மாயூரம் காவேரி புஷ்கர், நெல்லை தாமிரபரணி புஷ்கர் என்ற வரிசையில் சமீபத்திய பக்தி மார்க்கத்தின் மற்றுமொரு வழி அத்தி வரதர் தரிசனம். போன வருடமே சில செய்திகள் இதனைப் பற்றி கசிந்தபோதும் நான் இதற்க்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இதுவும் ஒரு காலத்துக் கேற்ற திணிக்கப் பட்ட ஒன்று போல என்று சற்றே அலட்சியமாகத்தான் இருந்தேன். ஆனால் ஜூன் மாத முடிவில் இதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் இதனால் கவர பட்டவர்களின் அழுத்தங்களும் என்னை மேலும் கூர்ந்து நோக்க வைத்தது. சில பல காரணங்களால் குளத்திலேயே மூழ்கிக் கிடக்கும் அத்தி மரத்தினால் செய்யப் பட்ட இந்தப் பெருமாள் வடிவை நாற்பது வருடங்களுக்கொரு முறை குளத்திலிருந்து எடுத்து சயனித்த கோலத்திலேயே சில நாட்களும் பின் நின்ற கோலத்தில் சில நாட்களும் மக்களுக்கு அருள் பாலிக்கச் செய்து மீண்டும் இந்த சிலை வடிவப் பெருமாளை குளத்திலேயே சேர்த்து விடுவது ஐதீகம் என்று நம்பப் படுகிறது.
1979ஆம் வருடம் நன்கு புரியக் கூடிய, பக்தியால் உ ந்தப் பட்ட ஒரு இளைஞனாக நான் இருந்தாலும் இந்த நிகழ்வைப் பற்றி எதுவும் கேள்விப் பட்ட ஞாபகமே இல்லை. இன்று போல் தொழில் நுட்பமும் தொலைக் காட்சிகளும் வளர்ந்திராத காலமாக இருந்தாலும் பிரதான செய்திகளைச் சுமக்கும் வாயிலான தினசரிகளும் வானொலியும் இதைப் பற்றி விவரித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அன்றைய முன்னணிக் கவிஞரான கண்ணதாசன் அத்தி வரதரைப் பற்றிப் பாடிய பாடலாக ஒரு செய்தியும் இன்று உலவிக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்த அளவு நிகழ்ச்சி நிரல்களோ , ஊடகங்களின் கவனமோ இல்லாத நிலையில் ஒரு வேளை வெகுவான பக்தியுடைய குறிப்பிட்ட சில பகுதி மக்களும் அன்றும் தரிசித்திருக்கக் கூடும். தொலைக்காட்சி, முகநூல், குறுஞ்செய்திகளின் அபரிமித வளர்ச்சி, உபயோகங்கள், மக்களை சென்றடையக் கூடிய சாத்தியங்கள், பெருகி வரும் வியாதிகள், தொல்லைகள், மன உளைச்சல்கள், அதிகமாகப் புழங்கும் காசு இப்படிப் பல விதங்களில் உந்தப் பட்டு, மக்கள் இன்று காஞ்சிபுரத்தை நோக்கி அத்தி வரதரைக் காண விரைவது கொஞ்சம் புரிய வைக்கிறது.நிற்க.
கூடி இருந்த சுற்றத்தின் அழுத்தத்தினாலும், உடம்பில் உள்ள தெம்பினாலும் நிறைய இருந்த நேரத்தினாலும், உள்ளே ஊறிக் கொண்டிருக்கும் பக்தியினாலும் (இதே வரிசையில்தான் என்று அடிக்கோடிட ஆசைப் படுகிறேன்), எந்த விதத்திலும் சராசரி மனிதனுக்கு குறையாதவன் என்ற வகையிலும் நானும் நகரேஷு காஞ்சி நோக்கிப் பயணப் பட்டேன்.
கூட வந்த நண்பர்கள் குடும்பமும், சற்றே மேகங்களுக்குள் ஒதுங்கி ஓய்வெடுக்க முடிவு செய்த சூரியனாரும், இந்த மாதத்திலேயே எட்டாவது முறையாக காஞ்சிக்கு வரும் ஓட்டுனரும் ஒத்துழைக்க அதிகாலையில் சென்னையிலிருந்து கிளம்பிய இன்னோவா காஞ்சிபுரத்துக்கு வெளியே உள்ள ஹோட்டலில் தான் நின்றது. நம்மவர்களுக்கு வாயில் உள்ள வீச்சு வேலையில் இல்லை. முப்பது பேர் பசியுடன் வர சாவகாசமாக எட்டு மணிக்குத் திறந்த உணவகத்தில் சாப்பிட ஒன்றுமே இல்லை. உக்கிராண அறைக்கு உள்ளே போய் தேவைப் பட்டதை எடுத்துக் கொண்டு சாப்பிட்ட வகைகளுக்கும் நாமே கணக்குப் பண்ணிக் கொடுத்த காசை சமர்த்தாக வாங்கி உள்ளே போட்டார், என்னமோ வங்கியில் வேலை செய்யும் கேஷியர் போல பெருமிதத்துடன் லேட்டாக வந்து கல்லாவில் அமர்ந்தவர். இதே அண்டை மாநிலத்து அயராது உழைக்கும் மக்களாக இருந்திருந்தால் 'இடாலி' செய்யத் தெரியா விட்டாலும் தெருவுக்கு தெரு கடைகள் திறந்து அதிகாலை நான்கு மணிக்கே சாயா கொடுத்து அசந்து (அசத்தி) இருப்பார்கள்.ஆங்காங்கே நிறைய போலீஸ் தலைகள் தடுக்கப் பட்ட சந்துகளுக்குள் நுழைய பார்க்கும் ஆட்டோக்களுடன் போராட, சிலர் மும்முரமாக ரோட்டோரத்தில் முளைத்திருந்த கையேந்தி பவன் சாம்பாருக்குள் இட்லியைத் தேடிக் கொண்டிருந்தனர் ("என்ன சார் பண்ண காலீல மூணு மணிக்கே லைன்ல வந்துட்றாங்க"- பாவம் போலீஸ்!)
நவம்பர் தோறும் வங்கி பென்ஷனர்கள் அசட்டுத்தனமாக 'நான் உயிரோடுதான் உள்ளேன் ஐயா ' என்று உறுதிப் படுத்துவது போல இங்கும் குறிப்பிட்ட இடத்தில், சொன்ன நேரத்திற்குப் போய் நானும் 'வெகு முக்கியமான ஆசாமி ' தான் என்று சொல்லி அதற்க்காக 'வாங்கி' இருந்த ஆதாரத்தை வந்தவர் காண்பிக்க ஒரு முக்கியதாரர்கள் வரிசையில் செலுத்தப் பட்டோம் ('அவசரப் படாம போங்க. சி எம் வர்றதுனால கூ ட்டமே இல்ல - போலீஸ்காரி) . இலவச வரிசையில், சூப்பர் ஸ்டாரைப் பார்த்த ரசிகர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டு, பக்திப் பரவசத்தில் மக்கள் கோவிந்தா நாமங்களை எழுப்ப, இந்த வரிசையில் இருந்த குறைந்த தள்ளு முள்ளால் கொஞ்சம் நிதானமாக அத்தி வரதரை தரிசனம் செய்ய முடிந்தது. கண்ண மூடி அயர்ந்து கிடைக்கும் பெருமாளுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்வதில் என்ன அவ்வளவு பெருமை என்று தெரியவில்லை-இத்தனைக்கும் படம் எடுத்தால் செல் போன் பறித்துக் கொள்ளப்படும் என்று மூலைக்கு மூலை ஒட்டப்பட்டிருக்கும் அறிவிப்பையும் தாண்டி இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தரிசனத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் வெளியே வந்த பொழுது பெருமாள் பள்ளி கொண்டிருந்த இடத்திற்கு சில அடி தூரத்திலேயே காவலர்கள் சிலர் கோவிலுக்குள் காலணியுடன் உலவியது அதிர்ச்சியையும் கோபத்தையும் பெருக்கியது.
தரிசனம் முடிந்து வெளியே வந்த உடனேயே மீண்டும் ஒரு கும்பல் உருவாக்கிக் கொண்டிருந்தது.இங்கு ஏதும் சன்னதி இல்லையே என்று எட்டிப் பார்த்தால் பிரசாதம் விற்றுக்(!) கொண்டிருந்தார்கள்-நெரிசலைச் சமாளிக்காமல் ஊதிப் பெருசாக்கும் முயற்சி ஏமாற்றத்தை அளித்தது.
சிறிது தூரத்தில் மற்றுமொரு நீண்ட வரிசை அங்கு இருந்த நான்கு பொதுக் கழிப்படத்திற்கு அடிவயிற்று கனத்துடன் காத்திருந்தது. உள்ளே சென்று வந்தவரின் கணிப்புப்படி 'போகாமல் இருப்பதே நல்லது. சென்று திரும்புவது வியாதியை வரவழிக்கக் கூடும்'.
'ஆறிலிருந்து ஒன்பது மணி வரை ஆகும் என்று பயமுறுத்தப் பட்டது எப்படி பதினைந்து நிமிடங்களில் சாத்தியமானது' ??? - உள்ளே ஒரு நம்பகமில்லா உணர்வும் எழுந்தது.
நம்ப முடியாத புளகாங்கிதம், அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிப் பிழம்பாக நான் வந்த வாகனத்தை நோக்கி நகர்ந்த பொழுது மோதிய எண்ண அலைகள் வெகுவாகச் சிந்திக்க வைத்தது. உணர்வுகளை அமைதிப் படுத்தியதும் எழுந்த சில எண்ணங்கள்:
- முப்பத்தொன்பது வருடங்களில் இந்த அளவு ஏற்பாடு தான் செய்ய முடிந்ததா?
- இதைவிடப் பன்மடங்கு கூட்டத்தை சமீபத்திய மஹாமகத்தில் சமாளித்த அனுபங்கள் எங்கே போயிற்று?
- இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது ஏற்புடையதா?
- இப்படிப்பட்ட ஜனத்திரளில் முதலில் தரம் குறைவது சுகாதாரம் தான் - இதைக் கருத்தில் கொண்டிருந்தால் இவ்வளவு குப்பைகளும் தெருவோர அசிங்கங்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாமே - திருப்பதி போன்ற இடங்களிலிருந்து சுத்தமான கழிவறைகளை மக்களுக்குக் கொடுப்பது எப்படி என்று அறிந்திருக்கலாமே!
- சராசரியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் எவருக்கும் எழும் இயற்க்கை உபாதையை ஏன் கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப் படவில்லை?
- எனக்குத் தெரிந்து காவல் துறையை குறை சொல்வதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அலைக்கழிக்கட்ட அவர்கள், நான் பார்த்த வரையில், இருக்கும் அதிகாரத்திற்குள் பல குறுக்கீடுகள் இடையே முடிந்தவரை செய்கிறார்கள் என்றே சொல்வேன்
- நேற்று வரை முப்பது லக்ஷம் பேர் வந்த இந்த இடத்தில், எந்த விதமான சோதனைகளும் நடத்தப் படாதது ஏன் என்று புரியவில்லை - இதே அளவு கூட்டம் வரும் பல கோவில்களிலும் கருவிகள் கொண்டு உடல் முழுவதும் வருடி ஆயுதங்களுக்கான பரிசோதனை நான் சென்ற வரிசையில் நடை பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது!!
- பணமும் செல்வாக்கும் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றி முக்கிய புள்ளிகளுக்கு அளிக்கும் சலுகைகளை ஏன் ரத்து செய்யக் கூடாது. இல்லையென்றால் குறைக்கவாவது செய்யலாம். இவைகள் இருந்தால், இருக்கப் பட்டவர்கள் உபயோகப் படுத்தத்தான் செய்வார்கள் - அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் திருப்பதி போன்ற இடங்களிலேயே இதைச் செய்ய முடியாத போது 48 நாட்கள் கூத்தில் எவ்வளவு செய்ய முடியும்?!
வரதனைக் கண்டு திருப்திப் பட்ட மனம் ஏனோ அமைதி இல்லாமல் இவ்வளவு சங்கடங்களையும் அசை போட்டுக் கொண்டிருக்கிறது .
குறை கூறுவது நோக்கமல்ல - அதனால் சாதிக்கப் போவது எதுவும் அல்ல.
ஆனால், முக்கியமாக, இப்படிப்பட்ட அனுபவங்களை அடுத்து வரும் நிகழ்வுகளுக்குக் கொண்டு சென்றாலே, மாற்றங்களும் முன்னேற்றங்களும் வரும் - நடக்கும் என்று நம்புவோம் !!