போன வருடம் அநேகமாக இதே நேரத்தில் தான் என்று நினைக்கிறேன் எஸ். வி சேகர் (மீண்டும்) மேடையேற்றிய 'கிரேசி தீவ்ஸ்' என்னும் நாடகத்தைக் காண நேர்ந்தது - அன்று கூட மோஹனைப் பற்றி சேகர் பேசியதாக நினைவு . ஏனோ தெரியவில்லை இப்பொழுது மோகன்-மாது குழுவினரே மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றினார்கள் - நானும் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் உறுப்பினராக நாரத கான சபாவில் போன வாரம் பார்த்தேன்.
அவ்வளவு பெரிய அரங்கிற்கு வந்த கூட்டமென்னாவோ வெகு குறைவு. ஆனால் சொன்ன நேரத்தில் டாண் என்று ஏழு மணிக்கு கற்பூர ஹாரத்தி காட்டி திரை தூக்கி விட்டார்கள். கதை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் - அதிகம் விவரிக்கத் தேவை இல்லை. இதை எழுத தூண்டியது இதற்க்கு மெனக்கெட்ட முயற்சி.
அறுபதுகளில் மூச்சிரைக்க ஓடி ஆர். ஆர். சபா வாசலில் இருப்பவரிடம் கெஞ்சி மாடிக்கு அனுப்பப்பட்டு உட்கார்ந்தவுடன் மணி அடித்துத் திரை தூக்க அநேகமாக நிறைந்த அரங்கிலிருந்து வந்த கரகோஷத்திற்கும் , இன்று வந்த சொல்ப கும்பலில் இருந்து தயக்கத்துடன் ஆனால் ஒரு விம்பிள்டன் பதவிசுடன் வந்த கைத்தட்டலுக்கும் நிறைய வித்தியாசமிருந்தது .
இதில் என்னை வியக்க வைத்தது இந்தக் குழுவினரின் முயற்சி .
நடிகர்கள் வெகு கவனமாக நான்கு உயர மைக்குகள் முன் நின்று வசனங்கள் பேச, யாரேனும் தள்ளி நின்றால் அவர்களை லாவகமாக மைக் முன் தள்ளும் உணர்வுடன் கூடிய முயற்சி .
மேடையின் பின்புறம் இழுக்கப்படும் வெகு புதிதாக இருந்த திரை, இரண்டு காட்சிகளுக்கு நடுவில் எடுத்துக் கொள்ளும் மிக்க குறைந்த நேரம் - வியக்க வைத்தது .
மாது அதே இளமையை தோற்றத்திலும் குரலிலும் காட்டினாலும் மோகனின் வயது அவரின் தளர்ந்த நடையில் தெரிந்த பொழுது குறையாகத் தெரியாமல் ஒரு மெல்லிய வருத்தம் தோன்றியது; இப்படிப் பட்ட நாடக முயற்சிகள் இன்னும் எவ்வளவு வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என்று. ஏற்கனவே சோ , மனோகர் ஆகியோரின் வெற்றிடங்கள் நம்மை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க வருங்கால மக்களுக்கு இப்படிப் பட்ட நாடகங்கள் பார்க்கும் அனுபவமே இல்லாமல் போய் விடுமே என்ற வருத்தம் மேலோங்கி இருந்தது .
பின்னணி இசைக்கு ஒரு சபாஷ் போடலாம் அவ்வளவு விறுவிறுப்பு - ஒரு இடம் கூட பிசிறவில்லை - நல்ல முயற்சி.
கொஞ்சம் அதிர்ச்சியாக நான் உணர்ந்த விஷயங்கள் இரண்டு:
ஒன்று, அன்று ஆரவாரமாக ரசிக்கப் பட்டு பேசப்பட்ட பட்ட ஜோக்குகள் இன்றைக்கு ஒரு சிறிய புன்னகையே வரவழைத்தது. ஒரு வேளை ரிமோட் பட்டனைத் தட்டினால் எப்பொழுது வேண்டுமானலும் கிடைக்கக் கூடிய நகைச்சுவை காட்சிகளின் ஏராளம் தான் இதற்க்கு காரணமோ என்று கூட தோன்றியது .
மற்றொன்று , நாடகம் நடை பெற்ற தொண்ணூறு நிமிடங்கள் கூட பொறுமையாக உட்கார முடியவில்லை . இதற்கு நாடகம் நடத்துபவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. நமக்குத்தான் பொறுமை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
இந்த இரண்டிற்கும் காரணம் இன்று நிலவும் problem of plenty என்பது என் கருத்து .
எப்படியோ கிரேசி மோகனின் நாடகம் என்றவுடன் பார்க்கத் தூண்டிய ஆர்வம், அதை நியாய படுத்தக்கூடிய அவர்களின் முயற்சி, நாடகம் முடிந்தவுடன் எழுந்து நின்று கை தட்டிய பார்வையாளர்கள் - இவையெல்லாம் தமிழ் நாட்டின் நாடகத் துறைக்கும் , தமிழர்களின் ரசிப்புத் தன்மைக்கும் கிடைத்த பெரிய சான்றிதழ்.
நல்ல முயற்சிக்கு மோகன்-மாது குழுவினருக்குப் பாராட்டுகள்.
நாடகத்துறை மேலும் நலிந்து, மறந்து போகாமலிருக்க கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் போன்றவர்களும் இப்படி நாடகங்களுக்கு வாய்ப்பளித்து, நாமும் அதை போய்ப் பார்த்துக் கை தட்டினாலே போதும் , இன்னும் சிறிது காலம் ஓடும் !