ஏப்ரல் கடைசி- அனேகமாக எல்லா ஸ்கூலும் இன்னும் சில தினங்களில் கோடைக்காக மூடி விடுவார்கள், பசங்களுக்குக் கொண்டாட்டம்தான்.
எங்கள் காலத்தில் நாங்கள் உடனே கிளம்பி விடுவோம் டால்மியாபுரத்துக்கோ அல்லது கண்டனூருக்கோ.
பின்னது ஒரு நல்ல பொட்டை கிராமம் அந்தக் காலத்தில். சின்ன ஊர், கொஞ்சமே தெருக்கள் அதில் நிறைய வீடுகள்- முழுக்க செட்டியார்கள். கல கலவென சிரித்துப் பழகும் அவர்களிடம் உண்மையான சந்தோஷமும், நட்பும் வெளிப்படையாகத் தெரியும்.
அந்த ஊருக்குச் செல்ல ஒன்றும் பெரிய பெரிய காந்தங்கள் இல்லை. இருந்தாலும் காலை எழுந்தவுடன் அருகிலுள்ள கண்மாயில் போய் மணிக்கணக்கில் குளிக்கிறேன் பேர்வழி என்று ஆட்டம்.
பின் சாப்பாட்டுக்குப்பின், வெளியே பட்டை உரிக்கும் வெயில் தெரியாமல் வீட்டின் இரண்டாவது முற்றத்தில் கேரம் போர்டு அல்லது ட்ரேட் கலாட்டா. அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளெல்லாம் இங்குதான் குடி- அதெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது.
மதியம் இரண்டு மணிக்கு பெரியம்மா எல்லோரையும் வட்டமாக உட்கார வைத்து கையில் கவளம் கவளமாகக் கொடுக்கும் சில்லென்ற தயிர் சாதம், மாவடு - டிபனாம்- ஆனால் அமிர்தமாக இருக்கும்.
நான்கு மணியடித்தால் என் பெரியப்பா - அந்தக் கால ஸ்கூல் ஹெச். எம்- சகிதம் நீண்ட நடை, அனேகமாக ரயில்வே ஸ்டேஷனில் முடியும். ரயில்களை வரவேற்று, வழியனுப்பி விளையாடுவோம்.
இல்லேன்னா, கண்மாய் பக்கத்தில் உள்ள வையக்கரை என்ற அடர்ந்த தோப்புக்குப் பயணம். தோப்பில் கையைத் தூக்கினால் மாங்காய் இடிக்கும். மாம்பழங்களை தின்னப் பொறுமை இல்லாமல் ஒரு ஓட்டை போட்டு சாற்றை உரிஞ்சுவோம்.
இரவு சாப்பாட்டுக்குப் பின் வாசலில், நிலா வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டிலிலோ அல்லது திண்ணையிலோ வெகு நேரம் வரை கதை கேட்டு விட்டுத் தூக்கம்.
இதன் நடுவில் ஒரு நாள் சினிமா. கிராமத்து டென்ட்டு கொட்டாய். இடை வேளையில் சூஸ் பெர்ரி. கொட்டும் கோடை மழையில் அன்று பார்த்த ' நான்' சினிமா இன்று நினைத்தாலும் டவுசரின் ஈரம் ஒட்டுகிறது
இப்படியே ஒரு மாதம் போனாலும் கிளம்பும் தினத்தன்று துக்கம் தொண்டையை அடைக்கும்.
இன்றைய நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அன்று டீ வீ இல்லை. இருக்கும் ஒரே ரேடியோ என் பெரியப்பா வசம். அது அருகில் இல்லாவிட்டால் அவர் தூங்க மாட்டார். இங்லீஷ் நீயூஸ் கேக்கலேன்னா அவருக்கு மறுநாள் மலச்சிக்கல் உறுதி -அவ்வளவு ஒட்டுதல். நேரு இறந்தபோது கூட அவர் மாடியில் சேதி கேட்டு கீழே இருக்கும் எங்களுக்கு ஒலிபரப்புவார்.
டெலிபோனா- அப்டீன்னா?
வீட்டில் உள்ள ஒரே மின் விசிறி பெரியப்பா அல்லது பெரியவர்களுக்குத்தான். குழந்தைகள் அதை எதிர் பார்ப்பதே கிடையாது. பின்ன கரண்ட் எதுக்கு? அது இருந்தா என்ன- போனால் என்ன?
ஒண்ணு கவனிச்சேளா- மே மாதத்திலும் கண்மாயில் நிறைய தண்ணீர்.
அந்தக் காலத்தில் நிறைய இருந்தது - தண்ணீர், மின்சாரம், பெரிய மனஸு- சந்தோஷம்
இப்ப இருக்கறது- பவர் கட், கேன் தண்ணி, கேபிள் டீ வீ, செல் ஃபோன் - ஐயையோ விருந்தினர்களா!
எதைக் கொடுத்து எதை வாங்கியிருக்கிறோம்?
ஆனால் எப்பவுமே நேற்று நன்றாகத்தான் இருக்கிறது. இன்றே அனுபவித்து விடலாமே?