Thursday, August 28, 2014

கஸ்டமரும் கணபதியும்

இன்று காலை மயிலை வழியே போகும் போது ஊரே விழாக்கோலத்தில் இருந்ததது. கடை வீதி முழுவதும் ஜனம் தான்- காலை 11 மணிக்கே. சாதாரணமாக சாயங்காலத்தில் தான் கூட்டம் அம்மும்- இன்று காலையே. தெற்க்கு மாட வீதி முழுக்க ஜனங்களும் அவர்களுக்காக தெரு வியாபாரிகள் போட்ட குப்பையும் !

மாவிலை உதிரிகள், கரும்பிலிருந்து வெட்டப் பட்ட தோகைகள், துயிலுறியப்பட்ட வாழைத்தாரின் கட்டைகள், எப்பொழுதுமே இருக்கும் வாழை இலைகளின் சொச்ச மிச்சங்கள்- இப்படி குப்பை தெருவையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது , இன்று காலை முக நூலில் படித்த வாசகம் தான் ஞாபகத்துக்கு வந்தது.

In UK, people walk to the left of the road.
In India, people walk on what is left of the road

விஷயம் மாட வீதியில்  இல்லை, அதற்க்கு கொண்டு வந்து விடும் சிறு தெருக்களில் தான். இது வரை இருந்ததா என்றே தெரியாமல் இருந்த சின்ன சின்ன பிள்ளையார் கோவில்கள் கூட , பூ பூத்திருந்தது. வெள்ளை அடித்து, பந்தல் போட்டு, தோரணம் கட்டி, பகலிலேயே கலர் கலராக விளக்குகள் எரிய பிள்ளையாரை மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராகும் மணமகன் போல் ஜோடித்துக் கொண்டிருந்தார்கள். இன்றிலுருந்தே முழங்கத் தொடங்கிய ஒலி பெருக்கிகள் , எம்ஜீ யாரின் "என்னைத் தெரியுமா" என்று அதட்டி சுய அறிமுகம் செய்து கொண்டது. எனக்கென்னவோ அந்தப் பாடல்களெல்லாம்  இதையெல்லாம் மெய் வருத்தம் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்து "இவ்வளவு நாள் இங்கேயே தானேப்பா இருந்தேன். இப்ப என்ன திடீர்ன்னு" என்று பிள்ளையார் கேட்பது போல் இருந்தது.

இதில் பல பிள்ளையார் கோவில்களை நான் அனேகமாக தினமுமே பார்த்திருக்கிறேன். கதவு திறக்காமல்,  ஒரு விளக்குக் கூட இல்லாமல் , திறக்காத இரும்பு க்ரில் கதவு வழியாக, முதியோர் இல்லத்து தாத்தா, பாட்டிகள் மாலையில் வரும் உறவினர்களுக்காக காத்திருப்பது  போல் பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் இந்த  இரண்டு நாட்களுக்கும் அவருக்கு யோகம் தான். அபிஷேகமென்ன, நீலத்தில் வெல்வெட் சொக்காய் என்ன , மணக்கும் பத்திகளென்ன, அவ்வப் பொழுது விளக்குத் திரிகளை தூண்டி அணையாமல் பார்த்து கொள்ளும் மாமிகளென்ன, மணக்கும் சுண்டலென்ன- ஒரே குஷி தான். அவருக்கும் தெரிந்திருக்கும்- இதெல்லாம் ரெண்டு நாள் தான் , அப்புறம் தன்னையும் க்ரெச்சுல கொண்டு போய் விட்டுடுவாங்கன்னு.

இதெல்லாம் பாத்தா, எனக்கு சில வங்கிகளில் வருஷா வருஷம் நடக்கும் 'வாடிக்கையாளர்கள் தினம்" தான் நினைவுக்கு வந்தது.

சாதா நாட்களில் உள்ளே வரும் சில பேரை செல்லமாக பெயர் வைத்து கிட்ட வந்தவுடன் , ப்ளாஸ்டிக் புன்னகை பூப்பார்கள்.

ஒரு கட்டு பாஸ் புக்குடன் வரும் பக்கத்து மளிகைக் கடை பையனை எதிரியைப் போல் பார்த்து "நாளைக்குத்தான் கிடைக்கும்" என்பார்கள். ஆனால் அவனே இன்றைய தினம் கடைசி வரிசையில் வெட்கப் பட்டுக் கொண்டே நாற்காலி நுனியில் உட்கார்ந்து 'கலர்' குடித்துக் கொண்டிருந்தான். விவேக் சொல்வது போல் "அட ஆண்டவா, என்னென்னவோ பண்றாங்களே, இதெல்லாம் அனுபவிக்கறதா, வேண்டாமா" என்று மஹா குழப்பத்தில் இருந்தான்.

எப்பவுமே சாப்பாட்டுக்குக் கிளம்பும் போது வரும் 'கிழம்' என்று செல்லமாக விளிக்கப்படும் பெரியவர், இன்று 'சீனியர் சிடிசன் வரிசையில் முதலாக உட்கார்ந்து, பல் இல்லாத வாயில் ஒட்டு பக்கோடாவை ஊற வைத்துக் கொண்டிருந்தார்.

அன்று வீட்டுக்கு வந்து மணியடித்து "பணம் உங்களுக்கு ஜாஸ்தி கொடுத்த மாதிரி இருக்கு . செக் பண்ணுங்கோ என்று அதட்டலாகச் சொன்ன கேஷியர் , மறுபடியும் இன்று வீட்டுக் கதவைத் தட்டியவுடன் பயந்தே போய்ட்டார். நான் இன்னிக்கு கேஷே எடுக்கலையே" என்று பயந்து சொன்னவரிடம் "இல்லை சார். நாளைக்கு கஸ்டமர் டே. கூப்படலாம்னு வந்தோம்" என்று சொன்னவர்கள் போனப்புறம் , கொஞ்சம் பஃப் அடித்துக் கொண்டார், எகிரிய மூச்சை சரி செய்து கொள்ள.

இதே போல் தான் கணபதியும் இன்று மூலைக்கு மூலை உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

என்ன ஒரே வித்தியாசம் தான்.

கணபதி இன்று வந்திருந்து, கடைக்கண் திறந்தால் போதும் என்று சிலர் பய பக்தியுடன் இருப்பார்கள்.

ஆனால், வாடிக்கையாளர்கள், வந்திருக்கும் மேலதிகாரிகள் முன்னே வாய் திறந்து விடுவார்களோ என்ற பயம் சில அலுவலர்களிடையே.

அவ்வளவுதான் !!




Saturday, August 16, 2014

காலையில் மயிலை

கிட்டத்தட்ட அறுபது வருஷங்களாக மயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமை இருந்தாலும், இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்குன்னு இன்று மறுபடியும்  தெரிய வந்தது .

அதிகாலை கோவில் என்பது எப்பவுமே எனக்குப் பிடித்த ஒரு விஷயம். ஏற்கனவே நிறைய மார்கழிக் காலைகளைப்  பார்த்திருந்தாலும், இது வேறு அனுபவம்.  எரிக்கும் கோடையானாலும், அந்த அதிகாலை இளங்காற்று வியர்வையை ஓட்டி விடும். அந்த இதமான சில்லிப்பின் அரையிருட்டில், நெய் தீபத்தின் ஒளியில், சாம்பிராணி புகை நடுவில் ஸ்வாமி தரிசனம் என்பது அனுபவித்துதான் தெரிஞ்சுக்க வேண்டியது- படித்தல்ல. அதுதான் இன்று நான் கண்டது.

என் சுந்தரத் தோழன் ஒருவன்  தூண்டுதலினாலே காலை நாலு மணிக்கு எழுந்து , சில மழைத்துளிகளையும் கண்டு கொள்ளாமல், அஞ்சரைக்கு கபாலி கோவில் வாசலில் ஆஜர். சிறு கூட்டம் , வழக்கமாக தினமும் வருபவர்கள் என்று அப்புறம் தெரிய வந்தது.

எத்தனை முறை இந்தக் கோவிலுக்குப் போயிருந்தாலும், இன்று தான் எல்லா ஸ்வாமிக்கு முன் ஒரு அலுமினியக் கதவு இரவில் திரை போல் போட்டிருப்பதைப் பார்த்தேன்

ஓதுவார் திருப்பள்ளியெச்சி பாடி , பள்ளியறைக் கதவைத் திறந்த போது ஈஸ்வரனும் கற்கபமும் அற்புத புஷ்பக் குவியலூடே தரிசனம். அதே நேரம் கற்பகாம்பாள் முன் இருந்த திரையும் விலகி அம்பாளுக்கும் தீப ஆராதனை- மெய் சிலிர்த்தது.

ஒரு ப்ராஜக்ட் மானேஜ்மன்ட் துடிப்புடன்  சில குருக்கள்கள் அருகில் இருந்த ஒரு சின்ன வெள்ளி பல்லக்கை அலங்கரிக்க, அதே நேரத்தில் அம்மன் சன்னிதி வாசலில் ஒரு பசுவையும், கன்றையும் நிறுத்தி அமைதியான கோபூஜை. தீபாராதனை மணி கேட்டு மிரண்ட கன்றை ஒரு தட்டு நிறைய பழம் கொடுத்து அமைதிப் படுத்தினார்கள். இதற்குள், பல்லக்கு தயாராக பள்ளியறையில் ஸ்வாமிக்கு மறுபுறம் இருந்த , ஸ்வாமி பாதத்தை அதனுள் வைத்து எல்லோரும் ஒன்று சேர சிவபுராணம் பாடி கோவிலுக்குள் ஒரு முறை வலம் வந்தது ஒரு புதிய அனுபவம். அப்படியே ஈஸ்வரன் சன்னதிக்குள் போய் உடனே தீபாரதனை செய்ய , அங்கு ஒரு பெரிய ஐதீகம் நிறைவேற்றப் பட்டது. அதாவது, ஸ்வாமியை அம்பாளின் சந்நிதியிலுருந்து  கொண்டு வந்து மீண்டும் அவரின் ப்ரஹாரத்திலேயே சேர்ப்பித்தார்கள்.

இந்தச் சிலிர்ப்பிலுருந்தே இன்னும் விலகாத நிலையில் அருகிலிருந்த வேதாந்த தேஸிகர் கோவிலிலுக்கு நகர்ந்தோம். அங்கும் கோபூஜை நடக்க,  நின்ற கோலத்தில்  பெருமாள் திவ்ய தரிசனம். ஆனால் பெருமாள் கோவிலில் எல்லாமே கொஞ்சம் நிதானமாகத்தான் நகர்ந்தது. அங்கு உணர்ந்த அவசரம் இங்கு காணவில்லை.

பிறகு சாயிபாபா கோவிலுக்கு வந்த போது நன்றாக விடிந்திருந்தது. ஆற அமர சாய் பாதத்தைத் தொட்டு வணங்கி பிரார்த்திக்க முடிந்தது. கொடுத்த சூடான ப்ரசாதத்தை கொஞ்சமாக வாங்கிக் கொண்டு சற்று நேரம் நேற்று ஹிந்துவில் வந்த கோமதி மெஸ்ஸைத் தேடி அலைந்து , பிறகு ராயர் மெஸ் வந்து செட்டில் ஆனோம்.

 பாரிமுனையிலிருந்து வந்திருந்த ஒரு  வணிகக் கும்பல் உள்ளே துவம்சம் செய்யக் காத்திருந்தோம். அப்பத்தான் வாக்கிங் போய் சில கலோரிகளைக் களைந்து, பொங்கல் , மெது வடை மூலமாக இன்னும் ஏகப்பட்ட கலோரிகளைச் சம்பத்தித்து அந்தக் கும்பல்  நகர்ந்தவுடன் உள்ளே போனோம். "வாங்கோண்ணா"வோட கேட்காமலே வைத்த பொங்கலில் ஆரம்பித்து காபியுடன் முடித்து பில்லைப் பார்த்தபோது தான் தெரிந்தது, இங்கு ஏன் இன்னும் கும்பல் என்று ! 'புரசவாக்கத்திலேந்து வரோம் சார்' என்றார் பக்கத்து சீட் காரர்.

வீடு திரும்பும் போது "என்ன ஒரு அற்புதக் காலை" என்று தோன்றியது. ஹரியையும் சிவனையும் பார்த்து மனதை நிறைத்து, வயிற்றையும் நனைத்த இந்த அனுபவம் சென்னையில் இங்கு மட்டும்தான் கிடைக்குமோ என்று கூட வியக்க வைத்தது. தூரத்து கோபுரத்தில் சில தென்னைகளூடே தெரிந்த "மயிலையே கயிலை" என்ற பலகை என் எண்ணத்தை ஆமோதித்தது போலிருந்தது.