Monday, September 29, 2014

'ஸ்ரீ ஜானகியுடன்' ஸ்ரீ ராமரைத் தேடி....

புரட்டாசி சனிக்கிழமை , நாள் முழுவதும் பல வைணவக் கோவில்கள் பார்க்கும் வாய்ப்பு. யாரை விடும் இந்த ஆசை? என்னையும் பிடித்தது.

விடியக் காலையிலேயே எழுந்து, சஹஸ்ர நாமம் சொல்லி எல்லாம் நன்றாகவே ஆரம்பிச்சது. 25 பேர் குழு தாம்பரம் தாண்டிய போது ,  வழியில் இருந்த கொஞ்சம் பாதுகாப்பு கெடுபிடியால், எட்டு மணி தாண்டி விட்டது.
In the Van

செங்கல்பட்டு கோதண்ட ராமர் கோவில், ஆஜானுபாகுவான இராமர், பரத சத்ருக்னருடன்-  முதல் ஆனாலும் நிதானமான  தரிசனம்.




அங்கு உள்ள சனீஸ்வரனை ஆண்ட ஆஞ்சனேயரையும் பார்த்து விட்டு வழியில்  டிபன் சாப்பிட மர நிழலைத் தேடிய போது, பக்கத்தில் உள்ள வினாயகர் கோவிலிலிருந்து "இங்கே சாப்பிடுங்கோ" என்று அன்புடன் அழைத்து, ஒன்றுமே எதிர்பார்க்காமல்  எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது நெகிழ வைத்தது. "ஸ்ரீ ஜானகிக்கே" உரித்தான ஒரு சாதுவான ஆனால் மனமும், வயிறும் நிறைந்த டிபனுக்குப் பிறகு  நடையைக் கட்டியவுடன் கிடைத்த முதல் செய்தி "பொன் பதர் கூடம் கோவில் சீக்கிரமே நடை சாத்தி விடுவார்கள்" என்பது தான்.

வண்டியை நேராக பொன் விளைந்த களத்தூர் செலுத்தி கோவில் எங்கே என்று விசாரித்துக் கொண்டு போனால் , யார் எங்களுக்கு வழி சொன்னாரோ அவரேதான் குருக்கள். பழமையான, மூடி இருந்த சன்னிதியைத் திறந்து, விளக்கேற்றி தல புராணத்தை சற்று விரிவாகவே சொன்னார் இளம் குருக்கள்- சாந்தமாகாத பெருமாள்,  சிங்க முகமில்லாத லக்ஷ்மி நரசிம்மர். மூலவர் எப்படி அங்கு வர விருப்பப்பட்டு கருடன் இந்த ஊரை வட்டமிட்டது போன்றவற்றைச் சொன்னதும்- அதிசயிக்கத் தான் வைத்தது.

Pon Vilaintha Kalathur
அடுத்த வந்த மையூர், படு குட்டியான ஒரு கிராமம். கோவிலுக்கு முன்னே உள்ள தெருவில் இருந்த தாழ்வான கூரையுடன் உள்ள திண்ணை வீடுகள் , கிராம வாழ்க்கைக்கு மனதை ஏங்க வைத்தது.

87 வயது குருக்கள் நிதானமாக , ஆனால் கிரயப்படி, தரிசனம் செய்து வைத்தார்- "முதல்ல ஆம்பிளகளுக்குத்தான் பிரசாதம், பொம்மனாட்டிக்கு ஒரு உத்திரணிதான் தீர்த்தம்" - ஆனால் 'நான் எந்த நேரத்தில் யார் கூப்பிட்டாலும் கோவில் திறந்து பகவானை தரிசிக்கச் செய்வேன்' என்றது கேட்கக் குளிர்ச்சியாக இருந்தது.

Maiyur Temple
Outside Maiyur temple
அடுத்துப் போன 'புக்கத்துறை'- கொஞ்சம் பெரிய கோவில். முன்னமேயே போன் பண்ணியதாலோ என்னவோ ரொம்ப அன்பாக வரவேற்று, சிறப்பு அபிஷேக பூஜை முடிந்த ஆரத்தியுடன், சுடச் சுட சக்கரைப் பொங்கல் கொடுத்த - அனுபவம் நினைக்கும்போதே இனிக்கிறது. அங்குள்ள ஆஞ்சனேயர் கொஞ்சம் கொஞ்சமாக வளருவதைக் கண்டு நெடு நெடுவென்று நிற்கும் 'புண்டரீக வரதனை'ப் பார்த்து எல்லோரும் ஒரு பரவஸ நிலை அடைந்து தாமாகவே "குறையொன்று மில்லை" பாடியது ஒரு நல்ல அனுபவம்.

வளரும் ஆஞ்சனேயர்
புக்கத்துறை

அங்கிருந்து கிளம்பி  வண்டியில் உள்ள டீ வீ டீயில், சன் சிங்கரில் குழந்தைகள் பெரியவர்களை விட அதிகம் கொடுத்த உடல், முக பாவனைகளை வியந்து, கவலையும் பட்டுக் கொண்டே வந்ததில் வெய்யில்உரைக்கவே இல்லை. 

கோர்ட்தீர்ப்பு வர ஆரம்பித்த பொழுது நாங்கள் சென்னையிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தள்ளி உள்ள  தென்னாங்கூர் என்ற ஒரு திருத்தலத்தில்,  சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். விவரங்கள் தெரியத் தெரிய, நடக்கும் கலவரங்கள் செல் போன் மூலம் கசியக் கசிய கிலி அதிகரிக்க, ஆண்டவனை நோக்கி கைகளும் தானாக உயரத் தொடங்கியது.

பலவாறு குழம்பினாலும் தென்னாங்கூரில் காலடியெடுத்து வைத்தாயிற்று- பாண்டுரங்கனைத் தரிசித்து விட்டே போகலாமென்று எடுத்தது ஒரு நல்ல முடிவுதான். புரட்டாசி சனியாதலால் திருமலை வேங்கடமுடையானின் அலங்காரம். திருப்பதி போகாமலே தரிசனம் கிடைத்து லட்டும் சாப்பிட்ட திருப்தியுடன் வெளியே வந்தோம்.

தென்னாங்கூர்
தென்னாங்கூர்



வளரும் நிலவரத்தைக் கருதி மீதமிருந்த கூழமந்தலும், உத்திரமேரும் அமைதியாகக் கைவிடப் பட்ட தீர்மானம், மெஜாரிடியில் பயத்துடன் வென்றது

சிலர் இப்பொழுது சென்னை போக வேண்டம் , கொஞ்சம் இருட்டிய பிறகு போகலாம் என்றார்கள். 

சிலர் இப்பொழுதே கிளம்பி எவ்வளவு தூரம் முடியுமோ அவற்றை வெளிச்சம் இருக்கும் போதே கடந்து விடலாம் என்றார்கள்.

 ட்ரைவரோ வண்டி எடுக்க மாட்டேன் என்றார். அதையும் மீறி வற்புறுத்தினால், வழியில் ஏதேனும் ஆபத்தென்றால், நான் இறங்கி ஓடி விடுவேன் என்று பயமுறுத்தினார் கடமை உணர்ச்சி மிக்க ஓடினார் - இல்லை ஓட்டுனர் !

எல்லாவற்றையும் சமாளித்து, ட்ரைவரை கொஞ்சம் மசிய வைத்து ஐந்து மணிக்குக் கிளம்பி, வழியில் எதிர் பார்த்தளவுக்கு ஏதுமில்லை என்றாலும் கொஞ்சம்  திகிலான பயணம் தான் .  கிராமங்களில் வண்டி வேகம் குறையும் பொழுது, அங்குள்ள லுங்கி இளசுகள் வண்டிக்குள் கூர்ந்து நோக்கும் பொழுது, வயிற்றில் சுரந்த அமிலங்கள்  நிறைய. நடுவில் சில குப்பைகள் புகைந்து கொண்டிருந்தன. சில தெரு விளக்குகள் நொறுக்கப் பட்டிருந்தன- ஆனால் இதெல்லாம் நாங்கள் அங்கு கடக்கு முன்னே நடந்த சம்பவங்கள் போல. 

விஷயம் வந்து கொஞ்ச நேரம் ஆனதால், அங்கெங்கே சில காக்கிகளும், தொப்பிகளும் தென்பட்டது கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது. உத்திரமேரூரைக் கடக்கும் போது, குவிக்கப் பட்டிருந்த போலீஸ் "எங்கும்  நிக்காமல் போய்ட்டே இருங்க" என்று அன்புடன் வலியுறுத்தினார்கள்.

வழக்கமாக ஜெக ஜோதியாக மிளிரும் செங்கல்பட்டு -சென்னை நெடுஞ்சாலை விளக்கில்லாமல் இருளில் அழுது வடிந்தும் விரட்டிய வண்டி  செங்கை டோல் வந்ததும் தான் மூச்சு சீரானது. 

தாம்பரம், குரோம்பேட்டை போன்ற எல்லா பெரிய பஸ் ஸ்டாண்டிலும் மக்கள் வெள்ளமாயிருந்தார்கள்- பஸ்களைத் தான் காணோம்

பார்த்த எல்லா நாராயண அவதாரமும் கூட வர, கண்ணன் சாரதியாக ட்ரைவர் ஆக, மாமிகளின் பஜனைக்கும் மற்றவர்களின் அமைதியான ஆனால் பயம் கலந்த வேண்டுகோளுக்கும் பலன் கிடைக்க ஒரு வழியாக ஏழு மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம். தெருக்கள் என்னவோ இரவு பதினோரு மணி போல் காட்சியளித்தது.

தைரியமாக மந்தைவெளியில் இறங்கி 'நம்ப ஏரியாவில ஒண்ணும் பயமில்லை " என்று சொன்னப்போ பிள்ளையார் கோவில் குருக்கள் சொன்னார் " சாயந்திரம் எதையோ போட்டு கொளுத்தினார்கள் " என்று.

ஓம் நமோ நாராயணா !!


Tuesday, September 23, 2014

எட்டாத எழுத்துக்கள்

எனக்கு வந்த ஒரு ஈமெயிலில், இன்றைய  தமிழ் புத்தக உலகின் நிலைமயைப் (ரொம்ப மோசம் தான், ஆனால் இன்னும் தெரிந்தவர்களுக்குச் சொல்லி அனுப்பும் நிலை வரவில்லை) பற்றி கவலைப்பட்டு , தமிழ் நாவல்களின் விற்பனையைப் பெருக்குவதைப் பற்றி பலரின் கவலை தோய்ந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

ஒரு புத்தகத்தை அச்சு வடிவில் வெளியிடுவது ஒரு கடினமான முயற்ச்சி என்று தெரியுமே தவிர அதன் வியாபார அந்தரங்கங்கள் எனக்குத் தெரியாததால் சற்று கவனமாகவே சிந்திக்க முயல்கிறேன்.

முன்பெல்லாம் அனேகமாக எல்லா நல்ல புத்தகங்களும் ஒரு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்தன. 1985ல் சுஜாதாவின் 250 பக்கமுள்ள ' விவாதங்களும், விமர்சனங்களும்' என்ற புதிய புத்தகத்தை இருபது ரூபாய்க்கு வாங்க முடிந்தது. (எங்கள் தேனிலவுக்குப் போகும் வழியில் என் மனைவி  மதுரை இலக்கியப் பண்ணையில் வாங்கி எனக்கு அளித்த பரிசு !)  சில வருஷங்கள் கழித்து  சென்னை புத்தகக் காட்சியில் 'Freedom at Midnight" என்ற பிரபலத்தயும் சுமாரான விலையில் எடுக்க முடிந்தது.

இன்றைய நிலை வேறு. போன வருட புத்தகக் காட்சிக்குப் போய் கிட்டத்தட்ட வெறுங்கையுடனும் , ஏமாற்றத்துடனும் திரும்பினேன். புத்தகங்களை எடுத்து விலையைப் பார்த்ததும் கை சுட்டது.

எண்பதுகளிலேயே திருச்சி பெரிய கடை வீதியில் சுஜாதா, ஆர்தர் ஹெய்லி போன்றோரின் புத்தகங்கள் படு மலிவு விலையில் கிடைத்தன. நான் அங்குள்ள பழைய புத்தகக் கடையில் கண்டெடுத்த பொக்கிஷம் மூன்று ரூபாய்க்கு 'Money Changers" !! இன்றும் , வாசகர்களின் ஆர்வக் கண்ணீரைத் துடைத்து, அவர்களின் புண் பட்ட இதயத்தை ஆற்ற பலர் தயராக இருக்கிறார்கள். என்ன முறைதான் சரியில்லை.

பல பிரபலங்களின் வெளியீடுகள் வந்த சில நாட்களிலேயே மலிவான ப்ரிண்ட் வடிவத்தில் சென்னை அண்ணா சாலையில் அங்கு கடந்து செல்லும் காவலர்கள் பார்வையிலேயே கிடைக்கிறது. இது போதாதென்று சட்ட விரோதமாகவும் புத்தகங்களின் மென் பதிப்புகள் pdf  வடிவில் , இணைய தளங்களில் ஏராளமாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றன. பிளாட்பாரத்தில் வாங்குவதற்க்காகவாவது கொஞ்சமாவது செலவழிக்க வேண்டும், ஆனால் இணய தளத்திலிருந்து இறக்குமதி செய்ய எந்த செலவுமே இல்லை.

போன வாரம் சென்னை தி, நகர்  நடைபாதையில் சமீபத்தில் வெளியான சில பிரபலமான புத்தகங்கள், புத்தம் புதிதாக-  கொஞ்ச மட்டமான , ஆனால் படிக்கக் கூடிய  ப்ரிண்டில் - வெகு சல்லிசான விலையில் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். இப்படிப் பட்ட விற்பனையில் அப்துல் கலாம் தொடங்கி ஹேரி பாட்டர் ., ஸ்டீஃபன் கோஹி வரை அனைத்து ஆசிரியர்களுமே பாதிக்கப் படுகிறார்கள். இது போதாதென்று இப்பொழுது ஈ-புத்தகங்கள் வேறு.

இப்படி மொத்த உலகமே அவர்களுக்கெதிரே திரண்டிருப்பதை பார்க்க  பாவமாய்த்தான் இருக்கு. ஆனால் இதை கதாசிரியர்களோ, வெளியீட்டாளர்களோ உணர்ந்தார் போல் தெரியவில்லை. இன்னும் விலை விஷயத்தில்  கொஞ்சம் உயரத்தில் தான் இருக்கிறார்கள்.

திருட்டு டீ வீ டீயால் திரையுலகமே நசித்துப் போகும் அபாயத்தை பார்த்தாவது இவர்கள் கொஞ்சம் யோசனை செய்ய வேண்டும், இறங்கி வர வேண்டும். ஈ புக் போன்ற எத்தனை கவர்ச்சிக் கன்னிகள் வந்தாலும் புத்தகப் பிரியர்கள் இன்னும் அந்தப் ப்ரிண்ட் வாசனைக்கு மயங்கி விலை கொடுக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள், ஆனால் விலையினால் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதனை உணர்ந்து, புத்தகத் துறையில் உள்ளோர் திருட்டு பதிப்புகள், திருட்டு ஈபுக்குகள் போன்றவற்றை தனக்குச் சாதகமாகத் திருப்ப முயல்வது உசிதம்.

தடாலடியாக விலையைக் குறைத்தால் பாதி பேர் நடை பாதை பக்கம் ஒதுங்கி புத்தகம் தேட மாட்டார்கள். கஷ்டம் தான். ஆனால் காணாமல் போவதை விட இந்த முயற்ச்சி மேல்.

ஈ புத்தகங்கள், பேப்பர் பதிவை விட அதிக விலை என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் இவர்கள் காகிதப் பதிவை நோக்கி ஓடுவார்கள் என்று நம்பினால், கானலைத் தான் துறத்த முடியும்.

இது எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க வேண்டிய நேரம். திருட்டு டீ வீ டீ போன்ற அனுபவத்தால் தோன்றுவது, இதை சட்டத்தை மட்டுமே வைத்து ஒழிக்க முடியாது என்பது தான் . மேல் மாடியை கொஞ்சம் 'சுஜாதா' த்தனமாக யோசிக்க விட்டால், தங்கி  ரசிகர்களைக் கவர் முடியும். நம்பிக்கை தேவை!

Wednesday, September 17, 2014

வளரும் பிள்ளைகள்

என் பொழுது போக்கு வட்டம் , குளத்தில் போட்ட கல்லால் விரியும் வட்டத்தின்  விட்டம்  போல் வளர்ந்து  கொண்டே போகிறது.

முதன்மையாக இருந்த படிப்பது கூட , இப்பெல்லாம், பிறகு வந்த  எழுதுவது, ஆராய்வது, அனுபவிப்பது இவற்றுடன்   தராசில் சமமாக நிற்ப்பது போல் தோன்றுகிறது.

மனத்தில் கனங்கள் குறையக் குறைய, ஆராய்ச்சிப் பார்வையும், ஆராய்ச்சிக்  கூடமும் விரிகிறது. எண்ணங்கள் தெளிவாகின்றன. பதட்டமில்லாமல் நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நாணயமாக அலச முடிகிறது.

பெண்ணைப் பெற்றுப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். என் தகப்பனார் உள்பட அஞ்சு பெற்றும் ஆண்டியாகிப் போகாமல் குடும்ப ராஜ்யம் நடத்திய பலரைக் கண்டு வியந்திருக்கிறேன்.

பெண் தவிர்த்து, பிள்ளைகள் பிறந்த போது சிரித்த பலர் பிற்காலத்தில், தாய் ஒரு மகன் வீட்டிலும் , தந்தை ஒரு மகன் வீட்டிலும் தனித்தனியே கண்ணீர் விட்டதையும் பார்த்திருக்கிறேன்.

பிள்ளையோ, பெண்ணோ அவர்கள் தனித்து காலூன்றும் வரை பெற்றோர்களுக்குத் தவிப்புத்தான். ஒவ்வொரு வினாடியும் கத்தி மேல் தான் நடக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் , சிராய்ப்பு கொஞ்சமாக இருந்தால் கூட எரிச்சல் என்னவோ பல நாட்களாகும் அடங்க.

அன்று வாட்டியது - வறுமை, அறியாமை
இன்று துறத்துவது - செம்மை, அறிவு

அனேகமாக இன்றைய பெற்றோர்கள், அன்று போல் அல்லாது, ஓரளவு படித்தவர்கள்.

சுமார் சம்பளத்தையும், இரண்டாகப் பெருக்கி , செழிப்பை வரவழைத்துக் கொண்டவர்கள்.

இவ்விரண்டு சுகமும், இக்காலப் பிள்ளைகளுக்கு ஒரு செயற்க்கையான வளத்தை மனதளவில் கூட்டி உள்ளது. இதனால் வந்த முதல் வினை, பிள்ளைகளுக்கு சிக்கனமாக  வாழும் சந்தர்ப்பம் கை நழுவியது. எதிர்பாராத, தாற்காலிக சோதனை வந்தாலும் நொந்து போகிறார்கள்.

இன்று உள்ள சாதனங்கள் தூரத்தைக் குறைத்து, நெருக்கத்தைக் கூட்டி உள்ளன.

மகள் ராத்திரி கம்ப்யூட்டர் க்ளாசிலிருந்து வர லேட்டானாலும் கவலைப் பட வேண்டாம் என்று குறுந்செய்தி சொல்லும்.

தாமதாக வீட்டுக்குத் திரும்பும்  ஆண்களை ராத்திரிக்குப் பண்ணிய சாப்பாட்டு ஐட்டங்களை செல் போனில் படமாகக் காட்டியே ஈர்த்து விடலாம்.

வயதான அப்பாவை பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ், கரண்டு பில் போன்ற சமாச்சாரங்களைக்  கட்ட ஓட வைக்க வேண்டாம். ஆபீஸில் காபி சாப்பிட்டுக் கொண்டே வங்கியிலுருந்து செல் போன் மூலமாகக் கட்டி விடலாம்.

இதெல்லாம் நல்ல முன்னேற்றம் தான். ஆனால் , முன்னேற்றத்தின் விலை?

கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னால் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்லிக் கொடுப்பதை,  கேபிள் டீ வீகள், பத்து மணிக்கு மேல் இலவசமாக , பெண்களுக்கு வெட்கமே பட வைக்காமல் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இன்றைய திரைப்படங்கள், தனியாக வரும் போது ஒருவன் மடக்கினால் ஒரு பெண் எப்படி பதிலடி கொடுப்பது என்பதையும் காண்பிக்கிறார்கள். அதோடு நில்லாமல் கொஞ்சம் படித்தவுடன், படிக்காத பெற்றோர்களுக்கு எப்படி கடுக்காய் கொடுப்பது என்பதையும் விலாவாரியாக விவரிக்கிறார்கள்.

அந்தக் காலப் பெண்களை அதிகம் கதைப் புத்தகங்களைப் படிக்காதே என்று போக வரச் சொல்வர்கள். இன்று சொல்வதும் இல்லை, சொன்னால் கேட்பதாகவும் உத்தர வாதமில்லை.

அன்றைய கதாசிரியர்கள் வை மு கோ தொடங்கி , லக்ஷ்மி, சாண்டில்யன் கடந்து  சிவசங்கரி, வாசந்தி, வரை எல்லோரும் ஒரு வரையப்படாத வட்டத்துக்குள்ளேயே உலாவினார்கள்.

பின் வந்த சுஜாதாக்களும் , பாலகுமாரன்களும் தம்மைச் சுற்றி வட்டங்கள் இருந்தாலும்,  அன்றைய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் போல் அவ்வப் பொழுது கோட்டைத் தாண்டிப் போய் வருவார்கள்.

இன்றைய சில எழுத்துச் சித்தாந்தங்கள் இளசுககைக் கவர்ந்தாலும், பெருசுகளுக்கு கலக்கத்தை அதிகம் கொடுக்கின்றன. அனேகமாக முன்பெல்லாம் எவைகளைத் தப்பாக, செய்யக் கூடாததாகக் கருதப்பட்டதோ அவைகளெல்லாம் திருத்தி எழுதப் பட்டிருக்கின்றன. விளையாட்டாகச் சொல்வது வேறு, ஆனால் விட்டில் பூச்சிகளுக்குத் தெரிய வேண்டுமே, இது ஒளியல்ல, வெறும் மினுமினுப்பே என்று!

"எல்லாப் பெண்களுக்கும் முப்பது வயதுக்குப் பிறகு தான் கல்யாணம், அதுவரை முன்பின்னாக இருக்கலாம்..." இப்படி  ஒரு எழுத்து !

எழுதுவது அவர்கள் தொழில்.

அதற்க்கு அவர்களின் உபகரணம் 'எழுத்துச் சுதந்திரம்'.

இன்றைய நிலைமையில் இதற்க்கு எதிராக ஒன்றும் எடுபடாது.

ஆனால் கவலைப் பட வேண்டியவர்களுக்குத் தான் வயிற்றில் அமிலம் வார்க்கும். பேனா பிடித்தவர்களுக்கு கல்லா கட்டினால் சரி.

தொலைக் காட்சியைப் பார்த்தால் கருத்துச் சுதந்திரம்.
புத்தகங்களைத் திறந்தால் எழுத்துச் சுதந்திரம்.

ஆனால் எவற்றுக்குமே எல்லை என்று ஒன்று கண்ணுக்கே படவில்லையே? இது எப்பொழுது ஓயும்?

ஓயுமா?

சுதந்திரம் என்ற வார்த்தையைச் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறோமா? அல்லது தெரிந்தே வினையுடன் விளையாடுகிறோமா??

இவற்றையெல்லாம் எப்படி அந்த பிஞ்சுகளுக்குத் தெரிவிப்பது? முன்பு போல் அதுகளுக்கு நேரம் கூட  இல்லையே?

இந்த எழுத்து என்ற போதையில் மயங்கி விடக் கூடாதே?

இனம் தெரியாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சின்னஞ் சிரிசுகள் இப்படிபட்ட லாகிரி கருத்துக்களில் தளர்ந்து தவறாக வளைந்து விடக் கூடாதே?

யாருடைய கவலை இது- ஒரு தகப்பனுக்குத்தான் , பெற்ற தாய்க்குத்தான்!

முன்பெல்லாம் உட்கார்த்தி வைத்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பார்கள். இப்பெல்லாம் அவர்களாகவே பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறார்கள். எந்தப் பக்கம் சாயப் போகிறார்கள் என்பதை கவனிப்பதுதான் பெற்றோர்களின் வேலையாகி விட்டது.

இப்பெல்லாம் பிள்ளைகளை யாரும் வளர்ப்பதில்லை. அவர்களாகவே வளருகிறார்கள்.

சைக்கிள் கற்றுக் கொடுப்பது போல் கூடவே ஓடத்தான் வேண்டும், விழுந்தால் பிடித்துக் கொள்ள.

பின்ன என்ன , கதாசிரியார வரப் போகிறார்?

பெற்றோர்கள் ,பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒரு கொடி போல், கூடவே செல்கிறார்கள், அவர்கள் தேவைப் பட்டால் சாய்ந்து கொள்ள, பிடித்துக் கொள்ள.

வருங்காலம்,  பிள்ளைகளை விட பெற்றோர்களுக்குத் தான் நிறைய சவால்களை முன்னிருத்தி உள்ளது.

Friday, September 5, 2014

கண்ணுக்குத் தெரியாத ஆசான்கள்

ஒவ்வொரு செப்டெம்பர் ஐந்தாம் தேதியும் , சர்வபள்ளி ராதாகிருஷ்னன் அவர்களின் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக அனுசரிக்கப் படுகிறது.

இந்நாளில் நமக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசான்களுக்கும் , நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.

பள்ளிகளிலும், கல்லூரிகள் மட்டும் தான் நமக்கு ஆசான்கள் இருக்க வேண்டும் என்று தேவை இல்லை. இவற்றைத் தாண்டி , நடந்து வரும் பாதையில் எனக்கு வழி காட்டிய சிலரை நினைவு கூர்ந்து பார்க்க எடுத்த முயற்ச்சி தான் இது:

ஆறாம் வகுப்புப் படிக்கும் போது, உணவு இடைவேளையில் விளையாடும் சடுகுடு சொல்லிக் கொடுத்த முதல் வாத்யார் இல்லாத ஆசான் சங்கர்.

திட்டிக் கொண்டும், இடுப்பில் குத்தி என்னை நிமிர வைத்துக் கொண்டும், மூச்சிரைக்க கூட ஓடி வந்து, இன்றைய பட்டினப் பாக்கத்தில் அன்று சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த என் அண்ணன்.

வருடாந்திர விடுமுறையின் போது மற்ற விளையாட்டுக்கள் சலித்துப் போக YMIA சேர்ந்து அந்த சில மாதங்களில் நன்கு டேபிள் டென்னிஸ் கற்றுக் கொடுத்த எஸ். ஆர் என்ற ராமச்சந்திரன்.

அந்தக் கால பதினோராம் வகுப்பானாலும் முகமே சுளிக்காமல் எல்லா ஆங்கில வார்த்தைக்கும் அர்த்தம் சொன்ன அப்பா தான் மறக்க முடியாத என் ஆங்கில வாத்தி. அன்று அவர் கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை  இன்றைய  அகராதிகளில் தேடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் கிடைக்கவில்லை- வழக்கொழிந்து விட்டதாம் !!

பௌதீக லேப் உள்ளே ஒன்றும் புரியாமல் ரெசொனஸ் காலம் என்ற உபகரணத்தோடு போராடிக் கொண்டிருந்த போது வலிய வந்து உதவிய சக மாணவன் சௌரி ராஜன்.

பலருக்குக் கசப்பான கணக்குப் பாடத்தை என்னுள் புகுத்தி, அதனால் என்னைச் செழிக்க வைத்த என் அண்ணன் என்னை அசத்திய ஆசிரியர். எனக்குத் தெரிந்து ஆசிரியர் தொழிலுக்குத்தான் வர வேண்டும் என்று, வந்த வங்கி ஆபீசர் வேலையையும் விட்டு உதறிய அவர் தான் , என் நினைவுக்குத் தெரிந்த வரை எங்கள் குடும்பத்தில் தொழில் பக்திக்கு வித்திட்ட ஒரு சரியான முன்னோடி. .

என் புது சுசுகி வந்த பின்னும் தன் வண்டியிலேயே எனக்கு ஓட்டச் சொல்லிக் கொடுத்த நண்பன்  நைனி. பின்னால் ஆங்கிலப் பேராசிரியரான அன்னாரின் பாடம் என்னை அதே சுசுகியை  26 வருஷம் சுகமாக தமிழ் நாடு முழுக்க  ஓட்ட வைத்தது.

வங்கியில் நுழைந்த சில மாதங்களில் அதன் பால பாடங்களையும், வாடிக்கையாளர்களை சமாளிக்கும் திறனையும் ஊட்டிய பல நண்பர்களும் பிற்கால முன்னேற்றத்துக்கு அன்றே விதைத்தனர். அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சில நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்த நெல்லையப்பன் போன்ற அதிகாரிகள் சிலர்.

கும்பகோணத்துக் காவேரியிலும் இறங்க தைரியம் அளித்த மெரீனாவில் நீச்சல் கற்றுக் கொடுத்த ஜூடு ரொசாரியோ என்னை எங்கும் கரையேற்ற உதவியிய நீச்சல் வாத்தியார்.

பல ஆண்டு வங்கியில் உழன்றபின் , மென்பொருள்  நிறுவனங்களில் கால் பதித்த பொழுது, கை கொடுத்த பல உள்ளங்கள் நினைவுக்கு வருகின்றன. வீ எஸ் எஸ் முதல்,  நெட்வொர்க்கில் நகர்ந்து பல உபகரணங்கள் வரை சொல்லிக் கொடுத்து உதவிய எத்தனை உள்ளங்கள், நண்பர்கள். ஐ என் ஆர்களை விட , வாழ்க்கையில் இவை தான் உயர்ந்த, உண்மையான சம்பாத்தியங்கள் !

ஜாவாவிலுருந்து, விசுவல் பேசிக் வரை உரையாடியே உருவேற்றிய அந்த 'வினோத' மான இளைஞர். அவரிடம் பயின்ற பல நாட்களை நான் பல இரவுகளில், பல நாடுகளின் நடு நிசியில் கூட  நினைவு கூர்ந்திருக்கிறேன்.

எல்லாம் போதுமென்று திருப்தியாக ஓய்ந்த பின்னும், வலைகளின் சூட்சுமங்களையும், அதிலுள்ள குற்றங்களை அறிந்து கொள்ளும் போதும் , நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்த, இங்கு தன் பெயர் வருவதைக் கூட விரும்பாத சில  'மன்னர்'களும் உண்டு.

இவற்றையெல்லாம் விட, எத்தனை முறைதான் சொல்லிக் கொடுப்பது என செல்லமாகக் கோபித்துக் கொண்டே திரும்பத் திரும்ப ஆண்ட் ராய்ட் போன் மற்றும் ஐபேடிலிருந்து, மேக் மற்றும் ம்யூஸிக் சிஸ்டம் வரை அனைத்திலும்  உள்ள அத்தனை நுணுக்கங்களையும் என் மண்டைக்குள் இன்றும் புகட்ட முயற்ச்சிக்கும்  வீட்டிலேயே உள்ள, பயமுறுத்தாத டீச்சர், என் செல்ல மகள் !!

என் சிற்றரிவுக்கு மேலாக ஒரு அணுவாவது சொல்லிக் கொடுத்த இவர்கள் கூட என் ஆசிரியர்கள்தான்.

இப்படிப்பட்ட  ஆசிரியர்கள் இருப்பதால் தான், சில கரிக்கட்டிகள் பட்டை தீட்டப் பட்டு வைரங்களாகின்றன, சில மக்குகள் மதிக்கப்படுமளவுக்கு முன்னேறுகின்றனர்.

வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கத்தான் எவ்வளவு பேர் தயாராக இருக்கிறார்கள்.  நமக்குத்தான் பொறுமையும் , அறிவும் தேவை போல.

எனக்குத் தெரியாததைக் கற்றுக் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி !
ஓம் குருப்யோ நமஹ !