முதன் முறையாக நேற்று கோர்ட்டுக்குப் போனேன் கைதியாகவோ இல்லை ஹெல்மெட் போடாததற்க்காகவோ இல்லை. என் நண்பன் நுகர்வோர் கோர்ட்டில் யாருக்கெதிராகவோ வழக்குப் போட, அது வாய்தா வாங்கி வாங்கி நேற்று போயே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட, இப்பொழுது பார்த்து நண்பன் ஆஸ்பத்ரியில் படுக்க, அவன் சார்பாக ஒரு கடிதம் கொண்டு போனேன்.
பயந்து கொண்டே கொஞ்சம் பதை பதைப்புடன் வீட்டருகே உள்ள கோர்ட்டுக்கு 10 மணிக்கு சென்றேன். ஏகப்பட்ட நோட்டீஸ் ஒட்டியிருந்த போர்டை தாண்டி ஒருவர் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தார். திரும்பி செல்லில் பேசிக்கொண்டே கண்களால் என்ன என்றார். நான் சொன்னது அவருக்குப் புரியாததால் போனை மறைத்து கோர்ட் ஹாலில் காத்திருக்கச் சொன்னார். அரைஇருட்டான பெரிய ஹால் - நிறைய காலி நாற்காலிகள் - ஒவ்வொருவராக வக்கீல்கள் வந்து கொண்டிருந்தார்கள். வயசானவர், கோட்டு போட்டு செருப்புப் போட்டவர், ஆண்ட்ராய்ட்டுடன் இளைஞர், வெற்றிலைச் சாறு கீழே விழாமல் இருக்க வாயை வான் நோக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயது வேட்டி கட்டிய வக்கீல், ஜீன்ஸ் போட்ட இளைஞீ - இப்படி பலர்.
சினேகிதன் சொன்னது பென்ச்சு கிளார்க்கிடம் லெட்டெரை கொடுத்துட்டு நீ ஓடியே போயிடலாம்னு. ஆனால் என் நேரம், பென்ச்சு க்ளார்க்கு கவுத்துட்டார்- அவர் மச்சினிக்கு சீமந்தமோ இல்லை அவருக்குத்தான் முழங்கால் வலியோ தெரியவில்லை- சரியாக திங்கள் கிழமை பார்த்து லீவடிச்சுட்டார். என்னைப் பார்த்து உங்க கேஸ் நம்பரைக் கூப்பிடும்போது நீங்களே கடுதாஸியைக் குடுத்துடுங்கோன்னார்கள்.
மெதுவாக ஏற்றிய உஷ்ணம் திடீரென்று "ஸைல.....ன்ஸ்" என்ற உரத்த குரலால் எகிரியது. ஒரு டவாலி முன்னே வர, பின் கம்பீரமாக டை கட்டிய நடுத்தர வயது , பார்த்தாலே "ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்" என்ற நீதிபதி முறைப்பாக உள்ளே வந்து அனைவரது வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டே உள்ளே சென்றார். சிரிது நேரத்தில் மறுபடியும் வணங்கி காந்தி படத்தி முன் அமர்ந்தார். உடனே பாதுகாப்புக்காக ஒரு கயிறு அவர் மேசை முன்னே கட்டப்பட்டது.
கணினி இல்லாமலே அவர்களின் வேகம் அசர வைத்தது. சினிமாவில் வருவதுபோல் அல்லாமல் மெதுவாகப் பேசியதால் அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. நீதிபதி வழக்குகளை கவனித்த அவசரத்தில் முடங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கை நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. பாவம், அந்த ஹாலை ஏ.ஸி செய்திருக்கலாம் - ஜனவரியிலேயே பலருக்கு வேர்த்தது- வெயிலினாலா இல்லை வழக்காலா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.
என் நண்பனின் வழக்கைக் கூப்பிட்ட உடனே நான் பவ்யமாக கடித்ததை நீட்டினேன். நீளக் கோட்டை நெற்றியில் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயசான வக்கீல் ஓடி வந்து நீங்கள் தான் 'என் நண்பன் பெயரைச் சொல்லி" அவரா என்றார். என் இல்லை என்ற தலையாட்டல் எனக்கென்னவோ அவர் முகத்தில் ஒரு த்ருப்தியை வரவழைத்தது போல் இருந்தது. நீதிபதி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கடித்ததை அவசரமாகப் படித்துவிட்டு 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பெத்தேன் பிழைத்தேன் என்று வெளியே வந்தவுடன் தான் தோன்றியது நான் ஏன் பயப்பட வேண்டும் என்று.
ஒரு சாதாரணமான குரியாராகப் போன போதே இப்படி இருந்தால் உண்மைக் கைதியாகவோ, குற்றம் சாட்டப் பட்டவர் மனம் எப்ப்படி இருக்கும்?
சினிமாவில் அடிக்கடி பார்க்கும் சில இடங்களுக்கு தப்பித் தவறி ஒரு தடவை கூட போகச் சகிக்காது போலிருக்கு!
வெளியில் வந்தவுடன் முதல் காரியமாக ஸ்கூட்டியில் எல்லா பேப்பர்ஸும் இருக்கான்னு பாத்துண்டேன். இங்கெல்லாம் வந்து நிக்க நமக்கு சரிப்படாது
படத்துல வர்ற மாதிரி ஒரு இடமும் நிஜத்துல இருக்காது சார்.முதல் தடவை தனியாக போனதுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ். இதுவே கடைசி தடவையாக இருக்கட்டும்.
ReplyDeleteMost government offices are like this. One can pray that we do not have the need to visit them.
ReplyDelete