Monday, May 29, 2017

மீண்டும் காசி யாத்திரை . . . 2017 !!

பாரதத்தின் தென் மூலையில் இருப்பவர்களுக்கு வட நாட்டு பிரயாணம் என்றுமே ஒரு சவால்தான் - மொழி, பயணம் , உணவு, பழக்க வழக்கங்கள் எல்லாமே சிறிது முயற்சி எடுத்து தெரியப் படுத்திக் கொண்டால் சமாளிக்கக் கூடியது தான். ஆகவே முக்கியம் அவரவர் முன்னோர்கள் காட்டிய பாதை மற்றும் பழக்க வழக்கங்களூடே  ஒரு நல்ல முன்னேற்பாடு , கூடியவரை நுண்ணியமான பயண ஏற்பாடு, அங்கு ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு இவைகளெல்லாம் ஒரு நல்ல வட நாட்டு யாத்திரைக்கு இன்றிமையாதது. ஏற்கனவே நான் 1996ஆம் ஆண்டு ஒரு முறை பயணப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் அன்றைய  அனுபவங்கள் இன்றைய சூழ்நிலைக்கு எவ்வளவு உதவும் என்ற சந்தேகத்தால் எல்லாவற்றையுமே ஒரு முதல் முயற்சியாக செய்ததும் உதவியாகத் தான் இருந்தது.

என் வீட்டு வழக்கப்படி இந்த யாத்திரையை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு முதலில் ராமேஸ்வரம் சென்றதிலிருந்து உள்ள நினைவலைகளை திரும்பிப் பார்க்கிறேன். நானே எதிர்பாராத அளவிற்கு எந்த முயற்சிக்கும் கட்டுப்படாத விரிந்துள்ள நினைவலைகளின் நீளம் படிப்பவர்களுக்கு உறுத்தினால்  வருந்துகிறேன்.

பாகம் ஒன்று - ராமேஸ்வரம் 

முதல் கட்டமாக தனுஷ்கோடி சமுத்திரக்கரையில் சங்கல்பம், பின் ஸ்நானம்.

அறுபதுகளில் , நான் பள்ளி செல்லும் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு மாதம் தங்கி இருந்த தனுஷ்கோடி என்னும் இந்த அழகிய ஊர் பின் வந்த ஓர் கோரப் புயலில் மூழ்கியதால் இது இத்தனை வருடங்களாக யாருமே போக முடியாமல் இருந்ததாம். சமீப காலமாகத்தான் இந்த இடத்தை சீர் செய்து போகும் பாதை அமைத்து வருகிறார்கள் , என்றார்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து ஒரு ஜீப்பில் சுமார் இருபது கிலோமீட்டர் பயணப் பட வேண்டும். அருமையான தார் போட்ட  சாலை எந்த தலைவரின் வருகைக்கோ பல மாதங்களாகக் காத்திருப்பதால் முதுகை முறிக்கும் ஒரு கடைசி ஒன்பது கிலோமீட்டர் சென்ற பிறகு  சற்றே வெறிச்சோடிய சமுத்திரக் கரையில் முன்னோர்களைக் கும்பிட்டழைத்து வேண்டிய பிறகு கடலில் நாற்பத்தி ஐந்து முழுக்குப் போட வேண்டும். கடலில் அலைகளை எதிர்த்து உள்ளே போவது கடினமென்பதால், ஒரு குவளை கொண்டு செல்வது உசிதம் (அனுபவம் தந்த பிறருக்கு உதவக் கூடிய பாடம்).  பிறகு கரையில் எடுக்க வேண்டியது இரண்டு கையளவு மண். இதைத் தான் நாம் பிரயாகை எனப்படும் அலஹாபாத் அருகிலுள்ள இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

திரும்பும் பொழுது வழியில் உள்ள விபீஷணருக்கு இராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்த ஒரு கோவில் மனத்தைக் கவர்ந்தது.

பின் மீண்டும் ராமேஸ்வரம் திரும்பி , அங்கு  உள்ள இருபத்து மூன்று புனித தீர்த்தங்களில் பக்கெட்டால் நீராட்டி வைக்கப் பட்டு வந்தால் அங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்த பிறகு நாம் கடற்கரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை மூன்று பகுதிகளாகப் பிரித்தார் - ஒன்று சேது மாதவர், மற்றொன்று பிந்து மாதவர்,  மூன்றாவது வேணி மாதவர் என்றார்கள். அதில் மற்ற இரண்டு பகுதிகளையும் அங்கேயே விட்டு விட்டு , வேணி மாதவரை மட்டும் பத்திரமாக எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள் (இனிமேல் இது வேணி மாதவர் , மண் என்று சொல்லக் கூடாது - சாஸ்திரிகள் ).

பாகம் இரண்டு - காசி

பல வருடங்களுக்கு முன் , வாகனங்கள் இல்லாத காலங்களில், காசி யாத்திரை நடை வழியாகத் தான் செல்ல வேண்டிய கால கட்டத்தில் அநேகமாக இதை மேற்கொள்ளும் பல யாத்திரிகள் திரும்ப மாட்டார்கள் என்றே நினைத்து, கிளம்பு முன்னரே ஒரு வாழை மரத்தை வெட்டி எல்லா காரியங்களையும் தனக்காகவே செய்து முடித்துக் கொள்வார்கள் என்று என் தாய் சொல்லக் கேட்ட நாங்கள்  இப்படி ஒரு கடினமான  பயணத்தை இண்டிகோ உதவியுடன் ஏற்படுத்திக் கொண்டோம் .

வெயில் உறைக்கத் தொடங்காத  ஒரு மார்ச் மாதக் காலையில் கிளம்பி அழகிய ஐதராபாத் விமான நிலையத்தில் சிப்ஸ் சகிதம் சாம்பார் சாதம் சாப்பிட்டு, கண்ணயர்ந்து மிதமான குளிர்விக்கப்பட்ட விமானத்தில் ஐபேடில் கணேஷ்- வசந்த் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, வசந்த்தின் வில்லங்கமான ஜோக்கை ரசித்துக் கொண்டிருக்கும்போதே  இறக்கி விட்டார்கள் கொஞ்சம் மங்கலான வாரணாசி விமான நிலையத்தில். நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த விமான நிலையம் சரியான விளக்குகள் கூட இல்லாமல்  மெல்லிய ஏமாற்றத்தை அளித்து ஆனால் அன்புடன்  வரவேற்றது. வாரணாசியின் மைய பகுதிக்கு இருபத்தி இரண்டு கி.மீ போவதற்குள் இந்த வட்டார நடைமுறையில் மண் குவளையில் ஒரு அருமையான தேநீர் (aur Ek cup chaai please! ) - நன்றி கார் ஓட்டுநர் சோனு. இப்பயணத்தின் முதல் சவாலான ஹிந்தி மொழியை சமாளிக்க சென்னையிலிருந்தே ஆள் கொண்டு வந்திருந்ததால் சற்றே நிம்மதியாக சுவாசித்தேன்.

இரண்டாம் நாள் அதிகாலை சுறுசுறுப்பாக எழுந்து  தொடர்ந்த பயணம் முதலில் சென்றது 'சீதாமரி' - இங்கு தான் சீதை பூமி பிளந்து உள்ளே சென்றதாக கதை.

அதனைத் தொடர்ந்து மொத்தமாக இரண்டரை மணி நேரம் ஒரு அருமையான ரோட்டில் பயணித்தால் சென்று அடைந்தது அலஹாபாத். அநேகமாக பலரும் நாடும் சிவ மடத்திற்கு இது என் இரண்டாம் விஜயம் - 1996 க்குப் பிறகு . மிகப் பழைய இந்த மடத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னமேயே அன்றைய இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் இங்கு வந்து சில சடங்குகள் செய்ததற்கான புகைப் படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே எங்களை அழைத்து இந்த க்ஷேத்ரத்துக்கு உண்டான விசேஷங்களுடன் சமாச்சாரங்களை ஆரம்பித்தவர் - அந்த கால எம். பீ. ஏ என்றார். ஆனால் அவர் சொன்ன மந்திரங்களின் உச்சரிப்பு , விளக்கங்கள் அவர் இன்றைய நடவடிக்கைகளிலும் முதுகலை பட்டம் வாங்கியிருப்பாரோ என்று எண்ண வைத்தது.

பின் நாங்கள் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த வேணி மாதவருடன்  படகில் அதிக தண்ணீர் இல்லாத கங்கையில்  ஒரு இருபது நிமிட பயணம். கங்கையும் யமுனையும் கலக்கும் திரிவேணி சங்கமம் என்றழைக்கப்படும்  இடத்தில் சரஸ்வதி நதியும் பூமியினூடே வந்து கலந்தாலும் முழங்காலுக்கு மேல் ஆழம் கிடையாது.  தண்ணீர் ஆழத்தின் பயத்தை   விட குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் குமட்ட வைத்தது.   கங்கையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவா என்று வியக்க வைத்தது- அவ்வளவு குப்பை. இவைகளெல்லாம் மீறி இந்த இடத்தின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு சில முழுக்குகள் போட்டு வேணி மாதவரை திரிவேணி சங்கமத்தில் கரைத்து பின் அங்கிருந்தே கொஞ்சம் கங்கை ஜலத்தையும் எடுத்ததில், இவை எல்லாவற்றையும் மீறி , ஒரு மன நிறைவும் கிடைத்தது.  திரும்பி வரும்பொழுது படகோட்டி  இவர்களின் உடன் பிறவா சகோதரனான ஜர்தா பாக்கையும் அதே  ஆற்றில் உமிழ்ந்து ஒரு அதிக பத்து ரூபாய்க்காக போராடியது ஆயாசத்தை கூட்டியது. மீண்டும் சிவ மடம் வந்து ஒரு தீர்த்த ஸ்ரார்த்தத்திற்குப் பின் அன்னத்தைக் கண்ணில் கண்ட பொழுது மணி இரண்டைத் தாண்டி இருந்தது.

தொண்டனுக்கே உரித்தான உண்ட மயக்கத்தைத் துறந்து உடனே கிளம்பி முதலில் பார்த்தது அலகாபாத்தில் உள்ள   படே ஹனுமான்  என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான சயனத்திக் கொண்டிருக்கும் செந்தூர் பூசிய ஆஞ்சநேயர் . அதற்குப் பின் சென்றது - அட்சய வட மரம் . இந்த மரம் காசி யாத்திரைக்குறித்தான பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வேர் அலகாபாத்தில் தொடங்கி நடுப் பகுதி வாரணாசியில் தோன்றி  உச்சி கயாவில் உள்ளது. மூடி வைத்திருந்த அட்சய வட மரத்தின் வேரை பத்து ருபாய் செலவில் பார்த்து விட்டு பின்  சங்கர மட கோவில், வேணி மாதவர் கோவில் ஆகிய உள்ளூர் முக்கியத்  தலங்களுக்குப் பிறகு வண்டி விரைந்தது அயோத்தி நோக்கி.

சுமாரான சாலை , சாலை விதி என்றால் என்ன என்றே தெரியாத ஓட்டுனர்கள் இவைகளூடே அவரவர் விதியை நொந்து கொண்டு செல்லும் வாகனங்கள் - இவற்றை ரசித்தவாறே அயோத்தியை அடைந்த பொழுது இரவு மணி ஒன்பது. கொஞ்சம் தேடினாலும் கிடைத்த ஒரு நல்ல ஓட்டலின் பெயர் 'ஹனுமந்தா பேலஸ் ' !!

மூன்றாம் நாள் காலை ஸ்ரீ இராமர் பயணம் செய்த சரயு நதி - கங்கையை விட கொஞ்சம் அதிக நீரோட்டத்துடன் குறைந்த குப்பையுடனும் பார்த்தது ஒரு பெரிய அதிசயம். போன ஒன்றிரண்டு ஹோட்டல்களில் காலை உணவு தயாராகாததால் அடுத்துச் சென்றது 'ஸ்ரீ ராம ஜென்ம பூமி பட்டறை '. இங்கு எப்பொழுது கோவில் கட்டினாலும் தயாராகத் தேவையான கல் தூண்கள், செங்கல்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். செங்கல்களில் பல மொழிகளிலும் ஸ்ரீ ராம் என்று எழுதப் பட்டிருக்கிறது.  சில கற்களில் எழுதப் பட்டிருந்த அமெரிக்கா , இலங்கை , லண்டன் போன்றவை கண்களை விரிய வைத்தது.

பின் சென்ற 'சரயு ' என்ற ஹோட்டலில் சாப்பிட்ட காலை உணவு (??!!) சில பூரிகளும், சூடான  சில பல ஜிலேபிகளும் - இப்படிப்பட்ட ஒரு காலை உணவு வாழ்க்கையில் நான் சாப்பிட்டதாக நினைவே இல்லை - அது ஒரு மறக்க முடியாத நினைவுகளை அன்றிரவே ஏற்படுத்தும் என்று கொஞ்சம் கூட அப்பொழுது நான் உணர வாய்ப்பில்லை !

 அதன் பின் சென்ற 'ராமரின் தர்பார்' என்ற இடத்தில் இராமர் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தார். அருகிலேயே உள்ள ஒரு சிறிய அறையில் ஒரு சுவாமிஜி அமர்ந்திருக்க அருகிலிருந்தவர் அவர் இராமர் கோவில் கட்டும் வரை சாப்பிடாமல் விரதம் இருந்து வருகிறார் என்று சொன்னதை வியக்கும் முன்னமேயே , ஒரு ஐநூறு ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்தால் ஆசி வழங்குவார் என்ற அறிய வாய்ப்பிலிருந்து நழுவி வெளியே வந்தால் தெரிந்த சீதை சமையல் செய்த உக்கிராண அறையில் இருந்த ராட்சச வாணலி வியக்க வைத்தது.

அடுத்து இராம ஜென்ம பூமி என்றழைக்கப்படும் இடத்துக்குச் செல்லும் பொழுதே ஏகப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் துவங்கியது. எதையுமே எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று தொடர்ந்து வந்த பயமுறுத்தலால் அநேகமாக எல்லாவற்றையும் அறையிலேயே விட்டு விட்டு (மூக்குக் கண்ணாடிக் கூட்டுக்குக் கூட அனுமதி கிடையாது )  கையில் கொண்டு போன பணத்தை மட்டும் வைத்திருந்தேன். எல்லா காவலர்களும் கட்டுக் கட்டாக உள்ள கரன்சியை வெறித்துப் பார்த்தாலும் ஒரே ஒருவர் மட்டும் சொன்னது - ' திருடர்களிடம் காப்பாற்றி விட்டீர்கள், ஆனால் ஜாக்கிரதை , இங்குள்ள குரங்குகள் அப்படியே பிடிங்கிச் சென்று மரத்தின் மேலிருந்து பண அபிஷேகம் செய்து விடும் ' என்று பயமுறுத்தியதால் புது மண தம்பதியைப் போல் பையை இறுக்கி அணைத்துச் சென்றதை இன்று நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் நாங்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்புமுன் வானர  படை இரண்டு முறை  எங்களை ரெய்டு விட்டு இப்படிப்பட்ட முன்னேற்பாட்டால் வெறுங்கையுடன் திரும்பின - வாழ்க அந்தக் காவலர்.

இவ்வளவு கெடுபிடிகளுக்கு இடையே சீராக இல்லாத தரையில் தட்டு தடுமாறி சென்றபோது ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டு  'அதோ அது  தான் இராமர் பிறந்த இடம் ' என்றார்கள். ஒரு பதினைந்து அடி தூரத்திலிருந்து பார்த்ததில்  மங்கலாக ஒரு வெள்ளை சிலையும் அருகில் விளக்கும் எரிந்து கொண்டிருப்பது தான் தெரிந்தது - ஏழுமலையானைக் கூட இன்னும் அருகில், மேலும் தெளிவாக பார்த்த ஞாபகம்.  இந்த முக்கிய ஸ்தலத்துக்கு அருகில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் பம்பாய் படத்தில் வரும் முரடர்கள் போல சரத்குமாரையும் அர்னால்டு ஸ்வாசினேகரையும் நினைவு படுத்திய உருவங்கள்  கொஞ்சம் துரித நடை போட வைத்தது. இவ்வளவு தடைகளையும் மீறி எந்த இடத்தை 1996ல் பார்க்க முடியாமல் போனதோ அதைக் கண்டதில் ஆனந்தமடைந்து திரும்ப வாரணாசி நோக்கிப் பயணப் பட்டோம்.

அருமையான ராஸ்தாவில் நல்ல பயணத்தில் ஒரு சின்ன உறக்கத்துக்கு  பின் தொடங்கியது மதிய உணவு வேட்டை. கூகிளில் ஒரு நல்ல பெயர் கொண்ட ஹோட்டலிலும் வெறும் மேசை, நாற்காலி மட்டுமே இருந்தது. 'சாப்பாடு இருக்கா' என்று கேட்க உங்கள் தலையைக் கண்டவுடன் தான் கல்லை போடப் போகிறோம் என்பது போல் பார்த்த ஹோட்டல்களிலிருந்து ஓட்டம் பிடித்து, மூன்று மணி அருகில் பிரதாப்கர் என்ற இடத்தில் கிடைத்த மசால் தோசை, தயிரை உயிர் வாழ்வதற்காகவே விழுங்கினோம்.
     
 மாலையில் ஒரு பத்து கிலோ மீட்டர் மோசமான சாலையைக் கடந்து வந்தால் நம்ம ஊர் அங்காளம்மன் கோயிலை நினைவுப் படுத்தும் விந்தியாசல் என்ற அழகிய கிராமத்தில் வாராஹி அம்மனின் அருமையான சக்தி பீட தரிசனத் திளைப்பிலேயே  வந்து சேர்ந்து இரவுக்குத் தஞ்சமடைந்தது அதே வாரணாசி அறையில் .

நான்காம் நாளான மறுநாள்தான் உண்மையிலேயே வாரணாசி நியமங்கள் துவங்கின. அதிகாலை எழுந்து , சாஸ்திரிகள் வீட்டு  சூடான காப்பிக்குப் பிறகு குளித்து அவர் வீட்டில் சங்கல்பம் செய்து பின்  வேத கோஷங்களுடன் பிரார்த்தித்து அனைத்து வேத விற்பன்னர்களுக்கும் வணங்கி  மரியாதை செலுத்தி   அதன்பின் அருகிலுள்ள  இன்னும் குளிர்ந்து கொண்டிருக்கும் கங்கை நதியில் தயங்கியபடியே மெல்ல காலை நுழைத்து , துவக்க நடுக்கத்துக்குப்பின் முங்கி முங்கி  எழுந்ததில் கிடைத்த சுகம் இதற்க்காகப் பட்ட அத்தனை சிரமங்களையும் மறக்க வைத்தது. அந்த காலையில் அதிக நீரோட்டமில்லாவிட்டாலும் இருந்த தெளிந்த கங்கையில் குளித்த சுகம் எழுத்துக்குள் அடங்கா - அனுபவித்தே அறிய வேண்டிய உணர்வு .

கங்கா ஸ்நானத்திற்குப் பின் வந்த ஒரு அந்தணரின் மந்திர உச்சரிப்புக்கள் அரைகுறையாக வந்தவர்களையும் இழுத்து  நிறுத்தும் குரல்,  ஞான வளம். ஒரு முழு திருப்தியுடன் நடந்த  நாந்தி ஸ்ரார்தத்திற்குப் பின் மன நிறைவோடு திரும்பினால் கம்பியூட்டர் இலை என்று சொல்லப் பட்ட பேப்பர் தட்டில் சாப்பாடு போடப் பட்டிருந்தது , கொஞ்சம் மனதை உறுத்தியது. பின்னால் தெரிந்து கொண்டது , இப்படி சில பல விஷயங்கள் இங்கு கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் இந்த க்ஷேத்ரத்தின் மகிமைக்கும் இங்கு நாம் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளுக்கும் அது பெரும் பொருட்டல்ல என்பதே.

இங்கு மற்றொன்றையும்  யாத்திரிகள் மனதில் கொள்ள வேண்டும் - எப்படி வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு குவித்து வைத்திருக்கும் பண மூட்டைகளை பார்த்து எந்த புதிய உணர்வும் வராதோ அதே போல் தான் இங்குள்ள சில அந்தணர்களும். அங்கு நம்மைப் போல் செல்பவர்கள் பல இன்னல்களைக் கடந்து அங்கு போனவுடன் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல் உணர்ந்து எல்லாவற்றையுமே முதல் ரகமாகச் செய்ய விரும்புகிறோம். ஆனால்  நாம் மனதில் கொள்ள வேண்டியது, அந்த அந்தணர்களுக்கு இது சாதாரண தினப்படி வேலையே. நாமெல்லாம் அவர்களுக்கு கவுன்டருக்கு அந்தப்புரம் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தாம் !!

அன்று மாலை வாரணாசியிலிருந்த சில முக்கிய கோவில்களுக்கு விஜயம்.

முதலில் இந்த ஊரில் பிரசித்தி பெற்ற 'கால பைரவர் கோவில்'. சுமாரான கூட்டம் இருந்தாலும் நல்ல தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் கொஞ்சம் அசந்து இருந்தாலும் முகத்தில் செந்தூர பொட்டு வைத்து காசு பிடுங்க ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கிறது - கொஞ்சம் உஷார் தேவை. கால பைரவரைக் கும்பிட்டு இங்கு தான் விசேஷமான அந்த 'காசிக் கயிறு' வாங்க வேண்டும். அருகிலேயே உள்ள 'தண்டபாணி பைரவரையும் ' ஒரு நடை பார்ப்பது நல்லது.

பின் 'தொண்டி கணபதியை' வணங்கிய பின் தான் காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம் . மீண்டும் ஏக கெடுபிடி - ஆளாளுக்கு உடலை வருடி பார்த்து விட்டுத்தான் அனுப்புவார்கள். காசும் ஆள் பலமும் இருந்தால் எவ்வளவு பெரிய வரிசையையும் தாண்டி போக முடியும். உள்ளே சென்று அந்த அறிய காட்சியான விஸ்வநாதரைக் காண மனம் நெகிழ்ந்தது -1996 ல் செய்ததது போல் சிவனை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்து, பால் அபிஷேகமெல்லாம் கனவில் கூட செய்ய முடியாது. சில அடி தள்ளியே நிறுத்தி 'ஜாவ் ஜாவி' விடுகிறார்கள். இருந்தாலும் திருமலையை விட ஏன் இராம ஜென்ம பூமியை விட அதிக நேரம் திருப்தியாக பார்க்க முடிகிறது.

பின் அருகிலேயே உள்ள அன்ன பூரணி காசி விசாலாக்ஷி கோவில்களின் அருமை எவ்வளவு சிரமத்தையும் உதறும் மன நிறைவைக் கொடுக்கிறது.

இவற்றை முடித்து ஒரு ஆறு மணி சுமாருக்கு கங்கைக் கரைக்கு வந்து விட்டால் சௌகரியமாக ஒரு படகில் ஏறி உட்கார்ந்து இந்த இடத்துக்கே உள்ள அற்ப்புதமான 'கங்கா ஹாரத்தி' யை காணலாம்.  'தச அஸ்வமேத கட்டம் ' போன்ற சில முக்கிய கட்டங்களில் நடக்கும் இந்த நிகழ்ச்சி, ஆறரை மணியிலிருந்து மெதுவே சூடேறி, சரியாக ஏழு மணிக்கு ஐந்தாறு பேர்கள் சிவ ஸ்துதி மற்றும் சில மந்திரங்களை ஸ்பஷ்டமாக சொல்லிக் கொண்டு கங்கா மாதாவிற்கு தீப ஹாரத்தி எடுப்பது கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு கண்  கொள்ளா காட்சி. இதை நூற்று கணக்கான படகுகளிருந்து எல்லா நாட்டவர்களும் புகைப் படமெடுக்கும் காட்சியை பல நூறு மின்னல்கள் தோன்றுவது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். ஹாரத்தி நடக்கும் சமயம் பக்தர்கள் கங்கையில் விடும் அகல் விளக்குகள் மெல்ல ஆடி அசைந்து போகும் காட்சியும் அருமை.

 ஐந்தாம் நாளான மறுநாள் இந்த யாத்திரையின் ஒரு முக்கிய நாள் என்று எனக்குத் தோன்றியது. அதிகாலையில் கங்கையில் மூழ்கி எழுந்து  ஈரத்துடன் வாத்யார் சகிதம் படகில் சவாரி. படகிலேயே குமுட்டி அடுப்பில் ஹவிஸ் வைத்து அதை நம் வீட்டுப் பெண்மணி பிண்டம் தயாரிக்க படகு கங்கை நதியின் மிக முக்கிய கட்டங்களான அசி காட் (ஹரித்வார தீர்த்தம்), தச அஸ்வமேத் காட் (ருத்ர சரோவர் தீர்த்தம்), விஷ்ணு பாத காட் (வருண தீர்த்தம்), பஞ்ச கங்கா காட் (கங்கா, யமுனா, சரஸ்ஸ்வதி தீர்த்தங்கள்) மற்றும் மணி கர்னிகா காட் (மணி கர்னிகா தீர்த்தம்) போன்றவைகளுக்கு ஒவ்வொன்றாக நகர்கிறது.

ஒவ்வொரு  தீர்த்த கட்டத்திலும் படகை விட்டிறங்கி  தம்பதியராக கங்கையில் நீராடி பின் படகில் வந்து ஸ்ரார்த்தம் செய்து பிண்டங்களை அந்த கட்ட நீரில் கரைக்கும் இந்த விசேஷமான காரியங்கள்  தான்  பஞ்ச கட்ட ஸ்ரார்த்தம் என்றழைக்கப் படுகிறது . இந்த இரண்டு மணி நேர படகில் செல்லும் கட்டத்தில் கூட வரும் சாஸ்திரிகளின் தீவிரம் நம்மை வியக்க வைக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் படகு போகும் பொழுது அங்கு தான் பிண்டம் கரைக்க வேண்டும் என்று சொல்லி நம்மை அவசரப் படுத்தி அதற்கான காரணங்களையும் கேட்கும் பொழுது  நம் முன்னோர்களுக்கு நாம் உண்மையிலேயே அறுசுவை விருந்து படைத்தது போன்ற வரும் திருப்தி, சொல்லி மாளாது.   

ஈர வஸ்த்திரத்துடன் இரண்டு  மணி  நேர படகு பயணம் , குளிரில் சுமார் ஆறு முறை கங்கா ஸ்நானம் நடுவில் மந்திரங்கள் , இன்று நினைத்தால் ஆயாசத்தைக்  கொடுத்தாலும், இந்த முக்கிய கடமையைச் செய்யும் பொழுது எந்த சிரமும் தெரியவில்லை. சிரத்தைக்குக் கடைசியில் கிடைக்கும் திருப்தி,  ஒரு நல்ல சன்மானம். உடல் கொஞ்சம் காய்ந்து இள வெய்யில் சுகம் தெரிய ஆரம்பித்தவுடன் மீண்டும் கங்கையில் குளிக்கச் சொல்லும் பொழுது டெல்லி கணேஷின் வசனம் (தெளிய விட்டு தெளிய விட்டு) தான் ஞாபகத்திற்கு வந்தது  !! இதன் நடுவே வாரணாசியின் புகழ் பெற்ற 'பிந்து மாதவர் கோவில்' -  செல்வதற்குள் முழங்கால் கொஞ்சம் முனகதான்  ஆரம்பிக்கும் - பாதை அவ்வளவு நெட்டு குத்து 

வாரணாசியில் முக்கிய நிகழ்வுகளை முடித்த நிறைவுடன் பயணப்பட்டது கயாவிற்கு. காசியின் முறையில்லாத வாகன நெரிசல்களிலிருந்து மீண்டு வரவே மாலை நான்கை எட்ட சுற்றி வர ஒன்றுமே இல்லாத ஒரு பாலைவன சாலையில் வண்டி விரைந்தது. சிரமப்பட்டு கண்டு பிடித்த டீக்கடையில் கருப்பு டீ நன்றாக இருந்ததும் , சாலைகளின் தரம் வெகுவாக முன்னேறி இருந்ததும் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சியைக் காட்டியது. சிறிது தேடி அலைந்து, இடைத் தரகர்களை சமாளித்து கயாவில் ஒரு நல்ல தங்கும் அறையைக் கண்டு பிடித்து கையில் கொண்டு வந்த இட்லி பொட்டலத்தைப் பிரித்த பொழுது இரவு மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. ஆனால்  1996ன் கயா என்று சொன்னால் தோன்றிய பயம் அறவே இல்லை - ஊர் நிறைய  முன்னேறி , மாறி இருந்தது - ஒரு யாத்ரியின் பார்வையில்.

 ஆறாம் நாளான மறுநாள் , முன் அனுபவத்தை வைத்து சிறிது திகிலுடன் தான் தொடங்கியது. ஒரு காசி யாத்திரையின் முக்கிய தினமான இன்று தான் நாம் மனதார நம் முன்னோர்களை வணங்கி, பணிவிடை  செய்து மானசீகமாக தரிசித்து திருப்தி அடைந்த அவர்களின் பரிபூரண ஆசி பெரும் நாள்.   சிறிது ஓட்ஸ் கஞ்சிக்குப் பிறகு கர்நாடக பவனில் ஒன்பது மணிக்குத் தொடங்கிய சம்பிரதாயமான சடங்கில் ஒரு எல் வடிவ பெரிய ஹாலில் இருந்தவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட ஜோடிகள். இதில் சைவ, வைணவ மற்றும் பல வித்தியாசமான குழுக்களை சேர்ந்தவர்கள் , கணவருக்கு வயதின் காரணமாக முடியாததால் மனைவி ஏற்று நடத்தும் அதிசயம், பல வேதங்களை சார்ந்தவர்கள் என்று ஏகப்பட்ட குழுக்கள். அமைதியாக வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த சாஸ்திரிகள் எல்லோரிடமும் விஷயங்களைக் கேட்டு அமோகமாக கிரஹித்துக் கொண்டு ஒரு கை தேர்ந்த இசைக் குழு நடத்துனரைப் போல மஹா சங்கல்பத்தை நடத்தினார். ஆடவர்கள் சடங்குகளை செய்ய பெண்கள் தமக்கு அளிக்கப்பட வேலையான  இரண்டு கூறுகளாக  64  பிண்டங்களை தயார் செய்தனர் .  அப்பொழுது அவர் நம் பெற்றோர்கள் நமக்காக எப்படியெல்லாம் பாடு பட்டிருப்பார்கள், அவர்களுக்கு முக்கிய உணவான எள்ளும் நீரையும் நாம் எப்படி சிரத்தையுடன் கொடுக்க வேண்டும் என்று விளக்கி முடித்தவுடன் கலங்காத கண்களே இல்லை. ஒரு சமயத்தில் சில பிண்டங்களை கையில் சுமக்க சிலர் சிரமப் பட்ட பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் - 'பதினைந்து நிமிடங்கள் சில சோற்று உருண்டையை சுமப்பதற்குள் இப்படி நெளிகிறோம். நம்மை வயிற்றில் சுமந்து, மின்சாரம் இல்லாத அந்த காலங்களில் விறகு அடுப்பில் வெந்து நம்மை காப்பாற்றிய தாயை நினைத்துக் கொள்ளுங்கள் ' என்றவுடன் பலரும் கண்களைத் துடைக்க கைக்குட்டைகளைத் தேடினர். வந்ததில் அநேகர் மூத்த குடிமகன்களாக இருந்தும்  சில சிறியவர்கள்  கூட தரையில் உட்கார அவஸ்த்தைப் பட்டது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுகங்களை நினைத்து சிந்திக்க வைத்தது.

அது முடிந்தவுடன் அருகிலுள்ள பல்குனி நதிக்கு அனைவரையும்   அழைத்துச் சென்று அதில் பிண்டங்களை கரைப்பது நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக ஐதீகம் என்று சொன்னார். மேலும், ஒரு சாபத்தினால் பல்குனி நதி எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு கீழேதான் ஓடும் என்றும் அதற்க்கு பதில் அங்குள்ள பசுக்களுக்கு அந்தப் பிண்டங்களை கொடுப்பது பெற்றோர்களே சாப்பிடுவது போல் என்றவுடன் அனைவரும் அங்கு திரிந்து கொண்டிருந்த சில பசுக்களை நோக்கி ஓட, எனக்கு ஒரே நேரத்தில்  இவ்வளவு சாப்பிடும் அந்தப் பசுக்களின் ஜீரண சக்தியை சிந்திக்க வைத்தது.

அதன்பின் மற்றோரு பங்கான பிண்டங்களை இந்தத் தலத்தின் பெருமை வாய்ந்த 'விஷ்ணு பாதத்தில்' சேர்ப்பது இன்றைய தினத்தின் மற்றுமொரு முக்கிய பணியாகும். இந்த இடத்தின் சிறப்பை விவரித்த கதை அதிசயமானது. அந்நாளில் கயேஸ்வரன் என்ற கொஞ்சம் சாதுவான அசுரனைப் பற்றி மக்கள் முறையிட அவனை அழிக்கும் வழியையும் கடவுள் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவனைக் கொன்று புதைத்த பின்னும் அவன் பூமிக்கடியிலுருந்து மீண்டும் மீண்டும் எழுந்ததால் மறுபடியும் கடவுளிடம் முறையிட அவர் வந்து தன் ஓற்றைக் காலால் அமுக்கி மீண்டும் எழாமல் பார்த்துக் கொண்டாராம். அதனால் தான் அங்கு விஷ்ணுவின் ஒரே ஒரு பாதம் மட்டும் இருக்கும். அந்த அசுரனோ விஷ்ணுவிடம் 'நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. பசிக்கு உணவு தேடத்தான் எழுந்து வருகிறேன்' என்றவுடன் மஹா விஷ்ணு இனி நீ உணவுக்காக எழுந்து வர வேண்டியதில்லை .  எல்லா நாட்களிலும் மக்கள் இங்கு வந்து  அவர்களின் மூதாதையருக்குப் படைக்கும்  பிண்டங்கள் மூலம் உனக்கு உணவு கொடுப்பர். என்றைக்கு உனக்கு ஒரு பிண்டம் கூட வரவில்லையோ அன்று மீண்டும் எழலாம் என்று சொன்னதாகவும் இதற்க்கு பயந்து தான் இங்கு வரும் மக்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த இடத்துக்கு வந்து சில பிண்டங்களை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். விளையாட்டாகவோ இல்லை நிஜமாகவோ சாஸ்திரிகள் சொன்னது 'ஏதேனும் ஒரு நாள் எந்த யாத்திரியும் ஸ்ரார்த்த பிண்டம் கொடுக்கவில்லையோ இந்த அசுரனின் எழுச்சிக்கு பயந்து  இங்குள்ள அந்தணர்கள் பிண்ட பிரதானம் செய்து விடுவார்கள் என்றது சிரிப்பையும் , சிந்தனையும் தூண்டியது. 

இந்த இடத்தில்,  கயாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மற்றோரு முக்கிய விஷயம் - இங்கு வந்தால் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உயிருடன் இருப்பவர்கள் இங்கு வருவது சிலாக்கியமில்லை .

மேலும் கயா என்பது ஒரு சுற்றுலாத் தலமல்ல- முன்னோர்களை நினைவு கூர்ந்து பணிவிடை செய்யும் புண்ணியத் தலம் மட்டுமே .

அது முடிந்து மீண்டும் கர்நாடக பவன் திரும்பி ஒரு சம்பிரதாயமான ஹோம சிரார்த்தம் நடத்த இம்முறை எல்லோரும் கண் கலங்கியது அதிகமாகக் கிளம்பிய ஹோமப் புகையால். அதன் பின் அந்தணர்களை அமர வைத்து வஸ்த்திர மரியாதை செலுத்தி பின் உணவு படைத்தது ஒரு மனதை நிறைக்கும் உணர்வு. நம்ம ஊர் போல் இங்கு ஸ்ரார்த்த காரியங்களுக்கு வரும் அந்தணர்கள் எல்லோரும் வயதானவர்களோ , மணமானவர்களோ இல்லை. சில சிறுவர்கள் கூட கலந்து கொண்டனர். மறுபடியும் நம்ம பக்க வழக்கப் படி திருமணமானவர்கள் மட்டும் தான் பஞ்சகச்சம் கட்ட வேண்டும் என்பது இங்கு கிடையாது போல; சில மீசை அரும்பாத  சிறுவர்களும் பஞ்ச கச்சத்தில் தென்பட்டனர் . ஆனால் இவர்கள் சாப்பிடும் அளவோ மிகக் குறைவு . சாப்பிட்ட பின் நாம் சம்பிரதாயாக அவர்களின் திருப்தியை விசாரிக்க அவர்கள் மகிழ்ச்சியுடன், மனம் நிரம்பி பரிபூரண ஆசி அளித்து மிகவும் திருப்தி என்பார்கள். இந்த 'அந்தணர் திருப்தி' கயாவின் ஒரு முக்கிய சிறப்பாகும். அதன் பின் அருகிலுள்ள அக்ஷய வடம் என்று சொல்லப் படும் இடத்திற்கு கூட்டிச் சென்று  அதன் சிறப்பை வெகு தெளிவாக விவரித்தார் - எப்படி இராமர் தன் தந்தைக்கு தர்ப்பண காரியங்களை செய்யும் பொழுது இந்த அக்ஷய வட மரம் சாட்சியாக இருந்ததோ அதே போல் பல மாகாணங்களிலிருந்து இவ்வளவு தூரம் வந்து மிகுந்த சிரத்தையுடன் நாம் நம் முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணத்திற்கு சாட்சியாக இருக்க நாம் அழைக்க , அங்குள்ள அந்தணர்கள் அதை ஆமோதிக்க அந்த மரத்தின்  வேர்களுக்கு நாம் கொண்டு வந்த பிண்டங்களை படைக்க , நம் காசி யாத்திரை முழுமை அடைவதாக அறிவிக்கப் பட்டது. இங்கும் ஒரு முக்கிய விஷயம் அங்குள்ள அந்தணர்களுக்கு ஒரு சிறிய அளவிலான பணத்தை நாம் கொடுப்பதற்கு பெயர் 'திருப்தி தக்ஷணை'. இந்த சடங்குகளெல்லாம் முடிந்து மனது நிறைந்து, கண்ணும் தொண்டையும் வறண்டு சாப்பிட இலையில் கை வைக்கும் பொழுது மணி மாலை ஐந்தைத் தாண்டி இருந்தது.

பசி மந்தித்து  களைப்பு மேலிட்டாலும் பெயருக்கு வயிற்றை நிரப்ப கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அவசரமாகக் கிளம்பி வழியில் உள்ள 'மங்கள் கௌரி ' என்ற சக்தி பீடத்தை தரிசித்தோம் . மிகவும் குனிந்து நுழைந்து காற்றே புக முடியாத ஒரு சின்ன இடத்தில் அம்பிகையின் அருகில் உள்ள அந்த விளக்கு பக்தி உணர்வைத் தூண்டியது.

1996ல் முயற்சித்து பார்க்க முடியாத 'புத்த கயாவை' இம்முறை எப்படியும் காண வேண்டும் என்ற உறுதியில் முதலில் பார்த்தது மிக அமைதியான ,  சுத்தமான முறையில் பராமரிக்கப் படும் புத்தர் கோவிலை. பின் காணச் சென்ற 'போதி மரம் ' வெகு தொலைவில் இருந்ததாலும் இன்னும் பயணப் பட வேண்டிய தொலைவையும் கருத்தில் கொண்டு 'நமக்கு  ஞானம் பிறக்கும் வேளை இன்னும் வரவில்லை ' என்று அங்கலாய்த்துக் கொண்டே பாதியிலேயே திரும்பி விட்டோம். 

காற்றைக் கிழித்துக்  கொண்டு  வண்டி வாரணாசி நோக்கிப் பறந்த பொழுது தாமத உணவினாலும், நாள் முழுவதும் உடலும் மனமும் அனுபவித்த ஆயாசத்தினாலும் அனைவரும் இருந்த அரை மயக்கத்தை கெடுத்தது - ஏன் என்றே தெரியாமல் எல்லா வண்டிகளும் ஒரு மணிக்கு மேல் நிறுத்தப் பட்டது தான் - ஒரு சிலர் சொன்னார்கள் எல்லோருமே அருகில் உள்ள டோலில் முதல் நாளே ஒரு நாள் கட்டணம் செலுத்தியதால் கொஞ்சம் தாமதித்து மீண்டும் கலெக்ஷன் செய்யத்தான் என்று - என்ன உண்மையோ மஹா விஷ்ணுவுக்குத் தான் தெரியும். உறங்கி, எழுந்து, தாலாட்டப்பட்டு மீண்டும் மயங்கி ஒரு வழியாக வாரணாசி வந்து விழுந்த போது மணி நான்கு (மறுநாள் காலை). !!

ஏழாம் நாளான மறுநாள் எப்பொழுது விடிந்ததென்றே தெரியாது தூங்கி காபி கொண்டு வந்த பெரியவர் கூப்பிடுதலால் தான் எழ முடிந்தது - அவ்வளவு அலுப்பு , ஆனால் மன நிறைவான அலுப்பு .  1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான  175 ரன் கரகாட்டத்திற்குப் பின் அவரின் புகைப் படம் போட்டு அருகில் 'Golden Exhaustion' என்ற தலைப்புதான் நினைவிற்கு வந்தது !!

நாள் முழுவதும் தூங்கி தூங்கி எழுந்து அலுப்பு குறைந்தபின் மாலையில் அந்த நாளில் சென்ற முதல் இடம் 'தில பண்டேஸ்வரர்' கோவில். வாரணாசியின்  குறுகிய சந்துகளில் தான் எவ்வளவு புகழ் வாய்ந்த கோவில்கள்!!  இங்குள்ள சிவனை பாண்டவர்கள் வந்து வழிபட்டதாக அந்தக் கோவிலுள்ள பலகை அறிவித்தது .

வாரணாசியை விட்டு கிளம்பு முன் மற்றுமொரு முறை விஸ்வநாதரை காண ஆசைப் பட்டு அங்கு ஆனந்த தரிசனத்திற்குப் பிறகு அந்தக் கோவிலின் விசேஷமான 'சப்த ரிஷி பூஜை'யை பார்க்க முற்பட்டோம். நல்ல கூட்டமிருந்தாலும் முண்டி அடித்து, ஒரு காவலாளியின் கருணையால் முதல் வரிசையில் அமர்ந்தாலும் எப்பொழுது விழுந்து விடுவோமோ என்ற அச்சச்சத்துடன் தான்பார்க்க முடிந்தது. கூட்டம் என்றால் சாதாரணக் கூட்டமில்லை. நம் இரு பக்கமும் உள்ள கைகளை எடுத்து கும்பிட முடியவில்லை ; அவ்வளவு நெரிசல். இருந்தும் அந்த அருமையான பக்தி உணர்வை பொங்க வைக்கும் அபிஷேகத்தை கண் குளிர கண்டது பெரிய பாக்கியமே.

வாரணாசியில் நாங்கள் இருந்த கடைசி தினமான எட்டாம் நாள் சற்றே பரபரப்புடன் துவங்கியது. அதிகாலையில் முதலில் கங்கா மாதாவிற்கு எங்கள் யாத்திரையை இனிதே நடத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பால், தயிர் , தாம்பூலம் முதலியவற்றுடன்  கங்கா பூஜை.

அதன் பின் எங்கள் சாஸ்திரிகள் வீட்டில் இரண்டு வயதான தம்பதிகளை அழைத்து மரியாதை செய்து நடத்திய தம்பதி பூஜை . இவைகளை முடித்து அவர்கள் நம்மையும் நம் குடும்பத்தாரையும் வாழ்த்தி வழி அனுப்பும் பொழுது நாம் இந்த யாத்திரைக்காக செய்த ஏற்பாடுகள், ஏகப்பட்ட போன் கால்கள் , விமான முன் பதிவுகள், யாத்திரைக்குத் தேவையான பொருட்களை இரண்டு நாட்களாக தி. நகரிலும் மயிலாப்பூரிலும் வேட்டை ஆடிய நாட்கள் - இப்படி எல்லா முயற்சிகளும் , சிரமங்களும் சில சங்கடங்களும் எல்லாம் பறந்து போய் ஒரு நல்ல மன நிறைவைக் கொடுத்தது.

அதன்பின் இருக்கும் சில மணி நேரங்களில் பார்க்க வேண்டிய சில பல கோவில்களைக் காணப் பறந்தது காலேஜ் நாட்களின் பரீட்சைக்கு முன் தினங்களைத் தோற்கடித்தது. கிடைத்த இரண்டு மணி நேரங்களில் விரைந்து முதலில் பார்த்தது ஹனுமான் காட்டிலேயே உள்ள கேதாரேஸ்வரர்   கோவில் மற்றும் சங்கர மடம். முன்றைய கோவில் மீண்டும் மீண்டும் எங்களின் தொண்ணூத்தி ஆறாம் ஆண்டு இனிய நினைவலைகளை  தட்டி எழுப்பின.

பின் சென்றது ' சங்கத் விமோசன்' என்ற சங்கடங்களைத் தீர்க்கும் ஆஞ்சநேயர் கோவில். செந்தூரத்துடன் எதிரில் உள்ள இராமரையே  பார்த்துக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயரின் இந்தப் பிரபலமான கோவிலில் சனிக் கிழமைக்கேயான கூட்டமிருந்தாலும் சுலபமாக தரிசன வலம் வர முடிந்தது.

 அதன்பின் 'த்ரிதேவ் கோவில்' என்ற அமைதியான அழகான மும்மூர்த்திகளின் கோவில்.  அடுத்து சென்ற 'துர்கா மந்திர்' நம்ம பக்கத்து , அங்காளம்மன் கோவில் போல் நிறைய சிவப்புடன் காட்சி அளித்தது .

'துளசி மாநஸ் மந்திர்' என்ற துளசிதாசரை முற்படுத்திக்க கட்டப்பட்ட இந்தக் கோவிலைக் காண ஒரு அரை நாளாவது வேண்டும். அவ்வளவு சித்திரங்கள் , அவ்வளவு வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள், படங்கள் .

நிறைவாகச் சென்ற 'சோழியம்மன் கோவில் ', யாத்திரிகளுக்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய கோவில் - இதில் நமக்கு எந்த சாய்ஸும் இல்லை. இங்கு வந்து கோவிலிலேயே கிடைக்கும் ஒரு சோழியை வாங்கி அதை அம்மனிடம் படைத்து '  வாரணாசி  வந்ததற்கு நான் உனக்கு சோழி அளிக்கிறேன் , வந்ததற்கான பலனை நீ எனக்கு அளிப்பாய் ' என்று வேண்டிக் கொண்டால் அதற்க்கு அம்மன் ஆசி வழங்கி விஸ்வநாதரிடம் நாம் வந்த செய்தியை உறுதி படுத்துவதாக ஒரு நம்பிக்கை  !!

இனி இங்கு  பார்க்க வேண்டிய முக்கிய கோவில்கள் இல்லை என்ற மன நிறைவுடன் நாங்கள் தங்கிய பாலானந்த தீர்த்தாஸ்ரமத்தை விட்டு  கிளப்பினோம். இந்த ஆஸ்ரமம் வரும் யாத்திரிகளுக்காக , குறைந்த வாடகையில் , மிதமான வசதியுடன் தங்கி,  வந்த வேலைகளை, எண்ணங்களை திருப்தியாக செய்ய உதவும் எண்ணத்துடன் நடத்த படும் ஒன்று. மிகுந்த வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இது இடமல்ல . அனால் இந்தப் புனித யாத்திரைக்குத் தேவையான அதிகாலை வெந்நீர் ஸ்நான வசதி, குளிர் சாதனம், முக்கியத் தேவையான  ஈரத்துணி உலர்த்த கொடி கட்ட நிறைய இடம், நம் சாஸ்திரிகள் வீடு அருகிலேயே இருப்பதால் வேளா வேளைக்கு காபி, சிற்றுண்டி அறைக்கே வரும் வசதி  .... இதை விட ஒரு புனித யாத்திரையில் மனமெல்லாம் செய்ய வேண்டிய கர்மாக்களில் இருப்பவருக்கு வேறென்ன தேவை ?

வரும்பொழுது இருந்த அதே அரை இருட்டில் திளைத்திருந்த வாரணாசி விமான நிலையம் எங்கள் விமானத்தை பற்றிய எந்த அறிவிப்பும் செய்யாமல்  முதல்வரை தேர்வு செய்யும் ஆளுநர் போல் கொஞ்சம் சஸ்பென்ஸ் கொடுத்து படுத்தியது . பின் ஏறிய கொல்கத்தா விமானத்தில் நுழைந்தவுடன் செய்த முதல் காரியம் கொண்டு வந்த பொட்டலத்தை பிரித்தது தான். அகோரப் பசியில் , உடனேயே கொல்கத்தா வந்து விடும் என்ற அவசரத்திலும் விழுங்கிய தோசைகள் கண்களில் நீரை வரவழைத்து - மிளகாய்ப் பொடியின் அதிகக் காரத்தால் !!

இங்கு நாங்கள் வாரணாசியில் உள்ள போது கிடைத்த ஆகாரங்களை பற்றிய சில வரிகள். வந்த முதல் நாளே சொல்லி விட்டார் எங்கள் வாத்தியார்- தினமும் எந்த நேரம் கேட்டாலும் அறைக்கே வந்து காபி, டீ வழங்க பூல் சந்த் என்ற முதியவர் எங்களுக்காவே பிரத்தயேகமாக நியமிக்கப்பட்டிருப்பதை. இந்த முதியவர் இது மட்டுமல்லாமல் பல இடங்களில் எங்கள் வழி காட்டியாகவும் இருந்து பெரிதும் உதவினார். அவர் பேசித் தான் கேட்டதே இல்லை - மொழி புரியாததால் மட்டுமில்லை ; வாயில் எந்நேரமும் பான் !!!

மதியம் சாப்பாட்டிற்க்கோ இரவு பலகாரத்திற்க்கோ அடுத்த தெருவிலிருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு ஒரு போனைப் போட்டு சொல்லி விட்டால் போதும் - அங்கு போயும் சாப்பிடலாம் அல்லது  அறைக்கும் அனுப்பப் படும். இத்தனை காரியங்களுக்கு நடுவில் அந்த வடநாட்டில் நமது ரசம் சாதம் போடும் இவரது பெருமை , போய் சாப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும் !!

 இங்கு நமக்கு முன்னோர்களுக்கு காரியங்கள் செய்ய பெரிதும்  உதவும் அந்தணர்கள் பற்றி :

நீங்கள் எந்த அளவுக்கு சிரத்தை காண்பிக்கிறீர்களோ , எவ்வளவு உங்களால் செய்ய முடியுமோ அதற்கேற்ப காசுக்கேத்த தோசை கிடைக்கும் . இதில் காசு முக்கியம் என்றாலும் அது மட்டும் முடிவு செய்ய உதவுவதில்லை. கேட்ட தட்சணையைக் கொடுத்தும் சில அலட்சியங்கள் நம் கண்களுக்குத் தப்புவதில்லை. ஸ்ரார்த்தம் முடிந்து வைதீக அந்தணர்களுக்கு வாழை இலைக்கு பதில்  பேப்பரில் சாப்பாடு, பிளாஸ்டிக் தட்டுகள், சில மந்திரங்களை புத்தகத்தைப் பார்த்து படித்தல் இப்படி பல. எவ்வளவு இருந்தும் நாம் நம் சிரத்தையை குறைவில்லாமல் செய்தால்  மற்ற(வர்களின்)  குறைகள் மன்னிக்கப்படும் என்பது என் நம்பிக்கை.

வயிறு நிரம்பி சிறிது சாவகாசமாக வந்திறங்கிய கொல்கத்தா விமானம் பளீரென்று வரவேற்றது - வாரணாசியில் காணாமல் போயிருந்த அத்தனை மின்சார விளக்குகளும் இங்கிருப்பதுபோல் தோன்றியது. சிறிது காத்திருந்து  மறுபடியும் ஏறிய விமானம் சென்னை வந்திறங்கிய பொழுது  மணி  இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது  (மறுநாள் அதிகாலை)

பாகம் மூன்று  -  மீண்டும் ராமேஸ்வரம் 
காசியிலிருந்து திரும்பியபின் சென்ற ராமேஸ்வர பயணம் அதிக சிரமமில்லாமல் அமைந்ததற்கு முக்கிய காரணங்கள் முன்னே அறிமுகமான சாஸ்திரிகள் மற்றும் சிக்கலில்லாத சம்பிரதாயங்கள். அலஹாபாத்தின் திரிவேணி சங்கமத்திலுருந்து பிளாஸ்டிக் கேனில் விமானத்திலும் கடினமான சாலைகளிலும் காப்பாற்றி எடுத்து வந்த அந்த புனித கங்கா ஜலத்தை வெகு சுலபமாக சேர்ப்பிக்க முடிந்தது. ஒரு சிறப்பு டிக்கட் மட்டுமே எடுத்துக் கொண்டு நேராக இராமநாத சுவாமி கோவிலிலுள்ள பிரகாரத்தினுள் நுழைந்த உடன் அதை பத்திரமாக வரவேற்று பிரத்யேகமாக உங்களுக்காகவே அதை வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்த காட்சி , காணக் கண் கொள்ளாமலிருந்தது. 

மிகுந்த பரப்புடன் தொடங்கிய பயணம் வெகு விரைவிலும் சுலபமாகவும் எதிர்பார்த்தபடியே முடிந்ததால் மகிழ்ச்சியை மேலும் கூட்ட  ராமேஸ்வரம் அருகிலிருந்த சில முக்கிய தலங்களுக்கு செல்ல முடிவு செய்து முதலாக போனது 'சேதுக்கரை' - இங்கிருந்து தான் இராமர் சீதையை மீட்க இலங்கைக்கு பாலம் கட்ட ஆரம்பித்த இடம் .

அதன் பின் சென்ற 'திருப்புல்லானி' என்ற திவ்ய தேசம், உண்மையிலேயே ஒரு திவ்யமான இடம் தான். மிகப் பெரிய இந்தக் கோவிலின்  பெருமாளின் அழகு சொல்லி மாளாது.  அதன் பின் சென்ற 'உத்தரகோச மங்கை ' நான் வெகு நாட்களாக போக ஆசைப்பட்ட க்ஷேத்ரம். இந்தக் கோவிலில் திருவாதிரையின் போது மரகத நடராஜரைக் காண வரும் கூட்டம் சொல்லி முடியாது என்று  கேள்விப் பட்டிருக்கிறேன் .  மற்ற நாட்களில் அந்த மரகத உருவம் பங்கப்  படாமலிருக்க உடல் முழுவதும் சந்தனம் பூசி இருந்தது குளிர்ச்சியைக் கூட்டியது .

அடுத்து சென்ற "தேவிப் பட்டிணம் "  என்ற இடத்தில் கடல் நீரில் அமிழ்ந்திருக்கும் நவ கிரஹங்கள்

பின் மறக்க முடியாத  புகை வண்டிக்கும்  கப்பலுக்கும்  பாலத்தை தூக்கி மாற்றி மாற்றி வழி விடும் பாம்பன் பாலத்துடன் சில செல் ஃபிகளுக்குப் பிறகு , ராமேஸ்வரத்தையும்   இவரையும் எப்படிப் பிரிக்க முடியும்? !  அப்துல் கலாம் அவர்களின் சமாதிக்கும்,  பிறந்த வீட்டுக்கும் ஒரு விஜயத்துடன் விடை பெற்றுக் கொண்டோம் .
 
மறுநாள் திருச்சியில் எங்கள் குல தெய்வத்திற்கு நன்றி சொல்லி பின் சமயபுர மாரியம்மனின் ஆசியையும் பெற்றுக் கொண்டோம். எல்லா முக்கிய காரியங்களும் விநாயகர் வழிபாட்டுடன் தான் தொடங்கும். ஆனால் நாங்கள் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி முடித்த பயணம் மறு வாரம் சமாராதனையுடன் இனிதே முடிவடைந்தது.

விளையாட்டாக ஆரம்பித்த இந்த புனித யாத்திரைக்கு எப்பொழுதும்  கூடவே இருந்த தெய்வங்களைத் தவிர பலரும் கை கொடுத்தனர். என்னுடன் வந்த என் நெருங்கிய உறவினர், அவரின் ஹிந்தி பரிச்சயம், வைதீக காரியங்களை சிறப்பாகச் செய்த காசியிலுள்ள அந்த அந்தணர்கள்,  படகில் செல்லும் பொழுது அந்த கங்கை காற்றின் வேகத்திலும் அணையாமல் குமுட்டியை விசிறிக் கொண்டே இருந்து பிண்டங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வைத்த அந்த 'பாய்', கங்கையில் என் முன்னோர்கள் காத்திருக்கும் சரியான அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற படகோட்டி 'குகன்' ,  மந்திரங்களால் எங்களின் மனதை நெகிழ வைத்த அந்த கயா சாஸ்திரிகள்,  எங்களின் வழிகாட்டி பூல் சந்த் இப்படி பலர். இவற்றையெல்லாம்  சேர்த்து முன்னோர்களின் ஆசி  எங்களை இங்கெல்லாம் வரவழைத்தாக மனப்பூர்வகமாக நம்புகிறோம் !!!