Sunday, December 3, 2023

மழைக்கால ஞானம்

 வெளியே மழை பின்னிக் கொண்டிருக்கிறது . அநேகமாக காற்று பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் - அதைக் கண்டவுடன் மழை  சோவென்று இரைச்சலுடன் அதிகமாக ஒரு கொட்டு கொட்டுகிறது. முன்பெல்லாம் மழை வந்தால் குஷியாக இருக்கும். புயலென்றால் பரம சந்தோஷம் . இத்தனைக்கும் வீட்டிலுள்ள பாத்திரங்களெல்லாம் சொல்ப வாடகை வீட்டிற்குள் வந்து எல்லா அறைகளிலும் தங்கி வருணனின் கொடையை தாங்கிக் கொண்டிருக்கும். அப்படியும் ஒரு சந்தோஷம் . முக்கியமாக பள்ளி கிடையாது. இருக்கும் சின்ன அறையில் அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைவரும் தஞ்சம். என் காலேஜ் வாத்தியார் அண்ணா கற்பனை சிறகடிக்க வீட்டிலுள்ள போர்வைகளை திரையாக வைத்து உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விடுவான். கதை வசனம் எல்லாம் அவனே . கடைக்குட்டியான எனக்கு எப்பொழுதும் ஒரு பராக் பராக் சொல்லும் வசனமே .

எனக்கு நினனவு தெரிந்த முதல் புயல் , 1967 என்று நினைக்கிறேன் நாங்கள் மயிலை கீழ மாட வீதியில் வசிக்கும் பொழுது தான் . வெளியே போய் மழை பார்த்தால் என்ன ஆகும் என்று அப்பாவிடம்  கேட்டுக் கொண்டிருக்கும் போதே , அருகிலுள்ள தேரின் கூரையிலிருந்து வந்த  ஒரு தகரம்  சர்ரென்று ராக்கெட் போல் கடந்ததும் அலறி அடித்துக் கொண்டு உள் அறைக்கு ஒடினது இன்னும் தெளிவாக நினைவுக்கு வருகிறது.  

பிறகு வந்த சில புயல் மழையில் சென்னையின் முக்கிய பகுதியில் வசிக்கும் பொழுதும்  மின்சாரம், தொலைபேசி இல்லாமல் ஒரு வாரம் தள்ளியது ஒரு புதிய அனுபவம். 

இன்றைய மிஃஜாம் புயல் ஒரு புதிய விழிப்புணர்வைக் கொடுத்தது. வெளியூர்களில், மற்ற நாடுகளில் இருக்கும் உறவெல்லாம் வானிலை செய்தி பார்த்து 'எல்லோரும் பத்திரமாக இருக்கவும். தேவையானதெல்லாம் வாங்கி வைத்தாச்சா - பால், கறிகாய் , மருந்து, மெழுகுவர்த்தி, நொறுக்கு தீனி , இத்தியாதிகள் ' என்று கேட்க இரவில் மழை சத்தத்தை  சுகமாக அனுபவித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று விழிப்பு . உய் உய் என்று சத்தத்துடன் ஓர் ஆம்புலன்ஸ் விரைந்தது. இங்கே சிலர் அமைதியாக அடை மழையில் உறங்கிக் கொண்டிருக்க யாரோ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் . அதையும் விட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த மழை காற்றிலும்   விரையும் அந்த ஆம்புலன்சில் ஓட்டுனர் !?. 

இப்படி  நினைத்துக் கொண்டிருக்கும் போழுதே மின்சாரம் போனது. இரண்டு நிமிடங்களில் மீண்டும் விளக்கு துடித்து வந்தவுடன் மறுபடியும் நினைவுக்கு வந்தவர் கீழ் தளத்தில் உள்ள காவலாளர்- உடனே ஜனரேட்ட்ரை உயிர்ப்பித்து ஒளி கொடுத்தவர் .

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அவரைப் பார்த்து காபிக்கு காசு கொடுத்து , பகல் சாப்பாட்டிற்கும் ஏற்பாடுகள் முடிந்தது என்று தெரிந்ததும் தான் சிறிது நிம்மதி வந்ததது.

 மின்சாரமும், ஒழுகாத கூரையும், சூடான காபியும் நமக்கு மட்டும் இருந்தால் போதாது. நம்மைச் சுற்றி உள்ள  காவலாளியும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரும்,  தெரு முனையில் உள்ள ஆட்டோக்காரரும் , அயன் பண்ணுபவரும்,  நாம் தினமும் சந்திக்கும் நம் வீட்டு வேலைக்காரியும் சுகமாக இருந்தால் தான் நாம் நிம்மதி அடைய முடியும் என்பது பளிச்சென்று விளங்கியது. 

இந்த மாதிரி நேரங்களில் நம்மால் முடிந்ததை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன்   மாடிப்படி ஏறும் பொழுது திரும்பிப் பார்த்தால் வாசல் அருகில் இருந்த காவலாளிக் கூ ண்டு  போதி மரம் போல் தெரிந்தது,  என் பிரமை தானோ !! 



Monday, November 6, 2023

ஓடாத காவேரியில், ஒரு பிடிவாத துலா ஸ்நானம்

 என் அம்மா ஐப்பசி மாதம் வந்த உடனேயே மிகவும் உணர்ச்சிகரமாக துலா ஸ்நானத்தைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவாள் . எப்படி ஓடும் ஆற்றில் , முக்கியமாக காவேரியில், ஸ்நானம் செய்வது புண்ணியம் சேர்க்கும் என்று. ஆனால் அந்நாட்களில் இருந்த பல தடைகளினால் முக்கியமாக பொருளாதார தடைக் கற்களால் அவளின் ஆசை ஓரிரு முறையே நிறைவேறியது. மற்ற பணிகளை முடித்து நானும் இதன் பக்கம் திரும்ப ஆரம்பித்து ஐந்து ஆறு வருடங்களாக முயற்சி செய்து மூன்று நான்கு வருஷங்களாக துலா ஸ்நானம் செய்து கொண்டு இருக்கிறேன் .

'எங்கேயாவது துலா ஸ்நானம்' என்றஆசை நிறைவேறியவுடன்  இந்த வருஷம் கடமுகத்துக்கே சிறப்பான  மாயூரத்திலேயே (இந்நாளைய மயிலாடுதுறை) ஸ்நானம் செய்ய அவா வந்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கையில் அங்கிருந்து வரும் செய்திகள் உற்சாகப் படுத்துவதாக இல்லை. ஏற்கனவே அங்கு ஓடும்  சிறிய காவேரியில் இம்முறை மிகவும் குறைவாக தண்ணீர் இருப்பதாகவும், அதையும் மீறி ஸ்நானம் செய்ய வருபவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் பீச்சீ அடிப்பதாகவும் வந்த செய்திகளினால் இந்த வருட மாயூர முயற்சி கை விடப்பட்டது.

அந்நாட்களில்  சென்னை பஸ்களில் கூட்டமாக  இருந்தால் முந்தைய ஸ்டாப்பிலேயே ஏறிக் கொள்வார்கள். அது போல் மாயூரத்தில் இல்லா விட்டால் திருச்சி அகண்ட காவேரியில் தண்ணீர்  கொஞ்சமாவது ஓடும் என்று நினைத்து அங்கே போனேன். போகும் பொழுதே என் வண்டி ஓட்டுநர் என்னை ஒரு மாதிரி பார்த்து , 'திருச்சியில் எந்தக் காவேரிப் பக்கம்' என்றார் . நானும் 'ஸ்ரீரங்கம் கீதாபுரம்'  என்றேன்.  அங்கு சென்றதும் ஒரு பத்து பேர்கள் அங்குமிங்குமாக தண்ணீரில் உட்கார்ந்து  கொண்டிருந்தார்கள் - விசாரித்ததும் தெரிந்தது கணுக்கால் அளவே தண்ணீர் இருப்பதாகவும்  தண்ணீரை விட பாசி அதிகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்  பொழுதே ஒரு பெண்மணி தொபுக்கென்று வழுக்கி உட்கார்ந்து அதிர்வதைக் காண முடிந்தது.

கணுக்கால் அளவே ஆழத்தில் உட்கார்ந்து . . . 

 சம்பிரதாயப்படி  மூழ்கிக் குளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றவுடன் , அப்பொழுது தான் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஒரு தம்பதி நான் கேட்காமலேயே ஒரு எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டி இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நகர்ந்தார்கள். 

மிகக் கவனமாக அடிப்ரதக்ஷணம் செய்வது போல் நகர்ந்து , ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு மனைவியுடன் சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங் போல் நிதானமாக நகர்ந்தேன். கிழக்குப் பார்த்து உட்கார்ந்து ஸ்னானத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் பொழுது அங்கு வந்த ஒரு முதியவர்   (எண்பது தாண்டியவராம் - ஸ்ரீரங்கம் கோவிலில் வேத கோஷ்ட்டியில் ஒரு முக்கிய நபர்- கூட வந்த மாமி சொன்னாள் ) சங்கல்ப மந்திரங்கள் சொல்ல,  'கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரீ . . . . .'  முணுமுணுப்புடன் , இருந்த சொல்ப நீரிலும் ஒரு நிறைந்த துலா ஸ்நானம் நிறைவேறியது . 

துலா ஸ்நானம் முடிந்த நிறைவு  

ஸ்நானம் முடிந்தவுடன் அந்த வயது முதிர்ந்த மாமி என் மனைவிக்கு மஞ்சள் குங்கும தாம்பூலம் கொடுத்து, 'ஆற்றின் நடுவே தாம்பூலம் குடுப்பததற்கும் வாங்கிக் கொள்வதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்றவுடன் எங்கள் சிலிர்ப்பு அடங்க வெகு நேரமாயிற்று. 

எங்கிருந்து வந்தார் எனக்கு மொண்டு குளிக்க சொம்பு கொடுத்தவர்?

 எனக்கு சங்கல்பம் செய்து வைத்தது - யார் அந்தப் பெரியவர்?

தாம்பூலம் கொடுத்த அந்த மூதாட்டி எப்படித் தோன்றினாள் ?

எல்லாமே கனவு போல் நடந்தது !!

மனதார சிரத்தையுடன் ஏங்கினால் நினத்ததை அவன் நடத்தி வைப்பான் என்பது இதுதானோ - யாமறியேன் பராபரமே !