Sunday, May 26, 2013

டீ எம் எஸ்

"சட்டி சுட்டதடா . . . . கை விட்டதடா " என்ற ஒலியை மீறி சமயலுள்ளிலிருந்து ஒரு ஓங்கிய குரல் " டேய், வெள்ளிக்கிழமையும் அதுவுமா காலேல, அமத்துடா அந்த ரேடியோவை" - அம்மா.  இது மட்டுமல்ல- "போனால் போகட்டும் போடா" , "வீடு வரை உறவு"- இப்படிப் பல பாடல்களுக்குத் தடை வீட்டில். என் முதல் அறிமுகம் அந்தக் குரலுக்கும், அபசகுனத்துக்கும், ரேடியோவுக்கும்.

ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல் என் அண்ணனின் முதன் சம்பளத்தில் வாங்கிய, ஒரு மூலையில் மஞ்சள் துணி போர்த்திய அந்த பிலிப்ஸ் ரேடியோவில் கேட்ட பல பாடல்கள் பாடியதென்னவோ "டீ. எம்.எஸ், பீ சுசீலா"தான். வேற பெயரே தெரியாது. மிஞ்சிப் போனால் "பீ. பீ எஸ், எல்.ஆர், ஈஸ்வரி" - அவ்வளவுதான்.

கர்னாடிக்கோ, வெஸ்டெர்னோ, குத்துப் பாட்டோ, எதுவானாலும் அவர் பாடுவார். எம், ஜீ. ஆரோ, சிவாஜியோ, ரவிச்சந்திரனோ யாருக்கும் அவர் தான் குரல் கொடுப்பார். அழகிய தமிழ் மகள் இவள், ஒரு ராஜா ராணியிடம், நிலவு ஒரு பெண்ணாகி போன்ற துள்ளல் பாடல்களுக்கும் அவர் குறைவு வைக்கவில்லை. பாட்டும் நானே, மாப்ளே போன்ற கர்னாடகத்தையும் விட்டு வைக்கவில்லை. தவப் புதல்வனில் உஷா உத்துப்புடன் பாடிய அன்றைய மேலை நாட்டுப் பாடலிலும், முத்துக் குளிக்க வாரீகளா,   என்னடி ராக்கம்மா போன்ற குத்துகளிலும் அவரின் திறமையால் ஜொலித்தார்.

இருந்தும் அவருடைய சோகப் பாடல்கள் தான் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டன. யாரால் மறக்க முடியும் அவரின் கண்ணீர் வரிகளை?

பாசமலர் பார்த்து, தியேட்டரில் நான் அழுததாக என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அது கதைக்காகவா, பாட்டுக்காகவா என்று இது வரை தெரியவில்லை.

அக்காலத் தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சிவாஜி - எம்ஜீயார் நடிப்பா, வாலி-கண்ணதாசன் வரிகளா அல்லது இவரின் குரலா என்ற முடியாத வாதம் இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

அவர் வீட்டுக்கருகாமையில் வசிப்பதால், தினமும் காலை நடையின் போது அவர் வீட்டை கடக்கும்போது ஒரு சில வினாடிகள் மனம் நினைக்காமல் இருந்ததில்லை. ஒரு விதத்தில் இந்த முடிவு சில மாதங்களாக நான் எதிர் பார்த்துகொண்டிருந்ததுதான். தொண்ணூருக்கு மேல் எதிர்பார்ப்பது, ஒரு ரசிகனுக்கு வேணும்னா ஆசையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு நல்லதல்ல. இருந்தும் அது நம்மைத் தாக்கும்பொழுது, மனம் கனக்காமலிருப்பதில்லை.

இந்தக் கால இளம் ரசிகர்கள் சிலருக்கு அவர் பெருமை தெரியவில்லையென்றால் தப்பில்லை. இது எவர் குற்றமுமில்லை.  அவர் பாடியது போல் மனிதன் மட்டுமில்ல காலமும் மாறித்தான் விட்டது.

இன்று காலை அவர் வீட்டுப் பக்கம் சென்றால் ஒரே கூட்டம்- போலீஸ். இறுதி பயணத்துக்குத் தயாராகும் டீ.எம். எஸ்சுக்கு நான்  "அந்த  நாலு பேருக்கு நன்றி " என்று சொல்லி. தள்ளி இருந்தே விடை கொடுத்தேன்

அவர் பூத உடலை எரித்தாலும் ஆட்டோக்களிலும், மொஃபஸல் பஸ் நிலயங்களிலும், பழய டேப்பில் அவர் என்னமோ தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கப் போகிறார். "எங்கே நிம்மதி  எங்கே நிம்மதி" என்றவருக்கு வழி கிடைத்துப் புறப்பட்டுவிட்டாரோ!

 கொஞ்ச காலமாகவே டீ. எம்.எஸ், ராம மூர்த்தி, பீ.பீ.எஸ் போன்ற  தூண்கள் நிலை குலைவது தமிழ் இசையின் துரதிர்ஷ்டமே.






1 comment:

  1. Ramesh Gopalaswamy commented on 26-May-2013:

    " well written Kapali... It was touching this morning when I saw some of the young singers assembled at TMS residence singing "இரவல் தந்தவன் கேட்கின்றான் -- இல்லை என்றால் அவன் விடுவானா?"

    Back in 1981 when Kanndasan died, TMS gave a eulogy: "இன்னொரு கண்ணதாசன் வரலாம் ; இன்னொரு MGR Sivaji வரலாம். இன்னொரு விஸ்வநாதன் ராமமுர்த்தி வரலாம்; இன்னொரு TMS P suseela வரலாம் -- ஆனால் எல்லாரும் சேர்ந்து ஒரே சமயத்தில் இருந்தது என்பது இனிமேல் நடக்கவே நடக்காதது"

    As you rightly mentioned, it is very sad that these doyens are falling like nine pins in a short span of time.."

    ReplyDelete