Thursday, December 27, 2018

அங்கும் இங்கும்

மதியம் மணி மூன்றாகினும் ஒரு அரை இருட்டு, பிசு பிசு தூறல்,  வெற்று உடம்புக்குத் தாங்காத குளிர் , ஜன்னல் கண்ணாடியின் மேல் பாசத்தோடு படர்ந்து பிரிய  மறுக்கும் பனித்துளிகள். படிக்கப் புத்தகம், பக்க வாட்டில் சில கரகர மொறுமொறு வகையறா,  துணைக்கு இளையராஜா குழு நவீனின் புல்லாங்குழல் மெல்லிசை, அருகில் ஆவி பறக்கத் தன் நேரத்துக்கு காத்துக் கிடந்த  பில்டர் காபி ,  பல வருடங்களுக்கு முன் போன மூணார் விஜயம்  நினைவில் வந்து போனது .

இப்படிப் பட்ட சூழ்நிலைக்குத் தானே இவ்வளவு நாட்கள் சென்னையில் ஏங்கியதுண்டு,  பின் என்ன குழப்பம் என்று உள் மனம் வினவியது.  ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் என்று மனதில் தோன்றிய 'ஞான ஒளி',  இதுவே சென்னையாய் இருந்தால்  எப்படி இருக்கும் என்றும் அசை போடத் துவங்கியது .

அருகில் வசிக்கும் நண்பர்களின் அரைத் தூக்கத்தைக் கெடுத்து எங்கே போகலாம் என்று குழம்பி முடிவுறாத நிலையில் சந்தித்து கமல் முதல் கிரிக்கெட் வரை டீக் கடைகளில் அலசி  சீனு மோகன் மறைவினால் ஞாபகப் படுத்திய கிரேசி குழுவினர்களிடையே ஒரு உலா வந்து வீடு திரும்புவதற்குள் மாலை முடிந்திருக்கும்!

என்ன செய்வது , கனவு காண்பதோ தொலை தூரத்திலுள்ள டிசம்பரிலும் நல்ல சீதோஷ்ண நிலை என்று பெயர் பெற்ற டெக்சாஸ் மாநிலத்திலிருந்து . ஆனால் இந்தக் குளிரே கொஞ்சம் சோதித்துதான் பார்க்கிறது. அருகிலுள்ள சுற்றத்தாரின் கேள்விக் கணைகளுக்கும்,  நக்கல் பார்வைக்கும் எண்பதுகளில் நடு இரவில் மலைப் பிரதேசங்களில் நண்பர்களுடன் உலாவிய கதையைச் சொல்லி மாளவில்லை ;  இருந்தும் கடந்து போன முப்பத்துச் சொச்ச வருடங்களை கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள்.

 சரி சட்டையை மாட்டிக் கொண்டு பொடி நடையாகப் போய் டீ குடித்து அப்படியே மத்தள நாராயணன்  தெரு கடை வெங்காய பக்கோடா வாங்கலாம் என்பதற்காவது வழி இருக்கா... . ஹுஹும் முடியவே முடியாது ! துணை இல்லாமல்,  பாக்கெட்டில் பேப்பர்கள் இல்லாமல் நகரவே முடியாது.

வாநிலை  பார்த்து, உடை பல அணிந்து, நைக்கியை மாட்டி, காதுகளை மறைத்து வெளி இறங்கினால் சட்டென்று மாறிய மேகங்கள் இடியுடன் கண்ணடித்து மிரட்டும். அதையும் மீறி நடுங்கிக் கொண்டே சில நேரம் நடந்து,  பாக்கெட்டில் விட்ட கைகளை பிடிவாதமாக வெளியே எடுக்காமல்,  எப்பொழுதும் புன்னகைக்கும் எதிரே வரும் பாதசாரிகளையும், வேலை முடிந்து வீட்டுக்கு மென்று கொண்டே காரில் போகும் பெண் மணிகளையும்  ( ஆமாம் இந்த ஊரில் என்ன பெண்கள் மட்டும் தான் கார் ஒட்டுகிறார்களா ?நான் பார்த்ததில் அநேகம் அவர்களே! இல்லை, என் குறும்புக்கார நண்பன்  சொன்னது போல் அவர்கள்தான் டாண் என்று ஐந்து மணிக்கு  கிளம்பி விடுகிறார்களா??!!  )  கடந்து வீடு திரும்பி முக நூலில் ஸ்டேட்டஸ் போட்டவுடன் வருமே ஒரு திருப்தி -  மேரி கோம்  கூட அவ்வளவு பெருமை பட்டிருக்க மாட்டார் !!

என்ன செய்வது இங்கிருப்பது அங்கில்லை , அங்கிருந்தால் இதற்க்கு ஏங்கும் மனத்தின் தொல்லை.  'உள்ளதைக்  கொண்டு திருப்திப் படுடா பேப்பட்டி மகனே' என்று சொல்லும் அம்மாவின் குரல் கேட்கிறது.  

1 comment:

  1. Very true Kapali.This brushed up Tamil reading skills.With the days of communication by texting and emojis,good reading,writing and grammar is forgotten.Keep it up.

    ReplyDelete