு பெரியவர் திருப்பாவை பற்றி சொன்னவுடன் அதிகாலை எழுந்து அதைப் படித்து அனுபவித்தேன்.

சமீப காலமாக, குறிப்பாக வேலையிலிருந்து விலகியபின், ஏனோ மார்கழி அதிகமாக இனிக்கிறது. காலையில் நான்கு மணிக்கு வேண்டுமானாலும் எழுந்திருக்க முடிகிறது - தேவைப் பட்டால் மதியம் தூங்கலாமே. உறங்கும் வீட்டை தொந்தரவு பண்ணாமல் நாமே காபி போட்டுக் குடித்து, குளித்து, பூஜை செய்த பின்னும் மணி ஆறுதான் என்றால் ஒரு தனி சுகம் தான். இருள் பிரியாத காலையில் குளிரில் கோபுர தரிசனம் எனக்குப் பிடித்த ஒன்று- இதை மார்கழியில் தான் செய்ய முடியும்.

போன வருஷம் ஒரு திடீர் உந்துதலில், தினமும் ஒரு கோவில் என்று முப்பது கோவில்கள் சென்ற நினைவு இன்றும் இனிக்கிறது.

நான்கு மாட வீதியைச் சுற்றினால் சம்ப்ரதாய பஜனையிலுருந்து இன்றைய பஜனை வர எல்லாவற்றையும் அனுபவிக்கலாம். மதியம் சாப்பிட்ட பிறகு கூட ஏதாவது ஒரு சபாவுக்குள் நுழைந்தால் எதோ ஒரு கச்சேரி கண்டிப்பாக அனுபவிக்கலாம், இலவசமாக. இதையெல்லாம் மீறி சபாக்களில் கிடைக்கும் அறு சுவை உண்டி ஒரு சிறப்புச் சலுகைதான்.

எனக்குத் தெரிந்து மார்கழியில் ஏற்ப்படும் ஒரே நஷ்டம் அதி காலை நடைப்பயிர்ச்சிதான். மனம் தான் இவ்வளவு சந்தோஷமாக இருக்கே, கொஞ்சம் உடலைத் தள்ளி வைக்கலாமே என்றுதான் ஆறுதல் அடையலாம்.