Monday, July 18, 2016

சிரிக்க சிந்திக்க

ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்துவது
பேச்சாளர்களை எப்படி தேர்வு செய்வது
சிரிப்போ , சிந்தனையோ --- எப்படி திகட்டாமல் கொடுப்பது
வந்தவர்களை எப்படி கவனிப்பது
நிகழ்ச்சியைக் காண வந்தர்களுக்கு எப்படி திகட்டாத, அசௌகரியங்கள் இல்லாத சில மணி நேரங்களைக் கொடுப்பது

ஈவண்ட் மானேஜ்மேன்ட் என்ற பெரிய சமாச்சாரத்தை தங்களின் உழைப்பினாலும், முப்பது வருடங்களுக்கு  மேற்பட்ட அனுபவத்தினாலும்  அனாயாசமாக செய்து காட்டி இருக்கும் சென்னை திருவல்லிக்கேணி ஹியூமர் கிளப் நிர்வாகிகளுக்கு ஒரு பெரிய ஷொட்டு.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பாளிகள் வந்தாலும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நான்கு மணிக்குச் சரியாக   மாம்பலம் சகோதரிகளின் இனிய குரலில் அரங்கில் 'சாந்தியை நிலவ' விட்டு  நிகழ்ச்சியை தொடங்கியதிலேயே தெரிந்தது இவர்களின் திட்டமிடும் ஆற்றல் .

தொடக்கத்திலிருந்தே  காரியத்தில்  குறியாய் இருந்து, தான் அதிகம் பேசாமல் , முக்கிய பேச்சாளர்களை பேச விட்டு, இடை இடையே அடுத்த வருட நிகழ்ச்சிக்கும் ஆதரவு தேடும்  இந்தக் கிளப்பின் செயலாளர் பாராட்டப் பட வேண்டியவரே.

முதலில் உரையாற்ற வந்த சொல்லின் செல்வர் சுகி சிவம் அவர்கள் தமிழ் மடை திறந்து நகைச்சுவை கலந்த உரையில் அனாயாசமாக இன்றைய தேதியில் முக்கியமாக எல்லோராலும் நிமிர்ந்து பார்க்கக் கூடிய சொல் - 'மகிழ்ச்சி' - என்றால் என்ன என்பதை:

-  "40%  தான் விரும்பும் ஒருவருடனோ இல்லை தன்னை விரும்புவருடனோ இருப்பது,
- மற்றோர் 40% தான் விரும்புவதைச் செய்வது என்றும்
- பத்து சதவிகிதம் தான் இதில் பணம் இடம் பெறுகிறது" என்றும் சொல்லி சுகமான குளிர் அரங்கில் கண் அசர முயலும் சிலரின் கண்களையும் திறந்து வைத்தார்.

இவருக்கு கணக்கு சரியாக வராதோ என்று நாம் வியப்பதற்கு முன் நிதானமாகத் தொடர்ந்தார் 'மீதமுள்ள பத்து சதவிகிதத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ' என்று. இவர் குறிப்பிட்ட ' Happiness' என்ற ஒரு குறும் படத்தை யூ டியூபில் பார்த்துக் கொள்ள பலரும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

யாரோ ஒருவர் மஹாபெரியவரிடம் ராம ஜென்ம பூமிக்குப் போகுமுன் உத்தரவு வாங்கப் போன போது, பெரியவர் அவரை 'கிருஷ்ண ஜென்ம பூமியையும்' பார்த்து வரச் சொன்னதின் உள் அர்த்தம் - நன்கு அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.

இவர் ஏன் பேச்சை முடிக்கிறார் என்று நாம் ஏங்கும் பொழுது   தொடர்ந்த   மோஹன சுந்தரம் , ஒரு சர வெடிப் பேச்சாளர். ஒரே வாக்கியத்தில் சில முறை ஒன்றுக்கு மேற்பட்ட நகைச் சுவையையும் கலந்து ஒரு நாற்பத்து ஐந்து நிமிடங்கள் அரங்கைக் கலக்கி விட்டு அமர்ந்த போது தொலைக் காட்சியில் முன்பெல்லாம் தென்பட்ட மதுரை முத்துவை நினைத்து மனம் ஏங்கியது - அப்படி ஒரு இடை விடாத நகைச் சுவை. இவர் பேச்சின்  தனிச் சிறப்பு -நிறைய வீட்டு  சம்பந்தப்பட்ட நகைச்சுவை இருந்தாலும் அவற்றை  வீட்டுமக்களையும்  பக்கத்தில்  வைத்துக் கொண்டே  ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்பது தான்.

மனம் நிறைந்து, எழுந்து எழுந்து, வாய் விட்டுச் சிரித்த பார்வையாளர்களின் உடம்பைக் கருதியோ என்னவோ அடுத்துப் பேச அழைத்த பர்வீன் சுல்தானா சிந்திக்க , உணர நிறைய விஷயங்களை முன் வைத்தார்.

'அடங்கிய மனமே குரு ' ,
 'எப்பொழுதுமே தோற்ப்பதற்க்கு தயாராக இருப்பவர்களை யார் ஜெயிக்க முடியும்' ,

போன்ற தெளிவான கருத்துக்களை சிறிது ஆவேசத்ததுடன் அள்ளி வீசினார். பேச்சைக் கேட்கக் கேட்க புரிந்தது அது ஆவேசம் இல்லை , தெரிந்து கொண்ட விடயங்களைத் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என்று. பேச்சாளரின் பெயரைக் கேட்டு எடை போட்ட நண்பர்களை விவேகானந்தர், சாக்ரடிஸ், மஹா பெரியவர், யேசுநாதர், நபிகளார்  போன்றவர்களின் கருத்துக்களை அனாயாசமாக உரைத்து வெட்கப் பட வைத்தார். அன்னாரின்  உரையில் விளக்கிய 'விஸ்வரூபத்தின்' விளக்கத்தை நான் இது வரை கேட்டதில்லை!

 "கவலை என்ற பறவை என் மேல் பறக்க, நான் கவலைப்  பட மாட்டேன்
 ஆனால் அவை என் மேல் கூடு கட்ட விட மாட்டேன்"

 - என்றுரைத்த போது முண்டாசுக்கவியின் ஆவேசமும், உறுதியும் நினைவுக்கு வந்தது. மக்களை பலத்த சிந்தனையில் ஆழ்த்தி உரத்த கையொலிக்கு நடுவே அமர்ந்த போது , பார்வையாளர்கள் நகைச் சுவையிலிருந்து சிறிது விலகி நின்று , அந்த அம்மையாருக்கு ஆச்சி மனோரமா விருது  கொடுத்ததைக் கூட உள்  வாங்காமல்,  நம்மைச் சுற்றி உள்ள மகான்களும் அவர்களுரைக்கும் மகத்தான சிந்தனைகளிலும் ஆழ்ந்து போயிருந்தார்கள்.

நகைச் சுவை மன்றத்தார் அந்த அரங்கை இந்த நிகழ்ச்சிக்கு கொடுத்த அந்தப் பள்ளியின் முதன்மையாளரை கௌரவப் படுத்திய பிறகு தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த முனைவர்  ஞானசம்பந்தம் ஆழ்ந்த சிந்தனையிலிருந்த மக்களை எழுப்பி தன் கொஞ்சும் தமிழில்  மீண்டும் நகைச்சுவை தீபாவளிக்கு கூட்டிச்சென்றார்.

சரியாக எட்டு மணிக்கு தேசிய கீதத்திற்குப் பிறகு வெளியே வந்த மக்கள் பலரின் மனதிலும் அசை போடப்பட்டிருந்த வரிகள் , கடைசியில் பேசிய முனைவரைச் சாரும்  : " பிரதானமாக ஹிந்துக்களாலே நடத்தப் படும் இந்த நிகழ்ச்சியில் ஒரு முகமதியருக்கு விருது கொடுத்து , தலை சிறந்த ஆன்மிகப் பேச்சாளர் சொல்லின் செல்வம் கைகளால் இந்தக் கல்லூரியின் முதல்வரான ஒரு கிருத்துவருக்கு மேடையில் கௌரப்படுத்தப் படுவதை எண்ணிப் பெருமைப் படுகிறேன் ".

இதை விட மனம் நிறைந்த சுவை வேறு எங்கு கிடைக்கும் ?

வீட்டிற்கு வந்ததும்தான்  பார்த்தேன் அரங்கில் நுழையுமுன், குடிநீர் பாட்டிலையும் தின்பண்டங்களையும் தவிர,  என்னென்னவோ   கையில் திணித்திருந்ததை.

அதில் இவர்களின் 1983 ஆம் ஆண்டுக் கனவாக இருந்தவை:

"நம் கிளப்பிலே 500 அங்கத்தினர் சேர்க்க வேண்டும்.
நாரத கான சபா போன்ற பெரிய அரங்கிலே ஆண்டு விழா நடத்த வேண்டும்
ஆயிரம் பேர் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொருவருக்கும் ஒரு பை நிறைய பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டும்
சிரிக்க வைக்க வேண்டும்
ஒரு நாலு மணி நேரம் அவர்கள் தங்கள்  கவலையை மறந்து ஆரோக்கியமாக சிரிக்க வேண்டும் "

சாதித்துத்தான் இருக்கிறார்கள்!
 மூவரணி,  அமைதியாக இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை குலுங்க வைத்திருக்கிறார்கள் - வாழ்த்துக்கள்.

மன்றத்தினர் பகிர்ந்த வலைத்தளத்தின் இணைப்பையும் இங்கு பகிர்வதால் நான் அடைவது:  'மகிழ்ச்சி'   !!  https://youtu.be/sWmyx5ZzSlk

Sunday, July 10, 2016

ஒரு மழைக்கால மராத்திய விஜயம்


Raring to take off from the Chennai Airport !
அந்த 16 பேர் குழு  கிளம்பும் பொழுதே மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானைப் பார்த்து சென்னையின்  வானம்  பிரிவில் தான் கண் கலங்குகிறதென்று எண்ணி  எந்த சந்தேகமும் படாமல் சுற்றுப் பயண இயக்குனர்கள் ஸ்ரீ ஜானகி டூர்ஸ் கொடுத்த இட்லிகளை அருமையான . தக்காளி சட்னியுடன் உள்ளே தள்ளி விட்டு இண்டிகோ விமானப் பயணத்தை அனுபவித்துப் பின் புனேவில் இறங்கியபின் தான் கவனித்தனர், புனேயும் ஆனந்தக்  கண்ணீர் வடித்துத் தங்களை வரவேற்றதை !! சென்னையின் பிரசித்தி பெற்ற வெயிலைத் தொலைத்தாலும் சந்தோஷப் பட முடியாதபடி , அந்தக் குளு குளு வானிலையிலும்  புனேயின் சாலைப் போக்குவரத்து நெரிசல் போரூர் சந்திப்பெல்லாம் ஜுஜுபி என்று சொல்லி வியர்க்க வைத்தது.

Dagdusheth Vinayagar Temple, Pune
எப்படியோ சமாளித்து, நீந்தி, பல வாகங்களுக்கு மறு வாழ்வு கொடுத்ததில் கலங்கிய இதயத்திற்கு  இகோஸ்பிரின் மாத்திரை எடுத்து வந்திருப்பதை மனைவியிடம் உறுதி செய்து கொண்டிருக்கும் போதே வண்டி நின்ற இடம் 'தக்தூ  சேத் ஹல்வாயி கணபதி' கோவில். இந்தியாவிலா - ஏழ்மையா என்று கேள்வி கேட்பது போல் தங்கமும், வெள்ளியும் அணிந்து அருமையாக தரிசனம்  கொடுத்துக் கொண்டிருந்தார்   விநாயகர்.   ஒரு சாதாரண இனிப்புக்கு கடைக்காரர் தனக்கு விநாயகர் அளித்த வியாபார லாபத்துக்கு  நன்றியாகக் கட்டப் பட்டதாகச் சொல்லப்படும்  இந்தக் கோவில் புனேயில் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

Narayanpur Balaji temple

மனம் திருப்தி அடைந்தாலும் வயிற்றில் அலாரம் அடிக்கத் தொடங்க ஒரு ஹோட்டலைப் பிடித்து இனிப்பான தக்காளி சூப்புடன் (பாயச பாத்திரத்தில் சூப்  கலக்கி விட்டானோ  ??!!) சாப்பாட்டை முடித்து சென்ற அடுத்த இடம் - நாராயண்பூர். திருப்பதி போன்று நெடு நெடுவென்று நின்ற பெருமாள் தரிசனம் .  கோவில் - சுத்தத்திலும் உயர்ந்து நின்றது .

Satara - Nataraj temple

நிதானமாக நின்று அடிக்கும் மழையைப் பொருட்படுத்தாது முன்னேறியது , சத்தாரா என்ற  இடத்திற்கு . இந்த  ஊரில் உள்ள நடராஜர் கோவில்சிறப்பு -  மேற்கு இந்தியாவில் சிதம்பரத்தைப் போன்ற ஒரு கோவில் வேண்டுமென்று கட்டப் பட்டதாம் .  உத்தர சிதம்பர நடராஜர் என்றழைக்கப்படும் இந்தக் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களும் தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் முதல்வர்களின் உதவியால் கட்டப் பட்டவையாம். முக்கியமாக மஹா பெரியவர் இங்கு பல காலம் தங்கி இருந்த இடம். 

இவ்வளவு தொலைவு கடந்து வந்தாலும், சிரமம் பாராமல்  என் மனைவியின் பிறந்த நாளை , கோலாப்பூர் ஹோட்டலில் சிறப்புடன் கொண்டாட வாழ்த்தி வழி வகுத்த அனைவருக்கும் நன்றி.


வந்த அலுப்புத் தீரத் தூங்கி மறுநாள் விடிகாலை கண்ட தரிசனம், கோலாப்பூர் மஹாலக்ஷ்மி ! மிகப் பழமையான இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்களும் , வேலைப் பாடுகளும் சரியான பராமரிப்பு இல்லாமலும் தனித்து நின்றன. இந்தக் கோவிலின் மற்றோரு சிறப்பு துல்ஜா பவானி, காசி அன்னபூரணி போன்ற சன்னதிகளும் முறையாக அமைக்கப் பட்டிருப்பது.

Kohlapur Mahalakshmi Temple

கோலாப்பூரிலுந்து ஒரு சுமாரான சாலையில் சில மணி நேர பயணத்திற்குப் பின் வந்தது 'பண்டரிபுரம்'. விட்டலனின் இடத்தில் கால் பதித்ததும் வந்த சந்தோஷம் அங்கு சொல்லப் படும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவியும் செய்தியும், தரிசனத்திற்கு எட்டிலிலுருந்து பத்து மணி நேரம் வரை ஆகும் என்ற நிலவரமும் கொஞ்சமும் கலங்க வைக்கவில்லை. இவ்வளவு தூரம் நம்மை அழைத்து வந்த பாண்டுரங்கன் , அதையும் பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த திட நம்பிக்கை கொஞ்சமும் பொய்த்துப் போகாமல் , இருபது நிமிடங்களுக்குள் குழுவில் உள்ள பதினாறு பேரும் மனம் நிறைந்த தரிசனம் பார்க்க வழி வகுத்துக் கொடுத்தது எப்படி என்பதை விட்டலைத் தான் கேட்க வேண்டும் !!

Pandaripuram
நிறைந்த மனத்துடன் ஒரு இஞ்சி சுக்கு கலந்த தேனீருக்குப் பின் நம்ம ஊர் ஆட்டோவில் கிளம்பினோம் , சில உள்ளுர்க் கோவில்களைக் காண. பல லட்ச பக்தர்கள் குவியும் இந்த ஊரின் சாலை மற்றும் சுகாதார நிலை சொல்லிக் கொள்வது போல் இல்லை. நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி வந்தது போல் பிரதமரின் 'சுத்தமான இந்தியா' கனவு இன்னும் இங்கு வந்து சேரவில்லை போல. குண்டும் குழியுமான சாலை , அதில் விதிகள் என்றால் என்ன என்று ஒன்றும் புரியாமல் தலையைத் திருப்பிப் பார்க்கும் மாடுகளும் , மனிதர்களும் . தெருவில் நிதானமாக ஓடும் கழிவு நீர் . கண்டிப்பாக அரசாங்கமும், கோவில் பராமரிப்பதற்கு தானங்கள் செய்யும் பல தர்மவான்களும் காலம் தாழ்த்தாமல்  கவனிக்க வேண்டிய ஒன்று.

Braving rain, awaiting dharshan
இவ்வளவு சங்கடங்கள் இருந்தும் , எதையும் சட்டை செய்யாமல் தெருவில் தரிசனத்திற்காக  பல மைல் தொலைவில் பொறுமையுடன் மழை, வெய்யிலைப் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் எளிய கிராமத்து மக்களை எவ்வளவு தட்டிக் கொடுத்தாலும் தகும். 

நம்ம ஊர் ஆட்டோ ஓட்டுனர்கள் பெருமைப் படுவது போல் ஓட்டுகிறார்கள் அங்கு உள்ளவர்கள் - அந்த வேகத்தில் எங்கு யாரை இடித்துச் சாய்ப்பார்களோ என்ற பயத்தில் கண்களை மூடி  உட்காந்ததும் முதலில் நிறுத்திய இடம்  துக்காராம் மந்திர்.  இங்கு அவர் பயன்படுத்திய மரக்கட்டில் போன்றவைகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன.

Cot used by Dhukkaram
அதன் பின் பார்த்த கோரா கும்பர் கோவிலிலும் இப்படிப்பட்ட ஞாபகார்த்த சின்னங்கள் காணப்பட்டது .

Gora Kumbar 
அதன்பின் பார்த்தது கோவில் அல்ல - முனிவர்களிலுருந்து, புண்டரீகன், வேதங்களுக்கு முதல்வன் இவர்களிலுருந்து காந்தி, நேரு , அமெரிக்க ஜனாதிபதி வரை அனைவரின் மண்  உருவ பொம்மைகளும் வைக்கப் பட்டிருக்கின்றன.  ஒரு அருங்காட்சியகம் போல் உள்ள அந்த இடம் வருங்கால மக்களுக்கு  ஒரு சரித்திர வழிகாட்டியாக அமைக்கப் பட்டிருப்பது புரிந்தது.

Sree Santh Kaikadiya Viswapunyadaam
ஆனால் இது கட்டப் பட்டிருக்கும் விதமோ அவ்வளவு சுலபமாக இல்லை. ஏறி, இறங்கி, ஏறி, இறங்கி, குறுகிய பாதைகளில் பயணித்து சிறிது நேரத்தில் ஒரு பயம் கூட வந்துவிடுகிறது- நாம் சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று. ஒரு மணி நேரம் கடந்து, வியர்த்து வெளியில் வந்தால் அதன் அமைப்பை நினைத்து பிரமிப்பு தான் மிஞ்சுகிறது. அந்த இடத்தின் பெயரும் அமைப்பைப் போல் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது - ஸ்ரீ சாந்த் கைக்கடிய விஸ்வ புண்யதாம்.

இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் அன்றிரவு தங்கி ஆனந்தம் அடைந்தோம் .

மறுநாள் எங்கள் பயணம் தொடர எதிரே ஆஷாட ஏகாதசிக்கு பாண்டுரங்கனை தரிசனம் செய்ய சாரை சாரையாக வந்த மக்களைக் காண பிரமிப்பாக இருந்தது. வெகு தூரத்திலிருந்து கால் நடையாகவே வந்து கொண்டிருந்த இவர்களில் அநேகம் பேர் முதியவர்கள் -  பஜனை செய்து கொண்டே செல்கின்றனர்.   ஆங்காங்கு வயல்களில் உள்ள பம்பு செட்டுகளில் குளித்து, ஒரு ஓரமாக தீ மூட்டி ஆகாரம் செய்து பிறகு நடை பயணத்தை தொடருகிறார்கள் . பல முதியவர்கள் அப்படியே வயல்களில் படுத்து  இளைப்பாறியதையும் காண முடிந்தது. இப்படி ஆச்சரிய பட்டுக் கொண்டே நாங்கள் வந்தடைந்த இடம் சனி ஷிங்ன்னாப்பூர்.

Sani Shingnapur
ஸ்னைஸ்வரனின் சுயம்பு உருவத்தைக் காண பலரும் பக்தியுடன் வந்து குவிகிறார்கள். இவருக்கு எண்ணெய் சாற்றுவது விசேஷமாகையால் மக்கள் பாட்டில் பாட்டிலாக ஊற்றும் எண்ணெய் பகவானை அடைய சிறு பாதை அமைத்து அதன் வழியே செல்லும் எண்ணெய் சனீஸ்வரன் தலை மேல் அபிஷேகமாக விழுவதை நாமே காணலாம் .

குளிர்ந்த மேகங்கள் குடை பிடிக்க மனமும் குளிர எங்கள் பயணம் தொடர்ந்தது ஷிரிடி நோக்கி. சாயிநாதனைக் காண விரைந்த குழுவிற்கு வியாழக் கிழமை கூட்டம் கொஞ்சம் திகைப்பைக் கொடுத்தாலும் பொறுமையாக முன்னேற மாலை சுமார் ஆறரை மணிக்கு நிறுத்தப் பட்டோம். எப்படியாவது மாலை ஹாரத்திக்கு முன் தரிசனம் செய்யத் துடித்த சிலருக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும். சாயிராமின் எண்ணங்கள் வேறாக இருந்தது. அங்கே இருந்த தொலைகாட்சிப் பெட்டியில் பகவானின் உடை மற்றும் , மாலைகள் மாற்றும்  காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த எங்களை திடீரென்று கதவுகளைத் திறந்து ஹாரத்தி பார்க்க அனுமதித்தது பெரிய ஆனந்த ஆச்சரியம். ஒரு நாற்பது  நிமிடங்கள் சாயிநாதனுக்கு நேரெதிரே அமர்ந்து முழு நிகழ்ச்சியையும்  கண்டு களித்து பிரமிப்புடன் வெளியே வந்தோம் . கேட்டதோ சில நொடி தரிசனம் , கிடைத்ததோ நாற்பது நிமிடங்கள் !!!

Shirdi

மறுநாள் காலை உணவாக சில நாட்களாகக் கிடைக்காத பொங்கலைப் பார்த்த குழு 'கண்டேன் பொங்கலை' என்று பாய்ந்து இரண்டு டம்பளர் பொங்கல் பருகியவுடன் - ஆம், பொங்கல் ஆறாய் ஓடியது - கிளம்பியது , பயணத்தின் கடைசி ஸ்தலத்துக்கு.  சென்ற அநேக இடங்களில் கிடைத்த அமோக தரிசனத்தில் திளைத்த குழு நான்காம் நாள் காலை மிகுந்த உற்சாகத்துடன் காணக் கிளம்பியது-  த்ரியம்பகேஸ்வர்  ஜ்யோதிர்லிங்க தரிசனத்திற்கு. கொட்டும் மழையில் வந்தடைந்து ஒரு மணி நேரம் காத்திருந்து  சில நொடிகள்  தரிசித்ததாலும் கிடைத்த  சிவ தரிசன சுகம் அலாதி.

Thrayambakeshwar

என்றுமே எல்லாம் நேராக நடந்து விடுவதில்லை . எல்லாக் கோவில்களிலும் கிடைத்த அமோகமான தரிசனத்தில் திளைத்திருந்த குழுவிற்கு காத்திருந்தது திரயம்பகேஸ்வரிலுந்து புனே வரும் பயணம். வழி நெடுக 'சாலை மேம்பாடு ' என்ற பெயரில் வெட்டிப் போட்டிருக்க ஒரு ஏழு மணி நேர பயணத்திற்குப் பின் சக்கையாக வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு புனேயில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கும் வசதி !

Pune Keys Hotel
கொடுத்த காசுக்கு சரியாக இருக்கும் அறையைச் சுற்றிப் பார்க்கக் கூட முடியாமல் இரவு பதினோரு மணிக்கு படுத்து மறுநாள் காலை 3.30 மணிக்கு எழுப்பப்  பட்டவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் அந்த அதிகாலையிலும் ஜானகி டூர்ஸ் ரமேஷின் ஸ்பெஷலான சுடச் சுடக் காபி !

மீண்டும் ஒரு முறை புனேயின் மழையை ரசித்துக் கொண்டே வந்த குழு சென்னையில் எட்டு மணிக்குத் தரை தொட்டபின் நினைவுக்கு வந்ததெல்லாம் நல்ல தரிசனங்கள், வயிற்றை நெகிழ்த்தாத சாப்பாடு, தேவைப்பட்டால் உபயோகப் படுத்தத் தயாராக இருந்த புளிக்காய்ச்சல்,  பருப்புப் பொடி, தக்காளித் தொக்கு, அதிகாலை காப்பி , அனைவரும் மற்றவர்களுக்குப்   பகிர்ந்து கொடுத்த நொறுக்கு தீனிகள், கடலை மிட்டாய்கள், கொய்யாக்காய்கள்,  ... இப்படி இனிய நினைவுகள் தான்.

நான்கு நாட்களில் மூவாயிரம் கிலோ மீட்டர்கள் விஸ்தாரத்தில்  இப்படி ஒரு நல்ல சுற்றுலாவுக்கு வாய்ப்பளித்த அந்த ஆண்டவனுக்கு, ஏற்படுத்திக் கொடுத்த ஸ்ரீ ஜானகி டூர்ஸின் ரமேஷ், பிரியா தம்பதியருக்கு , கூட வந்து நட்பு வட்டாரத்தை விரிவுப் படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தவிர வேறு என்ன சொல்லுவது !!