Wednesday, December 24, 2014

மாறு பட்ட மார்கழி

ஒவ்வொரு மார்கழியும், இத்தனை வருடங்களாக, மயிலை மாட வீதி பஜனையுடன் திருப்தியாக ஓடிக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன் அது கொஞ்சம் புரண்டு முப்பது நாட்களில் முப்பது கோவில்களாக மாறி ,மயிலையில்  நம்மைச் சுற்றி இவ்வளவு கோவில்களா என்று வியக்க வைத்தது. 

இம்முறை பாதை மாறி, ​கிருஷ்ண ​கா​ன சபா கூட்டிச் சென்று ஒரு பஜனை கலந்த காலட்சேபத்துக்கு அறிமுகப் படுத்தியது.   காலட்சேபதற்க்கு அப்பாற்ப்பட்டு இந்த நிகழ்வுக்குப் போவதிலேயே சில சவால்கள் இருந்தன. தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தாலும் கிளம்பவே 6.30 ​ஐ​  தாண்டி விடும்.காலைப் போழு​தென்பதால் முப்பாத்தம்மன் கோவிலருகில் வண்டி நிறுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.   

​கி​ருஷ்ண கான சபா- ஒரு பெரிய அரங்கு தான். சௌகரியமான இருக்கைகள். அனுமதி இலவசமானாலும் , ஒரு நிதானமான கூட்டம் தான் காலை ஏழு மணி வரையில், பின் போகப் போக அதிகரிக்கும். 

நிறைய நாற்காலிகள் இருப்பதால் உட்கா​ரும் இடத்தை கொஞ்சம் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். முதல் நாள் மேடைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகில்.  ஆனால் போகப் போக பாகவதவரின் குரல் வளமும், சபாவின் ஒலி பெருக்கிகளும் செவிப்பறையை ஒரு கை பார்த்தது.  பத்து நாட்கள் கழித்து இன்றைய நிலை கடைசியி​லிருந்து ஒன்றிரண்டு வரிசை முன். சௌகரியமான இடம் பார்த்து உட்கார்ந்தால் மட்டும் போதாது. நமக்கு முன்னால் உட்காரப்,போகும் அன்பரின் உயரத்துக்கு விட்டலனை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டி இருந்தது. நேற்று ஒரு மாமிக்கு பாதி நேரம் தனக்கு முன்னால் உட்காருபவரை விரட்டுவதிலேயே கழிந்தது! ஆனால் அந்த விரட்டலில் உள்ள நியாயம் எனக்குப் புரியவில்லை- ஒரு வேளை என் உயரமும் அடிக்கடி ​ஞா​பகத்துக்கு வருவதாலோ என்னவோ ​!​
  
சபாக்காரர்கள் கொஞ்சம் இருக்கைகள் போடுவதில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் - முன்னால் உட்காருபவர்கள் மறைக்காமல். கல்லூரிகளில் அந்தக் காலங்களிலேயே கேலரி எனப்படும் கொலு போன்ற அமைப்பில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் , பல்வேறு உயரங்களில் இருந்தாலும் இது போன்ற சவால்களை சந்தித்ததே இல்லை. இவ்வளவு பிரபல​மான​ பல்​லா​ண்டுகளாக இருக்கும் சபா இதை எப்படி கோட்டை விட்டதென்று புரியவில்லை .

நடத்துபவரின் குரல் வளம் , பாடும் பாட்டுக்களிலும் உள்ள பக்தி தோய்ந்த பொருள், பக்க வாத்தியங்கள் பல மக்களை எழுந்து ஆட வைத்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை- இந்த சம்பிரதாயத்துக்கு உரியது தான்.
  
சபாக்காரர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு சமாச்சாரம். அடுத்த நிகழ்சிக்காக வரும் கூட்டத்தை கொஞ்சம் ஒதுங்க வைத்து வெளியேறுபவர்கள் போன பின்பு அனுமதிக்கலாம். சில நாட்களுக்கு முன் ஏறக்குறைய அரங்கேறவிருந்த ஒரு தள்ளு முள்ளு கண்டிப்பாக தவிர்க்கப் பட வேண்டியது- குறிப்பாக வரும் முதியோர்களை மனதில் கொண்டால்.   

வெளியே பிரதமருடன் சேர்ந்து இந்தியாவை குப்பை இல்லாத நாடாக்குவதற்க்கு குரல் கொடுத்த அதே பெரிய மனுஷர்கள் தான், தான் முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய டிக்கட்டை பெருமையுடன் எங்கு பார்த்தாலும் கசக்கிப் போட்டு அரங்கை அசிங்கப் படுத்தியிருந்தார்கள் !

ஆனால் இவ்வளவு பிரபல காலட்சேப கோஷ்டியை கூட்டி வந்து, இத்தனை பெரிய பக்தர்
​ கூட்டத்தை சமாளித்து இலவசமாக ஒரு நிகழ்ச்சியை சுமார் இரண்டு வாரங்களுக்கு நடத்தும் நல்ல உள்ளம் கொண்ட அமைப்பார்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. சௌகரியமா​க  இருக்கையில் அமர்ந்து, மிதமான குளிர் கட்டுப்படுத்தப் பட்ட அரங்கில், கண்களை உறுத்தாமல் ​உள்ள வெளிச்சத்தில் ​இரண்டு மணி நேரம் நம்மை ​மெய் ​மறக்கச் செய்ய இவர்களுக்கு எப்படி கட்டுப்படியாகிறது என்று எண்ணி கொண்டு வரும் தட்டில் கொஞ்சம் தாரளமாக போடத்தான் தோன்றுகிறது.   

​உள்ளேயே அமைந்திருக்கும் ஒரு சிறிய கேண்டினும் மற்ற சபாக்களில் உள்ள பிரபல சமையல் வல்லுனர்களுக்கு சவாலாக  இல்லாத போதிலும் சுவையான சிற்றுண்டியை வழங்கிக் ​கொண்டிருக்கிறது.

காலட்சேபம் நடத்தும் கோஷ்டி பற்றி -சில வார்த்தைகள்- மிகுந்த கட்டுக் கோப்புடன் உள்ள ஒரு குழு. அனாவசிய ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் மேடையில் அமர்ந்து கருமமே கண்ணாக பாகவதருக்கு உதவி ​, வாங்கிப் பாடி ஒரு நல்ல அருமையான சேவை செய்கிறது. 

கவனித்து, சந்தோஷப்பட்ட மற்றொரு விஷயம் - வந்தவர்களில் கணிசமானவர்கள் இன்றைய இளை​ஞர்கள், இளைஞிகள். நன்கு உன்னிப்பாக கவனித்து, கை தட்டி, தாளம் போட்டு, குறிப்புகள் எடுத்து சில நேரங்களில் தாளத்துகேற்ப்ப நல்ல நடனமும் ஆடுகிறார்கள்.   

சபையின் சேவை தொடரட்டும். மார்கழியின் மற்றொரு பரிமாணத்தை நன்கு அனுபவிக்க ​உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி. .